நல்ல தலைப்பு. அந்த தலைப்புக்கும் படத்துக்கும் சம்மந்தம் புரியவில்லை. வழக்கமான ராஜேஷ், /, சந்தானம் [/ = பார்]  கூட்டணி. திரும்பி கூட பார்க்காத ஒரு பெண்ணை துரத்தி துரத்தி காதலிக்க வேண்டியது, இல்லை கட்டாயப்படுத்த வேண்டியது. பொண்ணுங்களே இப்படித் தான் என்று சந்தானம், தண்ணி சகிதம் பெண்களை படம் பூரா திட்ட வேண்டியது. பிறகு என்ன திட்டினாலும் நான் அவளை தான் லவ் பண்றேன்னு கல்யாணம் பண்ணி சுபம் போட வேண்டியது. மூன்று படங்களுக்கும் ஒரே ஃபார்முலா.
 
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பிறந்திருக்கலாம். வேலா வேலைக்கு சாப்பாடு. பெயருக்கு ஒரு வேலை என்று சொல்லி விட்டு ஒரு சீனில் அதை செய்து விட்டு, பிறகு வேலைக்கே போகத் தேவையில்லை. அப்படியும் மிக அழகான ஃபிகர் நம்மை காதலிக்கும். ஃபாரின் லொகேஷன் சாங்க்ஸ். கொதிக்கும் சென்னையில் கழுத்து வரை ஒரு டீ ஷர்ட் போட்டு அதன் மேல் ஒரு காட்டன் ஷர்ட் போட்டுக் கொள்ளலாம்.  
 
உதயநிதி சேஃபாய் இறங்கியிருக்கிறார். வளராத மீசையும், தாடியுமாய் நடிகர் ஜீவாவை நினைவுபடுத்துக்கிறார். இயல்பாய் நடிக்க முயற்சித்திருக்கிறார். இதில் நடிக்க என்ன இருக்கிறது, காமெரா பார்க்காமல் வசனத்தை மனப்பாடமாக பேசத் தெரிந்தால் போதும். ஐ ஆஃப் தி ஒய் ஆஃப் டயலாக் சூப்பர்.
 
சந்தானம். ராஜேஷின் உண்மையான ஹீரோ இவர் தான். இவரை நம்பித் தான் அவர் கதையே எழுதுகிறார் போல. சந்தானம் இல்லாத ஒரு படத்தை எடுத்து ராஜேஷ் வெற்றி பெற்றால் தான் நான் நம்புவேன். பிராமணத் தமிழ், ஆங்கிலம் என்று மயிலாப்பூர் பார்த்தாவாக நல்ல மாடுலேஷன். ஆனால், திடீர் திடீர் என்று அந்த மாடுலேஷனை மறந்து விட்டு சந்தானம் ஆகி விடுகிறார்.
 
ஹன்சிகா ஒரு சாயலுக்கு குஷ்பு மாதிரி தான் இருக்கிறார். முதல் படத்தை விட பரவாயில்லை. கொஞ்சம் நடித்திருக்கிறார். கடைசி கல்யாண சீனை தவிர படம் முழுதும் பொட்டு வைக்காமல் முஸ்லீம் பெண் போல் வருகிறார். ஆனால் அது உருத்தவேயில்லை. சரண்யாவையும் ஹன்சிகாவையும் பக்கத்தில் பார்த்தால் இந்த வீட்டுக்கு இவர் எப்படி மருமகள் ஆக முடியும் என்று கேள்வி எழுகிறது.
 
சரண்யா "லூசு அம்மா" காரெக்டரை நிறுத்த வேண்டும். அலுக்க ஆரம்பிக்கிறது. நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் நடிப்புப் பயிற்சி பெற்ற சண்முகராஜன் என்ற அருமையான நடிகரை, கமலஹாசன் விருமாண்டியில் போலீஸ் காரெக்டர் கொடுத்தார் என்பதற்காக இன்று வரை கொஞ்ச நேரம் வரும் போலீஸ் கதாப்பாத்திரம் என்றால் அது சண்முகராஜன் தான்! எந்த படத்தில் பார்த்தாலும் போலீஸ் உடுப்பில் தான் இருக்கிறார். அது போல இது. காமெடி அம்மா சரண்யா, அழுகாச்சி அம்மா கூத்துப்பட்டறை கலாராணி! இது தமிழ் சினிமாவின் சாபக் கேடு.
 
