அதே நினைவாக இருந்தது. அது அவள் தானா? சந்தேகமேயில்லை. அவளே தான். எத்தனை வருடம் கழித்து, ஏன், எப்படி, எதற்கு? 

தூக்கம் வராமல் வெகு நேரம் மூடி இருந்த கண்ணைத் திறந்தேன். நைட்லேம்ப் வெளிச்சத்தில் மணி பார்த்தேன். 2:20. விட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஃபேன் சுற்றியும் பனியன் நனைந்திருந்தது. என் மேல் கை வைத்து தூங்கும் என் மகள்  லெட்சுமியின் கையை எடுத்தேன். மேலேறி இருந்த அவளின் கவுனை சரி செய்தேன். அவள் நெற்றியைத் தடவினேன். நேற்று குழந்தையாய் இருந்தவள் இன்று அவள் அம்மா அளவுக்கு வளர்ந்து விட்டாள். மெல்லத் தலையைத் தூக்கி தேவியைப் பார்த்தேன். அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளின் கை நிதியின் மேல் இருந்தது. தூங்கும் போது தான் ஒரு குடும்பத்தின் அழகு மிளிர்கிறது. மெல்ல எழுந்து உட்கார்ந்தேன்.

அருகில் இருந்த பாட்டிலில் இருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்தேன். மெல்ல எழுந்து, சட்டைப் பையில் உள்ள சிகரெட்டையும், வத்திப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் கதவு திறந்து வெளியே வந்தேன். சிகரெட்டை வத்திப்பெட்டியில் தட்டிக் கொண்டே தெருவை அளந்தேன். தூரத்தில் ஒரு நாய் விழித்துப் பார்த்து மறுபடியும் உறங்கச் சென்றது.

வாசலில் அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்தேன். புகையை நன்றாக உள்ளிழுத்து விட்டேன். இந்த நேரத்தில் நிகோடினை எதிர்பார்காத மூளை சற்று மிரண்டு உள் வாங்கியது. நெஞ்செங்கும் புகை பரவியது.

மனம் இருப்பு கொள்ளாமல் தவித்தது. அம்மா? உண்மையில் நீயா அது? அம்மா எவ்வளவு மாறி விட்டாள். நிகோடினின் மெல்லிய போதை அம்மாவின் முகத்தை மங்கச் செய்தது. இத்தனை வருடங்கள் கழித்து அத்தனை கூட்டத்தில் நான் அவளை எப்படிப் பார்த்தேன். அவள் எப்படி என்னைப் பார்த்தாள்? இருவரும் எப்படி அடையாளம் கண்டு கொண்டோம்? தன் செயலுக்கு சிறிதும் அஞ்சாத அந்தப் பார்வை என்ன பார்வை? அவள் என்ன சொல்ல நினைத்தாள்?

இருபது வருடங்களுக்கு முன் அந்தக் காலை அப்படி விடிந்திருக்க வேண்டாம். அம்மாவைக் காணோம் என்ற என் அத்தையின் ஒப்பாரியில் தொடங்கியது அந்த நாள். அது அத்தனை நீளமான நாளாகப் போகுமென்று நான் நினைத்திருக்கவில்லை. 16 வயதில் திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகளைக் கொடுத்து விட்டு ஓடிப் போன அப்பாவை சபித்தபடி எங்களோடு மாமாவின் வீட்டில் நிரந்தரமாய் ஒண்டிக் கொண்டாள் அம்மா. ஒரே தங்கையை கை விட மனமில்லாமலும், தன் வியாபாரம் நல்லபடியாய் போய்க் கொண்டிருந்ததாலும், அடிக்கடி நோய்வாய்ப்படும் மனைவிக்கு ஒத்தாசையாய் இருக்கும் என்றும் மாமா எங்களை வைத்துக் கொண்டார். அம்மாவுக்கு வாழ வக்கில்லையென்றாலும், வைராக்கியமாகத் தான் இருந்தாள். அவள் எப்போதும் தன் விதியை நினைத்து மூக்கு சிந்திக் கொண்டு இல்லாமல், தான் மாவு விற்ற காசில் எங்களைப் படிக்க வைத்தாள். மாமாவுக்கும் தங்கையை நினைத்து பெருமை தான்.

