Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts
இரண்டு வாரங்களுக்கு முன் என் மாமா டெல்லியில் இருந்து அவர் குடும்பத்துடன் சென்னையில் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவரின் ஆறாவது படிக்கும் பையன் சென்ட்ரலில் வந்து இறங்கும்போதே பிரச்சனை ஆரம்பித்து விட்டான்.

சென்னையில் கால் வைக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லையாம். இந்த மாதிரி மட்டமான, குப்பை ஊருக்கெல்லாம் ஏன் என்னை கூட்டி வருகிறீர்கள் என்று ஒரே களேபரம். வீட்டில் வந்து மாமா என்னிடம் சொன்னார். நமக்குத் தான் சின்ன பசங்களிடம் வாய் கொடுத்து மாட்ட பிடிக்குமே...ஆரம்பித்தேன்.

ஏன் சார் உங்களுக்கு சென்னை புடிக்கலை? இந்த ஊருக்கு என்ன குறைச்சல்? என்றேன்.

இது கந்தா ஊர் என்றான். கந்தா என்றால் முருகன் அல்ல, அசிங்கம். ka அல்ல ga!

வாடா மவனே என்று, என்ன கந்தா..உங்க டெல்லி ரொம்ப சுத்தமோ? [அந்த டாப்பிக்கில் போய் மாட்டிக்கொள்ளாமல், ball ஐ வேறு மாதிரி போட்டேன்!]

சென்னையில பீச் இருக்கு, உங்க ஊர்ல இருக்கா என்றேன்!

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. உடனே ஒரு counter அடித்தான். எங்க ஊர்ல "இந்தியா கேட்" இருக்கு என்று!

நானா சும்மா இருப்பேன், சரிடா..இந்தியா கேட் தானே, நீ அடுத்தவாட்டி வரும்போது நான் சென்னையில இந்தியா கேட் கட்டிற்றேன். நீ டெல்லியில பீச் கொண்டு வர முடியுமான்னு கேட்டேன். [எப்புடி?]

அவன் லைட்டா ஜெர்க் ஆனான்.

என் மாமா உடனே, இங்கே இருக்குற மெரினா பீச் தான் உலகத்துலேயே second longest beach தெரியுமா என்றார்.

பதிலுக்கு அந்த பய புள்ள, first எது என்றான்! இப்போ நாங்க ஜெர்க் ஆனோம்! [என்ன உஷாரா இருக்கானுங்க...நம்ம இது வரை இப்படி கேட்டதே இல்லையே! கூகுளித்ததில் பங்களாதேஷ், பிரேசில் என்று பல்வேறு தரப்புகள் சொல்கிறார்கள்.]

மெல்ல பேச்சை மாற்றி, வேற என்ன இருக்கு உங்க டெல்லியில என்றேன்.

எங்க ஊர்ல கன்னாட் ப்ளேஸ் இருக்கு, எவ்வளவு ஓல்ட் பில்டிங், இங்க இருக்கா என்றான்.

டே, சென்னையே ஓல்ட் தாண்டா என்று பல வித ஓல்ட் கட்டடங்களை அள்ளி விட்டேன்.

மேலும், உங்க கிட்ட இப்போ தான் மெட்ரோ இருக்கு, எங்ககிட்ட தரையில ஓடறது, பறக்குறது, இப்போ மெட்ரோன்னு மூணு விதமான ரயில் இருக்கு! என்று அவனை கட்டம் கட்டி அடித்தேன். அவன் கொஞ்ச நேரம் மௌனமாய் யோசித்தான். எப்படி பால் போட்டாலும் கோல் போடறானேன்னு நினைத்திருக்கலாம்.கொஞ்ச நேரம் பேசவேயில்லை. நாங்கள் பெரியவர்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். தடாலென்று ஒரு கேள்வியுடன் வந்தான்...[பய புள்ள இவ்வளவு நேரம் யோசிச்சுருக்கு!]

