Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts

தேசப்பற்று என்றெல்லாம் ஒன்றும் பெரிதாய் இல்லை. சும்மா "கிம்ப்"பில் வரைந்து பழகிக் கொண்டிருந்தேன். எத்தனை நாள் தான் பெண்களையே வரைவது... ஒரு மாற்றத்துக்கு இன்றைய நாளை நினைத்து  வரைந்தது. சுதந்திர தினம் என்பது ஒரு நாள் விடுமுறையும், தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளுடனும் இன்று நீர்த்து போயிருக்கலாம்! ஆனால், தங்களின் வேலைகளை விட்டுவிட்டு, குழந்தை குட்டிகளை பற்றி கவலைப்படாமல்  இன்று நாம் ஜம்பமாய் உட்கார்ந்து கொண்டு யாரை பற்றி வேண்டுமென்றாலும் முகநூலில் தைரியமாய் நிலைத்தகவல்களை அளிக்கக் காரணமாய் இருந்த அந்த வீரர்களை இன்று ஒரு கனம் நினைத்துக் கொள்ளலாம்! வாழ்க சுதந்திரம்.
மாத ஆரம்பத்தில் ஒரு பதிவு, மாதக் கடைசியில் ஒரு பதிவு! எத்தனையோ எழுத வேண்டும். நல்ல படக் காட்சிகளை பார்க்கும்போது அதை பற்றி எழுதலாம் என்று தோன்றுகிறது. நல்ல பாடல்களை கேட்கும்போது அது ஏன் பிடிக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளலாம்.  விகடனில் ராஜு முருகனின் வட்டியும் முதலும் படிக்கும்போது, அப்படி எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நல்ல சிறுகதை ஒன்று எழுத வேண்டும். என் ஐ. டி. வாழ்க்கை பற்றி ஒரு நாவலே எழுதலாம்.  நான் எழுதாமல் இல்லை. எழுதியது எதுவும் திருப்தியாய் வரவில்லை. அதனால் அவைகளை பதிய முடியவில்லை. அதுவே உண்மை! கார்டூன் வரைந்து பழக ஒரு போர்டும், மார்க்கரும் வாங்கி வந்தேன். கார்டூன் தவிர எல்லாம் வரைந்து கொண்டிருக்கிறேன், இல்லை, வரைந்து கொண்டிருக்கிறோம்! [என் மனைவியும் சேர்த்து] அந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு! ஒரு பதிவுக்காச்சு!

1  படத்திற்கு கீழே என் பெயர் இருப்பதால், SELF PORTRAIT ஆ என்று கேட்டு விடாதீர்கள்.  படத்தை வரைந்தது தான் நான்!

2 கீழுள்ள கண்கள் என் மனைவியின் கை வண்ணம்! பொன்னியின் செல்வன் எஃபெக்ட் !



இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். எனக்கு நினைவு தெரிந்து என் கூடவே ஒட்டி உறவாடி, கட்டி உருண்டு சண்டையிட்டு, சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் கோள் மூட்டிக் கொண்டு, போட்டியிட்டுக் கொண்டு திரிந்த என் தம்பி, தந்தை ஆன நாள்! உருவத்தில் சிறிதாய் இருந்தாலும் நான் பெரிய்ய அப்பா ஆன நாள்! ஆம், எனக்கொரு மகள் பிறந்து விட்டாள்!

பெரியப்பா என்பது அண்ணன் ஆவது போலோ, மாமா ஆவது போலோ சாதாரணமானது அல்ல! அது இளம் வயதிலேயே எப்படியோ, யார் மூலமாகவோ கிடைத்து விடுகிறது. ஆனால் பெரியப்பா என்று சொல்லும்போதே ஒரு வித மரியாதை வந்து விடுகிறது! அப்பா என்ற சொல்லோடு ஒரு வித பொறுப்பு வந்து விடுகிறது.  உலகத்தில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் ஒவ்வொரு மனிதனின் நிலையை, அவனின் அடையாளத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு கணவன் மனைவி தாய், தந்தை ஆகிறார்கள். ஒரு தாய் தந்தை தாத்தா, பாட்டி ஆகிறார்கள். இப்படி எத்தனையோ பேரின் அடையாளங்களை மாற்றி விட்டு அதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் தன் சிவந்த பிஞ்சு கைகளை மடக்கி சமர்த்தாய் தூங்குகிறது குழந்தை!

