நம் வாழ்வில் பல அழகான தருணங்கள் வருவதுண்டு. அதை எப்போது நினைத்தாலும் ஒரு சிறு புன்னகை நம் முகத்தில் அரும்பும். நான் பெங்களூரில் இருந்த போது அப்படி ஒரு சம்பவம் நடந்தது. என்னை சந்தோஷப்படுத்தும் அளவுக்கு இது உங்களை சந்தோஷப்படுத்துமா என்று தெரியவில்லை..ஆனால் அந்த நிகழ்ச்சியை இன்று நினைத்தாலும் எனக்கு நகைச்சுவையாக இருக்கும்.

அன்பே சிவம் படத்தில் "பூ வாசம் புறப்படும் தென்றல்" என்ற பாடலை நண்பர்கள் நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தோம். அந்தப் பாடலில் ஒரு காட்சியில் ஒரு கூட்டத்தில் கமலும் கிரணும் பேசிக் கொண்டே வரும்போது எதிர்ப்படும் ஒருவருடன் கமல் நின்று பேசுவார், அதை கவனிக்காமல் கிரண் கொஞ்ச தூரம் சென்று பேசிக் கொண்டே திரும்பினால் யாரோ ஒருவர் இருப்பார். திகைத்துப் போய், கமலைத் தேடித் திரும்பும்போது அங்கிருந்து தன் இரு கைகளையும் தூக்கி கமல் சிரிப்பார். அந்தப் பாடல் முடிந்தவுடன் நண்பர்கள் இருவருடன் நான் எங்கேயோ வெளியே கிளம்பினேன். அன்று வழியெங்கும் ஏகத்துக்கு கூட்டம், என் நண்பர்கள் நான் இருப்பதாய் நினைத்து பேசிக் கொண்டே சென்று விட்டார்கள், நான் சாலையைக் கடக்க முடியாமல் நின்று அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பதில் வரவில்லை என்று திரும்பிப் பார்த்த நண்பர்களைப் பார்த்து சாலையின் இந்தப் பக்கத்திலிருந்து என் இரு கைகளையும் தூக்கி கமல் மாதிரி சிரித்தேன். அவர்கள் இருவராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.. பக்கத்தில் சென்றவுடன் தர்ம அடி விழுந்தது என்னவோ வேறு விஷயம்! [மனசுல உனக்கு என்ன பெரிய கமலஹாசன்னு நினைப்பா?]

உலகில் அனைத்து மக்களையும் எடுத்துக் கொண்டால், சினிமாவின் தாக்கம் அதிகம் இருப்பது தமிழனுக்குத் தானோ என்று தோன்றுகிறது! மற்ற நாடு நகர மக்கள் சினிமாவை வெறும் பொழுது போக்காக பார்த்து விட்டு, தங்கள் வேலையில் மூழ்கி விடுகிறார்கள். ஆனால் தமிழன் தான் சினிமாவை தன் வீட்டுக்கும் கொண்டு வருகிறான். அவன் எங்கு சென்றாலும் சினிமா, அவனுடைய சுண்டு விரல் பிடித்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் நடந்து வருகிறது. கலைஞனை தெய்வமாய் பார்ப்பது இங்கு தான் இருக்கிறது. நிலாவைக் காட்டி சோறூட்டும் காலம் மலையேறி, விஜய் அங்கிள் [அங்கிள்!?] பாட்டு வந்தாத் தான் சாப்பிடுவேன் என்று குழந்தைகள் அடம் பிடிக்கின்றன..

குழந்தைகளை விடுங்கள். ஆ·பிஸில், என்ன இது, உங்க ப்ரோக்ராம்ல தப்பு இருக்கேன்னு என் சக ஊழியரிடம் சொன்னால், "வேணாம்! அழுதுருவேன்" என்று வடிவேலுவை துணைக்கழைத்து காமெடி செய்கிறார். இந்த பக் ·பிக்ஸ் பண்ணியாச்சே என்றால், "அது நேத்து, இது இன்னைக்கு" என்று மறுபடியும் வடிவேலு. நான் உங்க ப்ராஜக்ட் மானேஜர்ப்பா என்று பிஎம் சொன்னால், "நீங்க நல்லவரா கெட்டவரா" ....டொண்டடொண்டடொண்டடாய்ன் டொண்டடாய்ன் என்று பிஜிஎம் போடுகிறார்கள்! ஏன் இப்படி எல்லாம் பண்றீங்கன்னு கேட்டா, "நான் ப்ரோக்ராமர் இல்லை; பொறுக்கி"ன்றான். இப்படியே நாம் வேலை பார்க்கும் இடத்தில் எத்தனை வடிவேலுக்கள், எத்தனை விவேக்குகள்! எத்தனை கமல், எத்தனை ரஜினி..சினிமாவைப் பிரிந்து நம்மால் வாழ முடிவதில்லை.

