தமிழ் மையத்தின் எம்.டி. திரு. கேஸ்பர் ராஜ், இந்த யோசனை ஆகஸ்ட் மாதத்தில் உதித்ததாகவும், ஆனால் வேலை செய்யத் தொடங்கியது ஜனவரியில் தான் என்று சொன்னார்! உண்மையாகவே வரவேற்கத் தக்க ஒரு விஷயம். இதைப் பற்றி ஹிந்து பேப்பரில் படிக்கும் போது தான் நம் கிராமங்களில் எத்தனை வகையான ஆட்டம் இருக்கிறது என்றே தெரிகிறது!
நான் முதலில் சென்றது நந்தனத்தில் ஒய் எம் சி ஏ பக்ஸ் தியேட்டரில் நடந்த மொஸார்ட் மீட்ஸ் இந்தியா என்ற நிகழ்ச்சிக்கு! இது சிஃம்பொனியுடன் நம் கர்நாடக சங்கீதத்தை கலந்து கொடுக்கும் முயற்சி! ஃப்யுஷன் என்கிறார்களே, அது தான்..[எனக்கு எல்லாம் கேள்வி ஞானம் தான், இதில் பெருசா தப்பு இருக்க வாய்ப்பில்லை, கொஞ்சமாவது சரியா இருந்தா தானே தப்பு கண்டுபுடிக்க முடியும்...] அற்புதமாய் செய்தார்கள்! கிட்டத்தட்ட ஒரு பத்து பேர் வரிசையாக உட்கார்ந்து வயலின் வாசிப்பதையும், கோரஸாய் ஆண்களும் பெண்களும் பாடுவதையும் இது வரை சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்! சென்னை சங்கமத்தின் உதவியால் ஒரு தர்ம தரிசனம்! சங்கராபரணம், சிந்துபைரவி, பந்துராஹளி ராகங்களை வாசித்துக் காட்டினார்கள்! காதில் தேன் வழிந்து எறும்பு மொய்த்ததென்றால் நம்பவா போகிறீர்கள்! அந்த ஓபன் தியேட்டரில் தொடை தட்டிக் கொண்டே கேட்டதில் ஒரு கொசுவும் சாகவில்லை! இது சங்கீதக் கூட்டம் என்று அறிந்து தொடையைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் கொசுவாரின் கச்சேரி!மறுநாள் ஃபின்லேண்டில் இருந்து வந்த ஒரு குழு நடனமாடி பாட்டு பாடி மகிழ்வித்தார்கள்!
நேற்றும் இன்றும் பெசன்ட் நகர் பீச்சில் கண்டு களித்தேன்! குடும்பாட்டம், ஜிம்னாஸியம், சத்தியமங்கலத்தில் வாழும் மலை வாழ் மக்களின் ஆட்டம் என்று விதவிதமாய் அமர்க்களப் படுத்தினார்கள்! கடற்கரையே ஆடியது என்றால் மிகையாகாது! அந்த இடத்திலேயே சினிமா இசையமைக்க குடும்பாட்டக் குழுவிற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதாக மேடையில் அறிவித்தார்கள்!
அடடா தவற விட்டு விட்டோமே என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வருடா வருடம் இதை நடத்தப் போவதாகத் திட்டம்! இந்த வருடம் இல்லையென்றால் அடுத்த வருடம்! சென்னை சங்கமத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், [முதலில் கடற்கரையில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வையுங்கள் சார்!] அழிந்து வரும் பல கிராமியக் கலைகள் தழைத்தோங்கவும், இருக்கிறானா இல்லையா என்று தெரியாத இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!!
