ஞாயிற்றுக் கிழமை. மணி இரவு 1. youtube ல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். phone வந்தது. மாமா தான். ஒரு வேலையாய் பூந்தமல்லி வரை போக வேண்டி இருந்தது. சட்டையை மாட்டிக் கொண்டு, பாண்ட்டுக்கு மாறினேன். அன்று இரவு தான் முடி வெட்டி இருந்தேன். shampoo போட்டு தலைக் குளித்து இருந்ததால், முடி சொன்ன பேச்சையெல்லாம் கேட்டது. இஷ்டத்துக்கு வகுடு எடுத்து சீவி சீவி கலைத்துக் கொண்டிருந்தேன். கண்ணாடியை பார்த்து தன்னையே ரசித்துக் கொள்ளும் எந்தப் பிள்ளையயும் அம்மாக்களுக்குப் பிடிப்பதில்லை. "டேய், ராத்திரி ஒரு மணிக்கு உனக்கு என்னடா அழகு வேண்டிக் கெடக்கு? லைட்டைப் போட்டு என் தூக்கத்தையும் கெடுத்துட்ட இருக்க? பேசாம பட்றா" என்றாள். "நான் வெளியே போறேன்!" என்றேன். "என் தப்பு தான், நான் புள்ளைய பெத்துருக்கனும், பேய பெத்தா இப்படித் தான். எங்கையாவது போயித் தொலை, லைட்டை அணை!" என்று அங்கலாய்த்தாள். எரிச்சலாய் வந்தது எனக்கு.

சீப்பைத் தூக்கிப் போட்டு, பைக் சாவி, ear phone, cap எடுத்துக் கொண்டு கிளம்பினேன். தாம்பரத்திலிருந்து சென்னை பைபாஸ் பிடித்தால் 20 நிமிடத்தில் பூந்தமல்லி. காதில் head phone ல் "என்றென்றும் புன்னகை", cap ஊடே முடி கோதும் காற்று, ரசித்து பைக்கை முறுக்கினேன். காற்றின் வேகம் தலையில் இருந்த cap ஐ கழட்டப் பார்தது. காற்றுக்கும் எனக்கும் இருந்த அந்தப் போட்டி நன்றாக இருந்தது. சென்னையில் பைக் ஓட்ட சிறந்த நேரம் இரவு தான். அதுவும் நவம்பர், டிசம்பரில் அந்த மெல்லிய பனியில், காதில் ear phone மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே மெல்ல ஊரைச் சுற்றி வருவது ஒரு சுகம். அதுவும் ரிங் ரோட் என்றால் சும்மா பறக்கலாம். அப்படி ஒரு இன்பத்தை அனுபவித்த படி சென்று கொண்டிருந்தேன்.

அப்போது தூரத்தில் ஒருவன் நடந்து போவதைப் பார்த்தேன். ஒரு மாதிரி லுங்கியை மடித்துக் கட்டி கையில் சில சாமான்களை வைத்திருந்தான். "இந்த இடத்தில் ஏன் நடந்து கொண்டிருக்கிறான்? இப்படியே எவ்வளவு தூரம் நடப்பான்?" என்று தோன்றியது. அவன் அவ்வப்போது திரும்பி வண்டி ஏதும் வருகிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தான். என் வண்டியை தூரத்தில் பார்த்ததும், கையை உயர்த்தி லிஃப்ட் கேட்க ஆரம்பித்தான். எனக்கும் இரக்க குணம், உதவும் எண்ணம் எல்லாம் இருந்தாலும், இந்த மாதிரி சமயத்தில், இந்த மாதிரி ரோட்டில், முன் பின் தெரியாத ஒருத்தனுக்கு உதவுவது எல்லாம் வேண்டாத வேலை. அதனால் அவனைக் கண்டு கொள்ளாமல் கடந்தேன். ஆள் கருப்பாய், ஒல்லியாய், கூலி வேலை செய்பவன் போல் இருந்தான். அவன் கையில் வைத்திருந்த சாமானில் ஒரு ரம்பமும், சுத்தியும் இருந்தது. வண்டியை வேகமெடுத்தேன். அவன் ஒரு வித ஏமாற்றத்தில் என் வண்டியைப் பார்த்துக் கொண்டிருந்தது rear view mirror ல் பார்த்தேன். பாவமாய் இருந்தாலும் ஆள் ஒரு மார்க்கமாய் இருப்பதால் பரவாயில்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அவனை விட்டு ஒரு நூறு மீட்டர் வந்திருப்பேன், காற்றுக்கும் எனக்கும் நடக்கும் போட்டியில் இந்த முறை காற்று வென்றது. தலையிலிருந்து என் cap சட்டென்று பின்னால் பறந்தது. வண்டியை நிறுத்தி விட்டு cap ஐ எடுக்கத் திரும்பினால் அந்த ஆள் என் cap எடுத்துக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்ததும், அவன் "cap லூசா இருக்கு போல, காத்துல அடிச்சிருச்சு" என்றான். நான் தலையைசைத்துக் கொண்டே, cap ஐ வாங்கிக் கொண்டு, கொஞ்சம் தர்மசங்கடமாய் உணர்ந்தேன்.

"எங்க போறீங்க?" என்றேன்.

"டோல்கேட் ல விட்டா போதும்." என்றான்.

"சரி வாங்க" என்று நடந்தேன். அவன் பின்னால் நடந்தான். அடுத்த நொடி அவன் கையில் உள்ள சுத்தியால் என் பின் மண்டையில் பலமாய் ஒரு அடி. இல்லை. அப்படி எனக்கு ஒரு பிரமை. திரும்பிப் பார்த்தால் பாவமாய் நடந்து வந்து கொண்டிருந்தான்.

"இந்த நேரத்துல, இந்த ரோட்ல தனியா போறீங்க?" என்றேன்.

"அஹ்..என் கூட்டாளியோட தான் வந்தேன். அவனுக்கு என்னமோ அவசரமா ஜோலி ஒன்னு வஞ்ச்சுன்னு எதுனா வண்டிய புட்ச்சி போன்னுட்டான்."

cap ஐ tight செய்து தலையில் போட்டு அமர்ந்து வண்டியை எடுத்தேன்.

அவன் பின்னால் சற்று தள்ளியே உட்கார்ந்து கொண்டான்.

பாட்டை நிறுத்தி, ear phones ஐ கழுத்தில் போட்டுக் கொண்டேன். அவனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேசினாலும் காற்றில் சரியாய் கேட்காது. அவனும் எதுவும் பேச்சு கொடுக்கவில்லை. கண்ணாடியில் பார்க்கும்போது, எதிர்க்காற்றை அனுபவித்தபடி இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் பார்த்துக் கொண்டே வந்தான். வண்டியை வேகம் எடுத்தேன்.

இந்த ரோடு எப்போதும் காலியாகத் தான் இருக்கும். அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு. லாரிகளும் இல்லை. அவன் நினைத்தால் என்னை அடித்துக் கொன்று, பொறுமையாய் ரம்பத்தால் துண்டு துண்டாய் அறுத்து போட்டாலும் அங்கே கேட்பாரில்லை. "ஒரு பைக், கொஞ்சம் பணத்துக்காக சுத்தி எடுத்து கொல்லும் அளவுக்கு துணிவார்களா?" என்று ஒரு எண்ணம் தோன்றி, பின் தினமும் பேப்பரில் இதை விட கேவலமான விஷயத்திற்கு எல்லாம் அடித்துக் கொண்டு சாகும் செய்திகள் கண் முன் வந்து மறைந்தன. ஆள் அரவம் இல்லாத இடத்தில் ஒரு மனிதன் கூட இன்னொரு மனிதனுக்கு எதிரி தான் என்ற நினைப்பு மேலும் பயமுறுத்தியது. இப்படி மண்டையில் திகலாய் என்னன்னமோ எண்ணம் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. "எப்படா டோல்கேட் வரும்!" என்று இருந்தது. ஒரு கணம் இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாய் பார்த்துக் கொண்டோம். அப்போது எதிர்காற்று அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் தீர்க்கமாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்த மாதிரி எனக்குத் தோன்றியது. எனக்கு உள்ளே ஏதோ பிசைந்தது. அந்த நொடியில் எதிர்பாராமல் வலது பக்கத்தின் divider ல் இருந்து திடீரென்று ஒரு நாய் ரோட்டில் பாய்ந்தது. என்ன ஏது நடக்கிறது என்று என் மூளைக்கு எட்டுவதற்குள் அனிச்சை செயலாய் வண்டியின் எல்லா ப்ரேக்குகளையும் ஒரே நேரத்தில் அழுத்தினேன். வண்டியில் உள்ள disc break திடுமென்று விழித்து வண்டி balance தவற நான் முன்னால் தூக்கி எறியப்பட்டேன். கைகளிலும் கால்களிலும் சிராய்த்து, இரண்டு முட்டியிலும் செமையாய் வலித்தது. விழுந்த வேகத்துக்கு, நான் இன்னும் சுயநினைவோடு இருப்பதே எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

மெல்ல எழுந்து உட்கார்ந்து கைகளில் உள்ள சிராய்ப்புகளைப் பார்த்தேன். மண் படிந்த தோல் பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. எரிச்சல் அதிகமாய் இருந்தது. முட்டியில் பேன்ட் கிழிந்து ரத்தம் தோய்ந்திருந்தது. மெல்ல எழுந்தேன். வலிக்கிறது, ஆனால் நிற்க முடிகிறது. வண்டி எங்கோ ஓரமாய் கிடந்தது. Cap எங்கே விழுந்ததோ தெரியவில்லை. அந்த ஆள் தூக்கி வந்த பை, சுத்தி, ரம்பம், மற்ற சாமான்கள் சிதறிக் கிடந்தன. அவன் மல்லாக்கக் கிடந்தான். அவன் அருகில் சென்றேன். அவன் உடம்பில் ஒரு அடியும் இல்லை. அவன் பின் மண்டை தான் பிளந்து கொலகொலவென்று இருந்தது.

 தினகர் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான். தினகர் என்ற அந்தப் பெயரில் இருக்கும் 'ர்' தான் அவனுக்குக் கடைசியாய் கிடைத்த மரியாதை. வீட்டில் அவனை பெண்டாட்டி பிள்ளைகள் மதிப்பதில்லை. (இது ஆண்களுக்கு உலகப் பிரச்சனை என்றாலும்..) ஆஃபிஸிலும் அவனை உப்புக்குச் சப்பாணியாய் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண் விதியே என்று வாழ்வது போல் தான் தினகரும் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஐப்பசி வந்தால், (வரும்) தினகருக்கு நாற்பது வயது. அதற்குள் அவன் தலை முடிகளுக்கு, நரைக்கலாமா, கொட்டலாமா என்று போட்டி. நல்ல சிவப்பு என்றோ, கரு கரு கருப்பு என்றோ சொல்ல முடியாது. Asian Paints color palette ல் நாலைந்து color mix செய்தது போல் ஒரு நிறம். முட்டைக் கண்கள். ஒரு சோம்ப்ளாங்கி கண்ணாடி. மூச்சு விடுவதற்கும், அந்த கண்ணாடியை தாங்குவதற்கும் அன்றி அந்த மூக்குக்கு வேறு ஒன்றும் விஷேஷமில்லை. அவ்வளவு வாய் திறந்து பேசாத ஆளுக்கு அத்தனை பெரிய வாய். பகவானின் லீலையே லீலை. அளவான உயரம் + ஷூவில் கொஞ்சம் ஹீல்ஸ். மிதமான உடல்வாகு. இவ்வளவு தூரம் அவனை அவன் மனைவி கூட வர்ணித்ததில்லை. கதைக்கு வருவோம்.

அன்று காலையிலேயே மனைவியின் சுப்ரபாதம் தொடங்கியது. அவன் பையன் பள்ளியில் பரிட்சையில் கோட்டடித்து நிற்பதற்கும், சேராதவரோடு சேர்ந்து கெட்டுப் போவதற்க்கும், ஸ்கூல் ஃபீஸ் காரணம் காட்டி அவனை இந்தப் பள்ளியில் சேர்த்ததற்கும், அவன் எதிர்காலம் நாசமாய் போகப் போவதற்கும் தினகர் தான் முழு முதற் காரணம் என்று சொல்லி அவன் மனைவி அவனை அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள். பூசாரியின் அர்ச்சனையை காதில் போட்டுக் கொண்டு கடவுள் காலங்காலமாய் கல்லாய் அமர்ந்து இருக்கும் போது, அவன் படைத்த ஜென்மம், மனிதன், அதுவும் புத்திசாலி ஜீவராசி, இதைக் கூடவா கற்றுக் கொள்ள மாட்டான்.

இன்று அவன் கவலையே வேறு. கடந்த இரண்டு வாரங்களாக உயிரை உருவி எடுத்துக் கொண்டு, நேற்று இரவும் 3 மணி வரை (இரவா?) வேலை பார்த்த Business proposal presentation இன்று இருந்தது. அது வேறு வயிற்றில் புளியைக் கரைத்து, ரெண்டு தக்காளி போட்டு, குழம்பு பொடி போட்டு, கடுகு தாளிப்பது வரை வந்து விட்டது.
இவனைப் போலவே அப்பாவியாய் இருந்த அந்த wagon R ல் ஆபிஸ் செல்லும் வழியில் சாலையே தெரியாத அளவுக்கு வாகனங்கள். ஏதோ ஒரு பெரிய நோய் வந்து மக்கள் எல்லாம் இத்தனை காலம் வீட்டில் அடைபட்டுக் கிடந்து இன்று திறந்து விட்டது போல் அப்படி ஒரு கூட்டம். அந்த presentation ppt மனதில் ஓட கொஞ்சமாய் எரிச்சல் பட்டான்.

அன்று மாலை, சீக்கிரமே ஆபிஸில் இருந்து கிளம்பிவிட்டான்.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு: இது non linear கதை என்பதால், presentation என்ன ஆனது என்று அவன் வீட்டுக்குப் போகும் வழியில் நினைத்துப் பார்ப்பதாய் சொல்லப்படும். இதோ, நினைக்கிறான்.