குழந்தை பிறப்பில் ஆண்களின் பங்கில் எனக்கு உடன்பாடு கிடையாது. வெறும் சுகத்தை மட்டும் ஆணுக்கு கொடுத்து விட்டு அத்தனை கஷ்டங்களையும் பெண்ணுக்கு கொடுத்ததில் என்ன நியாயம். ஐந்து மாதம் அவளிடம் ஐந்து மாதம் அவனிடம் என்றால் எத்தனை ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முன் வருவார்கள் என்று யோசிக்கிறேன்! ஆஹா, அப்படி நடந்தால் மக்கள் தொகை பிரச்சனையே கிடையாது! விஞ்ஞானிகள் யோசிக்க வேண்டும்! அதை விட கொடுமை, குழந்தை பெற்றுக் கொள்ள பெண்ணை தயார்படுத்துகிறேன் என்று அவர்களின் பதினோரு, பனிரெண்டு வயதிலிருந்து மாதவிடாய் தொல்லை, அது அவளின் ஐம்பது வயது வரை நீள்கிறது! என்ன அக்கிரமம்? இதற்கு பதிலாக, ஒரு பெண் திருமணமாகி உறவு கொள்ளத் தொடங்கியதும் அல்லது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பியதும், உடலில் சில ஹார்மோன்கள் உயிர்ப்பித்து கருவை உண்டாக்கியிருக்கலாம்! குழந்தைகள் பெற்றதும், அந்த நினைவு மங்கி விடும், அப்போது அந்த ஹார்மோன்கள் ஒதுங்கி கொள்ளலாம்!  கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் தான் பெண்ணை இப்படி படைத்தார் என்றால், அவர் நிச்சயம் ஆணாய் தான் இருக்க வேண்டும் :-)

பேச்சு வேறு எங்கோ சென்று விட்டது! என் தம்பி அமெரிக்காவில் குழந்தை பெற்றுள்ளான். ஆஸ்பத்திரியில் சேர்ததிலிருந்து நாங்கள் ஸ்கைப்பில் ஆன்லைனில் இருந்தோம். கிரிக்கெட் கமெண்ட்ரி சொல்வது போல் அங்கு நடப்பதை எல்லாம் எங்களுக்கு அவன் மெசெஜித்து கொண்டிருந்தான். இரவு ஒரு மணிக்கு மேல் தூக்கம் வந்து தூங்கி விட்டோம். காலையில் எழுந்து கணினியை திறந்தால், Where are you guys? Its baby time என்று அவன் ஆஃப்லைன் மெசேஜ் இருந்தது. அதோடு, Now we are going to push...push...push....baby is going to come out...push...oh! இந்திய நேரப்படி சரியாய் 6:36 மணிக்கு baby has come out என்று மெசஜ். ஆஹா! பிறகு அவனை தொடர்பு கொண்டு பேசினோம். உடனே ஒரு படம் எடுத்து அனுப்பி விட்டான். முன்பெல்லாம் படம் எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று நம்பினார்கள். இப்போது குழந்தை பூமியில் விழுந்ததும் அடுத்தது போட்டோவில் தான் விழுகிறது :-)  எங்கோ கடல் கடந்து பிறந்த ஒரு குழந்தையை சில நிமிஷங்களில் பார்க்க முடிகிறது என்று நினைக்கும்போது உடல் சிலிர்த்தது.

உலகின் எந்த ஒரு நல்லது கெட்டது தெரியாமல், சுகமாய் உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை சிறிது நேரம் வீடியோவில் பார்த்தோம். அத்தனை நெகிழ்ச்சியான தருணம் அது! டெக்சாசில் இருக்கும் தன்னை பெரியப்பா சென்னையிலிருந்து பார்க்கிறார் என்பது தெரியாமல் குழந்தை உறங்கி கொண்டிருந்தது. ஒரு குழந்தையை பார்த்ததும் யாரும் அதை மட்டும் பார்ப்பதில்லை. அந்தக் குழந்தையில் யாரெல்லாம் தெரிகிறார்கள் என்று தான் பார்க்கிறோம். அம்மா மாதிரியா, அப்பா மாதிரியா, பாட்டி மாதிரியா, தாத்தா மாதிரியா...அது பிறந்தவுடன் தெரிவது கடினம் என்றாலும் அதை பற்றி பேசி விடுவதில் எல்லோருக்கும் ஒரு ஆர்வம். இவையெல்லாம் கேட்டுக்கொண்டே உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு என்ன தோன்றும்? கருவறையில் கிடைத்த அல்லது பழக்கப்பட்ட சௌரியங்கள் குறைந்து போயிருக்குமோ? அதனால் தான் அது அடிக்கடி அழுகிறதோ?  இத்தனை காலம் நம்மை சுற்றி ஈரமாய் இருந்ததே, இப்போது ஏன் காய்ந்து போயிருக்கிறது என்று நினைக்குமா?

