Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
மறுநாள் காலையில் "ராயல் ஜன்னத்தை" காலி செய்து கொண்டு குல்மார்க்கிற்கு கிளம்பினோம். அங்கு போய் சேர மதியம் ஆகி விடும் என்று சன்னி சொல்லி இருந்தான். வழக்கம் போல் தமிழ் பாடலுக்கு ரசித்து தலையாட்டிக் கொண்டே வண்டியை ஓட்டினான். இத்தனை நாள் கழித்து எழுதுவதால் வழியில் என்ன பேசினோம் என்பதை மறந்து விட்டேன் [நல்லவேளைன்னு யாரு சொல்றது?]. வழி நெடுக இயற்கை வனப்பை அள்ளிப் பருகியபடி சென்றோம் என்று சொல்லத் தேவையில்லை.

குல்மார்க்கில் நாங்கள் தங்க வேண்டிய இடம் ஆப்பிள் ட்ரீ ரிசார்ட். செக் இன் செய்ய வேண்டிய நேரத்திற்கு முன்பே வந்து விட்டதால், வரவேற்பு பானத்தை [வெல்கம் ட்ரிங்க்!] கொடுத்து, "லக்கேஜ்களை இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லி விட்டார்கள். சரி இங்கு இருந்து என்ன செய்வது பார்க்க வேண்டிய இடத்தை பார்த்து வருவோம் என்று நாங்கள் சன்னியிடம் சரணடைந்தோம். அவன், " நம் பாக்கேஜில் நாளை தான் ப்ளான் படி செல்ல வேண்டும். இன்று செல்லவேண்டும் என்றால் அது உங்கள் செலவு என்று தலைப்பாகையை [அவனுக்கு ஏது தலை?!] சொறிந்தான். உண்மையில், "ஏன்டா இவர்களை அதற்குள் கூட்டி வந்தோம்?" என்ற அவனுக்குத் தோன்றியது போல் இருந்தது. பணம் கிடைக்குமே என்று வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டான். பெரிய பெட்டிகளை இறக்கி வைத்து விட்டு பொடிசுகளின் லக்கேஜ்களை மட்டும் எடுத்துக் கொண்டு வண்டி ஏறினோம். ஓட்டல்காரரிடம் "அங்கு நல்ல சாப்பாடு கிடைக்குமா?" என்று கேட்டோம். அவர் "டைட் க்ளோசப்பில்" [இந்த இடத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்] ஒரு ஹோட்டல் பேரை சொல்லி அது தான் அங்கு பிரபலம், அங்கே சாப்பிடுங்கள் என்றார். வண்டி புறப்பட்டது.




ஆஹா, என்ன ஒரு அற்புதமான இடம் அது. பரந்து விரிந்த பசுமை போர்த்திய புல்வெளி. அதன் பின்னே கம்பீரமான பனி போர்த்திய மலைகள். [இதையே நான் இன்னும் எத்தனை தடவை எழுதுவது?] அந்த புல்வெளியில் ஒரு சிறு கோவில். வண்டியிலிருந்து இறக்கி விட்டதும் குதிரைக்காரர்கள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள். சன்னி ஒதுங்கிக் கொண்டான். அந்த பெரும் புல்வெளியை குதிரையில் சுற்றி வரலாம். ஒருவருக்கு வாடகை அறுநூறு ரூபாய் [பேரம் பேசி வந்தது, இன்னும் அதிகம் சொன்னார்கள்]. வரும் வழியில் இருக்கும் இடங்களை அவர்கள் காட்டிக் கொண்டே வருவார்கள். சரி எந்த அற்புதமான இடத்திற்கு வந்தாலும், நாங்கள் முதலில் செய்யும் வேலை சாப்பிடுவது தான். பிறகு வருகிறோம் என்று அந்த ஹோட்டல்காரர் சொன்ன ஹோட்டலுக்கு போனோம். [ஹோட்டல் ஜூம் ஷாட்!] மூடி இருந்தது. கதவை திறந்து உள்ளே போனால், "எல்லோரும் தொழுக போயிருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் ஆகும்!" என்றார்கள். சரி என்று கொஞ்ச நேரம் காத்திருந்து பார்த்தால் அவர்கள் வருவது மாதிரி தெரியவில்லை. பிறகு பக்கத்தில் இருந்த ஒரு தாபாவில் சென்று வயித்துக்கு போட்டுக் கொண்டு முதலில் கோயிலுக்கு போனோம். அது ஒரு சிறிய கோயில். ஒன்றும் பெரிதாய் இல்லை. பிறகு வந்து குதிரைக்காரனிடம் ஒரு மணி நேரம் பேசி ஒரு குதிரைக்கு அறுநூறு ரூபாய் வீதம் ஆறு குதிரைகளை எடுத்துக் கொண்டோம்.



அரபுக் குதிரை கொடுப்பார்கள் என்று பார்த்தால் அழுக்கு குதிரை தான் இருந்தது அவர்களிடம். சரி என்று ஏறி உட்கார்ந்து படையை கிளப்பினோம். மகதீரா படத்தில்  வருவது மாதிரி "நம்ம ஆள் வந்துட்டான்! என்று குதிரை தறி கெட்டு ஓடினால் என்ன செய்வது?" என்றெல்லாம் குதிரைக்காரனிடம் கேட்டேன். அவன் அந்தப் படத்தை பார்க்கவில்லை போலிருக்கிறது. அவன் கண்டு கொள்ளவே இல்லை. குதிரை மெதுவாய் நடை போட்டது.  ஆஹா,  இது வடிவேலு மெரினா பீச்சுல ஏறின குதிரை போல இருக்கே என்று நினைத்து நொந்தேன். குதிரை நடக்கும் போது நம் அங்கமெல்லாம் இந்தக் குலுங்கு குலுங்குகிறது. அதை ஓட விட்டு எப்படி போர் எல்லாம் புரிந்தார்கள் என்று வியப்பாய் இருந்தது.  குதிரைக்காரன் திடீர் திடீர் என்று ஏதோ ஒரு இடத்தை காட்டி "இங்கு தான் பாபியின் "ஹம் தும் எக் கம்ரே மே" பாட்டு எடுத்தார்கள், இங்கு தான் இந்தப் படத்தின் பிட்டு எடுத்தார்கள்" என்பது போன்ற சரித்திரக் குறிப்புக்களை அள்ளித் தெளித்துக் கொண்டே வந்தான். எனக்கு டிம்பிள் கபாடியாவின் ஞாபகம் வந்தது! பனிக்காலத்தில் அந்த இடம் முழுதும் பனி உறைந்து வெள்ளையாய் மாறி விடுமாம். அங்கு பனிச்சறுக்கு சொல்லிக் கொடுக்கும் ஒரு பள்ளியும் இருந்தது. அருகில் ஒரு ஆர்மி கேம்ப்பும் இருந்தது. அங்கு ஒரு பெரிய பார்க்கில் இறக்கி விட்டு "போய் சுற்றி பார்த்து விட்டு வாருங்கள்" என்று அனுப்பி விட்டார்கள். அங்கு பல வண்ணத்தில் காஷ்மீரி உடைகள் தொங்கிக் கொண்டிருந்தது. அதை அணிந்து கொண்டு போட்டோ எடுக்க ஐம்பது ரூபாய். காஷ்மீர் வந்ததில் இருந்து, இப்போது தான் ஒரு விஷயம் நூறு ரூபாய்க்கு கீழ் சொல்லி இருக்கிறார்கள். "ரொம்ப சந்தோஷம்" என்று ஆளுக்கு ஒரு உடையை போட்டுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தோம். பின்னால் பனி மலை சூழ, பச்சைப் புல்வெளியில், கண்ணை பறிக்கும் ஆடையில் தக தகன்னு மின்னினோம். அங்கிருந்து மறுபடியும் குதிரை ஏற்றம்.  காஷ்மீர் டூரின் சிறப்பான ஒரு நாளாய் அன்று மாறிப் போனது. எல்லோரும் மிகவும் குஷியாய் அனுபவித்தோம். தரு தான் மாலையின் எதிர் வெயிலில் வாடி விட்டாள். தியா குதிரையில் தூங்கியே விட்டாள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு தொடங்கிய இடத்திற்கு வந்தடைந்தோம்.







ஒரு காஷ்மீரி டீயை [உப்பு டீ] அருந்துவோம் என்று மறுபடியும் அந்த பிரபலமான ஹோட்டல் கதவை தட்டினோம். அப்போதும் ஏதோ ஒரு காரணத்தை சொன்னார்கள். "அட போங்கப்பா" என்று அதே தாபாவில் தஞ்சம் புகுந்தோம். அருமையாய் சுடச் சுட பக்கோடா எல்லாம் போட்டுக் கொடுத்து எங்களை குஷி படுத்தினார்கள். காஷ்மீரி டீ ஒன்றும் எனக்கு சிலாக்கியமாய் படவில்லை. சரி என்று பக்கோடாவை நன்றாய் ஒரு மொக்கு மொக்கிவிட்டு சன்னியை கண்டுபிடித்து வண்டியில் ஏறினோம். வழியில் அழகான இடத்தில் போட்டோ எடுக்க சன்னி வண்டியை நிறுத்தினான். நாங்கள் அப்போது மலையில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். அங்கு ஒரு அழகான பள்ளத்தாக்கு. தூரத்தில் ஒரு மிக பிரம்மாண்டமான பனி மலை. அருமையாய் இருந்தது. குடும்பத்துடன் போட்டோக்களை எடுத்துக் கொண்டு, சன்னியையும் ஒரு போட்டோ க்ளிக்கினோம். [கேட்டுக் கொண்டதிற்கிணங்க]



ஆப்பிள் ட்ரீ ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தோம். அறைகள் தயாராய், தாராளமாய், விஸ்தாரமாய் இருந்தது. ஆளுக்கு ஒரு அறையை பிரித்துக் கொண்டு கீழே இரவுச் சாப்பாட்டுக்குச் சென்றோம். நல்ல உணவு. உணவை முடித்துக் கொண்டு, புல்வெளியில் வந்தோம். என் மாமா மகன் செட்டில்கார்க் ஆடுவோம் என்று சொல்லி அதை எடுத்து வந்தான். நானும் அவனும் விளையாடுவதை தருவால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. எங்கள் கையில் இருந்த மட்டையை அவள் கையில் எடுத்துக் கொண்டு கார்க்கை அதில் வைத்து அவள் எம்பி எம்பி குதித்தாள். ஏதோ அவளுக்கு ஷாக் அடிப்பது போல் அவள் எம்பிக் குதித்தது பார்க்க ஒரே வேடிக்கையாய் இருந்தது. ஒரு அரை மணி நேர போராட்டத்திற்கு பின் அவளிடம் இருந்து வாங்கி நாங்கள் விளையாடுவதற்குள் நன்றாய் இருட்டி விட்டது. சரி காலையில் சீக்கிரம் வந்து விளையாடுவோம் என்று சொல்லி உறங்கப் போனோம்.

சுற்றுவோம்...
மறுநாள் ஸ்ரீ நகரை சுற்றிப் பார்க்கத் திட்டம். ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரம். ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் குளிர் கால தலைநகரம். இப்படியாக இந்த மாநிலத்துக்கு மட்டும் இரண்டு தலை நகரங்கள். ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஒரு குன்று தெரிந்தது. அதன் மேல் ஒரு கோவில். அதை தான் முதலில் பார்க்கப் போகிறோம் என்று சன்னி முன் தினமே சொல்லி வைத்திருந்தான். அது சங்கராச்சாரியார் கோவில். ஆதி சங்கரர் ஒரு காலத்தில் அங்கு தவம் செய்த போது உருவான கோவில். கோவில் செல்லும் வழி குறுகலாய் இருந்ததால் சன்னி எங்களை முக்கால் தூரத்தில் இறக்கி விட்டு தரிசித்து வரச் சொன்னான். கையில் காமெரா, உணவு பொருட்கள் என்று எதுவும் கொண்டு செல்ல முடியாது. குழந்தைகளுக்காக மட்டும் கொஞ்சம் எடுத்துக் கொண்டு மலையேறினோம். குன்றின் மேல் இருக்கிறோம் என்று தான் பெயர், வெயில் கொளுத்திக் கொண்டு தான் இருந்தது. இன்னும் கோவில் எவ்வளவு தூரம் என்று வருவோரிடம் கேட்டதும், "இதற்கே இப்படி என்றால் கோவிலுக்கு முன்னூறு படி ஏறனும் என்ன செய்வீர்கள்?" என்று குண்டை தூக்கிப் போட்டார்கள். ஆதி சங்கரர் மேல் எனக்கு கொலை வெறி உண்டானது! கீழே அவ்வளவு இடம் இருக்கு?! இந்த மலை மேல வந்து தான் தவம் பண்ணனுமா? என்று நற நறத்துக் கொண்டே படியேறினேன்.



