பதிவு போட்டு வெகு நாட்கள் ஆன விரக்தியில் இதே எழுதியே தீர்வது என்று எழுதிய பதிவு இது! உங்களுக்கு இதை படித்தே தீர்வது என்று நிர்பந்தம் ஏதும் இல்லையென்றால் படிக்கத் தேவையில்லை! இந்தப் பதிவு அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்குமா என்று எனக்கே சந்தேகம் தான்!

சமீப காலமாக என் வலைபதிவின் தோலுரித்து புது தோல் போர்த்த வேண்டும் என்ற ஆசை என்னை பிடுங்கித் தின்கிறது..இணையத்தில் புது தோல்களை தேடி தேடி, என் தோலுரிவது தான் மிச்சம்! யாருக்காவது விதவிதமான தோல் கொண்ட அதையும் ப்ரீயா குடுக்குற மகராசன்கள் தெரிஞ்சா சொல்லுங்க. என் தோலை உங்களுக்கு செருப்பா தச்சி போட்றேன்! [தோலை வச்சி எப்படியெல்லாம் டயலாக் சொல்டேன் பாத்தீங்களா?]

நிற்க

எனக்கு இந்த உப்புமா பதிவுகளில் நம்பிக்கையில்லை! [நீ போட்டது பூராவுமே உப்புமா பதிவுகள் தான் என்பவர்கள் எனக்கு தனி மடல் வரைய வேண்டுகிறேன்!] பல வருடங்கள் கழித்து என் வலைப்பதிவை புரட்டிப் பார்த்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!

நிற்க

இந்த சிவாஜி படம் வந்தாலும் வருகிறது வலையுலகில் அதை வைத்து எத்தனை பதிவுகள்! சிவாஜி என்ற தலைப்பை பார்த்தாலே எரிச்சலாய் வருகிறது! எரிச்சல் குறைவதற்குள் அதையெல்லாம் படித்து விடுவேன்! ஒரு ஏழைத் தமிழனால் வேறு என்ன செய்ய முடியும், சொல்லுங்கள்?

நிற்க

சமீபத்தில் பெரியார் படம் பார்த்தேன், உன்னாலே உன்னாலே என்ற அற்புதமான யூத்ஃபுல் படத்திற்கெல்லாம் விமர்சனம் எழுதும் நான் இதற்கு எழுத முடியவில்லை! பெரியாரை விமர்சிக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற நினைப்போ என்னமோ..படம் நன்றாய் இருக்கிறதோ, இல்லையோ ஒரு கடமையாய் நினைத்து பார்த்து விடலாம்!

நிற்க

ஒரு ஜோக்!

மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அர்த்த ராத்திர்யில் பஸ் வழக்கம் போல் ஒரு டீ கடையில் நின்றது. குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் அந்த டீ கடையை மொய்த்தோம்! ஒன்று புரியவில்லை, ட்ரைவர் தூக்கம் வராமல் இருக்க டீ குடிக்கிறார், நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த நாங்கள் எழுந்து ஏன் டீ குடிக்க முன்டியடிக்கிறோம்? தமிழனோட வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா என்று ஒரு லைட் டீ போடச் சொன்னேன்! அவர் வெள்ளையாய் ஒரு க்ளாஸ் நீட்டினார், என்னங்க ரொம்ப லைட்டா இருக்கே என்றேன். அதற்கு அவர், இது உங்களுக்கு இல்லை, அவருக்கு[இன்னொருவரை சுட்டி]..இது டீ இல்லை பால் என்றார்! எல்லோரும் பல்பு வாங்குவார்கள்! எனக்கு அன்று பல்பு மாலை!

இப்போ அல்லாரும் ஒக்காருங்கோ!! [இன்ஸ்ப்யர்ட் பை டுபுக்கார்!]