Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
காதலர் தினத்தை முன்னிட்டு...இசையமைப்பாளர்கள் யாராவது இருந்தால் மெட்டு போட்டு பார்க்கலாம்.

அவளுக்கென்ன அழகும் அறிவும் நிறைந்தவள்
அவளுக்கென்ன அத்தனை பெண்ணிலும் சிறந்தவள்
எனக்கென்ன அவளையே வரமாய் பெற்றவன்
எனக்கென்ன அவளின் காதலுக்கு உற்றவன்

கலைகளின் பிறப்பிடம் அவள் தான்
மானுடத்தின் சிறப்பிடம் அவள் தான்
நிகழ்கின்ற சரித்திரம் அவள் தான்
நிலைக்கின்ற இதிகாசம் அவள் தான்
எழுப்பாத கனவும் அவள் தான்
களிப்பான  நினைவும் அவள் தான்

(அவளுக்கென்ன அழகும்)

அண்டத்தின் ஒரு துளி அவள் தான்
அகிம்சையின் முதல் பாலி நான் தான்
படைக்கப்படாத புது உயிர் அவள் தான்
பயிலப்படாத முதல் மொழி அவள் தான்

அவளுக்கென்ன அழகும் அறிவும் நிறைந்தவள்
அவளுக்கென்ன அத்தனை பெண்ணிலும் சிறந்தவள்
எனக்கென்ன அவளே வரமாய் பெற்றவன்
எனக்கென்ன அவளிடம் காதலை கற்றவன்

துருப்பிடித்த சாவி ஒன்று கண்டெடுத்தேன்.
இது கடைசியாய் என்று உபயோகப்பட்டிருக்கும்?
இது ஒருவேளை தவறி விழுந்திருக்குமா? - இல்லை
தூக்கி எறியப்பட்டிருக்குமா?
தொலைந்து போயிருக்குமா? - இல்லை
உதவாது போயிருக்குமா?
இந்த நிமிஷம் வரை ஒரு கதவு அடைப்பட்டுக் கிடைக்குமா? - இல்லை
என்றைக்குமாக திறந்தே கிடைக்குமா?
எப்படியோ,
சில சமயங்களில், சாவிகள் பூட்டை மட்டும் திறப்பதில்லை.

வெற்றுத்தாள்
ஒரு சொட்டு மை
வேறொரு தாள்

-0-

என் கூரையின் துளை வழியே
ஒரு சிறிய வானம்

-0-

மரவட்டை ஒன்று
மெதுவாய் நடக்கிறது

-0-

மின்சாரம் அணைந்ததும்
மழை சத்தம்

-0-


முப்பது வயதில், என்றும் போல் உதித்த ஒரு சூரிய பொழுதில்

அவனுக்கு ஒரு வித மயக்கம் வருகிறது

மருத்துவம், வாழும் ஒவ்வொரு நாளும் இனி வரமே என்று நாள் குறிக்கிறது

ஜோசியம், மறந்து போன, பொறுப்பேற்றுக் கொள்ள முடியா

முன் ஜென்ம பாவக் கணக்குகளை கணக்கெடுக்கிறது

மனிதம், அவன் இடத்தில் தன்னை இறுத்தி அவனுக்கான ஆறுதல் தேடுகிறது

பாசம், என் ஆயுள் உன்னை சேரும் என்று அவனை உச்சி முகர்கிறது

ஆன்மிகம், கடவுளின் மேல் பாரத்தை போட்டு திருநீறு பூசுகிறது

தத்துவம், சில விசாரங்களை முன் வைத்து அதன் வயிற்றை கழுவிக் கொள்கிறது

எனக்கு

வாழ்வின் அ(ன)ர்த்தம் எப்போதும் ஒரு கேள்வியில் தொடர்கிறது...
நதிகள் நம்மை கடந்து சென்று விட்டன
இன்று நாம் காண்பது, அதன் சுவடுகளை...
                       ---
பரந்த நீல வானம் - அதில்
கண் இமைத்தபடி கடக்கும் மேகங்கள்
எல்லையற்ற வானத்திலும்
வரிசையாய் பறக்கும் பறவைகளின் ஒழுங்கு
கண்ணுக்கெட்டிய தூரம் மலை முகடுகள்
பசுமை போர்த்திய புல்வெளி
தெளிந்த நீர் தளும்பும் கிணறுகள்
அதன் அருகே நீல நிறத்தில் ஒரு குறுங்குளம்
அதில் பூச்சூடிய குட்டி மஞ்சள் நிற வாத்துக்கள்
சிரித்துக் கொண்டே பால் கறக்கும் பசுமாடு
ஓடி விளையாடும் நாய் குட்டி
இவைகளின் மத்தியில் களைப்பே தெரியாத உழவன்...
நம் வாழ்க்கையும் - நம் குழந்தைகளின்
ரைம்ஸ்களை போல் இருக்கலாம்.
                       ---
இருக்க வேண்டிய நேரத்தில்
இல்லாமல் இருந்ததால்
இருக்கக் கூடாத நேரத்தில்
இருந்து தொலைக்க வேண்டி இருக்கிறது