[விக்கி]
மலையின் உச்சியில் உள்ள அந்தக் கோவிலில் இருந்து ஸ்ரீநகர் மிக அழகாய் தெரிந்தது. எந்த ஒரு இன்பமும் கொஞ்சம் கஷ்டப்பட்டால் தான் கிடைக்கும் போலும்?! அங்கு ஒரு மரத்தடியில் இளைப்பாறிவிட்டு எங்கள் வண்டி உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அடுத்து காஷ்மீர் அரண்மனை ஒன்று பார்ப்பதாக இருந்தது. அந்த வழியில் டிராப்பிக் ஆகி விட்டதால் சன்னி எஸ்கேப் ஆகி எங்களை கீழே கடத்தி வந்து விட்டான். வண்டி அடுத்ததாய் முகல் கார்டனுக்கு சென்றது. நான் முன்னமேயே சொன்னது போல் இந்த மாதிரி கார்டன்களை பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. இருந்தும் குடும்பத்துடன் சென்று விட்டு அதிரடி முடிவகள் எதையும் எடுக்க முடியாது. சன்னி கடிவாளம் கட்டிய குதிரை போல் எங்கு எல்லோரும் வழக்கமாய் போவார்களோ அங்கே தான் போனான். கேட்டதற்கு, "நீங்கள் பல கார்டன்களை பார்த்திருக்கலாம், எங்கள் காஷ்மீரில் கார்டன் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!!" என்று மார் தட்டினான். அவனை சொல்லி குற்றமில்லை.





சரி என்று முகல் கார்டனுக்குள் நுழைந்தேன். விடுமுறை மற்றும் கோடை காலம் ஆதலால் செம கூட்டம். பல வித இயற்கை வனப்பை ரசித்த பிறகு, இந்த கார்டனில் சரியாய் இலைகள் வெட்டப்பட்ட செடிகள், சமன்படுத்தப்பட்ட புல்தரைகள், நீருற்றுக்கள் என்று எல்லாம் செயற்கை அழகு! இருந்தும் அழகு தானே...அங்கு ஒரு ஊற்று இருந்தது. எல்லோரும் அங்கு வரும் தண்ணீரை பிடித்து குடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் அந்தத் தண்ணீரை தான் ஜவஹர்லால் நேரு குடி தண்ணீராக பயன்படுத்தினாராம். கொஞ்ச நேரம் அங்கே இளைப்பாறிவிட்டு, நிஷாத் கார்டன் என்று இன்னொரு இடத்திற்கு சென்றோம். அதற்குள் மதியம் ஆகிவிட, எல்லோருக்கும் பசித்தது. காஷ்மீரின் ஸ்பெஷல் உணவான மட்டன் ஷோர்பா சாப்பிட்டு பார்க்க வேண்டும், பிறகு நம்கீன் சாய் [அதாவது உப்பு போட்ட டீ!] குடிக்க வேண்டும்  என்று ஆசை. ஆனால் சன்னி, அது கிடைக்கும் ஹோட்டல்  வேறு வழியில் இருப்பதாலும், அவன் கட்டிய கடிவாளத்தில் அந்தப் பாதை தெரியாது என்பதாலும் நாளை கூட்டி செல்கிறேன் என்று கவிழ்த்து விட்டான். எதோ ஒரு தாபாவில் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டோம்.



பிறகு பொட்டானிக்கல் கார்டன். என் மாமா மகன்  நிறைய பூங்காக்களுக்கு செல்ல இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று கிரிக்கெட் பேட் கொண்டு வந்திருந்தான். நல்ல புல் தரையில் ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தை போட்டோம். ரிசார்ட்டில் கிடைத்த அதே அனுபவம், இரண்டு பேர் பால், பேட் வைத்துக் கொண்டு நின்றால் போதும், எங்கிருந்து தான் வருவார்களோ, ஒரு குட்டி கூட்டமே சேர்ந்து விட்டது.  அதில் ஒரு சுள்ளான் பயங்கரமாய் விளையாடினான். இழுத்து இழுத்து அடித்து எங்களை நாக்கு தள்ளி ஓட விட்டான். நாங்கள் போதும் என்று புறப்பட்டதும் அவன் முகம் வாடி விட்டது.


அதை முடித்துக் கொண்டு கிளம்பிய போது வழியில் ஒரு பெரிய பலூன் உயர பறந்து கொண்டிருந்தது. தருவை அதில் ஏற்றினால் சந்தோஷப்படுவாள் என்று நினைத்து உள்ளே போனோம். தரையில் இருந்து கிளம்பி ஒரு இருபது அடி மேலே போய், அங்கே ஒரு நிமிஷம் நின்று விட்டு மறுபடியும் கீழே இறங்கி விடும்.இதற்கு ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபாய்! இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் தான் செல்ல முடியும். சரி வந்தது வந்து விட்டோம், நாமாவது செல்வோம் என்றால் அதற்கும் பெரிய வரிசை. அட போங்கப்பா என்று கிளம்பிவிட்டோம். அந்த பலூன் இருக்கும் இடத்துக்கு அருகில் செல்ல ஆளுக்கு இருபது ரூபாய் டிக்கட் வேறு! இருநூறு ரூபாய் தண்டம்...வெளியே வந்ததும் ஒரு பலூன்காரனிடம் தருவுக்கு ஒரு பலூன் வாங்கிக் கொடுத்தேன். அவளுக்கு அவ்வளவு சந்தோஷம்! பத்து ரூபாயில் முடிந்திருக்க வேண்டியது...ம்ம்ம்ம்!

அங்கிருந்து கிளம்பி ஷாப்பிங் சென்றோம். காஷ்மீர் புகழ் கம்பளங்கள், குர்தாக்கள், புடவைகள், ஸ்வட்டர்கள், பாஷ்மினா ஷால்கள் என்று நிரப்பி வைத்திருந்தான். விளையும் கம்மியாய் தான் தெரிந்தது. நாங்கள் பாஷியான ஷால், புடவை, ஸ்வட்டர், மரத்தால் ஆனா படகு வீடுகள், கீ செயின்கள் என்று முடிந்த வரை அள்ளிக் கொண்டோம். [இந்த வரியை எழுத ஒரு நிமிடம் ஆகவில்லை, ஆனால் அந்த வேலை முடிய...ஷபா!] பாங்க் பாலன்ஸ் இளைத்தது; நெஞ்சு வலித்தது! பட், பேமிலி ஹாப்பி அண்ணாச்சி! அன்றைய நாளை மகிழ்ச்சியோடு முடித்துக் கொண்டோம், தங்கி இருந்த இடத்துக்கு திரும்பினோம். மறுநாள் இடத்தை காலி செய்து விட்டு குல்மார்க் புறப்பட வேண்டும்.

சுற்றுவோம்...
சோன்மார்க்! எங்கும் பசுமை போர்த்திய புல்வெளி; சுற்றிலும் பனி மலை. இதற்கு "தங்கத்தினால் ஆன பசுமை வெளி" என்ற பெயரும் உண்டு. காலை எழுந்து குளித்து முழுகி, காலை உணவை கடித்து முழுங்கி, குழந்தைகளை தயார் செய்து கிளம்ப பத்து மணி ஆகி விட்டது. வழி நெடுக இனிமையான சீதோஷணம். அருமையான இயற்கை வனப்பு. ஓடையின் அருகே சுற்றுலா வந்தவர்கள் ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கி இருந்தார்கள். அவர்களை பார்க்கவே பொறாமையாய் இருந்தது. சோன்மார்கை, பஹல்காம், குல்மார்க் போல எல்லா காலங்களிலும் பார்க்க முடியாது. குளிர் காலங்களில் இதன் பாதையே அடைபட்டு போய் விடும் என்கிறார்கள்.


நாங்கள் அங்கு போய் சேர மதியம் பனிரண்டு, பனிரெண்டரை ஆகிவிட்டது. அங்கு உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க குதிரையிலும் செல்லலாம்; காரிலும் செல்லலாம். பயங்கர குழப்பத்துக்குப் பின் சரி முதலில் சாப்பிட்டு விடுவோம் என்று ஒரு மனதாய் முடிவெடுத்து சாப்பிட்டு முடித்தோம். பிறகு எல்லோரும் குதிரையில் வர முடியாது என்பதாலும், பட்ஜெட் கட்டுப்படி ஆகாது என்பதாலும் ஒரு வண்டி பிடித்தோம். சுமோ என்று ஞாபகம். அடக்கி ஒடுக்கி உட்கார்ந்து கொண்டோம். வண்டி வாடகை ஆறாயிரம். அங்கு பனி மலையில் சறுக்கலாம் என்று கூறி பெரிய சப்பாத்துக்களையும் [முத்துலிங்கத்தை அதிகம் படித்தது தப்பாகிவிட்டது!] கால்களில் அணிந்து கொண்டோம். இரண்டு மணி ஆகி விட்டது. இப்போது கிளம்பி எத்தனை இடங்களை பார்க்க முடியுமோ தெரியவில்லை என்று வருத்தப்பட்டோம். வண்டியை கிளப்பிய டிரைவர் கொஞ்ச தூரத்தில் ஏதோ பேச ஆரம்பித்தார். வழியில் உள்ள சில புல் தரைகளை காட்டி இங்கு தான் அமிதாப் நடித்த "சத்தே பே சத்தா" எடுத்தார்கள் என்றார். அமிதாப் இப்போது தெரிவாரா என்பது போல் அந்த இடத்தை பார்ப்பதற்குள் இந்தப் பக்கம் ஒரு புல் தரையை காட்டி வேறு ஏதோ ஹிந்தி படத்தை சொன்னார். இப்படி நான்கு படத்தை சொல்லி முடிப்பதற்கும் நாங்கள் வந்து சேர வேண்டிய இடம் வந்து விட்டது. வழி நெடுக வண்டிகளின் அணிவரிசை. ஜே ஜே என்று இருந்தது. "வண்டி உள்ளே போக முடியாது என்று அங்கேயே இறக்கி விட்டு விட்டார். நீங்கள் பார்த்து விட்டு இங்கேயே வந்து நில்லுங்கள், நான் இங்கு தான் காத்திருப்பேன். ஒன்றும் அவசரமில்லை, போய் மெதுவாய் வாருங்கள்" என்றார். சரி என்று செங்குத்தான சாலையில் ஏற ஆரம்பித்தோம்.

பெற்றோர்களையும், குழந்தைகளையும் அங்கு உள்ள பல டீ கடைகளில் ஒன்றில் உட்கார வைத்து விட்டு, நான் என் மாமா மகனுடன் மலையை ஏற ஆரம்பித்தேன். சிறுவர்களுடன் எப்போதும் இந்த மாதிரி விஷயத்தில் மோதக் கூடாது. அவன் ஏதோ சமதரையில் நடப்பது போல் அந்த மலையில் அநாயசமாய் ஏறிக் கொண்டிருந்தான். நான் கண்ணு, காத்து, மூக்கு, நாக்கு என்று அனைத்தும் தள்ளி கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு அவனுக்கு சரி சமமாய் ஏற முயற்சித்து கொண்டிருந்தேன். எந்த வெயிட்டும் இல்லாமல் இருந்தால் தான் மலை ஏற வசதி என்று என் பர்ஸ், கைபேசியையும் வைத்து விட்டு வந்து விட்டேன். ஒரு வழியாய் முக்கால்வாசி ஏறி விட்டேன். அவன் எனக்கு மேலே நின்று கொண்டிருந்தான். சரி அவன் அருகில் வந்து விட்டோம், சேர்ந்து கீழே போய் விடலாம் என்றால் பயபுள்ள மேலே இருந்து சறுக்க ஆரம்பித்து விட்டான். எனக்கும் மேலே இருந்த சறுக்க விருப்பமிருந்தாலும் ஆடை ஈரமாகிவிட்டால் வண்டியில் தருவை மடியில் வைத்துக் கொள்ள வசதியாய் இருக்காது என்று நினைத்தேன். அதனால் சரி அவன் போகிறான் என்று அதே இடத்தில் சற்று ஆசுவாசமாய் அமர்ந்து கொண்டேன். ஆஹா, என்ன ஒரு அருமையான இடம் அது. அந்த குளிர்ந்த சீதோஷணமும், குளிர் காற்றும், ஏறி வந்த களைப்பும், கண்ணுக்கு இதமான இயற்கையும் ஆஹா...சொன்னால் புரியாது! அப்படியே மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன்.


அப்போது அருகில் ஒரு குடும்பம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஏதோ பிக்னிக் மாதிரி அந்த மலையில் ஏறி வந்திருந்தார்கள். கையில் ஒரு பெரிய பேக். அதில் நிறைய சிப்ஸ், பிஸ்கட் என்று பலவகை ஸ்நாக்ஸ். மொக்கு மொக்கு என்று மொக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பார்த்ததும், "ஆஹா, செல்போன் கணம்னு" நாம வச்சுட்டு வந்தோமே என்று என்னை நொந்து கொண்டேன். நான் ஏற்கனவே சொன்னது போல் மலை ஏறுவதற்கு அங்கு கைட் இருக்கிறார்கள். ஒரு சிறிய பலகை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு மலை ஏற முடியாதவர்களை அதில் அமர வைத்து மேலே இழுத்துக் கொண்டு வருகிறார்கள். என்ன ஒரு கடினமான வேலை பாருங்கள். சரி என்று நான் எழுந்தேன். எங்கு கால் வைத்தாலும் வழுக்கியது. பலகையில் அமர்ந்து சறுக்கிச் செல்ல வேண்டியது தான் என்று முடிவெடுத்தேன். பேரம் பேசத் தொடங்கினேன். அவர்கள் நூற்றி ஐம்பது ரூபாய் சொன்னார்கள். நான் ஐம்பது ரூபாய் கேட்டேன். [என்ன  வேலையை நினைத்து பரிதாபப்பட்டாலும் பேரத்தில் நம்மல மிஞ்ச முடியுமா?] ஒருவன் ஒத்துக் கொண்டான். பலகையில் ஏறி ஜல்லென்று கீழே வந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது, பல தடைகளை கடந்து, ஆட்களை கடந்து, முட்டி மோதி பாதி தூரம் கீழே சேர்த்தான். அதற்கு மேல் கீழே வர முடியாது என்றான். என்னிடம் பணம் வேறு இல்லை, நல்ல வேளையாய் என் மாமா, என் தம்பி அங்கே இருந்தார்கள்.  இல்லை என்றால் அடுத்த க்ரூப்பை மேலே இழுத்துச் செல்ல என்னை உபயோகப்படுத்தியிருப்பான். அவர்களிடம் பணத்தை வாங்கி கொடுத்து விட்டு கீழே இறங்கினோம்.

