கூட்டமாய் வந்து நிற்கும் பேருந்தில், வந்தவர்கள் இறங்குவதற்குள் துண்டை
போட்டு இடம் பிடிப்பது போல் ஆகிவிட்டது, வலையுலகில் பதிவிடுவது.
ஆரம்பத்திலிருந்தே பேருந்துகளில் துண்டு போட்டு இடம் பிடிக்கும்
சாமர்த்தியம் எனக்கு இருந்ததில்லை...ரஹ்மான் விருது வாங்கியதும் நானும்
ஒரேடியாய் பூரித்துப் போய் இன்று எல்லோரையும் முந்திக் கொண்டு பதிவிட்டு
விடுவது என்று நினைத்தேன். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம்
இஸ்ட்ரி![இஸ்ட்ரின்னா வரலாறு தானே?]

நேற்று [இது நேற்றே போட வேண்டிய பதிவு!] காலையில் அலுவலகம் வருவதற்கு
முன்பே ரஹ்மான் இரு விருதுகள் பெற்றதை தொலைக்காட்சியில் ஐபிஎன் மூலம்
அறிந்து கொண்டேன்! அலுவலகம் செல்லும் வழியில் இயல்பாய் தங்கள் வேலையை
செய்து கொண்டிருப்பவரை பார்க்கும் போதெல்லாம், அடேய் உங்களுக்கு ஒரு
விஷயம் தெரியுமா? என்று கத்திச் சொல்ல வேண்டும் போலிருந்தது.
தொலைக்காட்சியில் அப்படி ஒரு செய்தியும், பல பிரபங்களின்
வாழ்த்துக்களும், இந்தியாவே துள்ளிக் குதித்துக் கொண்டாடும் காட்சிகளும்
என்னை புல்லரிக்கச் செய்தன! அந்தச் சேனலில் வரும் ராஜேஷையும் அவரின்
ஆங்கிலப் புலமையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வழக்கமாய் சினிமா
விமர்சனத்திற்கும் நல்ல ஒரு உலக படத்தை [டிவிடி] பரிந்துரைக்கவும்
வருவார். அவருடைய வாயில் இருந்து ஆங்கிலம் அப்படி கொட்டும்! எந்த வித
தங்கு தடையுமில்லாமல் சரளமாய் உரையாடுவார். ஆனால் நேற்று செய்தி கேட்டு
மனிதர் சந்தோஷதில் திக்கு முக்காடி விட்டார் போலும். வாயிலிருந்து
வார்த்தை வர அத்தனை தடுமாறினார்!

எத்தனையோ பிரபலாமனவர்கள், ரஹ்மானிடம் வேலை பார்த்தவர்கள் வாழ்த்தினாலும்
எஸ் பி பி யின் வாழ்த்தினை போல் இல்லை. இதை விட பல பிரமாதமான இசையை
ரஹ்மான் நமக்கு அளித்திருக்கிறார் என்ற அவர் கூற்றை நூற்றுக்கு நூறு
அங்கீகரிக்கிறேன். ராஜேஷ் எல்லோரிடமும் ஒரே ஒரு கேள்வியை கேட்டார்,
அடுத்த முறை ரஹ்மானை பார்க்கும் போது என்ன சொல்வீர்கள் என்று. எஸ் பி பி
அவரை கட்டித் தழுவி முத்தம் கொடுப்பேன் வேறென்ன சொல்வது என்றார். மனிதர்
இதயத்தின் அடியிலிருந்து அன்பு கொப்பளிக்க வாழ்த்தினார். எத்தகைய அன்பு!
ஒரு தந்தைக்குரிய பாசமும் பெருமிதமும் அதில் தெரிந்தது.

அடடா, ரஹ்மானை விட்டு விட்டு எஸ் பி பி புகழ் பாட ஆரம்பித்து விட்டேன்.
பேக் டு ரஹ்மான்! நான் இளையராஜாவின் தீவிர ரசிகன்! என்னை பொறுத்தவரை
எப்போதாவது தொட்டுக் கொள்ளும் ஊறுகாயை போன்றது ரஹ்மானின் பாட்டு.
எப்போதும் உண்ணும் சாப்பாட்டைப் போன்றது இளையராஜாவின் பாட்டு. [இந்த
நேரத்தில் இப்படி ஒரு உவமை தேவையா?] இருந்தாலும் ரஹ்மான் என்ற கலைஞனை
நான் மதிக்கவே இல்லை என்று அர்த்தம் ஆகாது. எத்தனை கழுதை வயசாகுது, நம்ம
என்ன சாதிச்சிருக்கோம் இந்த இளம் வயதில் இவங்களைப் பாரு என்று நான் என்
கல்லூரிக் காலங்களிலிருந்தே பார்த்து ஏங்கும் இருவர் ரஹ்மானும்
டென்டுல்கரும்! ரஹ்மான் மிகப் பெரிய கலைஞன் என்பதில் சந்தேகமேயில்லை
[நல்ல வேளை நீ சொன்ன, எங்க யாருக்கும் இது தெரியாது!!]

