சமச்சீர் கல்வியைப் பற்றியும், அதை ஏன் ஒத்தி வைக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் ஒரு சிறந்த அறிக்கை! புராணக் கதையில் பத்மாசுரனுக்கு வரமளித்து விட்டு சிவபெருமான் அவதியுறுவது போல் ஆகிவிட்டது இந்திய ஜனநாயகம்! நாமே ஆட்சியில் அமர்த்திவிட்டு அவதியுற வேண்டியிருக்கிறது! 

"என்று தணியும் இந்த அரசியல் வஞ்சம்!"

இதை எனக்கு அனுப்பிய தோழர் பாண்டியனுக்கு [http://puyarparavai.blogspot.com/] நன்றி!
  
சென்னை,                                                          
மே 24, 2011
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் சமச்சீர்க் கல்வியை இந்தக் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த இருந்ததை ஒத்தி வைத்திருப்பதாகப் புதிய அரசு அறிவித்திருப்பது கல்வியில் அக்கறை உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள சமச்சீர்க் கல்விமுறை கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை எனவும் வல்லுனர் குழு ஒன்றை அமைத்துப் பரீசீலித்த பின்பு இதை நடைமுறைப்படுத்தலாம் எனவும் அரசு கூறியுள்ளது.

கோத்தாரி கல்வி ஆணையம் (1964-1966) தொடங்கி ‘பொதுக் கல்விக்கான பொதுப் பள்ளிமுறை’ என்கிற கருத்தாக்கம் இங்கே பேசப்பட்டு வருகிறது. அருகாமைப் பள்ளியுடன் கூடிய பொதுப்பள்ளி முறையே ’ஜி8’ நாடுகள் உட்பட உலகில் பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. கல்வி, அதிலும் குறிப்பாக ஆரம்பக் கல்வி எல்லோருக்கும் சமமாகவும், சீராகவும் (தரமாகவும்) கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவரும் கோத்தாரி ஆணையத்தின் இப்பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நீண்ட காலமாக வற்புறுத்தி வந்தனர்.

கிட்டத்தட்ட ஐந்து பாடத் திட்டங்கள் வரை நடைமுறையிலிருந்த தமிழகத்திலும் பொதுப் பள்ளி, தாய் மொழியில் பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் கல்வி அமைய வேண்டும் என்கிற கருத்தைக் கல்வியில் அக்கறையுள்ள பலரும் வற்புறுத்தி வந்தனர். கல்வியாளர்கள் தவிர அடித்தள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சியினரும் இதை வற்புறுத்தி வந்தனர். இடதுசாரி மாணவர் அமைப்புகள் போராடங்களையும் நடத்தின. கல்வியை வணிகமாக்கி கொள்ளை லாபம் ஈட்டி வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியினரே இதை எதிர்த்து வந்தனர்.

பொதுக்கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டுமென மேலெழுந்து வந்த இத்தகைய அழுத்தங்களின் விளைவாக முந்தைய அரசு, கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் குழு ஒன்றை 2006ம் ஆண்டில் அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை 2007ல் அளித்தது. அக்கறையுள்ள பலரும் இது தொடர்பாய் விவாதிக்கவும் கருத்துக் கூறவும் தொடங்கினர்.

முந்தைய  அரசு சென்ற ஆகஸ்ட் 26, 2009ல் சமச்சீர்க் கல்விமுறையை அறிவித்தபோது இது குறித்து வற்புறுத்தி வந்த பலரும் ஒருசேர மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் அடைந்தனர். தாய் மொழி வழிக் கல்வி அடிப்படையிலான அருகாமைப் பொதுப் பள்ளி கைவிடப் பட்டதே வருத்தத்திற்கான காரணம். பல்வேறு பாடத் திட்டங்கள் என்பது போய் பொதுப் பாடத் திட்டம் என்கிற வடிவில் பொதுக்கல்வியை நோக்கி ஓரடி எடுத்து வைக்கப்பட்டது வரவேற்பிற்குக் காரணமாக இருந்தது.
சென்ற கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடத் திட்டம் மற்றும் பாட நூல்கள் உருவாக்குவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டன. இக் குழுக்களில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்குபெற்றனர். தேர்வுகள் வைக்கப்பட்டும் உறுப்பினர்கள் தெரிந்து எடுக்கப்பட்டனர். முடிவுகள் அவ்வப்போது இணையத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டன. பாடத்திட்ட நகல்கள் பள்ளி ஆசிரியர் மாதாந்திரக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டன. மொத்தத்தில் இந்த அளவு ஜனநாயகபூர்வமாக விவாதிக்கப்பட்டு பாடத் திட்டங்களும், பாட நூற்களும் இதுவரை உருவாக்கப் பட்டதில்லை.

சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புப் பாட நூல்களில் ஒருசில குறைபாடுகள் இருந்தபோதும் மொத்தத்தில் அவை மிகச் சிறப்பாகவே இருந்தன. இன்று இக்குழுவில் பங்கு பெற்றுள்ளவர்களில் சிலருங்கூட இந் நூல்களை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சில நவீன கல்வி அணுகல்முறைகள் அவற்றில் பயன்படுத்தப் பட்டிருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவ்வகையில் தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக்குமான சுமார் ஆறரை கோடி நூல்கள் சுமார் 216 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மாவட்டங்கள் வாரியாகப் பிரித்து அனுப்பவும் பட்டுவிட்டன. இந்நிலையில் பாடத் திட்டம் தரமாக இல்லை என்கிற ஒரு தரப்புக் கருத்தை ஏற்று அரசு இன்று சமச்சீர்க் கல்வியை நடைமுறைப் படுத்துவதை நிறுத்தி வைத்திருப்பது பெரும் பொருள் இழப்பை மட்டுமல்ல, மாணவர் மத்தியில் பெருங் குழப்பத்தையும்  ஏற்படுத்தும். இதன் மூலம் பயனடையப் போவது மெட்ரிக்லேஷன் ‘லாபி’ மட்டுமே.

பாடத்திட்டத்திலும் படநூல்களிலும் குறைபாடுகள் இருக்கலாம். எவ்வளவு கவனமாகத் தயாரிக்கும்போதும் அத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டுவிடுவது இயல்பும்கூட. அவை அந்தக் கல்வி ஆண்டிலேயே உரிய ஆணைகள் மூலம் திருத்தப்படலாம். புதிய பாடங்கள் தேவையானால் சேர்க்கப்படலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வித் திட்டம் மேம்படுத்தப்படலாம். குறைகளைச் சாக்காக வைத்து பலகால விவாதங்கள் மற்றும் கருத்தொருப்பினூடாகக் கொண்டு வந்த ஒரு நடைமுறைக்குத் தடை விதிப்பதை ஏற்க இயலாது.

தவிரவும் இப்பாடத்திட்டமும் நூல்களும் தரமாக இல்லை எனக் கண்டறிய புதிய ஆட்சியாளர்களுக்குப் போதிய அவகாசமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருசில மணி நேரக் கலந்தாய்வில் மூன்று தீர்மானங்களில் ஒன்றாக முடித்துவிடக் கூடிய விஷயமும் இது இல்லை.

முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துக்கள் பாடநூல்களில் இடம் பெற்றிருப்பதே  புதிய அரசின் இம்முடிவுக்குக் காரணம் என இதழ்களில் செய்தி வந்துள்ளன. ஆட்சியாளர்கள் தமது புகழைப் பாடிக்கொள்வதற்கும், தம்மை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்கும் குழந்தைகளின் பாடநூல்களைப் பயன்படுத்துவதை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களுக்கும் அதில் உடன்பாடில்லை. தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம். ஏற்கனவே இவ்வாறு பாடங்களை நீக்கியதற்கான முன்னுதாரணங்கள் தமிழகத்தில் உண்டு.

பழைய பாடத்திட்டத்தைக் கடைபிடிக்கலாம் எனவும் பழைய நூல்களையே பயன்படுத்தலாம் எனவும் அரசு கூறுகிறது. பழைய நூல்கள் இப்போது அச்சில் இல்லை. அச்சிடுவதற்கென பள்ளித் திறப்பு 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  15 நாட்களில் ஆறரை கோடி நூல்கள் அச்சிட்டுவிட முடியுமா எனத் தெரியவில்லை. வசதியுள்ள மாணவர்கள் இணையத்தளங்களிலிருந்து கீழிறக்கம் செய்து கொள்ள முடியும். பாதிக்கப்படப் போவது ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள்தான். பயனடையப்போவது பெரு நூல் வெளியீட்டு நிறுவனங்களும் தனியார் பள்ளிகளுந்தான்.

தவிரவும் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடநூல்களை மாற்ற வேண்டுமென்பது கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுவின் (என்.சி.ஈ.ஆர்.டி) நெறிமுறைகளில் ஒன்று. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்குமான பழைய பாடநூல்கள் என்பன பத்தாண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்டவை என்பதையும் இது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதயும் அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

கல்வித் தரம் குறைந்துவிடும் என அரசு காரணம் சொல்கிறது. கல்வித் தரத்தை நிர்ணயிப்பதில் பாடத்திட்டம் மற்றும் நூல்களின் பங்கு ஒரு குறிப்பிட்ட அளவிலானதே. தவிரவும் கல்வித் தரத்தை உயர்த்துவது ஒரு நீண்ட தொடர்ச்சியான நடைமுறை. பொக்கென ஓர் கணத்தே நடத்திவிடக்கூடிய ஒன்றுமல்ல. காமராசர் காலத்திலிருந்ததைப்போல இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது, ஆசிரியத் தேர்வு வாரியங்கள் மூலம் தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வது, பள்ளிகளின் அகக் கட்டுமானங்களை உயர்த்துவது எனப் பல கூறுகளை உள்ளடக்கியது இது. கிராமப்புறங்கள் அதிகமாக உள்ள நமது நாட்டில் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்பட்டதைப்போல கிராமப்புற  மாணவர்களுக்கு 25 சத ஒதுக்கீடு வழங்குவதும்கூட இதில் உள்ளடங்கும்.
கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகள் இன்று பல தனியார் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. பள்ளிச் சேர்க்கையில் நுழைவுத் தேர்வுகளை நடத்தாதிருப்பது, 25 சத இடங்களை அருகாமையிலுள்ள மாணவர்களுக்கு கட்டணமின்றி ஒதுக்குவது ஆகியன இதில் அடங்கும். இத்தோடு கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். கல்வித் தரத்தை உயர்த்த விரும்பும் அரசு இத்தகைய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய அரசு அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தது  என்பது உண்மையே. அவற்றை நீக்கித் தரத்தை உயர்த்த வல்லுனர் குழு அமைப்பதும் ஏற்கக்கூடியதே. ஆனால் இந்த ஆண்டு பொதுப் பாடத் திட்டத்தைச் செயற்படுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் அதை நிறுத்தி வைப்பது ஏற்கத்தக்கதல்ல. கல்வி நலனுக்கு உகந்ததுமல்ல. உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயலிது. ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தையே ஒழித்துக் கட்டுவதற்கான முதற் படியோ  என்கிற ஐயத்தையும் இது ஏற்படுத்துகிறது.