சூடாய் டீ குடித்தோம். லேசாய் சூறக்காத்து அடிக்கத் தொடங்கியதும், மேகம் இருண்டது, கொஞ்சம் தூறல் போட்டது. குழந்தைகள் பயந்து அழ ஆரம்பித்தன. எங்கள் வண்டியை தேடினால் கிடைக்கவே இல்லை. நல்ல வேளையாய் வண்டியில் இருந்து இறங்கும்போது என் மாமாவிடம் அந்த டிரைவரின் கை பேசி எண்ணை வாங்கச் சொன்னேன். வாங்கியும் பயன் இல்லை. எத்தனை முறை அடித்தாலும் அவர் எடுக்கவே இல்லை. எடுத்தாலும் இடக்கு மடக்காய் பேசிக் கொண்டிருந்தார். ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று வேறொருவர் வந்து அவர் தான் என்னை அனுப்பினார்,  இந்த வண்டியில் ஏறுங்கள் என்றார். கடைசியில் தான் தெரிந்தது, அவர் எங்களை இறக்கி விட்டு விட்டு வண்டியுடன் அடுத்த டிரிப்புக்கு போய் விட்டார். வந்தால் அவர்களை அழைத்து வாருங்கள் என்று இன்னொருவரிடம் சொல்லி இருக்கிறார். அந்த வண்டியில் எங்களின் பை வேறு ஒன்று இருந்தது. அதெல்லாம் கீழே போய் எடுத்துக் கொள்ளலாம் என்றார் அந்த டிரைவர். சரி, அடுத்து எங்கே என்றதற்கு, இது தான் கடைசி இடம் என்று குண்டை தூக்கி போட்டார். கேட்டால், வழியில் அவர் காண்பித்த நான்கு புல்தரைகளும் நான்கு இடங்களாம்! முதலில் வண்டியை மலையின் அருகில் வரை கொண்டு செல்லவில்லை. திரும்பி வந்தால் வண்டி இல்லை. குழந்தைகளை வைத்துக் கொண்டு மழையில் கஷ்டப்படுகிறோம், போன் அடித்தால் எடுப்பதில்லை. சரி இன்னும் இடங்கள் இருக்கிறது என்று நினைத்தால், இது தான் கடைசி என்கிறார்கள். இதற்கு ஆறாயிரம். அவர்கள் வண்டியில் நாங்கள் பயணம் செய்தது ஒரு அரைமணி நேரம் கூட இருக்காது! "அட நாதாரிகளா!" என்று எரிச்சலாய் இருந்தது.



எங்கே புறப்பட்டோமோ அங்கே வந்து சேர்ந்ததும், யாரும் அவர்களை எதுவும் கேட்க முடியவில்லை. பணத்தை அழுது விட்டு, சப்பாத்துக்களை கழட்டிக் கொடுத்து விட்டு, அதற்கும் பணத்தை கட்டி விட்டு, சன்னியிடம்  சரண் அடைந்தோம். ஒவ்வொரு தரமும் சன்னி நொந்து போய் திரும்பும் எங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்! "இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இந்த டயத்தில் இவர்கள் சம்பாதித்தால் தான் உண்டு. வருடம் முழவதுக்கும் சேர்த்து இப்போதே சம்பாதித்து விடுகிறார்கள்!" என்று சன்னி அவர்களுக்கு வக்காலத்து வாங்கினான். ஸ்ரீநகர் நோக்கி வண்டி புறப்பட்டது.

காஷ்மீர் பூமியின் சொர்க்கம் தான், ஆனால் மனிதன் எங்கு இருந்தாலும்...????

சுற்றுவோம்...
மறுநாள் பஹல்காமில் இருந்து ஸ்ரீ நகர் கிளம்ப வேண்டும். சன்னி முன் இரவே, "நாளை மெதுவாய் கிளம்பினால் போதும், நன்றாய் ரெஸ்ட் எடுங்கள்!" என்று சொல்லி விட்டான். ஆற அமர எழுந்து, குளிரை அனுபவித்துக் கொண்டே, குளித்து முடித்து, காலை உணவை முடித்துக் கொண்டு சூடாய் தேநீர் ஒன்றை கையில் எடுத்து சுவைக்கும் போது அருகில் உள்ள பள்ளியில் மாணவிகள் "பிரேயர் சாங்" பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு சிறிய அரசு பள்ளி. தேநீரி நாவுக்கும், குளிர் உடலுக்கும், அவர்களின் குரல் செவிக்கும் இன்பம் சேர்த்தது. தூரத்தில் தெரியும் பனி மலையை பார்த்துக் கொண்டே அவர்களின் பாடலை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். சூரியனின் தங்க நிறம் அந்த வெண்பனியில் பட்டுத் தெறிக்கும் காட்சி மனதை ஏதோ செய்தது.


அறைக்கு வந்ததும் ஒரு பிரளயம் காத்திருந்தது. ஒரே நாளில் பெட்டியில் உள்ள அத்தனையும் வெளியில் தான் கிடந்தது. அதை எல்லாம் எடுத்து ஒரு வழியாய் ஒடுக்கி, அடுக்கி வெளியே வந்தோம். வண்டி ஸ்ரீநகர் நோக்கி கிளம்பியது. வழியெங்கும் வனப்பு. ஊருடன் ஓடும் லிட்டர் (liddar) ஆறு. ஆங்காங்கே பள்ளத்தாக்குகள், மலை முகடுகள், வானுயர்ந்த மரங்கள், பனி மலைகள் என்று நாள் வெகு உற்சாகமாய் இருந்தது. நான் சன்னியிடம் கேட்டுக் கொண்டதுபடி ஒரு நல்ல இடம் வந்ததும் "இறங்கி பார்த்து விட்டு வாருங்கள்!" என்று அனுப்பி வைத்தான். அந்த இடத்தில் சாலையை ஒட்டி சலசலக்கும் ஆறு, சுற்றி மலைகள், குளிர்ந்த காற்று, தூரத்தில் தெரியும் பனி மலை என்று ரம்மியமாய் இருந்தது. நான் இப்படி ஒரு ஆற்றில் குளித்து விட வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தண்ணீரில் கால் வைத்தாலே கால் மறத்துப் போகும் அளவுக்கு அது குளிர்ந்திருந்தது. கை காலை நனைத்துக் கொண்டு, சிறிது குழந்தைகளுடன் விளையாடி விட்டு வண்டி ஏறினோம்.







பஹல்காமில் இருந்து ஸ்ரீநகர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணம் தான். அன்று வேறு எதுவும் ப்ளான் இல்லாததால், சன்னி மெதுவாய் ஆற அமர கதை சொல்லியபடி வண்டி ஒட்டிக் கொண்டிருந்தான். உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஜம்மு காஷ்மீரில் பிறக்காத ஒருவனால் அங்கு வீடோ, நிலமோ வாங்க முடியாதாம்! அப்படி ஒரு நடைமுறை அங்கே இருக்கிறது. வெளி மாநிலத்தவர் வாங்க வேண்டும் என்றாலும், அந்த வீடு/நிலம் ஜம்மு காஷ்மீரில் பிறந்த ஒருவனின் பெயரில் தான் இருக்க வேண்டுமாம். சன்னி இதை சொன்னதும், "அது தான் இன்னும் இந்த இடம் சொர்க்கமா இருக்கு!" இல்லைன்னா நம்ம மக்கள் "ஸ்னோ வியூ", "ரிவர் வியூ", "வேலி வியூ" அபார்ட்மென்ட்ஸ் என்று பலவகையில் கட்டி இடத்தை நாறடித்திருப்பார்களே என்று எண்ணிக் கொண்டேன்.

வழியில் ஆப்பிள் தோட்டம் ஒன்றில் இறங்கினோம். ஆப்பிள் உண்மையில் அந்த மரத்தில் இருந்து தான் வருகிறது என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு கிளம்பினோம்.



பிறகு காஷ்மீரின் பிரபலமான "ட்ரை ஃப்ரூட்ஸ்" ["உளர் பழங்கள்/கொட்டைகள்" என்று சொல்லலாமா?] வாங்க ஒரு கடையில் இறங்கினோம். பயங்கர காசு. பகல் கொள்ளை. அங்கே நம் ஊர் புளியம்பழம் மாதிரி ஒன்று வாங்கினேன். பார்ப்பதற்கு கொழ கொழவென்று இருக்கிறது. புளிப்பும், இனிப்பும் கலந்து ஒரு வித்தியாசமான சுவை. அதன் பிறகு வண்டி ஒரு சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் நின்றது. ஏதோ நூற்றாண்டில், ஏதோ ஒரு மன்னன் கட்டிய கோட்டை. சன்னி ஏதோ சொன்னான். நான் தருவுக்கு டயப்பர், பால், பவுடர் என்று எடுத்துக் கொண்டிருந்ததில் கவனம் செலுத்த முடியவில்லை. அந்தக் கோட்டையில் இருந்த ஒரு கைடு, சிதிலமடைந்த ஒரு தூணில் ஒரு உருவத்தை காட்டி "இவர் தான் உங்க ஊர் ரங்கநாதர்" என்றார். "அவர் எங்க இங்கே வந்தார்? ஒரு வேலை தேனிலவுக்கா இருக்குமோ?" என்று எண்ணிக் கொண்டே, "ஆமாம், அதே முக ஜாடை!" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உங்களுக்குத் தெரிகிறதா?



பிறகு ஸ்ரீநகரை நெருங்கும்போது வழியல் ஒரு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் மாதிரி ஒன்று வருகிறது. சாலையின் இருபுறங்களிலும் கோலிகளும், தோணிகளும் வரவேற்கிறார்கள். ஆமாம், அது தான் ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் பேட் தயாரிக்கும் இடம். அந்த ஊரின் பெயர் சங்காம். ஒரு கடையில் இங்கே "பேட் பாருங்கள்!" என்று சன்னி இறக்கி விட்டான். கீழே தொழிற்சாலை, மேலே ஷோரூம்! தொழிற்சாலை என்றால் பிரம்மாண்டமாக எதையும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். ஒரு பத்துக்கு பன்னண்டு அறை தான். அப்படி இரண்டு அறைகள். ஒரு அறையில் எந்த ஸ்டிக்கரும் ஓட்டாமல் சில பேட்டுகள் அம்மணமாய் நின்றன. அடுத்த அறையில் ஒருவர் மெஷினில் ஒரு கட்டையை விட்டு ராவிக் கொண்டிருந்தார். அது பேட்டாய் மாறிக் கொண்டிருந்தது. என் மாமா பையன் அடம் பிடித்து ஒரு பேட் வாங்கிக் கொண்டான். ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்று நினைக்கிறேன். சன்னி ஒன்றை இலவசமாக வாங்கி வந்தான்! சண்டாள சர்தார்! 





ஒரு வழியாய் வண்டி ஸ்ரீநகரை அடைந்தது. ஒரு பெரிய ஹோட்டல் அருகில் வண்டியை நிறுத்தி அதோ அங்கு தெரியும் அந்த சின்ன ஓட்டலில் சாப்பிட்டு வாருங்கள் என்று சன்னி எங்களை அனுப்பி வைத்தான். வாசலில் மசாலா தோசா என்று எழுதி இருந்தது. எச்சிலை துடைத்துக் கொண்டு உள்ளே போய் கொட்டிக் கொண்டோம். வடநாட்டில் மசாலா தோசை எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. என் அப்பாவை அர்த்த ராத்திரியில் தூக்கத்தில் இருந்து எழுப்பி "டீ குடிக்கிறீங்களா?" என்றாலும் குடிப்பார். அப்படிப்பட்டவர் சாப்பிட்டவுடன் சும்மா இருப்பாரா? அவரை அழைத்துக் கொண்டு எதிரில் உள்ள கடையில் டீ வாங்கிக் கொடுத்தேன். நம் ஊர் மாதிரி இல்லை. யாராவது வந்து கேட்டால் தான் அடுப்பில் பாத்திரத்தையே வைக்கிறான் மனுஷன். எதிர் கடையில் வேலை பார்க்கும் ஒருவன் அங்கு வந்து நின்று கொண்டு "எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றான். நான் "சென்னை" என்றேன். "ஒ, கொலவெறி, கொலவெறி!" என்றான்.  அடுத்த நொடியே தென்னிந்தியர்கள் அருமையான மனிதர்கள் என்றான். என்ன ஒரு நகைமுரண்!

வண்டி இந்து இடுக்கில் புகுந்து நாங்கள் தங்க வேண்டிய "ராயல் ஜன்னத்" [ஜன்னத் என்றால் சொர்க்கம்] ரிசார்ட்டுக்கு வந்தது. அதை ரிசார்ட் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு இரண்டு மாடி கொண்ட ஒரு பெரிய வீடு. முன்னால் சிறிய தோட்டம். அவ்வளவு தான். அந்த ரிசார்ட்டின் எதிரே நம் கூவம் மாதிரி அழுக்காய் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது.