ரஹ்மான் அவரின் இளம் பருவத்தில் எடுத்த முக்கியமான முடிவுகள் அனைத்தும்
மிகச் சரியானவை! சிறு வயதிலேயே இளையராஜாவிடம் சேர்ந்தது. நல்ல ஒரு
வாய்ப்பு வந்ததும் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு அற்புதமான இசையை
வெளிக் கொண்ர்ந்தது. இளையராஜாவைப் போல் தீபாவளிக்கு 20 படம்,
வருஷத்துக்கு ஒரு நாலு ராமராஜன் படம் என்று சிக்காமல் ஹிந்தி படங்களில்
இசையமைத்து தன்னுடைய வட்டத்தை அகலப்படுத்தியது. அதோடும் நின்று விடாமல்
வெளி நாட்டினருடன் இசை ஆல்பம் தயாரித்தது, பாம்பே ட்ரீம்ஸ் இசையமைத்தது
என்று அவர் எப்போதும் அடுத்த அடுத்த எல்லையை நோக்கி பயணித்துக் கொண்டே
இருந்தார்! அது சாதாரணமான விஷயமே அல்ல! அதற்கு செய்யும் தொழிலில்
எல்லையில்லா ஈடுபாடும் அசாத்தியமான உழைப்பும் அன்றி அது சாத்தியமாகாது.

இந்தப் படம் மொத்தத்திற்கும் இசையமைக்க ரஹ்மான் எடுத்துக் கொண்டது வெறும்
15 நாட்கள் மட்டுமே. இது தான் அவர் இசையமைத்ததிலேயே குறைவான நாட்களை
எடுத்துக் கொண்ட படமாம். அடப் பாவிகளா, இதுக்கே இரண்டு அவார்ட் தூக்கிக்
கொடுத்துக் கொண்டீர்களே இன்னும் அவரின் பட்டையை கிளப்பும் பாடல்களை
[ரோஜா, புதிய முகம், தால், ரங்கீலா, இருவர், மின்சார கனவு, லகான், ரங் தே
பசந்தி] எல்லாம் கேட்டால் என்ன செய்வீர்கள் என்று இருந்தது எனக்கு.

ரஹ்மானை எல்லோரும் புகழும் இந்த நேரத்தில் அவருக்கு எந்த விதத்திலும்
குறைவில்லாத, இதே போல் பல வித சாதனைகள் படைத்திருக்க வேண்டிய இளையராஜா
(மேல் சொன்னது போல்) ஏன் தன்னை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக்
கொண்டாரோ என்ற ஆற்றாமையை தவிர்க்க முடியவில்லை!

சரி அதை விடுங்கள், நாடே இந்த நற்செய்தியால் அல்லோல கல்லோல பட்டுக்
கொண்டிருக்கிறது, இளையராஜா ரஹ்மானைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?
சொல்லவில்லையா அல்லது என் காதில் படவில்லையா? 2 வரி பாராட்டினா என்ன சார்
ஆயிடும்? நீங்க பாத்து வளந்த புள்ள தானே? இதான் சார், உங்க கிட்ட...

கமலஹாசன் சொன்னது போல் ஆஸ்கார் அமேரிக்காவின் உச்சம், அதோடு நில்லாமல்,
[அவர் எங்க நிக்க போறாரு] அதையும் தாண்டி இசையில் அகில உலக உச்சத்தை அடைய
என் இனிய வாழ்த்துக்கள். அதோடு ஆஸ்கார் வென்ற பூக்குட்டிக்கும் என்
வாழ்த்துக்கள்!