எந்த ஜாதி மதம் சார்ந்தவராய் இருந்தாலும்
மல ஜலம் அள்ள வைத்து விடுகிறது குழந்தை

****************************************

என் மகள் நாள் முழுவதும்
இறைத்து விளையாடிய
விளையாட்டு சாமான்களை
இரவில் எடுத்து வைக்க வேண்டிய பொறுப்பு
அவ்வப்போது எனக்கு வாய்க்கும்

காலை நீட்டி அமர்ந்த ஒரு சாந்தமான புலி
காபி கரை படிந்த ஒரு இளஞ்சிவப்பு கரடி
கை காலை தனித் தனியாய் அசைக்கும் ஒரு குட்டிக் குரங்கு
இரு இறக்கைகளையும் இழந்த ஒரு பெரிய வானவூர்தி
துண்டு துண்டான ரயில் பாலங்கள், வெவ்வேறு ரயில் பெட்டிகள்
அந்த இரவிலும் அதன் இயல்பு மாறாமல் -
ஒலியெழுப்பும் ஒரு சின்னஞ்சிறு மணி
இப்படி பல விதமான சாமான்கள் அனைத்தையும்
ஒரு பிளாஸ்டிக் டபராவில் எடுத்து வைப்பது 
கடவுள் எல்லாவற்றையும் பூமிக்குள்
எடுத்து வைத்ததை போலிருக்கிறது!


கடற்கரையில்
அலையின் அருகில்
ஒரு சிறுமி சிறு நீர் கழித்து எழுகிறாள்.
அவள் தாய் போல் அந்த இடத்தை
அலம்பி விட்டுச் செல்கிறது ஒரு கடலலை.
அன்று இரவு உப்பின் அளவை கணக்கெடுக்கும்போது
புதிதாய் சேர்ந்த உப்பை கண்டுகொள்ளுமா கடல்?


[photo courtesy: my wife]
ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்
என் மனம் பேசுவதை! அப்போது...
மேல் சொன்னதை சொன்னது என் மனம்!
இதில் நான் யார், என் மனம் எது?
---------------------------------------------------------------------------------------------------------
வாழப் பணம் வேண்டும்
பணத்திற்கு வேலை வேண்டும்
வேலைக்கு திறமை வேண்டும்
திறமைக்கு உழைப்பு வேண்டும்
உழைப்புக்கு சக்தி வேண்டும்
சக்திக்கு உணவு வேண்டும்
உணவுக்கு பணம் வேண்டும்!
இன்று என் கண்ணெதிரே

ஒரு குடிசைக்குப் பின்னால்

மறையும் அந்திச் சூரியன்

அதே நேரத்தில் -

ஒரு சமுத்திரத்தில் மூழ்குகிறது

ஒரு பனிமலைக்குள் உறைகிறது

ஒரு அடர்ந்த கானகத்துள் தொலைகிறது

ஒரு பாலைவனத்தில் தேய்கிறது

ஒரு சிறுவனின் காலடியில் அணைகிறது

எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது ஒரு சூரியன்

அந்த நாளின் இரவுக்கு மட்டும்!