சினிமா என்பது விஷுவல் மீடியம். காமெடியாய் இருக்கிறது என்பதற்காக படம் முழுவதும் இருவர் பேசிக் கொண்டே இருப்பது சினிமா கிடையாது. ராஜேஷுக்கு அது புரியாமல் இருக்காது. அடுத்த முறையாவது ராஜேஷ் ஒரு சினிமா எடுக்க முயற்சிக்க வேண்டும்.
 
இவ்வளவையும் சொல்லி விட்டு, ராஜேஷ் அடுத்த படத்தில் எனக்கு ஒரு சான்ஸ் தந்தார் என்றால் உடனே நான் ஒப்புக் கொள்வேன். இதில் எனக்கு வெக்கமே இல்லை. ஏன் என்றால்...
 
To correct the system, you have to be in the system!
இன்று சென்னை சில வினாடிகள் அதிர்ந்தது. இந்தோனேசியாவில் நிகழ்ந்த ஒரு பூகம்பத்தின் பக்க விளைவுகள்! மதியம் சாப்பிட்டு விட்டு உண்ட மயக்கத்தில் இருந்த போது, "எல்லாம் எந்திரிங்க என்பது போல் கட்டடங்கள் குலுங்கியது" என்று சொல்கிறார்கள். நான் எதையும் உணரவில்லை. அப்போது தான் நான் மெல்ல வேலை செய்ய ஆரம்பித்திருந்தேன். அலுவலகத்தில் பூகம்பம் என்று எல்லோரும் அல்லோலகல்லோலப் பட்டதும் தான் எனக்குப் புரிந்தது, நான் வேலை செய்தால் இயற்கைக்கு பொறுக்கவில்லை போலும்!

நான் ஒரு பதினோரு மாடி கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் வேலை பார்க்கிறேன். சரியாய் பூகம்பம் வந்த சமயத்தில் நான் ஒரு கான்ஃபரன்ஸ் ரூமில் ஒரு மீட்டிங்கில் இருந்தேன். வெளியே சத்தம் கேட்கவும், நான் ஏதோ ஃப்ளோர் ஈவென்ட் என்று தான் நினைத்தேன். எப்போதாவது எங்களின் மன அழுத்தத்தை குறைக்க அப்படி ஏதாவது நிகழ்ச்சி நடக்கும். அதுவென்று தான் நினைத்தேன். எல்லாம் போவது போல் தெரிய நானும் வெளியே வந்தேன். அந்த ரூமின் விளக்கை அணைத்து விட்டு தான் வந்தேன்! [எப்படி என் பொறுப்புணர்ச்சி!]

கீழே இறங்கலாம் என்று போனால் ஒரு நாடே படியில் இறங்குகிறது! அதை ஏன் கேட்கிறீர்கள், எங்கள் அலுவலகத்தில் மட்டும் கிட்டத்தட்ட இருபதாயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள். நிஜமாகவே பூகம்பம் வந்தால் கொத்தாய் அள்ளி விடலாம்! இத்தனை பேர் எங்கிருந்து தப்பிப்பது! இருந்த இடத்திலேயே இருந்திருந்தால் கூட தப்பித்திருக்கலாம், இங்கு ஓடக் கூட முடியாதே என்று தோன்றியது! பதினோராவது மாடியில் இருந்து வருபவனை நினைத்து தேற்றிக் கொண்டேன். ஆனால் ஒன்று, படியில் இறங்கும் எல்லோரும் ஒரே குதூகலமாய் இருந்தார்கள். யாருக்கும் ஒரு பயம் இருப்பது போலவே தெரியவில்லை. ஏதோ ஃபயர் ட்ரில் நடப்பது போல், பேசிக் கொண்டும், ஜோக்கடித்துக் கொண்டும் ஒரே குஷி! பெண்கள் வழக்கம் போல் ஃபோன். ஓ, ஆமா, நானும் உயிரோட தான் இருக்கேன்னு வீட்ல பீதிய கெளப்பனுமே என்று நானும் ஃபோன் போட்டேன். நல்ல நாள்லயே நான் பேசுறது எனக்குத் தான் கேக்கும். இன்னைக்கு கேக்கணுமா? இழுத்து மூடிட்டு போயிட்டான் போல இருக்கு. நான் பேசுறது கூட கேக்கலை!

