பெரும்பாலும் பேய் படங்களை தியேட்டரில் பார்த்ததில்லை. [டிவிடியில் பார்த்து தான் பழக்கம்.] என்னமோ அப்படி ஒரு வாய்ப்பு அமைவதில்லை.  இன்று அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். குரோம்பேட்டை ராகேஷ் 3D ல் அது சாத்தியமாயிற்று.

வழக்கமான ஆள் அரவம் அற்ற பெரிய பங்களாவில் குடியேறும் ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தின் குழந்தையுடன் விளையாடும் ஒரு குழந்தை பேய். பேயை பார்த்து குரைக்கும் நாய். இருட்டான பேஸ்மென்ட். மெல்ல திரும்பினால் தெரியும் கோர முகம். ரத்தம் வழியும் கடைவாய். எதுவும் புதிதில்லை. ஆனாலும் கடைசி பதினைந்து நிமிடம் மிரட்டல்.  காமெரா, இசை அற்புதம். எண்ட் டைட்டில் ஓடும்போதும் பின்னணி இசை பயமுறுத்துகிறது. படத்தை இன்னும் நன்றாய் ரசித்திருக்கலாம் தான், அல்லாததற்கு காரணம் கீழே.

படத்தை பற்றிய பதிவு இல்லை இது. படம் பார்த்த அனுபவத்தை பற்றியது. இரண்டரை மணிக்கு ஷோ. நான் போகும்போது மணி இரண்டரை. கவுண்டரில் ஏகத்துக்கு கூட்டம். ஆன்லைனுக்காக ஒரு தனி கவுண்டர் இருக்கும். அது மூடி இருந்தது. எனக்கு எப்போதும் படம் பார்க்கச் சென்றால் [முன்பு ஃ பிலிம் டிவிஷன், இப்போதெல்லாம்] முகேஷின் விளம்பரத்திலிருந்து பார்க்க வேண்டும். வண்டியை ஒருவழியாய் இண்டு இடுக்கில் நிறுத்தி விட்டு [இந்த தியேட்டரின் பார்க்கிங் வசதியை திட்டி தனி பதிவே எழுதலாம்!] ஓடோடி வந்து கவுண்டரில் வரிசையில் நின்றேன். மர்ஃபீஸ் விதியின் படி வரிசை மிக மெதுவாய் நகர்ந்தது. ஒருவழியாய் கவுண்டரை நெருங்கி "ஆன்லைன் புக்கிங்" என்றதும், "அடுத்த கவுண்டர்" என்று டிக்கட் கொடுப்பவர் சர்வ சாதாரணமாய் சொன்னார். எனக்கு எரிச்சலாய் வந்தது. திட்டிக் கொண்டே அடுத்த கவுண்டரில் வரிசையில் நிற்குமுன் "இது ஆன்லைன் கவுண்டரா" என்று கேட்டுக் கொண்டேன். டிக்கட் கொடுப்பவர் கண்டுகொள்ளவேயில்லை. வரிசையில் நின்றவர்கள், "க்யுவுல வந்து நில்லுங்க, இந்த கவுண்டர் தான்" என்று ஒரு சிலர் தங்கள் கையில் உள்ள கை பேசியை காட்டினார்கள். வரிசையில் கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். குறைந்தபட்சம் பத்து  நிமிடமாவது  ஆகும். வரிசையில் எரிச்சலாய் நின்ற நான், கடுப்பாகி நேரே உள்ளே சென்றேன். "ரெண்டு முப்பது படத்துக்கு ஆன்லைன் டிக்கட் வச்சுருக்கேன். இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள், ஏன் ஒரு தனி கவுண்டர் இல்லை?" என்று ஒருத்தரை கேள்வி கேட்டேன். அவர் இன்னொருத்தரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னார். "எஸ்.எம்.எஸ். இருக்கா?" என்று கேட்டார் அவர்!  காட்டினேன். "சரி மேலே போய், மோகன் அனுப்பினாருன்னு சொல்லிட்டு உள்ளே போங்க, படம் போட்டாச்சு" என்றார். நான் ரொம்ப நன்றி என்று சொல்லி, "அப்போ அவங்க எல்லாம்" என்று வரிசையில் உள்ளவர்களை காட்டினேன். அவர், "சார், ஒருத்தருக்கு பண்ணலாம் எல்லாருக்கும் பண்ண முடியுமா?" என்றார். "இல்லை சார், தனியா ஒரு கவுண்டர் போடுங்க"  என்று சொன்னேன். "செய்றோம், நீங்க மொதல்ல போங்க சார் படம் போட்டாச்சு" என்று என்னை அனுப்பி விட்டார். நான் கேட்டேன், கிடைத்தது; பாவம் மற்றவர்கள்!

அரங்குக்குள் நுழைந்தேன். படம் போட்டிருந்தார்கள். ஒரு காட்டில் ஒரு பெரிய தனி வீடு என்று காட்டிக் கொண்டிருந்தார்கள். யாவரும் நலம் படத்தில் வருவதை போல் "அபார்ட்மெண்ட்டில் பேய்" என்று இவர்கள் எப்போது படம் எடுப்பார்களோ தெரியவில்லை. இடம் பிடித்து உட்கார்ந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். பேய் படங்களில் வரும் வழக்கமான பின்னணி இசை இல்லாத, அமைதியான மெதுவான காமெரா நகர்வு. அடடா..ஆரம்பிச்சுட்டாங்களே என்று பயப்பட தயாரானால்,  அவ்வளவு தான், அரங்கில் தான் நம் வீர சூரப் புலிகள் இருக்கிறார்களே. "அம்மா, பூச்சாண்டி, பே, போச்சு, ஐயோ போகாதே" என்று ஆளாளுக்கு பின்னணி கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த மாதிரி பேய் படங்களில் அந்த மாதிரி திகில் தருணங்களை ரசிக்க வரும் என் போன்ற ரசிகர்களுக்கு அது எத்தகைய எரிச்சலாய் இருக்கும் என்று அவர்கள் ஏன் கவலைப்படப்போகிறார்கள்!  இந்த அழகில் டிக்கட் சரிபார்த்து உட்கார வைப்பவர் "சத்தம் போடாம படம் பாருங்க" என்று இரு முறை சொல்லி விட்டு போய் விட்டார் [ஒரு முறை அவரே, இரண்டாவது முறை நான் முறையிட்டு!]. இதை விட என்ன செய்ய முடியும்? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்று சொல்வார்கள். மாட்டுக்கே ஒரு சூடு தாண்டா! நீங்க எல்லாம் மனுஷங்க இல்ல?

வீட்டில் குடும்பத்துடன் டிவிடியில் பார்க்க வேண்டியவர்கள் எல்லாம் தியேட்டரில் வந்து மற்றவர்களின் சுவாரஸ்யங்களையும் கெடுக்கிறார்கள். ஒருவன் கமெண்ட் அடித்தால் போதும், தேவையில்லாமல் சிரிப்பது, குசுகுசுப்பது, கத்துவது என்று தொடர்ந்து ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்கள் கத்துவது மட்டுமல்லாமல் கைபேசி தொல்லைகள் வேறு. வித விதமான ரிங் டோன்கள் ஹை டெசிபல் சத்தத்தில் தாங்க முடியவில்லை. நான்  பார்த்த வரை பேய் படம் பார்க்கும்போது நம்மவர்களின் நடத்தையே மாறி விடுகிறது. முன் எப்போதுமில்லாத வீரம் உடனே வந்து ஒட்டிக் கொள்கிறது.  நான் எல்லாம் யாரு, வீரன், தீரன், சூரன், இதெல்லாம் ஒரு சப்பை படம், நான் எல்லாம் இதுக்கு பயப்படுவேனா என்பது போன்ற ஒரு நடத்தை/பீத்தல்! அதிலும் ஒரு பெண் பக்கத்தில் இருந்தால் போதும், அந்த பீத்தல் டபுள் மடங்காகிவிடும். எனக்கு என்னமோ, அந்த மாதிரி அழுச்சாட்டியம் செய்து கொண்டு அங்கு உட்கார்ந்திருந்த ஒவ்வொருத்தனையும் இப்படி ஒரு ஹான்டிங் ஹவுசில் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று தோன்றியது.  இயக்குனர் பாலா ஒரு பேட்டியில், "நான் தியேட்டர் போய் படம் பாக்குறதே இல்லை, படம் பார்க்கும்போது செல்ஃபோன்ல பேசுறவனை பார்த்தால் அங்கேயே அரையனும் போல இருக்கு, அதுக்கு பயந்தே நான் போறதில்லை" என்பது போல் சொல்லி இருந்தார். சரியாய் தான் சொல்லி இருக்கிறார். என்னை பொறுத்தவரை இந்தியர்களை ஒரே வரியில் விமர்சிக்க வேண்டும் என்றால் கவுண்டமணி சொன்ன  "சாகும்போதும் அடுத்தவனுக்கு தொந்தரவு கொடுக்காம சாக மாட்டானுங்கடா"  அந்த ஒரு டயலாக் போதும். பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய ஒரு வாசகம்!

எல்லா எரிச்சலையும் தாண்டி ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், படத்தில் அதிகாலை சரியாய் 3:07 மணிக்கு வீட்டில் உள்ள அனைத்து கடிகாரங்களும் நின்று விடும். காரணம், அந்த நேரத்தில் தான் அந்த வீட்டில் இருந்த பெண்மணி தூக்கு மாட்டி இறந்திருப்பார். படத்தின் இடைவேளையில் என் மனைவி தன் கைபேசியை எடுத்து பார்த்தார். அதில் மணி சரியாய் 2:33 ல் நின்றிருந்தது!

தேசப்பற்று என்றெல்லாம் ஒன்றும் பெரிதாய் இல்லை. சும்மா "கிம்ப்"பில் வரைந்து பழகிக் கொண்டிருந்தேன். எத்தனை நாள் தான் பெண்களையே வரைவது... ஒரு மாற்றத்துக்கு இன்றைய நாளை நினைத்து  வரைந்தது. சுதந்திர தினம் என்பது ஒரு நாள் விடுமுறையும், தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளுடனும் இன்று நீர்த்து போயிருக்கலாம்! ஆனால், தங்களின் வேலைகளை விட்டுவிட்டு, குழந்தை குட்டிகளை பற்றி கவலைப்படாமல்  இன்று நாம் ஜம்பமாய் உட்கார்ந்து கொண்டு யாரை பற்றி வேண்டுமென்றாலும் முகநூலில் தைரியமாய் நிலைத்தகவல்களை அளிக்கக் காரணமாய் இருந்த அந்த வீரர்களை இன்று ஒரு கனம் நினைத்துக் கொள்ளலாம்! வாழ்க சுதந்திரம்.
அமீர் கான் ஒரு படத்தை பற்றி சொல்கிறார் என்றால் அதை நான் பார்த்து விடுவேன். அவரின் ரசனை மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை. அவரின் பரிந்துரைகள் என்னை இதுவரை ஏமாற்றியதில்லை. இந்தப் படமும் அப்படித் தான்.


ஷிப் ஆஃப் தீசிஸ் என்பது தீசிஸ் என்பவரின் பாரடாக்ஸ் என்கிறது விக்கி. அதாவது தமிழில் "முரண்பாடு போலத் தோன்றும் மெய்யுரை". [முற்றிலும் தமிழில் சொன்னால் கொஞ்சம் புரிஞ்சதும் குழம்பிடுதுல்ல?] அது யாதெனில், ஒரு பொருளில் உள்ள அனைத்து பாகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி அமைத்து விட்டால் எஞ்சுவது அதே பொருளா வேறு பொருளா? எடுத்துக்காட்டாக, ஒரு கப்பலில் உள்ள அனைத்து பாகங்களையும் மாற்றி விட்டால் இறுதியில் இருப்பது அதே கப்பலா? இல்லை வேறு கப்பலா? [எவ்வளவு வேலையத்து இருந்திருக்காய்ங்க பாருங்க!] இது உலகத்தையே உலுக்கிய [இது என்னோட பில்டப்பு!] ஒரு பெரிய தத்துவார்த்த கேள்வி! இப்படியாக நீங்கள் பிரபஞ்சத்திலுள்ள எந்தப் பொருளையும் எடுத்துக் கொண்டும் இதற்கான விடையை கண்டுபிடிக்க முயலலாம். அந்த முரண்பாட்டு மெய்யுரையின் அடிப்படையில் அமைந்த படம் தான் ஷிப் ஆஃப் தீசிஸ். [நம்ம படத்துலயும் கதைன்னு ஒன்னு இருக்கே!]

இந்தப் படத்தில் ஆனந்த் காந்தி [இயக்குனர்] எடுத்துக் கொண்டிருக்கும் பொருள் மனித உடல். உடல்கள்! இறந்த ஒருவரின் கண், கல்லீரல், சிறுநீரகத்தை எடுத்து மூவருக்கு வைக்கிறார்கள். அந்த மூவர்,


கண் பார்வையற்ற புகைப்பட நிபுணியான ஒரு பெண்.

மிருக வதையை எதிர்க்கும் ஒரு துறவி.

ஒரு கலை சார்ந்த குடும்பத்தில் பிறந்து, சதா பணத்தை கட்டி அழும் ஒரு ஸ்டாக் ப்ரோக்கர்.

இறுதியில் ஷிப் ஆஃப் தீசிஸ் படி அவர்கள் யாராய் வாழ்கிறார்கள் என்ற கேள்வியுடன் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இது போதும், நான் கதையை சொல்லப் போவதில்லை. நீங்களும் அனுபவியுங்கள்!

வீடு, சந்தியா ராகம் எல்லாம் ஆர்ட் பிலிம், நல்ல படம் என்றால் சிங்கம், துப்பாக்கி தான் என்றால் நீங்கள் அப்பீட் ஆகிக் கொள்ளுங்கள்! உங்களால் ஒரு நிமிடம் கூட இந்த படத்தை தாங்க முடியாது. சீரான ஒரு நீரோட்டத்தை உங்களால் பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? அப்படி இருக்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை. எந்த வித அதிபயங்கர திருப்பங்களும் இல்லாமல் [நீரோடையில் இருப்பதுண்டு!] அமைதியாய், சீராய், சாந்தமாய் பயணிக்கிறது. அது மிக அழகாய் நம்மையும் உள் இழுத்துக் கொள்கிறது. படத்தில் நிறைய பேசுகிறார்கள். அமைதியாக, சாந்தமாக, சத்தமாக, அழுத்தமாக, மௌனமாக இப்படி பல வகையில் பேசுகிறார்கள். வாழ்வியல் சார்ந்த, மரணம் சார்ந்த, சுய மதிப்பு சார்ந்த பலவிதமான கேள்விகளை படம் முழுதும் எழுப்பிக் கொண்டே போகிறார்கள். சப் டைட்டில் போட்டும் எனக்கு பல இடங்கள் புரியவில்லை. மறுபடியும் ஒரு தடவை படத்தை பார்க்க வேண்டும்.உண்மையில், இந்த படம் முடிந்தவுடன் தான் தொடங்குகிறது. படம் முடிந்து வீட்டுக்கு வந்தும் அது நம் மனம் எங்கும் வியாபித்து விடுகிறது.



காமெரா வாயில் ஒத்திக் கொள்ளலாம் போலிருக்கிறது [அட அதாங்க உம்மா!]. சில இடங்களில் நடிகரின் முகத்தில் இடித்துக் கொண்டு காமெரா நிற்கிறதோ என்று தோன்றுமளவுக்கு க்ளோசப் வைத்திருக்கிறார்கள். எல்லா காட்சிகளும் பார்வையாளர்களை பார்த்து "என்னப்பா, பாத்தியா, நல்லா பாத்தியா?" மாத்தவா என்பது போல் நிறுத்தி நிதானமாக காட்டுகிறார்கள். [ தற்போதைய தமிழ் சினிமா பாடல்களை நினைத்துக் கொண்டேன். கண் சிமுட்டுவதற்குள் நாலு கட் செய்து விடுகிறார்கள்.] குறிப்பாய் அந்த பனிமலையும், நீரோடையும், அங்கு நிலவும் கனத்த மெளனமும் அந்தப் பெண்ணின் மனநிலையோடு நம்மையும் இணைத்து விடுகிறது. அந்தக் கணத்தில் நானும் அவளோடு அங்கு இருந்ததை போல இருந்தது. அருமை...இப்படி படத்தில் பல கணங்கள் படத்தில் வாய்க்கின்றன. துறவி மண்புழுவை காப்பாற்றுவது, அந்த இளம் வக்கீலிடம் வாக்குவாதம் செய்வது, நோயால் துன்புறுவதை காட்சிபடுத்தியது, புத்தகம் கொடுக்க வரும் அந்த தாத்தாவின் பிரசன்ஸ், ஸ்டாக் ப்ரோக்கரின் நண்பனின் அங்கதங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தில் பல இடங்கள் மெளனமான கணங்கள் இருப்பதால், இசை ஆங்காங்கே பேசுகிறது.

மொத்தத்தில் ஆனந்த் காந்தியின் படத்தை பார்க்க உங்களுக்கு "காந்தி" யின் பொறுமை வேண்டும். என்றும், பொறுமையின் பலன் அற்புதம் தானே?