ஒய். ஜி. மகேந்திரன் நடத்திய நாகேஷின் அஞ்சலி கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். சோ, சச்சு, மனோரமா, வி.எஸ்.ராகவன், சித்ராலயா கோபு, வியட்நாம் வீடு சுந்தரம், ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகியோர் நாகேஷை வாழ்த்தி பேசினார்கள்! [கமல் எங்கே?] நான் போய் சேர்வதற்குள் சோ பேசி முடித்து விட்டார்!

சித்ராலயா கோபு

நாகேஷுக்கு முதல் சீன் சொல்லும்போது மிஸ்டர். கோபு என்றார். கொஞ்ச நேரம் கழிச்சி கோபு சார். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி டேய் கோபு என்றார்! அன்றிலிருந்து எங்கள் நட்பு செழித்து வளர்ந்தது. சிறிது காலம் சித்ராலயாவில் தான் படங்களை கொடுத்தோம். என்னடா எப்படி இருக்கு என்று கேட்கும் போது நாகேஷ் அலுத்துக் கொண்டு, எங்கேடா? பார் சோப்பைத் தாண்ட மாட்டெங்குதே என்பார்! அது என்னடா பார் சோப்பு என்றால் சம்பளம் 501ஐ தாண்ட மாட்டேங்குதே என்பார். பொறுமையாய் இரு என்று சொல்வேன். நான் சொன்னது போல் சில படங்களுக்கு அப்பால் நாகேஷை நான் தேட வேண்டியதாகி விட்டது. அவர் எங்கேயோ சென்று விட்டார். அவ்வளவு பிசி. என்றாலும் நான் எடுத்த படங்களுக்கு தாரளமாய் நேரம் ஒதுக்கி நடித்துக் கொடுத்தார்!

வி.எஸ்.ராகவன்

நாகேஷை என் நண்பனா அடைஞ்சது நான் பெற்ற பாக்கியம். காதலிக்கிறவங்களுக்குள்ள மொதல்ல மோதல் வந்து பிறகு காதல் வர்ற மாதிரி எங்க நட்பு! ஏதோ ஒரு நாடகத்துல நான் நடிச்சிருந்தேன், அதை பாத்துட்டு நாகேஷ் அந்த நாடகத்துல நீ என்ன பண்ணியிருந்தே? ஒன்னும் புரியலையே என்றார். உனக்குத் தானே புரியலை, பரவாயில்லை என்றேன். அங்கு தான் தொடங்கியது எங்கள் நட்பு. அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சோம். நாகேஷ் ஒரு துணிச்சல்காரர். பார்க்க தான் நரம்பா இருப்பாரே தவிர மன உறுது ஜாஸ்தி! நாங்க எல்லாரும் ஒரு நிகழ்ச்சிக்காக மலேஷியா சிங்கப்பூர் போயிருந்தோம். அங்க ஒரு ஆர்டிஸ்டோட அப்பா குடிச்சிட்டு வந்து பாட்டிலை ஒடைச்சி எங்களை எல்லாம் குத்திடுவேன்னு மிறட்டினாரு. நாகேஷ் தைரியமா அவர் முன்னால நின்னு எங்கே, குத்துடா, குத்து என்றார். பிறகு அவர் பணிந்து போன பிறகு ஏன்பா இப்படி போய் அவன் முன்னாடி நிக்கிறே? அவனே குடிச்சிட்டு வந்துருக்கான்னு சொன்னா, குடிகாரனை பத்தி எனக்குத் தெரியாதா, அவன் சும்மா உதார் விட்றான் என்றார். நாகேஷ் ஒரு குழந்தை என்றும் சொல்லலாம். அவருக்கு ஒரு பொருள் பிடித்து விட்டதென்றால் அவருக்கு அது அப்பவே வேண்டும். என்னிடம் இருந்த காது குடையும் கம்பி போல் வேண்டுமென்று ஊர் பூராவும் அலைந்தோம். அதே போல் நாகேஷ் ஒரு சாமர்த்தியசாலி. தயாரிப்பாளர்களிடம் பணத்தை கறாராக பேசி வாங்கி விடுவார். பணத்தை வசூலிக்காமல் டப்பிங் செய்ய மாட்டார். அவர் பிசியா நடிச்சிட்டு இருந்த காலகட்டத்துல ஒரு நாளைக்கு 2, 3 கால்ஷீட் கொடுக்குறது வழக்கம். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரும் கலைஞர்களே அவருக்காக காத்திருப்பார்கள். ஒரு ஸ்டூடியோவில் லேட் ஆனால், அடுத்து போக வேண்டிய ஸ்டூடியோவில் இருக்கும் எலெக்ட்ரிஷியனை கூப்பிட்டு கரண்டை கட் செய்ய சொல்லி விடுவார். அவர் போய் சேர்ந்தடும் கரெக்டாய் கரண்ட் வந்து விடும். நாகேஷ் வந்தவுடன் கரண்ட் வந்து விட்டது என்று இவருக்கு நல்ல பெயர் வேறு கிடைத்து விடும்.