எங்க ஊர்ல இந்திரா காந்தி வீடு இருக்கு..இங்க இருக்கா?

நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று எல்லோரும் ஆர்வமாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பதிலுக்கு நான், "இங்கே தாண்டா ரஜினிகாந்த் வீடு இருக்கு என்றேன்! இதுக்கப்புறம் அவன் பேசி இருப்பான்னு நெனைக்கிறீங்க?
சாருவின் EXILE நாவல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். காமராஜர் அரங்கம் விசாலமாய் ஜம்மென்று இருக்கிறது. என் டூ வீலரை பார்க் பண்ணும்போது பார்க்கிங் ஏரியாவை பார்த்தேன். அங்கே ஏற்கனவே பார்க் பண்ணியிருந்த இன்னோவா கார்கள் சின்ன நாய்க்குட்டி சைசில் தெரிகின்றன! அத்தனை விசாலமான ஏரியா. என் வீட்டு பார்க்கிங்கில் என் சான்ட்ரோவை நிறுத்துவது ஏதோ தண்ணி லாரியை நிறுத்துவது போலிருக்கிறது! காமராஜர் அரங்கம் கலைஞர் ஆட்சியில் கட்டப்படவில்லையோ என்னமோ, இன்னும் அம்மாவின் கண்களை உறுத்தாமல் அது காமராஜர் அரங்கமாகவே இருக்கிறது!

வழக்கம் போல் இந்திய நேரந்தவறாமை விதியின் படி விழா சற்று தாமதமாய் தொடங்கியது. நான் போய் அமர்ந்தவுடன், கொலைவெறி பாட்டு ஒலித்தது. பிறகு இச்சு இச்சு இச்சு குடு பாடல். விழாவில் யாரும் யாருக்கும் பொன்னாடை போர்த்தவில்லை. ஒரு கூட்டமே சென்று மேடையில் அமரவில்லை. மேடையில் இருப்பதால் பேசி முடித்ததும் தான் போகவேண்டும் என்று இல்லை என்று சாரு மேடையில் அமர்ந்திருப்பவருக்கு சொல்லி விட்டார். இப்படி ஒரு இலக்கிய விழாவுக்கான எந்த வித மேடைச் சம்பிரதாயமுமில்லாமல் இருந்தது மிகப் பெரிய ஆறுதலாயிருந்தது. விதிமுறைகளை உடைப்பதில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தான்!

விழாவை சாருவே தொகுத்து வழங்கினார். வாழ்த்துரை வழங்க வாலி அவர்களும், நாவல் திறனாய்வு செய்ய இந்திரா பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்தனர். இருவரையும் சாரு எந்த வித முன் பின் அணிந்துரைகள் சேர்க்காமல் வெறும் அவர்களின் பெயரை சொல்லியே பேசியது வித்தியாசமாய் இருந்தது. அப்படி எந்த ஒரு மேடை அலங்காரமும் இல்லாமல் அவர் சாதரணமாய் பேசியது நன்றாகவே இருந்தது. ஆனால் அவரே சொன்னது போல், அவருக்கு சரியாய், கோர்வையாய் பேச வரவில்லை. அவர் ஒரு பேச்சாளர் இல்லை என்பதால் மன்னிக்கலாம்! வாலி வாழ்த்துரை வழங்கினார். எண்பது வயதிலும் அவரின் குரல் வளம் அருமை! இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் அதே அளவு வயதுள்ள இந்திரா பேசும்போது எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு பேசியது போல் குளறிப் போயிருந்தது. ஆனால் வாலியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரின் பாடல் வரிகள் போல் இளமையாய் இருந்தது. வாலி சுவாரஸ்யமான பேச்சாளர். அபாரமான ஞாபக சக்தி அவருக்கு. அவரின் வாழ்க்கையில் நடந்த இரு நிகழ்ச்சிகளை சொன்னால் போதும், அந்த விழா சூடு பிடித்து விடும். சாருவை பற்றி நிறைய விமர்சனங்கள் இருப்பதை பற்றி பேசும்போது எவன் ஒருவன் விமர்சனத்துக்கு உள்ளாகிறானோ, அவனே அறிவாளி என்றார். மரவட்டையையும், மண்புழுவையும் எவனும் விமர்சிக்க மாட்டான். நல்ல பாம்பை தான் விமர்சிப்பான் என்றார்!