நாடகம் - ஹலோ ராஜி
கதை, வசனம், இயக்கம் - அகஸ்டோ
சிறப்பு விருந்தினர்கள் - டி.கே.எஸ். அண்ணாச்சியின் வாரிசுகள், நாடக நடிகை ஷீலா
ஜாதி மதத்தின் மேல் நம்பிக்கை இல்லாத ஒரு முற்போக்கும் எண்ணம் கொண்ட பெண்ணை பெண் பார்க்க நல்ல இதயங்கள் கொண்ட இருவர் வருகிறார்கள். அதில் யாரை அவர் தேர்ந்தெடுக்கிறார் என்பதில் நிகழும் குழப்பங்களே கதை. இந்தக் கால இளஞர்கள் செய்யக்கூடிய நற்காரியம் ஏராளமாக இருக்கிறது, அதை விடுத்து ஜாதி மதம் என்ற பிரிவினையில் சிக்கி தவிக்ககூடாது என்று ஒரு சின்ன மெஸேஜ்!
தமிழ் திரையிலும், விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் வரும் செளந்தர்யா வித விதமான சேலைகளில் கதாநாயகியாக வலம் வந்தார். மற்ற நடிகர்களின் பெயர் எனக்கு மறந்து விட்டது. பொண்ணு பேர் மட்டும் எப்படி ஞாபகம் இருக்கு என்று கேட்காதீர்கள்! ஹார்மோன் திருவிளையாடல்!! அதையன்றி யாமொன்றும் அரியோம் பராபரமே!! எல்லா நடிகர்களும் நன்றாகவே நடித்தனர். பிரகாஷாக வந்தவர் கொஞ்சம் ஓவராக உணர்ச்சிவசப்பட்டு நடிக்கிறாரோ என்று தோன்றியது. மற்றபடி நாடகம் முழுவதும் இழையோடும் நகைச்சுவை மிக அருமை!
"நீ இந்த வெள்ளை சஃவாரி போட்டாலே கல்யாணத்துக்கு போறேன்னு ஊருக்கே தெரியுமேடா!" என்று இன்றும் சஃவாரி அணிபவர்களை கிண்டல் செய்கிறார்கள். கல்யாணம் என்றாலே மாப்பிள்ளை பாம்பே டையிங், ஒன்லி விமல் மாடல்கள் போல் ஒரு சஃவாரி எடுத்துக் கொள்வது ஒரு காலம்.
"இவர்தான் கிருஷ்ணனா என்று கேட்டதற்கு, ஏன் புல்லாங்குழலோட வந்தாதான் ஒத்துக்குவீங்களா என்பது நச் பதில்."
"இதுக்கு தான் நான் என் கல்யாணத்தப்போ பொண்ணே பாக்கலை, போட்டோ மட்டும் அனுப்ச்சேன்! ஃபோட்டோல நான் கொஞ்சம் சுமாராவெ இருப்பேன். தாலி கட்டும் போது அவ என்னை உத்துப் பாத்து ஓன்னு கதறுனா, என்னன்னு கேட்டா, ஃபோட்டோல சிங்கம் மாதிரி இருந்தியேய்யா, நேர்ல அசிங்கமா இருக்கியேன்னா.."
இப்படிப் பல இடங்களில் பல நச் நச் கள்! அந்த நடிகர் மிக இயல்பாய் நடித்தார். பாராட்டுக்கள்.
இந்த நாடகத்தில் இன்னொரு முக்கியமான விஷயம், 3 விநாடிகளில் க்ளைமாக்ஸ்! இதை நாடகத்திற்கு முன்பே சொல்லி எதிர்பார்ப்பை கூட்டினார்கள்! எதிர்பார்ப்பு என்று வந்துவிட்டால் ஏமாற்றத்தை தவிர்ப்பது கஷ்டம் தான். கொஞ்சம் சப்பென்று தான் இருந்தது. நாயகி கடைசியில் தன் கணவனை தேர்ந்தெடுத்ததில் எனக்கு கொஞ்சம் உறுத்தவே செய்தது. ஆனாலும் பாராட்டத்தக்க முயற்சி!
நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். பெரிய மனிதனாய் ஆகக் கூடாது, அப்படியே ஆனாலும் இந்த மாதிரி மேடையேறக்கூடாது, அப்படியே ஏறினாலும் பொன்னாடை போர்த்துவதை தவிர்க்க வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் பொன்னாடை போர்த்துகிறார்கள். இத்தனையும் கொண்டு போய் என்ன தான் செய்வார்களோ தெரியவில்லை..
கதை
வசனம் : நாணு
அரங்கம் : வாணி மஹால், மஹாசுவாமிகள் அரங்கம்
ஒரு நடுத்தரக் குடும்பம். குடும்பத்தலைவன், தலைவி, பிள்ளை, தலைவனின் அப்பா. அப்பாவின் பழைய தார்மீகக் கருத்துக்களுடனும், பிடிவாதத்துடனும், பிள்ளையின் புதிய சிந்தனைகளுடனும், பிடிவாதத்துடனும் சிக்கித் தவிக்கும் ஒரு மனிதனின் கதை. வாழ்க்கை மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது, பெற்றோர் ஒரு வேகத்திலும், பிள்ளைகள் ஒரு வேகத்திலும் சென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்காக வாழ்வதே நம் வாழ்க்கை என்று தம்பதிகள் உணர்வதாய் நாடகம் முடிகிறது. இவ்வளவு நுணுக்கமான பிரச்சனையை இவ்வளவு எளிமையாக அழகாக கையாள முடியுமா என்று பிரமிப்பாய் இருக்கிறது. தேவை இல்லாமல் இளைய சமுதாயத்தினருடன் உங்களுடைய பழமையான கருத்தை திணிக்காதீர்கள் என்று வீட்டின் முதியவருக்கும், அதிகமாக பெரியவர்களை உங்கள் இழுப்புக்கு இழுக்காதீர்கள், அவர்கள் உடைந்து விடுவார்கள் என்று இளைய சமுதாயத்தினருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆனால் அது நேரடியான அறிவுரையாய் இல்லாமல் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றியது போலிருந்தது பாரட்டுக்குரியது. எல்லோர் வீட்டிலும் இருக்கும் பிரச்சனையை மிக அழகாக கையாண்டிருக்கிறார் நாணு. தேர்ந்த பாத்திரப் படைப்பு. மிக அற்புதமான நடிப்பு. நாடகத்தின் தாக்கம் என்ன என்பதை நேற்று தான் உணர்ந்தேன்.
நேற்று நடந்த நிகழ்ச்சியில் பழம் பெரும் நாடகக் கலைஞர் ராமானுஜம், பழைய நடிகை லீலா, அவர் மகள், நடிகர் ராதாரவி அனைவரும் வந்திருந்தார்கள். அவருடைய பரம்பரைக் குரலில் மிக அழகாகப் பேசினார். கடைசியில் கொஞ்சம் அம்மா புகழ் பாடினார்!
நாடகம் தான் அவருக்கு தாய்வீடு என்றும் சினிமா வெறியர்களை உருவாக்கும்; நாடகம் தான் ரசிகர்களை உருவாக்கும்! என்றும் இது சத்தியத்திற்கு கட்டுப்பட்ட இடம் என்றும் சிலாகித்துப் பேசினார். நாடகத்தில் கர்ணன் வேஷம் போடுவான், அந்தக் காட்சி முடிந்ததும் மேடைக்குப் பின்னால் சென்று யாரிடமாவது டீ வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருப்பான் என்று நாடகக்காரனின் பரிதாப நிலையை நகைச்சுவையாகச் சொன்னார். நாடகம் தான் கருத்துக்களை எளிதில் கொண்டு சேர்க்கக்கூடிய சிறந்த ஊடகம் என்றார்.