நீண்ட விவாதங்களினூடாகப்  பலரும் இணைந்து 216 கோடி ரூ செலவில் உருவாக்கப்பட்டுள்ள பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. அவசியமானால் தேவையற்ற பகுதிகளை நீக்கியும், தரத்தை உயர்த்தக்கூடிய பகுதிகள் எனக் கருதப் படுபவற்றைச் சேர்த்தும் பயன்படுத்துவதே கல்வி நலனுக்கு உகந்தது.

கல்வித் துறையில் நீண்ட அனுபவமும், கல்விப் பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறையும் கொண்டுள்ள, கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் நடைமுறைப்படுத்த இருந்த சமச்சீர்க் கல்விமுறையை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

1.பேரா.அ.மார்க்ஸ், முன்னாள் கல்லூரிப் பேராசிரியர்,
2.முனைவர் ப. சிவகுமார், முன்னாள் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புத் தலைவர்,
3.பேரா. கல்யாணி, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மக்கள் கல்வி இயக்க நிறுவனர்,
4.திரு. பி.பி. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்,பொதுக் கல்விக்கான மாநில மேடை,
5.பேரா. கே. ராஜூ, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மதுரைப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர்,
6.பேரா. மு. திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்,
7.திரு.கி. த. பச்சையப்பன், முன்னாள் தமிழக தமிழாசிரியர் சங்கத் தலைவர்,
8.எஸ். ராமசாமி, ஆசிரியர்,
9.கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
10. வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், மதுரை,
11.எஸ். ராமானுஜம், எழுத்தாளர்,

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் எகிப்து அரசை எதிர்த்து நடந்த புரட்சியை போல இருக்கிறது! முடியாட்சியை  எதிர்த்து மக்களாட்சி வந்தது போல் அத்தனை பேருக்கும் அத்தனை மகிழ்ச்சி! குடும்ப அரசியலுக்கு ஆப்பு வைத்ததில் அத்தனை பெருமிதம்! ஜனநாயகத்தின் சக்தியை நினைத்து பூரித்துக் கிடக்கிறோம்! அதிலும் அம்மா பதவி ஏற்ற நாளிலிருந்து அம்மா தான் வரும்போது போக்குவரத்தை நிறுத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார், அமைச்சர்களுக்கு பவர்பாய்ன்ட் மூலம் பாடம் எடுக்கிறார், மூன்று மணி நேரம் ஆய்வு செய்தார், ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார் என்று பல செய்திகள்! ஒரு வேலை நாட்டுக்கு நல்ல காலம் வந்து விடுமோ என்று வழக்கமான ஒரு நம்பிக்கை பிறக்கிறது. ஆனால் இது இன்னும் எத்தனை நாட்கள் என்று உள்ளூர ஒரு பயமும் கலந்தே பிறக்கிறது! ஒரு இருபது ஆண்டுகள் தொடங்கி பின்நோக்கிப் பார்த்தால், 91 ல் அதிமுக, 96 ல் திமுக, 2001 ல் அதிமுக, 2006 ல் மறுபடியும் திமுக, 2011 ல் மறுபடியும் அதிமுக என்று ஒரு அமைப்பு/கோலம் தெரிகிறது! இதே ரீதியில் பார்த்தால் 2016 ல் மறுபடியும் திமுகாவா? இது எத்தனை பரிதாபகரமான விஷயம்! தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை போல் சக்தி வாய்ந்த வேறு ஏதாவது கட்சி இருந்திருந்தால் மக்கள் ஒரு தடவை அவர்களுக்கு வாய்ப்பளித்துப் பார்த்திருப்பார்கள்! அதற்கு தான் நமக்கு வாய்ப்பே இல்லையே![ஒருவேளை அடுத்த முறை தேமுதிக வந்து விடுமோ?] கலைஞர் கொள்ளை அடிக்கிறாரா, அம்மாவுக்கு போடு; அம்மா கொள்ளை அடிக்கிறாரா கலைஞருக்கு போடு என்று மாற்றி மாற்றி வாக்களித்து ஒவ்வொரு தடவையும் சில நாட்கள் விரலில் கரையுடனும் , வாழ்க்கை முழுதும் முகத்தில் கரியுடனும் வாழப் பழகி விட்டோம்! அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை கோடி காட்டி விட்டு அவர்களின் கல்லாக்களில் கோடிகளை கட்டிக் கொள்கிறார்கள்! ஐந்து வருடம் ஊழல் செய்து சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் ஆற அமர தீர்த்து விட்டு வருவதற்கும், ம்ம்...என்னப்பா பணம் தீந்து போச்சா, இந்தா ஆட்சி! ஜமாய், இந்தாப்பா நீ நல்ல சாம்பாதிச்சியா, கீழே எறங்கு போய் காலி பண்ணிட்டு வா என்று அனுப்பவது மாதிரி இருக்கிறது! என்ன அநியாயம்! இதற்கு பெயர் ஜனநாயகம்! இதற்குப் பெயரா ஜனநாயகம்? இந்த முறையாவது ஏதாவது நல்லது நடக்குமா பார்ப்போம்!

சென்னையில் வெயில் வாட்டி எடுக்கிறது! கடவுள் ஒருவர் இருப்பதாய் கற்பனை செய்து கொண்டால் அவர் சூரியனை ஒரு கயிற்றில் கட்டி வைத்திருப்பதாக கற்பனை செய்து கொண்டால் ஒவ்வொரு கோடை காலத்திற்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாய் கயிற்றை சென்னையை நோக்கி இறக்கி விட்டு விடுகிறாரோ என்று தோன்றுகிறது! கயிர் அந்து சூரியன் சென்னையில் விழாமல் இருந்தால் சரி! சாலையில் பதினோரு மணி வெயிலில் வண்டியை ஓட்டினால் ஏதோ பாலைவனத்தில் போவது போல் இருக்கிறது. வெப்பக் காற்றில் மூச்சு முட்டுகிறது! சூரியனார் ஸ்ட்ரா போட்டு ஒவ்வொருத்தனின் ஆற்றலையும் உறிஞ்சி கொண்டிருக்கிறார்! இதில் நாள் முழுதும் வெட்ட வெளியில் வேலை செய்பவர்கள், பஸ் டிரைவர்கள், மெட்ரோ பணியாளர்கள், கட்டட தொழிலாளர்களின் நிலை....நினைக்கவே பயமாய் இருக்கிறது! தப்பித் தவறி ஒரு மரத்தின் கீழ் நிற்கும் போது தான் மரத்தின் பெருமை புரிகிறது! 2011 ல் இப்படி இருந்தால் 2041 ல் நடந்து செல்லும் ஒவ்வொருத்தனையும் சூரியன் சுட்டுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். மரம் வைக்கலாம் வாங்கப்பா!

வானம் படம் பார்த்தேன். நல்ல படம் என்றாலும் இதே போன்ற பல படங்களை ஏற்கனவே பார்த்து விட்டதால் ஒன்றும் பிரமிப்பாய் இல்லை. "பாசமலர்" சிலாகித்த தலைமுறையினருக்கு இந்தப் படம் புரியவேயில்லை! இது தான் நான் சிம்பு படத்துக்கே வர்றதில்லை என்கிறார்கள்! சிம்புவே இப்போது தான் திருந்திக் கொண்டிருக்கிறார்; இந்த சமயத்தில் இபப்டி ஒரு பேச்சா அவருக்கு! படத்தின் முதல் பாதி மதுரை பட்டர் பன்னை வாயில் போட்டது போல் வழுக்கிக் கொண்டு சென்றது! தப்புத்தாளங்கள் சரசுவையும் வானத்தின் சரோஜாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி புரியும்! அந்தக் கிழவரும் சரண்யாவும் கண்ணிலேயே நிற்கிறார்கள். ஒரு புறம் ஒரு இரவு விருந்துக்காக 40,000 செலவழிக்கும் கூட்டம், மற்றொரு புறம் அதே அளவு பணம் இருந்தால் வாங்கிய கடனை அடைத்தாவது மகனை படிக்க வைக்க வேண்டுமே என்று போராடும் ஒரு குடும்பம்! என்ன ஒரு கேடு கெட்ட சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுகிறது! எப்படியாவது இவர்களுக்கு உதவி கிடைத்து விடாதா என்று மனம் ஏங்குகிறது. படத்திலாவது கடைசியில் அவர்களுக்கு நல்லது நடக்கிறது; ஆனால் நிஜத்தில் கடன் கொடுத்தவன் இப்படி மனம் மாறுவானா? இப்படி நம் நாட்டில் கேட்க நாதி இல்லாமல் இருக்கும் எத்தனை பேரை ஏமாற்றி பிழைக்கிறார்களோ என்று நினைக்கும்போது தொண்டையில் ஏதோ உருள்கிறது! படம் பார்த்த எல்லோருக்குள்ளும் இப்படி ஒரு கேள்வி எழுந்திருந்தால் அது தான் வானத்தின் வெற்றி; சினிமாவின் வெற்றி!

இப்போது தான் செய்தி படித்தேன். தனுஷுக்கு ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கிறது! அதை மலையாள நடிகர் சலீம் குமாருடன் பகிர்ந்து கொள்கிறார்! சரண்யா, வைரமுத்து, வெற்றி மாறன் போன்றோருக்கும் விருது கிடைத்திருக்கிறது! தனுஷ் நன்றாகவே நடித்திருந்தார். ஆனால் தேசிய விருது கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை; விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! "ஏதோ அண்ணன் சொல்றான்னு ஒரு படத்துல நடிச்சேன்" என்று காதல் கொண்டேன் படம் ஹிட்டான புதிதில் தன்னுடைய சினிமா பிரவேசம் பற்றி அவர் அளித்த பேட்டிகள் ஞாபகம் வருகின்றன. தேசிய விருது வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். நல்ல வளர்ச்சி! வாழ்க! [அப்படியே உங்க மாமாவையும் ஒண்ணு வாங்க சொல்லுங்க சார்!]

இத்தனை சொல்லிவிட்டு இந்த விஷயத்தை எப்படி விடுவது? நம் சூப்பர் ஸ்டாருக்கு உடல் நலமில்லையாமே...அவருக்குமா நம்மளை மாதிரி உடம்பு சரியில்லாம போகும்? நம்பவே முடியலை...அது தான் ஸ்டீல் பாடி ஆச்சே! எத்தனை தம்மு; எவ்வளவு தண்ணி! அதுவே அவரை ஒண்ணும் செய்யலை; ஏதோ ஃ புட் பாய்சன் என்று சொல்லி ஐ.சி.யு. வரை கூட்டிக் கொண்டு போய் விட்டார்களே! என்ன கொடுமை இது. தலைவா, வேர்ல்ட் கப் உங்களை பாத்த நாள்ல இருந்து நீங்க சரி இல்லை; உங்க மேல எல்லாரும் கண்ணு வச்சுட்டாங்க! குதிரை மாதிரி சட்டுன்னு எந்திரிக்கனும்! கமான்....