சத்தமில்லாமல் 
ஆழ்மனதில் ஓடுகிறது 
ஒரு ஜீவ நதி
அதன் பிறப்பிடம் தெரியவில்லை
அது கடலை நோக்கிச் செல்லவில்லை
ஒரு இலக்கு, எல்லை இல்லாமல் அது விரிந்து செல்கிறது
பொங்கும் நுரையுடன், நீல வண்ணத்துடன் 
அது விரைந்தோடிச் செல்கிறது
அது பெரும்பாலும் வானத்தை பிரதிபலிக்கிறது
காட்டில் மிருகங்கள் வாய் வைத்து அதில்
நீர் பருகும்போது அது லேசாய் குறுகுறுக்கிறது
இரவு என்றால் அதற்குக் கொள்ளை பிரியம்
உலகம் தொடங்கிய முதல் நாள் இரவு போலவே
அத்தனை இரவுகளையும் அது பாவிக்கிறது
நிலவொளியில் தன்னை அலங்கரித்துக் கொள்ள
அது ஒரு நாளும் தவறுவதே இல்லை
இனி பகலே கிடையாது, இரவு மட்டும் தான்
என்று எண்ணி எண்ணி கூத்தாடுகிறது
அதன் சத்தமே அந்த இரவுக்கு இசையாகிறது!

எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
என் அழைப்புக்கு யாரும் செவி சாய்க்கவில்லை
ஒருவேளை ஒடுபவர்களில் யாராவது நின்று
என்னை அழைக்கக் கூடும்
நானும் ஓட ஆரம்பிக்க வேண்டும்
-----------------------------------------------------------------------------------------------------
சில சமயங்களில் எதுவுமே செய்யத் தோன்றுவதில்லை
இந்தக் கவிதையை போல


நான் அலுவலகம் விட்டு வீடு சேர்வதற்கும்
மறுபடியும் வீடு விட்டு அலுவலகம் சேர்வதற்கும்
இடைப்பட்ட நேரத்தில் - சாலையில்
சில நாய்கள் அடிபட்டு சாகின்றன

அடிபட்டு இறந்த நாயை
எந்த நாயும் அடக்கம் செய்வதில்லை

நான் பார்க்கும் சமயங்களில்
பெரும்பாலும் அதில்
நாயின் அடையாளங்கள் மறைந்து - ஒரு
கந்தல் துணியாய் என் வண்டிச் சக்கரத்தில்
சிக்கி வழுக்கி விடுகிறது..

திரும்பிப்பார்த்து, அதில் சக்கரம் ஏற்றியதை
நினைத்து மனம் அசூசை கொள்கிறது

இரண்டொரு நாளில் அது
சாலையோடு சாலையாகி
மறைந்து விடுகிறது

இப்போது நான் சாலையெங்கும்
மறைந்து கிடக்கும் இறந்த நாய்களை
கடந்தபடியே வீடு சேர்கிறேன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சவ ஊர்வலங்களில் நடக்கும் அராஜகங்களை பார்த்தால்
ஒருவேளை, இறந்தவர் நல்லவராகவே இருந்தாலும்
அவர் வாழ்நாள் முழுதும் சேர்த்த நல்லபெயரை 
இந்த ஒரு ஊர்வலம் அழித்து விடுமோ என்று தோன்றுகிறது!

------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் எப்படி பிறந்த பிறகு
பிறந்து விட்டேனோ
அதே போல்
இறந்த பிறகு
இறந்து விடுவேன்  

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாழும் போது இறந்து இருந்தால்
இறந்த பிறகு வாழ்வதெப்படி?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இறந்த பிறகு என்ன நடக்கும்?
என்னிடம் கேளுங்கள்
நான் இறந்த பிறகு 
வெண்சங்கு
மயிலிறகு
மோனநிலை
திவ்யம்!
------------------------------------------------------------
பச்சைப்புல்
பரந்த வானம்
பசிக்குச் சோறு
போதும்!
------------------------------------------------------------
ஒரே சத்தம்
ஒரே அமைதி
வழக்கமான இரவு
வாசலில் நிலவு
------------------------------------------------------------
தொட முடியாத வானம்
கால் நனைக்காத நீர்
என்ன வேடிக்கை
------------------------------------------------------------
புல்லில் பனி
வயிற்றில் பசி
அவரவர் எண்ணம்
------------------------------------------------------------
இந்தக் காற்று
எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
------------------------------------------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை காசு!
 