இத்தைகைய ஒரு நாடக விழாவைக் கொண்டாடும் டிவி. வரதராஜனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு வரதராஜன், இந்த இடத்தில் நாடகம் தான் கதாநாயகன், ஆதலால் பாராட்டு விழா நடத்துவதென்றால் ஒரு நாடகம் போடுங்கள் என்றார். 15ம் தேதி இந்த விழா நிறைவு பெறுகிறது. விழா நிறைவு பெறுகிறது என்று சொல்வதை விட, மனம் நிறைவு பெறுகிறது என்று சொல்வது தான் சரி என்று முடித்தார். எத்தனை அழகான பேச்சு!
மன நிறைவோடு நானும் வீடு வந்து சேர்ந்தேன்!
ஒரு விஷயம். இந்த விழாவில் எந்த வலைப்பதிவாளரையும் நான் பார்க்கவில்லை. வருவதில்லையா? அல்லது நான் தான் பார்க்கத் தவறி விட்டேனா? "மீசையானாலும் மனைவி"க்குத் தான் எல்லோரும் வருதாய் உத்தேசமா?
25ம் தேதி தொடங்கிய விழாவுக்கு நேற்று தான் போக நேர்ந்தது. சும்மா தான் இருந்தேன், தொடங்கிய அன்றிலிருந்தே போயிருந்தால் கொஞ்சம் நாடக அறிவாவது வளர்ந்திருக்கும். நேற்று நாடகம் முன்பு நடந்த பேச்சில் இளைஞர்கள் யாரும் வரவில்லை என்று குறைபட்டுக்கொண்டார்கள். நான் அரங்கில் கடைசியில் நின்றிருந்தாலோ, என் தலை கொஞ்சம் வழுக்கை ஆனதாலோ அவர்களுக்கு நான் இளைஞன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நேற்று டி.நகரில் உள்ள வாணி மகாலில், ஓபுல் ரெட்டி அரங்கில் மாலி எழுதிய "நம்மவர்கள்" என்ற நாடகத்தை டிவி. வரதராஜனின் யுனைட்டெட் விஷுவல்ஸ் நிறுவனத்தினர் நடத்தினார்கள். விழாவுக்கு பழைய நடிகர் ஸ்ரிகாந்த், ரமணன், மாலி, எஸ்.வி. சேகர் அனைவரும் வந்திருந்தனர். ஸ்ரிகாந்த் அவர் காலத்தில் நாடகங்கள் நடத்த பட்ட கஷ்டங்களை சுவைபடக் கூறினார். எஸ்.வி.சேகர் யாரும் அழைக்காமலே உரிமையோடு மைக்கில் வந்து நகைச்சுவையாய் பேசினார். மனிதருக்கு நல்ல டைமிங் சென்ஸ்.
நான் அந்த அரங்கில் போய் சேர்ந்ததே ஒரு குறு நாடகம் போல் தான் இருந்தது. தரமணியிலிருந்து 5T பேருந்தில் ஏறி [டிக்கட் 3 ரூபாய்] டி.நகர் சென்று அங்கிருந்து 47ஐ பிடித்து [டிக்கட் 2 ரூபாய்] வாணி மகாலில் இறங்கும் போது மணி 7. நம் ஆட்கள் எங்கே அதற்குள் தொடங்கி இருக்கப் போகிறார்கள் என்று நினைத்தால், வெளியே கதவை பூட்டிக் கொண்டு ஒருவர், ஹால் ஃபுல் சார் என்றார். எனக்கு பகீரென்றது. கல்கி அவர்கள் "கர்நாடகம்" என்ற பெயரில் நாடகத்தையும் சினிமாவயும் விமர்சனம் செய்ததை போல் நானும் "ஹிந்துஸ்தானி" என்ற பெயரில் விமர்சனம் செய்து கலை உலகிற்கு சேவை செய்வதாய் இருந்தேனே, இப்படி குண்டை தூக்கி போடுகிறாரே இந்த மனிதர் என்று கலங்கினேன். என்னைப் போலவே நாடகம் பார்க்க வந்திருந்த சிலர் என்ன சார் ரொம்ப தூரத்துல இருந்து வர்றோம், நின்னு பாத்துக்குறோம்..விடுங்க என்றார். நான் தலையை ஆட்டினேன். [நம்ம என்னைக்கு பேசினோம் சொல்லுங்க?] அந்த மனிதர் அதெல்லாம் முடியாது சார். ஏற்கனவே அங்கே பல பேரு நின்னுட்டு தான் இருக்காங்க என்றார் கறாராய்! அவர் அந்தப் பக்கம் கொஞ்சம் நகன்றதும் கதவைத் திறந்து விட்டார் ஒரு தாத்தா..ஒரு ஓரமா நின்னு பாருங்க என்றார். வாழ்க!