இப்போது பார்த்தால் படம் முழுதும் இவரின் கிளிஷேக்கள் நிரம்பி வழிந்து கண்ணையும் கருத்தையும் உறுத்தினாலும் தமிழ் சினிமாவை சிகரத்திரு ஏற்றிச் சென்ற பெருமை இவருக்கு நிச்சயம் உண்டு! இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்! இவர் பால்கே விருது வாங்கிய நாளில் இருந்து ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்து இன்று தான் அது கை கூடி இருக்கிறது! வாழ்த்துக்கள் சார்! எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடித்த இயக்குனர். சென்னையில் ஏதாவது ஒரு டிராபிக் சிக்னலில் என்னை பார்த்து "உன்னைத் தாண்ட தேடிட்டு இருந்தேன், என் படத்துல நடிக்கிறியா" என்று கூப்பிட்டு சான்ஸ் கொடுப்பார்! எப்படியும் சென்னை போய் விட வேண்டும் என்று நான் நினைத்த காலங்கள் உண்டு! [இன்று வரை ஒரு தடவை கூட இவரை எந்த சிக்னலிலும் பார்க்கவில்லை!]

என்னை பொறுத்தவரை இவர் வருவதற்கு முன் கனமான கதைகள் இருந்ததே தவிர சுவாரஸ்யமான திரைக்கதைகள் இருந்ததில்லை. பாவ மன்னிப்பு, பணமா பாசமா ஹிட் படங்கள் என்றாலும் அதில் ஒரு காட்சி கூட அட! கதையை நகர்த்த இப்படிக் கூட காட்சியை வைக்கலாமா என்று தோன்றியதில்லை!  அது இவரின் படங்களில் தான் எனக்குத் தோன்றியது! பாலச்சந்தரின் எல்லா படங்களின் திரைக்கதையும் ஒரு சாமர்த்தியமான சதுரங்க ஆட்டத்தை ஒத்து இருந்தது என்று சொல்லலாம். மிகச் சரியான காய் நகர்த்தலால் நகரும் கதைகள். தமிழ் படத்தில் பாடல்களிலும் கதை நகர்த்தியவர் இவர் தான் என்று நினைக்கிறேன். எந்த ஒரு காட்சியையும் வீணாக்க மாட்டார்! இவரின் படங்கள் சினிமாக்கள் அல்ல வெறும் நாடகங்கள் என்ற விமர்சனம் இருந்தாலும் அவருக்கு முன் வந்த நாடகத் தனமான சினிமாக்களை காட்டிலும் இவரின் படங்கள் சிறப்பானவை தான் என்று நினைக்கிறேன். 

கேபிள் டீவி வரத் தொடங்கிய காலங்களில் ஒரு நாள் இவரின் படம் ஒன்றை பாதியில் இருந்து பார்த்தேன். கவிஞர் வாலி நடித்திருந்தார். அப்போது வாலியையே எனக்கு அவ்வளவாய் தெரியாது என்று நினைக்கிறேன். ஆனால் இது பாலச்சந்தர் படம் என்று மட்டும் என்னால் உணர முடிந்தது! அந்தப் படம் "பொய்க்கால் குதிரை" என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். நான் ஏழாவது படிக்கும்போது ஒரு வீடு இரு வாசல் வந்தது. அந்தப் படத்தில் இரண்டு வேறு வேறு கதைகள் என்று பத்திரிகையில் செய்தி படித்து பள்ளியில் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருக்கிறேன். எப்போது? ஏழாவது படிக்கும்போது! எத்தனை அற்புதமான கருக்கள்!

ஒரு சாதாரண சர்வர் நடிகர் ஆனால்...
ஒற்றுமையான ஒரு குடும்பத்தில் ஒரு நடிகை நுழைந்தால்...
இறந்து போய் விட்டாள் என்று நினைத்த காதலி, தனக்கே மேலதிகாரியாக வந்தால்...
ஒரு தாய்க்கு தன் மகன் வயதுடையவன் மேல் காதல்; ஒரு தந்தைக்கு தன் மகளின் வயதுடையவள் மேல் காதல்!
வறுமையின் காரணமாக ஒரு பிராமண பெண் விபச்சாரி ஆனால்
தான் காதலித்த பெண்ணே தனக்கு சித்தியாக வந்தால்
ஒரு ரவுடியும் ஒரு விபச்சாரியும் திருந்தி வாழ நினைத்தால்
தாய் மொழி வேறு, கலாச்சாரம் வேறு..இருவரும் காதலித்தால்
மனைவி சரியில்லாத கணவனும், கணவன் சரியில்லாத மனைவியும் சந்தித்துக் கொண்டால் [எத்தனை சிம்பிளான ஒன் லைன்!]
சங்கீத வித்வான் சறுக்கி விழுந்தால்

சொல்லிக் கொண்டே போகலாம்! இவரின் படங்களில் எனக்கு இன்றும் பிடித்த படங்கள்:

பாமா விஜயம்
எதிர் நீச்சல்
அபூர்வ ராகங்கள்
மூன்று முடிச்சு
ஏக் துஜே கே லியே
தப்பு தாளங்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
தில்லு முள்ளு
சிந்து பைரவி
உன்னால் முடியும் தம்பி
புது புது அர்த்தங்கள்

எனக்குப் பிடித்த சில காட்சிகள்..





















உழைப்பாளிகளுக்கு என் "மே" தின வாழ்த்துக்கள்!

"கோ" என்றால் அரசன் என்று தானே அர்த்தம். அரசாட்சியை பிடிக்க நடக்கும் போராட்டம் தான் கதைக் களம் என்பதால் தான் இந்தப் பெயரா? தெளிவா புரிஞ்சிக்கிறதுக்காக கேட்டேன்! படத்தைப் பார்க்காதவர்கள், கதை படிக்க விரும்பாதவர்கள் முதல் பத்தியை படிக்க வேண்டாம்!

ஜீவா பத்திரிகை புகைப்படக்காரர். பறந்து பறந்து புகைப்படம் எடுக்கிறார். [கே.வி. ஆனந்த் பத்திரிகையில் இருந்த போது இப்படி தான் படம் எடுத்திருப்பாரோ?] புகைப்படங்களை எடுத்துத் தள்ளி, சில பல அரசியல் அநியாயங்களை அம்பலப்படுத்தி, நேர்மையாய் களத்தில் இறங்கி போராடி அரசியலில் ஜெயிக்க விரும்பும் தன்னுடைய சில நண்பர்கள் ஆட்சியை பிடிக்க பெரும் உதவி செய்கிறார். அதில் ஜெயிக்கிறார். அங்கே தான் ஒரு ட்விஸ்ட்.[அங்கே கொண்டு போயா வச்சீங்க?] அவ்வளவு தான் கதை!

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதுப் புதுக் கதைக் களங்களை கொண்டு வந்து தமிழ் சினிமாவிற்கு புது நீர் பாய்ச்சுகிறார் ஆனந்த். அதற்காகவே ஒரு சபாஷ். அதிலும் அயன் படத்தைப் பற்றி அவரே படத்தில் வரும் பியாவின் மூலம் கிண்டலடித்துக் கொள்வது நல்ல ஏளனம். ஜீவா இயல்பாய் நடிக்கிறார்; மனிதர் எந்த பாத்திரத்திலும் பொருந்தி விடுகிறார். அனால் சொங்கி மாதிரி இருக்கிறார். அவர் ஹேர் ஸ்டைல், அரும்பு மீசை, ஆட்டு தாடி, கிரிதா என்று அடம்பிடிக்கும் சில முடிகள்!! முதலில் எண்ணை கிண்ணை போட்டு மீசையை வளத்துக்குங்க பாஸ்! [இல்லை, பிரஷாந்த் கிட்ட ஐடியா கேளுங்க!!] நம் தலையெழுத்து தமிழ் சினிமாவில் தான் தமிழ்நாட்டில் ஹீரோ இருந்தாலும் ஏதோ ரஷ்யா நாட்டில் இருப்பதை போல் 4 சொக்காய் போடறான்! அதை பார்க்கும்போதே கருமம் எங்கே எங்கேயோ வேர்க்குது! அஜ்மல் ஜம்மென்று இருக்கிறார். ஆனாலும் அந்த அமெரிக்க மாப்பிள்ளை லுக் கொஞ்சம் மாற வேண்டும். கார்த்திகாவுக்கு நல்ல கண்கள். உயரத்தில் அடுத்த அனுஷ்கா! கச்சிதமாய் இருக்கிறார். ஆனால் அம்மாவிடம் இருந்த கருப்பு அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கிறது! ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது. அழகா? பியா வழக்கமான தமிழ் சினிமாவின் ஒரு லூசு பெண் கதாப்பாத்திரம். தமிழ் சினிமாவில் லூசு பெண் கதாபாத்திரங்களை உடனடியாய் தடை செய்ய வேண்டும். அப்புறம் பாடல்கள்! பியா இறந்து விடுகிறாள். அவளுடன் சேர்ந்து வாழும் கார்த்திகாவிற்கு தனியாய் இருக்க பயமாய் இருக்கிறது. கவலைப்படாதே நான் இருக்கிறேன் என்று ஜீவா கண்ணைத் துடைக்கிறார்; கட்! ஃபாரின் லொக்கேஷன்! [அசிலி பிசிலி பாடல் லொகேஷன் அற்புதம்; எந்த இடம் அது? சொர்க்கமா?] ஒரு பாட்டு!! தியேட்டரே உச்சு கொட்டுகிறது! ராமா...பிரகாஷ் ராஜ் தன் பங்குக்கு கையை ஆட்டி ஆட்டி, பல்லைக் கடித்தது விட்டுப் போகிறார்! [நடிப்பை கொஞ்சம் மாத்துங்க சார்!] ஜெகனுக்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் நல்ல ரோல்கள் கொடுக்க வேண்டும். டாக் ஷோக்களில் பேசிப் பேசி அவரின் பாடி லாங்க்வேஜ் அனாயாசமாய் இருக்கிறது. மனிதர் நடிப்பது மாதிரியே தெரியவில்லை! பையா, அயன் என்று எல்லா படங்களிலும் அவரின் நடிப்பை ரசித்தேன்.