"ராஞ்சானா" விமர்சனத்தின் போதே எழுத வேண்டும் என்றும் நினைத்தேன். மறந்து விட்டேன். "சிவாஜி", "எந்திரன்" படங்களின் டிரைலர் வந்த போது கூட எப்போது படம் வரும், பார்ப்போம் என்ற ஆவல் அதிகம் வரவில்லை. ஒரு தமிழ் படத்தின்  டிரைலரை பார்த்து எப்போடா இந்த படம் வரும் என்று நான் ஆவல் கொண்டது இந்தப் படத்துக்குத் தான்! [டிரைலரை கட் பண்ணவன் புத்திசாலி, எல்லா நல்ல சீனையும் அதுல வச்சுட்டான்!] அப்போதே அய்யயோ, இவ்வளவு ஆவலா இருக்கோம், டிரைலர் மாதிரி படம் இருக்குமா என்று உள்ளூர ஒரு சந்தேகமும் வந்தது.

- மரியான் என்று உண்மையில் யாருக்காவது பெயர் வைப்பார்களா? கதைக்காக தனுஷின் பெயரை  வேறு ஏதாவது வைத்து விட்டு, ஒரு குறிப்பாய் படத்துக்கு இந்தப் பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.


- ஒரு காதல்; ஒரு பிரிவு; இருவரும் இணைந்தார்களா இல்லையா? இது தான் மரியான் கதை. என்ன புதுமையான கதை பாருங்கள்!

- பரத்பாலவுக்கு கதாபாத்திரங்களுக்கு நல்ல பெயர் வைக்கத் தெரிந்திருக்கிறது. மரியானும் சரி, பனிமலரும் சரி. அற்புதமான பெயர்கள் இல்லையா?

- இந்தக் கதையை எடுக்க பரத்பாலாவை எது உந்தியிருக்க வேண்டும் என்று யோசிக்கிறேன்? என்ன புதுசாய் இருக்கிறது இந்தக் கதையில்? தனுஷா? அப்புறம், தமிழ் மக்களுக்கு அப்பிரிக்காவின் சூடான் பிரதேசம் பரிட்சயமிருக்காது, அங்கே ரெண்டு சிறுத்தையை காட்டி மிரட்டிரலாம், அப்புறம்,  எப்படியும் இசையமைக்க ரகுமானை போட்டு விடலாம், ஒரு மினிமம் கியாரண்டி என்று நினைத்திருப்பாரோ?

- அரதப் பழசான கதையையும் நல்ல ஒரு ட்ரீட்மென்ட் மூலம் அழகாகவும், சுவாரஸ்யமாகவும் ஆக்கி விடலாம். அப்படிப்பட்ட சுவாரஸ்யங்களும் படத்தில் கம்மி தான்.

- இந்த படத்தை இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து மக்கள் பார்க்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் தனுஷும், பார்வதியும் தான். இருவரும் அருமையாய் செய்திருக்கிறார்கள். தனுஷை பற்றி கேட்கவே வேண்டாம். காதல், வெட்கம், கோபம், பயம், என்று முகத்திலேயே ஃபுல் பாடி லாங்குவேஜ் காட்டுகிறார்.

- பார்வதி சில சமயங்களில் தேவதையாய் தெரிகிறார்; சில சமயங்களில் தேவைக்கேற்ப தெரிகிறார். மற்ற கதாநாயகிகளை நினைத்துப் பார்க்கும்போது இவர் நடிக்கத் தான் வந்திருக்கிறார் என்று தோன்றுகிறது!

- ரகுமானின் பெயரை போட்டதும் தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. "நெஞ்சே எழு" எனக்குப் பிடித்தது. "கடல் ராசா" பரவாயில்லை. பல்லவியை தவிர மற்ற வரிகள் ரொம்ப சாதாரணம். [பல்லவியை யாரு எழுதினா?]  மற்றபடி எல்லாம் சாதாரண பாடல்கள் தான். ஆனால் இந்தப் படத்திற்கு இத்தனை பாடல்கள் தேவையேயில்லை. அவைகள் கதைக்கு மிகப் பெரிய தொய்வை ஏற்படுத்துவதாய் உணர்ந்தேன்.

- ஒளிப்பதிவுக்காகவும் இந்தப் படத்தை பார்க்க விரும்பினேன். நான் செய்த தவறு, நங்கநல்லூர் வெற்றி தியேட்டருக்கு சென்றது. படத்தின் ஆரம்ப காட்சிகள் அதீத ஒளியுடன் இருந்தது. சரி ஆப்ரிக்க வெயிலை அப்படி படம் பிடித்திருப்பார்கள் என்று நினைத்தேன். கருமம், படம் முடியும் வரை அப்படித் தான் இருந்தது. கடலின் நீலமே கண்ணுக்குத் தெரியவில்லை! ஒளியும் சரியில்லை, ஒலியும் சரியில்லை!

- ஆக மொத்தத்தில் என்னை பொருத்தவரை, படத்தில் நடிகர்கள் நன்றாய் நடிக்கிறார்களோ இல்லையோ, படத்தின் பிரஸ் மீட்டுகளில் "இப்படி ஒரு படத்தை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது!" இந்தப் படத்தை நான் ஒத்துக்கிட்டதே இந்த படத்தோட கதைக்காக தான் என்றெல்லாம் பீலா விட்டு, இமாலய நடிப்பு நடித்து நம் பையில் உள்ள நூறு ரூபாயை புடுங்கிக் கொள்கிறார்கள்.



"லுடேரா" படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்துத் தான் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். நேற்று மாலை ஷோ அருகில் எங்கும் தென்படவில்லை. இன்று ஒரு படம் பார்த்தாக வேண்டும் என்று மனது அடித்துக் கொண்டது. அலுவலகம் விட்ட வழியிலேயே தியேட்டர்...டிக்கட்டும் எளிதாய் கிடைத்து விடும். உடனடியாய் படம் பார்க்க வேண்டும் என்றால் அங்கு தான் போயாக வேண்டும். அந்தப் படத்தை தான் பார்த்தாக வேண்டும். வேறு வழியே இல்லை! மனதை திடப்படுத்திக் கொண்டேன். கட் பண்ணா...

வெற்றி தியேட்டர், சிங்கம் II! இந்த மாதிரி படங்களுக்கு எவ்வளவு சீப்பாய் முடியுமோ, அவ்வளவு சீப்பாய் முடித்துக் கொள்வது என் வழக்கம். இருந்தும் என்னமோ நேற்று சொகுசாய் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 150 ரூபாய் டிக்கட் வாங்கிக் கொண்டேன். வண்டி வைத்து விட்டு டோக்கன் வாங்கும்போது என் முன்னாள் இருந்த பெண்மணி டோக்கன் வாங்கிக் கொண்டே தள்ளி நின்ற கணவரிடம் என்னாச்சு, என்னாச்சு, என்னாச்சு என்று கேட்டுக் கொண்டே சென்றார். என்னையும் அறியாமல், "கிரிக்கெட் வெளயாண்டோம்!" என்று சொல்லி விட்டேன். நல்ல வேளை அவர் காதில் விழவில்லை. டோக்கன் கொடுப்பவர் சிரித்துக் கொண்டார். நான் உள்ளே எஸ்கேப்! நல்ல ஏ. சி. போட்டு, ஃபேன் வேறு  போட்டிருந்தார்கள். ஜில்லென்று இருந்தது. பக்கத்தில் ஒரு குடும்பம் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் வீட்டிலிருந்து ஒரு அரிசி மூட்டையை கொண்டு வந்திருந்தார்கள். படம் ஆரம்பிக்கவேயில்லை, அதற்குள், பப்ஸ், சிப்ஸ் என்று போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். பரவாயில்லையே, வீட்டிலிருந்தெல்லாம் எடுத்துட்டு வர அனுமதிக்கிராங்களே இந்த தியேட்டர்ல என்று நினைத்துக் கொண்டேன். படம் ஆரம்பித்தது!

ஒரு பெரிய சிங்கம் உறும, அது அப்படியே கிராபிக்ஸ்சில் இரண்டாய் பிரிந்து, ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்க அப்படியே சிங்கம் II என்ற லோகோவை போட்டார்கள். எனக்கு பகீர் என்றது. கொஞ்சம் அவசரபட்டுட்டோமோ என்று வடிவேலு மாதிரி ஃபீலிங்கோடு படம் பார்க்க ஆரம்பித்தேன்.

படம் ஆரம்பித்தவுடன் ஹோம் மினிஸ்டர், துரைசிங்கத்தை ரோட்டில் வைத்தே "நம்ம பிளான்படி ராஜினாமா பண்ணிட்டீங்க. இனிமே தூத்துக் குடியில அண்டர் கவர்ல இருங்க!" என்று கட்டளை இடுகிறார். இப்படி ஒரு ஹோம் மினிஸ்டர் நமக்கு இல்லாம போயிட்டாரே என்று இருந்தது. கட் பண்ணா, தூத்துக்குடி கடலை ஜிம்மி ஜிப்பில் அப்படியே ஒரு சுற்று சுற்றி ஒரு கப்பலில் வந்து நின்றால் அஞ்சலி தன்னோட இடுப்பை ஆட்ட [க்ளாப்ஸ் அள்ள] ஒரு பாட்டு. "ஆரம்பிச்சிட்டாங்களே!...உனக்கு வேணும்டா" என்று மனசு திட்டியது. சரி, விடு, கேவலமா திட்டி ஒரு போஸ்ட் போட்டா போவுதுன்னு மனசை தேத்திட்டு படம் பார்த்து முடிச்சேன். இப்போ இந்தா இந்த போஸ்ட்!

ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்! இந்தப் படத்தை நான் திட்டப் போறதில்லை. ஏனென்றால் படம் பார்த்து முடித்தவுடன் ஹரி என்னை அந்த அளவுக்கு மாற்றி விட்டார். ஒரு வெற்றிப் படத்தை எடுத்து விட்டு, அதை தொடர்ந்து அடுத்த பாகத்தை அதே விதத்தில் எடுப்பது கடினம். ஹரி கனகச்சிதமாய் அதை செய்திருக்கிறார்! உண்மையான சிங்கம் ஹரி தான்! படத்தின் காட்சிகளில் டாடா சுமோக்கள் "எண்பது" கிலோமீட்டர் ஸ்பீடில் பறந்தால், திரைக்கதை ஜெட் ஸ்பீடில் பறக்கிறது. நான் "சி" செண்டருக்குத் தான் படம் எடுக்கிறேன் என்பதில் ஹரி தெளிவாய் இருக்கிறார். அதில் நேர்மையாய் இருக்கிறார், முக்கியமாய் அதை சரியாய் செய்கிறார். வழக்கமான போலீஸ் திருடன் கதை தான் என்றாலும் திரைக்கதையில் நிறைய உழைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

ஹரி சீன்களை  பிடிக்கும் விதம் எப்போதுமே பர பர தான். அது "சாமி"யாய் இருக்கட்டும், "அருளாய்" இருக்கட்டும், "ஐயா"வாய் இருக்கட்டும், சிங்கமாய் இருக்கட்டும்! நானும் திரைக்கதை எல்லாம் எழுதி பார்ப்பதால் சொல்கிறேன், சீன் பிடிப்பது சாதாரண விஷயமே கிடையாது. லைன் பிடித்து விடலாம். ஆனால் அதை படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, இதுவரை வராத மாதிரி, அதுவும் சுவாரஸ்யமாய் எடுத்துச் செல்லவது மிகக் கடினம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒரு லவ் சப்ஜக்ட் என்றால் எப்படி காட்சிகளை வைப்பீர்கள்? இதுவரை தமிழ் சினிமாவில் காதலை தவிர்த்து வந்த படங்களை எண்ணி விடலாம். அப்படி இருக்கும்போது இதில் புதிதாய் என்ன செய்வது? எப்படி சுவாரஸ்யம் ஆக்குவது, மண்டை காய்ந்து விடும். காதலுக்கே இப்படி என்றால் திருடன் போலீஸ் கதையில் ஸ்கோப் அதை விட கம்மி. அதனால் தான் சொல்கிறேன் அதிலும், ஹரி தன் படங்களில் கூடிய மட்டும் லாஜிக்குகளை சரியாய் வைப்பார் என்பது என் கருத்து. இந்தப் படத்தையே எடுத்துக் கொள்வோம்.

சிங்கம் பெரிய ஹிட். அதன் அடுத்த பாகம் கொஞ்சம் பெரிய canves ல் இருந்தால் தான் சுவாரஸ்யமாய் இருக்கும். அதற்கு என்ன செய்யலாம்? ஒரு இன்டர்நேஷ னல் கள்ளக்கடத்தல்காரனுக்கும், லோக்கல் தாதாக்களுக்கும் கனெக்ஷன். சென்ற பாகத்தில் துரைசிங்கம் வேலையை விட்டு விட்டார். ஆனால் படம் ஆரம்பித்தவுடன் அவர் அண்டர்கவரில் இருக்கிறார் என்று நம்மை தெளிவு படுத்தி விடுகிறார். ஆயுதக் கடத்தலை பற்றி துப்பு துலக்க ஆரம்பிக்கிறார். ஆனால் அது போதை மருந்து கடத்தலில் சென்று நிற்கிறது. அண்டர்கவரில் இருந்தால், யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி அவர் என்ன வேலை செய்யலாம்? என்.சி.சி. ஆபிசர். முதல் பாகத்தில் சொல்வது போல் பலசரக்குக் கடை வைக்கவில்லை, ஏன் என்றால் அதில் ஸ்கோப் அதிகம் இல்லை. என்.சி.சி. ஆபிசராய் இருக்கும்போது இருக்கும் கெத்து அண்ணாச்சி கடையில் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தால் கிடைக்காது. அதோடு போன தடவை அனுஷ்கா மட்டும். இந்த முறை இன்னும் கொஞ்சம் கிளாமர் ஏற்ற வேண்டும், அதற்கு ஹன்சிகா. அவர் வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் மாணவி. அவள் காதலில் விழுவது, அனுஷ்காவுக்கும் இவருக்கும் ஏன் இன்னும் கல்யாணம் ஆகவில்லை, மூன்று லோக்கல் தாதாக்கள், அதில் இருவர் எதிரிகளாய் நடிப்பது, அவர்கள் மூவருக்கும் இன்டர்நேஷனல் தாத்தாவுடன் தொடர்பு. ஒவ்வொன்றாய் துரைசிங்கம் துப்பு துலக்கும் அழகு...ஒவ்வொரு காட்சிக்கும் அப்படி ஒரு முடிச்சு! அப்படி ஒரு வேகம், அப்படி ஒரு சுவாரஸ்யம். என்ன, பிரதீப் இப்படி ஆயிட்டானேன்னு நெனைக்காதீங்க, நான் உலக சினிமாவோடு இதை நிறுத்தி பார்க்கவில்லை. மாஸ் படம் என்று வரும் மரண மொக்கை படங்களுடன் இதை நிறுத்துப் பார்த்தால் இது சூப்பர் படம் தான்!

சூர்யா அபாரமாய் உழைத்திருக்கிறார். துரைசிங்கமாய் விரைப்புடன் அவர் நடப்பது, நடிப்பது கிளாஸ். கிட்டத்தட்ட ஒரு நாற்பது, ஐம்பது பேரை பாய்ந்து பாய்ந்து அடித்து சாய்க்கிறார். ஹன்சிகாவையே தூக்கி விட்டாரே என்று நினைத்தேன், கடைசியில் பார்த்தால் அந்த நைஜீரிய வில்லனையே தூக்கி சுற்றுகிறார்! அடேயப்பா! சாதிக் கலவரத்தின் போது நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கொண்டிருப்பதை பார்த்து சார்ஜ் எடுத்துக் கொள்ள யுனிஃபார்ம் மாட்டும்போது தியேட்டரில் அத்தனை பேரும் துரைசிங்கமாய் மாறி விடுகிறோம்! இண்டர்வல் ப்ளாக் செம!!

ஹன்சிகா பள்ளி சீருடையில் பாந்தமாய் இருக்கிறார். சூர்யாவை பார்த்து உருகினாலும், கனவில் பாட்டு பாடி உயிரெடுக்கவில்லை. இன்னும் கொஞ்சம் உதட்டசைவில் கவனம் செலுத்தலாம்.

அனுஷ்கா...நான் துரைசிங்கமாய் இருந்தால், அனுஷ்காவை ஓரம்கட்டி விட்டு, ஹன்சிகாவின் காதலை ஏற்றிருப்பேன்! முதல் பாகத்துக்கும் இந்த பாகத்துக்கும் ஏதோ பத்து வருட இடைவெளி மாதிரி இருக்கிறார். பெண்களுக்குத் தான் எவ்வளவு வேகமாக வயதாகிவிடுகிறது. பாவம்!!

சந்தானத்தின் காட்டில் பேய் மழை! "ஒரு வெட்டுக்கு மூன்று துண்டு" என்று இவர் சொல்ல, பதிலுக்கு ஒருவர், " ஒரு வெட்டுக்கு ரெண்டு துண்டு தான்" என்று சொன்னவுடன், சந்தானம் பதிலுக்கு, "நான் வெட்டும்போது அவன் கழுத்துல துண்டு போட்டுருந்தான், அதையும் சேத்து சொன்னேன்!" என்பது கிளாசிக் சந்தானம். "பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே!" என்றால் தியேட்டர் குலுங்குகிறது.