'வியட்நாம் வீடு' சுந்தரம்

என் வியட்நாம் வீடு நாடகத்தை மேடையேத்த ஒய்.ஜி.மகேந்திரன் கேட்டர். நானும் அவரின் மீது உள்ள நம்பிக்கையால் கொடுத்து விட்டேன். நாகேஷ் இறந்த சில நாட்களுக்கு முன் அவர் வீட்டிற்குச் சென்று இந்த விஷயத்தை சொன்னேன். டென்சிங் இன்னைக்கு செய்ய வேண்டியதை அன்னைக்கே செஞ்சுட்டான். அதான் எல்லோரும் அவனை மறந்துட்டா, நீ என்னைக்கோ எழுதின நாடகத்தை இன்னைக்கு மேடையேற்றி உன்னை ஞாபகப்படுத்திக்கிறா, நல்லது தானே என்று சொல்லி விட்டு என்னை சற்று நேரம் கூர்ந்து நோக்கினார். எனக்கு அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று புரிந்தது. அவர் மெல்ல என் கையை பற்றி "நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு!" என்றார். யுஏஏ வில் சாதாரண லைட் பாயாய் இருந்த நான் இன்று மேடையில் பேசும் அளவிற்கு வந்ததற்கு நாகேஷும் ஒரு காரணம்.

சச்சு

நாகேஷுடன் நடிக்கும் போது ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும், அவர் எப்போது எப்படி என்ன செய்வார் என்று அவருக்குத் தான் தெரியும். ஏதோ ஒரு படத்தில் ஒரு சீனில் நடித்துக் கொண்டிருக்கும் போது என் வாயில் படபடவென்று அடித்து விட்டார். ஷாட் முடிந்து பார்த்தால் ரத்தமே வந்து விட்டது. நாகேஷ் என்ன இது என்று கேட்டால், ஓ சாரிம்மா, நான் சொல்லனும்னு தான் இருந்தேன் என்று இழுப்பார். என் பாட்டி என் கூட ஷூட்டிங் வரும் போது இவரிடம் எப்படி சாப்பாடு கொடுக்குறது? என்ன சாப்பிடுதோ அப்படி இப்படி என்று புலம்ப இவரும் என்ன பாட்டி ரொம்ப கவலைப்பட்றீங்க, இதோ இருக்குது பேத்தி சாப்பாடு கொடுங்க என்றார். அதற்கு என் பாட்டி இவளை சொல்லலை, வீட்டுல இருக்குற நாயை சொன்னேன் என்று சொல்லி விட்டார். அவ்வளவு தான், இதை யுனிட் பூரா தண்டோரா போட்டு விட்டார். அதன் பிறகு என் பாட்டி நாகேஷ் இருந்தால் நான் வரலை என்ற அளவுக்கு ஆகி விட்டார்.