மணி அப்போதே நாலு, ஐந்து ஆகிவிட்டது. நல்ல ஒரு தேநீரை பருகினோம். சன்னி என் மாமாவிடம், பாதுகாப்பு கருதி, "பெண்கள் இங்கேயே இருக்கட்டும், நீங்கள் வேண்டுமென்றால் அருகில் நடந்து போய் வாருங்கள்!" என்று சொல்லி இருந்தான். நாங்களும் "தீவிரவாதிகள் இங்கு ஜாஸ்தி, நீங்கள் இருங்கள்!" என்று சால்ஜாப்பு சொல்லி விட்டு நான், என் தம்பி, மாமா மூவர் மட்டும் வெளியே கிளம்பினோம். அரவிந்தசாமியை கடத்தியவர்கள் எங்கள் யாரையும் சீண்டக் கூட இல்லை . ஆற்றை கடந்து அந்தப் பக்கம் செல்ல ஒரு பாலம் இருந்தது. அதைக் கடந்ததும் கடைத்தெரு வந்து விட்டது. சிறிது தூரம் நடந்ததும் நாங்கள் சாப்பிட்ட இடம் வந்து விட்டது. அப்படியே நடந்து கொண்டிருந்தோம். "தால் லேக்கை" பார்த்து வரலாம் என்று போய் கொண்டிருந்தோம். ஒரு அறை மணி நேர நடையில் தால் லேக் கண்ணில் பட்டது. சிறிது நேரம் அங்கு அமர்ந்து விட்டு இருப்பிடம் வந்து சேர்ந்தோம்.

திரும்பி வந்தவுடன் என் மாமா பையன் தான் வாங்கிய புதிய பெட்டில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அடம்பிடித்தான். நானும் கிரிக்கெட் ஆடி ரொம்ப நாள் ஆகி விட்டது. "சரி வாடா!" என்று அந்த ரிசார்ட்டின் கார் பார்கிங்கில் விளையாடினோம். பேசாமல் கிரிக்கெட்டையே தேசிய விளையாட்டாக மாற்றி விடலாம். நாங்கள் விளையாடத் தொடங்கிய பத்து நொடிகளில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த நாலு பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அப்படி ஒரு உற்சாகமான ஆட்டம் பல நாட்களுக்குப் பிறகு. நான் நினைத்ததை விட நன்றாகவே ஆடினேன். இருட்டத் தொடங்கியதும் வேர்க்க விறுவிறுக்க ஆட்டத்தை முடித்துக் கொண்டு, இரவுச் சாப்பாடு சாப்பிட்டு படுத்தோம். மறுநாள் சோன்மார்க்!

சுற்றுவோம்...
அப்படியே வருடத்திற்கு பத்து டூர் அடிக்கவில்லை என்றாலும், எனக்கு பாக்கேஜ் டூர்கள் பிடிப்பதில்லை. அவர்கள் அரைத்த மாவையே அரைப்பார்கள். செக்கு மாடு போல் ஒரே இடத்தை சுற்றிக் கொண்டிருப்பார்கள். என்னை பொருத்தவரை ஒரு வண்டி இருக்க வேண்டும், இஷ்டம் போல் சுற்ற வேண்டும், அப்போது தான் அந்த இடம், அந்த மக்கள், அங்கு உள்ள வாழ்க்கை முறையை சரியாய் அறிய முடியும். கிட்டத்தட்ட ஹிப்பிகள் மாதிரி சுற்றிப் பார்க்க வேண்டும். [இந்த அறிவெல்லாம் கல்யாணத்திற்கு முன் வராது!] ஆனால் அதை குடும்பத்தோடு செய்ய முடியாது. அதனால் பாக்கேஜ் டூர் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது.

நான் வண்டியில் ஏறியதில் இருந்து சன்னியிடம் இதைத் தான் சொன்னேன். "எல்லோரும் போகும் இடங்களுக்கு என்னை கூட்டிப் போகாதே. பொட்டானிக்கல் கார்டன், நிஷாத் கார்டன் என்று பாக்கேஜில் இருந்தது. இந்த பட்டாணி, பொரிகடலை கார்டன் எல்லாம் எங்கள் ஊட்டியிலேயே இருக்கிறது. எனக்கு எந்த "மேன் மேட்" இடங்களும் தேவையில்லை. இங்கு இயற்கையை தான் நான் பார்க்க வேண்டும்!" என்றேன். அவனுக்கு குபீல் என்று இருந்தது, அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

பேக்கேஜ் டூர்களில் இது சாத்தியமில்லை என்று எனக்குத் தெரியும். ஏன் என்றால் அவர்கள் வண்டியை எடுக்கும்போதே எங்கெல்லாம் போக வேண்டும், எத்தனை கிலோ மீட்டர் ஆகும், எத்தனை லிட்டர் டீசல் போட வேண்டும், எவ்வளவு கூலி, லாபம் என்று சகலத்தையும் ஏற்பாடு செய்து கொண்டு தான் வருவார்கள். இருந்தாலும் சில டிரைவர்கள் "கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆகும், நான் கூட்டிப் போகிறேன்!" என்று சொல்லலாம். அதனால் கேட்டுப் பார்த்தேன். சன்னி சரி என்றும் சொல்லவில்லை, முடியாது என்றும் சொல்லவில்லை.

சென்னையில் இருக்கும்போது நான் தினமும் அதிகாலை எட்டு, எட்டரைக்கு துயில் எழுவேன். இந்த மாதிரி வெளியிடங்களுக்கு போனால் ஐந்து, ஆறு மணி! அந்த வெளியூரின் காலையை நான் முதலில் அனுபவிக்க வேண்டும். முதல் நாள் இரவே, ஆறரை மணிக்கு அறைக்கு டீ வரும் என்று சொல்லி இருந்தார்கள். நான் ஆறு மணிக்கு என் மனைவியை கூட்டிக் கொண்டு, காமெராவை தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். என் அம்மாவும் விழித்திருந்ததால் அவர்களையும் அழைத்துக் கொண்டோம். வெளியே செம குளிர். ஒரு பத்து டிகிரி இருக்கும். ரிசார்ட்டுக்கு அருகில் மரங்கள் அடர்ந்த ஒரு மலை. அதை ஒட்டி ஒரு ஒத்தையடிப் பாதை ஒன்று போனது. அதில் நடந்தோம். சில அடிகள் எடுத்து வைத்ததும் வலது புறம் ஒரு பெரிய பனி மலை. கடந்து சிறிது தூரம் சென்றதும், கீழே ஒரு சாலை. அதை ஒட்டி ஒரு தெளிந்த நீரோடை. அதன் சல சல சத்தம், பறவைகளின் இரைச்சல், சுத்தமான காற்று. பார்த்துக் கொண்டே இருந்தோம். நீங்களும் பாருங்கள்...




அன்று மாலை அந்த நீரோடைக்கு அருகில் சென்று அமர்வது என்று முடிவு செய்து கிளம்பினோம். ரிசார்ட்டில் டீ வந்து போயிருந்தது. அங்கு குடிக்க சுடு தண்ணீர் கேட்டாலே கொடுக்க மாட்டான், இதில் டீ எங்கிருந்து கிடைப்பது. சரி என்று அன்றைய சுற்றுலாவுக்காக ரெடியாகத் துவங்கினோம். நானே நம்ப முடியாதபடிக்கு என் ரூமில் கீசர் எல்லாம் இருந்தது. அதில் சூடான நீரும் வந்தது. உடம்பில் குத்துவது குளிரா, கொதிக்கும் நீரா என்று புரியாமல் குளித்து முடித்தேன். ஒவ்வொருவராய் ரெடியாக, ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி என்றார்கள். எங்கள் இளவரசியை எழுப்பி அவளுக்கு நாலு லேயர் ட்ரெஸ் போட்டு பார்த்தால் பொதி மூட்டைக்கு கை கால் முளைத்த மாதிரி இருந்தாள். காலை உணவு "ஆளு பரொத்தா" என்று ஞாபகம். ஒரு கட்டு கட்டி முடிப்பதற்கும் சன்னி வந்து சேர்வதற்கும் சரியாய் இருந்தது.

அன்றைய ப்ரோக்ராம் பஹல்காமை சுற்றிப் பார்ப்பது. பஹல்காம் "valley of shepherds" என்கிறார்கள். இந்த சிறு டவுன் "லிட்டர்" நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சுற்றிலும் வானுயர்ந்த பனி மலை, பசுமை போர்த்திய புல்வெளி, அதை கருத்தாய் மேயும் செம்மறி ஆடுகள், சில்லென்ற சீதோஷணம், தெளிந்த நீரோடை, சுத்தமான காற்று...வேறு என்ன வேண்டும்? அருமையான இடம்.







இந்த ஊரில் ஐந்து முக்கியமான வ்யூ பாய்ண்ட் இருக்கிறது. அதை நம் காரில் சென்று பார்க்க முடியாது. அங்கிருக்கும் லோக்கல் காரை வாடகை  எடுத்துத் தான் சென்று பார்க்க வேண்டும். "சோன்மார்க்", "குல்மார்க்" எல்லா சுற்றுலா தளங்களிலும் இதே கதை தான்! நம் டிரைவர் கருத்தாய் அவர்கள் இருக்கும் இடத்தில் விட்டு விடுவார். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் ஒதுங்கிக் கொள்வார். நல்ல வேளையாக அரசு நிர்ணயித்த தொகையுடன் வாடகை கார்கள் இருந்தன. ஒரு டவேரா (பத்து பேர் அமரும் வண்டி) வாடகை 1850 ரூபாய். லக்கேஜ்களை சேர்த்தால் ஒரு உருளைக்கிழங்கு லாரி தான் வேண்டும். என்ன செய்வது, உள்ளே எங்களை அமுக்கிக் கொண்டோம். அந்த வண்டி மலை மேல் ஒரு ஒற்றையடிப் பாதை மேல் வளைந்து நெளிந்து சென்றது. இந்த அழகில் எதிரில் வரும் வண்டி. இது போதாதென்று வழியில் இருநூறு, முன்னூறு ஆடுகளை கவலையின்றி மேய்த்துக் கொண்டு டிராபிக் ஜாம் செய்து கொண்டிருந்தார்கள். வழியெங்கும் அழகு கொட்டிக் கிடந்தது. ஆங்காங்கே ஒரு சிறிய வியூ பாய்ண்ட் இருந்தது. "ஹே நிறுத்தப்பா!" என்றால், "இங்கெல்லாம் நிறுத்திக் கொண்டிருந்தால் எல்லா இடத்தையும் பார்க்க முடியாது. வரும்போது பார்க்கலாம்" என்று அவன் வண்டியை விட்டான். சரி செம இடத்துக்குக் கூட்டிப் போகிறான் என்று நினைத்தோம். முதல் இடம் வந்தது. இறங்கியதும் குதிரைகளின் சாணத்தின் வாசம் மூக்கைத் துளைத்தது. சுற்றிப் பனி மலைகள் இருந்தாலும், வரும் வழியில் இருந்த அழகு இங்கு கொஞ்சம் கம்மியாகவே இருந்தது. அங்கிருந்து குதிரையில் செல்லலாம் என்றூம் அதற்கு வாடகை ஐநூறு அறநூறு என்றார்கள். ஆளை விடுங்கள் என்று கொஞ்சம் பெரிய புல் தரையாய் பார்த்து ஒதுங்கிக் கொண்டோம்.