தன் வாழ்வோடு சினிமாவை இணைத்துக் கொண்டதால் தானே 4 முதல்வர்களை கலை உலகிலிருந்து நம்மால் பெற முடிந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், படத்தில் ஒரு கிழவியை கட்டி அணைத்து, "உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு" என்று சொன்னால் புல்லரிக்கத்தான் செய்கிறது.. ஏதோ ஒரு படம், ராஜஸ்ரியுடன் டூயட் பாடுகிறார். பாடல்: "பாடும்போது நான் தென்றல் காற்று"..சரணத்தில் திடீரென்று "நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்" என்கிறார். ராஜ்ஸ்ரிக்கு ஒன்றும் புரியாமல், டூயட் பாட்ல கூட இவர் தத்துவம் சொல்லாம இருக்க மாட்றாரே என்று வெறுத்துப் போகிறார். இன்னொரு பாட்டில் கைகளின் பெருமையைப் பற்றி பாடிக் கொண்டிருப்பார், திடீரென்று "ஒன்று எங்கள் ஜாதி என்று ஓலமிட்டே பாடுவோம்" என்று ஜாதியை சாடுவார். இதை பார்க்கும் போது கொஞ்சம் படித்த எனக்கே இவர் தான் இந்த நாட்டை திருத்த முடியும் என்று தோன்றுகிறது..படிக்காத, பாமர மக்களுக்கு ஏன் தோன்றாது சொல்லுங்க?

7 Responses
  1. Pavals Says:

    //படிக்காத, பாமர மக்களுக்கு ஏன் தோன்றாது சொல்லுங்க?//

    கண்டிப்பா தோணும்.. அன்னைக்கு மட்டுமில்லை, இன்னைக்கும் தான்... முழங்கால் வரைக்கும் நீளமா கோட்டு, கறுப்பு கண்ணாடி, கையில ஒரு துப்பாக்கி (பொம்மை) வச்சுகிட்டு, "இந்த தமிளன் இருக்கிற வரைக்கும் பாகிஸ்த்தான் இந்தியாவ ஒன்னும் செய்ய முடியாது"ன்னு சவுண்ட் குடுக்கிற விஜயகாந்த பார்க்கும் போது ஒருவேளை இவரு வந்து தான் நாட்டை திருத்தனும்னு போலன்னு தோணுதே. ;-)


  2. நம்ம வலைப்பக்கம் வந்தீங்களா? "அழகான தருணம்" லாம் போட்டு கலக்குறீங்க!!! ;O)

    சினிமா வசங்களை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவது மற்ற இடங்களிலும் இருக்கு. இங்கெ பதின்ம வயசுக்காரரில் அதிகமானோர் சொல்வார்கள்: Talk to the hand!


  3. ///எங்கு சென்றாலும் சினிமா, அவனுடைய சுண்டு விரல் பிடித்துக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் நடந்து வருகிறது.///

    :-)))))

    - Suresh Kannan


  4. Suresh Says:

    நல்ல பதிவு ப்ரதீப்.

    -சுரேஷ்.


  5. Anonymous Says:

    Pradeep, A similar comparision I did when I was in Delhi.

    Hearing a news that a girl was raped by Horse driver of Rashtrapathi Bhavan, seeing the beautiful & Well exposed Delhi Girls, even I too feel her to enjoy.

    If I feel so, Y cant an uneducated execute that !!!
    Do u agree?


  6. ராசா,

    5வது முதல்வரும் கலை உலகில இருந்து வர்றாங்களா பாப்போம்.

    ஷ்ரேயா,

    ஏதேது விட்டா, அழகான தருணங்களுக்கு காப்பி ரைட்ஸ் வச்சுருக்கேன். கட்றா பணத்தைன்னு சொல்லுவீங்க போல இருக்கு? எங்க வாழ்க்கையிலையும் சில அழகான தருணங்கள் வர்றதுண்டுங்க! ஹிஹி..

    சுரேஷ்,

    இது எஸ். ராமகிருஷ்ணனை படிப்பதால் வந்த நிலை! அவருக்கு உவமைத்திலகம் என்றே பெயர் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்!

    சுரேஷ்,

    மிக்க நன்றி!

    கேஆர் எஸ்,

    முழுக்க மூடிக் கொண்டு சுற்றும் கிராமப்புறங்களிலும் கற்பழிப்பு நடக்கத்தான் செய்கிறது. இதை பெண்களின் பலவீனம் என்று சொல்வதை விட, ஆண்களின் பலவீனம் என்று தான் சொல்ல வேண்டும்!


  7. Anonymous Says:

    இதெல்லாம் ஒரு நகைச்சுவை.......

    பரவால்ல...