இந்திரா பார்த்தசாரதி பேசும்போது தனக்கு இத்தனை பெரிய கூட்டத்தில் பேசி பழக்கமில்லை. எப்போதும் தான் பேசும் இலக்கிய விழாக்களில் இருபது, முப்பது பேர் தான் இருப்பார்கள் என்றார். நாவலைப் பற்றி சொல்லும்போது சுருக்கமாய் இது ஒரு சாப்ஃட் போர்ன் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. இது ஹாட் போர்ன் என்றார். படிக்க இஷ்டமிருந்தால் படியுங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள் என்றார். 

மதன் சிறிது நேரம் பேசினாலும் மிக நன்றாய் பேசினார். இப்படி ஒரு நாவல் வெளியீட்டு விழாவுக்கு காமராஜர் அரங்கத்தில் வைக்க ஒரு தைரியம் வேண்டும் என்றார். இப்படிப் பட்ட நாவல்கள் பத்திரிக்கையில் தொடராக வருவது சாத்தியமில்லை. ஏனென்றால் ரசனை அல்லாத, தைரியம் அல்லாதவர்களே எந்த ஒரு துறையிலும் உயர்பதவியில் இருக்கிறார்கள். அவர்களால் இத்தகைய நாவல்களை எல்லாம் கொண்டு வர முடியாது என்றார். இந்த நாவலில் ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் இருப்பதாக சொன்னார். 

இவர்களை தவிர வெற்றி மாறன், ஞானி போன்றோரும் வந்திருந்தார்கள். சாரு சிறப்புரை என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னார்.  பெரும்பாலும் அவரின் வலைதளத்தில் இருக்கும் சுய புலம்பல்களாய் இருந்தது. ஒன்று கவனித்தேன். சாருவை யார் புகழ்கிறார்களோ அவர்களை தான் அவர் புகழ்வார் போலிருக்கிறது! வாலி ஒரு முறை அவரைப் பற்றி விகடனில் எழுதியவுடன் அவரிடம் நட்பு வைத்துக் கொண்டார். ஆனால் அவரை அறிமுகம் செய்கிறேன் என்று அவர் பேசியதிலிருந்தே, வாலியை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. இச்சு இச்சு குடு படலை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். ஆனால் வாலியின் வேறு எந்த நல்ல பாடலையும் அவரால் மேற்கோள் காட்ட முடியவில்லை. தளபதியில் எதோ ஒரு பாட்டு என்று பாதியில் விட்டு விட்டார். ஞானியை அவ்வளவு திட்டியவர், இன்று அவர் வந்தார் என்றதும் தனக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடு இருந்தது உண்மை, ஆனால் அவரை போல் எழுத்தாளர் இல்லை என்று பேசுகிறார். ஜெயமோகன் வந்திருந்தால் அவரையும் பாராட்டி இருப்பாரோ என்று தோன்றியது! 