இன்னும் நான் விஷயத்துக்கே வரவில்லை. நாடகம்! இந்தியா, பாகிஸ்தான் உறவைச் சொல்லும் வழக்கமான, உருக்கமான கதை. முஸ்லீம்களை நாம் வெறுப்பதில்லை, அவர்களும் நம்மவர்களே என்ற கருத்து. எனக்கு ஒன்று புரியவில்லை. இந்த நாடகத்தை பார்க்க எத்தனை முஸ்லீம் தோழர்கள் வந்திருப்பார்கள்? பாகிஸ்தானில் சென்று இந்த நாடகத்தை போட்டால் அங்கிருப்பவர்கள் நம்மைப் பற்றி புரிந்து கொள்வார்கள் என்று சொல்லலாம். இங்கு வந்திருப்பவர்களோ பெரும்பாலும் 50, 60 வயதைக் கடந்த பிராமணக் கூட்டம். இந்த நாடகத்தை இங்கே போடுவதால் யாருக்கு என்ன பயன்? சரி நல்ல விஷயத்தை யாரு வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்று தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.
ஒரு நாடகம் என்பது பார்வை இழந்தவருக்கும், காது கேளாதவருக்கும், பேச முடியாதவருக்கும் புரியும் படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை காரணமாக வைத்துக் கொண்டே கொஞ்சம் இல்லை அதிகமாகவே மிகைப்படுத்தி நடிக்கிறார்கள். 78ல் பிறந்த என்னால் இந்த வகையான நடிப்பை என்னால் ரசிக்க முடியவில்லை. அதனால் தான் இன்றைய இளைஞர்களுக்கு சிவாஜியின் படங்கள் பிடிப்பதில்லை. ஆனால் நான் சிவாஜியின் படங்களைப் பார்க்கும்போது அந்த காலத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொண்டு பார்ப்பதால் என்னால் அதை ரசிக்க முடிந்தது. ஆனால் இந்த நாடகத்தில் என்னால் ரசிக்க முடியவில்லை என்பதே உண்மை.
என்னதான் நாம் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை நாம் பலவிதங்களில் மார்தட்டிக் கொண்டாலும், ஹிந்து முஸ்லீம்களுக்கு செய்த கொடுமைகளும், முஸ்லீம் ஹிந்துக்களுக்கு செய்த கொடுமைகளும் எல்லோர் மனதிலும் ஒரு ஆறாத வடுவாகவே இருக்கிறது. மன்னிக்க நாம் என்ன தெய்வப்பிறவியா என்று ஹிந்துவும் கேட்கிறான், முஸ்லீமும் கேட்கிறான்.
கடவுள் இருக்கிறார் என்னும் இவர்கள் மசூதியையும் கோயிலையும் உடைக்கிறார்கள். கடவுளே இல்லை என்னும் நாத்திகவாதி எதையும் உடைப்பதில்லை என்று எப்போதோ யாரோ சொன்னது என் ஞாபகம் வந்தது.