கையை நீட்டி கன்னம் தொடும் போது தான் நாம் கணினியின் வழியே பார்க்கிறோம் என்ற நினைப்பு வருகிறது. ம்ம்ம்...ஒருவேளை வருங்காலத்தில் நான் என் கொள்ளுப் பேரன்களை இப்படிப் பார்க்கும்போது மானிட்டரின் ஊடே அவர்களின் கன்னத்தை கிள்ள முடியுமோ என்னமோ?




வெகு நாட்களுக்குப் பிறகு என்னுடைய சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு...அனைத்தும் போட்டோஷாப்பில் வரைந்தது!




















நீ இருக்கும்போதை விட
இல்லாத போது அதிகமிருக்கிறது
உன் இருப்பு!



















சும்மா இருப்பதே சுகமென்றாலும்
ஏதாவது ஒன்றாய் எப்போதும்
இருக்க வேண்டியிருக்கிறது!



















ஒரு காந்தி தாத்தாவும்
இரு பாரதியார்களும்
ஒரு ஆண்டாளுக்காக அடித்துக் கொள்கிறார்கள்
மாறுவேடப் போட்டி!

இந்தக் கவிதைக்கு இரு முடிவுகளை கொடுத்திருக்கிறேன். இதில் கவிதைக்கான சரியான தருணம் எது என்று எனக்குத் தெரியவில்லை, உங்களுக்குத் தெரிகிறதா பாருங்கள்!




















குழந்தையிடமிருந்து பிடுங்கிய பொம்மையை
என் முதுகுக்குப் பின்னால் மறைத்து கொண்டு
"காக்கா தூக்கிட்டு போச்சு" என்றேன்!

குழந்தை ஒன்றும் சொல்லாமல் மேலே பார்த்தது!
சட்டென்று பொம்மையை அதன் முன் நீட்டினேன்.

ஆவலோடு பொம்மையை வாங்கி கொண்டது

1. காக்கா எங்கே என்று அதுவும் கேட்கவில்லை,
நானும் சொல்லவில்லை!

2. அதை வாங்கித் தூக்கிப் போட்டு விட்டு,
"காக்கா எங்கே?" என்றது குழந்தை!


ஒரு மத்தியானப் பொழுதின்
மயான அமைதி - தூக்கத்திலிருக்கும்

ஒரு குழந்தையை
திடுக்கிட்டு எழச் செய்கிறது

சத்தமில்லாமல் ஊர்ந்து செல்லும்
நிழலில் ஒரு கருகிய
வாசம் வருகிறது

தெருவோரத்தின் துரு பிடித்த
ஒரு குழாயிலிருந்து
கிரீச்சிடும் சத்தம் கசிகிறது

மேகங்களைக் கொண்டு
விதவிதமான பொம்மைகளை
செய்து செய்து
அழிக்கிறது வானம்

ஒரு பெரிய மரத்தின் வேர்
நீரை உறுஞ்சவும், அந்த மரத்தின்
இலைகள் காற்றில் சிலிர்க்கவும்
சரியாய் இருக்கிறது

எங்கோ எதையோ கூவி விற்கும்
ஒருவனின் பலவீனமான குரலில்
அவன் பசி எதிரொலிக்கிறது



இரவில் தூங்கப் போகும்போது
தோடுகளையும், வளையல்களையும்
கழற்றி வைப்பதை போல்
உன் சிறகுகளை
எங்கே கழற்றி வைப்பாய்?




புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்!




கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!





சத்தமே எழுப்பாமல்
நீ அருகில் செல்லும்போதெல்லாம்
பட்டுப்பூச்சி பறந்து விடுகிறது

மறுபடியும் தவற விட்டதை
நினைத்து நீ முகம் சுளிக்கிறாய்
தோல்வியிலும் நீ எத்தனை அழகு

தொடர்ந்து முயற்சி செய் என்கிறேன்!
பட்டாம்பூச்சிகள் பறந்து விடும்
என்ற நம்பிக்கையில்!
காதலர் தினத்தை முன்னிட்டு!

ஓவியம் கொஞ்சம் சோகத்தை கக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது! இதற்கும் மேல் சொன்ன கவிதைக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை!



இந்தக் கவிதை நல்லா இருந்தால், உங்க காதலி வலைப்பதிவுகளை மேயாதவராக இருந்தால், நான் தான் எழுதினேன் என்று தாரளமாய் அள்ளி விடுங்கள்! காதலுக்காக ஏங்கும் அனைத்து இதயங்களுக்கும் ஃபுல் ரைட்ஸ்!