அம்மா அளவாக, அழகாக இருந்தாள். உயரம் கம்மி. அவள் முகத்துக்குப் பவுடர் பூசுவதில்லை. தினமும் மஞ்சள் தேய்த்துக் குளித்து முகம் மஞ்சள் பூத்திருந்தது. அவளின் குறுகிய நெற்றியில் கருப்பு நீட்டுப் பொட்டு கச்சிதமாக இருந்தது. அவளின் மூக்கில் ஒரு பொட்டு தங்க மூக்குத்தி ஒரு அற்புதம். நான் சிறுவனாய் இருந்த போது, அவளின் இடையை கட்டிக் கொண்டு நிமிர்ந்து அவள் முகம் பார்க்க, அவள் குனிந்து என் முகம் பார்த்துச் சிரிக்கையில் அந்த அளவான பல்வரிசை என்னை பரவசமூட்டும். அந்தச் சிரிப்புக்குப் பிறகு சினுங்கிக் கொண்டே என் கைகளை விடுத்து ஓடுவாள். பதினாறு வயதில் பெண்களின் அழகு கன்னி அழகு. முப்பது வயதில் தான் அது பூரணம் பெறுகிறது. அந்த முப்பதுகளில் அவள் அப்படி ஒரு பூரணத்தில் இருந்தாள்.

அழகில்லாத, துணையுள்ள பெண்களையே துரத்திக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு என் அம்மா மேல் பார்வை விழாமல் இருக்க வாய்ப்பில்லை. இது தான் அவள் விதி என்று தெரிந்து அவள் எல்லாரையும் சமாளிக்கக் கற்றிருந்தாள். பக்தியையும், பூஜைகளையும், புனஸ்காரங்களையும் அதற்கு வேலியாய் பயன்படுத்திக் கொண்டாள். அதையும் மீறி எந்த ஒரு ஆணும், சைகையில், ரகசியக் குரலில் பேச ஆரம்பித்ததும், எல்லோருக்கும் கேட்கும் படி அவன் சொன்னதையே, செய்ததையே அம்மா சத்தம் போட்டுப் பேசுவாள். வந்தவர்கள் அத்தனை பேரும், தன் மனைவிமார்களுக்குக் கட்டுப்பட்டு, சமூகத்துக்குக் கட்டுப்பட்டு வாழ்வதால், வேறு இடம் தேடி ஓடி விடுவார்கள்.

உண்மையைச் சொல்லப் போனால், அம்மாவுக்கு எந்த ஆணையும் பிடிக்கவில்லை. ஆண்களின் அன்பு உடல் வரை தான் என்பதை அவள் எப்படியோ உணர்ந்திருந்தாள். உடல் தாண்டி ஒருவன் ஒரு பெண்ணை உணர்வானா என்று அவள் நினைத்தாள். உண்மையைச் சொன்னால் எல்லாப் பெண்களின் ஆசையும் அது தானே? ஆண்கள் பெண்ணின் உடலில் முடிந்து போகிறோம், ஆனால், அவர்கள் அங்கு தான் தொடங்குகிறார்கள். அவள் நினைத்தது போல், யாருக்கும் அப்போது நடிக்கக் கூடத் தெரியவில்லை.

அப்படி ஒரு சமயத்தில் எங்கிருந்தோ வந்தான் அவன். இளைஞன். மிஞ்சிப் போனால் இருபத்திமூன்று வயது இருக்கும். ஏதோ ஒரு ஃபாக்டரியில் வேலை செய்தான். வயதான அம்மாவுடன் வாழ்ந்தான். துடிப்பாய் இருந்தான். எல்லோரையும் அண்ணே, அண்ணி, அக்கா என்று அந்தத் தெருவே அவனின் குடும்பம் போல் பாவித்தான். அம்மாவையும் "மாவக்கா" என்று தான் கூப்பிடுவான்.