அடுத்து "பேதாப் பள்ளத்தாக்கு". "பேதாப்" என்ற ஹிந்திப் படம் அங்கு எடுத்தார்கள், அதனால் அதற்கு அந்தப் பெயர். அந்த இடம் ரொம்ப காமர்ஷியலைஸ் ஆகி இருந்த மாதிரி எனக்குத் தோன்றியது. அங்கு சிறிது நேரம் கழித்து விட்டு, மெதுவாய் குழந்தைகளுக்கு வேண்டியதை ஊட்டி விட்டு, எங்களுக்கு வேண்டியதை வாயில் போட்டுக் கொண்டு வண்டியில் ஏறினால் அவன் எங்கள் மீது ஏறினான். "என்னடா?" என்றால், "ஒவ்வொரு இடமும் இவ்வளவு நேரம் பார்த்தால் நான் எப்படி அடுத்த சவாரி கூட்டி வருவது, சீக்கிரம் வாருங்கள்!" என்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டான். "அடங்கொய்யா, ஏண்டா நீங்க ரெண்டு ட்ரிப் அடிக்கிறதுக்காக நாங்க சீக்கிரம் வர முடியுமா?" என்று கேட்டால், அவன் பேசுவதையே பேசிக் கொண்டிருந்தான். "இது தான் டயம், இதற்குள் வர வேண்டும்!!" என்று சட்டம் பேசினான். குழந்தைகள் இருக்கும்போது அப்படித் தான் ஆகும் என்று எவ்வளவோ சொல்லியும் புலம்பிக் கொண்டே அடுத்த இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

அது ஒரு சின்ன மலை. அந்த மலையில்  பனி இன்னும் இருந்தது. பனியில்  சென்று நடக்க, அங்கு வாடகைக்கு ஷூ ஒன்று விலை ஐம்பது ரூபாய். பனியில்  பட்டு குளிராமல் இருக்க நீளமான ஜாக்கெட் ஒன்றின் வாடகை நூறு ரூபாய். பனியில் வழுக்காமல் மேலே ஏற ஒரு குச்சி, அதற்கு வாடகை இருபது ரூபாய். உங்களை கைத் தாங்கலாய் கைட் ஒருவன் அந்த மலையின் உச்சி வரை கொண்டு போய் விட ஐநூறு ரூபாய். டிரைவர் வேறு அரை மணியில் வாருங்கள் என்று விரட்டிக் கொண்டிருந்தான். கூட்டத்தில் அரைடஜன் வயதானவர்கள் என்பதால், என் மனைவியும், என் மாமா பையனும் [ரஜினிகாந்த் வீடு போஸ்ட்ல படிச்சீங்களே, அவனே தான்!] சென்றார்கள். மற்றவர்கள் தேவுடு காக்க ஆரம்பித்தோம்.  நான் அமெரிக்காவிலேயே பனிச்சறுக்கு வேண்டிய மட்டும் ஆடி விட்டதால் ஒன்றும் சுவாரஸ்யமாய் இல்லை. தரு என்னை வைத்துக் கொண்டு எனக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்! எல்லோரும் போகாததால் அவன் சொன்ன அரை மணியில் போய் வண்டிக்கு அருகில் நின்றோம். நேராய் கீழே கொண்டு வந்து சேர்த்து விட்டான். அங்கிருந்து சன்னி எங்களை பிக்கப் செய்து கொண்டு ரிசார்ட்டில் கொண்டு சேர்த்தான். அவனிடம் இவர்கள் செய்யும் அநியாயத்தை எல்லாம் புலம்பினேன். அவன், "ஒன்றும் செய்வதற்கில்லை. இங்கு இது தான் நடைமுறை, அவர்கள் சம்பாதிப்பது நான்கு மாதங்கள் தான். ஒன்றும் செய்ய முடியாது!" என்றான். "இதற்குத் தான் எல்லோரும் போகும் இடம் வேண்டாம்" என்று சொல்கிறேன் என்று அவனிடம் மறுபடியும் ஒரு பிட்டு போட்டேன். "நீங்கள் கவலைப்படாதீர்கள், நாளை போகும் வழியெல்லாம் உங்களுக்கு என்ன காட்ட வேண்டுமோ பாருங்கள்!" என்று சொல்லி என்னை குளிர்வித்தான்! அன்று இரவு நன்றாய் சாப்பிட்டு விட்டு, நல்ல குளிரில் வெட்ட வெளியில் எல்லோரும் அமர்ந்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய தினம் அலைந்து திரிந்து ஓய்ந்தது...

சுற்றுவோம்...
மறுநாள் ரயில் ஜம்முவை கடந்ததும் கண் விழித்தேன். ஒரே இரவில் சமதளங்கள் யாவும் பள்ளத்தாக்குகள், தெளிந்த நீரோடைகள், மலை முகடுகளாய் மாறிப் போயிருந்தன.


முகம் கழுவி விட்டு, வாசலில் நின்று ஈரம் தடவிய குளிர் காற்றை அனுபவித்தேன். விடுமுறை தொடங்கிவிட்டது போல் இருந்தது. அப்போது தான் தூரத்தில் முதன் முதலில் பனி மலையை பார்த்தேன். மிகுந்த குதூகலத்துடன் அதை குடும்பத்தினருக்கும் காட்டினேன். ரயில் ஒரு எட்டு எட்டரை மணிக்கு உதம்பூரை அடைந்தது. அங்கிருந்து காஷ்மீர் செல்ல "ஹங்க்ரி பேக்ஸ்" என்ற நிறுவனத்திடம் பேக்கேஜ் டூர் ஏற்பாடு செய்திருந்தோம். பெட்டி, பைகளை தூக்கிக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து காத்திருந்தோம். எங்கள் டெம்போ வந்த பாடில்லை. மாமா டிரைவருக்கு கால் அடித்தால் நான் இங்கே தான் நிற்கிறேன், நீங்கள் கொஞ்ச தூரம் நடந்து வாருங்கள் என்றார். இத்தனை லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு எங்கே நடப்பது? ஏன் இவர் வந்து ஏற்றிச் செல்லக் கூடாது என்று எரிச்சலாய் இருந்தது. அப்போது தான் அங்கு இருந்த ஒரு டேக்சி ஸ்டாண்டில் இருந்தவர்கள், அவர் இங்கே வந்தால் எங்களுக்கு பணம் கட்ட வேண்டும். இது தான் எங்கள் நடைமுறை. அதை தவிர்ப்பதற்காக அவர் உங்களை வரச் சொல்கிறார் என்றார்கள். அடப்பாவிகளா என்று நொந்து கொண்டே நின்றோம். ஒரு வழியாய் அவர் வந்து அவர்களுக்கு பணம் கட்டி விட்டு எங்கள் சாமான்களை ஏற்றிக் கொண்டார். டிரைவர் ஒரு சர்தார்.

எல்லோரும் வண்டியில் ஏறி அமர்ந்ததும் நான் கடைசியில் ஏறினேன். டிரைவர் அருகில் இருந்த சீட்டில் அமரப் போனேன். உடனே வண்டியில் ஒரே சிரிப்பு, சத்தம். என்னவென்று கேட்டதற்கு, நான் முன்னால் உட்காருவேனா இல்லை என் மனைவி அருகில் உட்காருவேனா என்று பந்தயமாம். அடப்பாவிகளா! இத்தகைய பயணங்களில் நான் முன்னால் உட்காருவதையே விரும்புவேன். அதுவும் டிரைவர் அருகில். அப்போது தான் அவரிடம் பேச்சு கொடுத்து அந்த இடத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அறிய முடியும். ஆனால் இந்த முறை, 5 நாட்கள் அந்த வண்டியில் சுற்றியதில், மிகவும் சொற்பமான நேரமே அந்த இருக்கை எனக்குக் கிடைத்தது. காரணம்,  தரு! அவள் அம்மாவால் மட்டும் அவளை சமாளிக்க முடியவில்லை.

பயணம் இனிதே தொடங்கியது. டிரைவர் சர்தாரின் பெயர் சன்னி. அத்தனை பேரில் நானும் என் மாமாவும் நன்றாய் ஹிந்தி பேசுவதால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். உங்கள் இரண்டு பேரிடமும் தான் ஹிந்தி சிக்னல் இருக்கிறது என்று கலாய்த்தான். எதை கேட்டாலும் "கோய் டென்ஷன் நஹி ஜி" என்றான். வழக்கமான சர்தார்ஜீக்களின் உயரம் இல்லை என்றாலும், நான் அவனை அங்கிள் என்று கூப்பிடலாம் என்பது போல இருந்தான். நான் உங்களை விட சின்னவன், இருபத்தி ஆறு வயது தான் ஆகிறது என்று சொல்லி குண்டை போட்டான் [பக்கி கண்டுபிடிச்சிட்டானே!]. பயணம் ஆரம்பித்ததும் ஏதோ பஞ்சாபி பாடலை போட்டான், பிறகு பழைய ஹிந்தி பாடல்கள். இது சரிப்படாது என்று எங்கள் மொபைலில் இருந்து தமிழ் பாடல்களை போட்டோம். தலையை தலையை ஆட்டி நம் ஊர் குத்துப் பாட்டுக்களை ரசித்தான். எல்லோருக்கும் பசி வயிற்றை கிள்ள, அந்த கடுப்பில் எல்லோரும் பக்கத்தில் இருப்பவர்களை கிள்ள, சரி முதலில் சாப்பிடுவோம் என்று முடிவெடுத்தோம். இதோ அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது என்று இறக்கி விட்டான். அத்தனை கூட்டத்தை அந்த ஹோட்டல் ஜென்மத்தில் பார்த்திருக்காது போலும், ஆர்டர் செய்து களைத்து, ஒரு வழியாய் கிடைத்து, புசித்து வெளியேற ஒரு மணி நேரம் ஆகி விட்டது. வண்டியில் ஏறி சிறிது தூரத்தில் டிராப்பிக் ஜாம். உதம்பூரிலிருந்து பஹல்காம் செல்வதாய் ப்ளான். நான் சொல்கிறேன், நாம் அங்கு போய் சேர மாலை 4, 5 ஆகிவிடும் என்று பயமுறுத்தினான். இங்கு டிராப்பிக் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை என்று மேலும் ஒரு குண்டை தூக்கிப் போட்டான். எப்படியோ வண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்தது.

அந்த ஜாமை கடந்து சன்னி வண்டியை விரட்டினான். முன்னால் ஒரு கார் போய் கொண்டிருந்தது. அதை ஒரு பெரிய தொப்பி போட்ட ஆசாமி ஒட்டிக் கொண்டிருந்தார். சன்னி ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தான். திடீரென்று அந்த கார் எங்கள் டெம்போவின் முன்னால் நின்றது. அந்த தொப்பி ஆசாமி காரை விட்டு கீழே இறங்கினார். அவர் காரை விட்டு கீழே இறங்குவதற்கும் சன்னியின் கைகள் மேலே சல்யுட் அடிக்க ஏறுவதற்கும் சரியாய் இருந்தது. தொப்பி ஆசாமி, சரியான உயரத்தில், ஒட்ட முடி வெட்டி, கிளீன் ஷேவ் செய்து, மிடுக்காய் ட்ரெஸ் செய்து, ட்ரிம்மாய் இருந்தார். அவரை பார்த்தவுடன் சொல்லி விடலாம் அவர் ஒரு ஆர்மிமேன் என்று! இறங்கியதும், "ஒயே, துஜே படி ஜல்தி ஹைன்?" [உனக்கு என்ன ரொம்ப அவசரமோ?] என்று ஒரே கேள்வியை கேட்டார். சன்னி வாய் பேசவில்லை. வார்த்தை வரவில்லை. ரோட்டில் இருந்தவர்கள் அவரை காருக்குள் போகச் சொல்லி சைகை செய்தார்கள். அவர் புலம்பிக் கொண்டே காருக்குள் ஏறிக் கொண்டார். சன்னியின் முகத்தில் ஈ ஆடவில்லை. அந்த ஒரு கணம், இப்படி இல்ல இருக்கணும் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டேன். செம சீன்!


வழி நெடுக பள்ளத்தாக்குகளையும், நீரோடைகளையும், மலை சிகரங்களையும் கண்டு களித்துக் கொண்டே சென்றோம். ஆங்காங்கே அழகான வ்யு பாய்ண்ட் வேறு இருந்தது.  இந்த இடத்தை பாருங்கள்...


வழியில், அந்த குறுகிய மலைப்பாதையில் அத்தனை வண்டிகள் வரும் அந்த பாதையில் சாவகாசமாய் ஒரு இருநூறு முன்னூறு ஆடுகளை ஒட்டிக் கொண்டே செல்கிறார்கள். சன்னியிடம் கேட்டதற்கு, "இந்த ஆடுகளை ஜம்முவில் இருந்து ஒவ்வொரு கோடை காலங்களிலும் மேய்ச்சலுக்காக காஷ்மீருக்கு இப்படியே கால்நடையாக ஓட்டிக் கொண்டு போவார்கள். குளிர்காலம் தொடங்கியதும் மறுபடியும் இவைகளை ஜம்முவிற்கு அழைத்து வருவார்கள். இவர்களை யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. இதற்காக பெர்மிட் கூட உண்டு. பெர்மிட் வைத்திருப்பவர்களை போலீஸ்காரன் கூட கேள்வி கேட்க முடியாது" என்றான். இந்திய அரசு காஷ்மீர் மக்களுக்கு இப்படி பல வித சலுகைகளை அளித்திருக்கிறது என்றும் சொன்னான்.

ஒரு மூன்று, நான்கு மணி நேர பயணத்திற்குப் பின்னர் மதிய உணவிற்காக ஒரு ஹோட்டலில் இறங்கினோம். நெய், ராஜ்மா ரைஸ் [அந்த ஹோட்டல் ஸ்பெஷல்], பாப்பட், தயிர் என்று அட்டகாசமாய் இருந்தது. ஒரு கட்டு கட்டிக் கொண்டோம். தரு தான் ஒன்றுமே சாப்பிடவில்லை. போகும் இடம் எல்லாம் சாப்பாடு கொடுப்போம். எதையும் சாப்பிட மாட்டாள். பிறகு அவளுக்கு என்று ஒரு பார்சல் வாங்க வேண்டியது, அதை பிறகு தூக்கி போட வேண்டியது! அந்த இரு வாரங்களும் அவள் அப்படித் தான் செய்தாள். பயணத்தில் அவளுக்கு எதுவுமே சாப்பிடப் பிடிக்கவில்லை.

