நன்றும் இன்றே செய் என்பது சான்றோர் வாக்கு! நாட்குறிப்புகளை எழுதலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். பார்க்கலாம்..இது எத்தனை நாட்கள் என்று...

நேற்று இரவு தாமதமாய் தூங்கியதால் இன்று காலை தாமதமாய் எழுந்தேன். அதற்காக எட்டு மணிக்கு எழுந்தேன் என்று என்னை தவறாய் நினைத்து விடாதீர்கள். பத்து பத்தரைக்கு தான் எழுந்தேன்! அலுவலகம் போகவில்லை. சில நாட்கள் விடுப்பில் இருந்ததால், டீமிலிருந்து விடுவித்து விட்டார்கள். அடுத்த ப்ராஜக்ட் கிடைக்கும் வரை கொஞ்சம் வெட்டி தான்! வீட்டிலிருந்தே மெயில் பார்த்தேன். மதியம் ஒரு மணி வாக்கில் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றேன். இப்படி வெட்டியாய் இருப்பதால், இதெல்லாம் சாத்தியமாகிறது! மகிழ்ச்சி! 

கி. ராஜநாராயணின் "கதவு" சிறுகதை படித்தேன். அருமை! அவரின் புகைப்படங்களுடன் கூடிய அவரின் சரிதம் ஒன்றை படித்தேன், நடிகர் சிவக்குமாரின் டைரிக் குறிப்புகளை படித்தேன் [இது நினைவுக்கு வர நான் படாத பாடு பட்டேன்!], அட இப்படி எல்லாம் எழுதினால் எழுத்தாளர் ஆகி விடலாம் போலிருக்கிறதே என்று ஒரு யோசனை முளைத்தது. [சிவக்குமார் பாவம், அவரை திட்டாதீர்கள்]

பிறகு....

.....

......

...... [பொறுங்கள், யோசிக்கிறேன்!]

மறந்து விட்டது! ஆ! ஐந்து மணிக்கு வீடு வந்தேன். தேநீர் குடித்தேன். ரசம் வைத்தேன்! [இன்றிலிருந்து நான் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை தொடங்கி இருக்க வேண்டாம்!] சப்பென்று இருந்தது. கலைஞர் டீவியில் அருந்ததி பார்த்தேன். அனுஷ்கா இருக்கும் காலத்தில் நாம் இருப்பது நமக்கு எவ்வளவு பெருமை! திடீரென்று படம் வரைய வேண்டும் போலிருந்தது. கொஞ்சம் கிறுக்கினேன். பிகாசோ அளவுக்கு இல்லையென்றாலும் பிரதீப் அளவுக்கு வந்தது! என்ன ஒன்று பல்லைக் காட்டி சிரிக்கும் போட்ரேட்டுகள் வரைந்தால் பிசாசுகள் போல் ஆகி விடுகிறது! பசித்தது. நான் செய்த ரசத்தை நானே சாப்பிட்டேன். தாஸ்தாவெஸ்கியின் "குற்றமும் தண்டனையும்" டைட்டில் ஞாபகம் வந்தது!

கடைசியாய் என் மனைவி எடுத்த என்னுடைய அருமையான புகைப்படம் ஒன்றை முகப்புத்தகத்தில் ஓட்டினேன். இன்றைய நாள் இனிய நாள்!

பின் குறிப்பு:

இது எழுதி முடித்ததும் ஒன்று விளங்கியது. இரவில் நாட்குறிப்பு எழுத பகலில் நடந்தவைகளை எல்லாம் புரட்டிப் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படி என் மூளையை வறுத்த எனக்கு இஷ்டமில்லை [பல்லிருக்குறவன் பக்கோடா சாப்பிடுவான்!] அதனால், இனிமேல் நாட்குறிப்புகள் எழுதுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்!! 
4 Responses
  1. சூப்பரா இருக்கு!

    தொடர்ந்து நாட்குறிப்பு எழுது..! அதில் அங்கதம் அருமையா இருக்கு!



  2. அன்பின் பிரதீப் - நலலத்தானே இருக்கு - நாட்குறிப்பு எழுதுகிறீர்களோ இல்லையோ - எழுதியதாய் கற்பனையுடன் இங்கு பதிவாக தினந்தினம் எழுதுக. இப்பதிவே நாட்குறிப்பாகி விடும் அல்லவா..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா


  3. Nanri Cheena,

    Kandippaay muyarchikirren :-)