அவன் அடித்த ஹாரனில் அவன் wagon R யே கொஞ்சம் மிரண்டது என்று தான் சொல்ல வேண்டும். "2 வாரமா ராப்பகலா வேலை பார்த்துருக்கேன். ஒரு Details "மண்ணும்" ('ம' வில் ஆரம்பிக்கும் கெட்ட வார்த்தை) இல்லாம இத்தனை டீமோட co-ordinate பண்ணி இவ்வளவு தூரம் பண்ணதுக்கு ஒரு சின்ன appreciation கூட இல்லாம, that bloddy rascal is firing me in front of all. Bloody mother fisher (புரிந்திருக்கும், 'f' கெட்ட வார்த்தை) GODDAMIT!" மறுபடியும் அவன் wagon R குலுங்க ஒரு horn. சில நொடிகளுக்குப் பிறகு தான் அது ஹாரனால் வந்த குலுங்கல் அல்ல பின்னால் வந்தவன் அவன் வண்டியில் இடித்த சத்தம் என்று புரிந்தது. இந்தத் தருணம், This moment, யுவராணி "தலைவர்" தோளில் சாய்ந்து அவர் அவளின் உதட்டில் உள்ள ரத்தத்தை பார்க்கும் தருணம். மாணிக்கம் பாட்ஷாவாக மாறும் தருணம். என்ன தான் இடித்தாலும், காரை நடு ரோட்டில் நிறுத்தி பஞ்சாயத்து பண்ணுவது எல்லாம் தினகரின் கனவில் கூட நடந்ததில்லை. ஆனால் இன்று...காரை அப்படியே நிறுத்தி விட்டு இறங்கினான். பின்னால் வந்து இடித்த மினி ட்ரக் ஆள் கொஞ்சம் apologetic ஆக இறங்கி வந்தான்.

அந்த ஆள் உயரம் கம்மியாய், தொத்தலான உடம்போடு, பார்க்கப் பரிதாபமாய் இருந்தான். தினகர் மனதில் பாட்ஷா உக்கிரமானார். அவன் முகத்தில் "தெரியாம இடிச்சிட்டேன் சார்" என்று எழுதி ஒட்டி இருந்தது. தினகர் தான் பாட்ஷாவாய் மாறி ஐந்து நிமிடம் ஆயிற்றே. இடிபட்ட காரை பார்த்துக் கொண்டே, அதே உக்கிரத்துடன் அவன் மேல் பாய்ந்தான். அவன் சட்டையை பிடித்துக் கொண்டு, அவன் கன்னத்தில் பொளேர் என்று ஒன்று விட்டான். அதை அந்த ஆள் எதிர்ப்பார்க்கவில்லை. அதோடு, தான் சின்ன வயதில் இருந்து கேள்விப்பட்ட அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொன்னான். அந்த ஆள் மிரண்டு போனான். ரோட்டில் சிலர் பஞ்சாயத்துக்கு வந்தால் அவர்களையும் துவம்சம் செய்தான். அந்த கணத்தில் தினகர், அவன் பாஸை, அவன் மனைவியை, அவன் மகனை, அவன் பக்கத்து வீட்டுக்காரனை, மோடியை, டோனால்ட் ட்ரம்ப்பை, அவன் அறியாமையை, அவன் தோல்வியை, அவன் கையாலாகாத்தனத்தை என்று எல்லாவற்றையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான். அந்த ஆள் எவ்வளவு கெஞ்சியும் தினகர் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். தினகரைத் தெரிந்தவர்கள் அவனை அப்போது பார்த்தால் அவன் தானா என்று சந்தேகம் வரும். அப்படி ஒரு உக்கிரம். அப்போது, யாரும் எதிர்பார்க்காமல், திடீரென்று அவன் கன்னத்திலும், முகத்திலும் தலையிலும், முதுகிலும் சாரமாரியாக சில அடிகள் விழுந்தது. அவன் சுதாரிப்பதற்குள் அவன் சட்டை எல்லாம் கிழிந்து தொங்கியது. முகத்தில் விழும் அடியை தடுக்க கையைக் கொண்டு தடுத்துக் கொண்டே தினகர் பார்த்தது, அந்த பரிதாபமான மினி ட்ரக் ட்ரைவர் அல்ல. அவன் வேறு விதமாய் மாறிப் போயிருந்தான். அவன் முகத்தில் எழுதியிருந்த "தெரியாம இடிச்சுட்டேன் சார்" மறைந்து, "விட்டுடுங்க சார், நான் புள்ளைகுட்டிக்காரன் சார்" போய், "ஆமாடா தே மவனே, நான் தான்டா இடிச்சேன், இப்போ என்னடா அதுக்கு" என்று மாறிப் போயிருந்தது. கூடி இருந்தவர்கள் இருவரையும் விலக்குவதற்குள் போதும் போதும் என்று ஆனது. அவன் தன்னை கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொண்டு "போடா, வண்டியை எடு" என்று அவன் ஆக்ரோஷமாகக் கத்த கூடி இருந்தவர்கள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தினகர் தனக்கு நடந்ததை நம்ப முடியாமல், வண்டியில் ஏறி அமர்ந்தான். Rear view mirror லும் அந்த ஆளின் பூத்துப் போன கண்கள் இவனை மிரட்டியது. சுய இரக்கம் பிய்த்துத் தின்ன கண்கள் கலங்க யாரையும் இடிக்காமல் வண்டியை எடுத்தான். அந்த மினி ட்ரக் அவனைக் கடந்து போனது.

"மினி ட்ரக் டிரைவர்" திருச்செல்வன் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான். திருச்செல்வன் என்ற அந்தப் பெயரில் இருக்கும் 'திரு' தான் அவனுக்குக் கடைசியாய் கிடைத்த மரியாதை. வீட்டில் அவனை பெண்டாட்டி பிள்ளைகள் மதிப்பதில்லை. (இது ஆண்களுக்கு உலகப் பிரச்சனை என்றாலும்..) அலுவலகத்திலும் அவனை உப்புக்குச் சப்பாணியாய் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். குடித்து விட்டு தினமும் அடிக்கும் குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண் விதியே என்று வாழ்வது போல் தான் திருச்செல்வன் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

காதலர் தினத்தை முன்னிட்டு...இசையமைப்பாளர்கள் யாராவது இருந்தால் மெட்டு போட்டு பார்க்கலாம்.

அவளுக்கென்ன அழகும் அறிவும் நிறைந்தவள்
அவளுக்கென்ன அத்தனை பெண்ணிலும் சிறந்தவள்
எனக்கென்ன அவளையே வரமாய் பெற்றவன்
எனக்கென்ன அவளின் காதலுக்கு உற்றவன்

கலைகளின் பிறப்பிடம் அவள் தான்
மானுடத்தின் சிறப்பிடம் அவள் தான்
நிகழ்கின்ற சரித்திரம் அவள் தான்
நிலைக்கின்ற இதிகாசம் அவள் தான்
எழுப்பாத கனவும் அவள் தான்
களிப்பான  நினைவும் அவள் தான்

(அவளுக்கென்ன அழகும்)

அண்டத்தின் ஒரு துளி அவள் தான்
அகிம்சையின் முதல் பாலி நான் தான்
படைக்கப்படாத புது உயிர் அவள் தான்
பயிலப்படாத முதல் மொழி அவள் தான்

அவளுக்கென்ன அழகும் அறிவும் நிறைந்தவள்
அவளுக்கென்ன அத்தனை பெண்ணிலும் சிறந்தவள்
எனக்கென்ன அவளே வரமாய் பெற்றவன்
எனக்கென்ன அவளிடம் காதலை கற்றவன்

ஊர்மிளா உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் ஹிந்தியை வெறுத்தது தெரிந்தும் அவரின் பல படங்கள் தமிழுக்கு டப் செய்யப் பட்டன. அப்படி "Daud" என்ற படமும் வந்தது. படத்தில் உடலை ஒட்டிய ஜீன்ஸ் அணிந்து அவர் குளித்த போது நனைந்தது அவர் மட்டுமல்ல. [யூட்யூபில் இருக்கும் "Daud" படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடுவதற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு நான் காரணமாய் இருக்க போகிறேன் என்று எனக்குத் தெரியும்!] "Daud" வந்திருந்த போது, என் ஹிந்தி தெரியாத நண்பன் ஒருவன், "தாவுது" வந்திருக்கிறது என்றான். பிறகு தான் புரிந்தது எனக்கு, அது "தாவுது" இல்லடா, "தவுட்", அப்படி என்றால் "ஓட்டம்" என்று அர்த்தம் என்றேன்.இப்போது "தங்கல்" படத்தை டப் செய்திருக்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் போஸ்ட்டரில் பேரை பார்ப்பவர்கள், அமீர் கான் ஒரு இடத்தில் சில பெண்களுடன் "தங்கி"ப் போவது தான் படத்தின் கதை போல என்று எண்ணிக் கொள்ள வாய்ப்புண்டு. அதனால் முதலில் அதை தெளிவு படுத்தி விடுகிறேன். தங்கல் பெயரை  "தங்கத்தின்" த கொண்டு உச்சரிக்காமல் "தவத்தின்" த கொண்டு உச்சரிக்க வேண்டும். "தங்கல்" [தவத்தின் "த"!!!] என்றால் மல்யுத்த போட்டி என்று அர்த்தம். [டே, படம் வந்து ஒரு மாசம் ஆச்சுடா...விமர்சனம் போடறதே தப்பு, இதுல விளக்கம் வேறயா!!] தமிழில் படத்தை டப் செய்யும்போது அதற்கு தமிழிலும் பெயர் வைக்கலாம்.



அமீர் கான் எனக்கு ஆதர்சம். எனக்குத் தெரிந்து கடைசியில் அவரின் தோல்வி படம் "மங்கள் பாண்டே" (2005) என்று நினைக்கிறேன். அதுவும் அவரின் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்கத் தான் செய்தது. மனிதர் நல்ல கதையை தேர்ந்தெடுப்பதில் கில்லியாக இருக்கிறார்.

தங்கல் ஒரு உண்மைக் கதை. ஹரியானாவில் வசிக்கும் மகாவீர் சிங் போகத் என்பவர் தன் இரு மகள்களை எப்படி மல்யுத்த வீராங்கனைகளாக்கி இந்தியாவுக்கு தங்கத்தை தருவித்தார் என்பது தான் கதை. அவரின் சொந்த வாழ்வில் இருந்த கஷ்டங்களோடு, சின்ன சின்ன சுவாரஸ்யங்களையும் சேர்த்து மிக அழகான திரை வடிவமாய் அளித்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பலம் நடிகர்கள் தேர்வு. அமீர் கான், சாக்ஷி தன்வர், முதல் பாதியில் வரும் சிறுமிகள், வளர்ந்த பிறகு வரும் பெண்கள், அமீரின் மருமகனாக வருபவர்கள், கோச்சாக வருபவர். அத்தனை பேரும் அசத்தல் தேர்வு.

ஆமீர் மிகவும் தன்மையான தந்தையாய் மிக அற்புதமாய் செய்துள்ளார். வயதுக்கேற்ப தன உடல் எடையை கூட்டியது சரியான முடிவு. ஏன் என்றால் அதுவே அவரின் உடலைசைவை, உடல்மொழியை முற்றிலும் மாற்றி விடுகிறது. அதனால் அவர் செய்வதெல்லாம் இன்னும் யதார்த்தமாய், உண்மையாய் திரையில் வெளிப்படுகிறது. சிறிதே சிறிது நேரம் வரும் இள வயது அமீருக்காக உடலை இந்த அளவுக்கு மாற்ற வேண்டுமா என்று ஆச்சர்யமாய் இருந்தது.

சாக்ஷி தன்வரை இது வரை இந்தி சீரியலில் பார்த்திருப்போம். அவர் மிகச் சரியாய் அந்த கதாப்பாத்திரத்துக்கு பொருந்தி உள்ளார்.

இரு குழந்தைகளையும், இரு பெண்களையும் கிட்டத்தட்ட உண்மையான மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றியது போல் இருக்கிறது அவர்களின் நடிப்பு. பெண்ட் எடுத்துள்ளனர். படத்தில் குழந்தைகளிடம் இனி குஸ்தி போட வேண்டும் என்று அமீர் சொன்னவுடன், ஒரு பாடல் வருகிறது. அதன் முதல் வரி...

அப்பா, எங்கள் ஆரோக்கியத்துக்கு நீ ஊறு விளைவிப்பவன்.

இந்த வரி அமீரின் கதாப்பாத்திரத்துக்கு மட்டுமல்ல அமீர் கானுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் :) இசையும், பாடல் வரிகளும் படத்தில் பிரமாதம்.

படம் முழுவதும் அந்த மருமகனின் வாய்ஸ் ஓவரில் வருவதாக அமைத்தது நல்ல விஷயம். படத்தில் வரும் வசனங்கள் நச். காமெடியாய் இருக்கட்டும், உணர்ச்சிகரமானதாய் இருக்கட்டும்.

முதல் முறையாய் கலந்து கொள்ளும் ஒரு குஸ்தியில் அந்தக் குழந்தை நோஞ்சான் சிறுவனை தேர்ந்தெடுக்காமல் பலமானவனை தேர்ந்தெடுக்கிறாள். அப்போது போட்டியின் நடுவர், தந்தையிடம், "உன் மகள் தவறு செய்து விட்டால், கை கால் உடைந்து தான் ஊர் திரும்பப் போகிறாள்" என்று சொல்கிறார். அதற்கு தந்தை, "சண்டையில் வெல்வதற்கு முன், பயத்தை வெல்ல வேண்டும். என் மகள் அதில் வெற்றி பெற்று விட்டாள்" என்கிறார்.

தன் மகள்களை, மல்யுத்த வீராங்கனைகள் ஆக்குவது என்று முடிவெடுத்த உடன், அவர் சொல்கிறார். "மகன் வாங்கி வந்தால் என்ன, மகள் வாங்கி வந்தால் என்ன, தங்கம் தங்கம் தானே, இதை எப்படி நான் இத்தனை காலம் உணராமல் இருந்தேன்!"

எங்களை எப்படியாவது இந்த ஹிம்சாயிலிருந்து காப்பாற்றும்படி சிறுமிகள் தாயிடம் மன்றாடுகிறார்கள். அதற்கு அவள், "ஒரு வருட காலம், உங்களுக்கு அம்மா இருப்பதை மறந்து விடுங்கள்" என்கிறாள். சிறுமிகள் சட்டென்று எழுந்து செல்கிறார்கள். அதற்கு தாய், "ஹே, அதற்குள் மறந்து விட்டீர்களே" என்கிறாள் :)

கோச்சாக வருபவர் மராத்தி நடிகராம். நல்ல தேர்வு. படத்தில் அவர் வில்லனாய் சித்திகரிக்கப் பட்டிருந்தாலும் அந்த கோச்சின் இடத்தில் இருந்து பார்த்தால் அவர் நியாயம் புரியும். அவரவர்க்கு அவரவர் நியாயம்.