விவேக் இந்தப் பாகத்தில் ரொம்ப அடி வாங்குன செம்பு!

நைஜீரிய வில்லன் நல்ல உடல்மொழி. அவ்வளவு பெரிய வில்லன் துரைசிங்கத்திடம் இவ்வளவு பயப்படுவானா என்று இருந்தது. சிங்கத்திடம் தப்பித்து, கடலுக்குள் செல்லாமல், கரையில் இருந்தே அவர் ஏதாவது செய்திருக்கலாம். இன்னும் சுவாரஸ்யம் கூடி இருக்கும் என்று நினைக்கிறேன்.

மற்றபடி ரகுமான், விஜயகுமார், ராதாரவி, நாசர், அந்த சோப்பு விளம்பரம் ஆண்டி, யுவராணி, சுமித்ரா, நிழல்கள் ரவி ஆல் வெல் பிரசன்ட்!

படத்தில் துரைசிங்கம் டி.எஸ்.பி. படத்தின் இசையும் டி.எஸ்.பி. லெட் சிங்கம் டான்சும், "கண்ணுக்குள்ள கன்னு வச்சி என்னை கொல்லாதே", ஒகே! மற்றபடி இரைச்சல்.

சிங்கம் II எனக்கு ஓகேப்பா!!

ஒரு பெண்ணின் பின்னால் பைத்தியமாய் திரிபவனை வட இந்தியாவில், அதுவும் குறிப்பாய் பஞ்சாப் மாநிலத்தில் "ராஞ்சானா" என்று அழைப்பதுண்டு. நம் ஊரில் அம்பிகாபதி, அமராவதி போல், அவர்கள் ஊரில் ஹீர், ராஞ்சா! [காலா காலத்துக்கும், ஊருக்கு ஒரு அமர காதல் காவியம் இருந்தும் இன்றும் காதலை எதிர்க்கிறார்கள்!] ராஞ்சா ஹீரின் பின்னால் காதல் பைத்தியம் பிடித்து சுற்றியது போல் இந்தப் படத்தில் தனுஷ் சோனம் கப்பூரை சுற்றுகிறார். "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் இளைஞர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்பது போல்...அவரின் காதலுக்காகவும் அவளின் ஒரு கடைக்கண் பார்வைக்காகவும் தன் வாழ்வையே அர்ப்பணிக்கிறார். அதனால் "ராஞ்சானா"

தனுஷுக்கு இதை விட அற்புதமான என்ட்ரி பாலிவுட்டில் கிடைப்பது அரிது. இந்தப் படம் எப்படி சாத்தியமானது என்றே ஆச்சர்யமாய் இருக்கிறது. "கொலைவெறி" பாடல் என்ன தான் புகழ் பெற்றாலும், தனுஷை கூப்பிட்டு படம் முழுதும் வியாபித்திருக்கும் [படம் விட்ட பிறகு நம் மனமெங்கும் வியாபித்து விடுகிறார்!] ஒரு கதாபாத்திரத்தை கொடுப்பதென்றால் சாதரணமா? அதுவும் செக்கச் செவேல் வட இந்தியர்கள், தனுஷ் மாதிரி ஒரு மாநிற ஒல்லிபிச்சானை எப்படி யோசித்தார்கள்? தனுஷை இந்த அளவு தூக்கி நிறுத்த அபே தியோல் வேறு உப்புக்குச் சப்பாணி போல் வந்து போகிறார். கேட்டால், இந்தக் கதைக்கு தனுஷ் தான் பொருந்துவார் என்று காதில் பூ சுற்றுகிறார்கள். புரியவில்லை. ஒரு வேலை, தேசிய விருது செய்த மாயமோ? இருந்தும், இது ஒரு இனிய ஆச்சர்யம் தான். அதே ஆச்சர்யம் இது வரை தனுஷை பார்க்காத வட இந்தியர்களுக்கும் இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தனுஷ் பட்டையை கிளப்பி இருக்கிறார். [இதற்கு வேறு வார்த்தையே இல்லையா? "ரவுசு விட்டிருக்கிறார்" எப்படி?]

தனுஷ் உடலில் சதை போடாத வரை, இன்னும் பத்து வருடங்களுக்கு பள்ளியில் படிக்கும் பையனாக நடிக்கலாம்! அவர் உடலின் தன்மையை வைத்து மட்டும் சொல்லவில்லை, நடிப்பில் அவரின் உடல் மொழியையும் பார்த்து சொல்கிறேன். அந்த விடலை வயதிற்கே உரிய துருதுருப்பு, குறுகுறுப்பு, சுறுசுறுப்பு என்று எல்லா பருப்புக்களையும் தன் உடல்மொழியில் கொண்டு வந்து விடுகிறார். "3" படத்திலேயே நாம் பார்த்து விட்டாலும், "வட" இந்தியர்கள் "அட!" போட்டிருப்பார்கள் என்பது நிச்சயம்! தனுஷ் பத்து வருடத்துக்கு முன்னால் சேர்ந்தாற்போல் நாலு வார்த்தை இங்கிலீஷ் கூட பேசத் தெரியாதவராய் இருந்தார். இன்று ஹிந்தி, இங்கிலீஷ் என்று சகலத்திலும் செம! ஆங்காங்கே ஹிந்தி உச்சரிப்பு சரியாய் வர வேண்டும் என்று அழுத்தி பேசியது தெரிகிறது, ஆனால் பெரும்பாலான இடங்களில் அசத்தல், அக்மார்க் ஹிந்தி!



தனுஷின் உடல்மொழியை பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன் இல்லை? பல இடங்களில் அவரது நடிப்பில், உடல் மொழியில், ரஜினியை பார்க்கிறேன். பல்லைக் கடித்துக் கொண்டே, சிரித்தபடி ஓடும்போதும், இடுப்பில் கை வைத்துக் கொள்ளும்போதும், சில க்ளோசப்புகளில் தெரிகிறது! அவர் தெரிந்து செய்கிறாரா, அல்லது இயல்பாய் அப்படி வந்து விடுகிறதா தெரியவில்லை. நான் எல்லாம் ரஜினி படம் பார்க்கும்போது நானே பாதி ரஜினியாய் தான் இருப்பேன். அவர் பேசப் பேச, நமக்கும் கண்கள் சிறுத்து, மூக்கு புடைத்து விடும்! ரஜினி மாதிரி மாறும் ஃபீல் நமக்கு நல்ல தான் இருக்கும், அப்போது நம்மை பார்ப்பவர்களை அது செம காண்டாக்கிவிடும். அதனால் இதையெல்லாம் தனுஷ் குறைத்துக் கொள்வது நல்லது. அவருக்குத் தான் நல்லா நடிக்க வருதே, அப்புறம் எதுக்கு இதெல்லாம்?



படம் முழுதும் தனுஷ், தனுஷ், தனுஷ் தான். சிரிக்கிறார், முறைக்கிறார், அழுகிறார். கதை ஒன்றும் புதுமையான கதை இல்லை. ஒரு பையன், ஒரு பெண்ணை சின்ன வயதில் இருந்தே காதலிக்கிறான். விஷயம் தெரிந்து அந்தப் பெண்ணை ஊர் கடத்தி விடுகிறார்கள். பல வருஷம் கழித்து திரும்பு வரும் அவள் இவனை சுத்தமாய் மறந்து வேறொருவனை காதலிக்கிறாள். அவனை கல்யாணம் பண்ண அவள் இவனின் உதவியையே நாடுகிறாள். தனுஷ் செய்த பிழையால் கல்யாணம் நின்று, அந்தப் பையன் இறந்து விடுகிறான். அந்த குற்ற உணர்வில் அவளுக்காகவே அவன் வாழ முற்படுகிறான். இறுதியில் அவளுக்காகவே உயிர் துறக்கிறான். எண்ட் டைட்டிலுக்கு வெள்ளித் திரையை பார்க்க! [பின்ன? நான் தான் ஃபுல்லா சொல்லிட்டேனே!]

முதல் பாதியில் க்யுட்டாய் ஒரு சிறு நகரில் உலவி வந்த ஒரு சாதாரண பையன் இடைவேளைக்குப் பிறகு சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு ஆகி விடுகிறார். தனுஷ் தொட்டதெல்லாம் துலங்குகிறது, எந்த பிரச்சனை வந்தாலும் தனி ஆளாய் சரி செய்து விடுகிறார். எனக்கு என்னமோ, "திருவிளையாடல் ஆரம்பம்" படம் பார்த்த மாதிரி இருந்தது. தனுஷின் ஹிந்தி மற்றும் நடிப்பு தான் படத்தை தொடர்ந்து பார்க்க வைத்தது.

சோனம் கபூர் தட்டையாய், நெடு நெடுவென்று இருக்கிறார். முதல் பாதியிலும், பின் பாதியிலும் அந்தக் கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை.

அபே தியோல் சிறிது நேரம் வந்தாலும் அருமையாய் செய்திருக்கிறார். வழக்கமாய் படத்தில் வருவதை போல் காதலியின் காதலன் கெட்டவன் என்று காட்டாதது ஒரு ஆறுதல்!

தனுஷின் நண்பன் கதாப்பாத்திரமும், தனுஷை நினைத்து உருகும் அந்த தெத்துப் பல் பெண்ணும் நல்ல தெரிவு. தனுஷ் சோனமை எவ்வளவு காதலித்தாரோ, அதை விட பல மடங்கு அந்தப் பெண் தனுஷை காதலிக்கிறார். அவரின் கதையை "ஹீரானா" என்று ஒரு படம் எடுக்கலாம்!

ரகுமானின் இசையில் தும் தக், ராஞ்சானா பாடல்கள் அருமை. தனுஷின் ஹிந்திக்காகவும், நடிப்புக்காகவும் பார்க்கலாம்!
சீரு கெட்ட சமூகமிது
சாதி கட்டி அழுவுது
கரி படிஞ்ச தன் முகத்தை
சேறு கொண்டு கழுவுது

அன்பு ஒன்ன விட்டுட்டு
அழிவு தேடி ஓடுது
வெட்டருவா கையுமா
வெறி கொண்டு அலையுது

நாகரீகம் வளந்து போச்சு
நாட்டில் பல வகையில
ஆயிரம் தான் படிச்சாலும்
அறிவு இன்னும் வளரல

சாதி வெறி தன்னாலே
நல்ல குடி கெட்டுது
இந்த நாட்டில் வாழ
மூச்சு எனக்கு முட்டுது

சட்ட திட்டம் வகுத்திருந்தும் 
சாதி வெறி போவல
கேடு கெட்ட சனங்களே
ஆதி மனுஷன் தேவல

* இளவரசனின் மரணம்!
சத்திரத்தில் கிடக்க வேண்டும். வானம் இருட்டிக் கொண்டு வருகிறது. சேலை நுனி சிவப்பாய், இல்லை கருஞ் சிவப்பாய் அப்படியே பரப்பிக் கொண்டே ஓடுகிறாள், சினிமாவில் கனவுக் காட்சியில் ஓடுவதை போல...ஒரு நீரோடை ஓடுகிறது. எங்கும் யவ்வனம். அமைதி. சாந்தி. என் கண்களை மூடி ரசிக்கிறேன். காற்று என் முகத்தில் அறைகிறது. தூரத்தில் ஒரு யானை தண்ணீர் குடிக்கிறது. மனதில் தோன்றுவதை நான் அப்படியே எழுதவில்லை, இங்கு எழுதக் கூடியதை மட்டும் எழுதுகிறேன் என்று தெரிகிறது. மீண்டும் மீண்டும் மனதில் முலைகள் தெரிகிறது. நல்ல ஓங்கு தாங்கான முலைகள். முகம் தெரியவில்லை. வானத்தின் நீலம் தண்ணீரில் தெறிக்கிறது. மீன்கள் துள்ளி ஓடுகின்றன. ஓடையின் சத்தம் ரம்மியமாய் இருக்கிறது. நான் ஒரு கட்டில் தான் உட்கார்ந்திருக்கிறேன். கருப்பு சேலை உடுத்திய பெண். சிவந்த பொட்டு நெற்றியில் இட்டு என்னை பார்த்து சிரிக்கிறாள். அவள் ஏனோ சானா கானை போல் இருக்கிறாள். சானாவை ஏன் நினைத்தோம் என்று நினைக்கும்போது வித்யா பாலன் தோன்றி மறைகிறார். ஒரு ஆணின் மனம் என்ன நினைக்கிறது என்று ஆராய்ந்தால் அதில் முக்கால்வாசி பெண்களின் ஞாபகம் தான் இருக்குமோ என்று தோன்றுகிறது.

திடீரென்று மேல் சொன்ன அத்தனையும் ஒரு சினிமா படம் போல் திரைக்குள் போய் விடுகிறது. ஒரு திரையரங்கு தெரிகிறது. மக்கள் மெய் மறந்து இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்கே என்று தேடுகிறேன். யாரோ ஆர்டர் செய்த தின்பண்டங்களை எடுத்துக் கொண்டு ஒருவன் இருட்டுக்குள் தட்டுத் தடுமாறி வருகிறான். திடீரென்று சென்னையின் முக்கியமான சாலை தெரிகிறது. எல்.ஐ.சி. பில்டிங் தானே அது? எத்தனை வாகனங்கள். விர் விர்ரென்று போகின்றன. எதிரில் உள்ள கட்டிடத்தில் வாழை இலை போல் உள்ள ஒன்று மயில் தோகை போல் விரிந்து பரந்திருக்கிறது. மயில் என்றதும் நேற்று செய்தித்தாளில் படித்த மயில்கள் இறந்த செய்தி ஞாபகம் வருகிறது. மூளையின் திறனை நினைத்து வியக்கிறேன். எப்படி முடிச்சுப் போடுகிறது ஒவ்வொரு ஞாபகத்திற்கும். கருப்பு நிறப் பெட்டியும், சைதாப்பேட்டையும் தெரிகிறது. அங்கு ஆட்கள் சாலையை கடக்கிறார்கள். அருகில் ஹெல்மட் அணிந்த ஒருவன் கிளம்பத் தயாராயிருக்கிறான். இவன் எங்கு போய்க் கொண்டிருப்பான்? இவன் கதை என்ன? எத்தனை மனிதர்கள், எத்தனை வாழ்க்கை? எத்தனை கதைகள்? யார் இவர்கள்? இந்தக் கணத்தில் இவர்களுடன் நான் இருக்க எது என்னை விதித்தது? உளறாதே என்கிறது மனம்.

ராஜ்பவன் வரை வந்து விட்டேன். அந்த கேட்டை தாண்டி என்ன ஒரு அமைதி. இரு காவலர்கள் காவல் காத்து நிற்கிறார்கள். ஒரு இலக்கில்லாத பயணம் போல உள் செல்கிறது ஒரு தார் சாலை. ஒரு குப்பை இல்லை. கவர்னர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? கவர்னர் என்றதும் ஏன் தலைப்பாகை போட்ட ராதாகிருஷ்ணன் ஞாபகம் வருகிறார். ரோசைய்யாவை ஞாபகப்படுத்திக் கொண்டேன். வழுக்கை தலை, வயதான ஆள். குர்தா, வேஷ்டியில் மெல்ல படியிறங்குவது போல்! மான்கள் அவரை வழி மறிக்கவில்லை தான், மறித்தால் எப்படி இருக்கும்? மான்கள் விளையாடும் ஒரு பெரிய பங்களாவில் தனக்கு வாழ்க்கை வாய்த்திருப்பதை நினைத்து அவர் என்றாவது மகிழ்ந்திருப்பாரா? அத்தனை ரசனை உள்ளதாய் இருக்குமா அவர் வாழ்க்கை? புள்ளி மான்கள் என்ன அழகு!

"ஒரு டீக்கடையை" நினைத்துப் பார்க்கிறாயா என்று ஒரு கோடு காட்டி விட்டு மேலும் தொடர்கிறது மனம். மாஸ்டர் டீயை உயர உயர அத்துகிறார். ஜனங்கள் சாலையை வெறித்தபடி, வாழ்க்கையை வெறுத்தபடி [இந்த வாக்கியத்தை என்னுள் இருந்த அறிவுஜீவி எழுத்தாளன் கோர்த்துக் கொள்கிறான்!] டீ குடிக்கிறார்கள். வாகங்களின் இரைச்சல், புகை...அப்பப்பா..என்ன நகரம் இது? நரகம்! மனம் மூனாரை கற்பனை செய்கிறது. எத்தனை வேறுபாடு. பச்சை கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. அந்த அழகை ரசிப்பதற்குள், ஒரு தேயிலை செடியின் கீழ் யாரோ குடித்துப் போட்ட பிளாஸ்டிக் கப் கண்ணில் படுகிறது. முகம் வாடுகிறது. பெரியவர்களை மதிப்பது நல்ல பழக்கம். அப்படி என்றால் இயற்கை எவ்வளவு பெரியவர்? ஏன் அவரை நாம் மதிப்பதே இல்லை? திடீரென்று அங்கிருக்கும் கட்டடங்கள் சரிந்து விழுகிறதை நான் எழுதப் போவதில்லை. உத்தரகண்டில் நடந்ததை பார்த்து விட்டு காப்பி அடித்து விட்டான் என்று சொல்வார்கள்.