என்னை பொறுத்தவரை சாரு உடனடியாய் செய்ய வேண்டியது, தான் ஐரோப்பா சென்றது பற்றி, தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை என்பது பற்றி, கேரளாவில் அவரை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது பற்றி, உத்தம தமிழ் எழுத்தாளனைப் பற்றி, சினிமாவில் இவரை யாருமே கண்டு கொள்ளாதது பற்றி இவர் பேசாமல் இருப்பது நலம். இதை செய்தால் போதும் இவர் உலகம் போற்றும் பெரிய எழுத்தாளர் ஆகி விடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இரு வாரங்களுக்கு முன் நடந்த எஸ். ரா வின் இலக்கிய சொற்பொழிவுக்கு நான் சென்றேன் என்று உங்களுக்குத் தெரியும். ஒரு நாள், சற்று தாமதமாய் சென்றேன். கடைசி வரிசையில் ஒரு மனிதரின் பக்கத்தில் ஒரு இருக்கை காலியாய் இருந்தது. அமரலாமா என்று கேட்டேன். அவர் தலையாட்டினார். பார்த்தால் அவர் சாரு! அட, இவர் பக்கத்திலா நாம் அமரப் போகிறோம் என்று அமர்ந்தேன். நான் ஒரு வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தேன். [இலக்கிய விழா என்பதற்காக அல்ல, வெயில் காலத்தில் அதை அவ்வளவாய் போட முடிவதில்லை, அதனால் மழை காலத்தில் அந்த உடையை தேர்ந்தெடுத்தேன்] அவர் என்னை பார்த்தார் என்று நினைக்கிறேன். எஸ். ரா. பேச ஆரம்பித்து விட்டதால் நான் இவரிடம் எதுவும் பேசாமல் அவரின் பேச்சை கேட்க ஆரம்பித்தேன். அன்று விழா முடிந்ததும் இதைப் பற்றி என் மனைவியிடம் சொன்னேன். நீங்கள் அவரிடம் பேசவில்லையா என்று கேட்டாள்! அவரிடம் நான் என்ன பேசினாலும், நாளை வலைதளத்தில் குர்தா அணிந்து கொண்டு ஒருத்தன் வந்தான், என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டான் என்று பதிவிடுவார். இது எனக்குத் தேவையா என்றேன். இன்று விழாவில் திடீரென்று குர்தா அணிந்து கொண்டு ஒருவன் ரஷ்ய கலாச்சார மையத்திற்கு வந்தார், அது அவருக்கு மிகவும் ஆபாசமாக இருந்தது. ஏன் இந்த உடை என்று கேட்டேன், அதற்கு இலக்கிய விழா என்றார்கள், அதனால் அப்படி வந்தேன் என்று பதில் சொன்னார் என்று கூறி கலாய்த்தார். அன்று அப்படி இன்னொரு ஆள் வந்திருந்தாரா, அல்லது என்னை நினைத்து மற்றதெல்லாம் அவரே இட்டுக் கட்டி சொன்னாரா தெரியவில்லை. ஆஹா, நாம் எதுவுமே பேசாமலேயே இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தேன்!!


கடந்த ஒரு வாரமாக சென்னையில் மழையுடன் உலக இலக்கியத்திலும் நனைந்தேன். ரஷ்யன் கல்சுரல் சென்டரும், ஜெயகாந்தன்/புஷ்கின் மற்றும் உயிர்மை இணைந்து நடத்திய இலக்கிய கொண்டாட்டத்தை பற்றி சொல்கிறேன். கடந்த 21 ம் தேதி தொடங்கி நேற்று வரை வெகு விமர்சையாக, அரங்கு நிறைந்த நிகழ்வாகவும் மிக நெகிழ்வாகவும் நடந்தது. 7 நாட்களில் 7 சிறந்த உலக இலக்கியங்களை நாளொன்ராக அறிமுகம் செய்து வைத்து அதைப் பற்றி மிக விரிவாக எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்கள்.