காலையில் மாவு வாங்க வந்தால், அங்கேயே உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பான். வருவோர் போவரை எல்லாம் வம்பிக்கிழுப்பான். அம்மாவை நிறைய சிரிக்க வைத்தான். அக்கம்பக்கத்தில் அவன் இருந்தால் அம்மாவின் முகத்தில் மெருகு கூடும். அம்மாவின் அந்த மெருகு அவன் மற்ற ஆண்களைப் போல் இல்லை என்று சொல்லிக்காட்டியது. வந்த கொஞ்ச நாட்களிலேயே அம்மாவுடன் அவன் உரிமையாய் பழகினான். அம்மாவுக்காக அத்தையிடமும், மாமாவிடமும் வாதாடவும் தயங்கவில்லை. ஒரு முறை யாரோ ஏதோ சொன்னதால், அழும் அம்மாவை என் முன்னால் வைத்து சமாதானப்படுத்தினான். பிறகு என்னைத் தனியே கூட்டிப் போய், "உங்க அம்மா ரொம்ப நல்லவங்க நீ பெரிய பையன் ஆயிட்ட, இனிமே நீ தான் அவங்களை நல்லா பாத்துக்கனும்னு" சொன்னான். எனக்கு அவனை புரிந்தும் புரியாமலும் இருந்தது.

ஒரு நாள் இரவு பாதி தூக்கத்தில் சத்தம் கேட்டு விழித்தேன். அம்மா அழுது கொண்டிருந்தாள். மாமாவும் அத்தையும் அம்மாவையும் அவனையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அம்மா என்னை தூங்கச் சொன்னாள்.

அதன் பிறகு அவன் வீட்டுக்கு வருவதில்லை. எப்போதாவது என்னை வழியில் பார்த்து அம்மா எப்படி இருக்கிறார்கள் என்று விசாரிப்பான். "அம்மாவின் சிரிப்பு குறைந்து விட்டது, நீ வீட்டுக்கு வா!" என்று நான் அழைத்ததுண்டு. அவன் மெலிதாய் சிரித்துக் கொண்டு சென்றான்.

தீர்ந்த சிகரெட் கையை சுட்டது. அதை கீழே போட்டு மிதித்தேன். தெருவில் இருந்த சோடியம் விளக்கின் வெளிச்சப் பரவலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அன்று அம்மாவைக் காணவில்லை என்றதும், மாமா முதலில் அவன் வீட்டுக்குத் தான் போனார். அவர் எதிர்பார்த்தது போல், அவனும் இல்லை. அவள் போன கோபத்தில், மாமாவும், அத்தையும் என்னையும் என் தம்பியையும் அடித்தார்கள். அக்கம்பக்கத்தவர்கள் சமாதானம் செய்தார்கள். மாமா, அம்மாவை கடும் கெட்ட வார்த்தைகளால் திட்டினார். பிறகு ஒருவாராக அவள் செய்த தவறுக்கு நாங்கள் என்ன செய்வோம் என்று சமாதானம் ஆனார். எங்களைக் கட்டிக் கொண்டு அழுதார். எங்களை அவர் வளர்த்து ஆளாக்குவதாக சபதம் செய்தார்.

எனக்கு அம்மா விட்டுப் போனது தொண்டையை அடைத்தது. திரும்பி வந்துவிடுவாள் என்று தோன்றியது. என்னையும் தம்பியையும் பிரிந்து அவள் எங்கு செல்ல முடியும் என்று தோன்றியது. அவள் போனது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை. எங்களையும் கூட்டிக் கொண்டு போயிருக்கலாமே என்று தோன்றியது. அதை நினைத்து அழுகை வந்தது.