மற்றபடி நாடகத்தில் லைட்டிங் நன்றாக இருந்தது. ரஹீமாக வந்தவர் நன்றாக நடித்தார். பிஸ்மில்லா கானாக வந்தவர் சத்ரியன் படத்தில் வந்த அருமைநாயகத்தை ஞாபகப்படுத்தினார். அவரது நடிப்பும் அருமை. சில இடங்களில் வசனங்கள் பளிச்! அந்த போலிஸாய் வந்தவரை நினைத்தால் எனக்கு சிரிப்பாய் இருக்கிறது. நாடகத்தை முழுமையாக நான் பார்க்கவில்லை. எப்போது முடியும் என்று ஆகிவிட்டது. அரங்கில் உட்கார்ந்திருந்தவர்களும் நெளிந்து கொண்டு தான் இருந்தார்கள். உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டே பார்த்ததால் கால் வலித்து 9 மணிக்கு கழன்று கொண்டேன்.
வெளியே வந்து டி.நகர் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். சைக்கிளில் ஒரு குல்லா அணிந்த முஸ்லீம் போய் கொண்டிருந்தார். அவரையே வெறித்துப் பார்த்தேன். அவரும் என்னையே சந்தேகமாய் பார்த்தார். "நம்மவர்கள்" என்று நினைத்துக் கொண்டு நடந்தேன்.
கதை:
மிகுதியான காம சிந்தனைகளின் ஆக்கிரமிப்பால் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் கதை. அவர் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைப் பற்றியும் தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். அவருடைய தாய் அவரை நினைத்து அழுவதையும், மருத்துவர்கள் அவரை இம்சிப்பதாயும், நண்பர்கள் அவரை பரிகாசம் செய்வதையும், ஏன் இவர்கள் எல்லோரும் இப்படி என்னை வதைக்கிறார்கள்? நான் படிக்கும் காலத்தில் இருந்ததைப் போல இவர்கள் இல்லையே? ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறார். அடிக்கடி அம்மா "உனக்கு ஒன்னுமில்லப்பா, நீ நல்லா ஆயிடுவே" என்று சொல்லும்போது நல்லா ஆகுறதுன்னா என்ன அர்த்தம்? இப்போ எனக்கு என்ன ஆயிடுச்சு? என்று பரிதாபமாய் நம்மைப் பார்த்து கேட்கிறார்!
இதன் மூலம், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சுய சிந்தனைகளை ஒளித்தும், மறைத்தும் எவ்வளவு போலியான வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது. எந்த வித பயமும் இல்லாமல் சிந்திப்பவனை இந்தச் சமுதாயம் மனநோயாளி பட்டம் கட்டி விடுப்படுகிறது. இது தான் ஆசிரியர் உணர விரும்பிய கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை..ஏன் என்றால் எனக்குப் புரிந்தது இது தான்.
நவீன நாடகம், புதுக் கவிதை, கலைப் படங்கள் எல்லாம் ஒரே வரிசையில் இருப்பவை என்று நினைக்கிறேன். அவரவர்க்கு புரிந்த்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. இது மிகச் சிறந்த கவிதை என்று ஒருவர் சொல்லி நாம் படித்தால், அந்தக் கவிதை அவருக்குத் தந்த அனுபவம் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். அதனால் அந்தக் கவிதை நம்மைப் பொறுத்தவரை நல்ல கவிதை கிடையாது! [நம்மைப் பொறுத்தவரை!] அவ்வளவு தான்..