அடுத்து நினைப்பதை அடுத்த பாராவிற்குள் எழுத வேண்டும் என்று மனம் கட்டளையிடுகிறது. அதன் கட்டளைப்படி...கட்டளைப்படி நடக்க வேண்டும், தொட்டனைப்பதே எனக்குப் போதும். ஒரு இறைவன் வரைந்த கதை..புதிய கவிதை..புதிய கவிதை..கதை முடிவும் தெரியவில்லை! ஆஅ.........ஒரு கிளியின் தனிமையிலே இரு கிளியின் உறவு, உறவு உறவு உறவு உறவு...ஏசுதாசுடன் சித்ராவின் குரல் மனதில் கேட்கிறது. அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் இப்போது பார்த்தால் சிரிப்பாய் இருக்கிறது. இந்த அளவு கற்பனை வறட்சி உள்ளவர்களுக்கா இளையராஜா அப்படி பாட்டு போட்டுக் கொடுத்தார்? மணிரத்னம் தான் கொஞ்சம் ஜஸ்டிஃபை செய்தார். இதை தமிழில் எப்படி எழுதுவது? ஜஸ்டிஃபை செய்தார் என்பதை? எவ்வளவு யோசித்தும் வரவில்லை. நம் தாய்மொழியில் எழுதுவதற்கு நமக்கு வரமாட்டேன் என்கிறது!

தாய்மொழி என்றதும் பள்ளியில் படித்த நிறைய செய்யுள் உனக்கு இன்னும் மனப்பாடமாய் தெரியுமே, என்று மனம் ஞாபகப்படுத்துகிறது. அன்று அப்படி பீற்றிக் கொண்டு இரண்டு வரி பாடியதும் மறந்திருந்தது தெரிந்தது. பாதகமில்லை. மீண்டும் முயற்சிக்கலாம். அங்கிங்கெனாதபடி ஆனந்த பூர்த்தியாகி, இடையில் ஏதோ வருமே...[கடைசியில் ஞாபகம் வந்தது, எங்கும் பிரகாசமாய்] தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும் படிக்கிச்சை...மறந்து விட்டது. இது ஏழாவதில் வந்த செய்யுள். மெய்தான் அரும்பி விதி விதிர்த்து உன் விரையார் கழர்க்கென் கை தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய் தான் போற்றி சய சய போற்றி என்னும் உடையாய் என்னை கண்டு கொள்ளே! இல்லை, சொதப்புகிறேன். எட்டாவது பாடமும் மறந்து விட்டது. எல்லாம் மறந்து விட்டது. எப்போது மறந்தது? இந்த செய்யுள்களை ஞாபக அடுக்கிலிருந்து கழட்டி விடலாம் என்று மூளை எப்படி முடிவெடுத்தது? எனக்குத் தேவைப்படாது என்று அதற்கு எப்படித் தெரியும்? புரியவில்லை.

என்னங்க மண்டை காய்ஞ்சுருச்சா? நிறுத்திட்டேன். ஒண்ணுமில்லை. கண்ணை மூடி கொஞ்சம் சிந்திச்ச நம்ம மனம் எவ்வளவு யோசிக்குது? அதை ஆவணப்படுத்தினா எப்படி இருக்கும்னு ஒரு விபரீத ஆசை. மனம் யோசிப்பதை எழுதினேனா, அல்லது இதை எல்லாம் யோசி என்று மறைமுகமா அதை தூண்டினேனா தெரியவில்லை. இன்னும் ராவா வரும்னு தான் நெனைச்சேன். இன்னொரு தடவை இரக்கமேயில்லாமல் கத்தரிக்காமல், வெட்டி ஒட்டாமல் எழுதி பாக்கணும். முதலில் எனக்கு இந்த நினைப்பு 2005ல் வந்தது. பலமுறை எழுதி எழுதி பார்த்தேன். இப்போது தான் ஒரு கோர்வையாய் வந்திருப்பது போல் தோன்றுகிறது. பரவாயில்லை, வெட்டி ஒட்டி எழுதினாலும், என் மனம் அத்தனை அசிங்கமாய் எதையும் யோசிக்கவில்லை. ஒருவேளை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்து கொஞ்சம் பொறுப்புடன் அது செயல்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இப்போ என் மனம் என்ன சொல்லுதுன்னா...முன்பு வலையுலகில் மற்றவருக்கு அழைப்பு விடுத்து விளையாடுவது போல் [அப்படி எந்த விளையாட்டும் இப்போது நடப்பதில்லையா?] இதை விளையாடி பார்க்கலாமேன்னுது! என்ன சொல்றீங்க? உங்க மனம் என்ன சொல்லுதுன்னு எழுதி பாருங்களேன்! சுவாரஸ்யமா இருக்காது? இதுக்கு முன்னாடி இந்த மாதிரி யாரவது முயற்சி பண்ணியிருக்காங்களா?
விஸ்வரூபம் படத்தில் கமலின் "Directorial Touches" விளக்கிக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் ஓடுகிறது. கமல் புத்திசாலி. திரை மொழி நன்கு அறிந்தவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரின் அத்தனை அறிவையும், திரை ஞானத்தையும் வைத்துக் கொண்டு எந்த மாதிரி படங்களை எடுக்கிறார் என்பதில் தான் எனக்கு ஒரு உறுத்தல். விஸ்வரூபம் படத்தையே எடுத்துக் கொள்வோம். அது ஒரு மிகச் சாதாரண மசாலா படம். துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்சை வைத்து ஜல்லி அடித்த மாதிரி இதில் சீசேம் செல்சை வைத்து ஜல்லி அடித்து இருக்கிறார்கள். [தாங்க்ஸ் வாத்தியார்!]

படத்தின் ஆரம்பத்தில் ஒருவன் மிக நல்லவனாய், அமைதியானவனாய், அம்மாஞ்சியாய் இருப்பான், அவனே ஒரு சந்தர்ப்பத்தில் முப்பது பேரை பறந்து பறந்து [மறைக்கப்பட்ட ரோப்பை பிடித்திருக்கும் கையை கவனிக்கவும்!] அடிப்பான் என்று இனிமேல் தமிழ் சினிமாவில் யாராவது படம் எடுத்தால் உண்மையில் நானே அப்படி மாறி அந்த படம் எடுத்தவர்கள் அத்தனை போரையும் பறந்து பறந்து அடிப்பேன்! இன்னும் எத்தனை வருஷம்யா இதே கதையை சொல்லுவீங்க? உங்களுக்கு ட்விஸ்ட் தானே வேணும்? நான் சொல்ற மாதிரி செய்யுங்க! படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன், அம்மாஞ்சியாய் அப்பாவியாய் இருப்பான். அவன் படம் முடியும் வரை அப்படியே இருப்பான்! மக்கள் எல்லோரும் இவன் விஸ்வரூபம் எடுப்பாண்டா என்றே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அனால், அவன் கடைசி வரை அப்படியே இருப்பான். எப்படி ட்விஸ்ட்? [என்ன கழுத, படம் ஓடாது!]


அந்த வீடியோவுக்கு வருவோம். கமல் விஸ்வரூபம் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் போகிற போக்கில் கதைக்கு தேவையான பல விஷயங்களை பூடகமாக சொல்லிக் கொண்டே போகிறார். அதை திரும்ப திரும்ப பார்த்தால் தான் புரியும் என்கிறார்கள். கண்டிப்பாய் நானும் ஒத்துக் கொள்கிறேன். பூடகமாக பல விஷயங்களை வைத்திருக்கிறார் தான். ஆனால் அவர் எப்படிப்பட்ட ஒரு கதைக்காக இதை எல்லாம் செய்கிறார் என்பதில் தானே அதன் வலு குறைந்து விடுகிறது! "நோலன்" படங்களில், "குப்ரிக்" படங்களில் இப்படி பல விஷயங்கள் பூடகமாய் இருக்கும். அதோடு நல்ல ஒரு கதையும் இருக்கும். அந்தக் கதையின் கருவை நினைத்து, பிரமித்து, மீண்டும் மீண்டும் நாம் பார்க்கும் போது அடப்பாவி, இங்கேயே இதை சொல்லிட்டானா என்று ஆச்சர்யமாய் இருக்கும். அது அற்புதமான ஒரு படானுபவத்தை கொடுக்கும். இந்த மாதிரி படங்களை அலசி ஆராய்ந்து நூறு பதிவுகள் இருக்கிறதே, அவைகளை படியுங்கள்.

நான், கஜினி படம் பார்க்கும்போது பதினைந்து நிமிடத்தில் மறக்கும் ஒருவனால் எப்படி கொலை எல்லாம் செய்ய முடியும்? எல்லாவற்றையும் அவன் ஞாபகப்படுத்திப் பார்ப்பதற்குள் மறுபடியும் மறந்து விடுவானே என்ற கேள்வி தான் என் மனதில் இருந்தது! படம் கலகலவென்றும், விருவிருவென்றும் இருந்தாலும், அந்த லாஜிக் இடைஞ்சலே என்னை அதிகம் தொந்தரவு செய்தது. அதுவே அந்தப் படத்தின் மூலமான மெமெண்டோவை பாருங்கள். அந்த இடைஞ்சல் இருக்காது. முதல் முறை படம் பார்க்கும்போது உங்களுக்கு பயங்கரமாய் குழம்பும். மறதி உள்ளவன் வாழ்க்கை அப்படித் தானே இருக்கும்? இதை தான் நான் சொல்கிறேன். சொல்ல வந்த கதையை நேர்மையாய் சொல்லுங்கள் என்று. அவர்கள் அதை தான் செய்கிறார்கள். ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்க விரும்பினால், அதே மாதிரி எடுக்க வேண்டியது தானே? ஏன் தமிழ்நாட்டு மசாலாவை அதில் தடவுகிறீர்கள்?

கமலிடம் நான் எதிர்பார்ப்பது ராஜ பார்வை, பேசும்படம், மகாநதி போன்ற படங்களை..அமைதியாய் இருக்கும் ஒருவன் அம்பது பேரை அடிப்பான் என்பதையெல்லாம் ரஜினிகாந்த் பார்த்துக் கொள்வார். அதுக்குத் தானேப்பா அவரை வச்சிருக்கோம்! அவர் இன்னும் நூறு படத்தில் அதை செய்தாலும் நாம் பார்ப்போம்! என்ன நான் சொல்றது?

அப்புறம் கமலை பற்றி இவ்வளவு பேசுறதால, இதுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு விஷயத்தையும் இங்கே சொல்லணும். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அபூர்வ ராகங்களில் ரஜினி தேர்வானத்தை பற்றி சொன்னார். அதை பயங்கர டிவிஸ்டுடன், சுவாரஸ்யமாய் தான் சொன்னார். ஆனால் என்னைப் பொருத்தவரை அது அவரின் முகத்திரையை தான் கிழித்தது. விஷயம் இது தான். அபூர்வ ராகங்கள் வரும்போது இவர் பாலச்சந்தரின் ஆஸ்தான சீடன் ஆகிவிட்டார். இவர் தான் அந்தப் படத்தின் கதாநாயகன். ரஜினி ரோலுக்காக ஆள் எடுத்துக் கொண்டிருக்கும்போது இவர் அங்கு இருந்திருக்கிறார். "என்னடா, செம ரோலாய் இருக்கும் போல இருக்கே...எவனோ வந்து தட்டிட்டு போயிடுவான் போல இருக்கே!" என்று இவர் பதறி இருந்திருக்கார். பாலச்சந்தரிடம் போய், "சார் நான் பண்றேனே" என்றாராம். அவர் "நீ தான் இந்த படத்துல ஆல்ரெடி நடிக்கிறியே?" என்றாராம். "இல்லை சார், பரவாயில்லை, இதையும் நானே டபுள் ரோலா பண்ணிடறேனே" என்றவரை, "அதெல்லாம் வேணாம், நீ போடா" என்று பாலச்சந்தர் விரட்டி விட்டார். அந்த ரோலுக்குத் தான் பிறகு ரஜினியை போட்டார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவர் அப்போது பாலச்சந்தரின் பிரதான சிஷ்யன். அவரின் எல்லா படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார். நடிக்கப் போகிறார். அந்தப் படத்தின் கதாநாயகனே இவர் தான்! அது ஒரு தம்மாதுண்டு ரோல். அதையும் பிறருக்கு விட்டுக் கொடுக்க இவருக்கு மனமில்லை. என்ன தான் கலை தாகம், தொழில் பக்தி என்றாலும் ஒரு அளவில்லையா? இங்கே என்ன நவராத்திரி படமா எடுக்குறாங்க? சாவித்திரி தவிர எல்லாமே சிவாஜி கணேசனா இருக்கிறதுக்கு? நல்ல வேலை பாலசந்தர் கொஞ்சம் அசந்திருந்தாருன்னா நமக்கு ரஜினி கெடைச்சுருப்பாரான்னு சந்தேகம் தான்! ம்ம்...கமலை மட்டும் சொல்லி தப்பில்லை. "அவாள்ல" முக்காவாசி பேர் அப்படித் தான் இருக்கா!


இன்று காலை ஏழு இருபது டபுள் டெக்கர் ரயிலில் என் குடும்பம் பெங்களூர் பயணம். ரயிலேற்றிவிட சென்றிருந்தேன். [ஒரு பதிவுக்காச்சு!] சென்ட்ரல் எதிரில் இருக்கும் பாலத்தில் இருந்து கீழே இறங்கும்போதே ஆரம்பித்து விடுகிறது...கார்களின் அணிவகுப்பு. சென்ட்ரல் மாதிரி ஒரு குப்பை ரயில் நிலையம் உலகத்திலேயே எங்கும் இருக்காது. நாளுக்கு லட்சக்கணக்கில் பயணிகள் வந்து போகும் இடம் கந்தரகோலமாய் இருக்கிறது. பாலத்திலிருந்து இறங்கும் கார்கள் சிக்னலில் வலது பக்கம் திரும்பி சிக்னலை தாண்டியதும் இடது புறம் திரும்ப வேண்டும். சென்ட்ரலில் இருந்து கிளம்பும் பஸ்கள் ரோட்டுக்கு வருவதற்கு வலது பக்கம் வருகிறது. அவ்வளவு தான், முட்டி மோதிக் கொண்டு ஒரே இரைச்சல். எதிரில் பார்த்தால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை! இத்தனை பெரிய ரயில் நிலையத்திற்கு எதிரில் இத்தனை பெரிய ஆஸ்பத்திரியை கட்ட எந்த புண்ணியவான் யோசித்தானோ! வெள்ளைக்காரன் காலத்தில் கட்டி இருக்கலாம், அப்போது வாகனங்கள் குறைவு. அவன் தேவையில்லாமல் ஹாரன் அடிக்க மாட்டான். ஆனால் நம் மக்கள்? ஆளே இல்லாத ரோட்டிலேயே தனக்கு பிடித்த பாட்டையே ஹாரனாய் அடித்துக் கொண்டே போவான், இந்த இடத்தில் கேட்கவா வேண்டும். நோயாளிகள் பாவம்!!

எங்கள் கால் டாக்சி ஒரு வழியாய் இடது புறம் திரும்பி நிலையத்தில் நுழைவதற்காக கார்களின் வரிசையில் நின்றது. ஏழு இருபதுக்கு ரயில். மணி ஆறே முக்கால்! என் அப்பா ரயில் ஏறுவதென்றால் முதல் நாளிலிருந்தே டென்ஷன் ஆகிவிடுவார். இப்போது கேட்க வேண்டுமா? அந்த நுழைவாயிலில் நின்று கொண்டு இருந்த ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள்  இங்கேயே இறங்கிக்குங்க என்று வரும் வண்டிகளை எல்லாம் கையசைத்து  அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார். ஆறு பெரிய லக்கேஜ்கள், இரு வயதானவர்கள், ஒரு பெண், ஒரு குழந்தையோடு எப்படி ஐயா இறங்கி நடப்பது? நல்ல வேலை எங்களிடம் சொல்லவில்லை. எங்கள் ஓட்டுனர் சாமர்த்தியமாய் உள்ளே நுழைந்து படாத பாடு பட்டு ஒரு இடத்தை பிடித்து நிறுத்தினார். வெகு நேரம் நிறுத்தினால் அபராதம் போடுவார்களாம். எளிதாய் காரை நிறுத்த இடம் இருந்து, லக்கேஜ்களை இறக்கி போக முடிந்தால், நான் ஏனைய்யா அங்கே நிற்கப் போகிறேன்? மக்களுக்கு எந்த வித வசதியும் செய்து கொடுக்காமல் அபராதம் வேறு வசூலிக்கும் நாடு நம் நாடு தான்!  கடகடவென இறங்கி லக்கேஜ்களை அடுக்கி விட்டு நான் நடைமேடை டிக்கட் வாங்கச் சென்றேன். இன்னும் இந்த நடைமேடை சீட்டு ஏன் வாங்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. சென்ட்ரலில் இது வரை செக் செய்து நான் பார்த்ததேயில்லை. இருந்தும், கடமை!! சீட்டை வாங்கிக் கொண்டு லக்கேஜ்களுடன் உள்ளே நுழைந்தோம்.