அம்மாவைப் பற்றி என் காது படப் பேசும் பேச்சுக்களைக் கேட்டு அழுது அழுது, பள்ளியில் இருந்த போது அம்மா அப்படிச் செய்தது சரியா தவறா என்று புரியாத நான் கல்லூரிக்கு வந்ததும், அவள் செய்தது மிகப் பெரிய துரோகம் என்ற முடிவுக்கு வந்தேன். அது வெறியாக மாறியது. அவளின் மேல் இருந்த கோபத்தில் அவளைப் பற்றி பேசுபவர்களை முரட்டுத்தனமாக அடித்தேன். அதனால் பல பிரச்சனைகள் உண்டானது. மாமாவால் என்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை. தினமும் ஒரு அடிதடி சண்டை. அது போதாமல், சில சமயங்களில் அவளை வெறி கொண்டு தேடினேன். அந்த சமயத்தில் தான் தேவி வந்தாள். எல்லோரும் என் அம்மாவை வைத்து என்னை கணிக்கும் போது, அவள் என்னை மட்டும் பார்த்தாள். என்னைக் குழந்தையாக்கி என் கோபத்தை அழுகை ஆக்கினாள். என் கையறுநிலையை ஆற்றுப்படுத்தினாள். ஒரு பெண்ணால் ஆன காயத்துக்கு ஒரு பெண்ணே மருந்தானாள். ஒரு பெண்ணாய் என் அம்மாவின் நியாயங்களை எனக்குப் புரிய வைத்தாள். சரி தவறு என்றதற்கு அப்பார்ப்பட்ட இடத்தை எனக்குக் காட்டினாள்.

இத்தனை வருடம் கழிந்து, என் வாழ்க்கை, என் குடும்பம், என் உலகம் என்று சுழலும் இந்த வாழ்க்கையில், இன்று வேலை விஷயமாய் ஒரு இடத்துக்கு போய்த் திரும்பும்போது ஒரு பேருந்திலிருந்து கொண்டு அம்மாவைப் பார்த்தேன். அவள் அந்தப் பக்கம் செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தாள். ஒரு காலத்தில் வெறி கொண்டு தேடிய பெண்மனி. இதோ, என் எதிரில் இருக்கிறாள். ஒரு கணம் எல்லாமே ஸ்தம்பித்து விட்டதாகத் தோன்றியது. அம்மாவா அது? அவளே தான். அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவுக்கு வயதாகிவிட்டது. முன் பக்க நரை. ஆனால், முகத்தில் அதே பழைய களை. அந்த அரக்கு புடவையில் கொஞ்சம் பூசியது போல் இருந்தாள். அவள் கூட அவளின் சாயலில் இரண்டு இளம் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் பேசுவதை தவிர்த்து அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏனோ, நான் பேருந்திலிருந்து இறங்க முற்படவில்லை. அவளும். தாயும் மகனும் ஒரு வழிப்போக்கர்களாக, எதேச்சையாய் இருவர் பார்வைகள் கலந்தது போல் பார்த்துக் கொண்டோம். அவளின் பார்வையில் குற்ற உணர்ச்சி இல்லை. மன்னிப்பு இல்லை. அது தைரியமாய் என் கண்ணைப் பார்த்தது. ஒருவேளை, அவள் எடுத்த முடிவு சரியானதாக இருந்திருக்கலாம். அவளின் உடல் மீறி அவன் அவளைத் தொட்டிருக்கலாம். அவள் சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது, அவள் நினைத்தபடி எதுவும் நடக்காமல், இந்த முறை ஒண்ட ஒரு மாமா வீடு கூட இல்லாமல், தனியே அவள் மகள்களை வளர்த்துக் கொண்டிருக்கலாம். பேருந்துகள் புறப்பட்டது. அவ்வளவு தான் நான் அவளைப் பார்க்கப் போவது. இனிமேல் இப்படி ஒரு சந்தர்பம் கிடைக்குமா தெரியாது. அவளை நான் மறுபடியும் பார்க்க விரும்புகிறேனா என்று கூடத் தெரியவில்லை. இதே சிந்தனையில், இதுவும் கடந்து போகும் என்பதை உணர்த்தியபடி எங்கள் பேருந்துகளும் எங்களைக் கடந்து போனது.

மறுநாள், லெட்சுமி என்னிடம், அப்பா, பாட்டியை பாத்தீங்களாப்பா? எனக்கு அவங்க பேரு தான்னு சொன்னீங்களா? என்று கேட்டாள்.
பதினோரு வயதான மகளிடம் ஓடிப் போன லெட்சுமி பாட்டியைப் பற்றி என்ன சொல்லிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, என்னைப் போல் நாற்பது வயதாகும்போது அவளுக்குக் கொஞ்சம் புரியலாம் இல்லை என்றால் அவள் அம்மா இருக்கிறாள் புரிய வைக்க.
0 Responses