1. லியோ டால்ஸ்டாயின் அன்னா கரனீனா

2. தாச்தாவேய்ச்கியின் குற்றமும் தண்டனையும்

3. பாஷோவின் ஜென் கவிதைகள்

4. ஷேக்ஸ்பியரின் மேக்பெத்

5. ஹோமரின் இலியட்

6. 1001 அரேபிய இரவுகள்

7. ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்


முதலில் இப்படி ஒரு நிகழ்வை பற்றி அவரின் வலைதளத்தில் படித்ததும் என்னைப் போன்ற இலக்கிய உபாசகனுக்கு [அல்லது அப்படி சொல்லிக் கொண்டு திரிகிறவனுக்கு] ஒரு நல்ல அறிமுக நிகழ்ச்சியே இருக்கும் என்று பட்டது. மேலும் இது ஒரு புது வித அனுபவமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நிகழ்ச்சி சரியாய் திங்கள் [கவனிக்க MONDAY] மாலை 6 மணிக்குத் தொடங்கி ஞாயிறு வரை நீள்கிறது. ஏன் இந்த மாதிரி நிகழ்வை வார இறுதிகளில் வைக்காமல் வார நாட்களில், சென்னையின் மையத்தில், அதுவும் 6 மணிக்குத் தொடங்குகிறார்கள்? எத்தனை பேர் அலுவலகத்தை முடித்து இதில் கலந்து கொள்ள முடியும் என்று ஒரு வித எரிச்சல் வந்தது. அதிலும், என்னை போல் ஐ. டி யில் வேலை செய்பவனுக்கு வார நாட்களில் மாலை 6 மணி அலுவலகத்தை விட்டு வெளியே வருவது என்பது கனவில் தான் நடக்கும். அப்படியே நடந்தாலும் நான் வேலை பார்க்கும் இடமான தாம்பரம் சாநிடோரியதிலிருந்து ஆழ்வார்பேட்டை செல்வதற்கு நான் திங்கள் கிளம்பினால் ஞாயிறு வந்து விடும். சரி, ஏதோ முடிந்தவரை முயற்ச்சிப்போம் என்று நினைத்தேன். நல்ல வேளையாக அதிர்ஷ்டம் என் பக்கம் தான். ஏழு நாட்களில் ஒரு நாள் தவிர்த்து அத்தனை நாட்களிலும் அடாத மழையிலும் விடாது சென்று விட்டேன். யாருமே இருக்க மாட்டார்கள் என்று நான், ஏன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் நினைத்ததை உடைத்து எல்லா நாளும் அரங்கு நிறைந்த நிகழ்வாக இருந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த நிகழ்வை பற்றி நான் இங்கு அப்படியே சொல்ல போவதில்லை, அது முடியாது. நாளுக்கு இரண்டு மணி நேரம் என்று இந்த ஏழு நாட்களுக்கு பதினான்கு மணி நேரம் குறையாமல் பேசி இருக்கிறார் எஸ். ரா. இப்போது தான் அவர் எப்படி இவ்வளவு எழுதுகிறார் என்று எனக்குப் புரிகிறது. மனிதரிடம் பொங்கி வழிகிறது. அவரின் சொற்பொழிவை புத்தக வடிவமாகவும், சீடி, டீவிடீ வடிவமாகவும் கொண்டு வர போவதாக சொன்னார்கள்.

தினமும் நிகழ்ச்சி முடிந்ததும் பதிவிட்டிருந்தால் நன்றாய் இருந்திருக்கும். அனைத்தையும் சேர்த்து நினைவில் உள்ளவரை எழுதுகிறேன்.

நிகழ்ச்சியில் கிடைத்த சில அறிய தகவல்கள்/முத்துக்கள்: [என் நினைவுப் பெட்டகத்திலிருந்து]

1. இந்தியாவில் ஆங்கில மோகம் இருப்பது போல் அப்போது ரஷ்யாவில் ஃபிரெஞ்ச் மோகம் இருந்தது. ஃபிரெஞ்ச் கலாச்சாரம் நாகரீகம் பிரதானப்படுத்தப்பட்டது.

2. ஆண் வீட்டை கட்டுகிறான். பெண் அதற்கு உயிர் தருகிறாள் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

3. உங்கள் அறை எப்போதும் ஒரு வீடாகாது. அறையிலிருந்து வீட்டுக்கு எப்போது போகலாம் என்று தான் எல்லோரும் நினைக்கிறோம். வீட்டுக்கு வந்ததும், நமக்கான அறையை தேடி ஒடுங்கி கொள்கிறோம்.

4. அன்னா கடைசியில் ஒரு நீச்சல் குளத்தில் குதிப்பதை போல் ரயிலின் முன் விழுகிறாள்.