வாழ்க காதல்!
வளர்க கலப்புத் திருமணங்கள்!!
ஒழிக ஜாதி வெறி!!!

[அது வேற ஒன்னுமில்லீங்க...ஹிஹி!! ஊரார் புள்ளய ஊட்டியில வளர்த்த நம்ம புள்ள கொடைக்கானல்ல வளரும்னு ஒரு நப்பாசை தான்!!]

உன் விழிகளின் வீரயத்தில்
விழித்துக் கொண்டது
என் வாலிபம்

உன் புன்னகையின் பூரிப்பில்
புத்தொளி பெற்றது
என் தேகம்

உன் அங்கங்களின் ஆணையில்
கீழ் படிந்தது
என் ஆண்மை

உன் ஈரமான உதடுகளில்
கதகதப்படைந்தது
என் உதடு

உன் கூந்தலின் கருமையில்
இரவாகவே மாறியது
என் உலகம்

உன் பெண்மையின் பேரின்பத்தில்
நல்ல போஷாக்கு பெற்றது
நம் காதல்
மகளீர் தினத்தை முன்னிட்டு ஒரு ஓவியப் பதிவு! வெகு நாட்களாக ஒன்றும் புரியாத மாதிரி ஒரு ஓவியம் வரைய வேண்டும் என்று ஆசை. அதை ஃபோட்டோஷாப்பின் மூலமும், ஃப்ளாஷின் மூலமும் தீர்த்துக் கொண்டேன்.

இரண்டு முகங்களைத் தவிர சுற்றி கிறுக்கி வைத்து, அதில் ஃபோட்டோஷாப்பில் என் கை வண்ணத்தைக் காட்டிய போது, தாரளமாய் சாஃப்ட்வேர் கம்பெனிகளில் இதை எல்லாம் விற்கலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இந்த ஓவியங்களில் எனக்குத் தெரியாத, புரியாத விஷயம் ஏதாவது உங்களுக்குத் தெரிந்தாலோ புரிந்தாலோ எனக்கும் சொல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ஓவியங்களைப் பார்த்தவுடன் தயவு செய்து கண்டிப்பாக வாவ் சொல்லுங்கள்! [யாருப்பா அது கொட்டாவி விட்றது?]

முன்குறிப்பு: பெரிதாக பார்க்க ஓவியங்களின் மேல் கிளிக்கவும்



இது ட்ரை பிரஷ் எஃபெக்ட்!

இது ஜெராக்ஸ் எஃபெக்ட்

இது டாட்டட் எஃபெக்ட்


இது என்ன எஃபெக்ட் என்று மறந்து விட்டேன் [இது பிரதீப் எஃபெக்ட்!]

பெண்ணினமே உங்களுக்கும், உங்களின் தியாகத்திற்கும் என் ஓவியங்களை சமர்ப்பிக்கிறேன்!

இளவரசியாரின் blog பார்த்தேன்..அட நம்மளும் படம் வரைவோமே, அதை ஏன் இவங்களை மாதிரி நாமளும் போடக்கூடாதுன்னு தோனுச்சு, அதன் விளைவு தான் இது...நான் எழுதியவைகளிலிருந்து என் கையெழுத்து நன்றாய் இருந்ததை நீங்கள் பார்த்தீர்கள்! [டேய்
[computer ல எல்லார் கையெழுத்தும் நல்லா தா ன்டா இருக்கும்..இந்த dialogeம் friend கிட்ட இருந்து சுட்டது தான்..ஹிஹி] இன்று இங்கே நான் வரைந்த படங்களில் சிலவற்றைப் பாருங்கள்!

குறிப்பு: இது அத்தனையும் computer ல் Flash, Photoshop ல் வரைந்த படங்கள்..DIGITAL ART ம்பாங்களே அதே தான்..

Mickey

colorfulla இருக்கா?

Scenery

எனக்கு மிகவும் பிடித்த ஓவியம்..

Mummy

என்ன ஒன்னும் புரியலையா? ஒருத்தி தன் கைல குழந்தை வச்சுட்டு நிக்கிறா, நான் வரைஞ்ச லட்சணம் அப்படி!

SadLady

online ல் picasso ஓவியங்களைப் பார்த்து copy அடித்தேன்..ஏதோ ஒரு சின்ன குழந்தை கிறுக்கியதைப் போலிருக்கிறது அந்த ஓவியம்! picasso இப்படிப் பட்ட
ஓவியங்களையும் வரைந்திருக்கிறார்!

Head-Picasso

இது எனக்கு மிகவும் பிடித்த ஓவியம்..ofcourse copy தான்..

SisterWood


எப்படி? படம் காட்டிட்டோம்ல?