இன்றைய வலைப்பதிவை பார்க்கும் முன், என் முந்தைய வலைப்பதிவை பற்றி ஒரு updated கருத்து:

தெய்வத்திருமகள் படத்தை நான் ஆஹா ஹோஹோ என்று புகழ்ந்து எழுதிவிட்டேன். அது ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமான காப்பி என்ற உண்மை தெரியாமல்! ராம் பின்னூட்டம்ல சொன்னதும் தான் வலையில் தேடி பார்த்தேன். விக்ரம் சிகை அலங்காரத்திலிருந்து அவர் சிரிப்பு வரை அப்படியே இருக்கிறது! ஏன் இதில் ஒரிஜினல் இல்லையா என்று நீங்கள் கேட்டால் இருக்கிறது, ஆனாலும் மூலம் நகல் தானே! வெறுத்து விட்டேன். படத்தில் ஒரு வரி கூட இதை போடவில்லை, தொலைக்காட்சியில் வண்டி வண்டியாய் படத்தை பற்றி பேசுகிறார்கள், இதைப் பற்றி சொல்லவில்லை! மிஷ்கினுக்கு அடுத்து இப்போது இயக்குனர் விஜய்! ஆங்கில படங்கள், உலக படங்கள் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும், மற்றவர்களுக்கு இது ஒரு புது படம் தானே என்று நினைப்பது எத்தனை திருட்டுத்தனம்?

திருட்டு வீசிடியில் படத்தை பார்க்காதீர்கள் என்று எனக்கு சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நிற்க [எந்திரிச்சி நிக்கத் தேவையில்லை!]

கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்! BACK TO THE STORY!! இன்று கொசுக்கடி தாங்க முடியாமல் அதைப் பற்றி நறுக்கென்று ஒரு கடியை பேஸ் புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போடலாம் என்று ஆரம்பித்தேன். அது வலைபதிவு வரை வந்து விட்டது. எனக்கு சந்தோஷம், உங்களுக்கு (சங்கடம்?)

சங்ககாலத்தை போல் இன்றும் வீரனின் இடையில்
வாள் வைக்கும் வழக்கம் இருந்தால்
இடையின் மற்றொரு பாகத்தில் 
இன்னொரு உறை வைக்க வேண்டி இருக்கும்...
கொசு பேட் வைக்க!!

எனக்கும் சங்க கால வீரனுக்கும்
நிறைய வித்தியாசமில்லை!
இரவில் பேட் கொண்டு நான் 
கொசு அடிக்கும் அழகைப் பார்த்தால்
உங்களுக்கு புரியும்!!

பறக்கும் படையில் எதிரிகள்
காலாட்படையின் வீரன் நான்
வாள் வீசிப் பயன் என்ன?
சரண் அடைந்தேன் கொசுவே சரணம்!

எப்படியும் கொசுவை அழிக்க முடியப்போவதில்லை - பதிலாக 
எதாவது ஆராய்ச்சி செய்து அதன் எடையை கூட்டி விட்டால்
அது நம் கை காலில் கடிக்க அமரும் போது அதன் பாரம் தாங்காமல்
தள்ளி விடவாவது ஏதுவாய் இருக்கும்!!

பிள்ளையார் எறும்பும் அசைவமா என்ன?
இறந்த கொசுவை தூக்கிக் கொண்டு ஓடுகிறேதே!

படுக்கையின் மேல் கொசு வலை விரித்து 
விளக்கணைத்துப் படுத்தேன்...காலையில் 
அதிக ரத்தம் குடித்து மயங்கிய நிலையில் 
தப்பிக்க வழியில்லாமல் கொசுக்கள் 
அசந்து தூங்கி கொண்டிருந்தன!


வானம் மேகமூட்டமாய் இருக்கிறதென்று
நல்ல மழை பெய்கிறது என்று
சுடும் வெயிலில் ஒதுங்க மர நிழல் கிடைத்தது என்று
வேலைப் பளு அதிகம் என்று
பொழுதே போகவில்லை என்று
வீட்டில் பிரச்சனை என்று
வயிறு பசிக்கிறது என்று
பசிக்கவேயில்லை என்று
துக்கம் தாளவில்லை என்று
சந்தோஷம் சம்பவித்ததென்று
நண்பன் அழைத்தான் என்று
நல்ல அசைவச் சாப்பாடு என்று
மென்தொஸ் ஒன்று உபரி என்று
மனைவி வெளியூர் போய் விட்டாள் என்று,
புகை பிடிப்பவர்களுக்கு - எப்படியோ
கிடைத்து விடுகிறது புகை பிடிப்பதற்கான ஒரு தருணம்!