படம் பார்த்து வெளியே வரும்போது எனக்கும் என் மனைவிக்கும் சில கேள்விகள். என்ன தான் அதிரிபுதிரியான திரைக்கதையை இருந்தாலும் லாஜிக்கை மீறாமல் இருந்தால் தான் ரசிக்க முடிகிறது! இல்லையென்றால் அது மதியம் சாப்பிட்ட சின்ன மட்டன் பீஸ் பல்லில் மாட்டிக் கொள்வதை போல் இடையூறு செய்கிறது!! தம்மாத்துண்டு குழந்தையிடம் பியா திறந்து காட்டுவது; முதலமைச்சர் இறந்த இடத்திலிருந்து தப்பித்து வருபவனை காவல் துறை கண்டு கொள்ளாதாது; உள்ளே என்ன நடந்தது என்று விசாரிக்காதது ஒருவேளை அந்த வெடி விபத்துக்கு ஜீவாவே காரணமாய் இருந்திருந்தால் என்று கேள்வி யாருக்கும் வராதது என்று லாஜிக் ஏகத்திற்கு உதைக்கிறது! என்னை பொறுத்தவரை பத்திரிகைத் துறையை சமத்தாய் காட்டியது ஹிந்தியில் வந்த பேஜ் 3 படம் தான்! அதில் இருந்த ஒரு யதார்த்தம் இதில் மிஸ்ஸிங்! அது வாழ்க்கை; இது வெறும் கடைந்தெடுத்த மசாலா சினிமா!

அப்புறம் முக்கியமான ஒன்று திரைக்கதை வடிவமைப்பின் போது அதன் அடிப்படை விதியின் படி ஒரு கதாப்பத்திரத்தின் தன்மையை, அதன் குணாதசியத்தை முதலிலேயே வரையுறுத்த வேண்டும்! அவன் நல்லவனா, கெட்டவனா, புத்திசாலியா, சோம்பேறியா என்பதை தெளிவாய் சொல்லி விட வேண்டும். படத்தின் ஆரம்பத்திலிருந்து ஒருவனை கோழையாய் காட்டி விட்டு க்ளைமேக்ஸில் அவன் எதிரிகளை புரட்டி எடுத்ததற்கு காரணம் அவன் பத்தாவது வயதில் கராத்தே கற்றுக் கொண்டான் என்று ஒரு மொக்கை ஃபிளாஷ் பேக் காட்டினால் சப்பித் தனமாக இருக்கும்! அனால் அந்த விதியை இத்தகைய படங்களில் சரியாய், நாசூக்காய் பயன் படுத்தா விட்டால் பார்ப்பவர்கள் எளிதில் யூகிக்கக் கூடிய அபாயம் உண்டு. பிறகு சுவாரஸ்யம் கெட்டு விடும். இந்தப் படத்தில் அந்த விதியை பற்றி கதாசிரியர்கள் யாரும் கவலைப்படவேயில்லை! படம் பூராவும் அஜ்மலை நல்லவனாய் காட்டி விட்டு திடீரென்று அவரை கெட்டவன் ஆக்கிவிட்டார்கள். அவர் ஏன் அப்படி மாறினார் என்பதற்கு எந்தக் காரணமும் சரியாய் சொல்லப்படவில்லை! ஒரு வேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் நாட்டுக்கு நல்லது தான் செய்திருப்பாரா? அல்லது மற்ற அரசியல்வாதிகளை போல் தான் இருந்திருப்பாரா என்று புரியவில்லை!

அப்படி பார்க்கும் போது, இந்த மாதிரி புலனாய்வு படங்களின் திரைக்கதை என்பது என்ன? கதாசிரியரின் சுதந்திரம் எது வரை? அவர் கதை எழுதுகிறார் என்பதற்காக அவரே ஒருவரை நல்லவர் என்று காட்டுவார்; இந்தப் படத்தில் அஜ்மலை காட்டுவதை போல். ஆங்காங்கே இவர் தான் இந்தக் கதையை திசை திருப்புவார் என்பதை போல சில கதாப்பாத்திரங்களின் பெயரில் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவார். இந்தப் படத்தில் கோட்டா, பிரகாஷ் ராஜ் மற்றும் அஜ்மல் குழுமத்தில் தாடி வைத்த ஒருவரை காட்டுவது போல்! பிறகு யாரை நாம் அப்பாவி என்று நினைத்தோமோ அவன் பயங்கர கெட்டவன் என்று சொல்லி அதற்கு ஒரு ஃபிளாஷ்பேக் போட்டு விவரித்து படத்தை முடித்து விடுவார். நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நம்மை நம்ப வைத்து இப்படி கழுத்தருக்கிறார்களே, இதை நாம் "ஆ" என்று வாய் திறந்து என்ன ட்விஸ்ட் என்று மெய் மறந்து பார்க்கிறோமே என்று தோன்றியது! எல்லா புலனாய்வு படங்களின் அடிப்படை கரு இது தான் என்றாலும், இந்தப் படத்தில் தான் எனக்கு இந்தக் கேள்வி உதித்தது! அது ஏனோ?

முதல் பத்தி மட்டுமில்லை மற்ற எல்லா பத்திகளிலும் கதையை தூவியிருக்கிறேன். முன்னமே சொல்ல வேண்டும் என்று நினைத்து மறந்து விட்டேன். கதை தெரிந்து விட்டதா? சாரி !!
வழி: மடிப்பாக்கம்->வேளச்சேரி->சைதாப்பேட்டை->நந்தனம்->ஆழ்வார்பேட்டை->ராயப்பேட்டை->விவேகானந்தர் இல்லம்.

நடமாடும் விளம்பரம்

வாழ்க தமிழ்!

ஏன் ஆக்சிடென்ட் நடக்காது?

சாலையோர ஓவியங்கள்

மரத்தை வச்சவன்..[போயி சேந்துருப்பான்!]

நகரம்

அசதி? வசதி? சுதி?

வறுமைக் கோட்டின் கீழ்...

தேசிங்கு ராஜா!

காரம்; பலகாரம்!

அணிவகுப்பு

தரை மேல் பிறக்க வைத்தான்...

ஆஞ்சினேயருக்கு இன்று ஒரே ஆனந்தம்!

பட்டம் பறக்கட்டும்

அலையோடு விளையாடி...

உறவுகள்

அறிமுகம்

சகோதரிகள் [எனக்கல்ல!]

வங்கக்கடல்

தனிமை

தோள் கண்டேன்; தோளே கண்டேன்!

சேப்பாக்கம்

வி. இல்லம்

பொழுது போச்சு...


ஜனநாயகத்தில் எனக்கு இருக்கும் ஒரே உருப்படியான உரிமை வாக்களிப்பது; அது இன்று என்னால் முடியவில்லை.
வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லையாம்; நான் ஏன் இந்த அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும் என்று கேட்கலாம் என்று பார்க்கிறேன்!
"எனி வாலண்டியர்ஸ்" தமிழில்! 

யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை வெளியில் சொல்லக்கூடாது;
ஐ டி கம்பனியில் அப்ரைசில் ரேட்டிங்கை யாரிடமும் சொல்லக் கூடாது என்பதை போல.
இரண்டையும் யாருமே கேட்பதில்லை!

ஒரு கதை எழுத வேண்டும்; சோம்பேறி தனமாய் இருக்கிறது! கருவை மட்டும் சொல்லி விடுகிறேன். 
ஒரு நல்ல சிறுகதைக்கான அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள்!
[போகிற போக்கில் இன்று நான் வலைபதிந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று எழுதாமல் இருந்தால் சரி!!] 

"பாவப்பட்டு ஒருவனுக்கு வண்டியில் லிப்ட் கொடுத்தேன். வழியில் ஒரு விபத்தில் நான் தப்பிக்க அவன் இறந்து விட்டான்!" - சுபம்.

மடிப்பாக்கம் அடகு கடைகளாலும் டென்டல் கிளினிக்குகளாலும்  நிரம்பி வழிகிறது! என்ன காரணமாய் இருக்கும்?

முக்குக்கு முக்கு பல பெயர்களில் வீற்றிருக்கும் அம்மன் கோவில்களுக்கும், எல். ஆர். ஈஸ்வரிக்கும், + 2  ரிசல்ட் குறைவதற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் படுகிறது!!

அரை கிலோ பொரிகடலை இன்று என்ன விலை தெரியுமா? முப்பத்தி மூன்று ரூபாய்! இதை எதற்கு சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? இதை வாங்கப் போய் தானே மேல் உள்ள அத்தனையும் பார்த்தது;கேட்டது;சிந்தித்தது!

நிலவு பல்லியின் வாலை ஒத்திருக்கிறது;
அது வெட்ட வெட்ட வளர்ந்து விடுகிறது!
[பொரிகடலை வாங்கினால் ஒரு கவிதை இலவசமாம்!]


சதா அழுது கொண்டே இருந்த
ஒரு குழந்தை தெய்வத்தை
விண்வெளியில் விட்டுச் சென்றது
ஒரு தாய் தெய்வம்

சுற்றிலும் இருள்!
ஆங்காங்கே மினுக்கும்
சிறு சிறு பொறிகளையும், பந்துகளையும்
வேகமாய் நகரும் வெளிச்சங்களையும் 
விநோதமாய் வேடிக்கை பார்த்தது குழந்தை

சுற்றிக் கொண்டிருக்கும் 
சில பந்துகளை
ஆள்காட்டி விரலால் அழுத்தி 
நிறுத்துவதும், மறுபடியும்
அதை சுற்றி விடுவதும்
வேடிக்கையாய் இருந்தது அதற்கு

தெரியாமல் சூரியனில் கை விட்டு
விரலை சுட்டுக் கொண்டது!
கோபத்தில் பலமாய் ஊதிப் பார்த்தது!
இருந்தும் அது அணையாததால்
பூமியிலிருந்து கடலை எடுத்து அதன்
மேல் ஊற்றித் தோற்றது

அடங்காத கோபத்தில் அருகிலிருந்த
செவ்வாயையும் புதனையும்
சூரியனில் எரிந்தது.
அது சூரியனில் புகுந்து 
சாம்பலாவது ஏனோ பிடித்திருந்தது அதற்கு

நேரம் போவதே தெரியாமல்
சுற்றி இருந்த மற்றவைகளையும் 
குழந்தை எரிந்தது; சூரியன் எறித்தது!

இப்படியே நேரம் செல்ல - 
அண்டவெளியில் விளையாடிக் களைத்து
அம்மாவை தேடி அழுதது 
குழந்தை தெய்வம்

இப்படி நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. இத்தனை சீக்கிரம் வலை பதிவேன் என்று! அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் தான் போங்கள் (போங்கள் என்று அடித்தால் பொங்கல் என்று வருகிறது!)  சாப்டுங்க!!