மறுபடியும் டிராப்பிக் காரணமாக தேநீருக்கு ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். நாங்கள் பஹல்காமுக்குள் நுழையும் போது நன்றாய் இருட்டி விட்டது. நல்ல குளிர் இருந்தது. அப்போது மணி ஏழு, ஏழரை இருக்கும். ஊரே பாதி அடங்கி இருந்தது. கடைகள் சாத்தப்பட்டு விட்டன. தெருவில் விளக்குகளே இல்லை. காஷ்மீரில் 70% முஸ்லீம்கள், 20% சர்தார்கள், 10% ஹிந்துக்கள் இருப்பதாக சன்னி சொன்னான். ஆங்காங்கே தென்பட்ட ஆடவர்கள், முக்கால்வாசி பேர் தாடி வைத்திருந்தார்கள். அழுக்காய் இருந்தார்கள். ஒரு பெரிய குர்தா போன்ற ஒன்றை போட்டிருந்தார்கள். அது முழங்கால் வரை நீண்டிருந்தது. அவர்கள் கைகளும் அந்த உடைக்கு உள்ளேயே இருந்தது. கடும் பனிக் காலத்தில், இந்த உடைக்கு உள்ளே ஒரு மண்சட்டியில்அடுப்பு போன்ற ஒன்றை வைத்து உடலை சூடேற்றிக் கொள்வார்களாம். இப்படியே கதை பேசியபடி நாங்கள் தங்க வேண்டிய பயின் கிளிப் ரிசார்ட்டுக்கு சென்று இறங்கினோம். செம சில்லென்று இருந்தது. சுற்றி ஒரே இருட்டு. ரிசார்டை ஒட்டி ஒரு பெரிய மலை. சரி என்ன இருந்தாலும் காலையில் பார்த்துக் கொள்வோம் என்று நாள் முழுவதும் வண்டியில் வந்த களைப்பு தீர உணவருந்தி விட்டு படுத்துக் கொண்டோம்.

சுற்றுவோம்...
மாமா டெல்லியில் இருப்பது ராஜேந்திர பிளேஸ் அருகில் பிரசாத் நகர். இந்தப் பக்கம் இருபது நிமிடம் நடந்தால் கரோல் பாக் [கரோல் பாக் என்றால் "கரோலின் தோட்டம்" என்று அர்த்தம். இப்போது அங்கு இருப்பது நல்ல ஒரு மார்கெட். தமிழர்கள் இந்த ஏரியாவில் தான் அதிகம்.] அந்தப் பக்கம் பத்து நிமிடம் நடந்தால் மெட்ரோ ஸ்டேஷன். அருமையான லொக்கேஷன். நான் அன்று சாவகாசமாய் எழுந்தேன். வீடே அல்லோலகல்லோலப் பட்டுக் கிடந்தது. கிட்டத்தட்ட பதினைந்து பேர் 4 குழந்தைகளை சேர்த்து! நல்ல ஒரு பீங்கான் கப்பில் சுடச் சுட ஒரு டீ குடித்து விட்டு அந்த பழைய எம் ஐ ஜி பிளாட்டை சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். இந்த மாதிரி அரசு பிளாட்டுகளில் எப்போதும் சுற்றி நல்ல இடம் விட்டு அருமையாய் கட்டி இருப்பார்கள். டெல்லி என்பதால் உள்ளேயே ஒரு பெரிய பார்க், கோயில் எல்லாம் வைத்து கட்டியிருந்தார்கள்.  எனக்கு ஒன்றும் வெயில் அவ்வளவாய் உரைக்கவில்லை. பார்க் போனேன். ஒரே ஒரு பெண் குழந்தை  சைக்கிள் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். "ஏன் பார்க்கில் யாருமே இல்லை?" என்று அவளிடம் கேட்டேன். "எனக்கு தெரியாது நான் இப்போ தான் வர்றேன்" என்று பதில் கூறி விட்டு புள்ளை புடிக்கிறவன் ரேஞ்சுக்கு பார்த்து விட்டு ஓடி விட்டாள். எல்லாம் வெஷம், வெஷம் என்று நினைத்துக் கொண்டு பிளாட்டை விட்டு வெளியே வந்தேன்.

எதிரில் ஒரு பெரிய ஏரியுடன் ஒரு பார்க் இருந்தது. "அடப்பாவிகளா, ஏரின்னா நாங்க எல்லாம் கொடைக்கானல் ஊட்டி தான்யா போகணும், இங்கே வீட்டுக்கு எதுக்க இருக்கே!" என்று பார்க் உள்ளே நுழைந்தேன். ஒன்று புரியவில்லை. இந்த மாதிரி பார்க்கில் ஒரு நுழைவாயில் இருக்கும். அதில் என் போன்றோர் நுழைவதே கஷ்டம் எனும் அளவுக்கு ஒரு சின்ன இடுக்கு. அதில் நாலு இரும்பு தடுப்புகள். கொஞ்சம் வலது, கொஞ்சம் இடது என்று மாறி மாறி நுழைந்து உள்ளே போக வேண்டும். பக்கத்தில் மெயின் கேட் இருக்கும், ஆனால் அது பூட்டியே இருக்கும். எதுக்கு இப்படி வைக்கிறார்கள்? கூட்டத்தை கட்டுப்படுத்த என்று எடுத்துக் கொண்டாலும், இந்த பார்க்கில் யார் இப்படி மொத்தமாய் நுழையப் போகிறார்கள்? இந்த கருமத்தில் குர்தா போட்டா பீம்பாய் சேட்டு மாமாக்கள் எப்படி நுழைவார்கள் என்று கேள்வி எழுந்தது? என்ன கண்றாவியோ.

உள்ளே நுழைந்து படித்துறையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு மாமா, ஏதோ முணுமுணுத்துக் கொண்டே பொறி மாதிரி எதையோ ஒன்றை தண்ணீரில் போட்டுக் கொண்டிருந்தார். அதை ஒரு மீனும் சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை. அவர் ஒரு இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருந்தார். இந்தப் பக்கம் நல்ல குஸ்தி பயில்வான்கள் மாதிரி நாலு பேர் டவுசர் பனியன் சகிதம் உட்கார்ந்து, கை கால் மடக்கியபடி வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படியே எழுந்து நடக்க ஆரம்பித்தேன். அந்த பார்க்கில் நிறையா மரங்கள் இருந்தன. நேற்று அடித்த புயலில் ஒன்று இரண்டு விழுந்திருந்தது. வேடிக்கை பார்த்தபடியே அந்த ஏரியை சுற்றி நடந்தேன். ஒருவர் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார். ஒரு சர்தார்ஜி கிழவர் "மன்மோகன் சிங்" என்று தன் நண்பர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார்.  என்று கேட்கலாம் என்று நான் நின்றேன். அவர் நிறுத்தி விட்டார். சரி என்று நடந்தேன். நிறைய வெண்ணிற வாத்துக்கள் ஒரு கூண்டில் இருந்தன. அவைகளுக்கு ஒரு பெண்மணி ப்ரெட் கொடுத்துக் கொண்டிருந்தார். "க்வாக், க்வாக்" என்று அவைகள் தத்தி தத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தன. எனக்கு தருவின் ஞாபகம் வந்தது. வாத்தை பார்த்தால் போதும், அவள் வாய் வாத்தின் வாயை போல் மாறி விடும். வாத்தின் குவாவை விட அவளின் குவா அழகு.

ஒரு ரவுண்டு அடித்து மீண்டும் அதே நுழைவாயில். வீட்டுக்கு நடந்தேன். அன்று இரவே காஷ்மீர் செல்ல உதம்பூருக்கு ரயில் பிடிக்க வேண்டும். பயணத்துக்கு வேண்டியதை எடுத்து வைக்க ஒரு போருக்கான ஆயுத்தங்கள் தொடங்கி இருந்தன. மாமா, அவரின் நண்பர் சென்ற வாரம் தான் காஷ்மீர் சென்று வந்ததாகவும், குளிர் அதிகம் இருப்பதாகவும் சொன்னார். என் மாமனார், மாமியாரிடம் ஸ்வட்டர் கூட இல்லை. அதன் பிறகு, குல்லாய், கையுறை, காலுறை என்று ஏகப்பட்டது வாங்க வேண்டி இருந்தது. தருவுக்கும் ஒரு ஷூ வாங்க வேண்டி இருந்தது. சரி என்று மதியம் 12, 1 மணி போல் கரோல்பாக் கிளம்பினோம். வீட்டின் வெளியே வந்து நின்றதும், நம்ம ஊர் ஷேர் ஆட்டோ மாதிரி இங்கு ஈ-ரிக்ஷா வருகிறது. ஆளுக்கு பத்து ரூபாய் என்று நாலு நாலு பேராய் ஏறிக் கொண்டோம்.

கரோல்பாக் "மெக்டொனால்ட்ஸில்" இறக்கி விட்டார்கள். போர்டே பார்க்க வேண்டியதில்லை. அங்கு நின்ற கொலு கொலு பெண்களை வைத்தே சொல்லி விடலாம். அது மெக்டோனால்ட்ஸ் என்று!  இறங்கியவுடன் தண்ணீர் தாகம், ஒவ்வொருவரும் ஜூஸை வாங்கி கிளாஸ் கிளாசாய் அடித்தோம். பிறகு தான் கடைக்காரன் ஒரு கிளாஸ் ஐம்பது ரூபாய் என்று சொன்னான். பிரகஸ்பதி. அவனுக்கு தண்டம் அழுது விட்டு தருவுக்கு செருப்பு வாங்க ஒரு கடைக்குள் நுழைந்தோம். அவளைத் தவிர எல்லோருக்கும் செருப்பை பார்த்து விட்டு யானை விலை சொன்னதால் கமுக்காய் இறங்கி வந்தோம். இப்படி கடை கடையாய் ஏறி இறங்கி, முதலில் இந்த பொண்டு பொடிசுகளுக்கு இரண்டு செருப்பு வாங்குவதற்குள் நாக்கு தள்ளி விட்டது. பிறகு, சாக்ஸ். அதற்குள் குழந்தைகளின் கன்னம் வெயிலில் பழுத்து விட்டதால் ஒரு க்ரூப்பை வண்டி ஏற்றி அனுப்பி விட்டோம். ஸ்வட்டர் எங்குமே இல்லை. பிறகு ஒருவர் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே இருந்தது. ஸ்வட்டருடன், கொலை செய்யும்போது போடும் கையுறை மூன்றையும் வாங்கிக் கொண்டோம்.

பசி வயிற்றை கிள்ள ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போனதும் நன்றாய் கொட்டிக் கொண்டேன். மிச்ச சொச்ச பேக்கிங்கை முடித்துக் கொண்டு இரவு புறப்படத் தயாரானோம். மொத்தம் பதிமூன்று பேர். பத்து பெரியவர்கள், மூன்று குழந்தைகள். இதில் பதினைந்து லக்கேஜ்கள். பார்க்கவே பிரமிப்பாய் இருந்தது. மாமா ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல டாக்சி எல்லாம் புக் செய்தார். இரவு உணவை முடிக்கும்போதும் டாக்சி வரவில்லை. பிறகு விசாரித்ததில், டாக்சி இல்லை, டிரைவர் இல்லை, அனுப்ப முடியாது என்று ஒரே குழப்பம். பிறகு அடித்துப் பிடித்து இன்னொரு டாக்சிக்கரனுக்கு போனை போட்டு அவனை வரச் சொல்லி ஒரு வழியாய் ஸ்டேஷன் போய் சேர்ந்தோம். ஸ்டேஷன் அருகில் இருந்ததால் பிழைத்தோம். நல்ல வேலையாய் அது ஏ சி ரயில். அப்பாடா என்று எங்கள் பெட்டியில் ஏறி, எல்லாம் செட் செய்து உட்கார்ந்தோம். ரயில் உதம்பூரை நோக்கி புறப்பட்டது. அன்றைய நாள் அலுப்புடன் முடிந்தது...

சுற்றுவோம்...
இரண்டு வாரங்கள் விடுமுறைக்கு பின் சனிக்கிழமை காலை தான் சென்னை வந்து சேர்ந்தேன். மே முப்பதாம் தேதி வெள்ளி மாலை, "Off to Delhi for a vacation  — feeling excited" என்று முகநூலில் ஸ்டேட்டஸ் போடும்போது இப்போது தான் காதல் வந்தது போல் வயிற்றில் பட்டாம்பூச்சி எல்லாம் பறந்தது!. அதற்கு காரணம், இதற்கு முன் இத்தனை பெரிய குடும்பப் பயணம் மேற்கொண்டதில்லை. ஒரு வாரம் காஷ்மீர், ஒரு வாரம் டெல்லி, ஆக்ரா. இரண்டு வார பயணம். மாமா டெல்லியில் இருந்ததாலும்,  ஸ்பைஸ் ஜெட்காரன் நஷ்டத்தில் போனாலும் பரவாயில்லை என்று ஆஃபர் கொடுத்ததாலும் இந்தப் பயணம் சாத்தியப்பட்டது.