நிற்க

நாடக விழாவோ, சினிமா சம்பந்தப்பட்ட பாராட்டு விழாவோ, அல்லது இந்த மாதிரி அஞ்சலி கூட்டமோ, மனோரமா தவிர்க்க முடியாதவராகி விடுகிறார். இவரை அழைப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். மேடையில் பேச விட்டால் பாதி உணர்ச்சி வசப்பட்டும், பாதி உளறிக் கொட்டியும் எல்லோரையும் பாடாய் படுத்துகிறார். இவரா சினிமாவில் அந்தக் கலக்கு கலக்கியவர் என்றால் நம்பவே முடியவில்லை. இரு வார்த்தைகள் கோர்வையாய் இவரால் பேச முடியவில்லை. அவருக்கு முன்னால் பேசியவர்களின் பேச்சை எல்லாம் வாங்கிக் கொண்டு அதையே மறுபடியும் நா தழுதழுக்க சொல்லி சப்பை கட்டு கட்டி விடுகிறார். வடிவேலுவின் பேட்டிகளைப் பார்க்கும் போதும் எனக்கு இது தோன்றுவதுண்டு. ஏதோ உலகத்திலேயே அவர் ஒருவர் தான் அடக்கமானவர் மாதிரி ஆமாம்மா, அவரோட நான் நடிச்சது என் பாக்கியம் என்று ஓவர் செண்டிமெண்டுகளை பிழிவார். அத்தனை பெரிய சிரிப்பு நடிகரின் பேட்டி எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். எப்படி இவர் ஸ்கிரீனில் இவ்வளவு பிரமாதப்படுத்துகிறார் என்று எனக்கு சந்தேகம் வருவதுண்டு. நாகேஷ் சொன்னது போல் நம் தமிழ் சினிமாவில் காமெடியன்களில் சிலருக்கு டைமிங் நல்லா இருக்கு, சிலருக்கு டைம் நல்லா இருக்கு! என்பது தான் நினைவுக்கு வருகிறது.நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையும் பேச அழைக்கும் போது ஒய்.ஜி.மகேந்திரன் நாகேஷைப் பற்றி பல வித எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது. அதில் சில.

கலாட்டா கல்யாணத்தில் சிவாஜியும் நாகேஷும் வாடா போடா என்று பேசிக் கொள்வார்கள். நாகேஷ் ஏதோ பெசி முடித்ததும் சிவாஜி ஜெர்க் விட்டுக் கொண்டு, "ஏண்டா, டயலாக் பேசுறியா?" என்பார். பதிலுக்கு நாகேஷ், "ஏண்டா, நீ இருக்கும் போது யாரும் டயலாக் பேசக் கூடாதா?" என்பார்.

நம்நாடு படத்தில் ஏதோ வெளிநாட்டுக்காரர் போல் உடையணிந்து கொண்டு ஒரு பெரிய நாயுடன் நாகேஷ் வருவார். அதில் வில்லனாக வரும் தங்கவேலு நாயைப் பார்த்து நாகேஷிடம் "ஏன்பா, இது என்ன நாயா?" என்பார். அதுக்கு நாகேஷ், "பின்ன என்ன நீயா?" என்று ஒரு போடு போட்டார். அந்தக் காட்சி எடுத்து முடிந்ததும் தங்கவேலு எம்.ஜி.ஆரிடம் என்னங்க இந்தப் பைய இப்படி ஒரு போடு போட்டானே, தயவு செய்து இந்த சீனை எடுத்துறுங்க என்று கெஞ்சினார். எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அதை அப்படியே வைத்து விட்டார். எம்.ஜி.ஆரே நாகேஷை அந்த அளவிற்கு ரசித்தார்.

கெளரவம் படத்தில் வீட்டில் கோர்ட் ஒத்திகை பார்க்கும் சீன். சிவாஜி இங்கிலீஷில் பேசி அசத்தி டேக் ஓக்கே ஆயிற்று. எல்லோரும் ஆரவாரமாய் கை தட்டினார்கள். ஆனால் அவர் செட்டில் ஓரத்தில் இருந்த இருந்த எங்களிடம் (நாகேஷும், நானும்) என்னடா எப்படி சீன்? என்றார். நாகேஷ் உடனே கொஞ்சமும் பயப்படாமல் இந்த படத்துல நீங்க பல இடத்துல பாரிஸ்டர் மாதிரி இங்கிலீஷ் பேசி அசத்தியிருக்கீங்க, ஆனா இப்ப நீங்க பேசினது பாரிஸ்டர் இங்கிலீஷ் மாதிரி இல்லை, ராயபுரம் இங்கிலீஷ் மாதிரி இருந்தது. ஸ்டைலாய் இல்லை என்று ஒரு போடு போட்டார். எங்க ரெண்டு பேருக்கும் இதான் தோணுச்சு என்று என்னை வேறு கூட சேர்த்துக் கொண்டார். அதற்கு அவர், போங்கடா தடி மாட்டுப் பசங்களா, நான் என்ன ஒய்.ஜி.பி. ஆரம்பிச்ச இங்கிலீஷ் ஸ்கூல்லயா இங்கிலீஷ் படிச்சேன். நல்லாயில்லைன்னா சொல்ல வேண்டியது தானே என்று உடனே இன்னொரு டேக் எடுத்து அதை சரியாய் பேசி விட்டு ஒரு முறை நாகேஷ் பக்கம் பார்த்தார். நாகேஷ் ஓகே என்று கை காட்டியதும் தான் அவருக்குத் திருப்தி வந்தது.