பூனை நடை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமை நடை பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இந்த சமயத்தில் சென்னையில் இருந்தால் பார்க்கலாம்! "ஆலிவ் ரிட்லே" என்ற கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் நேரம் இது! [இது தான் சென்னை! புதிதாய் ஏதாவது ஒன்று நடந்து கொண்டே இருக்கும், இப்போ ஆமை!] அதாவது டிசம்பரிலிருந்து ஏப்ரல் வரை! கடலில் மேட்டரை முடித்துக் கொண்டு [ஆஹா, இந்தப் பையன் இந்த மாதிரி விஷயத்தை எத்தனை நாசூக்கா எழுதுறான்!] சமர்த்தாய் கடற்கரையில் வந்து முட்டையிட்டுச் செல்கின்றன. கடல் ஆமைகள் குளிர்ந்த நீரைத் தவிர்த்து உலகெங்கும் சுற்றித் திரிகின்றன. இந்த வகை ஆமைகளை ஆஸ்திரேலியாவில் பார்த்திருக்கிறார்கள். இவைகள் செப்டம்பர் சமயத்தில் இனப் பெருக்கம் செய்ய இந்தியக் கடல் எல்லைக்குள் வருகின்றன. பெரும்பாலும் சென்னை, ஒரிசா ஆகிய நகரங்களின் கடற்கரைகளில் முட்டையிடுகின்றன.


Students sea turtle conservation network (மேலும் விபரங்களுக்கு: http://sstcn.org/) என்னும் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த தன்னார்வலர்கள் இரவு பகலாக இதற்காக உழைக்கிறார்கள். ஆமைகள் முட்டையிட இரவில், ஆள் நடமாட்டம் இல்லாத சமயங்களில் வருகிறது. முட்டைகளை மண்ணில் தோண்டி புதைத்துச் சென்று விடுகின்றன. அதன் பிறகு குஞ்சு பொறித்ததா, குட்டி வெளியே வந்ததா என்று எந்தக் கவலையுமில்லாமல் கடலுக்குள் சென்று விடுகின்றன..இந்தக் குட்டிகள் கடலில் சென்று தன் தாயை கண்டு பிடித்து சேர்ந்து கொள்ளும்! (நம்பி விட்டீர்களா? இது என்ன நம் தமிழ் சினிமாவா?) அந்த முட்டைகளை இவர்கள் ஒவ்வொன்றாய் கண்டெடுத்து, நாய், நரி, மனிதர்கள் (அதை காசாக்கவும் சிலர் இருக்கிறார்களே) என்று பலதரப்பிடமிருந்து காப்பாற்றி ஒரு குஞ்சு பொரிப்பகம் கட்டி பாதுகாப்பாய் வைக்கிறார்கள். குஞ்சு வெளியே வர நாற்பத்தைந்து நாட்கள் ஆகின்றன. ஒரு தடவைக்கு நூற்றுக்கணக்கில் ஆமைகள் வெளி வருகின்றன. அவைகளை மாலை வெளிச்சம் மங்கியதும் கடலில் கொண்டு போய் விடுகிறார்கள். முட்டையிலிருந்து வந்த சில நிமிடங்களில் துரு துருவென வெளிச்சத்தை நோக்கி அது ஓடுவதை பார்க்கவே கண் கொள்ளாக்  காட்சியாக இருக்கிறது! இப்படி ஆயிரம் ஆமைகுட்டிகளை கடலுக்குள் விட்டால் அதில் ஒன்றிலிருந்து ஐந்து தான் கடலோரத்தில் இதற்காகவே காத்திருக்கும் மீன்களுக்கு உணவாகாமல், வலையில் மாட்டிக் கொள்ளாமல், கப்பலின் அடியில் சிக்காமல் எல்லா வித ஆபத்துக்களையும் கடந்து பெரிதாய் வளருமாம்! அது தான் பெரிய சோகம்.



நம் உள்ளங்கையில் தங்கி விடும் அளவுள்ள இவைகளா அலைகள் ஆர்ப்பரிக்கும் இத்தனை பெரிய கடலில் வாழப் போகிறது என்று நமக்கே பயமாய் இருக்கிறது. ஆனால் நம் கண் முன்னே கடல் ஒரு தாயை போல் அவைகளை உள்வாங்கிக் கொள்கிறது. சற்று முன் அங்கே நூறு குட்டி ஆமைகள் இருந்த சுவடே இல்லை. காவலர்கள் துரத்தி வந்த திருடனை வீட்டுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு எதுவுமே தெரியாதது போல் கதவடைத்துக் கொள்கிறது கடல்! கண் விழித்து அரை மணி நேரம் கூட ஆகவில்லை. கை பிடித்து கூட்டிப் போக தாயும் கூட இல்லை. பல வருடங்கள் பழகிய நண்பனை போல கடலை நோக்கி அவைகள் ஓடுகின்றன. இயற்கையில் தான் எத்தனை விதமான ஆச்சர்யங்கள்! வாழ்நாளில் எல்லோரும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று!


தமிழ் கூறும் நல்லுலகிற்கு வணக்கம். இவ்வளவு சீக்கிரம் ஒரு பதிவுடுவேன் என்று நினைக்கவில்லை. அதுவும் மிகச் சரியான நேரத்தில், மிக அருமையான பதிவு இது. தேர்தலைப் பற்றிய ஒரு ஆவணக் குறும்படம்! தேர்தல் களை கட்டியிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு குறும்படத்தில் வேலை செய்தது மனதுக்கு இதமாய் இருந்தது. அதுவும் டுபுக்காருடன் வேலை பார்ப்பது என்றால் கசக்குமா? முதலில் படத்தைப் பாருங்கள், பிறகு சொல்கிறேன்.


நான் இதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேண்டியதில்லை. படமே எல்லாம் சொல்லிடுச்சு. என்ன உடனே ஓட்டு போடணும்னு கை அறிக்குதா? இதை தானே எதிர் பார்த்தோம். படம் ரொம்ப நல்ல வந்துருக்கே, நீ வேலை பாத்தேன்னு சொல்றே, எப்படின்னு தானே முழிக்கிறீங்க? சொல்லிடறேன்! நான் இந்தப் படத்துல அப்படி ஒன்னும் பிரதானமா வேலை பாக்கலை! [அதானே கேட்டேன்!] ராமருக்கு அணில் உதவின மாதிரின்னு வச்சுக்கலாம். படம் எல்லாம் முடிஞ்சு டைட்டில் கார்ட்ல என் பேரை பாத்தீங்களா? அதுக்கப்புறம் தான் என் வேலையே வருது! மை வச்ச கை ஒன்னு வருதே? பாத்தீங்களா? என்ன பாக்கவே இல்லையா? ஹலோ, அது தாங்க நான் போட்ட படம்! 

அதாவது, டுபுக்கார் அவரை உன்னால் முடியும் தம்பி கமல்ன்னு அடிக்கடி சொல்லிக்கிறாரே, ஏன் இவருக்கு இந்த விளம்பரம்னு நெனைசுருக்கேன், அவர் கூட வேலை பாக்கும் போது தான் அது தெரியுது! கமல் மாதிரி தான் வேலை வாங்குறாரு! அவ்வளவு டீடைலிங்! லண்டன்ல உக்காந்துட்டு அந்த விரல் மேல என்ன ஒரு கரை, அந்தக் கலர் இல்லையே இதுன்னாரு! உங்களுக்கு பார்வையே இல்லை; ஜோதின்னு சொன்னேன்! எப்படியோ, என்னையும் ஒரு ஆளாய் மதித்து, ஏதோ நான் ஸ்கூல் படிக்கும் போது டிராமால ஒரு ராணி வருவா, அதுக்கு சாவரி போட்ருக்கேன்னு சொன்னதை கேட்டுட்டு எனக்கு இவ்வளவு பெரிய ரோல் கொடுத்துருக்காரு!  எதோ என்னால முடிஞ்சதை செஞ்சுருக்கேன். உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்குறேன்னு காதல் பட டைரக்டர் ரேஞ்சுக்கு சொல்லியிருக்கார், மைன்ட்லையும் வச்சுருக்காரு! பாப்போம்!

Jokes apart, படத்தை பார்த்து விட்டு, தங்களின் மேலான கருத்துக்களை சொன்னால் தன்னியர்களாவோம்! எனக்கு கமெண்ட் போடுகிறீர்களோ இல்லையோ, ஒழுங்காய் சென்று ஓட்டாவது போடுங்கள்! சொல்ல மறந்துட்டேன், இந்த குறும்படத்தை தங்களின் வலைதளத்தில், ட்விட்டரில், ஃ பேஸ்புக்கில் தாராளமாய் பகிர்ந்து கொள்ளலாம்!

ஹே!!! எல்லாம் ஜோரா கை தட்டுங்க. அண்ணன் ஒரு போஸ்ட் போட போறேன்!! ம்ம்ம்.... சென்ற வருடம் மார்ச் மாதம் பத்தொன்பதாம் தேதி நான் வலைப்பதிவு ஆரம்பித்து 6 வருடங்கள் ஆகி விட்டதென எழுதி என்னுடைய சின்னத்தையும் சற்று மாற்றி அமைத்திருந்தேன். இந்த வருடம் அதை ஒரு பதிவிட்டுக் கூட என்னால் கொண்டாட முடியவில்லை. போகிற போக்கை பார்த்தால் ஒவ்வொரு மார்ச் மாதம் பத்தொன்பதாம் தேதி மட்டும் தான் பதிவே போடுவேன் என்று நினைக்கிறேன். நான் பதிவிடாததால் உலகம் ஒன்றும் அழிந்து விடவில்லை. ஜப்பான் மற்றும் கொஞ்சம் அழிந்தது! காலையில் ஒரு செய்தி படித்தேன். முற்றிலும் சேதமடைந்த ஒரு சாலையை பத்து நாட்களில் சரி செய்து விட்டார்கள். அசகாய சூரர்களாய் இருக்கிறார்கள். இப்படியே போனால், ஒரு மாதம் கழித்து அப்படி ஒரு பேரழிவு அங்கு நடந்ததா என்றே நமக்கு சந்தேகம் வந்து விடும். நம் நாட்டைப் பற்றி முன்னே தெரிந்து தான் இயற்கை நமக்கு எரிமலைகளையும், பூகம்பங்களையும், சுனாமிகளையும் அதிகம் தரவில்லை என்று நினைக்கிறேன்.

சரி கதைக்கு வருவோம். இதைப் பற்றி இத்தனை நாட்கள் வரை எழுதாமல் இருப்பது எனக்கே ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. முயலாமல் இல்லை. என்ன தான் யோசித்தாலும் அத்தகைய ஒரு படைப்பாற்றலுக்கு, கலை நேர்த்திக்கு அணி சேர்க்கும் வகையில் என்னால் எழுத முடியவில்லை. அது தான் உண்மை! பீடிகை பலமாய் இருக்கிறதோ! சொல்லி விடுகிறேன். இந்தப் பதிவு உலகறிந்த ஒரு தொலைக்காட்சி நாடகத்தைப் பற்றியது. இதை நாடகம் என்று சொல்வது சரியாய் இருக்குமா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் இதை சிட்காம் என்று கூறுகிறார்கள். 