இப்படி படம் நெடுக சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே படத்தை சிறப்பாக்குகிறது.

இந்தப் படத்தை பார்க்கும்போது எனக்கு தோன்றியது, நம் நாட்டில் ஆண்கள் உலக லெவல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வாங்கி வருவதே கஷ்டம். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு பெண்ணை இப்படி ஒரு வீராங்கனை ஆக்க என்ன என்ன பாடு பட வேண்டும். எத்தனை ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்க வேண்டும். அதிலும் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து  இந்த அளவுக்கு வருபவர்கள் எப்படி பட்ட போராட்டங்களை எல்லாம் சந்தித்திருப்பார்கள் என்று யோசிக்கவே பிரமிப்பாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை, இந்தியாவில் பெண்கள் உலக அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு பதக்கம் வென்றால் அதை இரண்டாக கொடுக்க வேண்டும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் மாதிரி...அத்தனை போராட்டங்களை சகித்துக் கொண்டு அவர்கள் அந்த மேடைக்கு வருகிறார்கள்.

மேல் உள்ள பத்தி தான் இந்தப் படம் எனக்குள் விளைவித்த எண்ணங்கள். ஒரு நல்ல படைப்பு தீர்வுகளை கொடுக்கத்  தேவையில்லை. கேள்விகளை எழுப்பினால் போதும். அதை தங்கல் சிறப்பாகவே செய்கிறது!!

எனக்கு ஒரு வலைப்பக்கம் இருக்கிறது, அதை நம்பி ஒரு கோடி, சரி, ஒரு லட்சம், அட, சரி ஒரு ஆயிரம், சரிய்யா, ஒரு பத்து பதினஞ்சு பேரு இருக்காங்க என்பதே எனக்கு மறந்து விட்டது. கழுதை தேய்ந்து கடவுள் துகள் ஆன கதையாய் [அட, இன்னும் டச் விட்டு போலியே..!!] மாதத்திற்கு ஒன்று என்று எழுதி கொண்டிருந்தேன். அது வருடத்துக்கு ஒன்று என்கிற ரேஞ்சில் வந்து நிற்கிறது. இந்த நிமிடம் வரை எதை பற்றி எழுதப் போகிறேன் என்று யோசிக்கவில்லை. பாப்போம்...

நான் என்ன நினைக்கிறேன்னா, இப்போ எல்லாம் வீடியோல பெர்பார்மன்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டோமா, கழுதை இனி பிளாக் எழுதி என்ன ஆக போகுது, "அட யாருப்பா அதை அசிங்கமா கைல, கழுத்துல மாட்டிகிட்டு" என்று கவுண்டமணி சொல்வது போல் என் ஆழ்மனம் முடிவுக்கு வந்து விட்டது போல...ஆனா, இதை நெனச்சி அந்த பத்து பதினஞ்சு பெரும் கவலைப்பட வேணாம். வீடியோவில் நடனம் புரிவோம், "கீ போர்டிலும் நடனம் புரிவோம்" [நன்றி: கருந்தேள் ராஜேஷ்]

ஒரு முக்கியமான விஷயம், நான் மொத்தமாய் பெங்களூர் குடி பெயர்ந்து நேற்றோடு ஒரு வருடம், ஒரு மாசம் ஆகிறது. சில வருடத்துக்கு முன், பெங்களூரில் இருந்து சென்னை வந்தேன். இப்போது மறுபடியும் பெங்களூர். விஷயம் ஒன்றுமில்லை. சும்மா ஒரு மாற்றம் தான்.

நான் பெங்களூர் வந்ததிலிருந்து சென்னையில ஒரே மழையும், வெள்ளமும், புயலுமாய் இருக்கிறது. நம் சென்னையை விட்டு வந்தது ஏதோ அபசகுனம் ஆகிவிட்டது போல என்று நினைத்து சற்று பீற்றிக் கொண்டால், சென்னையில் எழும் தன்னெழுச்சிகள் நல்ல சகுனம் தான் என்று காட்டுகிறது. எப்படியோ நல்லா இருந்தா சரி!

எதற்காக சென்னை குடிபெயர்ந்தேனோ, அதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்த போது, பெங்களூர் வந்துவிட்டேன். என் குறும்படங்களை பற்றி தான் சொல்கிறேன். "நீங்கள் போய் விட்டால், தமிழ் குறும்படங்களின் எதிர்காலம் என்னவாவது?" என்று ஒரு நூறு பேர், இல்லை, ஒரே ஒரு ஆள் மட்டும் கேட்டார். "தமிழை தெலுங்கன் வளர்ப்பது போல் யாராவது அதை வளர்த்து எடுப்பார்கள்" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உண்மை என்னவென்றால், பெங்களூர் வந்து அடுத்த லெவல் போக வேண்டும் என்று தான் என் விருப்பம். சென்னை மாநில லெவல் என்றால் பெங்களூர் தேசிய லெவல். இங்கே தான் ஒருத்தன், ஹிந்தியில் குறும்படம் எடுக்கிறான், ஒருத்தன் ஆங்கிலத்தில் எடுக்கிறான், ஒருத்தன் கன்னடத்தில் எடுக்கிறான். நான் இங்கு வந்து ஒரு ஹிந்தி, ஒரு ஆங்கிலம் மற்றும் ஒரு கன்னட படத்தை முடித்து விட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள். [அதெல்லாம் யூட்யூபில் வராது!] சென்னை என்ன ஒரு ஆறு மணி நேரம் தானே, வந்துட்டு போனால் போகிறது. என்ன நான் சொல்றது? சோ, வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு போல் கர்நாடகமும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பாப்போம்.

அடிக்கடி சந்திக்க முயற்சி பண்றேன், இல்லைனா அடுத்த வருஷம் பாக்கலாம்...

துருப்பிடித்த சாவி ஒன்று கண்டெடுத்தேன்.
இது கடைசியாய் என்று உபயோகப்பட்டிருக்கும்?
இது ஒருவேளை தவறி விழுந்திருக்குமா? - இல்லை
தூக்கி எறியப்பட்டிருக்குமா?
தொலைந்து போயிருக்குமா? - இல்லை
உதவாது போயிருக்குமா?
இந்த நிமிஷம் வரை ஒரு கதவு அடைப்பட்டுக் கிடைக்குமா? - இல்லை
என்றைக்குமாக திறந்தே கிடைக்குமா?
எப்படியோ,
சில சமயங்களில், சாவிகள் பூட்டை மட்டும் திறப்பதில்லை.

கண்ணதாசன் காலம் தொட்டு நா. முத்துக்குமார் வரை கால வரையறை இல்லாமல் சில பாடல்களை தரவிறக்கி கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றும் கண்ணதாசன் பேஸ்தடிக்கிறார். கண்ணதாசன், இளையாராஜா போன்றோர்களின் மூளைகளை எல்லாம் ஆராய வேண்டும். எங்கிருந்து இப்படி எல்லாம் இவர்களுக்கு கொட்டுகிறது என்று புரியவில்லை.

உதாரணத்திற்கு

எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவளை அனுபவிக்க நினைக்கும் ஒரு காமாந்தக்காரன். மது, மாது, சூது என்று அவனுக்கு ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை. அவன் பாடுவது போல் ஒரு பாடல்.

இப்படி ஒரு சூழ்நிலையை கண்ணதாசனிடம் சொன்னதும் அவர் கொடுத்த பல்லவி...

"ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி"

முடிந்தது. இரண்டு வரியில் அந்தக் கதாப்பாத்திரத்தை விவரித்து விட்டார். ஒரு இயக்குனருக்கு இவரிடம் சூழ்நிலையை சொல்லி பாடல் வாங்குவது எத்தனை இலகுவான, இன்பமான நிகழ்வாய்  இருந்திருக்கும்! இந்த இரண்டு வரிக்கு இவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்தால் அது ஒரு தடவையில் முடியக் கூடியதா? வரம் வரம்!!

 கமல் அடிக்கடி சொல்வார். "அவர்கூடவே வளரும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது. அவர் பாடல் எழுதும்போது அருகில் இருக்கும் வாய்ப்பு எனக்கு இருந்திருக்கிறது. கவிதை/பாட்டு எழுதுவது எல்லாம் மிக எளிய விஷயம் மாதிரி என்னை ஏமாற்றி விட்டார்." என்று! அவர் சொல்வது சரி தான், கண்ணதாசன் பாடலை சொல்லும்போது [அவர் பாடல்களை எழுதுவதில்லை; அவர் சொல்லச்  சொல்ல உதவியாளர் ஒருவர் எழுதிக் கொள்வது வழக்கம்! அந்த உதவியாளர்களில் பிரதானமானவர் பஞ்சு அருணாச்சலம்] அருகில் இருப்பவருக்கு அப்படித் தான் தோன்றும். சரளமாய் பேசுவதை போலத் தான் அவர் பாடல் வரிகளை சொல்லி இருக்கிறார். 

ஆனால் அப்படி சொன்ன பாடல் ஒவ்வொன்றும், மெட்டுக்கு சரியாகவும், அந்தப் படத்தின் கதையை/சூழலை சரியாய் விவரித்தும், காலம் கடந்த ஒரு அழகும்/கருத்தும் அதில் ஒருங்கே அமையப்பெற்றதாகவும் இருந்தது, இருக்கிறது.

உதாரணத்துக்கு தங்கப்பதக்கம் என்ற படத்தில் வரும் சோதனை மேல் சோதனை பாடல்:

மனைவி இறந்தும் கொள்ளி போட வராத மகனை நினைத்து, மருமகளிடம் பாடும் பாடல், எத்தனை எளிதான வார்த்தைகளால் அந்த சூழ்நிலையை பாடலில் சொல்கிறார், பாருங்கள்.

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல

இதன் அடுத்த சரணத்தையும் கேட்டுப் பாருங்கள், !!க்ளாஸ்!!

---

இருவர் உள்ளம் படத்தில் வரும் இந்தப் பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். காதல்,  வாழ்வின் ஒரு யதார்த்தமான நிகழ்வு என்பதை எத்தனை அருமையாக விளக்குகிறார்.

நதி எங்கே போகிறது கடலைத் தேடி 
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி

ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
இன்பங்கள் அள்ளி வரும் பெண்மை ஒன்று

--

பழனி படத்தில் வரும் இந்தப் பாடல், வஞ்சிக்கப்பட்ட ஒருவன் தத்துவார்த்தமாய் பாடும் இந்தப் பாடலில் வாழ்வின் பல செய்திகள் அடங்கி இருக்கிறது.

அண்ணன் என்னடா தம்பி என்னடா 
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா 
காசில்லாதவன் குடும்பத்திலே

பெட்டை கோழிக்கு கட்டுச் சேவலை 
கட்டி வைத்தவன் யாரடா 
(3)அவை எட்டு குஞ்சுகள் பெத்தெடுத்ததும் 
சோறு போட்டவன் யாரடா
சோறு போட்டவன் யாரடா

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் 
வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே 
மனதினால் வந்த நோயடா
மனதினால் வந்த நோயடா

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் 
வந்து சேர்கிறார் பாரடா 
(6)கை வரண்ட வீட்டிலே உடைந்த பானையை 
மதித்து வந்தவர் யாரடா
மதித்து வந்தவர் யாரடா

பணத்தின் மீது தான் பக்தி என்ற பின் 
பந்த பாசமே ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் 
அண்ணன் தம்பிகள் தானடா
அண்ணன் தம்பிகள் தானடா

--

எங்க மாமா படத்தில் வரும்  இந்த தாலாட்டுப் பாடல். அனாதையான நாயகனின் ஆதரவில் வளரும் அனாதைக் குழந்தைகள்.

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை?

இந்தப் பாட்டில் அனைத்து வரிகளும் அற்புதமானவை. அதில் குறிப்பாக,

பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வானவன்

என்ற வரிகளை கேட்கும் போது எனக்கு புல்லரிக்கிறது :)

இப்படி எத்தனையோ பாடல்கள்...எல்லாத்தையும் கேட்டுட்டு அடிக்கடி வந்து சென்ட்டிமெண்ட்டை புழியிறேன்... 




"திரும்பி வந்துட்டான்னு சொல்லு...ஏழு மாசத்துக்கு முன்னாடி எப்படி போனானோ, அதே மாதிரி பிளாக் எழுத திரும்பி வந்துட்டான்னு சொல்லு!"

ரஜினியின் அடுத்த படம் ரஞ்சீத்துடன் என்றதும் மெய் சிலிர்த்தேன். ஆஹா, தமிழ் சினிமாவுக்கு நல்லகாலம் வந்துருச்சு போல இருக்கே என்று! டைட்டிலுக்கு, போஸ்ட்டருக்கு என்று கபாலியை பற்றி ஒவ்வொரு செய்திக்கும் தமிழ்நாடே ஆர்ப்பரித்தது..."தளபதி"க்கு பிறகு நான் ரஜினியை அணு அணுவாக ரசித்தது இந்தப் படத்தில் தான். அந்த வெள்ளை தாடி, கோர்ட் சூட்டுடன் மனிதர் அள்ளுகிறார். சிவாஜியை விட, இந்தப் படத்தில் ரஜினியின் உடைகள் ஏ ஒன்! ஏன் சொல்கிறேன் என்றால், படங்களில் பொறுத்தவரை, ரஜினி ஆரம்ப காலங்களில் இருந்தே நம்மை போல் ஒழுங்காய் ஒரு சட்டையை போட மாட்டார். ஒன்று சட்டை பொத்தான்களை போடமாட்டார், அல்லது காலர் தூக்கி வீட்டுக் கொள்வார், சட்டையை டக் இந்த செய்யாமல் அதன் மேல் பெல்ட் போட்டுக் கொள்வார். கோர்ட் போட்டால் குறித்த  கையை போல் மேலே தூக்கி வீட்டுக் கொள்வார். ஏதோ ஒரு கோக்கு மாக்கு இருக்கும். ஒரு பழைய படத்தில் இரண்டு பெல்ட் போட்டிருந்ததை பார்த்தேன்! இந்தப் படத்தில் கூட தலைவர் கோர்ட் சூட் அணிந்து கொண்டு காலரை தூக்கி வீட்டுக் கொண்டு அவர் வந்ததையும் ரஞ்சித் அந்த காலரை மடிக்க பட்ட பாட்டையும் அவரே சொல்லிய விதத்தை மிகவும் ரசித்தேன்.