உள்ளே ஒரு நாடே இருந்தது. [கவனிக்க ஊர் இல்லை, நாடு!] இத்தனை பேரா இன்று பிரயாணப்பட்டிருக்கிறார்கள்? இதே நேரம் தான் ஒரு பெரிய கூட்டம் சாலையில் அலை மோதுகிறது, இதே நேரம் தான் ஒரு பெரிய கூட்டம் கவுந்தடித்துத் தூங்குகிறது! இன்னும் எத்தனை பேரடா இருக்கீங்க நாட்ல? டிஸ்ப்ளேயில் வழக்கம் போல் எல்லா ரயிலின் விவரங்களையும் பார்த்த பிறகு, நம் ரயில் இங்கிருந்து தான் கிளம்புகிறதா? இன்று தானா? இந்த நேரம் தானா? என்று அடிப்படை கேள்விகள் எழுந்து டிக்கட்டை சரி பார்த்த பிறகு மெதுவாய் ஒரு ஓரமாய் அதன் விவரம் ஓடியது. ஏழாவது நடைமேடை. அப்பாடா! அந்தக் கூட்டத்தில் முட்டி மோதி, இழுத்துக் கொண்டு செல்லும் சக்கரப் பெட்டி ஒரு புறம் போக, நான் ஒரு புறம் போக, அதையும் தாண்டிச் செல்லும் கூட்டம்! இத்தனை கூட்டம் ரயிலை பிடிக்க முந்தியடித்துக் கொண்டு ஓடும் இடத்தில் நட்ட நடுவில், நடு சென்டரில், ரயிலிலிருந்து இறங்கும் சரக்குகளை வைத்துக் கொண்டு கணக்கு பார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த சரக்குகளை ஏற்றும் வண்டி ரயிலை விட பெரிதாய் இருக்கிறது. வண்டி ஒரு இடத்தில் போகிறது, அதை இழுத்துக் கொண்டு போகும் ஆள் எங்கோ இருக்கிறான். அவனுக்கு தான் மட்டும் தான் அந்த நடைமேடையில் இருப்பதாய் ஒரு பிரமை. என்ன ஒரு செளகரியம். முருகா....

ஒரு வழியாய் ஏழாவது நடை மேடை வந்து சேர்ந்தோம். நான் நினைத்தது போல் எங்கள் பெட்டி எஞ்சினுக்கு பக்கத்தில் இருந்தது. எஞ்சின் தான் பெங்களூருக்கு அருகில் இருந்தது! வந்தோம், சிறிது நடந்தோம், ரயிலில் ஏறினோம் என்று எனக்கு இருந்ததேயில்லை. நல்ல பேரு வச்சான், நடை மேடை என்று, நடந்தோம் நடந்தோம்...எல்லா பெட்டிகளையும் கடந்தால் கடைசி பெட்டி நம் பெட்டி! டபுள் டெக்கர் ரயில் [டபுள் டெக்கர் தமிழில் இரண்டடுக்கா?]...அட! வெளித்தோற்றம் அருமை. சிவப்பும் மஞ்சளும் கலந்து கட்டி ஒரு கலரில் பார்க்க ஜோராய் இருக்கிறது. ரயில் முழுவதும் குளு குளு வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே? ஒன்று கீழ் தளம், இன்னொன்று மேல் தளம். உள்ளே நான் ஒருவனாய் போகவே கஷ்டமாய் இருக்கிறது, இதில் லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு...இதில் எதிரில் வரும் ஆட்கள்! இடப்பற்றாக்குறை மிகுந்து அந்த இடமே ஒரே டஞ்சன்! ஒன்லி சீட்டிங். ஐந்தரை அடி உள்ள எங்களுக்கே முன்னால் சீட் முழங்காலில் இடிக்கிறது. ஆறு ஆடி ஆட்கள் ஒழிந்தார்கள். லக்கேஜ்களை வைக்க மேலே ஒரு அடுக்கு. அதில் பெண்களின் ஹாண்ட்பேக் மட்டும் தான் நுழையும். எந்த பெரிய பையும் நுழையாது. அதிலும் சக்கரப் பெட்டி லக்கேஜ்களை வைத்திருந்தால் நீங்கள் காலி! நான் கஷ்டப்பட்டு இரண்டு பைகளை திணித்தேன். பெங்களூர் வருவதற்கு அரை மணி முன்னரே அதை வெளியே எடுக்க ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் இறங்க முடியும். ஒரு ஊருக்கு போவதென்றால் நம் மக்களின் மனநிலை என்ன என்று அரசாங்கத்துக்கு தெரியாதா? எத்தனை பொருள்கள் சேரும் என்பது தெரியாதா? வெள்ளைக்காரனுக்கு செய்ய வேண்டிய ரயிலை எல்லாம் நம் ஊரில் ஏன் செய்கிறார்கள்? "இரண்டடுக்கு வைத்தால் இன்னும் நிறைய காசு சம்பாதிக்கலாம் மற்றபடி வசதியை பற்றி நமக்கென்ன கவலை!" என்பது போல்  இருக்கிறது இவர்களின் யோசனைகள்! நிச்சயம் சொல்வேன், அதில் பெரிய லக்கேஜ்களை வைத்துக் கொண்டு பிரயாணம் செய்பவர்கள் நரக வேதனையை தான் அனுபவிப்பார்கள்.

ரயிலில் என்ஜினை ஓட்டியதால் லேசாய் அசைந்ததும் நான் வெளியே வந்தேன். கீழ் அடுக்கில் உள்ளவர்களிடம் முழங்கால் இட்டுக் கொண்டு விடை கொடுத்துக் கொண்டிருந்தார்கள் உறவினர்கள். பார்ப்பதற்கு புதுமையாய் இருந்தது. அங்கு உள்ள ஒரு கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டு ரயில் புறப்படுவதற்காக காத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது தான் கவனித்தேன், அந்த நடைமேடையில் வலது பக்கத்தில் யாருமே இல்லை. அடப்பாவிகளா, அங்கு நடைமேடைக்கு ஓடும் மக்களின் நடுவில் அத்தனை சரக்குகளையும் கொட்டி வைத்திருக்கிறீர்கள், இங்கு இவ்வளவு பெரிய இடம் சும்மா கிடக்கிறதே என்று! சரக்குப் பெட்டியை இந்த மாதிரி இடங்கள் வருவது போல் நிறுத்தினால் என்ன? எப்படியும் அதையும் ஒரு தள்ளு வண்டியில் தான் வைத்துக் கொண்டு தள்ளிக் கொண்டு போகப் போகிறார்கள். இங்கிருந்தே தள்ளிக் கொண்டு போகலாமே? ஏன் மக்களின் நடமாட்டம் இருக்கும் இடத்தில்? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா? மிகவும் சலிப்பாக இருந்தது. ரயில் கிளம்பியதும், இந்து இடுக்கில் உட்கார்ந்திருந்த என் குடும்பத்தை பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டே செயற்கையாய் ஒரு டாட்டா காட்டி விட்டு கிளம்பினேன்.

எதிரில் இருக்கும் பறக்கும் ரயிலில் ஏறி வேளச்சேரி சென்று பின்பு அங்கிருந்து மடிப்பாக்கம் செல்ல வேண்டும். அயர்ச்சியாய் இருந்தது. வெயில் வேறு ஆரம்பித்துவிட்டது. அப்போது தான் பையில் ரயில் டிக்கட் எடுக்க சில்லறை இல்லை என்று நினைவுக்கு வந்தது. ஒரு நடை மேடை கடைக்கு போய் நூறு ரூபாய்க்கு சில்லறை கேட்டேன். எதையாவது வாங்கலாம் என்றால் ஒன்றும் பிடிக்கவில்லை. "சில்லறை கொடுக்கிறேன், ஆனால் தொண்ணூறு ரூபாய் தான் கிடைக்கும்" என்றார் கடைக்காரர். "ஏன்" என்றேன்? பத்து ரூவா கமிஷன் சார் என்றார். சில்லறை கொடுப்பதர்க்கெல்லாம் கமிஷன் வாங்க ஆரம்பித்து விட்டார்களா என்று யோசித்தேன். நல்ல வேளை, கடையில் தண்ணீர் போட்டுக் கொண்டிருந்தவர் என்னை பார்த்து சிரித்தார். அப்போது தான் அது தமாசு என்று புரிந்தது. என்னை பார்த்தாலே இப்படி எல்லாம் பேசணும்னு தோணும் போல! எப்படித் தான் கண்டுபிடிக்கிறாங்களோ! ஒரு பிறவிக் கலைஞன் நான், என்கிட்டயே ஆக்டிங்கா என்று நினைத்துக் கொண்டேன். [இதெல்லாம் சொன்னா இருபது ரூபா கேப்பானே!] சரி போனால் போகட்டும் என்று  "ஒரு தண்ணீர் பாட்டில் கொடுங்க" என்றேன். சில்லென்று ஒன்று வாங்கிக் கொண்டேன். "இதுக்கு கமிஷன் கிடையாதுல்ல?" என்றேன். "இல்லை சார்" என்றார், சிரித்துக் கொண்டே. "நல்லா வியாபாரம் பண்றீங்க" என்றேன். "என்னங்க பண்றது, கடைக்கு வாடகை தரனும், அம்மா வேறு வெலய எல்லாம் ஏத்திட்டாங்க, நாங்க பப்ளிக் கிட்ட தானே வாங்கணும்" என்றார். ஆமா எல்லாத்தையும் தாங்க பப்ளிக்னு ஒரு இளிச்சவாயன் இருக்கானே என்று நினைத்துக் கொண்டு நடையை கட்டினேன்.

எதிரில் உள்ள பூங்கா நிலையத்திற்கு சென்று பறக்கும் ரயிலை பிடிக்க வேண்டும். எல்லோரு மாதிரியும் ரோட்டை க்ராஸ் செய்யாமல் சப்வேயில் இறங்கினேன். கொஞ்சம் இங்கே அங்கே பார்த்துக் கொண்டே நீங்க இறங்கினீர்கள் என்றால் அவ்வளவு தான், நேராய் கீழே விரித்திருக்கும் ஒரு வாட்ச் கடையில் உங்கள் காலை கை வைக்க வேண்டி இருக்கும். அடப்பாவிகளா...உங்களை எல்லாம் கேப்பாரே இல்லையா? படி ஏறி மேலே வந்ததும், மலை ஏறத் தொடங்கினேன். ஆமாம் மேம்பாலத்தை தான் சொன்னேன். சென்ட்ரல் எங்கோ இருக்கிறது, பூங்கா ரயில் நிலையம் எங்கோ இருக்கிறது. அந்த பாலத்தின் வழியே எல்லா மக்களும் லக்கேஜ்களுடன் ரயில் பிடிக்க ஓடுகிறார்கள். வெளிநாட்டு ஏர்போர்டில் இருப்பது போல், அங்கிருந்து இங்கு வரை ஒரு கன்வேயர் பெல்ட் போன்று ஒன்றை வைத்தால் எவ்வளவு வசதியாய் இருக்கும். ஏறி நின்றால் அது இங்கு கொண்டு வந்து இறக்கி விட வேண்டும்! எவ்வளவு செலவாகிவிடும்? பக்கத்திலேயே பல கோடிகள் செலவு  செய்து கட்டிய தலைமைச் செயலகம் பாழாய் கிடக்கிறது. மக்களுக்கு என்று வரும்போது இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது! வர வர நம் நாட்டை நினைத்தால், நாற்பது வயதில் நான் போய் சேர்ந்து விடுவேன் போலிருக்கிறது!

அரசாங்கம் தான் மக்களை மதிப்பதில்லை. இந்த வெயிலாவது கொஞ்சம் கருணை காட்டலாம்! ஏழரை மணிக்கு சுட்டெரிக்கிறது. நான் நடக்கும்போது அருகில் ஒரு பெண் [சின்க்கி போல் இருந்தார்] வேர்க்க விருவிருக்க வலது கையில் ஒரு சக்கர பெட்டியும், இடது கையில் ஒரு தோல் பையும் மாட்டிக் கொண்டு மலை ஏறிக் கொண்டிருந்தார். பார்க்க பாவமாய் இருந்தது. உதவிக்கரம் நீட்டலாம் என்று யோசிக்கும்போது படி இறங்கும் இடம் வந்தது. துணிந்து கேட்டேன். சற்று நேரம் என்னை திருடனை போல் பார்த்தவள், [பட்டணத்துல பாத்து சூதானமா நடந்துக்கம்மா என்று யாராவது சொல்லி அனுப்பி இருக்கக் கூடும்] திருடினாலும் பரவாயில்லை, இனி நம்மால் இதை தூக்கிக் கொண்டு படி இறங்க முடியாது என்று நினைத்திருப்பாள் போலும், சரி என்று ஒப்புக் கொண்டாள். அந்தப் பெட்டி என் கணம் இருந்தது. தட்டுத் தடுமாறி ஒரு வழியாய் இறங்கி டிக்கட் கவுண்டருக்குள்  டிக்கட் வாங்க முனைந்தோம். "உங்களுக்கும் நான் சேர்த்து வாங்கி விடுகிறேன்!" என்றெல்லாம் அவள் மிகையாய் நடந்து கொள்ளவில்லை. அவள் அவள் டிக்கட்டையும் நான் என் டிக்கட்டையும் வாங்கினோம். மறுபடியும் ஒரு சப்வே. ஏறி இறங்கி அப்பாடா...என்று மூச்சு வாங்குவதற்குள் ரயில் வருவது தெரிந்தது. "மிக்க நன்றி" என்றாள் சம்பிரதாயமாய்! தண்ணீர் குடித்து விட்டு, "வேண்டுமா?" என்று கேட்டேன். வாங்கப்போனவள் "சில் தண்ணி வேண்டாம்" என்று சொல்லிவிட்டாள். சென்னையில் சில் தண்ணி குடித்தால் தான் பானை தண்ணீர் மாதிரி இருக்கும். சாதாரண தண்ணி குடித்தால் சுடு தண்ணீர் தான்! எப்படி சில் தண்ணீர் குடிக்காமல் இருக்கிறார்கள் என்று தோன்றியது.

ரயிலின் முதல் பெட்டி வந்து அருகில் நின்றது. கூட்டம் முண்டி அடித்துக் கொண்டு ஏறியது. சென்ட்ரலில் ஊருக்குச் செல்பவர்கள் எல்லாம் திரும்பி வந்தது போல் கூட்டம். ஏண்டா நீங்க எல்லாம் ஊருக்குப் போலியா? என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. சத்தியமாய் சொல்கிறேன். உத்தரகண்டில் வந்தது போல், ஒரு வெள்ளமோ, சுனாமியோ, பூகம்பமோ வந்து ஒரு பத்து இருபது ஆயிரம் என்று போவதை விட, ஒரு முப்பது, நாற்பது கோடி போய் சேர்ந்தால் நாடு செழிக்கும். அப்படி ஆகும் என்றால் நானும் போகத் தயார்! [நல்லவன்டா, நீ நல்லவன்டா!] என்னா கூட்டம்! அடித்து பிடித்து அவளின் பெட்டியை தூக்கிக் கொண்டு அவளுக்கும் ஒரு இடம் பிடித்தேன். எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது! அவளுக்குத் தரமணி இறங்க வேண்டும். பெட்டியை தூக்கி வந்ததை காரணம் காட்டி நான் எதுவும் பேச விரும்பவில்லை. நிற்க, நான் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லை. ஃபிகர் சுமார் தான்! அது ஒரு காரணமாய் இருக்கலாம்.

தரமணி அருகே வந்ததும், அவளே மெதுவாய் பேச்சு கொடுத்தாள். ஹைதிராபாத்தில் படிக்கிறாளாம். இங்கு ப்ராஜக்ட் செய்ய வந்துள்ளாலாம். நான் என்ன செய்கிறேன் என்று கேட்டால். ஐ.டி. என்றதும் கொஞ்சம் உற்சாகம் ஆனாள். பிறகு ஏதோ சொல்ல வந்தால், காற்றில் சரியாய் கேட்கவில்லை. வீடு வரைக்கும் இந்த பெட்டியை தூக்கிட்டு வந்துற்றியா   என்பது போல் தோன்றியது. பிறகு அவள் பாவம் பொழைச்சு போறான் என்று விட்டு விட்டால். நானும் கேட்கவில்லை. ஒருத்தன் சிக்கிட்டா போதுமே!! வேளச்சேரி வந்ததும் இறங்கி வீட்டுக்கு நடந்தேன். தமிழர்கள் எப்போது இப்படி துப்பக் கற்றுக் கொண்டார்கள் என்று ஆராய வேண்டும். படித்தவன், படிக்காதவன் என்று எவனை பார்த்தாலும் துப்பிக் கொண்டே தான் நடக்கிறான். முன்பு ஓரத்தில் துப்பினான், இப்போது நடு ரோட்டில் துப்புகிறான். இதை படிப்பவர்களில் பத்து சதவிகிதம் பேர் இந்தப் பழக்கத்திலிருந்து திருந்தினாலும் எனக்கு மகிழ்ச்சி! [படிக்கிறதே பத்து பேரு தான்! பேராசை] இந்த நாட்டில் எத்தனை விஷயத்தை தான் திருத்துவது? மாற்றம் மெதுவாய் தான் வரும், இப்போது நாம் போராடினால் தான் பேரன் பேத்தி காலத்திலாவது நல்ல சமுதாயம் அமையும் என்ற பேச்சில் எனக்கு நம்பிக்கையே போய் விட்டது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

எல்லோருமே காதலை தூக்கி பிடித்திருக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு காதலே பிடிக்காது. அவனுக்கு அது பிடிக்கும்போது என்ன நடக்கிறது? இது தான் கதை.