நாகேஷ் சிவாஜிக்கு சடை என்று பெயர் வைத்திருந்தார். எப்போ பாத்தாலும் மேக்கப் போடு, டயலாக் படி என்று படுத்தும் என்பார். அதே சமயம் கெளரவம் படத்தில் அவர் மேக்கப் அறைக்கு சிவாஜி கணேசனாய் போய் திரும்பி வரும் போது பாரிஸ்டர் ரஜினிகாந்தாய் வெளியே வருவார். மதியம் ஒன்றரை வரை அப்படித் தான் பேசுவார். மதியத்திற்குப் பிறகு கண்ணனாய் தான் திரிவார். அவன் தாண்டா நடிகன், நம்ம எல்லாம் வேஸ்ட் டா என்றும் புகழ்வார்.

நிற்க


ஒய்.ஜி.மகேந்திரன் சிவாஜியின் தீவிர பக்தர் என்று நான் அறிவேன். ஆனால் அவர் நாகேஷிடம் அதே பக்தி கொண்டிருப்பார் என்று இன்று தான் அறிந்தேன். அவர் அந்த ஜாம்பவான்களோடு இருந்த சமயங்கள் ஒவ்வொன்றையும் சிலாகித்துச் சொல்லும் போது அவர்களிடம் அவருக்கு இருக்கும் மரியாதையும் பக்தியும் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. அதனால் தான் அவர் இறந்த பிறகும் இத்தகைய ஒரு விழாவை அவரால் எடுக்க முடிகிறது.

எல்லோரும் பேசி முடித்ததும் நாகேஷின் அற்புதமான சில க்ளிப்பிங்க்ஸ்களை போட்டுக் காட்டினார்கள். கமலஹாசன் சொன்னது போல் ஒரு மனிதரின் இரங்கல் கூட்டத்திற்கு வந்து அதை மறந்து அவரை நினைவு கூறும் இடமெல்லாம் சிரிப்பென்றால் அந்த வாழ்க்கை எத்தகையது! காமெடியனாவே இருந்தாலும்

SERIOUSELY HE IS A LEGAND! HATS OFF!

கீழிருக்கும் அத்தனை பாய்ண்ட்களையும் நம் வலையுலக எழுத்தாளர்கள் ஒன்று விடாமல் எழுதியாகிவிட்டது. அப்புறம் நீ எதுக்கு எழுதுறேன்னு கேக்கப்படாது! எனக்கும் ஒரு ப்ளாக் இருக்குல்ல, நீங்க எழுதினதை நான் படிச்ச மாதிரி நான் எழுதினதை நீங்களும் படிக்கணுமா இல்லையா? இல்லை தெரியாம தான் கேக்குறேன் நான் எப்போ தான்யா ஒரு பதிவு போட்றது?பாலா சாரிடம் சில கேள்விகள்

1. இருக்கும் எல்லா கழிசடைகளை விட நேர்த்தியாய் தான் படம் எடுக்கிறீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் ஒரே வித்தியாசம். அவர்களின் கதாநாயகர்கள் ஊரோடு ஒட்டி வாழ்ந்து குத்து, பாட்டு பாடி, எதிரிகளை வீழ்த்துகிறான். உங்கள் கதாநாயகன் ஊரோடு ஒன்ற முடியாத காட்டு வாசியாய் ஓன்றும் பேசாமலும், அப்படியே பேசினாலும் ஒன்றும் புரியாமலும் எதிரிகளை வீழ்த்துகிறான். எல்லோரிடமும் அடிபடும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்போது படம் எடுப்பீர்கள்? (நீங்கள் அப்படி எடுத்தால் அந்தப் படமும் ஓடும் என்று நான் நம்புகிறேன்!)

2. நான் கடவுள் படத்தை உண்மையில் எத்தனை மணி நேரம் வருமாறு படம் பிடித்தீர்கள்? காசி காசி என்று மூன்று வருடமாய் கேட்டோமே, அங்கே அந்த 15 நிமிஷம் தானா எடுத்தீர்கள்?

3. அது எப்படி சார், 14 வருஷத்துக்குப் பிறகு அந்தக் கோலத்தில் இருப்பவனையும் தன் மகன் தான் என்று தந்தை சரியாய் அடையாளம் கண்டு கொள்கிறார்? லாஜிக்கே பார்க்காமல் படம் பார்க்கத் தானே பேரரசு போன்றவர்களை எல்லாம் வளத்து விட்டுறுக்கோம், உங்களுக்கு ஏன் இதெல்லாம்?