இது உண்மையில் ஒரு புது அனுபவம் தான். ரஜினி தன்  கெரியரை ஆரம்பிக்கும்போது ரஞ்சித் பிறந்திருப்பாரா என்பதே சந்தேகம். அப்படி ஒருவருக்கு ரஜினி தன் அடுத்த படத்தை கொடுக்கிறார் என்றால் ரஜினிக்கும், ரஞ்சித்துக்கு எவ்வளவு பிரஷர் இருந்திருக்கும். கபாலி படக் குழுவினரின் பேட்டியை பார்த்தால் உங்களுக்குத் புரிந்திருக்கும். ஏதோ கடவுளையே நேரில் கண்டவர்களை போல் ஒவ்வொருவரும் அவரிடம் பணியாற்றியதை பற்றி சொன்னார்கள். படம் தான் எத்தனை பரபரப்பு, எதிர்பார்ப்பு. இதற்கெல்லாம் கபாலி ஈடு கொடுத்ததா என்றால் "இல்லை" என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.

ரஜினி படத்தின் வழக்கமான பார்முலா கதை தான் இதிலும். நல்லவன், கெட்டவன், அவன் ஒரு முறை, இவன் ஒரு முறை என்று மாறி மாறி ஜெயித்து கடைசியில் நல்லவன் வெற்றி கொடி நாட்ட படம் முடியும். ஆனால் ரஞ்சித் மாஸோடு மட்டும் போகாமல் கொஞ்சம் எமோஷனையும் கையில் எடுத்திருக்கிறார். ரஜினியை நடிக்க வைத்தே தீருவேன் என்று அவர் கங்கணம் கட்டி இறங்கி இருக்கிறார். அதில் அவர் ஜெயித்தாரா என்றால் மறுபடியும் "இல்லை" என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

ரஜினியை "நடிக்க" வைப்பதில் அவர் காட்டிய விருப்பம், தான் எழுதிய கதையில் ரஜினி என்ற மாஸ் ஹீரோவை புகுத்திய லாவகம், பலவித கதாப்பாத்திரங்கள் என்று மெனக்கெடல் எல்லாவற்றையும் பாராட்டினாலும், கதையிலும், கபாலி உட்பட, மற்ற எல்லா கதாப்பாத்திரங்களிலும், வசனங்களிலும் எந்த ஆழமும் இல்லாமல் இருப்பதால் படம் அம்போ என்று ஆகிவிடுகிறது.

உதாரணத்துக்கு இந்த வசனம்...இது ஒன்னு தான் கொஞ்சம் தேறுச்சு !

கபாலி:நல்லா பறக்க வேண்டியதை கொண்டு வந்து இப்படி கூண்டுல அடைச்சு வச்சுருக்கானே...கூண்டுல அடைபட்டு கெடக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
வெளிய விட்டா செத்து போயிடும்ணே, மத்த பறவைங்க இதை கொத்திபோட்டுரும்!
கபாலி:பறக்கிறது பறவையோட இயல்பு. அதை பறக்க விடு; வாழ்வா சாவான்னு அது முடிவு பண்ணட்டும். உன்னோட கருணை அதோட சாவைவிட கொடூரமானது!

ஒரு சில தோற்றுப் போன காதல்களை வைத்தும், ஒரே ஒரு சுவற்றை மட்டும் வைத்தும் கதை சொன்ன ரஞ்சித்தா இப்படி என்று தான் தோன்றுகிறது.  ட்ரைலரில் மட்டும் மாஸை காட்டிவிட்டு படம் பொறி பறக்க போகுது என்று எதிர்பார்த்து சென்ற ரசிகனை படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் பொடனியில் அடித்து உட்கார வைத்து விடுகிறார் ரஞ்சித். சரி ரஜினி ரசிகனுக்குத் தான் ஒன்றுமில்லை, ஒரு நல்ல சினிமா ரசிகனுக்கு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தால், அதிலும் ஏமாற்றமே. இந்தப் படத்தில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது, மூன்று அருமையான பெண் கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள் என்று கலர் கலராய் ரீல் விட்டார்கள். எதுவுமே மனதை ஈர்க்கவில்லை.

ஜான் விஜய் கபாலியின் ஆஸ்தான தொண்டன் என்றால், அவரின் காதல் வாழ்க்கையை அருகில் இருந்து கண்டவர் என்றால், அவர் சிறையில் இருக்கும்போது ஏன் அவர் ஒரு முறை கூட கபாலியின் மனைவியையோ, மகளையோ தேடவேயில்லை?

ஜீவா [தினேஷ்] "43" கேங்கில் என்ன செய்து கொண்டிருந்தான்? திடீரென்று ரஜினியின் அடிமையாக மாறுவது எதனால்?

ஆயிரம் பிரச்சனை இருக்கும், நமக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு, டோனி லீ, வீரசேகரன் வளரவிடக்கூடாது என்று பயங்கர வசனம் எல்லாம் பேசிவிட்டு பொண்டாட்டி புள்ளையை தேடத் தொடங்கிவிடுகிறாரே மனிதர்?!

அவர் நடத்தும் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் இவரின் கதையை கேட்டு "நானும் வர்றேன், ஒருத்தனையும் விடக் கூடாது, போட்டுத் தள்ளுவோம்" என்று ஆவேசம் கொள்பவர்களை இவர் ஏன்  தடுக்கவே இல்லை? கடைசியில் அவர்களையும் ஏன் ஆயுதம் ஏந்த வைத்தார்?

கடைசியில், தங்கள் பிரச்சனை எல்லாம் சொல்லும் மாணவர்களிடம், "என்னிடம் ஏன் இதெல்லாம் சொல்றீங்க?" என்று சொல்பவன் என்ன மாதிரியான தலைவன்?

ரஜினியை தாண்டி கதையை யோசித்தால் கேள்விகளே மிஞ்சுகிறது.

முதல் பத்து நிமிடத்தில் கபாலி கதாப்பாத்திரத்தை அவர் நிலை நிறுத்திய விதம் பார்த்ததும் பாட்ஷா படத்தின் குழாயை பிய்த்து அடிக்கும் காட்சிக்கான தருணத்தை இந்தப் படத்தில் எல்லோரும் எதிர்நோக்கி இருக்க, கடைசி வரை அவர் குழாயை பிய்த்து எறியவே இல்லை என்பதே சோகம். சரி ரஞ்சித் சொன்னது போல் முள்ளும் மலரும் காளியாவது காணக்கிடைக்கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ரஞ்ஜீத் இப்படி ஏமாத்திட்டீங்களே!

இப்போது எனக்கு இருக்கும் ஒரே பயம், இந்தப் படத்தில் நிறை குறைகள் இருந்தாலும், இதை நாம் ஆதரிக்கவில்லை என்றால் ரஜினி மறுபடியும் "பொண்ணுன்னா இப்படித் தான் இருக்கணும்" என்று பன்ச் வசங்கள் பேசிவிட்டு, நாற்பது பேரை பறந்து பறந்து அடித்து விட்டு, தன் மகள்களை விட குறைந்த வயதுடைய பெண்ணுடன் மரத்தை சுற்றி டூயட் பாட ஆரம்பித்து விடுவாரே என்று தான்!

அதை மட்டும் மனசுல வச்சுக்குங்க...

ஆ! கடைசியா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.

மகிழ்ச்சி !

இதையே தான் இங்கேயும் சொல்லி இருக்கோம். ஒரு புது முயற்சி. உங்கள் மேலான கருத்தை எதிர்நோக்கி..

வெற்றுத்தாள்
ஒரு சொட்டு மை
வேறொரு தாள்

-0-

என் கூரையின் துளை வழியே
ஒரு சிறிய வானம்

-0-

மரவட்டை ஒன்று
மெதுவாய் நடக்கிறது

-0-

மின்சாரம் அணைந்ததும்
மழை சத்தம்

-0-


படத்தை பார்த்து விட்டு இதை படியுங்கள். கொஞ்சமாவது சுவாரஸ்யம் இருக்கும்!


கபாலியின் ஃபஸ்ட் லுக் ; தூங்காவனத்தின் முதல் டிரையிலர்; இதற்கு இடையில் என் ஏழாவது குறும்படம் "சருகு". எங்களுக்கு தைரியம் தான்! ஆனால் அந்த ஜாம்பவான்களோடு போட்டி போடும் விதமாகத் தான் எங்கள் படத்தின் டைட்டில் அமைந்திருக்கிறது. வெறும் "சருகு!"

இதை ஷார்ட் ஃபிலிம் என்று சொல்ல முடியாது; மைக்ரோ ஃபிலிம் என்று தான் சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் பத்து நிமிடத்துக்கு மேல் நீளும் குறும்படத்தை யாரும் விரும்புவதில்லை. யாருக்கும் அவ்வளவு நேரமில்லை. ஒரு நிமிடத்துக்குள் அந்தப் படம் வசீகரிக்கவில்லை என்றால் நெக்ஸ்ட் வீடியோ! "சருகு" வெறும் மூன்று நிமிடம் தான். ஒரு நிமிடத்துக்குள் அது உங்களை உள்ளிழுத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன். இது Friends2Support.org என்ற வலைத்தளத்தில் ரத்ததான விழிப்புணர்வுக்காக  நடந்த குறும்படப் போட்டிக்காக எடுத்த படம். போட்டியின் விதிமுறையே குறும்படம் மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குள், ஆஸ்பத்திரி இல்லாமல், ஊசி குத்தாமல், ரத்தத்தை காட்டாமல் அதாவது எந்த வித செலவுமில்லாமல் இப்படி ஒரு சீரியசான விழிப்புணர்வு விஷயத்தை அழுத்தமாய் எப்படி சொல்லலாம் என்று யோசித்து முயற்சி செய்தோம். நாங்கள் எதிர்பார்த்த மாதிரி"சருகு" போட்டியில் வெல்லவில்லை.

என்னை பொருத்தவரை வெற்றி முதல் மூன்று இடங்களில் வருவதல்ல. போட்டியில் பங்கு பெறுவதே! [பார்றா!] அதில் இந்த முறை நாங்கள் ஜெயித்து விட்டோம். அதற்கு ஒரு படி மேலே போய், முதல் சுற்றில் வந்த எண்ணூறு படங்களில் [எட்டு நாடுகள்; இருபதுக்கும் மேற்பட்ட மொழிகள்] முதல் எண்பது படங்களில் "சருகு" இடம்பெற்றது "மகிழ்ச்சி!" ["கபாலி" ரஞ்சித்தின் பழக்கம் ஒட்டிக் கொண்டது!]

பங்கு பெற்ற அனைத்து வெற்றியாளர்களுக்கும், வென்ற வெற்றியாளர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். இனி தங்களின்மேன்மையான கருத்துக்களை எதிர்நோக்கி...

நேற்று இரவு சென்னைக்கு ரயில் ஏற மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தேன். ஆட்டோவில் இருந்து இறங்கியதும் ரயில் நிலையத்தின் வாசலை திரும்பி பார்த்தால் அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது. அத்தனை சுத்தம். ஒரு தூசு, துரும்பு இல்லை. "இந்தியாவில் ஒரு ரயில் நிலையத்தின் வாயில் இத்தனை சுத்தமாய் எங்காவது இருக்குமா?" என்று எண்ணி எண்ணி வியந்தேன்.

ரயில் நிலையத்தின் முன்னால் உள்ள அந்த குட்டி பிள்ளையார் கோயிலை கடந்ததும் வழக்கம் போல அந்த பெரிய மைதானம் போன்ற இடத்தில் பலர் படுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? ஏன் சரியான சமயத்தில் ரயில் நிலையத்துக்கு வராமல் இங்கு வந்து படுக்கிறார்கள்? என்று ஒரு முறையாவது விசாரிக்க வேண்டும். ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் புதிதாய் இரண்டு பெரிய "எல் இ டி" போர்டுகளை மாட்டி எந்த ரயில் எப்போது எந்த பிளாட்பாரத்தில் வருகிறது என்று காட்டிக் கொண்டிருந்தார்கள். உள்ளே சென்று முதல் பிளாட்பாரத்துக்குள் நுழைந்தேன். இரண்டு சஃவாரி போட்ட ரயில்வே ஊழியர்கள் குழம்பி நிற்பவர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தார்கள். ரயில் பிளாட்பாரத்துக்குள் வந்ததும் எந்த பெட்டி எங்கு வரும் என்று டிஜிட்டலில் அழகாய் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பிளாட்பாரம் மிகவும் சுத்தமாய் இருந்தது. ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள், அதில் சரியாய் போடப்பட்ட கருப்பு குப்பை கவர் என்று என்னை ஒவ்வொரு நொடியும் அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

மதுரை போன்ற ஒரு நகரில் இந்த சுத்தம் சாத்தியம் என்றால் ஏன் மற்ற நகரங்களில், ஏன் இந்தியா முழுவதும் சாத்தியம் இல்லை என்ற கேள்வி மறுபடி மறுபடி என்னுள் எழுந்து கொண்டிருந்தது. அப்போது குப்பை பொறுக்கும் ஒரு பெண் தொழிலாளி ரயில்வே பாலத்தில் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எழுந்து அவரிடம் சென்றேன்.

மிகுந்த நன்றி உணர்ச்சியுடன், "அக்கா வணக்கம், நான் சென்னையில இருந்து வர்றேன். பல ரயில்வே ஸ்டேஷன் போயிருக்கேன். மதுரை ஸ்டேஷன் தான் ரொம்ப சுத்தமா இருக்கு. ஒரு குப்பை இல்லை. ரொம்ப நல்லா வேலை பாக்குறீங்க..." என்றேன்.

அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு, ஒரு ரியாக்ஷனும் இல்லாமல், "அப்படியா நல்லா இருக்கா...சரி சரி!" என்று குப்பையை பொறுக்கத் தலைப்பாட்டார்!

நான்: ஞே!

அவருடைய ரியாக்ஷனே இல்லாத ரியாக்ஷனை பார்த்து எனக்கு என்ன தோணுச்சுன்னா...