ஏழு இருபதுக்கு கிளம்பிய வானவூர்தி [வான...வூர்தியா?] பத்து, பத்தரைக்கு டெல்லியில் தரை இறங்கியது. வானத்தில் பறக்கும் போது, "டெல்லியில் மணல் புயல் அடிக்கிறது, இறங்க கொஞ்சம் கால தாமதம் ஆகலாம்!" என்று பைலட் சொன்னார். "இது என்னடா நம்ம வரும்போது தான் இப்படி புயல் எல்லாம் கிளம்பணுமா?" என்று நொந்து கொண்டேன். அதிகம் தாமதப்படுத்தாமல் இறக்கி விட்டார். "செக்-இன்" செய்த பைகளுக்கும் எனக்கும் என்றும் ராசி இருந்ததில்லை. எல்லோரும் அவர்கள் பையை எடுத்துக் கொண்டு, ஏர்போர்ட்டை பூட்டும் சமயத்தில் தான் என் பைகள் ஆடி அசைந்து வரும். அதற்குள் பெங்களூரிலிருந்து வந்த என் தம்பி வெளியிலிருந்து பத்து தடவை போன் அடித்து விட்டான். நல்ல வேலையாய் இரண்டு ப்ரீ பெய்ட் டேக்சி புக் செய்திருந்தான். "தம்பியுடையான் டேக்சிக்கு அஞ்சான்!" எல்லா பெட்டி பைகளையும் எடுத்துக் கொண்டு ப்ரீ பெய்ட் டேக்சி வரும் பிளாட்பாரத்தில் நின்றால் ஒரு வண்டியும் நிற்க மாட்டேன் என்கிறது. அருவியில் இருந்து வரும் தண்ணீர் ஓடையாய் மாறி ஓடும் ஒரு இடத்தில் அதிலிருந்து கொஞ்சம் நீரை அள்ளி எடுத்து நாம் குடிக்கும்போது மேலே ஒருவன் ஒன்னுக்கு அடித்துக் கொண்டிருப்பதை பார்ப்போம் அல்லவா? அந்த மாதிரி, நாங்கள் இங்கே பத்து பெட்டியை வைத்து வரிசையில் காத்திருக்க அவனவன் டேக்சி எங்கிருந்து வருகிறதோ அங்கேயே நிறுத்தி ஏறிக் கொண்டிருந்தான். [உவமை வெளங்குதா?] ஆரம்பிச்சிட்டாய்ங்களா? என்று நினைத்துக் கொண்டு நானும் என் தம்பியும் அதே வழியை கடைப்பிடித்து இரண்டு வண்டியை பிடித்தோம்.  இருவர் முகத்திலும் வெற்றிப் புன்னகை.

வண்டியில் ஏறியதும் "லேட் நைட் எக்ஸ்ட்ரா சாப்" என்றார். சரி பாக்கலாம் போங்க , என்றால் "இப்போவே சொல்லுங்க, இல்லைன்னா இறங்கிக்குங்க" என்றார். ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தோம். பெட்டி பைகளை பார்த்த மாமா "ஏதோ இவர்களை நாலு நாள் வந்து தங்கிட்டு போங்க என்று அழைத்தால், இவர்கள் ஒரேடியாய் வந்து விட்டார்கள் போல இருக்கிறதே?!" என்று ஜெர்க் ஆகி விட்டார். "இன்னும் பார்சல் லாரியில வருது மாமா!" என்று சொல்லி இருக்கலாம், எதற்கு முதல் நாளே வம்பு என்று விட்டு விட்டேன்.

அந்த இரவிலும் டெல்லி தக தக என்று கொதித்துக் கொண்டிருந்தது. டெல்லி வெயில் சென்னை மாதிரி வேர்ப்பதில்லை. அடிக்கடி நாவுலரச் செய்கிறது. மாமாவின் வீட்டில் இரண்டு பெட்ரூமில் ஏசி, ஹாலில் ஏர் கூலர் என்று இருந்ததால் தப்பித்தோம். ப்ளான் படி மறுநாள் இரவு காஷ்மீர் கிளம்ப வேண்டும். டெல்லியில் இருந்து உதம்பூருக்கு ரயில், அங்கிருந்து பேக்கேஜ் டூர்காரர்கள் பிக்கப் என்று ஏற்பாடு. நல்ல ஒரு அரட்டைக்கு பின்னர் எல்லோரும் சோர்ந்து உறங்கினோம்.  சுற்றுலாவின் முதல் நாள் இனிதே முடிந்தது...

சுற்றுவோம்...
சென்ற வார ஞாயிற்று கிழமை ஒரு கல்யாணத்திற்காக மாயாவரம் வரை செல்ல வேண்டி இருந்ததுரயிலில் காலை எட்டு மணிக்கு ஏறினால் மதியம் இரண்டு மணிக்குள் சென்று சேர்த்து விடும் என்று சொன்னார்கள்காலை எட்டு மணிக்கு எழும்பூரில் இருக்க வேண்டும் என்று படுத்தேன்மறுநாள் காலை டான் என்று ஒன்பது மணிக்கு துயில் எழுந்தேன்நான் தான் புத்திசாலி ஆயிற்றேஃபால் பாக் ப்ளான் ஒன்றை கை வசம் வைத்திருந்தேன்ஈசீஆர் சென்று பாண்டி போய்அங்கிருந்து சிதம்பரம் போய்அங்கிருந்து மாயவரம் போவது என்ற மிக எளிதான ப்ளான்பத்தரை மணி அளவில் திருவான்மியூர் பஸ் பிடித்தேன்என் முன்னோர்கள் செய்த புண்ணியம்அது பதினோரு மணிக்குள் திருவான்மியூர் சென்று விட்டதுஅங்கிருந்து இறங்கி ஒரு டப்பா பாண்டி பஸ் ஒன்றை பிடித்தேன். இடம் வேறு கிடைத்தது! நூறு ரூபாய் நோட்டு கொடுத்த எனக்கு எண்பத்தைந்து ரூபாய் டிக்கட்டுக்கு போக மிச்சம் பத்து ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு "சீட்டு சீட்டு" என்று அடுத்தவரிடம் போய் விட்டார் நடத்துனர். பாக்கி தராத நடத்துனரை பற்றி கவிதை எல்லாம் நான் படித்திருக்கிறேன். அது இப்படி இருக்கும் என்று ஞாபகம்.

வழி நெடுக வரும்
இயற்கை காட்சியை ரசிக்க முடியவில்லை
நடத்துனர் தரவேண்டிய பாக்கி!

சார் மிச்ச ஐந்து ரூபாய் என்று குடைந்தேன்நீங்கள் நேற்று என்னை பார்த்திருக்க வேண்டும்ஒரு ஒளி மங்கிய டி சர்ட்ஒரு ஒளி இழந்த ப்ளு [வண்ணம் - இறந்த காலம்!] ஜீன்ஸ் பேன்ட்ஒரு தோளில் மாட்டும் பை. கல்யாணத்திற்கு போகிறோம் என்று வழு வழுவென்று சவரம் வேறு செய்திருந்தேன். கிட்டத்தட்ட லாலா கடை சேட்டு மாதிரி இருந்தேன். கண்களில் ஒரு குளு குளு கண்ணாடி வேறு! கண்டிப்பாய் அந்த ஐந்து ரூபாயை நான் கேட்பேன் என்று நடத்துனர் நினைத்திருக்க மாட்டார். இது ஒரு தர்மசங்கடமான நிலை. நடத்துனர்களிடம் பாக்கி கேட்பது ஒரு கலை. சத்தமாய் கேட்கக் கூடாது. மெதுவாய் கேட்டால் காதிலேயே வாங்காத மாதிரி நடந்து கொள்வார்கள். அவர் நாம் சொன்னதை கேட்டாரா, பாக்கியை கொடுப்பாரா என்று ஒன்றும் புரியாது. கொஞ்சம் சத்தமாய் கேட்டால், அவ்வளவு தான். நீங்கள் தீர்ந்தீர்கள். அத்தனை பொறுப்பா இருக்குறவன் சில்லறை கொண்டு வர வேண்டியது தானே என்று காய்ச்சி எடுத்து விடுவார். அதிலும் என்னை மாதிரி இப்போது தான் தொட்டிலிலிருந்து பால் குடித்துவிட்டு வாயை துடைத்து விட்டு வந்த மாதிரி இருந்தால் சொல்லவே வேண்டாம்! ம்ம்..அவர் என்னையும் என் கண்ணாடியையும் உற்று பார்த்தார். அல்லது, எனக்கு அப்படி பட்டது. [ஏன்யா, மெட்ராஸ்ல அடிக்கிற வெயிலுக்கு ஒரு கிளாஸ் போடறது குத்தமா?]  இருங்க இறங்கும்போது தர்றேன் என்றார். அப்பாடா, நான் கேட்டது அவர் காதுகளில் கேட்டிருக்கிறது என்ற திருப்தியுடன் சாய்ந்து உட்கார்ந்தேன். ஓட்டுனரின் இடது பக்கத்து சீட்டில் தான் அமர்ந்திருந்தேன். டோல் கேட் வருவதற்குள், பின்னாலிருந்து ஒருவர் எஞ்சின் மேல் இருந்த அந்த கேரி பேக் கொடுங்க என்றார், அது என்னது இல்லை. அதன் உரிமையாளர் அவசர அவசரமாய் எடுத்துக் கொடுத்தார். ஓட்டுனர் பின்னால் சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் லக லகவேன்று வாந்தி எடுத்தார். எனக்கு கொடைக்கானல் மலை இறங்குவது ஞாபகம் வந்தது. எடுத்து விட்டு அதை தூக்கி எறியவில்லை. பை நிறைய வேண்டாமா? கையிலேயே வைத்திருந்தார். வண்டியில் வாந்தி எடுப்பது ஒரு கொடுமையான அனுபவம். எங்கே எனக்கும் வந்து விடுமோ என்று பயம் வந்து விட்டது. இருந்த ஒரே கேரி பேகும் போய் விட்டது. பார்வையை மறுபக்கம் திருப்பிக் கொண்டேன். ஓட்டுனர் அருகில் அமர்ந்திருந்ததால் வண்டி போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். ஈசிஆர் ரோட்டில் பைக்கில் போகவே கூடாது என்று படுகிறது. பஸ் ஒன்று போனால் அந்த பக்க சாலை முழுவதும் தீர்ந்து விடுகிறது. இதில் பெரிய பெரிய கார்களில் அந்தப் பக்கம் வருபவர்கள் ஒரேடியாய் சைட் எடுத்து இந்தப் பக்கம் வந்து விடுகிறார்கள். கடற்கரை சாலை என்று ப்ளான் செய்தவர்கள், இத்தனை செலவு செய்தவர்கள் கொஞ்சம் தொலை நோக்குப் பார்வையுடன் இதை ஒரு நான்கு வழிப்பாதையாக ஆக்கி இருக்கலாம்! 

வண்டி சிறிது தூரம் சென்றதும் ஒரு நிறுத்தத்தில் இறங்கிய பெண் ஒருவர், "கண்டெக்டர் சில்லறை நாலு ரூவா கொடு" என்று கீழே இறங்கி கத்துவது என் காதில் விழுந்தது. கண்டெக்டர் அதை கண்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை. பஸ் புறப்பட்டது. எனக்கு பகீல் என்றது. இறங்கும் போது தருகிறேன் என்பதற்கு இது தான் அர்த்தமா? என்று எண்ணிக் கொஞ்சம் உஷாரானேன். சிறிது நேரம் கழித்து நடத்துனர் வந்து என் முன்னால் இருந்த சீட்டில் அமர்ந்து கொண்டார். கொஞ்ச நேரத்திற்கு பிறகு, ஒடிசலான ஒரு பையன் தயங்கி தயங்கி நடத்துனரிடம் ஏதோ சொன்னான். பிறகு தான் புரிந்தது. நாங்கள் இருக்கும் பஸ்சுக்கு முதல் பஸ்ஸில் மகாபலிபுரம் செல்வதற்கு ஏறியிருக்கிறான். மகாபலிபுரத்தில் இறங்கியவன் பையை பஸ்சிலேயே விட்டு விட்டான். இப்போது அந்த பஸ்ஸை துரத்திக் கொண்டு இந்த பஸ்ஸில் ஏறி இருக்கிறான். அவனுக்கு தமிழ் தெரியாது. நடத்துனருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கும் இரண்டுமே தெரியும் என்பதை பையன் உணர்ந்து கொண்டான். அதனால் இருவருக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளன் ஆனேன். பையன் ஆந்திராவைச் சேர்ந்தவன். ஆந்திராவிலிருந்து வந்த ஸ்ரீ தேவியை, ரோஜாவை மதித்த அளவுக்கு வேறு யாரையும் நாம் மதிப்பதில்லை. சென்னையில் இரு நாட்கள் ஊர் சுற்ற வந்த அவன் இத்தகைய ஒரு கொடுமையான அனுபவத்தை எதிர்பார்த்திருக்க மாட்டான். அவன் சொல்லச் சொல்ல நானும் அதை நடத்துனரிடம் மொழி பெயர்த்துச் சொன்னேன். நம் அரசு ஊழியர்களிடம் எப்போதும் ஒரு மேம்போக்குத்தனம் தெரியும். நமக்கு உயிர் போகும் பிரச்சனை என்று ஒன்று சொல்லும்போது தான், "யாரு நம்ம எஸ் பியா? யாரு கூட? இதெல்லாம் பாலிடிக்ஸ்யா! நான் தான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல?" என்று வெகு சுவாரஸ்யமாய் பேசிக் கொள்வார்கள். நம்மை ஒரு மனிதனாகவே அவர்கள் மதித்திருக்க மாட்டார்கள். அதே போல் தான் நான் நடந்த சம்பவத்தை பற்றி விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் இருவரும் [நடத்துனரும், ஓட்டுனரும்] வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பையன் வேறு, என்ன சொல்கிறார்கள் என்று என்னையே கேட்டுக் கொண்டிருந்தான். நான் என்னத்தை சொல்ல? பஸ் ரிடர்ன் ஆகுமா என்று கேட்டதற்கு "டிப்போ போகும்" என்று ஒரு பதில். அங்கு யாரிடமாவது போன் போட்டு அந்தப் பையை எடுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாமே என்றேன். நான் யாருக்கு ஃபோன் போடறது என்று செல் போனையே பார்த்துக் கொண்டிருந்தவர், கடைசி வரை ஒரு ஃபோன் கூட போடவில்லை. பையில் என்ன இருக்கிறது என்று கேட்டேன், "காமெரா, கொஞ்சம் கேஷ்" என்றான் பையன். "கேஷ் வேறு இருக்கா" என்று ஜெர்க் ஆனார் நடத்துனர். "இப்படி பையை வச்சுட்டா எறங்குறது" என்று தமிழே தெரியாது என்றாலும் அவனை கடிந்து கொண்டார். அவனை பார்க்க பரிதாபமாய் இருந்தது. தவறு செய்வது சகஜம், அதன் பிறகு என்ன செய்யலாம் என்று ஒரு முயற்சி இல்லை, அதை விட்டு விட்டு நடந்த தவறையே பேசிக் கொண்டிருந்தால்? ம்ம்ம்...பஸ் பாண்டியை அடைந்ததும், அவன் டிப்போவில் சென்று விசாரிக்கலாம். அவன் அதிர்ஷ்டம் பை இருந்தால், மகாபலிபுரத்தை விட பாண்டி ஊர் சுற்ற நல்ல இடம் தான் என்று எண்ணிக் கொண்டேன்.