ஒரு வழியாய் கீழே வந்து சேர்ந்தேன். மக்கள் வெள்ளத்தில் அலையென அடித்து வரப்பட்டேன் என்று இலக்கணமாய் எழுதலாம், நாக்கு தள்ற நேரத்துல நான்சென்ஸ் என்ன வேண்டிக்கெடக்கு? கீழே வந்து எல்லோரும் கட்டடத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். அதுவும் ஆடுவது மாதிரியே தெரிந்தது. அதோ பார் விரிசல் விட்ருக்கு என்று மேலும் பீதியை கிளப்பினார்கள். அங்கு ஒரு தேன் கூடு இருந்தது. இரண்டு புறா நின்று கொண்டிருந்தது. பூகம்பம் வந்தால் பறவைகளுக்குத் தெரியுமே, அது பறக்காம இருக்குன்னா இனிமே ஒண்ணும் பயம் இல்லை என்று என்னுடைய விஞ்ஞான அறிவை கொஞ்சம் வழிய விட்டேன். அந்த பக்கி அதை கேட்டுருச்சோ என்னமோ, உடனே பறந்துருச்சு! எதுக்கும் இருக்கட்டும்னு கொஞ்சம் தள்ளியே நின்னுட்டேன்! கட்டடம் விழுமா என்று பார்த்தால் விழுகுற மாதிரியும் தெரியவில்லை; வீட்டுக்கு போகலாமா என்றும் புரியவில்லை. வெயில் வேறு கொளுத்துகிறது! பலர் கடலை போட மரத்தடியிலும், புல் தரையிலும் ஐக்கியம் ஆகி விட்டார்கள். சிலர் கொண்டு வந்திருந்த டிபன் பாக்சை திறந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். மானேஜர் ஒருவர் எத்தனை பேர் வெளியில் இருக்கிறோம், எத்தனை நேரமாய் இருக்கிறோம், எத்தனை மணி நேர வேலை கெடுகிறது, எவ்வளவு டாலர் நஷ்டம் ஏற்படுகிறது என்று கணக்கு போட ஆரம்பித்து விட்டார். மேனேஜர் ஆனதும் நீ எந்நேரமும் கம்பெனியை பற்றியே சிந்திக்க வேண்டும் என்று ஊசி கீசி போட்டு விடுவார்களோ என்று தோன்றியது! அப்புறம்  சிலர் அப்போதும் கடமையாய் ஐசி ஐசி ஐ ஏடியம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். "போறப்போ என்ன கொண்டு போகப் போறோம் என்பதை டெஸ்ட் செய்கிறார்களோ" என்று தோன்றியது! ஒரு க்ரூப் சாட் பூட் த்ரீ வேலையாடிக் கொண்டிருந்தார்கள். வேகாத வெயிலில் இப்படி ஆகி விட்டார்களோ என்று நினைத்தேன். அப்புறம் தான் தெரிந்து, டேய், நீ தான் தோத்தே, ஒழுங்க உள்ளே போய் எங்க பை, பைக் சாவி எல்லாம் எடுத்துட்டு வா என்றாரர்களே பார்க்கலாம்! அட பய புள்ளைகளா...

ஒரு வழியாய் இன்று அவ்வளவு தான் என்று நினைத்த நேரத்தில் எல்லாம் சரியாகிவிட்டது, போய் வேலையை பாருங்கள் என்று சொல்லி விட்டார்கள். அடக் கடவுளே, என்று மறுபடியும் நொந்து போய் உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கினோம். மறுபடியும் அதே கான்ஃபரன்ஸ் ரூம். மறுபடியும் அதே சத்தம். இந்த முறை பை சகிதம் எல்லோரும் கிளம்பி விட்டார்கள். யுஎஸ் கால் இருக்கிறது என்ன செய்வது என்று என் டீமில் ஒருவர் கேட்டார். எடுத்து பேசு, Your voice is shaking என்று அவர்கள் சொன்னால், Yes, because the whole building is shaking என்று காரணம் சொல்லிவிட்டு வைத்து விடலாம் என்று மொக்கை போட்டேன். 

நான் என்ன நினைக்கிறேன் என்றால், இந்த மாதிரி சமயங்களில் நமக்கு நகைச்சுவை உணர்வு பொங்குகிறது! நான் எதற்கும் பயப்பட மாட்டேன், நான் செம கூல் பார்ட்டியாக்கும் என்று நிரூபிக்க அனைவரும் ஆசைப்படுகிறோம்! அதிலும் அங்கு பெண்கள் இருந்து விட்டால் நம் பசங்க பண்ற அலும்பு இருக்கே...இதெல்லாம் ஒன்னுமேயில்லை, நான் அண்டார்டிகால இருக்கும்போது என்று ஏகத்துக்கு பீலா விடுகிறார்கள்!! இயற்க்கை இன்னும் கொஞ்சம் ஆடினால் நம் டவுசர் கழண்டுரும்டீ..! 

மொத்தத்தில் அந்த மானேஜர் போட்ட கணக்குப் படி பத்தாயிரம் டாலர் ஊஊஊஊ.....