சதா அழுது கொண்டே இருந்த
ஒரு குழந்தை தெய்வத்தை
விண்வெளியில் விட்டுச் சென்றது
ஒரு தாய் தெய்வம்

சுற்றிலும் இருள்!
ஆங்காங்கே மினுக்கும்
சிறு சிறு பொறிகளையும், பந்துகளையும்
வேகமாய் நகரும் வெளிச்சங்களையும் 
விநோதமாய் வேடிக்கை பார்த்தது குழந்தை

சுற்றிக் கொண்டிருக்கும் 
சில பந்துகளை
ஆள்காட்டி விரலால் அழுத்தி 
நிறுத்துவதும், மறுபடியும்
அதை சுற்றி விடுவதும்
வேடிக்கையாய் இருந்தது அதற்கு

தெரியாமல் சூரியனில் கை விட்டு
விரலை சுட்டுக் கொண்டது!
கோபத்தில் பலமாய் ஊதிப் பார்த்தது!
இருந்தும் அது அணையாததால்
பூமியிலிருந்து கடலை எடுத்து அதன்
மேல் ஊற்றித் தோற்றது

அடங்காத கோபத்தில் அருகிலிருந்த
செவ்வாயையும் புதனையும்
சூரியனில் எரிந்தது.
அது சூரியனில் புகுந்து 
சாம்பலாவது ஏனோ பிடித்திருந்தது அதற்கு

நேரம் போவதே தெரியாமல்
சுற்றி இருந்த மற்றவைகளையும் 
குழந்தை எரிந்தது; சூரியன் எறித்தது!

இப்படியே நேரம் செல்ல - 
அண்டவெளியில் விளையாடிக் களைத்து
அம்மாவை தேடி அழுதது 
குழந்தை தெய்வம்


பிறை நிலவை பார்க்கிறேன்
அதனுடைய தற்போதைய நிலை...
அமாவாசையை நோக்கியா, 
பௌர்ணமியை நோக்கியா?

வானுயர்ந்த கண்ணாடி கட்டிடங்கள் - வாழ்க்கை
தொலைந்து போகும் கருஞ் சிறைகள்

வயிறு வரை தொங்கும் கழுத்துபட்டை கெளரவம் - ஒரு
நாள் மறந்தால் உள்ளே அனுமதி மறுக்கும் கேவலம்

சுற்றிலும் பராமரிக்கப்படும் அழகு - பார்வை
கணினியைத் தாண்டாது, பிறகு?

சுழலும் நாற்காலியின் சொகுசு - முதுகுத்
தண்டை பதம் பார்க்கும் பிறகு

இணையத்தினால் கைக்குள் உலகம் - ஆனால்
பக்கத்தில் இருப்பவனுக்கு மின்னஞ்சல்

உடல் உழைப்பின் அசதியில்லை - நெஞ்சு
சட்டென்று நின்று போகும் வரை, பயமில்லை

வேண்டிய மட்டும் பணம் - அள்ளி 
அள்ளிக் கொடுத்தாலும் திரும்பாத காலம்

ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்குச் சட்டை - முப்பத்தைந்து 
வயதில் தலை முழுதும் சொட்டை

ஐம்பது லட்சத்தில் வசதியாய் வீடு - படுக்கை
அறை தெரியாது, அசதியாய் வரும்போது

வெள்ளைக்காரனின் பெயர்கள் மனப்பாடம் - மனைவி
மக்களின் பெயர் மறந்து போகும் 

விலையேற்றத்துக்கான பிரதான காரணமென்று தூற்றும் - இருந்தும் 
ஒட்டு மொத்த சமுதாயமும் கூடிச் சுரண்டும்


நேற்று எனக்கும் என் மனைவிக்கும் சண்டை...
இருவரில் யார் யாரை அதிகம் நேசிக்கிறோம் என்று!
சண்டையின் விதிப்படி இன்று முழுவதும்
அவளிடம் பேசாமல் மேலும் அதிகமாய் காதலிக்க வேண்டும்!!

அதிகக் கூட்டமில்லாத பேருந்தில்
ஒவ்வொரு இருக்கை தேடி
அமர்கின்றனர் ஒவ்வொருவரும்!
ஒரு மழை நாளில்
உன்னை பார்த்தேன்
குடைக்குள்ளிருந்தே நான் நனைந்தேன்

உன்னை நான்
கற்றது
கண்ணளவே

வாழ்வின்
நெளிவு சுழிவுகளையும்
மேடு பள்ளங்களையும்
எனக்கு விளக்கியது...
உன் தேகம்

உன்னை சந்தனத்தில்
அழகு பிடித்து
எத்தனை சிவராத்திரிகள்
ஆயிற்று?

ஆச்சர்யம் தான்!
இரு மனிதர்களால்
எப்படி ஒரு
தேவதையை செய்ய முடிந்தது!