5. நான் உங்களை இங்கு பார்த்துக் கொண்டிருப்பதை போல் நீங்கள் இல்லாதிருப்பதை உங்கள் வீட்டில் யாரோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பை போல் இல்லாதிருப்பதையும் உணர முடிகிறது.

6. ஜென் கவிதைகளின் மரபு அதில் ஒரு அக விழிப்பு/தரிசனம் இருக்க வேண்டும்.

7. ஒரு மரமானது ஒரு மெல்லிய பூவினை கொண்டுள்ள அதே சமயத்தில் அதன் வேர்கள் பாறையையும் உடைக்கும் தன்மை கொண்டுள்ளது.

நிகழ்வில் படிக்கப்பட்ட சில ஜென் கவிதைகள்:


திருடன்

விட்டுச் சென்றிருக்கிறான் -

ஜன்னலிலுள்ள

நிலவை


இரண்டு குமிழிகள்

இணையும் தருணத்தில்

காணாமல் போகின்றன

இரண்டுமே, மலர்கிறது

ஒரு தாமரை


திமிங்கலம்!

ஆழ ஆழ அது

செல்கையில்

உயர உயர எழுகிறது

அதன் வால்!


கோவில் மனிமேல்

ஓய்வெடுக்கும்

வண்ணத்துப் பூச்சிக்கு

நல்ல உறக்கம் -

மணி ஒலிக்கும் வரை.


உதிர்ந்த மலர்

திரும்புகிறதோ கிளைக்கு?

அது, வண்ணத்துப் பூச்சி


மட்சுஷிமா -

ஆ, மட்சுஷிமா!

மட்சுஷிமா!

மட்சுஷிமா என்பது ஜப்பானில் சமுத்திரக் கரையோரமுள்ள, மலைகளும், நதிகளும், மரங்களும், மலர்களும் உள்ள ஓர் இடம். அங்கு நின்று கொண்டு பாஷோ இந்த ஜென் கவிதையை பாடுகிறார். முதலில் அந்த இடத்தை பார்த்து பிரமித்து அதன் பெயர் சொல்கிறார். இப்போது அந்த இடம் அவர் கண்களில் நிறைந்து விட்டது. அதன் ஆச்சர்யத்தை பாடுகிறார். இப்போது அவருக்குள்ளும் இன்னொரு மாட்சுஷிமா!

சும்மா உட்கார்ந்

திருக்கிறது அமைதியாய்.

புல்

தானே வளர்கிறது

வசந்தம் வருகிறது


ஒரு வெட்டுக் கிளி இறகசைக்கிறது

ஒரு மலையின் மௌனம் கலைகிறது


ஒரு ஜென் கதை:

குருவே, இந்த வானம், பூமி, கடல், அருவி இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?

"உன் வாயிலிருந்து வந்தன! வானம், பூமி எல்லாம் சொற்கள், அது அவைகள் அல்ல"

1. ஜப்பானில் இன்றும் ஒருவிதமான யானை பொம்மை பிரசித்தம். ஏனென்றால் ஜப்பானில் அப்போது யானைகள் இல்லை. யானையை பார்க்காதவன் ஒருவன் வடித்த பொம்மை அது.

2. எழுதும்போது ஏதேனும் சொற்கள் கிடைக்காமல் நீங்கள் தவித்தால் உங்கள் பால்ய காலத்திற்குச் செல்லுங்கள், அங்கு உங்களுக்கு அது நிச்சயமாய் கிடைக்கும்.

3. சொற்கூட்டங்கள் மேகத்தை போல என்னை கடந்து செல்கின்றன, அதிலிருந்து எனக்குத் தேவையான சொல்லை நான் எடுத்துக் கொள்கிறேன் - தேவதச்சன்

4. ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்திற்காக இரண்டாயிரம் சொச்ச வார்த்தைகளை கொடுத்திருக்கிறார். Advertisement, Accomodation போன்றவை அவைகளுள் அடக்கம்.