இது அமெரிக்காவின் தொலைக்காட்சிகளில் வந்த ஒரு நெடுந் தொடர் பற்றியது.  நெடுந்தொடர் என்றால் உண்மையிலேயே நெடுந்த்த்த் தொடர். 1994 லிருந்து 2004 வரை பத்து ஆண்டுகள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி அமெரிக்காவின் அத்தனை பேரையும் கட்டி வைத்திருந்த ஒரு காமெடி தொடர்.  ஃ ப்ரெண்ட்ஸ்! ஆறு நண்பர்களை கொண்டு அவர்களின் வாழ்வினூடே ஒரு உணர்ச்சிப் பூர்வமான கதைக் களத்தை வைத்துக் கொண்டு பார்வையாளர்களுக்கு எந்த விதத்திலும் சலிப்பூட்டாமல் சிரிக்கச் சிரிக்கப் பத்து வருடங்கள் ஜமாய்த்திருக்கிறார்கள்! நண்பர்களின் பேச்சிலர் நாட்களில் உள்ள அத்தனை குதூகலங்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒரு வழியாய் படித்து முடித்து, அதற்கு ஒரு கும்பிடு போட்டு, நமக்கு ஏற்ற ஒரு வத்தல் தொத்தல் வேலை சிக்கியதும் (முக்கியமாய் சொந்த ஊரிலிருந்து தொலைவில்) அந்த இருபத்தி மூன்றிலிருந்து இருபத்தி ஆறு, இருபத்தி ஏழு வயது வரை (மெல்ல வீட்டில் கல்யாண பேச்சு எடுக்கும் வரை) நண்பர்களுடன் அறை எடுத்துத் தங்கி, பெண்கள், சினிமா, கிரிக்கெட் என்று கழியும் பொன்னான பொழுதுகள் எத்தனை அருமையானவை. அப்படி ஒரு நண்பர்களைப் பற்றிய கதை தான் ஃபிரெண்ட்ஸ். இதை பார்த்தால் போதும், அமெரிக்காவின் கலாச்சாரம், நாகரிகம், வேலை, காதல், வாழ்வியல் தரம் அத்தனையும் உங்களுக்கு ஓரளவுக்கு புரிந்து போகும் என்று நினைக்கிறேன். அதுவும் வயிறு வலிக்க சிரித்துக் கொண்டே! 

சாம்பிளுக்கு சில

இது....மெகா சீரியல்! நம் நாட்டிலும் எடுக்கிறார்களே!! அடுத்தவன் குடியை கெடுக்க வேண்டுமா? பாருங்கள் மெகா சீரியல்ஸ்! திங்கள் முதல் வெள்ளி வரை....தினமும்!! நம் தமிழ் சீரியல்களை பார்த்து விட்டு நம்மால் நிம்மதியாய் தூங்க முடியுமா? க்ளோசப் என்ற பெயரில் கண் இமையில் உள்ள ஒரு முடியை மட்டும் ஐந்து நிமிடம் காட்டுகிறார்கள்! அதற்கு பேரிரைச்சலாக ஒரு பின்னணி இசை(!!??) சாரி, இம்சை வேறு!! நம் நாட்டின் மெகா சீரியல்களை கிண்டலடித்து விவேக் செய்த காமெடி பிரசித்தம்! இதோ பாருங்கள்...


பத்து வருடங்கள் ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவது சாதரணமான விஷயமில்லை. ஏதாவது டாக் ஷோ என்றாலும் பரவாயில்லை, சமாளித்து விடலாம்! இதில் வருவது போல் பல வித திருப்பங்களுடனும், கதைகளுடனும் கொஞ்சம் கூட "சுவாரஸ்யம் குறையாமல்" தொடர்ந்து பத்து வருடங்களை சமாளித்தது என்னை பொறுத்த வரை மிகப் பெரிய ஆச்சர்யம். இதில் ஆறு நண்பர்களில் ஒருவராக (ஃபீபி) நடித்த பெண் உண்மையில் கர்ப்பமடைந்து விட்டார். அதற்கேற்றார் போல் மிகச் சுவாரஸ்யமாக கதையை அமைத்தார்கள். இதனுடைய பிரபல்யத்தை பார்த்து விட்டு, ஒரு காட்சியாக இருந்தாலும் சரி என்று எத்தனையோ ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க வந்தனர்!  நானும் இதை பார்த்து விட்டு, இதை போல் நாமும் ஒரு எபிசோட் எழுதி பார்க்கலாமே என்று பார்க்கிறேன். ம்ஹும்! சீரியஸ் சீரியல் மொக்கைகள் பத்தாதென்று காமெடி என்ற பெயரில் மொக்கைகள் போட்டு தமிழ்நாட்டு ஜனங்களை நான் சைக்கோவாக மாற்ற விரும்பவில்லை.

ம்ம்ம்....என்னுடைய அனுபவத்தில் இது ஒரு மிகச் சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர்! என்ன கவலையில் இருந்தாலும் அந்த ஆறு பேரையும் அவர்களின் வாழ்க்கையையும் யோசித்தால் போதும், எனக்கு ஒரு ரிலீஃப் கிடைக்கும். நகைச்சுவை தான் எத்தனை சிறந்த மருந்து! அதே சமயம் இவர்கள் நேரத் திருடர்கள்! நேரம் காலம் போவது தெரியாமல் பார்க்கத் தொடங்கி விடுவீர்கள், ஜாக்கிரதை!! இதன் டிவிடிக்கள் ஒன்றிலிருந்து பத்து சீசன் வரை கிடைக்கிறது (சப் டைட்டிலுடன் தான்!) வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நிதானமாய் பாருங்கள். you will really enjoy it!


பிறை நிலவை பார்க்கிறேன்
அதனுடைய தற்போதைய நிலை...
அமாவாசையை நோக்கியா, 
பௌர்ணமியை நோக்கியா?

விளம்பரப் படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதி வெகு நாட்கள் ஆகி விட்டது. யோசித்துப் பார்க்கலாமே என்று தோன்றியது. எனக்கு வள வளவென்று பேச்சும் பாட்டும் கூச்சலும் (ஓரம்போ விலகு விலகு ஓரம் போ வகையறாக்கள்) உள்ள விளம்பரங்கள் பிடிப்பதில்லை. (சினேகா, ஸ்ரேயா வரும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் இதில் சேர்த்தியில்லை :)  சாமர்த்தியமாய், அழகாய் ஒரு கவிதையாய் கொண்டு வந்து விஷயத்தை பொட்டில் அடித்த மாதிரி சொல்ல வேண்டும் (வோடோஃபோன் வகையறாக்கள்). அப்படி ஒரு யோசனையை ஓட விட்டதில் சிக்கியது: ஒரே சிந்தனை தான்; ஆனால் இரு வேறு வகைகளில் அளிக்கிறேன். இது எதைப் பற்றிய விளம்பரம் என்று நான் வெளிப்படையாய் சொல்லப்போவதில்லை. நீங்களே யூகியுங்களேன். என் பின்னூட்டப் பெட்டி இருக்கவே இருக்கு! 

Presentation 1:

திரையில் கீழ் காணும் வாசகம் தோன்றி மறைகிறது.

Scene 1: These people are lucky...
Scene 2: சிறுவர் முதல் குமரர் வரை வெவ்வேறு மனித முகங்கள், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்கள், மெல்லிய புன்னகைகள், அட்டகாசமான சிரிப்புக்கள், ஆச்சர்யம் கலந்த பார்வைகள் என்று திரையில் தோன்றி மறைகிறது. [should be classic captures...]
Scene 3: And they are not! என்ற வாசகம் தோன்றி மறைகிறது.
Scene 4: பச்சிளம் குழந்தைகள், மிகவும் வயதான முதியவர்களின் சிந்தனை கலந்த அல்லது சோகம் பொதிந்த முகங்கள் தோன்றி மறைகிறது. 
Scene 5: விளம்பரப் பொருளின் படம். விளம்பர வாசகத்தோடு திரையில் தோன்றுகிறது.

Presentation 2:

Scene 1: ஒரு பெரிய பல் பொருள் அங்காடி! ஒரு குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் இடம். ஒரு தள்ளாத வயதானவர் அந்த இடத்தை நோக்கி அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டே வருகிறார். திடீரென அவரின் பார்வை அந்தப் பொருளில் நிலை குத்தி நிற்கிறது. 
Scene 2: அவரின் முகத்தில் கவலையின் ரேகை! டைட் க்ளோசப்பில். அவரின் கண்களில் கண்ணீர். அடக்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். 
Scene 3: ஒரு தாய் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு அதே இடத்திற்கு வருகிறாள். அந்தக் குழந்தை அந்தப் பொருளைப் பார்த்ததும் அதை கை காட்டி கதறி அழுகிறது.
Scene 4: அந்த முதியவரும், குழந்தையும் பார்த்த இடம் திரையில் காட்டப்படுகிறது. விளம்பர வாசகம்!

என்ன புரிந்ததா? இப்போது சொல்லுங்கள், இந்த விளம்பரம் எதைப் பற்றியது என்று! விடையை கமண்டுங்கள்! தெரியவில்லை என்றால் அடுத்த பத்தியில் பதில் உள்ளது, வெள்ளை எழுத்துக்களில்...மௌசினால் செலக்ட் செய்து பாருங்கள்!

இது ஒரு பற்பசை விளம்பரம். கண்டுபிடித்தீர்களா? இதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்ததும் பற்களே காட்டாமல் பற்பசை விளம்பரம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை! இருந்தாலும் முடிந்தவரை முயற்ச்சித்திருக்கிறேன். கமண்டுங்கள்!

சில நாட்களாய் ஒரு யோசனை. நாமும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தால் என்ன? சத்தியமாய் எனக்கு நானே கேட்டுக் கொண்ட கேள்வி இது! நாம் தான் கதை, கட்டுரை, கவிதை என்று எழுதாத விஷயமே இல்லையே. கரகாட்டக்காரன்ல கவுண்டமணி காரை மைசூர் மகாராஜா முதல் சொப்பன சுந்தரி வரை வச்சிருந்த மாதிரி, நாட்ல எல்லாரும் ஒரு செல்போனையும் வலைப்பூவையும் வச்சிருக்கன்; நாமும் ஏன் ஒரு வலைப்பூவை வச்சிக்க கூடாது என்று ஒரு கேள்வி? ஒரு வலைப்பூ ஆரம்பிச்சி, அதுல வந்தது போனது எல்லாம் எழுதி, கிடைக்கிற எடுத்துள்ள எல்லாம் பின்னூட்டமிட்டு, எல்லா வலைப்பதிவர்களின் சந்திப்பிலும் கலந்துட்டு, புத்தக விழாக்களுக்கு தலை காட்டி, அப்படியே நாலு பதிப்பாளர்களை கையில் போட்டுக் கொண்டு, நாமும் நாலு புஸ்தகம் எழுதி, அப்படியே முதலமைச்சராயிட்டா [இதானே ஒவ்வொரு தமிழனோட லட்சியம்!?] என்ன? அப்படி ஒன்னை ஆரம்பிச்சிட்டா, அப்புறம் கூகுலாரிடம் சென்று "espradeep" என்று டைப் அடித்தால் போதுமே, நம்முடைய வலைப்பதிவு முன்னால் வருமே அது எத்தகைய வளர்ச்சி, எத்தகைய கிளர்ச்சி [சி, சீ] என்று ஒரு எண்ணம். அதெல்லாம் சரி இப்போது கூகுலாரிடம் என் பேரைக்  கேட்டுப் பார்த்தால் என்ன தான் வருகிறது என்று பார்ப்போம் என்று பார்த்ததில் தான் தெரிந்தது, எனக்கு ஏற்கனவே ஒரு வலைப்பூ இருக்கிறது அதை நான் அடிக்கடி மறந்து விடுகிறேன் என்பது! [எப்படி ட்விஸ்ட்டு?]