தீயா வேலை செய்யணும் குமாரு [தீவேசெகு], "சோட்டி சி பாத்" [ஹிந்தி] படத்தின் மொக்கை தழுவல். அது எனக்கு பிடித்த படம். எழுபதுகளில் அமிதாப் பச்சன் ரத்தம் வழிய வழிய எல்லோரையும் சுட்டுக் கொண்டிருந்த காலத்தில் அழகாய், அமைதியாய் வந்த ஒரு நல்ல படம். அதை அப்படியே எடுத்திருந்தாலும் அருமையாய் வந்திருக்கும். அதை விட்டு விட்டு, அதை தமிழ் படுத்துக்குறேன் என்று சொல்லி படுத்தியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதையை உங்களுக்குச் சொல்கிறேன். சுயநம்பிக்கை இல்லாத, பயந்தாகொல்லி, மிடில் கிளாஸ் ஒருவன் ஒரு அழகான பெண்ணை வளைக்க முயல்கிறான். என்ன முயன்றும் தோற்றுக் கொண்டே இருக்கிறான். இந்த மாதிரி விஷயங்களுக்கு ஆலோசனை வழங்கும் கர்னல் ஒருவரிடம் பாடம் படிக்கிறான். அவரின் ஆலோசனைப்படி, தன் அத்தனை குறைகளையும் தீர்த்துக் கொண்டு அந்தப் பெண்ணை கை பிடிக்கிறான். சிம்பிளான கதை. அழகான திரைக்கதை. சரியான நடிப்பு, வசனம். பாடல்களும் அருமையாய் இருக்கும். அந்த மிடில் கிளாஸ் ஆளாக அமோல் பலேக்கர். கர்னலாக அசோக் குமார். தீவேசெகு வில் அந்த மிடில் கிளாஸ் ஆள் சித்தார்த். அட்வைசராய் சந்தானம். அதில் அசோக் குமாரிடம் ஒரு காட்சியில் அட்வைசுக்காக அமிதாப் வருவார். இதில் விஷால் வருகிறார்! [ஹிந்தியில் அமிதாப்பை வைத்து அதே படத்தை எடுத்த தயாரிப்பாளர் ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருந்தார், தமிழில் விஷாலை வைத்து அதே இயக்குனர் மற்றொரு படம் எடுக்கிறார்! இதுலையுமாடா  காப்பி!!]

சுந்தர் இப்படி ஒரு ஹிந்தி படத்திலிருந்து சுட்டு விட்டாரே, ஏன் இதற்கு இதெல்லாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதை எழுதும்போது வின்னர் படம் டீவியில் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பார்த்தால் பிரசாந்த், கிரண் கட்டிலில் விழும் காட்சி அப்படியே "ஹம் ஆப்கே ஹைன் கௌன்" காட்சியின் காப்பி. சல்மான் கான் மாதுரி தீட்சித் எதிர்பாராத போது, அவர் கையை விடுத்து விடுதலை அளித்து அவரின் கையை அவரே கட்டிக் கொண்டு மாதுரியை இம்ப்ரெஸ் செய்வார். பிரசாந்த் அதையே அசட்டுத்தனமாய் செய்கிறார். சரி தான், ஹிந்தி ஒழிந்ததால் யாருக்கு லாபமோ தெரியவில்லை, நம் கோலிவுட் இயக்குனர்களுக்கு நல்ல லாபம் தான்! சுந்தரின் "கலகலப்பு" எனக்குப் பிடித்தது. அந்த அளவுக்கு கூட இல்லை இந்தப் படம். படத்தில் ஆயிரம் லாஜிக் ஓட்டைகள். படத்தில் எனக்குப் பிடித்தது காஸ்ட்யும்ஸ். குஷ்புவுக்கு நல்ல டிரெஸ்ஸிங் சென்ஸ்! பாட்டும் ஒன்று ரெண்டைத் தவிர தேறவில்லை.ஆமா, அது என்ன சந்தானம் ஹன்சிகாவை அப்படியே சாப்பிடுவது போல் பார்த்தார். நானும் சரி, இவர் அவரிடம் காதலில் விழப் போகிறாரோ என்று நினைத்தேன். திடீரென்று பாசமலர் பாட்டை போட்டு அண்ணன் தங்கச்சின்னு சொல்லிட்டீங்க? டிவிஸ்டா? சரி சரி...

சித்தார்த்துக்கு 34 வயதா? நம்பவே முடியவில்லை. இன்னும் சின்ன பையனை போலவே இருக்கிறார். தாடி மீசை சரியாய் வளரவில்லை என்றால் கொஞ்சம் இளமையாய் தான் தெரிவார்கள் போல! ஒன்று பல்லைக் காட்டி சிரிக்கிறார், இல்லை பாவமாய் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்கிறார். அவ்வளவுதான் இவரின் நடிப்பு! இவரின் ஒரே மாதிரியான ரியாக்ஷன்ஸ் அலுப்பூட்டுகிறது. இவரை வைத்து ஒரு படம் வரப் போகிறது என்றாலே, இவரை ஏன் போடுகிறார்கள் என்று தான் தோன்றுகிறது! விடை தெரியவில்லை...சாரி!

ஹன்சிகா, சின்ன குஷ்புவா இவர்? இப்போதே பெரிய குஷ்பு மாதிரி இருக்கிறார்! நல்ல காஸ்ட்லி விர்டிஃபைட் டைல்ஸ் மாதிரி மொழு மொழு என்று இருக்கிறார். [நானும் கொஞ்சம் சந்தானம் மாதிரி லைன் பிடிக்க ஆசைப்பட்டு எழுதினேன்!] தொப்புள் குலுங்க அந்த பரந்து விரிந்த வயிற்றுடன் அவர் ஆடும்போது ஜெயமாலினி  ஞபாகம் வருகிறார். என்னமோ வாயசைக்கிறார், என்னமோ வார்த்தை வருகிறது. என்ன டாஷுக்கு மொழியே தெரியாத நமக்கு கொஞ்சமும் சம்மந்தமே இல்லாத ஒரு பெண்ணை நடிக்க வைக்க வேண்டும் என்று புரியவில்லை. இதை சொன்னால் எனக்கு வயசாயிருச்சுன்னு சொல்லுவீங்க! அதனால் நான் எதுவும் சொல்லாமல் உங்களோடு சேர்ந்து ஜொள்ளுகிறேன்!

சந்தானத்துக்கு லவ் குரு கதாப்பாத்திரம். சிவ கார்த்திகேயன் முதல் ஆர் ஜே பாலாஜி என்று வாயால் வாலிபால் விளையாடும் பலர் வந்தாலும் இவரின் இடம் இன்னும் இவரிடமே இருப்பதிலேயே தெரிகிறது இவரின் பலம்! எங்கிருந்து தான் அந்த ஒன் லைனர்ஸ் பிடிப்பாரோ! டீவியில் போடுவதையும் சேர்த்து, மனோபாலாவை பார்த்து, "ஹே நடராஜ் பென்சில்", "ஒடம்ப மூட்றா, பச்சரிசின்னு எறும்பு இழுத்துட்டு போயிற போகுது!" என்பதிலும் சரி, "தட்டுல அல்வா விழுந்தாலும், ஐஸ்க்ரீம் விழுந்தாலும் உடனே நக்கிடனும்", "தும்பிக்கை தான் குறை, இருந்தா கும்கி யானை மாதிரியே இருப்பான்!" "இவன் யாரு, பலூன் விக்கிறவன் மாதிரியே இருக்கிறான்", "இது வீடு இல்லை விக்ரமன் சார் படம்!" என்று படம் பூராவும் அவரின் கலாய் தான்! காற்று அவர் பக்கம் அடிக்கிறது, தூற்றிக் கொள்ள வேண்டியது தான்!

என் ஃபேவரைட் [யாருக்கு பிடிக்காது இவரை!] ஆர் ஜே பாலாஜியின் குரலில் படம் ஆரம்பிக்கிறது. இவரின் பேச்சுத் திறமையை கண்டிப்பாய் தமிழ் சினிமா உபயோகப்படுத்திக் கொள்ளலாம். சந்தானம் ஒன் லைனர்ஸுக்காக இவரை இப்போதே சேர்த்துக் கொள்வது நல்லது, இல்லையென்றால் பின்னால் வருத்தப்பட வாய்ப்புண்டு! நடிப்பு என்று பார்த்தால் பரவாயில்லை, காமெரா இருக்கிறது என்ற முதல் குறுகுறுப்பு ஆங்காங்கே தெரிந்தாலும், பேசியே ஆளை காலி செய்து விடுகிறார். உதாரணமாய் "பெய்ன்ட் டப்பா அட்வர்டைஸ்மெண்ட்ல வீடு மாதிரி இருக்குன்னு பாக்குறீங்களா", "மொட்டை மாமா, மூக்கு மாமா", "சுல்தானே வெயில்ல காயிராறு, ஒட்டகத்துக்கு குலாப் ஜாமூனா?" "ஆம்பள ஏர் ஹோஸ்டஸ் மாதிரி இருக்கீங்க", "துப்பாக்கி பட தீவிரவாதி மாதிரி தொரத்தாதேடா!" என்று கேப்பில் கல்லா கட்டுகிறார். டேக் இட் ஈசி வித் பாலாஜியில் இந்தப் படத்தையும் கிண்டல் அடிப்பாரா என்று பார்க்க வேண்டும்!

கணேஷ் வெங்கட்ராம் - சீரியசாய், என்ன இல்லை இவரிடம்! தமிழே தெரியாது, தமிழ்நாட்டின் கலர் கிடையாது, நடிக்க வராது...இருந்தாலும் நமக்கு ஹன்சிகா  வேண்டும். எல்லாம் தெரியும் ஆனால் அமேரிக்கா மாப்பிள்ளையாய் கூட வாய்ப்பு தர மாட்டோம்! பாவம்,  ஐம்பதுகளில் பிறந்திருந்தால் எம்.ஜி.ஆர், ஜெமினி போல் தமிழ் சினிமாவில் வலம் வந்திருப்பார். தனுஷ், விஜய் சேதுபதி காலத்தில் பிறந்து இவர் படும் அவஸ்தை, ஐய்யோ பாவம். இவரை கலாய்த்து படத்தில் வரும் ஒன் லைனர்ஸ் ஸ்பான்சர் யார்? சந்தானமா, பாலாஜியா? உதாரணம்: ஜிம்முக்கு போன ஜெமினி கணேசன், பனியன் விளம்பரத்துல வர்ற மாதிரி இருக்கான்!


என்னடா விமர்சனம்னு ஒன் லைனர்ஸ் போட்டே கடத்திட்டேன்னு நெனைக்கிறீங்க!? அட படமே அதானே பாஸ்!
தமிழ் திரைப்பட இயக்குனர் திரு மணிவண்ணன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். நான் அவரைப் பற்றி பேசப் போவதில்லை. இந்நேரம் அவரைப் பற்றி நம் தொலைக்காட்சிகளில் நிறைய பேசி இருப்பார்கள். என்னுடைய ஒரு நண்பருக்கு அவர் நல்ல பழக்கம். என்னையும் அஞ்சலி செலுத்த  அழைத்துச் சென்றார்.  அந்த தெருவே கூட்டத்தில் அடைந்து கிடந்தது. பைக்கை அந்த தெருவின் முனையிலேயே விட்டு விட்டு நடந்து சென்றேன். உள்ளே கண்ணாடி பெட்டகத்தில் அமைதிபடை எடுத்தவர் அமைதியாய் கண்ணயர்ந்திருந்தார். பக்கத்தில் சீமான், சத்யராஜ், மனோபாலா ஆகியோர் அமர்ந்து வணக்கம் செலுத்துபவர்க்கு பதில் வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். இரண்டு நிமிடத்தில் நான் வெளியே வந்தேன். தில்லு முள்ளு சிவாவை சுற்றி ஒரு பெரும் கூட்டமே இருந்தது. அவர் மீடியாவுக்கு தன இரங்கலை தெரிவித்துக் கொண்டிருந்தார். மக்கள் அவரை சுற்றி கொண்டாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் திரும்பும்போது சிவா கார்த்திகேயன் வந்தார். விட்டால் காரில் வீட்டுக்குள்ளே சென்று விடுவார் போலிருக்கிறது. அவரைச் சொல்லி குற்றமில்லை. எல்லா கலைஞர்களும் அப்படித் தான் நடந்து கொள்கிறார்கள். இன்னோவா காரில் பத்து அல்லக்கைகளுடன் வந்து இறங்குகிறார்கள். டிரைவர் பாவம், காரை திருப்புவதற்குள் படாத பாடு படுகிறார்.

மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று யார் சொல்வது? எல்லோரின் கையிலும் ஒரு கேமெரா ஃபோன். ஒரு நடிகரை விடாமல் சுட்டுத் தள்ளுகிறார்கள். எனக்கு எரிச்சலாய் வந்தது. நடிகர்கள் என்றால் வானில் இருந்து குதித்தவர்களா? அவர்களும் நம்மை போல் மனிதர்கள் தானே? அவரை பார்த்து விட்டதிலும், அவரை படம் பிடித்து விட்டதிலும் அப்படி என்ன பெருமை? அதுவும் ஒரு சாவு வீட்டில்! நேற்று வரை மணிவண்ணன் அங்கு தான் வசித்தார் என்று தெரியாமல் இருந்தவர்கள் இன்று முந்திக் கொண்டு குழந்தை குட்டிகளோடு அவரை அஞ்சலி செலுத்த வேண்டிய காரணம், நடிகர்களை பார்க்க வேண்டும் என்று ஒரே காரணம்! நம் தாய்மார்கள் சாவு வீட்டின் முன்னாள் நின்று கொண்டு, இவர் வர்றாரு, அவர் வர்றாரு, என்ன அவசரம், எல்லா நடிகருங்க வருவாங்க, பாத்துட்டு போவோமே என்று ஒரே கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்! நான் அந்த தெருமுனையில் வந்து வண்டி எடுக்கும்போது என் நண்பருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

ஏதோ ஒரு திருவிழாவுக்குப் போவது போல் பெண்கள் போகிறார்கள். ஒரு பெண் பள்ளியில் இருந்து அப்போது தான் வந்திருந்த அந்த சிறுமியை சீருடை கூட மாற்றாமல் அழைத்து வருகிறாள். "மணிவண்ணனா! யாரும்மா அவரு" என்று அப்பாவியாய் கேட்டுக் கொண்டே வருகிறாள் அந்த சிறுமி! எல்லா பெண்களும்  முகத்திலும் அப்படி ஒரு பூரிப்பு, சிரிப்பு, குதூகலம்!!

பாக்யராஜ் பின்னாலேயே ஓடுகிறார்கள். சத்யராஜை பார்த்து விட்டு, ஏதோ கடவுளையே பார்த்த மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிவாவை சுற்றி நின்று சார், தில்லு முள்ளு சூப்பர் என்கிறார்கள்! சிவா கார்த்திகேயண்டா, பாருடா என்று அலைபாய்கிறார்கள் சிறுவர்கள். இன்னைக்கு மட்டும் நான் பத்து நடிகர்களை பார்த்துட்டேன் தெரியுமா என்று பூரிக்கிறார்கள். சிறுவர்களை விடுங்கள், பெரியவர்களே இந்த லட்சணத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு பெண்மணி தன் ஸ்கூட்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு, அதில் தன் செருப்பை கழட்டி விட்டு, ஒரு தண்ணி பாட்டிலோடு நாலு குழந்தைகளை கூட்டிக் கொண்டு வருகிறார். [என்னா ஏற்பாடு!] நான் கேட்டவரை, அந்த மக்களில் யாரும் மணிவண்ணனை பற்றி பேசவில்லை. ரஜினி வருவாரா, விஜய் வருவாரா, சூர்யா வருவாரா என்று தான் பேசிக் கொண்டார்கள். இப்படி வேறு எந்த நாட்டிலாவது நடக்குமா? நாம் தான் இத்தனை பைத்தியமா இருக்கிறோமா? தெரியவில்லை.

ஒரு புகழ் பெற்ற கலைஞனுக்கு  சாவு வீட்டை எதிர்கொள்வது மிகப் பெரிய சவால் என்று தான் நினைக்கிறேன். சினிமா நட்சத்திரங்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சாபக் கேடாகத் தான் இருக்கும். புதுமுக நடிகர்களுக்கே இவ்வளவு கஷ்டம் என்றால், ரஜினி, கமலை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்! ரஜினி இன்று கூட ஒரு சாவு வீட்டுக்கு வந்தால், எங்கு ரசிகர்கள் அங்கேயே "தலைவர் வாழ்க, சூப்பர் ஸ்டார் வாழ்க" என்று கத்தி விடுவார்களோ என்ற பயத்தில் தான் வருகிறார்! அப்படி சில சமயங்கள் நடந்தது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்! அந்தக் கணம் எப்படி இருக்கும்? அதிலும் இறந்தவர் தனக்கு நெருக்கமானவராய் இருந்தால், அந்த இடத்தில் அத்தகைய செயல் எத்தனை சங்கடமாய் இருக்கும்! பிறகு இறந்தவரை பற்றி அங்கு என்ன பேச முடியும்? நம் நட்டு மக்களின் அறியாமையை நினைத்தால் சங்கடமாய் இருக்கிறது? அதோடு, வருங்கால சந்ததிகள் இதே பலவீனத்துடன் வளர்வதை பார்க்கும்போது கவலையாய் இருக்கிறது!