ஒன்று, "உங்களுக்கு என்ன பாராட்டிட்டு போயிடுவீங்க, பெண்டு கழல்றது எங்களுக்கு தானே தெரியும்!" என்று வேலை அயர்ச்சியில் அப்படி நடந்திருக்கலாம்.
ரெண்டு, "இப்படி நாளைக்கு எத்தனை பேரு பாராட்டை தான் வாங்குறது, கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு என்று செலிப்ரிட்டி லெவலுக்கு ஃபீல் செய்து நம்ம வேலைய பாப்போம்." என்று நினைத்து அப்படி சொல்லி இருக்கலாம். [இதுக்கு அதிக சான்ஸ் இல்லை என்றே தோன்றுகிறது!]
மூன்று, "இப்படி எவனுமே இது வரை பாரட்டினதே இல்லையே, சனியன் குடிச்சுட்டு வந்து உளறுது போல!" என்று நினைத்திருக்கலாம்!
நான்கு, "தப்பா இருந்தா தப்பா இருக்குதுன்னு திட்டலாம், கம்ப்ளயின்ட் பண்ணலாம்! அது தான் சகஜம். எவனாவது நல்லா இருக்குறதை நல்லா இருக்குன்னு சொல்லுவானா, ஒரு வேளை, லூசா இருப்பானோ?" என்று நினைத்திருக்கலாம்.
ஐந்து, "மாசக் கடைசி மனுஷனை கொல்லுது, பெருசா பாராட்ட வந்துட்டான்! உன் பாராட்டை வச்சிட்டு பாமாயில் வாங்க முடியுமா?" என்று நினைத்திருக்கலாம்.

உங்களுக்கு ஏதாவது தோணுதா?
முப்பது வயதில், என்றும் போல் உதித்த ஒரு சூரிய பொழுதில்

அவனுக்கு ஒரு வித மயக்கம் வருகிறது

மருத்துவம், வாழும் ஒவ்வொரு நாளும் இனி வரமே என்று நாள் குறிக்கிறது

ஜோசியம், மறந்து போன, பொறுப்பேற்றுக் கொள்ள முடியா

முன் ஜென்ம பாவக் கணக்குகளை கணக்கெடுக்கிறது

மனிதம், அவன் இடத்தில் தன்னை இறுத்தி அவனுக்கான ஆறுதல் தேடுகிறது

பாசம், என் ஆயுள் உன்னை சேரும் என்று அவனை உச்சி முகர்கிறது

ஆன்மிகம், கடவுளின் மேல் பாரத்தை போட்டு திருநீறு பூசுகிறது

தத்துவம், சில விசாரங்களை முன் வைத்து அதன் வயிற்றை கழுவிக் கொள்கிறது

எனக்கு

வாழ்வின் அ(ன)ர்த்தம் எப்போதும் ஒரு கேள்வியில் தொடர்கிறது...
சென்னையில் பறக்கும் ரயில் பயணங்கள் அலாதியானது.நேற்று காலை ஒரு வேலையாய் பசுமை வழிச் சாலை வரை செல்ல வேண்டி இருந்தது. காலை ஒன்பதரை, பத்து மணிக்குள் வேளச்சேரி ரயில்வே நிலையம் சென்று வண்டியை நிறுத்தினேன். "பார்க்கிங் காண்ட்ராக்ட் முடிந்து விட்டதால் டோக்கன் போட யாரும் இல்லை. வண்டி தொலைந்து போனால் எங்கள் பொறுப்பு கிடையாது" என்று போர்டு மட்டும் இருந்தது. "டோக்கன் போட்டால் இவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்வார்களா?" என்ற கேள்வியுடன் வண்டியை நிறுத்தி விட்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.

திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு டிக்கட் வாங்க கூட்டத்தை கேட்க வேண்டுமா? மூன்று வரிசையில் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது, அறுபது பேர் நின்று கொண்டிருந்தார்கள். சென்னையில் இது தான் கம்மியான கூட்டம்! வேறு வழி என்று நொந்து கூட்டம் குறைவுள்ள வரிசையை தேர்ந்தெடுத்து நானும் நிற்க போனேன். அப்போது அசாமி மாதிரி தோற்றத்தில் இருந்த ஒரு பையன் ["சிங்கி" என்று சொல்ல மாட்டேன்!] கையில் ஒரு சீட்டுடன் "வேண்டுமா? எனக்கு சில்லறை இல்லை என்று இரண்டு கொடுத்து விட்டார்கள்" என்று என்னிடம் ஒரு சீட்டை கொடுத்தான். "என்னடா இது? நான் காண்பது கனவா அல்லது நினைவா? எனக்கு காலங்காத்தால இப்படி ஒரு அதிர்ஷ்டமா? நான் இன்று யார் முகத்தில் முழித்தேன்" என்று ஆச்சர்யம் தீர டிக்கட்டை கையில் வாங்கி நன்றி சொல்லி, டிக்கட் காசு ஐந்து ரூபாயை கொடுத்தேன், "பரவாயில்லை!" என்றார். "அட புடிங்க பாஸ்" என்று நான் எப்படியோ அவர் கையில் திணித்து விட்டேன். சொல்லப் போனால், வரிசையில் நின்று டிக்கட் வாங்கி கொடுத்ததற்கு ஐந்து ரூபாய் சேர்த்து தான் தர வேண்டும்!

"எங்கே வேலை பார்க்கிறீர்கள்?" என்றான். நான் "ஐ டி" என்றேன். "ஐ டி சி சோழா?" என்றான். "கம்ப்யுட்டர்" என்று பேச்சை நிறுத்தி திசை மாற்றிக் கொண்டேன். நான் சென்ற காரியமும் சுபமாகவே முடிந்தது. என் வாழ்வின் மிக அதிர்ஷ்டமான நாள் என்று நினைத்துக் சந்தோஷப்பட்டுக் கொண்டேன்.

நிற்க

நீங்கள் தமிழ் சினிமா நிறைய பார்ப்பவராக இருந்தால் இந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட் வரப் போகிறது என்று இந்நேரம் ஊகித்திருப்பீர்கள்! நான் நினைத்தது போல இந்த நாள் அவ்வளவு அதிர்ஷ்டமாய் இல்லை என்று நான் உணர்ந்த கதை தான் இது என்று நினைத்திருப்பீர்கள். அது மிச்ச கதையை படித்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

வேலை முடிந்து மறுபடியும் வேளச்சேரிக்கு ரயிலை பிடித்தேன். மணி சுமார் ஒரு 11:15 இருக்கும். நான் என் முகநூலில் சொன்னது போல், ஆள் அரவமற்ற பறக்கும் ரயில் நிலையங்களை கடந்து ரயில் பயணித்துக் கொண்டிருந்தது. ரயிலிலும் அதிகம் கூட்டமில்லை. என்காதுகளில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு ராஜாவை என் காதுக்குள் பாய்ச்சினேன். "வருது வருது இளங்காத்து...இந்த வசந்த மலரின் இடம் பார்த்து..."

அந்த பாட்டில், குஷ்பு அருகில் வரும் சத்யராஜை போல் ஒரு போலீஸ் என் அருகில் வந்தார். என்னையே பார்த்தார். "டிக்கட் எடுங்க!" என்றார்! "என்னடா, நம்ம இவ்வளவு டீசண்டா இருக்கோம், நம்மகிட்ட டிக்கட் எல்லாம் கேக்குறாரே?" என்று ஜெர்க்கானேன். ஹெட்ஃபோனை கழட்டாமலேயே பையில் கையை விட்டு டிக்கட் எடுத்தேன். அது போகும்போது வாங்கிய டிக்கட். மறுபடியும் தட்டு, தடுமாறி, பையை துலாவி வரும்போது வாங்கிய டிக்கட்டை எடுத்தேன். காதில் இருந்து ஹெட்ஃபோனையும்! வாங்கி சரி பார்த்தார். வண்டி பெருங்குடியில் நின்றது. இறங்கச் சொன்னார். அடுத்த பெட்டியில் ஏற்றினார். "உங்களை ஏன் புடிச்சுருக்கேன்னு தெரியுதா? [ஒ, புடிச்சிட்டாரா!] இதை படிங்க!" என்று ரயிலில் வாசலில் எழுதி இருந்ததை காட்டினார். "ரயிலின் கூரையில், வாசலில் பயணம் செய்யக் கூடாது, அது தண்டனைக்குரிய குற்றம்" என்பது போல் ஏதோ எழுதி இருந்தது. அவர் மேலும், "வண்டி காலியா இருக்கு, உக்காந்துட்டு வரலாம்ல? காதுல ஹெட்ஃபோன் வேற மாட்டி இருக்கீங்க, யாராவது கூப்பிட்டா கூட கேக்காது! தப்பு தானே?" என்றார். அவர் பாதிரியாராய் இருந்தால், அந்த இடத்திலேயே பாவ மன்னிப்பு கேட்டிருப்பேன். அவ்வளவு நல்லவன் நான்! என்னிடம் போய்  தப்பு தானே என்று கேட்டால்? நான் "தப்பு தான் சார்!" என்றேன். "வேளச்சேரி தானே போறீங்க, அங்கே எஸ் ஐ இருப்பாரு, அவர் சொல்ற மாதிரி செய்யுங்க" என்று என் டிக்கட்டையும், லைசன்சையும் வாங்கிக் கொண்டார்.

மைண்ட் வாய்ஸ்: "பொழுது போயிருச்சே, ஒண்ணுமே நடக்கலையே நெனச்சேன்! நடந்துருச்சு; நடத்திட்டாய்ங்க!"

ரயில்வே ஸ்டேஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்றதும்"ஃ புட் போர்ட் கேஸா?" என்று பெயர் முகவரி கேட்டு கேஸ் எழுதினார்கள். என்னை போல பிடிபட்ட மற்ற மூன்று பேர் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். ஒருவர் பழ வியாபாரி, ஒருவர் கால் டாக்சி டிரைவர், மற்றொருவர் பதினேழு வயது பையன். நான் ரொம்ப கேஷுவலாக இருந்தேன். இன்று ஒரு புது அனுபவம், ஒரு பதிவு எழுத உதவும் என்று நினைத்துக் கொண்டேன்.  கான்ஸ்டபிள் ஒருவர், "எல்லாரும் சினிமா பாப்பீங்களா?" என்று கேட்டார். நான் உடனே, "நான் நல்லா பாப்பேன் சார்" என்றேன். அவர் மற்றவர்களிடம் , "இப்போ ஒரு படம் காட்றேன் பாருங்கடா, பயப்பட மாட்டீங்களே?" என்று ரயிலில் அடிபட்டு இரண்டு கால்களும் துண்டான ஒருவரின் வீடியோவை எங்களுக்கு காட்டினார். பார்க்க முடியவில்லை! ஒரு சிறு அஜாக்கிரதையினால் ஒரு நொடியில் வாழ்க்கை எப்படி ஆகி விடுகிறது.  "பாருங்க, இதுக்கு தான் அடிச்சுக்குறோம், இதை படம்எடுக்கணும்னு எனக்கு தலை விதியா? உங்க நன்மைக்கு தானே சொல்றோம்!" என்றார். பிறகு இத்தகைய பல்வேறு விபத்துக்களின் பேப்பர் கட்டிங்குகளை காட்டினார்கள். நிறைய அறிவுரை கூறினார்கள்.

பிறகு கான்ஸ்டபிள்,

"கேஸ் எழுதுவோம், கோர்ட்ல போயி ஃபைன் கட்டுங்க" என்றார்.
சார், வார்ன் பண்ணி விடக்கூடாதா சார்?" என்றேன்.
"அப்படி எல்லாம் விட முடியாதுங்க. 156 செக்ஷன் படி 500 ரூபாய் அபராதம்!" என்றார்.
"சார், ஐநூறு ரொம்ப ஜாஸ்தி சார்" என்றேன்.
"உங்களால எவ்வளவு தர முடியும்?"
சரி தான், வழக்கம் போல மாட்டேருக்கு வந்து விட்டார்கள் என்று நினைத்தேன்.
என்கிட்டே அவ்வளவு இருக்காது சார், என்று என் பயில் கையை விட்டேன். [லஞ்சம் கொடுக்க அல்ல!]
நீங்க பணத்தை இங்கே எடுக்காதீங்க, கோர்ட்ல தான் பணம் கட்டணும்! டூ வீலர் நோ பார்க்கிங் கேஸ் போட்டுறலாமா? அதுக்கு இருநூறு ரூபா ஃபைன், அதுவும் உங்க நடத்தையை பாத்து தான்! எங்களுக்கு சல்லிக் காசு வேணாம். என்ன அரசாங்கத்துக்கு ஒரு முன்னூறு ரூபா நஷ்டம். அதனால பரவாயில்லை. நாங்க இதை அவார்னஸுக்கு தான் செய்றோம். உங்களுக்கு ஓகே வா? என்று கேட்டார்.
நான் கையெடுத்து கும்பிட்டு "ஓகே சார்" என்றேன்.
நீங்க போயிட்டு ஒரு ஒன்னரை மணிக்கு இங்கே வந்துருங்க, ஆபிஸ் எல்லாம் போக முடியாது, லீவு சொல்லிடுங்க, இங்கே இருந்து ரெண்டு மணிக்கு எக்மோருக்கு உங்களை இவர் கூட்டி போவார். இவர் எல்லாம் பாத்துப்பாரு என்று ஒரு கான்ஸ்டபிளை கை காட்டினார்கள்!

நான் வீட்டுக்கு போயி, சாப்பிட்டு விட்டு திரும்ப வந்தேன். கூட இருந்தவர்கள் லஞ்சம்கொடுத்து போயிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அப்படியே அங்கேயே இருந்தார்கள். நான் போனதும், கான்ஸ்டபிள் 
பைக்கில வந்தீங்களா, பைக்கை எங்கே விட்ருக்கீங்க?" என்று கேட்டார்.
டோ ஏரியாவில நிறுத்தலா சார், பாலத்துக்கு கீழே விட்டுருக்கேன்! என்றேன் பணிவாய். அவர் என் கூட வந்து அவர்கள் வண்டி வைக்கும் இடத்தை காட்டி, "பிரதீப் உங்களுக்கு ஸ்பெஷல் பெர்மிஷன், உங்க வண்டிய இங்கே விடுங்க. போகும்போது எடுத்துட்டு போலாம்" என்று கொஞ்ச தூரம் வந்து வழி காட்டி விட்டு போனார். எனக்கு போலீசிடம் சிக்கி இருக்கிறோம் என்ற ஒரு பதட்டமே இல்லாமல் போய் விட்டது. அங்கு இருந்த அத்தனை பேரும் எங்கள் எல்லோரையும் அவ்வளவு  அன்பாய் மரியாதையாய் நடத்தினார்கள்.

என்னை ரயிலில் பிடித்தவருக்கு டியூட்டி முடிந்து விட்டது போலும்; அவர் நார்மல் உடையில் இருந்தார்.