4. ஆர்யா காசியில் தொலைந்து போயிருந்தால், ஒரு வேளை உண்மையிலேயே அகோரி ஆனாலும் ஆகியிருப்பார். அந்த அளவுக்கு அவரை மாற்றிய நீங்கள் பூஜா பாடும் பாடல்களை ஏன் அவர் குரலிலேயோ அல்லது ஒரே ஒரு நல்ல குரலிலோ பாட வைக்கவில்லை? இதெல்லாம் நான் உங்களுக்கு சொல்லனுமா சார்?

5. பூஜாவைச் சுற்றி நாய்களும், நரிகளும், பேய்களும் (அதுங்க கூட பரவாயில்லை, சுற்றி மனுஷனுங்க!!) சுத்தி இருக்கும்போது அந்தப் பெண்ணை கற்பழிக்காமல் எப்படி சும்மா விட்டார்கள்? இதுக்கே அந்தப் பொண்ணு இந்த ஜென்மமே வேணாம் சாமின்னுதே, நம்ம நாட்ல இதை விட பொண்ணுங்க அவதிப்பட்றாங்களே அவங்களை எல்லாம் என்ன செய்றது?

6. அந்த தாண்டவனை எங்க சார் புடிச்சீங்க? அவனை பாத்தாலே....ஆமா, உண்மையில் ஆர்யா அந்த முதலாளிகளின் பிணங்களை என்ன சார் செஞ்சாரு? ஒருவேளை படத்தோட உக்கிரம் தாங்க முடியாம எல்லாரும் அகோரியா மாறி ரெண்டு பேரையும் கொன்னு தின்னுட்டீங்களா? மக்கா, நீங்க பாத்த தியேட்டர்லயாவது அதை காட்டுனாங்களா?

7. அப்புறம் சில தேவையில்லாத சீன்களும், அதன் தேவையில்லாத நீளமும் நீங்கள் ஏன் சரி செய்ய முயலவில்லை? (அந்த போலிஸ் ஸ்டேஷன் கூத்துக்கள், முருகன் குடித்து விட்டு உளருவது...)

பேட்டியில் படித்த போதெல்லாம் நிறைய மனநிலை சரியில்லாதவர்கள் நடிக்கிறார்கள், அவர்களை நடிக்க வைக்க நிறைய நேரம் தேவைப்பட்டது என்றெல்லாம் படித்தேன். ஆனால் நடித்தவர்கள் அந்த அளவுக்கு நிலை தவறியவர்கள் மாதிரி தெரியவில்லை, ஒருவேளை நீங்கள் அவ்வளவு தெளிவாக நடிக்க வைத்து விட்டீர்களா? படத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்பு இருந்தது, எதிர்பார்ப்பு ஒன்று இருந்தாலே ஏமாற்றம் என்பது சகஜம். தீபாவளிக்கும், பொங்கலுக்கும் படம் விட்றது சினிமா ஒன்னும் பட்டாசு, கரும்பு இல்லை என்று எனக்குப் புரிகிறது, ஆனாலும் கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்! தமிழ் சினிமா உங்களைப் போன்றவர்களைத் தான் நம்பியிருக்கிறது...அடியேனும் தான்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன் ரயில்வேயில் குமாஸ்தாவாக பணி புரிந்தவர் நேற்று இயற்கை எய்தியுள்ளார்! கடந்த நாற்பது ஆண்டுகளும் அவர் ரயில்வேயில் பணி புரிந்து விட்டு இறந்திருந்தால் அவரின் வாழ்க்கைக்கு அர்த்தம் இருந்திருக்குமோ இல்லையோ, இந்தப் பதிவுக்கு அர்த்தமிருந்திருக்காது! கடந்த நாற்பது ஆண்டுகள் கலையுலகில் அவருடைய உழைப்பும், அர்ப்பணிப்பும் இன்று அவரின் மறைவிற்கும், இந்தப் பதிவிற்கும் அர்த்தம் சேர்க்கிறது! நாகேஷ்! இந்தப் பெயரை சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை, நாகேஷ் என்ற பெயரைக் கேட்டவுடன் அதில் ஒரு வித நகைச்சுவை எனக்குத் தென்படுகிறது. முன் பின் தெரியாத ஒருவரின் அறிமுகத்தின் போது அவர் தன் பெயரை நாகேஷ் என்று சொன்னால் உங்களின் மனம் அனிச்சையாய் நடிகர் நாகேஷை நினைத்து ஒரு புன் முருவல் பூக்கும். அதை உங்களால் தவிர்க்க முடியுமா? அத்தகைய தாக்கத்தை நம் மனதில் நிரந்தரமாய் தங்கி இருக்கச் செய்தவர் நாகேஷ். மாடி வீட்டு மாதுவையும், தருமியையும், வைத்தியையும், செல்லபாவையும் மறக்க முடியுமா? ஆயிரம் பொன் பரிசாச்சே, சொக்கா என்ற அவரின் கூவல் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது! உங்களுக்கு ஒன்று தெரியுமா? திருவிளையாடல் வெற்றி விழாவை மதுரையில் கொண்டாடினார்களாம். அந்தத் திரைக்காவியத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் பொற்கிழி கொடுத்து கெளரவிக்கப் பட்டதாம். அந்த விழாவிற்கு நாகேஷை அழைக்கவில்லை. அது தான் சினிமா, என்று நாகேஷின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை லேண்ட்மார்க்கில் நின்று கொண்டே படித்த ஞாபகம்!!