15 வருடமாய் கூத்துப் பட்டரையில் இருப்பவர் ஜெயராவ். தெலுங்கர். நல்ல உயரம், மாநிறம், பாரதி மீசை. நக்கலான சிரிப்பு, நினைத்தபோதெல்லாம் கண்களில் கண்ணீர், திடீர் திடீரென்று மாறும் முகபாவனைகள் கொண்டு ஒரு நிஜ மனநோயாளியை நம் கண் முன்னே நிறுத்திகிறார். குறை என்று சொன்னால், கதைப் படி அந்த மனநோயாளி ஒரு பிராமணர், இவருடைய உடலமைப்பும், தமிழும் கதாப்பாத்திரத்துடன் ஒட்டவில்லை. இவர் தமிழ் பேசியது ரஜினிகாந்த் தமிழ் போன்றதொரு பிரமை எனக்கும், என்னோடு வந்த நண்பருக்கும் ஏற்பட்டது! இவர் ஊனமுற்ற குழந்தைகளுக்காக "தியேட்டர்ஸ்" என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்தக் குழந்தைகளும் இது போன்ற பொழுது போக்க நிகழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வழி வகை செய்கிறார். வாழ்க!
நவீன நாடகங்களையும், கலைப் படங்களையும் எல்லோரும் பார்ப்பதில்லை; அது எல்லோருக்கும் புரிவதில்லை என்பது என் கருத்து. ஹே ராமைப் பார்த்து விட்டு என் நண்பன் ஒருவன், கமல் என்னடா சொல்ல வர்றாரு? காந்தியும் முஸ்லீம்ன்றாரா? என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்! எப்படி அப்படிப் பட்ட ஒரு கருத்து அவனுக்கு அந்தப் படத்தில் தோன்றியதோ எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு ஊரில் ஒரு ராஜா என்று ஆரம்பமாகும் கதைகள் என்றோ வழக்கொழிந்து விட்டன. ஒருவேளை இன்று யாராவது அப்படி எழுதினால், அட இது என்ன புதுசா இருக்கே ஆரம்பமே என்று சிலர் படிக்கலாம்.
நான் கவனித்த ஒரு முக்கியமான விஷயம், இந்த மாதிரி நாடகங்களில், படங்களில், கதைகளில் ஒரு சிறு நகைச்சுவை வந்தாலும், கொஞ்சம் அளவுக்கதிகமாகவே சிரிக்கிறார்கள். இதே ஒரு சாதாரண நாடகங்களில், படங்களில், கதைகளில் வந்தால் அவர்கள் இப்படிச் சிரிப்பார்களா என்று சந்தேகம் தான். இதெல்லாம் ஒரு ஜோக்கா என்று ஒரு வரியில் குறை சொல்லிச் சென்று விடுவார்கள். இங்கு சிரிப்பதற்குக் காரணம், நான் இந்த நாடகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறேன். இந்த நாடகம் எனக்கு மிகச் சுலபமாகப் புரிகிறது என்று பிறருக்குத் தெரியப்படுத்திக் கொள்ளத் தான் போலும். இல்லையென்றால், பக்கத்தில் உட்கார்ந்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கும் சதாசிவம் மாமா, என்னங்கானும்? பையன் என்னமா ஹாஸ்யமா நடிக்கிறான், பேசுறான், நீர் சிரிக்கவே மாட்றீரே? அவன் என்ன பேசினான்னு புரியலையோ என்று இதற்கும் ஒரு பெரிய ஹாஸ்யத்தை சொன்னது போல் சொல்லிச் சிரிப்பார் என்ற பயம் என்று நினைக்கிறேன்.
நாடகத்திற்குப் பிறகு கோபிகிருஷ்ணன் எழுதிய ஒரு நூலின் ஆங்கிலப் மொழிபெயர்ப்பு [தலைப்பு social work, asocial work, anti social work என்று நினைக்கிறேன்] வெளியிடப்பட்டது.
வித்தியாசமான அனுபவம். நன்றி பிரசன்னா!
பின்குறிப்பு:யாரோ ஒரு வலைப்பதிவாளர் மழையில் நனைந்ததைப் பற்றிய பதிவு பிரசன்னாவை ரொம்பவே பாத்தித்திருக்கிறது. நீங்களாவது உருப்படியாய் இந்த நாடகம் பத்தி உங்க பதிவுல எழுதுங்க என்றார். பிரசன்னா நீங்க சொன்னபடி செஞ்சுட்டேன்.