என்ன சார், எரிச்சலா இருக்கா, என்ன சார் பண்றது? உங்களை பாத்தா பாவமா தான் இருக்கு. எத்தனை ப்ளான் வச்சுருந்திருப்பீங்க! எத்தனை பேரு தொங்கிட்டு போறான், நம்மளை மட்டும் புடிக்கிறாங்களே ன்னு நீங்க நெனைக்கலாம். அத்தனை போரையும் புடிக்க அத்தனை போலீஸ் இல்லையே! இந்த காரியத்தை பண்ணும்போது நாங்களும் பாவம் பாக்குறதெல்லாம் விட்டுட்டு தான் பண்றோம். எங்க பொழப்பு அப்படி. ரயில்ல இந்த பள்ளிகூட பசங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியாது! நம்மளை கோமாளி ஆக்கிடுவானுங்க! ஐநூறு ரூபா கூட இப்போ யாருக்கும் பெருசுல்ல, ஆனா இந்த ஒரு நாள் உங்களுக்கு வீணாகுது இல்ல? அது தான் இந்த காலத்துல பெருசு! மனசுல ஒன்னும் வச்சுக்காதீங்க, இதுவும் ஒரு அனுபவம்னு நெனச்சுக்குங்க. நான் வர்றேன் என்று சொல்லி கை குலுக்கி விடை பெற்றார்! பாவம், போலீஸ் தானே!

சிறிது நேரத்தில் ஒரு கான்ஸ்டபிளுடன் நாங்கள் மூவரும் கோர்டுக்கு புறப்பட்டோம். வேளச்சேரியில் இருந்து சென்னை போர்ட், அங்கிருந்து ட்ராக் மாறி, எக்மோர். "டிக்கட் எடுக்கணுமா சார்?" என்றேன்! "நான் வர்றேன்ல, தேவை இல்லை, வாங்க" என்று தயாராய் நின்று கொண்டிருந்த ரயிலில் முதல் வகுப்பில் எங்களை ஏற்றினார். என்ன ஒரு ராஜ மரியாதை :)

வழி நெடுக எங்களுடன் பல காலம் பழகிய நண்பனை போல அவர் வேலைக்கு சேர்ந்தது, பார்த்த சங்கடங்கள், அவருடைய அனுபவங்கள் என்று பேசிக் கொண்டே வந்தார். ஒவ்வொரு பேச்சையும் ஆரம்பிக்கும்போது, "இல்லை தல" என்று அவர் என்னை அட்ரஸ் செய்தது வேடிக்கையாய் இருந்தது. ரயிலில்அடிபட்டு ஒருவன் கிடந்தால், ரயில்வே போலீஸ் அவனை தூக்கக் கூடாதாம்! ஸ்டேட் போலீஸ் வரும் வரை காத்திருக்க வேண்டுமாம். அவர்கள் நூறடி தூரத்தில் ஆஸ்பத்திரி இருந்தாலும், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருப்பார்களாம்! இப்படி ஒரு ஃபார்மாலிட்டி. அவர்களை பொறுத்த வரை, ஒருவன் ரயிலில் விழுந்து விட்டால் அவன் பிணம் தான்! அத்தனை கால தாமதத்துக்கும் மீறி அவன் பிழைத்தால் அது அவன் அதிர்ஷ்டம். வேலைக்கு சேர்ந்த புதிதில் ஒருவனை தூக்க முயன்று இவர் தன் மேலதிகாரியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை சொன்னார். "என்ன கொடுமை சார், இத்தனை போலீஸ், பந்தோபஸ்து, ஒரு உயிர் போறதை பாத்துட்டு சும்மா தான் நிக்கணும். நாளைக்கு நானே விழுந்து கெடந்தாலும் இதே நிலை தான்!" அப்போ நான் ஏன் சார், ரயில்ல இருந்து குதிச்சி ஓடி ஒருத்தனை புடிக்கணும்? போனா போறான்னு நான் விட்ருவேன் சார், எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என் குடும்பத்தை யாரு பாப்பா? என்று புலம்பினார். எனக்கு இதை கேட்க கேட்க நெஞ்சை அடைத்தது! ஒரு உயிரை காப்பதை விட என்ன "டேஷ்" பார்மாலிட்டி வேண்டி கிடக்கிறது?! ச்சே!

அவர் பேச பேச மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் நரேன் போலீஸ் ஆனவுடன் பார்க்கும் சம்பவங்கள் தான் என் நினைவுக்கு வந்தபடி இருந்தது. போலீஸ் பொழப்பு என்ன ஒரு கொடுமையான பொழப்பு! இதோ இப்போது டாஸ்மாக்கில் பந்தோபஸ்த்துக்கு நிற்கிறார்கள். அரசாங்க சொத்தை காப்பதற்காக அரசாங்கம் கை காட்டிய இடத்தில் அப்படி நிற்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு வேறு வழி  இல்லை.ஆனால், நாம் குடிமகன்களுக்கே பாதுகாப்பாய் நிற்பதாய் சொல்லி அவர்களை கலாய்க்கிறோம். நிதானமாய் இருக்கும்போதே,  மக்கள் போலீசை கோமாளியாய் தான் பார்க்கிறார்கள். குடித்துக் கொண்டிருப்பவன் எப்படி பார்ப்பான்? என்னவெல்லாம் கேலி பேசுவான்? இவர்களாலும் ஒன்றும் பண்ண முடியாது! நினைத்தாலே பரிதாபமாய் இருக்கிறது இவர்கள் பொழப்பு!

மூன்று மணி அளவில் எக்மோர் போய் சேர்ந்தோம். எங்களை மாதிரி வெவ்வேறு ஸ்டேஷன்களில் பிடிபட்டவர்கள் எல்லோரையும் சேர்த்தால் அங்கே கிட்டத்தட்ட ஒரு நூறு பேர் இருப்போம். எக்மோர் ஸ்டேஷன், மதியம் மூன்று மணி, என்ஜின்களின் ஓயாத இரைச்சல்களின் நடுவில், கூட்டம் அம்மும் அந்த பிளாட்பாரத்தில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கு நின்ற அத்தனை பேரும், கையில் கத்தியை கொடுத்தால் அருகில் இருப்பவனை குத்தி கொலை செய்து விடுவார்கள் என்பது போல் கொலை வெறியுடன் இருந்தார்கள். நல்ல வேலையாய் எங்கள் தல, முதலாக சென்று எங்க பேப்பர்களைசமர்ப்பித்து வந்து விட்டார். "ஜட்ஜ் அம்மா வந்துட்டா, நம்ம தான் முதல்ல, அஞ்சு நிமிஷம் தான்!" என்றார். அந்த ஐந்து நிமிட வேலைக்காக, அந்த ஜட்ஜ் அம்மாவுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம். அந்த அம்மா பாரீசில் உள்ள இன்னொரு கோர்ட்டில் இருந்து இரண்டு மணிக்கு வர வேண்டியவர்கள் ஐந்து மணிக்கு வந்து சேர்ந்தார்கள். நான் அப்போது தான் வெறுத்து தலை வலி மிகுந்து ஒரு காப்பியை வாங்கி குடிக்க போவதற்கும், அவர்கள் வருவதற்கும் சரியாய் இருந்தது. தல எங்களிடம்,எங்கேயும் போயிடாதீங்க, பேர் கூப்பிடும்போது இல்லைனா, அப்புறம் எல்லாரையும் பாத்துட்டு ரசீது எல்லாம் போட்டதும் தான் நம்மளை பாப்பாங்க" என்று பீதியை கிளப்பினார். காப்பியை அங்கேயே கடாசி எறிந்தேன்! ஒரு வழியாய் பெயரை சொல்லி கூப்பிட்டதும், கூண்டில் போய்  நின்று கொண்டோம். கையை கூண்டில் வைத்திருந்தேன். ஜட்ஜுக்கு கீழ் அமர்ந்து இருந்த ஒரு வக்கீல் [போலீசுக்கு பொழப்பு அப்படி என்றால் வக்கீல்களுக்கு அவர்களின் உடை! இந்த வெயில்ல உங்களுக்கு எதுக்கு இந்த உடை?] "கையை கீழே போடுங்க" என்று சைகை காட்டினார்! டேய் , நான் என்ன காலையாடா தூக்கி வச்சுருக்கேன்! என்ன ஆழிச்சாட்டியம். டூ வீலர் நோ பார்க்கிங் இருநூறு ரூபாய் ஃ பைன் என்று அந்த குமாஸ்தா அம்மா சொல்லியதும் என் தலையை ஆட்டி ஆமோதித்து இருநூறு ரூபாய் கொடுத்து வெளிய வந்தேன். அபராதம் கட்டியவர்கள் தவறாமல் ரசீது வாங்கி தான் செல்ல வேண்டும் என்று அங்கு எழுதி இருந்தது. எங்கள் தலயிடம் கேட்டதற்கு, "அது எல்லோருக்கும் முடிஞ்சதும் ஒட்டு மொத்தமா போட்டு கொடுப்பாங்க. வேணும்னா வெயிட் பண்ணி வாங்கிட்டு போங்க!" என்றார்.  ஆள  விடுங்கடா சாமி என்று நகர்ந்தோம்.

ரயில் ஏற வந்தா ஸ்டேஷன் பக்கம் வாங்க! என்றார் ஒருபுன் முறுவலுடன்...

கூட வந்த அந்த டிரைவர் எரிச்சலுடன் என்னிடம், "ஏன் மறுபடியும் புடிச்சு கேஸ் போடறதுக்கா?" என்றார் :-)
வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் ஷாப்பிங் செய்து விட்டு ஞாயிற்றுக் கிழமை இரவு நானும், என் மனைவியும், என் மகள் தருவும் வெளியே வந்தோம். மால் பார்க்கிங் சார்ஜ் ஜாஸ்தி என்பதால் வேளச்சேரி 100 அடி ரோட்டில் ஒரு ஓரத்தில் பைக்கை வைத்திருந்தேன். "ஒரு அம்பது, நூறுக்கு எல்லாம் ஏன் இப்படி பண்றீங்க?" என்ற மனைவியிடம் "அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு என்  எதிர்ப்பை எப்படி தெரிவிப்பது!?" என்று சொல்லி இருக்கலாம், வேண்டாம் கொலை வெறி ஆகி விடுவாள்!

மாலில் இருந்து வெளியே வந்து 100 அடி ரோட்டை நோக்கி நடக்கத் துவங்கினோம். "பைக்கை யாராவது எடுத்துட்டு போயிட்டா என்ன பண்ணுவீங்க?" என்று அவள் கேட்டதெல்லாம் வயிற்றில் லைட்டாய் புளியை கரைத்துக் கொண்டிருந்தது. 100 அடி ரோடில் ஒரு 10 மீட்டர் நடந்தால் போதும், பைக் அங்கு தான் நிறுத்தி இருந்தேன். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கடைகள் சாத்தி இருந்தார்கள். அதனால் அந்த இடத்தில் வெளிச்சம் வேறு இல்லை. ஏக்கப்பட்ட பைக்குகளும், கார்களும் நின்று கொண்டிருந்தன. இப்படி எல்லாம் கூட்டத்தில் கண்டு பிடிப்பதற்காக தான் நான் சாமர்த்தியமாய் சிவப்பு ஹெல்மட் வாங்கி இருந்தேன். அதை தேடினால் போதும். அந்த கும்மிருட்டில் கருப்பு வண்டி தெரிய வழியில்லை. சிவப்பை எதிர்நோக்கி என் கண்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கும் போது, காலில் வழு வழுவென்று ஏதோ பட்டது. "அட, பரவாயில்லையே, கார்ப்பரேஷன்ல இவ்வளவு வழவழப்பா டைல்ஸ் எல்லாம் போடறாங்களா?" என்று நான் நினைப்பதற்குள் அது என் காலில் இருந்து நழுவி குறைத்துக் கொண்டே ஓடியது. அது ஒரு கருப்பு நாய்! அதன் வயிற்றிலேயே கால் வைத்திருக்கிறேன். நல்ல வேளை அது என் தொடையில் வாய் வைக்கவில்லை. சுற்றி இருந்தவர்களில் ஒருவர், "அது ஒன்னும் கடிக்காது சார்!" என்றார். யாராவது என் வயிற்றில் கால் வைத்தால் நானே கடிப்பேன். அது நாய், எப்படி கடிக்காமல் இருக்கும். ஏதோ என் அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டேன். வயிற்றில் புளி இன்னும் ஜாஸ்தி ஆனது. நாயின் புண்ணியத்தில் நெஞ்சு வேறு அடித்துக் கொண்டது. இது வரை என் சிவப்பு ஹெல்மட்டும் கண்ணில் படவில்லை, கருப்பு வண்டியும் கண்ணில் படவில்லை.

என் மனைவியிடம், "இங்கே தான் நிறுத்தினேன், காணோம்!" என்றேன். "உங்களுக்கு இது தேவையா, சரி இன்னும் முன்னாடி போயி பாருங்க" என்றாள் பொறுமையாய். இல்லை என்று தெரிந்தும் முன்னால் போனேன். திரும்பி வரும்போது என் மனைவி என்னை அழைத்தாள். "கிடைத்து விட்டதா?" என்று ஆர்வம் போங்க அருகில் சென்றால், "இப்போ தான் போலீஸ் ஒரு 30 பைக்கை எடுத்து போயிருக்காங்களாம், பீனிக்ஸ் மால் பக்கத்துல நிக்கிறாங்களாம், அவங்க சொல்றாங்க!" என்று என் வயிற்றில் கரைந்து கொண்டிருந்த புளியில் கொஞ்சம் பாலை ஊற்றினாள்! நான் அவர்களிடம் "ஏன் சார், ஏன் வண்டியை எடுத்தாங்க?" என்று கேட்டேன். அவர்கள், "இது நோ பார்க்கிங் சார்" என்றார். அந்த இருட்டில் அப்படி எந்த போர்டும் என் கண்ணுக்கு தெரியவில்லை. மாலையில் நான் நிறுத்தும் போது கூட ஒரு தடவை பார்த்து விட்டு தான் நிறுத்தினேன். அந்த நேரத்திலும் அங்கு 100 வண்டி நின்று கொண்டிருந்தது. "என்ன சார், இத்தனை வண்டி நிக்குது" என்றேன். "அவங்க எடுத்து எடுத்துட்டு தான் போறாங்க, அதுக்குள்ளே மறுபடியும் மக்கள் நிறுத்திடறாங்க. அவங்க எத்தனை வண்டிய தான் தூக்கிட்டு போவாங்க பாவம்!" என்றார். நான் என் மனைவியிடம் "இரு" என்று கிளம்பும்போது, "நானும் வர்றேன், குழந்தையோட பாத்தா விட்ருவாங்க!" என்றாள். என்ன ஒரு சாமர்த்தியம்.! "சரி வா" என்று மறுபடியும் அவர்களை மால் வரை நடத்திப் போனேன். வழியெங்கும், "இது உனக்கு தேவையா?" என்ற ஒரே சொல் எனக்குள்ளே ரீங்காரமாய் ஒலித்தது.