நிற்க

இந்நேரம் அபியும் நானும் படத்தை வலையுலகம் பிரித்து மேய்ந்திருக்கும். என்ன செய்வது? எனக்கு இப்போது தான் அதைப் பார்க்க முடிந்தது! டூயட் மூவிஸாரிடமிருந்து மீண்டும் ஒரு நல்ல திரைப்படம்! எனக்குப் பிடித்தது! குழந்தைங்க கடகடன்னு வளர்ந்துர்றாங்க, ஆனா சில அப்பாக்கள் வளர்றதே இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை!! இன்றைய தலைமுறையில் குழ்ந்தைகள் தனக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவே உள்ளனர். they know what they are doing! தன் கருத்தை, தன் வாழ்க்கையை, தன் கனவை தம் பிள்ளைகளிடம் திணிக்கும் நம் இந்திய மரபு ஒழிய வேண்டும்! நல்லதோ கெட்டதோ, பிள்ளைகளை வழி நடத்துவதோடு பெற்றொர்களின் கடமை முடிந்து விடுகிறது. இதிலும் காதல் உண்டு என்ற போதும், இது போன்ற காதல் அல்லாத வாழ்வின் பிற உணர்வுகளின் மீதும் தமிழ் சினிமாவின் பார்வை விழ வேண்டும்! பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா, ரவி சாஸ்திரி [இவர் பெயர் என்ன?] கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ஜோடி எனக்கு ஏனோ பாரத விலாஸில் சிவாஜி - கே. ஆர். விஜயா ஜோடியை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. அசட்டுத் தனமாய் நடந்து கொள்ளும் புருஷனுக்கு ஏற்ப அவனை ஒரு குழந்தையாய் பாதுகாக்கும் ஒரு மனைவி! பாரத விலாஸிலும் இதே காரெக்டரைசேஷன் தான். த்ரிஷாவின் காதலனாக பல்லே பல்லே என்று ஒரு சிங் வந்து நிற்பது தமிழ் சினிமாவுக்கு ஏற்ற அக்மார்க் ட்விஸ்ட்! மாமனாருக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக பிரதமரே அவரிடம் தொலைபேசியில் பேசுவதெல்லாம் கொஞ்சம் ஓவராகத் தான் பட்டது! அதிலும் மாப்பிள்ளையின் சொந்த பந்தங்களின் கதை எல்லாம் ஓவர் டோஸ்! அபியின் குடும்பம் ஒரு அழகான அமைதியான சராசரியான குடும்பம் என்பதைப் போல் மருமகனையும் யதார்த்தமானவனாகக் காட்டி இருக்கலாம்! என்ன தான் படம் நன்றாய் சென்றாலும், சருக்கு மரம் விளையாடச் சென்ற பிருத்திவிராஜின் குழந்தையை எங்கே காணோமே என்று என் மனம் அலை பாய்ந்து கொண்டே இருந்தது. இடைவேளை வரை அது அப்பாவைத் தேடவே இல்லை, வீட்டுக்கு போவோம் என்று சொல்லவே இல்லை.