5. ஒரு எழுத்தாளரிடம் உலகத்தில் ஒருவர் மட்டும் உயிருடன் இருக்கலாம் என்றால் யாரை சொல்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அவர் "ஷேக்ஸ்பியர்", ஏனென்றால் அவர் ஒருவர் இருந்தால் அவரே மற்ற அனைவரையும் கதாப்பாத்திரங்களாக உருவாக்கி விடுவார்! என்று சொன்னார்.

6. ஷேக்ஸ்பியர் வரலாறு கூறாமல் ஒரு விஷயத்தையும் சொல்வதில்லை.

7. ஷேக்ஸ்பியரின் மேக்பெத், அதை தழுவி ரோமன் போலன்ஸ்கி, விஷால் பரத்வாஜ் [மக்பூல்] போன்றோர்களால் திரைப்படமாய் எடுக்கப் பட்டது.

8. ஹோமரின் இலியட் நம் மகாபாரதம்/இராமாயணத்தை ஒத்திருக்கிறது, அதன் சம்பவங்கள் உட்பட...

9. மகாபாரத்ததிலிருந்து எந்த கதாபாத்திரத்தை எடுக்க முடியும், எதை எடுக்க முடியாது? என்ற ஒரு கேள்வி நான் எதிர்கொண்ட கேள்விகளில் மிகச் சிறந்த கேள்வியாகும். அதற்கு நான் சொன்ன பதில், மகாபாரதத்திலிருந்து பீஷ்மரை எடுக்க முடியாது. பாஞ்சாலியை எடுத்தாலும் கதைக்கு எந்த பங்கமும் வராது! பாஞ்சாலி இல்லையென்றாலும் பாரதம் இருக்கும். பாஞ்சாலி வெறும் பகடைக் காய் தான்.

10. "சப்தமே இல்லாத நடை என்றால் அது சகுனி தான்" என்பார் திருதிராஷ்ட்ரர்!

11. உங்களுக்கு வேண்டியது கிடைத்து விட்டால் எதிரியின் கூடாரத்தில் கூட நீங்கள் நிம்மதியாய் உறங்குவீர்கள், ப்ரியம் அகிலஸின் கூடாரத்தில் உறங்குவதை போல...

12. இலியட் அகிலஸின் புகழ் பாடுகிறது. ஒடிஸ்ஸி யுலிசிஸின் புகழ் பாடுகிறது.

13. அலிபாபாவும், அலாவுதீனும் எல்லோரும் கேட்டும், படித்தும் இருக்கிறோம், அனால் அவைகள் 1001 இரவுகள் கதைகளில் வருகிறது என்பது நமக்குத் தெரிவதில்லை.

14. ஷெஹெரஷா, ராஜா சாரியாருக்கு 1001 இரவுகளை கதை சொல்லியே நகர்த்துகிறாள். அதன் மூலம் சாவை தள்ளிப் போடுகிறாள். கதை சொல்லி நாமும் சாவைத் தள்ளிப் போடுவோம்.

15. கடவுள் மனிதனை படைத்தான், பின்பு மனிதன் கடவுளை படைத்தான்! - புதுமைப்பித்தன்

16. Army is Men without Women - Hemingway

17. ஹெமிங்க்வே ஒரு மிகச் சிறந்த வேட்டைக்காரர் [சிங்கம் ஒன்றை தனி ஆளாய் வேட்டையாடியவர்], உல்லாசி, சல்லாபி, பெரிய குடிகாரர், ஊர் சுற்றி, வாழ்வை கொண்டாடியவர். 127 முறை விபத்தில் அகப்பட்டு பிழைத்தவர்.