பீனிக்ஸ் மால் அருகில் ஒரு காலி இடத்தில் ஒரு பெரிய டோயிங் வேன் நின்றது. அங்கு இரண்டு வெள்ளை சட்டை போலீஸ்கள் இருந்தார்கள். என் வண்டி சிவப்பு தொப்பியுடன் ஜம்மென்று நின்று கொண்டிருந்தது. இரு இளைஞர்கள்  "ஏன் சார் வண்டிய கொண்டு வந்தீங்க" என்று கேட்டு ஒரு போலீஸ் அதிகாரியின் ஈகோவை கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள். நான் பின்னால் குழந்தையுடன் நிற்பதை பார்த்ததும் இன்னொரு போலீசிடம், "இங்கே பாரு, ஏன் எடுத்தீங்கன்னு கேக்குறாங்க, தம்பி நீங்க இந்த பக்கம் வாங்க, பாவம் குழந்தையோட நிக்கிறாங்க, முன்னாடி வாங்க சார்" என்று அவர்களை தனியாய் ராடு எடுப்பதற்காக ஓரம் கட்டி விட்டு என்னை அழைத்தார்.

கார்ப்பரேட் உலகில் "கஸ்டமர் இஸ் காட்" என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதை போல் நம்மூரில் "அதிகார வர்க்கம் இஸ் காட்". போலீஸ்களிடம் இந்த மாதிரி நேரடியான கேள்விகளை எல்லாம் கேட்கக் கூடாது. அவர்கள் பதில் சொல்லக் கடமைபட்டிருந்தாலும், அவர்களின் ஈகோ தான் முதலில் தலை எடுக்கும். அவர்களை அடக்க ஒரே வழி அவருக்கு மேலான ஒரு அதிகாரம். அது நம்மிடம் இல்லை. இன்னொன்று பணம். நான் அந்த இளைஞர்களை போல் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. "நோ பார்க்கிங்க்னு தெரியாது சார், தெரியாம நிறுத்திட்டேன். இது தான் சார் என் வண்டி" என்றேன். "ஒருத்தன் சிக்கிட்டாண்டா" என்பது போல், அந்த இளைஞர்களை புறம் தள்ளி விட்டு அந்த மற்ற போலீஸ் வந்தார். எங்களை ஓரம் கட்டினார்.

கையில் ஃபைன் மெஷினுடன்  "260 ஃபைன் கட்டும்மா" என்றார். பரவாயில்லையே, நேர்மையாய் ஃ பைன் தான் கேட்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டேன்.  அதற்குள் என் மகள் ஏதோ பேச "என்ன வயசும்மா ஆகுது?" என்று என் மகளிடம் சகஜமாக பேச ஆரம்பித்தார். நான் "நோ பார்க்கிங் 260 ஃபைனா சார் என்றேன். [பருத்தி வீரன் மாதிரி கேட்கக்கூடாது, பாலக்காட்டு மாதவன் மாதிரி அடக்கமாய், அப்பாவியாய் கேட்கணும். அப்போது தான் பதில் வரும்.] "டோயிங் சார்ஜ் போடுவோம்மா" என்றார்.

"ஆமா, இவ்வளவு வெயிட்டான பைக்கை தூக்கி போட்டு கொண்டு வந்துருக்கான்களே, நியாயம் தான்!" என்று நினைத்து ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டினேன். அவர் முன்னூறு ரூபாய் திருப்பிக் கொடுத்தார். நானும் வாங்கி வைத்துக் கொண்டேன். இடையில் "எங்க வேலை பாக்குறீங்க?" என்றார், நான் ஒரு நடிகன் சார், குறும்படங்கள் ல, நாடகங்கள் ல நடிக்கிறேன் என்றேன். இப்போதெல்லாம் மாட்டினால் இப்படி தான் சொல்கிறேன். "ஒ, எப்படி போகுது? குடும்பம் நடத்த வருமானம் வருதா? என்றார் அக்கறையாய். நான் "கஷ்டம் தான் சார்" என்றேன். [நமக்கா நடிக்கத் தெரியாது!] "சரி வண்டி எடுத்துக்குங்க" என்றதும் நான், "சார் ரெசிப்ட்" என்றேன். "அப்போ இன்னும் அறுபது ரூபா கொடுங்க!" என்றார். அப்போது தான் அவர் இருநூறு ரூபாயை லஞ்சமாய் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை எனக்கு புரிந்தது! "செய்றதை சரியா செஞ்சுருவோம்" என்று சொல்லிக் கொண்டே ரூபாயை எடுத்தேன். அவரும் ஆமோதித்து "ஆமாம், ஆமாம், நாங்க க்ளோஸ் பண்ணிட்டு இருக்கோம், அதனால தான்" என்று ஏதோ மழுப்பினார்.

நான் ரெசிப்ட் கேட்டதும் தான் என் பெயர், முகவரி, வண்டி என், லைசன்ஸ் என்று எல்லாவற்றையும் கேட்டார். 260 ரூபாய் ஃபைன், அதற்கு பதிலாய் 200 ரூபாய் லஞ்சம். அந்த 200 ரூபாய் லஞ்ச பணத்துக்காக ஏதோ பத்து வருடம்  பழகிய நண்பர் போல எங்களுடன் ஒரு நட்பு கலந்த உரையாடல்! உண்மையில் அங்கு பார்க்கிங் செய்யக் கூடாது என்று இவர்கள் நினைத்தால் நல்ல நடவடிக்கைகளை எடுக்கலாம். பேரிகேட்ஸ் வைக்கலாம், பெரிய நோ பார்கிங் போர்ட் வைக்கலாம். வார இறுதிகளில் அங்கேயே ஒரு போலீஸ்காரரை நிறுத்தி வைக்கலாம். ஆனால் இவர்கள் செய்வது என்ன? செய்யாத ஒரு தப்பு நம்மை சிக்க வைத்து, அதற்கு ஃபைனும் போட்டு, அதிலிருந்து தப்பிக்க லஞ்சம் என்று இன்னொரு தப்பையும் நம்மை செய்ய வைத்து...இது என்ன மாதிரியான தண்டனை? என்ன மாதிரியான சட்டம்?

"நீ தப்பு பண்ணிட்டே! கட்டு ஃபைன்" என்று சிங்கம் போல் சொல்ல வேண்டியவர்கள் அந்த இருநூறு ரூபாய் பணத்துக்காக நம்மிடம் இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசி ஒரு நாயை போல் குழைகிறார்கள். ஒருபக்கம் அவர்களை பார்த்து எனக்கு பரிதாபமே மிஞ்சியது. பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?

வண்டியை எடுக்கும்போது பார்த்தேன், நல்ல துணியில் நான் வைத்திருந்த ஹெல்மெட் கேப், நான் வண்டி துடைக்க வைத்திருந்த மஞ்சள் துணியை காணவில்லை. அவர்களிடமே கண்டு பிடித்து தரச் சொல்லி இருக்கலாம். ஏற்கனவே 200 ரூபாய் போன கடுப்பில் ஓவர் ஸ்பீட் என்று ஐநூறு ரூபாய் ஃபைன் போட்டு அதற்கு முன்னூறு ரூபாய் லஞ்சம் கேட்பார்கள். எதற்கு வம்பு!

கடந்த ஞாயிறு அன்று கிருஷ்ணகிரியில் "தமிழ் கலை இலக்கிய பட்டறை" நடத்திய குறும்பட த் திருவிழாவில் அஜயன் பாலா, விஜய் ஆர்ம்ஸ்ட்ராங், தமிழ் ஸ்டூடியோ அருண் மற்றும் கவிஞர் சாம்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாய் பங்கு பெற்றனர். நான் நடித்த "வலி" குறும்படத்தை சமர்த்திருந்தோம். அங்கு திரையிடப்பட்ட பதினாறு படங்களில் சில படங்களை தேர்ந்தெடுத்து விருதளித்தார்கள். அதில் வலியும் ""சிறந்த குறும்படம்" விருதை வென்றது. சென்ற வாரம் தமிழ் ஸ்டூடியோவின் மூலம் Article 39 படத்துக்கு விருது. இந்த வாரம் இவர்களின் மூலம் "வலி" படத்துக்கு விருது என்று எங்கள் காட்டில் ஒரே விருது மழையாய் இருக்கிறது. மகிழ்ச்சி! 


தமிழ் ஸ்டூடியோ சார்பாக சென்னையில் அருண் இம்மாதிரி விஷயங்களை முன்னெடுப்பதே பெரிய விஷயம் என்று என் முந்தய பதிவில் எழுதியிருந்தேன். அவரை பின்பற்றி கிருஷ்ணகிரியில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்ட "சதீஷ்" மற்றும் மற்ற "தமிழ் இலக்கிய பட்டறை" குழுவுக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுக்கள். 

இப்படி ஒரு நிகழ்வை எளிதாய் நடத்தி விட முடியாது. கடந்த ஒரு மாதமாய் இதற்காக இராப்பகலாய் உழைத்து, போட்டியில் கலந்து கொண்டவர்களை அழைத்து, எல்லோரையும் ஒரு ஏ சி ஹாலில் அமர வைத்து, எல்லோருக்கும் நல்ல சாப்பாடு போட்டு, நம் படத்தை திரையிட்டு, கை தட்டி, நெஞ்சார பாராட்டி, மற்ற சக படைப்பாளிகளுக்கு நம் அறிமுகங்களை கிடைக்கச் செய்து, போதாதென்று மேலும் ஒரு விருதளித்து...என்ன கிடைக்கும் இவர்களுக்கு? போட்டியில் ஒரு பங்காளனாக இந்த நிகழ்வின் வெற்றியாக நான் நினைப்பது, பங்கு கொண்ட படங்களில் ஒரு படம் பத்து வயது சிறுவனாலும் [ஒரே நாளில் எடுத்து முடித்தது!], இன்னொரு படம் ஐம்பது வயது கடந்த முதியவராலும் இயக்கப்பட்டிருந்தது. இரண்டுமே முதல் முயற்சிகள்!

வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் சொன்னது போல், சினிமா என்றால் சென்னை என்று இல்லாமல், தமிழ் படம் என்றால் சென்னையை மட்டுமே மையமாக கொள்ளாமல் அந்த அந்த வட்டாரப்பகுதிகளின் கதைகளை முன்னெடுத்து இப்படி குறும்படங்கள் வருமானால் அதை விட ஒரு சிறப்பு இருக்க முடியாது. செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதற்கான முதல் அடி தான் இது! வாழ்த்துக்கள் விருதளித்த உங்களுக்கும், உங்களின்  விருதுக்குத் தகுதியான எங்களுக்கும் :)
தமிழ் ஸ்டூடியோ நடத்திய "பாலுமகேந்திரா" குறும்பட விருது வழங்கும் விழா நேற்று கோடம்பாக்கத்தில் BOFTA [Blue Ocean Films Technology & Academy] பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்தது.  என்னை போன்ற ஒரு சினிமா ஆர்வலனுக்கு பாலுவின் பெயரில் விருது வாங்குவதை விட சிறப்பு ஒன்று இருக்க முடியாது.



இந்த விருது அறிவிக்கப்பட்டதும், "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பிரதீப் குமாரா? என்று ஆர்வம் போங்க, என்னுடைய [என் இயக்கத்தில் உருவான] குறும்படங்களான "விடியல்", "தமிழ் கிஸ்", "பச்சா பையா" ஆகியவைகளை சமர்ப்பித்து விட்டேன். மூணுல ஒன்னாவது தேறாதா என்ற நப்பாசை தான். சமீபத்தில் வெளியிட்ட "Article 39" படமும் தாயாராய் இருந்ததால் அதையும் சமர்ப்பித்தோம். ஆக இந்த போட்டியில் என் படங்கள் மட்டும் நான்கு :-)

எடிட்டர் லெனின் அவர்கள் முதல் சுற்றுக்கான பதினாறு படங்களை தேர்ந்தெடுத்தார். அதில் ஒன்று "Article 39(F)"! சனிக்கிழமையே, முதல் சுற்றுக்கு தேர்வான பதினாறு படங்களில் "Article 39" தேர்வானது குறித்து அலைபேசியில் அழைத்து சொன்னார்கள். ஞாயிற்றுக் கிழமை 1:30 மணிக்கு அந்த பதினாறு படங்களும் சாரு நிவேதிதா, லீனா மணிமேகலை, BOFTA நிறுவனர் தனஞ்செயன், எடிட்டர் லெனின் [ஜூரி] முன்னர் திரையிடப்பட்டது.

ஞாயிற்றுக் கிழமை ஒரு மணிக்கே "Article 39" க்ரூ ஆஜர். ஆனால், ஏதோ சூப்பர் ஸ்டாரின் முதல் நாள் ஷோ போல், தியேட்டர் ஃபுல். !. உள்ளே நிற்க இடமில்லை.  படங்கள் இன்னும் திரையிட ஆரம்பிக்கவில்லை. "என்னடா இப்படி ஆகிவிட்டதே! நம் படத்தை திரையில் பார்க்க முடியாமல் போய் விடுமோ? "என்று ஸ்க்ரீனுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது லெனின் அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அத்தனை கூட்டத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த என் மீது அவரின் கண்கள் நின்றது. ஒரு புன்முறுவல். "எனக்கு அவரை தெரியும், அவருக்கு என்னை தெரியாதே!" என்று நான் முழித்துக் கொண்டே "வணக்கம் சார்" என்றேன், என் அருகில் வந்து என் தோளில் கை வைத்து நின்று "ரொம்ப நல்ல நடிச்சுருக்கே! அருமையா இருந்தது. ஆமா, இத்தனை படமா எடுப்பே? என்றார்!" எனக்கு ஒரு நிமிடம் தலை கால் புரியவில்லை. "ரொம்ப நன்றி சார்" என்று வாயில் வார்த்தை வராமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்கு என்னமோ அங்கேயே அப்போதே அவார்ட் கிடைத்து விட்டது போல் இருந்தது. அவ்வளவு பெரிய மனிதர், இத்தனை படங்களை பார்த்து விட்டு, என்னை அடையாளம் கண்டு வாழ்த்துகிறார் என்றால், இதை விட வேறு என்ன வேண்டும். புளகாங்கிதம் அடைந்து விட்டேன். அவருக்கு பின்னால் வந்த ஒருவர், கை கொடுத்து, "உங்க எல்லா படத்தையும் பாத்தாரு, ரொம்ப நல்லா பண்ணி இருந்தீங்க" என்றார்.