சத்தியமா, சொல்றதுக்கு ஒன்னுமில்லீங்க! மாசத்துக்கு ஒண்ணுன்னு ஆகிப் போச்சு நம்ம எழுத்து. முந்தி வாரத்துக்கு ஒரு தடவை இதை பத்தி ஒரு பதிவைப் போட்றனும்னு தோணும், அப்படியே அது படிப் படியா குறைந்து மாசத்துக்கு ஒண்ணுனு வந்து நிக்குது. அது என நிக்குது, நானா புடிச்சி இழுக்க வேண்டியிருக்கு. அதான் மேலே சொன்னாப்புல சில பல ட்விஸ்ட்டுகளை எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கு. இப்போ வரைக்கும் அடுத்த பத்தியில என்ன எழுதப் போறேன்னு தெரியாது! "அண்ணன் எந்த புள்ளையும் பாத்து இப்படி எல்லாம் ஆப் ஆனதில்லைடா..." எத்தனை தடவை பாக்குறீங்க? அதை விடவா இதெல்லாம் ஒரு சோதனை? மேலே...


ஆ! புடிச்சிட்டேன். படிங்க...."எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்" என்று டீவியில் ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள்! நீங்களும் என்னை போல் சினிமா விரும்பி, அதிலும் பழைய சினிமா வரலாற்றைப் பற்றி அறிய ஆவலாய் உள்ளவர் என்றால் இந்நேரம் இந்த டீவிடீயை வாங்குவதற்கு கட்டம் கட்டி வைத்திருப்பீர்கள். உங்களுடைய இருநூற்றி ஐம்பது ரூபாயை காத்த பெரும் பேரு எனக்கு கிடைக்கட்டும். தயவு செய்து வாங்காதீர்கள்! "எம்.ஜி.ஆர், சத்தியபாமா என்ற புனிதவதிக்கு கடைசி மகனாகப் பிறந்தார்!" இது செய்தி. உடனே ஒரு பாட்டு, தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை! பாட்டு போடட்டும், இரண்டு வரி போதாதா? பாடல் முழுவதும் வருகிறது. இதற்கு எம்.ஜி.ஆரின் தத்துவப்பாடல் சீடியை வாங்கி இருந்தால் 20 ரூபாயில் முடிந்திருக்கும். கந்தரகோலம்! இப்படி எடுத்ததுக்கெல்லாம் பாட்டாய் போட்டு எம்.ஜி.ஆரின் கலையுலக வாழ்க்கையை முடித்து விட்டார்கள்.  அரசியல் இரண்டாம் பாகம் என்று டைட்டில் போட்டு முடித்து விட்டார்கள். அது இதிலேயே வருகிறதா அல்லது அதற்கு இன்னொரு டீவிடீயை வாங்க வேண்டுமா என்று நான் பார்க்கவில்லை. அடப் பாவிகளா, ஃபிலிம் நியுஸ் ஆனந்தனிடம் சொல்லியிருந்தால் அக்கு வேறு ஆணி வேறாய் எம்.ஜி.ஆரின் சினிமா விஷயங்களை பிரித்துக் கொடுத்திருப்பார். அது ஒரு அற்புதமான கலவையாய் பார்க்க சுவாரஸ்யமாய் இருந்திருக்கும். உண்மையை சொல்லப் போனால் ராஜ் டீவியின் எந்த சீடிக்களும் எனக்கு திருப்தி அளித்ததில்லை. முன்பு ஒரு முறை மகாநதி வாங்கினேன். பிரிண்ட் கூவம் நதியை விட மோசம். க்ளைமேக்ஸ் இல்லை. படமும் ஆங்காங்கே நின்று விடுகிறது. தரமே இல்லை. எல்லாம் தெரிந்திருந்தும் அதையும் மீறி விளம்பரங்களில் எம்.ஜி.ஆரின் மேக்கப்பில்லாத அந்த பொலிவான முகத்தைப் பார்த்து இந்த முறையும் ஏமாந்து விட்டேன். வாத்தியார் சொன்ன மாதிரி  "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?"


நல்ல வெயிலில் செம்மொழிப் பூங்கா சென்று வந்தேன். தேசிகனுடனும், மற்ற வலைபதிவர்களுடனும் 2005 ல் அது வுட்லேண்ட்ஸ் ஆக இருந்த போது சுஜாதாவை சந்தித்தது ஞாபகம் வந்தது. அது ஒரு நிலாக்காலம்! எனக்கு என்னமோ பூங்காவை விட டிரைவின் தான் பசுமையாய் இருந்தது போலத் தோன்றியது! ஒரு வேளை அன்று நான் சென்றது மாலையில் என்ற காரணத்தினால் அப்படித் தெரிந்திருக்க வாய்ப்புண்டு! செம்மொழிப் பூங்காவை விட ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் மிகப் பழமையான மரங்களைப் பார்த்தேன். அது தான் காடு போல் காட்சி அளித்தது என்று சொல்ல வேண்டும். அந்த மாதிரி சில ஏரியாக்களில் தான் பழைய சென்னை காணக் கிடைக்கிறது என்பது என் அபிப்ராயம்!


நீண்ட நாட்களுக்குப் பிறகு மைனா பார்த்தேன். இன்று லோக் சபாவில் "எக் துஜே கே லியே" பார்த்தேன். பின்னதில், க்ளைமேக்ஸ் இயற்கையாய், புதுமையாய் இருந்தது. முன்னதில், க்ளைமேக்ஸ் செயற்கையாய் புகுத்தியது போல் இருந்தது. கமலுக்கு ரதி குட்! விதார்த்துக்கு அமலா பால்!? நான் ஹீரோ ஆகியே தீர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் போலும்! [ஆண்டவா, இந்தியாவை காப்பாத்து! [உபரித்தகவல்: எனக்கு ஹிந்தியும் தெரியும்!]] மந்திரப் புன்னகை [மீனாட்சியை மட்டும்] பார்த்தேன். சமயத்தில் அவரின் எடுப்பான....பல் வரிசை ஸ்ரேயாவை ஞாபகப்படுத்துகிறது.

புது வருடத்தில் எல்லோருக்கும் என் புது வணக்கம். வழக்கமாய் புது வருடத்தின் முதல் செய்தியே முந்தைய இரவு டாஸ் மார்க்கின் வியாபாரம் என்ன என்பது தான்! ["குடி உயர அரசுயரும்" என்று வள்ளுவர் சரியாய் தான் சொல்லியிருக்கிறார்!!] அப்புறம், எல்லோரும் முறிப்பதற்காகவே ஒரு தீர்மானம் மேற்கொண்டிருப்பீர்கள். இல்லை, தீர்மானமே இனி எடுப்பதில்லை என்ற ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறேன் என்று அதிமேதாவி ரேஞ்சுக்கு ஃ பீல் செய்திருப்பீர்கள்! [நாங்க எவ்வளவு பண்ணியிருப்போம்!] வருடத்தின் முதல் நாள் என்ன செய்கிறோமோ, அதையே வருடம் முழுவதும் செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! அந்த நம்பிக்கை உண்மையா பொய்யா, பலிக்குமா, பலிக்காதா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது, அது நம்பிக்கை! அவ்வளவு தான். அந்த முடிவோடு நேற்றே ஒரு பதிவை எழுதினாலாவது வருடம் முழுதும் பல பதிவுகள் எழுதுவோமோ என்னமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேற்று முடியவில்லை. அதனால் நீங்கள் எல்லோரும் என்னுடைய தொடர் மொக்கைகளிளிருந்து தப்பித்து விட்டீர்கள் என்று வழக்கமான ஒரு மொக்கையை போட நான் விரும்பவில்லை. 

சத்தியமாய் இப்போது வரை என்ன எழுதப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. இப்படியெல்லாம் இவன் எழுதுவான், இதை நான் படிக்கணும், எனக்கு என்ன தலையெழுத்தா என்றெல்லாம் நினைக்காதீர்கள். நீங்கள் சாருவை படிப்பவர் என்றால் அப்படி எல்லாம் நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கே தெரியும். அதனால் தொடருங்கள்!

உறவினர் ஒருவரின் குழந்தை (கிட்டத்தட்ட 3 வயது) அதனுடைய உயரம் அளவிற்கு ஒரு மெடல் சுமந்து வந்து காட்டியது. சில்வர் கலரில் இருந்தது. அவன் அம்மா ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்தான் என்றார்கள். இத்துனூண்டு குழந்தைக்கு ஒரு ஓட்டப்பந்தயம் அதற்கு ஆள் உயரத்துக்கு ஒரு மெடல் வேறா என்று நான் வியந்து கொண்டிருந்தேன். அதற்கு அவர்கள், அதை என் கேட்கிறீர்கள், ஃ பஸ்ட் ப்ரைஸ் வாங்க வேண்டியது, செகண்ட் தான் கிடைத்தது என்றார்கள். ஏன் வேகமா ஓடலையா என்றேன். இல்லை இல்லை, நல்லா ஓட்டிட்டு இருந்தான், கிட்ட வந்ததும் எல்லாரும் கை தட்றதை பார்த்து அவனும் நின்னு கை தட்ட ஆரம்பிச்சுட்டான் என்றார்கள். சோ க்யுட்!

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு சுவாரஸ்யமான ஆசாமி. ஒன்வேயில் செல்லும்போது போலீஸ் உங்களை பார்த்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். போலீசின் கண்களும் உங்கள் கண்களும் மோதியதும் (என்ன கவித்துமான தருணம்!) அவர் உங்களை அழைக்க கை ஓங்குவதற்கு முன் நீங்கள் உங்கள் கையை காட்டி நான் உங்களிடம் தான் வருகிறேன் என்று அவரை நோக்கி செல்ல வேண்டும். அவர் உங்களை கேள்வி கேட்பதற்கு முன் சார், இந்த ரோட்டுக்கு எப்படி போகணும்? இந்த தெருவுக்கு எப்படி போகணும் என்று ஒரு பிட்டை போட வேண்டும். அவர் டென்ஷன் ஆகி "யோவ், அது அந்த பக்கம் போகணும்யா, போய்யா அட்ரஸ் தெரியாம ஒன்வேல வந்துட்டு..." என்று சத்தம் போட்டு அனுப்பி விடுவார், விடுவாராம்! முயற்சித்து பாருங்கள். அவர் சைடில் ஏதாவது கேட்டால் நீங்கள் நேராய் கமெண்ட்டில் வந்து என்னை கேட்காதீர்கள்!