18. காளைச் சண்டை பார்க்கச் சென்ற ஹெமிங்க்வே அங்கு ஒருவன் நாள் முழுதும் ஓவியம் தீட்டிக் கொண்டிருப்பதை பார்த்து, அவரின் ஓவியத்தை வாங்கிப் பார்த்தார். அந்தக் காளையின் மூர்க்கம்/வலிமை அத்தனையும் உன் கோடுகளில் இருக்கிறது! நீ யார் என்று கேட்டார், அதற்கு அவர் நான் தான் பாப்லோ பிகாசோ என்றார்.

19. கிழவனும் கடலும் நாவல் வெறும் நூறு பக்கங்களே கொண்ட நோபல் பரிசு பெற்ற நாவல். அதில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் தான் வருகின்றன. பெண்களே இல்லாத நாவல் இது.

20. வெற்றி தோல்வி என்பதை வெற்றி, சிறிய வெற்றி என்று வைத்துக் கொள்ளலாம். விளையாட்டில் கலந்து கொள்ளாதவர்களே தோற்றவர்கள்!

வழி: மடிப்பாக்கம்->வேளச்சேரி->சைதாப்பேட்டை->நந்தனம்->ஆழ்வார்பேட்டை->ராயப்பேட்டை->விவேகானந்தர் இல்லம்.

நடமாடும் விளம்பரம்

வாழ்க தமிழ்!

ஏன் ஆக்சிடென்ட் நடக்காது?

சாலையோர ஓவியங்கள்

மரத்தை வச்சவன்..[போயி சேந்துருப்பான்!]

நகரம்

அசதி? வசதி? சுதி?

வறுமைக் கோட்டின் கீழ்...

தேசிங்கு ராஜா!

காரம்; பலகாரம்!

அணிவகுப்பு

தரை மேல் பிறக்க வைத்தான்...

ஆஞ்சினேயருக்கு இன்று ஒரே ஆனந்தம்!

பட்டம் பறக்கட்டும்

அலையோடு விளையாடி...

உறவுகள்

அறிமுகம்

சகோதரிகள் [எனக்கல்ல!]

வங்கக்கடல்

தனிமை

தோள் கண்டேன்; தோளே கண்டேன்!

சேப்பாக்கம்

வி. இல்லம்

பொழுது போச்சு...


வேளச்சேரி ரயில் நிலையத்தின் முகப்பு!



ரயில் நிலையித்திலிருந்து பரங்கிமலை நோக்கி நீளும் பாதை...



ஆள் அரவமற்ற ரயில் நிலையம்!! [அதுவும் சென்னையில்!!]



எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதது...
  • யானை
  • ரயில்


ரயிலினூடே


இரு கோடுகள் அதனுள் பல கோடுகள்...



ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் ஒவ்வொரு விதமான மேற்கூரை அலங்காரகள் அமைப்பதாய் கேள்விப்பட்டேன்! அது ஓரளவுக்கு உண்மையென்றும் அறிந்தேன். பின் வரும் படங்களைப் பார்க்க...


மயிலையின் நிலையத்தின் கூரை


கஸ்தூரிபாய் நகர் நிலையத்தின் கூரை


அடையார் ஆறு! [என்று தான் நினைக்கிறேன்!] நான் தமிழகத்தின் முதல்வர் ஆனால்!!!!, சென்னையை இருக்கும் எல்லா கால்வாய்களிலும் லண்டனின் தேம்ஸ் நதியிலும், வெனீஸ் நகரத்திலும் இருப்பது போல் படகுகள் விடுவேன்! [ஆசையே அலை போலே...]


இதுவும் ஒரு புராதானச் சின்னம் தானோ?



உயர் நீதி மன்றத்தின் தலை



வேறு எந்த நாட்டிலும் காண முடியாது என்று நினைக்கிறேன்! ப்ரவீன் ராஜின் இதயத்தை ரத்தம் சொட்டச் சொட்ட குத்தியது யாரோ?


மறுபடியும் தலை...



வழிகாட்டி [இதை அன்னாந்து பார்க்க யாராவது வழி காட்ட வேண்டும்!!]


என்ன செய்வது? வறுமைக்கு என்றுமே வயதாவதில்லை :-(