பிறகு தமிழ் ஸ்டூடியோ அருண் என்னை பார்த்து விட்டு, "படத்துல நடிச்சுருக்கீங்களா? சீக்கிரம் வரச் சொன்னேன்ல?" என்று செல்லமாய் கோபித்துக் கொண்டார். அருண், நான் 1:30 நிகழ்ச்சிக்கு 1 மணிக்கே வந்துருக்கேன் என்றேன். "நிகழ்ச்சி காலையில 10 மணியில இருந்து!" என்று புள்ளி வைத்தார். பிறகு அவர் லெனின் ஐயாவை சாப்பிட அழைத்தார். சாப்பிட கீழே இறங்கியவர் என்னை பார்த்து கையால் "வா" என்று சைகை செய்து கொண்டே முன்னால் போனார். நான் நாய்க்குட்டி மாதிரி அவர் பின்னாலேயே போனேன். அவர் அருகில் என்னை அமர வைத்து மறுபடியும் பாராட்ட ஆரம்பித்தார். "எல்லா படங்களும் பாத்தேன், அதெல்லாம் வேற யாரோ டைரக்ட் பண்ணி இருக்காங்க போல, இது தான் சிறப்பா இருந்தது!" என்றார். அதெல்லாம் ஆரம்ப காலத்துல நானே பண்ணதுங்க, இது பாலாஜி டைரக்ட் பண்ணார் என்று அருகில் இருந்த இயக்குனரை கை கட்டினேன். அவ்வளவு நேரம் அவர் அருகில் இருந்ததையே நான் மறந்து விட்டேன். பாலாஜி மன்னிப்பாராக! பிறகு அவரையும் பாராட்டினார். போட்டிக்கு வந்த 65 குறும்படங்களில் 16 தேர்வு செய்ததாக சொன்னார். "65 படம் எப்படி சார் பாத்தீங்க?" என்றதற்கு, "படம் பாக்க தான் நமக்கு எப்பவுமே புடிக்குமே, கின்னஸ் ரெக்கார்டுக்கே கொடுக்கலாம் அத்தனை குறும்படங்களை பாத்துருக்கேன் என்றார்! பிறகு நல்ல குறும்பட போட்டிகளில் கலந்து கொண்டு பல படங்களை பார்க்க வேண்டும் என்று சொன்னார். அத்தனை பேச்சுக்களிடையிலும் "நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டார்.

அதோடு விடாமல் உள்ளே சென்று உட்காரும்போது என்னை கையோடு கூட்டி போய் அவர் அருகே அமர்த்திக் கொண்டார். அங்கே மக்கள் நிற்க இடம் இல்லாமல் இருக்கும்போது நான் சொகுசாய் ஒரு சேரில் அமர்ந்து கொண்டது எனக்கே கொஞ்சம் உறுத்தியது. நல்ல வேலையாய் லீனா வந்து விட்டதால், அருண் வந்து விரட்டுவதற்குள், நான் இடத்தை காலி செய்து எழுந்து நின்று கொண்டேன்.

பதினாறு படங்களும் திரையிட்டு முடிந்ததும், மாலை ஆறரை மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி. கார்த்திக் சுப்பாராஜ், மாலன், லீனா, சாரு, லெனின் மற்றும் தனஞ்செயன் எல்லோரும் இந்த நிகழ்வை பற்றியும், குறும்படங்களின் முக்கியத்துவங்கள் பற்றியும், அதன் முன்னேற்றங்களை பற்றியும் எடுத்துரைத்து பேசினார்கள்.

சாரு, லீனா, தாங்கள் பார்த்த பதினாறு குறும்படங்களில் இருந்த குறை நிறைகளை மேலோட்டமாய் எடுத்துரைத்தார்கள். வணிக சினிமா சுற்றி இருக்கும் அத்தனையும் அழித்து வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, குறும்படங்கள் தான் இலக்கியத்துடன் ஒரு நட்பை வளர்த்துக் கொள்கிறது என்பது ஆறுதலாய் இருப்பதாய் லீனா ஒரு கருத்தை முன் வைத்தார். அதோடு குறும்படங்களுக்கே உரிய மெலோட்ராமா, செண்டிமண்ட், க்ளிஷேடாய் இருப்பதையும், இவைகளில் எந்தப் படமும் இன்னும் ஒரு முழுமையான கலை வடிவம் என்று சொல்வதற்குரியதாய் இல்லை என்றும் குறிப்பிட்டார். சாரு, மாற்று சினிமா மேல் தனக்கு உள்ள பயத்தையும், இசையை சரியாய் உபயோகப்படுத்துங்கள், ஐரோப்பிய சினிமாக்களை பாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். அடுத்து பேச வந்த லெனின் அவர்கள் தன் அனுபவங்களை ஆக்கப்பூர்வமான மொழியில் ஒரு கொண்டாட்ட மனநிலையில் பேசி எல்லோரையும் அந்த மனநிலைக்கு கொண்டு சென்றார். வகுப்பில் மாணவனை கேள்வி கேட்டு எழுப்பும் ஆசிரியரை போல் தான் படத்தில் பார்த்து அவர் மனதில் பதிந்த உருவங்களை எழுப்பி எல்லோருக்கும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார். எங்கள் குழுவினரை எழுப்பி நல்லதாய் சில வார்த்தைகள் பேசி விட்டு, "அதுக்காக அவங்களை தேர்ந்தேடுதேன்னு நெனைச்சுடாதீங்க!" என்றார்.

எந்தப் படம் வென்றது என்று சொல்லாமல், மேலோட்டமாய் எல்லோரும் நிறை குறைகளை சொல்லிச் சென்றது ஒரு புது அனுபவம். "தேவை இல்லாத இடங்களில் இசையை போட்டு ஏன் கொல்கிறீர்கள்?" என்று சாரு சொல்லும்போது அவர் எந்தப் படத்தை பற்றி பேசுகிறார் என்று தெரியாமல், அதை ரசிப்பதா, இல்லையா என்று ஒரே குழப்பமாய் இருந்தது. அது ஒரு பயங்கரமான த்ரில்லிங் அனுபவத்தை கொடுத்தது.

ஒரு வழியாய் அனைவரும் பேசி முடித்து, விருதுக்கான படங்கள் அறிவிக்கப்பட்டது. "கண்காணிப்பின் மரணம்", "ஆயா" ஆகிய படங்கள் முதல் இரண்டு இடத்தையும், "ஞமலி", "Article 39 (F)" சிறப்பு பரிசுகளை வென்றது. எங்களை பொருத்தவரை, பங்கு பெற்றதே முதல் வெற்றி! முதல் சுற்றில் வெற்றி பெற்றது அடுத்த வெற்றி. அதன் பிறகு, லெனின் போன்ற ஒரு ஆளுமை எங்களை அருகில் அமர்த்தி பேசுவது பெரிய வெற்றி. இதற்கு மேல் விருது வேறு கொடுத்தால் அதை போனஸாய் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்! "இதோடு எப்படி உங்களை விடுவது?" என்பது போல், சமீபத்தில் கார்த்திக் சில குறும்படங்களை ஒன்றிணைத்து வெளியிட்ட "பெஞ்சு டாக்கீஸ்" படத்தை போல் வெற்றி பெற்ற நான்கு படங்களையும் ஒன்றிணைத்து வெளியிட இருக்கிறார்கள். மிக விரைவில்; வெள்ளித் திரையில் - Article 39 (F)! இப்படித் திணற திணற...:-)







இத்தனை செலவு செய்து, இத்தனை உழைப்பை சேர்த்து, இப்படி ஒரு விருதை வழங்குவதால் தமிழ் ஸ்டூடியோவுக்கு ஒன்றுமே கிடைக்கப் போவதில்லை. "நாட்டுக்கு உழைக்கிறேன்!" என்றாலே வீட்டில் திட்டுவார்கள்; தமிழ் ஸ்டூடியோ குழுவினர் "நல்ல சினிமாவுக்கு உழைக்கிறேன், அதற்காக இத்தனை பணத்தை செலவழிக்கிறேன்!" என்று இத்தனை வேலைகளை செய்கிறார்கள் அவர்கள் வீட்டில் எப்படி அவர்களுக்கு சோறு போடுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இதற்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தை க்ளிஷேடாய் போய் விடும் :) அதிலும் அருணிடம் சென்று நன்றி என்று என்ன ஆரம்பித்தாலும் மனிதர் சுட்டு பொசுக்கி விடுவதை போல பார்க்கிறார். எதுக்கு வம்பு?

கடைசியாய் ஒன்று சொல்கிறேன்,

பாலுமகேந்திரா நல்ல படங்களையும், நல்ல மாணவர்களையும் சினிமாவிற்கு விட்டுச் சென்றிருக்கிறார்  - உத்தம கலைஞன்! 
டைட்டிலே வழக்கமான மணிரத்னம் பாணியில், அழுது வடியாமல் இளமை கொப்பளிக்க, ஒரு ரகளையான அனிமேஷனில் ஆரம்பிக்கிறது. Refreshing!

முதல் சீனிலேயே ஹீரோ ஹீரோயின் அறிமுகம். பிறகு வழக்காமான க்ளிஷேடான மணிரத்ன அசட்டு வசனங்கள் [அந்த சர்ச்சில் இருவரும் பேசுவது! ஸ்வபா..] பிரகாஷ் ராஜ் ஒப்பனை அருமை. ஒரு வேளை இது தான் நிஜ பிரகாஷ் ராஜா? யார் இந்த லீலா சாம்சன்? என்ன ஒரு அருமையான பாத்திரம், என்ன ஒரு அற்புதமான நடிப்பு!

துல்கர் முகத்தில் என்னமோ ஒன்று சரி இல்லை, மூக்கா, முழியா தெரியவில்லை. மனிதரை எல்லா பெண்களுக்கும் பிடிக்கிறது. அவர் மாதிரி நான் ஹேர் ஸ்டையில் வைத்துக் கொண்டால், "ஏன்டா தலைய குருவிக் கூடு மாதிரி வச்சுருக்கே?" என்று கேட்பார்கள். அச்சு அசல் அப்படி தான் இருக்கிறது. அவருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயம். நடிப்பதற்கு பெரிதாய் ஒன்றும் ஸ்கோப் இல்லை. "பெங்களூர் டேஸ்" படத்தில் எப்படி கேர்ஃப்ரீயாய் இருந்தாரோ அதே போல் தான் இதிலும் இருக்கிறார்.

நித்யா அழகாய் இருக்கிறார். கிடைமட்டமாய் [தமிழில் horizontal] வளர்ந்திருக்கிறார். அவருக்கும் துல்கருக்கும் கெமிஸ்ட்ரி செம! ஃபிசிகலாய் எதுனா இருக்குமோ? [கிசு கிசு]. நெருங்கி வரும் ஆதியிடம் "ஆதி, நோ சொல்லு, நோ சொல்லு" என்னும் தாரா பதிலுக்கு ஆதி, "நோ" என்றவுடன், "அப்போ கிட்ட வராதே!"  என்று குதூகலிக்கும் இடம் சோ ஸ்வீட்! பிறகு போர்வை போர்த்திக் கொண்டு துல்கரை அழ வைக்கும் அந்த இண்டர்வல் ப்ளாக், வழிய வழிய காதல் :) மணிரத்னம் என்னமாய் கொஞ்சுகிறார்! மணிரத்தினம், the lover returns!

கதையை பொருத்தவரை Old wine in new bottle. இளமை வழிய வழிய ஒரு காதல், பிரத்தியாரால் அவர்களுக்குள் பிரச்சனை, இளமை கடந்த மற்றொரு காதல் தம்பதிகள், அவர்களிடமிருந்து ஒரு வாழ்க்கை பாடம். சுபம். படத்தின் பெயரை அலைபாயுதே 2 என்று வைத்திருக்கலாம்.

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் காதலர்கள் பற்றிய கதை. கடைசியில் அவர்களும் கல்யாணம் தான் செய்து கொண்டார்கள் என்று ஏன் முடிக்க வேண்டும்? சேர்ந்து வாழ்பவர்கள் காதலில் விழுந்து விட்டால் கல்யாணம் செய்து கொள்ளத் தான் வேணுமா? அவர்கள் விருப்பப்படியே அவன் அமெரிக்க போகட்டும், அவள் பாரீஸ் போகட்டும். திரும்பி வந்து மீண்டும் சேர்ந்து வாழலாமே? இந்த காலத்தில் டச் சில் இருப்பாதா கஷ்டம்? எதற்கு ஒரு கல்யாணம்? தாலி? லைசன்சா? ஒழுங்கா திரும்பி என்கிட்டே வந்துரணும் என்று சொல்ற மாதிரியா, புரியவில்லை. முடிவில் உடன்பாடு இல்லை என்றாலும், படம் எனக்கு பிடித்துத் தான் இருந்தது. அலைபாயுதேவை விட எனக்கு இந்தப் படம் பிடித்தது!

படத்தின் மற்ற பலங்கள், இசை, கலை மற்றும் ஒளிப்பதிவு. என்ன ஒரு இளமை துள்ளும் இசை, அந்த பிரகாஷ் ராஜின் வீடு, அகமதாபாத் ஹோட்டல், நித்யாவின் ஹாஸ்டல் அருமையான ரசனை. நகரத்தில் இருக்கும் எல்லா அசிங்கங்களையும் மறைத்து அதை ஒரு சொர்க்கமாய் காட்ட மணிரத்னம், ஸ்ரீராமால் தான் முடியும் :) மும்பை போக ஆசையாய் இருக்கிறது!

முன்னாலேயே எழுதி இருக்க வேண்டிய பின்குறிப்பு: இந்த விமர்சனத்துக்கு மெளஸ் உபயோகப்படுத்தப்படவில்லை!
உத்தம வில்லன் வந்திருக்கும் இந்த சமயத்தில் என்னுடைய அடுத்த  (ஆறாவது) குறும்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி!

இந்தக் குறும்படத்தின் தலைப்பு வேறு தான். ஆனால், உத்தம வில்லன் பார்த்து, விமர்சனம் எழுதிய கையோடு, இந்த குறும்படத்தை பார்த்தால், "உத்தம வில்லன் - II" சரியான தலைப்பாய் தான் தோன்றுகிறது.

நீங்களே பார்த்து விட்டு முடிவு செய்து கொள்ளுங்கள் :)

வாழ்த்துக்களையும், வசவுகளையும் எதிர்நோக்கி....