படத்தை பார்த்து விட்டு இதை படியுங்கள். கொஞ்சமாவது சுவாரஸ்யம் இருக்கும்!


கபாலியின் ஃபஸ்ட் லுக் ; தூங்காவனத்தின் முதல் டிரையிலர்; இதற்கு இடையில் என் ஏழாவது குறும்படம் "சருகு". எங்களுக்கு தைரியம் தான்! ஆனால் அந்த ஜாம்பவான்களோடு போட்டி போடும் விதமாகத் தான் எங்கள் படத்தின் டைட்டில் அமைந்திருக்கிறது. வெறும் "சருகு!"

இதை ஷார்ட் ஃபிலிம் என்று சொல்ல முடியாது; மைக்ரோ ஃபிலிம் என்று தான் சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் பத்து நிமிடத்துக்கு மேல் நீளும் குறும்படத்தை யாரும் விரும்புவதில்லை. யாருக்கும் அவ்வளவு நேரமில்லை. ஒரு நிமிடத்துக்குள் அந்தப் படம் வசீகரிக்கவில்லை என்றால் நெக்ஸ்ட் வீடியோ! "சருகு" வெறும் மூன்று நிமிடம் தான். ஒரு நிமிடத்துக்குள் அது உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். இது Friends2Support.org என்ற வலைத்தளத்தில் ரத்ததான விழிப்புணர்வுக்காக  நடந்த குறும்படப் போட்டிக்காக எடுத்த படம். போட்டியின் விதிமுறையே குறும்படம் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குள், ஆஸ்பத்திரி இல்லாமல், ஊசி குத்தாமல், ரத்தத்தை காட்டாமல் அதாவது எந்த வித செலவுமில்லாமல் இப்படி ஒரு சீரியசான விழிப்புணர்வு விஷயத்தை அழுத்தமாய் எப்படி சொல்லலாம் என்று யோசித்து முயற்சி செய்தோம். நாங்கள் எதிர்பார்த்த மாதிரி"சருகு" போட்டியில் வெல்லவில்லை.

என்னை பொருத்தவரை வெற்றி முதல் மூன்று இடங்களில் வருவதல்ல. போட்டியில் பங்கு பெறுவதே! [பார்றா!] அதில் இந்த முறை நாங்கள் ஜெயித்து விட்டோம். அதற்கு ஒரு படி மேலே போய், முதல் சுற்றில் வந்த எண்ணூறு படங்களில் [எட்டு நாடுகள்; இருபதுக்கும் மேற்பட்ட மொழிகள்] முதல் எண்பது படங்களில் "சருகு" இடம்பெற்றது "மகிழ்ச்சி!" ["கபாலி" ரஞ்சித்தின் பழக்கம் ஒட்டிக் கொண்டது!]

பங்கு பெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும், வென்ற வெற்றியாளர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். இனி தங்களின்மேன்மையான கருத்துக்களை எதிர்நோக்கி...