என் பிரச்னைக்கு வருவோம், இப்போது நடத்துனரிடம் பேசிப் பழகிய தைரியத்தில், இறங்கும் வரை எதற்கு காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று, "சார், அந்த அஞ்சு ரூபா" என்றேன். ஒரு தடவை பையை துலாவி விட்டு, வண்டி ஒரு இடத்தில நிக்கும், அப்போ சில்லறை மாத்தி தர்றேன் என்றார். ஒரு அஞ்சு ரூபா இல்லையா? இல்லை வைத்துக் கொண்டே நேரத்தை கடத்துகிறார்களா? ஒன்றும் புரியவில்லை. அப்போது யாரோ ஒரு புண்ணியவான் சார் என் சில்லறை என்று வந்தான். அவனிடம் ஐந்து ரூபாய் வாங்கி அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்து விட்டார். அந்த ஐந்து ரூபாயை அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டே எனக்கு கொடுத்தார். பரிட்சையில் பாஸ் ஆன திருப்தி, எலெக்ஷனில் சீட்டு கிடைத்த திருப்தி எனக்கு. ஒரு வழியா தட்டு தடுமாறி மூன்று மணி நேர பயனத்திருக்குப் பிறகு வண்டி பாண்டி வந்து சேர்ந்தது. மணி இரண்டு, இலக்கியா மெஸ்சுக்குள் நுழைந்தேன். ஒரு அசைவ சாப்பாடு சொன்னேன். பக்கத்தில் தாஸ் மார்க்கிலிருந்து வந்த ஒருவன் என் அருகில் உள்ளே சீட் இருப்பதை பார்த்தான். நான் எழுந்து உள்ளே போங்க என்று வழி விட எத்தனித்தபோது, அவருடன் வந்தவன், இல்லை நீங்க சாப்பிட்டு முடிங்க, வா என்று தள்ளாடியவனை அழைத்துச் சென்றார். என்னையே பார்த்துக் கொண்டிருந்த அந்த தள்ளாடும் ஆசாமி, ஐ வெயிட்டிங், வெயிட்டிங் என்றான். [நான் தான் கூலிங் கிளாசை கழட்டிட்டேனே?] மீன் குழம்பு [ஒரு துண்டு மீனுடன்], சாம்பார், ரசம், மோர்  அதோடு ஒரு மீன் வருவலையும் வாங்கிக் கொண்டேன். ஒரு புடி புடித்தேன். அறுபத்தைந்து ரூபாய் ஆனது! மீன் வறுவல் இருப்பத்தைந்து ரூபாய். சென்னையில் மொக்கை ஹோட்டல் போனாலும், ஒரு மீன் துண்டுக்கு எண்பது ரூபாய் கேட்பான். வாழ்க என்று வெளியில் வந்து சிதம்பரம் வண்டிக்குக் காத்திருந்தேன். வானம் மேக மூட்டமாய் இருந்தும், உஷ்ணம் தலைக்கேறியது. அப்படி ஒரு வெக்கை. என்ன ஊரோ! 

சிதம்பரம் என்று போர்ட் மாற்றிய ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். "நான் வானவில்லையே பார்த்தேன்" பாடல் சத்தமாய் சில்னஸ் கொட்ட கொட்ட ஒலித்துக் கொண்டிருந்தது. பஸ்ஸில் போடுவதற்கென்றே சில பாடல்கள் வைத்திருக்கிறார்கள். "மச்சான்கிட்ட முந்தானைய தந்து வைப்பாளா", "சேலையில வீடு கட்டவா", "கும்பாபிஷேகம் கோவிலுக்குத் தான்", " "வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி" என்று சில. பத்து பன்னிரண்டு வருஷமாய் இதை தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். "பூவுக்குள் போர்க்களம் செய்வது காதல், போர்க்களத்தில் பூச்செடி வைப்பது காதல்" [காதல் வரிகளாம்!] என்று மலேசியா பாட, அப்படியே ராமைய்யா ராவைய்யா என்று தேவாவும் சேர்ந்து கொள்ள எனக்கு அப்படியே யாரையாவது போட்டுத் தள்ளலாம் போல இருந்தது. அது ப்ரைவேட் பஸ். பஸ்ஸை ஷேர் ஆட்டோ ரேஞ்சுக்கு நினைத்து ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார் நடத்துனர். நம் நாட்டில் எங்கு போனாலும் கூட்டம். ஞாயிறு மதியம் மூணு மணிக்கு நூறு பேர் சிதம்பரம் போகிறார்கள். அப்படி நூறு பஸ் போகிறது. எல்லாம் நிறைந்து கொண்டு தான் போகிறது. மக்கள், மக்கள், மக்கள்...எங்கு பார்த்தாலும் தலைகள்...

பயணத்தில் இன்னொரு சுவாரஸ்யம் நம் மக்கள் கையில் இருக்கும் செல்போன்கள். அடடா..ஒவ்வொருத்தனின் ரிங் டோனும் ஒரு சிம்பொனி. அதிலும் போன் வந்து அவர்கள் பேச ஆரம்பித்து விட்டால்...இவர்கள் பேசுவது உண்மையில் போன் வழியாகத் தான் எதிராளிக்குக் கேட்கிறதா, அல்லது அப்படியே கேட்டு விடுமா என்று சந்தேகம். நான் பஸ்ஸின் நடுவில் அமர்ந்திருந்தேன். பஸ்ஸில் ஓட்டுனர் பின்னால் உள்ள சீட்டில் அமர்ந்திருந்தவருக்கு ஒரு போன் வந்தது!

மொதல்லா நீங்க எழுபத்தஞ்சு ஆயிரத்தை வட்டியோட ஃபைசல் பண்ணுங்க...அப்புறம் அதெல்லாம் பாத்துக்கலாம்...[இதே வாக்கியத்தை ஒரு இருபது தடவை சொன்னார்!]
.....
அட நான் சொல்றதை கேளுங்க...[முப்பது!]
....
சரிங்க நீங்க சொல்றது சரி தான், நான் சொல்றதையும் கேளுங்க...
.....
யோவ், நீ மொதல்ல எழுபத்தஞ்சு ஆயிரத்தை வட்டியோட கட்டுய்யா, அப்புறம் பத்திரம் திருப்புரதேல்லாம் பாத்துக்கலாம்..[நாப்பத்தேழு தடவை]
.......
ஆமா, நீ கடன் வாங்கி ரெண்டு வருஷம் ஆச்சுதே, அதுக்கு என்ன சொல்றீரு? [பதினேழு] 
........
நீ கெடைக்கும்போதேல்லாம் தருவே, நான் கொஞ்சம் கொஞ்சமா பத்திரத்தை திருப்ப முடியுமா?
.........
மொத்தமா ரெண்டு வருஷத்துக்கு வட்டியோட கட்டிட்டு பத்திரத்தை வாங்கிட்டு போ! வேற பேச்சு கெடையாது...[எண்ணவில்லை!]
.........
இப்படியே ஒரு மணி நேரத்திற்கு பிறகு,
.........
யோவ், இப்போ நான் வெளிய இருக்கேன். ஊர்ல இருந்து பஸ்ல திரும்பி வந்துட்டு இருக்கேன்.[அட மக்கா இப்போ தான் அது உனக்கு புரிஞ்சதாப்பா!] ஆஸ்பத்திரி போயிட்டு வர்றேன்! [அது சரி!] வீட்ல அவங்க மட்டும் தான் இருக்காங்க [அந்த கடன் வாங்கினவன் ப்ளான் போட்ருப்பானா, மாட்டனா?]....

அதற்குள் என் அருகில் இருந்த ஒரு அம்மா ஒரு போனை போட்டு, ஏய், ஆமா, பஸ்ல தான் இருக்கேன். நான் கோவிலுக்கு போறேன். பாத்து இருடா செல்லம். கோயிலுக்கு போய் போன் போடறேன். நீ செல்லை பக்கத்துலையே வச்சிரு! சைலன்ட்ல போட்ராதே, என்னா...சரிடா செல்லம் வைக்கவா...என்ன மூணு மணிக்கு இவ்வளவு ரஸ்ஸா இருக்கே என்று பக்கத்தில் உள்ளவரிடம் அங்கலாய்த்தார். 

இதன் நடுவில் ஒன்ஸ் மோர் படப் பாடலில் தேவா குரலில் பாட்டு! இதற்கு பெயர் தன் ஃப்யுஷன்! கொலை வெரி ஆகுமா ஆகாதா? 

சிதம்பரம் நெருங்க நெருங்க தலை வலி ஆரம்பித்தது. ஒரு வழியாய் ஊர் வந்து இறங்கியவுடன் நேராய் சென்று ஒரு ஸ்ட்ராங் காப்பி சாப்பிட்டேன். தெய்வீகமாய் இருந்தது. மாயவரத்திற்கு அடுத்த பஸ்ஸில் ஏறணும் என்று நினைக்கும்போது பகீர் என்றது. அதே சில்னச்ஸ், அதே மாதிரி பாடல்கள்! ஆஹா...ஆரம்பிச்சிட்டாங்களே! மாலை ஐந்து ஆகிவிட்டது. பஸ் புறப்பட்டது. ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. கடைசி சீட் தான் கிடைத்தது. பின் வாசல் வழியாய் காற்று வருமே என்று ஆர்வமுடன் உட்கார்ந்தால் நீங்கள் தான் ஏமாறுவீர்கள். நம் மக்கள் அத்தனை பெரும் அங்கு தான் நிற்பார்கள். அவங்களுக்கு காத்து வருனும்ல? அந்த வாசலே உங்கள் கண்ணுக்குத் தெரியாது! பல முதுகுகளின் மத்தியில் இருந்து திடீரென்று ஒரு கை வந்தது, சீட்டு என்றது. ஊர் பெயரைச் சொல்லி பணம் கொடுத்தேன். கை மறைந்து கொண்டது. சீட்டும் வரவில்லை, கடைசி வரை நடத்துனரும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் கை மட்டும் வேலை செய்தது.  நான் அப்படி இப்படி துடித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அருகில் இருந்தவர், பொறுமையா இருங்க. இவர் படிக் கண்டெக்டர் [?] அந்த கண்டேக்டர்கிட்ட டிக்கட் வாங்கித் தான் இவர் நமக்கு தருவாரு, சோ, மெல்ல தருவாரு. நான் வண்டி ஏறினதும் கொடுத்தேன். இன்னும் வரலை என்றார்! அவர் என் கண்ணை திறந்த மகானாகவே எனக்குப் பட்டார். என்ன பொறுமை, என்ன சாந்தம். என்ன ஒரு தேஜஸ்! அந்த மகான் சொன்னது போலவே நடந்து கொண்டார். நூறு ரூபாய் கொடுத்து விட்டு, என்னை போல் பாக்கி எப்போது வரும் என்று கவலையே இல்லாமல் அமர்ந்திருந்தார். சற்று நேரம் கழித்து எனக்கு டிக்கட் மாதிரி ஒரு துண்டுச் சீட்டு வந்தது.அவர் இறங்கும் நேரத்தில் அவருடைய பாக்கி அவரை தேடி வந்தது! வேற நோட்டு கொடுங்க என்று அனாயாசமாய் நல்ல நோட்டை கேட்டு வாங்கிக் கொண்டார். என்ன ஒரு வீரம்! மேன்மக்கள் மேன்மக்களே!

மாலை ஆறு, ஆறேகால் அளவில் மாயவரம் கால்டாக்ஸ் என்ற ஒரு ஸ்டாப்பிங்கில் பஸ் என்னை உதிர்த்து [நான் உதிர்ந்து போயிருந்தேன், அதான்!] விட்டுச் சென்றது. ரிசப்ஷன் முடிந்த கையோடு, அதாவது இன்னும் நான்கு மணி நேரத்தில் மறுபடியும் ஒரு ஆறு மணி நேர பயணம் காத்திருந்தது என்று நினைத்தாலே, மனது திகிலடைந்தது. நல்ல வேலையாக சென்னை திரும்பி வர பஸ்ஸை ஏற்கனவே புக் செய்திருந்தேன். இப்படி மாறி மாறி தான் வர வேண்டும் என்றிருந்தால், ஒரு வேளை நான் மாயவரத்திலேயே செட்டில் ஆகியிருப்பேன்!