அந்தக் கூட்டத்திலிருந்து விலகி நடந்து "சரி, கலைஞன் என்பவன் இறந்தும்  மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளிக்கிறான்!" என்று வைத்துக் கொள்வோம் என்று நானே என்னை தேற்றிக் கொண்டேன்! வேறு என்ன செய்ய?

மணியின் ஆத்மா சாந்தி அடையட்டும்!

கடற்கரையில்
அலையின் அருகில்
ஒரு சிறுமி சிறு நீர் கழித்து எழுகிறாள்.
அவள் தாய் போல் அந்த இடத்தை
அலம்பி விட்டுச் செல்கிறது ஒரு கடலலை.
அன்று இரவு உப்பின் அளவை கணக்கெடுக்கும்போது
புதிதாய் சேர்ந்த உப்பை கண்டுகொள்ளுமா கடல்?


[photo courtesy: my wife]
ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்
என் மனம் பேசுவதை! அப்போது...
மேல் சொன்னதை சொன்னது என் மனம்!
இதில் நான் யார், என் மனம் எது?
---------------------------------------------------------------------------------------------------------
வாழப் பணம் வேண்டும்
பணத்திற்கு வேலை வேண்டும்
வேலைக்கு திறமை வேண்டும்
திறமைக்கு உழைப்பு வேண்டும்
உழைப்புக்கு சக்தி வேண்டும்
சக்திக்கு உணவு வேண்டும்
உணவுக்கு பணம் வேண்டும்!
வெள்ளிக் கிழமை கொஞ்சம் வேலை இருந்தது. அலுவலகத்திற்கு லீவு சொல்லிவிட்டு சாவகாசமாக எழுந்து பதினோரு மணி போல சலூனுக்கு சென்றிருந்தேன். அங்கு காத்திருந்த போது ஒரு ஃபோன். நான் தான் ஏ.ஈ. பேசுறேன். உங்ககிட்ட இருந்து மூணு மெயில் வந்துருக்கு, அதான் உங்களை நேர்ல பாத்து பேசிராலாம்னு வந்தேன். நான் இப்போ அம்பேத்கர் சாலைல தான் இருக்கேன். உங்களை பாக்க முடியுமா என்றார். என்னால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் பிடிக்க முடியாது என்று நினைத்து,அங்கேயே இருங்க, இப்போவே வர்றேன் என்று கிளம்பினேன்.

விஷயம் ஒன்றுமில்லை. தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் உள்ள புகார் பெட்டியில் மடிப்பாக்கம் ஏரியாவில் உள்ள சில பிரச்சனைகளை புகார் செய்திருந்தேன். [எத்தனை நாள் தான் நாமே புலம்பிக் கொண்டிருப்பது! கேட்டால் கிடைக்குதான்னு பார்க்கத் தான்!]

1. அம்பேத்கர் சாலை என்று தான் பேர், அம்பேத்கரையும் மறந்து விட்டார்கள், சாலையையும் மறந்து விட்டார்கள். சிமென்ட்டு சாலை போட்டால் காலத்துக்கும் நிலைக்கும் என்று சொல்கிறார்கள். அது தார் சாலையை விட முன்னமே பல் இளித்து விடுகிறது. வழி எங்கும் குண்டும், குழியும்! இதில் நடு நடுவே படிக்கட்டுகளை போல் வேகத்தடை வேறு! ஐய்யா, நல்ல சாலைக்குத் தான் வேகத்தடை தேவை! இங்கு சாலையே வேகத்தடையாய் இருக்கும்போது தனியாய் ஒரு வேகத்தடை எதற்கு? முதலில் ஒரு நல்ல சாலை வசதி வேண்டும்.
2. ஏரியாவை சுற்றி ஒரு நல்ல பூங்கா இல்லை. ஒரு நல்ல பூங்கா வசதி வேண்டும்.
3. அம்பேத்கர் தலையில் கொஞ்சம் முடி இருந்தது. ஆனால் அம்பேத்கர் சாலையை பார்த்தால் சாலையோரங்களில் மரங்களே இல்லாமல் மழுங்க மொட்டையடித்தது போல் இருக்கிறது. அதனால், அசோகர் சாலையில் மரங்களை நட்டதையே இன்னும் சொல்லிக் கொண்டிருக்காமல் சாலையின் ஓரங்களில் மரங்களை நட வேண்டும்!

மேல் சொன்ன புகார்கள் தான் நான் புகார் பெட்டியில் போட்டது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழக அரசின் இணையதளத்தில் நீங்கள் புகார் அளித்ததும், அதன் புகார் எண் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் வந்து விடும். அதை தொடர்ந்து அந்தப் புகாரின் தற்போதையை நிலை குறித்தும் உங்களுக்கு அப்டேட் வந்து கொண்டே இருக்கும். அந்த எண்ணை வைத்து நீங்கள் இணையதளம் போய் நம் புகாரின் நிலை என்னவென்று அறிந்து கொள்ளலாம். அப்படி, சென்ற வியாழக்கிழமை நான் அறிந்து கொள்ளும்போது, அது மடிப்பாக்கம் ஏ.ஈயின் பார்வைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. அவரின் கைபேசி எண்ணும் அந்த புகார் தகவலோடு கொடுத்திருந்தார்கள். இவர் தான் இதற்கு உரியவர், இவரிடம் உங்கள் பிரச்னையை பேசிக் கொள்ளுங்கள் என்று நம் அரசாங்கத்தில் ஒருவரின் கைபேசி வரை கொடுப்பது சாதாரண விஷயமா? சந்தோஷம். இனிமேல் இவரை தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த என்னை அவரே கூப்பிட்டது ஆச்சர்யம் தானே? அதிலும், என் வீட்டுக்கு அருகில் நின்று கொண்டு கொஞ்சம் வாங்க சார், பேசுவோம் என்றவரை விடலாமா? தலைக்கு மேல் வேலையை அப்படியே போட்டு விட்டு இந்த தலை போகிற பிரச்சனைக்கு ஓடி வந்தேன். [இதுக்கு பேர் தான் நான் லீனியர் பதிவு! எப்படி?]

அந்த வேகாத வெயிலில் கர்சீப்பை துடைத்துக் கொண்டு அந்த பேக்கரியில் அவரை பார்த்தேன். ஆஹா, நம் நாடா இது என்று தோன்றியது! முதலில் பூங்காவிலிருந்து ஆரம்பித்தார். ராஜ ராஜேஸ்வரி நகரின் உள்ளே ஒரு பாழடைந்த பூங்கா ஒன்று இருந்தது [அதை பூங்கா என்று சொல்ல முடியாது, ஒரு காலி இடம்!] சில நாட்களுக்கு முன் அந்த இடத்தை சுற்றி தடுப்புச் சுவர் அமைக்கும் பணி ஆரம்பித்து இருந்ததை நான் கவனித்தேன். என்னடா இருந்தது இது ஒன்று தான், இதையும் ஃபிளாட் போட்டு வித்து விட்டார்களோ என்று எனக்கு பயம் வந்து விட்டது. அதை அவரிடம் கேட்டதற்கு, இல்லை சார், இதை நாங்க தான் சீரமச்சுட்டு இருக்கோம். குழந்தைகள் விழியாட வசதிகள் செய்யப் போறோம், புல் தரை எல்லாம் போட்டு ஒரு மாசத்துல பாருங்க சூப்பரா ஆயிடும் என்றார். சந்தோஷம் என்றேன்.

பிறகு மரங்கள் நடுவதை பற்றி பேசினோம். அவர் என்னிடம் "சார், மரம் நடுவதற்கு நல்ல இடத்தை பார்த்து கொடுங்கள், அது எங்களுக்கு உதவியாய் இருக்கும்" என்று கேட்டார். "அதுவுமில்லாமல், சாக்கடை லைனுக்காக ஒரு பக்கம் தோண்ட போறோம், அந்த பக்கம் இப்போ நடுறது சரியா இருக்காது" என்றார். "நீங்க மொதல்ல இந்த பக்கம் நட ஏற்பாடு செய்யுங்க, என்னால முடிஞ்ச உதவியை கண்டிப்பா  செய்றேன்" என்று நானும் மனமுவந்து சொன்னேன். "மரக் கன்றுகள் வந்ததும் உங்களுக்கு சொல்லி அனுப்புறேன், நீங்க தான் சார் மரம் வைக்கனும்னு சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா செய்வோம்" என்றார்.

பிறகு சாலையை பற்றி சொன்னதற்கு, தார் சாலைகளை அமைக்க அனுமதி கேட்டிருப்பதாகச் சொன்னார். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன் குண்டு குழியை அடைப்பதற்கான பேட்ச் வொர்க் ஒரு மாதத்தில் செய்து முடிப்போம் என்று வாக்குறுதி அளித்தார். இப்படியாக அந்த இனிய சந்திப்பு முடிந்தது.

அவர் சொன்ன மாதிரி என்னை மறுபடியும் அழைப்பாரா, மேல் சொன்னவை எல்லாம் சொன்னபடி நடக்குமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது! ஆனால் ஒரு அரசாங்க அதிகாரி, தனக்கு வந்த புகாரை பற்றி புகார் அளித்தவரிடம் வீடு தேடி வந்து பேசுவது மிகப் பெரிய மாற்றமாகவே நான் கருதுகிறேன். இனிமேல் அவர் என்னை விட்டாலும், நான் அவரை விடுவதாயில்லை!  அப்படியே ஆள் மாறி போனாலும், இருக்கவே இருக்கிறது புகார் பெட்டி!

பதிவோட மெசேஜ் subtle ஆக வைக்கலாம்னு இருந்தேன். உங்களை நம்ப முடியாது. தமிழ்  மாதிரி உரக்க சொல்லிற வேண்டியது தான்! அதாகப்பட்டது, உங்கள் ஏரியாவில் கொசுத் தொல்லையா? மழை இல்லையா? குழாயில் காத்து வரவில்லையா? நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. [கொஞ்சம் முகப்புத்தகத்திலிருந்து வெளிய வாங்க பாஸ்!]

http://www.sp.tn.gov.in/ta/grievance




வெகு நாட்களுக்குப் பிறகு இன்று ஒரு படத்திற்குச் சென்று டிக்கட் கிடைக்காமல் திரும்பி வந்தேன். சந்தோஷமாய் இருந்தது. க்ரோம்பேட் வெற்றி தியேட்டரில் "சூது கவ்வும்" பன்னிரண்டே முக்காலுக்கு இருக்கிறது என்று தெரிந்து பனிரெண்டு மணிக்கு கிளம்பினேன். நான் போன போது ஃபுல்! என் கல்லூரிக் காலங்கள் நினைவுக்கு வந்தது. அப்போதெல்லாம் நோ ஆன்லைன் புக்கிங்! தியேட்டர் சென்று வரிசையில் நின்று தான் டிக்கட் எடுக்க வேண்டும். பெரிய படத்திற்கு கூட்டம் அம்மும்! ஒரு படத்திற்கு சென்று டிக்கட் கிடைக்காமல் பக்கத்து ஸ்க்ரீனில் ஓடும் மொக்கை படத்துக்கு போன அனுபவம் நிறைய உண்டு! பார்க்க வந்த படத்தை பார்க்க முடியாததால்  பார்த்த வேறு படத்தை நம்மால் மறக்கவே முடியாது என்று தான் நினைக்கிறேன்! அதிலும் அந்த மற்றொரு படம் முக்கால்வாசி மொக்கையாய் தான் இருக்கும். சில சமயம் பார்க்க வந்த படத்தை விட நல்லதாய் அமைந்து விடுவது உண்டு! உதாரணம், நான், ரோஜாவுக்காக "இந்து" பார்க்கப் போய் டிக்கட் கிடைக்காமல் "கிழக்குச் சீமையிலே" பார்த்தேன். பின்னாளில் டீவியில் "இந்து" பார்க்கும்போது நல்ல வேளை டிக்கட் கிடைக்கவில்லை என்று பட்டது! இன்று டிக்கட் கிடைக்காத போது, அடடா...இந்த ஆன்லைன் காலத்தில் கவுண்டரில் டிக்கட் வாங்கப் போய் டிக்கட் கிடைக்காமல் திரும்பியது வித்தியாசமான அனுபவமே! சரி "வெற்றி" யில் தான் வெற்றி கிட்டவில்லை என்று மடிப்பாக்கம் "குமரனுக்கு" போனேன். அங்கு இரண்டரை மணிக்குத் தான் ஷோ. முதல் ஆளாய் போய் எண்பது ரூபாய் டிக்கட் வாங்கிக் கொண்டேன்!

நான் படத்தின் கதையை சொல்லவில்லை, இருந்தாலும், நீங்கள் படம் பார்த்து விட்டு இந்த பதிவை படித்தால் சரியாய் இருக்கலாம்! யோசித்துக் கொள்ளுங்கள்...

இந்தப் படத்தின் போஸ்டரிலேயே ஒரு எதிர்பார்ப்பு வந்தது. யோசித்துப் பார்த்தால், ஒரு படம், எப்படி இருக்கும் என்பது பாதி அந்தப் படத்தின் போஸ்டரிலேயே தெரிந்து விடுமோ என்று தோன்றுகிறது. உதாரணம்: திருமதி தமிழ்!

படத்தின் ஒன் லைன்: ஒரு அமெச்சூர் கிட்னாப்பெர்ஸ் ஒரு பெரிய கிட்னாப்பில் இறங்கியதால் அவர்களுக்கு என்னவாகிறது என்பது தான் கதை!

விஜய் சேதுபதியை காட்டியதும் தியேட்டரில் விசில் பறக்கிறது. சுந்தரபாண்டியன் படத்திற்குப் போனபோது இடைவேளையில் ஓரமாய் நின்று நண்பர்களுடன் தம்மடித்துக் கொண்டிருந்தார். இன்று!!!........மூன்றே படம்!! [நமக்கு மூன்று படம், அவருக்கு பத்து வருடம்!] சமீபத்தில் வந்த புது முகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவர். விஷாலை விட, கருப்பானாலும் கலையா இருக்குறது இவர் தான்னு தோணுது! நடிப்பிலும் மனிதர் பின்னுகிறார். பெரிய ரவுண்ட் வர வாழ்த்துக்கள்.

சிம்ஹா: ஒன்றரை லட்சம் செலவு செய்து தன் அப்பாவே மயங்கி விழும் அளவுக்கு ஒரு காரியத்தை செய்து விட்டு [என்ன காரியம் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!] திருச்சியிலிருந்து சென்னைக்கு கம்பி நீட்டி, எல்லா வம்பிலும் மாட்டி, ரொமான்ஸ் வராமல் அடி வாங்கும் கடைசி சீன் வரை பையன் துரு துரு! கொழுக் மொழுக் என்று அமுல் பேபி மாதிரி இருக்கிறார்.

ரமேஷ் திலக்: காலையில் அலாரம் வைத்து எழுந்து குளித்து முழுகி, தலைவாரி இவர் செய்யும் அந்தக் காரியம் இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் கனவு! சூப்பர். சைக்கோ போலீசிடம் GUN காட்டி அவர் முகத்தில் குத்தும் இடத்தில் மரண கலாய்! மாட்டியவுடன்,அதை நினைத்து நினைத்தே பிறகு இவரை அவர் பின்னி எடுக்கிறார். மிக இயல்பான நடிப்பு!

அசோக்: சாப்ட்வேர் எஞ்சினியர். அதிகம் வேலை இல்லை. கொடுத்ததை சரியாய் செய்திருக்கிறார்.

சஞ்சிதா: என்ன படம் எடுத்தாலும், அது எத்தனை வித்தியாசமாய் இருந்தாலும், இப்படி ஒரு பிளாஸ்டிக் பெண்ணை போட்டுத் தான் எடுக்க வேண்டி இருக்கிறது. படத்தில் அத்தனை பேறும் வெகு லோக்கலாய் இருக்கிறார்கள். இந்த அம்மா மட்டும், ஏதோ "அன்பே வா" பட ஷூட்டிங்கில் இருந்து வந்தது போல் ஃபுல் மேக்கப் போட்டுக் கொண்டு டார்ச்சர் கொடுக்கிறார். படத்திற்கும், கதைக்கும் ஒட்டவேயில்லை. ஆமாம் எதற்கு இந்த காரெக்டர்?

கருணா: இவரின் குறும்படங்களை பார்க்கும்போதே தெரியும். அனாயாசமாய் நடிப்பார். இனிமேல், இந்த அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு காமெடி பண்ணும் காரெக்டரை விட்டு விட்டு வேறு ஏதாவது புதுசாய் செய்ய வேண்டும். அப்போது தான் இவரின் உண்மையான நடிப்பு வெளிப்படும்.

யோக் ஜப்பி: சைக்கோ போலீஸ். படத்தில் ஒரு டயலாக் இல்லை! மனிதரின் பார்வை,  உடல்மொழியை பார்த்தாலே, எப்போது யாரை என்கவுண்டர் செய்வாரோ என்று தான் இருக்கிறது. செம ஃபிட்டு!