ஆமாம், இந்த சென்னைக்கு என்ன ஆகிவிட்டது? எப்போது பார்த்தாலும் மேக மூட்டமாய், குளிர் காற்றுமாய், சாரலைத் தூவிக் கொண்டு கண்றாவியாய் அல்லவா காட்சி தருகிறது! ஒரு வேளை அடுத்த கிருஸ்த்துமசுக்கு பனி பெய்யுமோ? க்ளோபல் வார்மிங்கானால், சென்னை கூளிங்காமோ?  புது வருடமும் அதுவுமாய் இப்படி ஒரு மொக்கையை நான் இதுவரை போட்டதே இல்லை! என்னாலேயே தாங்க முடியவில்லை! வருகிறேன். 

வானுயர்ந்த கண்ணாடி கட்டிடங்கள் - வாழ்க்கை
தொலைந்து போகும் கருஞ் சிறைகள்

வயிறு வரை தொங்கும் கழுத்துபட்டை கெளரவம் - ஒரு
நாள் மறந்தால் உள்ளே அனுமதி மறுக்கும் கேவலம்

சுற்றிலும் பராமரிக்கப்படும் அழகு - பார்வை
கணினியைத் தாண்டாது, பிறகு?

சுழலும் நாற்காலியின் சொகுசு - முதுகுத்
தண்டை பதம் பார்க்கும் பிறகு

இணையத்தினால் கைக்குள் உலகம் - ஆனால்
பக்கத்தில் இருப்பவனுக்கு மின்னஞ்சல்

உடல் உழைப்பின் அசதியில்லை - நெஞ்சு
சட்டென்று நின்று போகும் வரை, பயமில்லை

வேண்டிய மட்டும் பணம் - அள்ளி 
அள்ளிக் கொடுத்தாலும் திரும்பாத காலம்

ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்குச் சட்டை - முப்பத்தைந்து 
வயதில் தலை முழுதும் சொட்டை

ஐம்பது லட்சத்தில் வசதியாய் வீடு - படுக்கை
அறை தெரியாது, அசதியாய் வரும்போது

வெள்ளைக்காரனின் பெயர்கள் மனப்பாடம் - மனைவி
மக்களின் பெயர் மறந்து போகும் 

விலையேற்றத்துக்கான பிரதான காரணமென்று தூற்றும் - இருந்தும் 
ஒட்டு மொத்த சமுதாயமும் கூடிச் சுரண்டும்


மன் என்ற மன்னாருக்கும், மதன் என்ற மதனகோபாலுக்கும், அம்பு என்ற அம்புஜாக்ஷிக்கும் நடக்கும் இல்லை மிதக்கும் காதல் கலாட்டாகளின் கலவை மன் மதன் அம்பு! ஒரு சேஞ்சுக்கு வலையுலகின் எந்த விமர்சனமும் படிக்காமல், கதை தெரியாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்த்தால் நன்றாகத் தான் இருக்கிறது. நங்கநல்லூர் வெற்றிவேல் தியேட்டர் தமிழ்நாடு மாதிரி, வந்தவருக்கெல்லாம் டிக்கட் கிடைக்கும். ஆனால் என்ன, சங்கூதுற வயசுல சங்கீதா மாதிரி ஒட்டடை பிடித்த அந்த பாழடைந்த கட்டிடத்திற்கு டீடிஎஸ், ஏசி என்று கொஞ்சம் அரிதாரம் பூசி விட்டிருப்பார்கள். முதுகு வலிக்காரர்கள் அமர ஏதுவான நாற்காலி. கொஞ்சம் கூட முன்னும் பின்னும் நகராது, சாயாது!  கொடுமை என்னவென்றால் இங்கு  ஃ பஸ்ட் கிளாஸ் 80/, பால்கனி 100/, பாக்ஸ் 120/ ரொம்ப ஓவர். ஃ பஸ்ட் கிளாசுக்கு கீழ் கிளாசே இல்லை. முன் இருக்கைகள் அத்தனையும் காலியாய் கிடக்கின்றன. நாட்டில் எல்லோரையும் ஃ பாஸ்ட் கிளாஸ் சிட்டீசனாக நடத்துவதே இது போன்ற சில தியேட்டர்கள் தான்!

படத்தின் முதல் பாதி திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வாவை அப்படியே வாயில் போட்டுக் கொண்டால் எப்படி வழுக்கிக் கொண்டு போகுமோ அப்படி வழிந்து செல்கிறது. அழகான அடக்கமான கதை. அதற்கேற்ற கச்சிதமான திரைக்கதை. ஆங்காங்கே சில நச் வசனங்கள். ரம்மியமான ஒளிப்பதிவு ...முதல் பாதி! ஆனால் அப்படியே ஒரு அழகான நீரோடை போல செல்ல வேண்டிய கதை இடைவேளைக்குப் பிறகு கமலிடம் உள்ள கிரேசி மோகன் பாதிப்பினால் தடம் மாறி விடுகிறது. தசாவாதராத்திலும் தேவையில்லாமல் கிரேசி மோகன் டைப் சீன்களையும், வசனகளையும் வைத்திருந்தார். அதே போல் இதிலும்! இந்த ஆள் மாறாட்டக் குழப்பங்களிலிருந்து தமிழ் சினிமா மீள வேண்டும். அதிலும் முக்கியமாய் கமல் படங்களில். போதும் சார்!

மாதவனின் குடிகார நடிப்பு அற்புதம். அவரின் அந்த நடிப்பை "பார்த்தாலே பரவசம்" படத்திலேயே கவனித்திருக்கிறேன். (டேய், என்னடா பேர் எல்லாம் சொல்லி கூப்பிடறே?அவன் எவ்வளவு கருப்பு தெரியுமாடா? என் பக்கத்துல நிக்க முடியுமாடா அவன்?), அவர் நன்றாய் குடிகாரராய் நடிப்பார் என்பதற்காக, வெனீஸ் வந்த பிறகும் அவர் தண்ணீரிலேயே மிதப்பது போல் காட்டியது எல்லாம் ரொம்ப ஓவர். தன் காதலி அடுத்தவனிடம் ஊர் சுற்றுகிறார்,  இதனால் அவருடனான தன் திருமணத்தை முறித்துக் கொள்ள வரும் ஒருவர் இப்படி போதையிலா உழல்வார்? டூ மச்! அதிலும் ஒரு கன்னிப் பெண்ணின் மேல் சந்தேகப்படும் அந்த கேரக்டர், மணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு டைவர்சியிடம் அவள் இரண்டு பாடல்கள் பாடி விட்டார் என்பதற்காக காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். சேட்டை தானே? ஆனால் அதை எல்லாம் நம்மை யோசிக்க விடாமல் அதையெல்லாம் சாமர்த்தியமாய் காமெடியால் மறைத்து விடுகிறார் எழுத்தாளர் கமல். (அப்புறம் நீ எப்படி கண்டுபுடிச்சேன்னு கேக்க கூடாது!! ஆமா!)

த்ரிஷாவுக்கு நிறைய்ய வேலை இல்லை. இருந்தாலும், சென்னையில் வளர்ந்த தமிழ் நடிகை, அதிலும் தமிழில் கவிதை எழுதும் நடிகையின் பாத்திரத்தை நடிப்பது, சென்னையில் வளர்ந்தும் தமிழே அதிகம் பயன்படுத்தாத த்ரிஷாவுக்கு கஷ்டமாய் தான் இருந்திருக்கும். குஷ்புவை காட்டி கமல் த்ரிஷாவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்! நல்ல எடுத்துக் காட்டு, ஆனால் காலக் கொடுமை. வித விதமாய் உடை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் நடந்து கொண்டு நடிகையின் பாத்திரத்தை கச்சிதமாகவே செய்திருந்தார். ஒரு நடிகையின் கார் மோதியிருக்கும் வேளையிலும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஒரு நடிகையாய் இருப்பதற்கான விலையை அழகாய் எடுத்துக் காட்டுகிறது. த்ரிஷாவின் குரல் நன்றாய் தான் இருக்கிறது. ஏன் அவர் டப்பிங் செய்வதில்லை என்று புரியவில்லை. அவரின் குரலில் பேசும் (பாடும்?) கமலின் கவிதையின் பின்னணி ஒரே இரைச்சல்! ஒரு வேலை தியேட்டரின் கோளாறாக இருக்கலாம். பாடல்களும் ஒன்றும் மனதில் நிற்கவில்லை. இன்னும் அதிகம் கேட்கவில்லை என்பதே உண்மை. (எல்லாம் இந்த இளையராஜாவை சொல்ல வேண்டும், மனிதர் எந்த புது பாடல்களையும் கேட்க விட மாட்டேன் என்கிறார்). அது தவிர இந்தக் கவிதை இந்தப் படத்திற்கு எழுதியதா, அல்லது கோர்த்ததா என்று தெரியவில்லை. கமலின் இந்தக் கவிதையை விட அவர் தீபாவளி அன்று காஃபி வித் அணுவில் பாடிய வெண்பா(க்கள்) என்னை ஆச்சர்யப்படுத்தியது! 

சங்கீதாவைப் பற்றி சொல்லாமல் மன்மதன் அம்பு நிறைவடையாது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயாய், ஒரு டைவர்சியாய், ஒரு ஹை ஃபை சொசைட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணாய் மிக கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கொடுத்த பாத்திரத்தை அனாயாசமாய் செய்திருக்கிறார் என்று தோன்றியது. மாதவன் பாத்ரூம் போக வேண்டும் என்றதும், ஒண்ணா, ரெண்டா என்று கேட்பதும், பிறகு நிலைமையை உணர்ந்து, என் பையன்கிட்ட கேட்டு கேட்டு, உங்க கிட்டயும் அப்படியே கேட்டுட்டேன் என்று வழிவதும், சோ ஸ்வீட்! த்ரிஷாவின் பாடிகாட்டும் கலக்கியிருந்தான். 

முக்கியமான ஒருவரை மறந்து விட்டேன். ஓவியா! கமல் படம் என்றது ஆசையாய் வந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒரு துணை நடிகை கூட நடிக்க ஒப்புக் கொள்ளாத ரோல். பாவம் அவர். நான் இந்தப் பதிவை போட்ட பிறகு இவரின் ஞாபகம் வந்தது, அதனால் மறுபடியும் பதிகிறேன்.

படம் பார்த்து விட்டு கடைசியில் எனக்குத் தோன்றியது, மன்மதன் அம்பு போன்ற படங்களை எடுக்க ஆயிரம் பேர் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். ஒரு உலக நாயகனாய் இருந்து கொண்டு, ஒரு மணி நேரத்துக்குள் ஒன்பது கதைகள் சொல்லும் தன்மை கொண்ட  கமலஹாசன் உலகத் தரமாய் ஒரு தமிழ் படத்தை தருவது எப்போது?