அருள்தாஸ் [விஜய்யின் அண்ணன்]: நான் அடிமை இல்லை படத்தில் ஒரு அருமையான காரெக்டர் செய்திருந்தார். இதிலும் மிக பிரமாதமாய் நடித்திருக்கிறார். கிளைமேக்சில் இவரின் கோபம் உச்சம்!

படத்தின் இசை மிகப் பெரிய ப்ளஸ். மாமா டவுசர் கழண்டுச்சு, காசு, பணம், துட்டு, மணி [ஆட்டம் கொண்டாட்டம்!] பாடல்கள் எஃப் எம்மில் கேட்கும்போதே பிடித்துப் போனது, செம ரவுசு. எல்லாம் கடந்து போகும் பாடல் ரெட்ரோ ஃபீலில் அருமையாய் இருந்தது. பாடியது கோவை ஜலீல். அருமை...

படத்தின் பெரிய ஹீரோ கதை, வசனம், அதை எழுதி, இயக்கிய இயக்குனர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் பட்டையை கிளப்புகிறது. ஒவ்வொரு ட்விஸ்டும் சீட்டில் நம்மை இன்னும் அழுத்தி உட்கார வைக்கிறது. படத்தில் எனக்கு உருத்தியதே ஒரே விஷயம்...அதனுடைய முடிவு! தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்! இதில் இந்த படத்திற்காக "சூது கவ்வும்" என்ற பகுதியை மட்டும் எடுத்தாண்டிருக்கிறார் இயக்குனர். மனிதர் மீண்டும் தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கையை தரவில்லை! படம் பார்க்கும் நாமும், அதன் உறுத்தல் இல்லாமல் சிரிப்பில் மயங்கிக் கிடக்கிறோம். அது தானே இயக்குனர் சாமர்த்தியம்!!
கோடையின் தற்போதைய நிலையை கார்ட்டூனித்தேன்! 



இன்று என் கண்ணெதிரே

ஒரு குடிசைக்குப் பின்னால்

மறையும் அந்திச் சூரியன்

அதே நேரத்தில் -

ஒரு சமுத்திரத்தில் மூழ்குகிறது

ஒரு பனிமலைக்குள் உறைகிறது

ஒரு அடர்ந்த கானகத்துள் தொலைகிறது

ஒரு பாலைவனத்தில் தேய்கிறது

ஒரு சிறுவனின் காலடியில் அணைகிறது

எல்லாவற்றிலும் கலந்திருக்கிறது ஒரு சூரியன்

அந்த நாளின் இரவுக்கு மட்டும்!
இரண்டு வாரங்களுக்கு முன் என் மாமா டெல்லியில் இருந்து அவர் குடும்பத்துடன் சென்னையில் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவரின் ஆறாவது படிக்கும் பையன் சென்ட்ரலில் வந்து இறங்கும்போதே பிரச்சனை ஆரம்பித்து விட்டான்.

சென்னையில் கால் வைக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லையாம். இந்த மாதிரி மட்டமான, குப்பை ஊருக்கெல்லாம் ஏன் என்னை கூட்டி வருகிறீர்கள் என்று ஒரே களேபரம். வீட்டில் வந்து மாமா என்னிடம் சொன்னார். நமக்குத் தான் சின்ன பசங்களிடம் வாய் கொடுத்து மாட்ட பிடிக்குமே...ஆரம்பித்தேன்.

ஏன் சார் உங்களுக்கு சென்னை புடிக்கலை? இந்த ஊருக்கு என்ன குறைச்சல்? என்றேன்.

இது கந்தா ஊர் என்றான். கந்தா என்றால் முருகன் அல்ல, அசிங்கம். ka அல்ல ga!

வாடா மவனே என்று, என்ன கந்தா..உங்க டெல்லி ரொம்ப சுத்தமோ? [அந்த டாப்பிக்கில் போய் மாட்டிக்கொள்ளாமல், ball ஐ வேறு மாதிரி போட்டேன்!]

சென்னையில பீச் இருக்கு, உங்க ஊர்ல இருக்கா என்றேன்!

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. உடனே ஒரு counter அடித்தான். எங்க ஊர்ல "இந்தியா கேட்" இருக்கு என்று!

நானா சும்மா இருப்பேன், சரிடா..இந்தியா கேட் தானே, நீ அடுத்தவாட்டி வரும்போது நான் சென்னையில இந்தியா கேட் கட்டிற்றேன். நீ டெல்லியில பீச் கொண்டு வர முடியுமான்னு கேட்டேன். [எப்புடி?]

அவன் லைட்டா ஜெர்க் ஆனான்.

என் மாமா உடனே, இங்கே இருக்குற மெரினா பீச் தான் உலகத்துலேயே second longest beach தெரியுமா என்றார்.

பதிலுக்கு அந்த பய புள்ள, first எது என்றான்! இப்போ நாங்க ஜெர்க் ஆனோம்! [என்ன உஷாரா இருக்கானுங்க...நம்ம இது வரை இப்படி கேட்டதே இல்லையே! கூகுளித்ததில் பங்களாதேஷ், பிரேசில் என்று பல்வேறு தரப்புகள் சொல்கிறார்கள்.]

மெல்ல பேச்சை மாற்றி, வேற என்ன இருக்கு உங்க டெல்லியில என்றேன்.

எங்க ஊர்ல கன்னாட் ப்ளேஸ் இருக்கு, எவ்வளவு ஓல்ட் பில்டிங், இங்க இருக்கா என்றான்.

டே, சென்னையே ஓல்ட் தாண்டா என்று பல வித ஓல்ட் கட்டடங்களை அள்ளி விட்டேன்.

மேலும், உங்க கிட்ட இப்போ தான் மெட்ரோ இருக்கு, எங்ககிட்ட தரையில ஓடறது, பறக்குறது, இப்போ மெட்ரோன்னு மூணு விதமான ரயில் இருக்கு! என்று அவனை கட்டம் கட்டி அடித்தேன். அவன் கொஞ்ச நேரம் மௌனமாய் யோசித்தான். எப்படி பால் போட்டாலும் கோல் போடறானேன்னு நினைத்திருக்கலாம்.கொஞ்ச நேரம் பேசவேயில்லை. நாங்கள் பெரியவர்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். தடாலென்று ஒரு கேள்வியுடன் வந்தான்...[பய புள்ள இவ்வளவு நேரம் யோசிச்சுருக்கு!]

எங்க ஊர்ல இந்திரா காந்தி வீடு இருக்கு..இங்க இருக்கா?

நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று எல்லோரும் ஆர்வமாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பதிலுக்கு நான், "இங்கே தாண்டா ரஜினிகாந்த் வீடு இருக்கு என்றேன்! இதுக்கப்புறம் அவன் பேசி இருப்பான்னு நெனைக்கிறீங்க?
பாடல்கள், "மாயக் கம்பளங்கள்"! எத்தனை சுலபமாய் நம்மை நம் கடந்த காலத்துக்கு இட்டுச் செல்கின்றன!

இந்தப் பாடல் தமிழ் சினிமாவில், இசையில், மொழியில், காட்சிப்படுத்தலில் ஒரு கவிதை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. இந்தப் பாடலை நான் முதன் முதலில் ஒளியும் ஒலியுமில் பார்த்ததாய் ஞாபகம். அப்போது நான் ஐந்தாவதோ, ஆறாவதோ படித்துக் கொண்டிருந்தேன். [இப்போ வரைக்கும் நீ அவ்வளவு தானே படிச்சுருக்கே என்ற கேலிப் பேச்சுக்கள் வேண்டாம்!] "மனிதன்" என்ற மாபெரும் காவியத்துடன் "நாயகன்" வந்தது! நான் நாயகனை சீண்டவேயில்லை. காந்தி பீச்சில் தலைவர் ஒரு மஞ்சள் கட்டம் போட்ட சட்டை [இவர் வீட்ல எல்லாம் சட்டை பட்டன் போடலன்னா அடிக்க மாட்டாங்களா?] போட்டு கையில் உள்ளதை தட்டிக் கொண்டே வானத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன் பாடலுக்கு நான் அடிமை!! அப்படி ஒரு கலாரசனையில் இருந்த போது நான் பார்த்த பாடல் "நீ ஒரு காதல் சங்கீதம்". மங்கலாய் நினைவிலிருக்கிறது. அந்தப் பாடலை முதலில் பார்க்கும்போதே ஒரு மாதிரி இருந்தது. அது ஒரு தமிழ் படம் மாதிரியே இல்லை. கமலுக்கு மீசை இல்லை, சரண்யா மங்கம்மா கை வைத்த பாவாடை சட்டை போட்டிருக்கிறார், காட்சிகளில் வரும் இடம் பழக்கமானதாய் இல்லை. அடிக்கடி இரண்டு பேர் எங்கேயோ நடந்து போய் கொண்டே இருப்பார்கள். கமல் சரண்யாவை அடிக்கடி கட்டிப் பிடித்துக் கொள்வார். [உவ்வே! அப்போ!!] பாடல் பிடிக்கவில்லை என்றாலும் எனக்கு ஒரே சந்தோஷம், இந்த படமும் ஊத்திகிச்சு! மனிதன் படம் மாதிரி வருமா, நம்ம தலைவரை அடிச்சுக்க முடியுமா என்று என் நண்பர்களிடம் பீற்றிக் கொண்டேன்.

மேல் சொன்ன முதல் வரிக்கு, அதன் கீழ் சொன்ன என் ப்ளாஷ் பேக் தான் அத்தாட்சி! என் ப்ளாஷ் பேக் முடிந்து பார்த்தால், எப்போது இந்த பாடலை மறுபடியும் கேட்டேன், எந்த கணத்தில் அது என்னை இவ்வளவு ஈர்த்தது என்று ஞபகம் இல்லை. ஆனால் அதன் பிறகு இந்த பாடலை எங்கு கேட்டாலும், நான் மெய் மறந்து விடுவேன். இசையை பற்றி ஒன்றும் தெரியாத ஒரு பாமரனாய் இருந்தாலும் சொல்கிறேன், ராஜாவின் இசை மேதைமைக்கு இந்த ஒரு பாடல் போதும்.

பாடல், ஒரு சீரான வயலின்களின் பிரவாகத்தோடு ஆரம்பிக்கிறது. அதன் இசை, காட்டாறு போல பொங்கி வரும் வெள்ளம் ஒன்று ஒரு சின்ன மலை முகடுகளில் சிக்கியது போல் சிக்கி நெளிந்து, குழைந்து, வளைந்து சென்று முடிகிறது. அது முடிந்த இடத்தில் ஒரு தபலா ஆரம்பிக்கிறது. அந்தத் தபலாவின் இசை ஒரு அழகிய சுகமான வீணையின் இசையுடன்  இணைகிறது. ஆஹா, அந்த இசையில் என்ன ஒரு ஆனந்தம். இதை விட ஒரு புதிய உறவின் தொடக்கத்தை எப்படி விளக்க முடியும்?

மனோவின் குரல் வழக்கத்தைக் காட்டிலும் கணம் கூடி வழிகிறது. அவருடன் சித்ராவின் எளிமையான இனிமையான குரல் ஒன்று கலக்கிறது. இந்த பாட்டு மட்டும் இல்லை, இந்த படத்தில் வரும் அத்தனை பாடல்களிலும் குரல் தேர்வு வித்தியாசமானவை. எஸ்.பி.பி, ஜானகியை வைத்து இளையாராஜா பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த காலம் அது! இவர்கள் இருவரும் பாடாத படங்களே இல்லை எனும்படி இருந்தது அன்று! முதல் படத்தில் அடக்கி வாசித்த மணிரத்னம், அதுவும் மாற்றுச் சினிமாவை விரும்பிய மணி அந்த டெம்ப்ளேட் பாடல்களிலிருந்து வெளி வரத் துடித்திருப்பார் என்று படுகிறது. எஸ்.பி.பி, ஜானகியை ஒத்துப் பார்க்கும்போது, மனோ, சித்ரா புதியவர்கள். அவர்கள் பாடலாம்! ஆனால் கண்டிப்பாய் எஸ்.பி.பி, ஜானகி இந்த படத்தில் இல்லை என்பதில் தெளிவாய் இருந்திருக்கிறார். அதனால் தான், இளையாராஜா, கமல், ஜிக்கி, எம். எஸ். ராஜேஸ்வரி, டி. எல். மகராஜன் என்று இந்தப் படத்தின் ஆல்பமே வேறு ஒரு வண்ணத்தை கொடுத்தது! எல்லாமே வித்தியாசமான பாடல்கள். குறிப்பாய், இந்தப் பாடலை கண் மூடிக் கேட்டாலும் சுகம், கண் திறந்து காட்சிகளை பார்த்தாலும் சுகம். Preluds, Interluds மனதை கொள்ளை கொண்டு விடும். Interlud ல் ஒற்றை வயலினுடன் புல்லாங்குழலை இணைத்து ஒரு இசைக் கொண்டாட்டமே நடத்தி  இருப்பார் ராஜா. வீணையும், தபலாவும், அந்த இருவரின் ஜாலம் முடியும் வரை காத்திருந்து சமத்தாய் வந்து சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து கொள்வதை போல் இருக்கும்.

இந்தப் பாட்டின் காட்சிகளை சொல்லியே ஆக வேண்டும். பாடலின் ஆரம்பத்தில் வீணை தொடங்கும் இடத்தில் திருமணம் ஆகி புதிதாய் வரும் தம்பதியரை வரவேற்க அந்த வட்டாரமே கூடி இருக்கிறது. அது ஒரு மங்கிய மாலை. அப்போது தான் வீடுகளில் விளக்குகள் எரியத் துவங்கி இருக்கின்றன. அந்தக் காட்சியே வேறு ஒரு வடிவத்தையும், மனோநிலையையும் அளிப்பதாய் இருக்கிறது. அதுவரை தமிழ் சினிமா அப்படி ஒரு காட்சியை பார்த்ததில்லை என்றே எனக்குப் படுகிறது. அப்படி ஒரு மங்கிய மாலை வேளையில் அவர்களின் உறவு, அவர்களின் வாழ்வு, அந்த நாயகனின் முதுகில் வேர்வைத் துளியுடன் தொடங்குகிறது. அதோடு பாடலும் துவங்குகிறது. தாம்பத்தியத்தின் லயிப்பில் கிடக்கிறாள் அவள். அவளின் கலைந்த பொட்டு அங்கு ஒரு கதை சொல்கிறது. அவன் முகத்தில் ஒரு காயத்தை வினவுகிறாள் அவள். அவன் எப்படி அது ஏற்பட்டது என்று கூறுகிறான். உடனே அந்த காயத்துக்கு ஒரு முத்தம் வைக்கிறாள். அந்த முத்தம் அவ்வளவு யதார்த்தம்! மறுநாள் அவன் கண் விழித்துப் பார்க்கும்போது அவள் குளித்து முடித்து, கண்ணாடி முன் நிற்கிறாள். புல்லாங்குழல் வழிந்தோடுகிறது அங்கு! அடுத்த காட்சியில் புறாக்கள் சிறகடித்துப் பறக்கின்றன. அதற்கேற்ப வயலின்களும் இசைக்கப்படுகின்றன. இரண்டும் அவ்வளவு இசைவோடு ஒன்று கலக்கிறது. பறந்து போன புறாக்களின் பின்னணியில் அவர்கள் பின்னிப் பிணைந்து நிற்கிறார்கள். கண்ணில் வைத்த எஞ்சிய மையை அவளின் மூக்கில் தேய்க்கிறான் கணவன். இதை விட புது மனத் தம்பதிகளின் அன்னியோன்யத்தை அத்தனை அழகாய் காட்டவே முடியாது! அதை விட, மனைவியை சாப்பிடச் சொல்லி கணவன் வற்புறுத்தும் இடம், ஒழுகும் வீட்டில் மழைக்கு ஒதுங்கும் புறாக்கள், வயிற்றில் இருக்கும் குழந்தையின் குறுகுறுப்பை கணவன் உணரும் தருணம் என்று ஒவ்வொரு காட்சியும் இந்தப் பாடலில் கவிதைகள்! என்ன ஒரு ஒளிப்பதிவு!

இந்தப் பாடலின் பாடல் வரிகளும் நானும் இங்கு இருக்கிறேன் என்று எந்த இடத்திலும் வெளியில் துருத்திக் கொண்டு நிற்கவில்லை! அத்தனை இயல்பாய், எதார்த்தமாய், இசைக்கும், காட்சிகளுக்கும் வழி விட்டு ஒரு தெளிந்த நீரோட்டம் போல நிற்கிறது.

"மணல் வெளி யாவும் இருவரின் பாதம், நடந்ததை காற்றே மறைக்காதே!"
அருமையான வரி..

"தினமும் பயணம் தொடரட்டுமே...." வரியில் வரும் காட்சியை பாருங்கள். என்ன ஒரு ஃபிரேம். என்ன ஒரு டோன்! என்ன ஒரு ஃ பீல்! கணவனுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அவளின் முகம் என்னவோ செய்கிறது.

முடிவாக, என்ன உன்னதமான இசையை கொடுத்தாலும், ராஜாவின் பாடல்களை கந்தரகோலமாய் படமாக்கிக் கொண்டிருந்த பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குனர்களின் மத்தியில் ராஜாவின் இசைக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் காட்சிப்படுத்திய இயக்குனர் மணிரத்னத்தை பாராட்டியே ஆக வேண்டும்! என்ன சொல்கிறீர்கள்?