வலையுலகிற்கும் எனக்குமான உறவு ஒரு தாமரை இலை நீர் போல் ஆரம்பத்திலிருந்தே ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறது! நான் வலையுலகில் இருக்கிறேனே தவிர இங்கு நடக்கும் எந்த விதமான விவாதங்களிலும், சம்பவங்களிலும், சம்பிரதாய பேச்சுக்களிலும், ஏச்சுக்களிலும் கலந்து கொள்வதில்லை! என் மனதை மிகவும் பாதித்தாலன்றி எந்த வலைப்பதிவுக்கும் சென்று பின்னூட்ட முதலீடு இடுவதில்லை! [முதல் போட்டால் தானே லாபம் கிடைக்கும்!] அதனால் தான் "இன்று நான் பல் விளக்கவில்லை" என்பது மாதிரியான பதிவிற்கு 105 பின்னூட்டங்கள் வருவதைப் போல் என் பதிவுகளுக்கு அத்தனை பின்னூட்டங்கள் வருவதில்லை! அதைப் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை! [டோனைப் பார்த்தா கவலைப்படாத மாதிரி தெரியலையே!]
நிறைய வலைபதிவுகளில் பார்த்திருக்கிறேன்! முதல் பின்னூட்டம் "இன்று நான் தான் ஃபஸ்ட்", "நான் வந்துட்டேன்", "அப்பாடா மொதோ கமெண்ட் போட்டாச்சு" என்று நிறைய பின்னூட்டங்களை பார்த்திருக்கிறேன். அது என்ன விளையாட்டு என்று எனக்கு இன்றும் விளங்கவில்லை! அப்படி என்ன சொல்லி வைத்துக் கொண்டு பின்னூட்டமிடுவது என்று எனக்கு புரியவில்லை! அதே போல் போலி டோண்டு யாரை திட்டினார், அனானி கமெண்ட் போடுவது யார்? இட்லி வடை ஆணா பெண்ணா என்பது போன்ற வலையுலக சரித்திர நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதே இல்லை! யார் வம்பு தும்புக்கும் போகாமல், யார் மனதையும் புண்படுத்தாமல் ரொம்பவே சமத்து பையனாக நானுன்டு என் வலைப்பூ உண்டு என்று இருந்திருக்கிறேன்! ஒருவேளை அதனால் தான் என்னால் இவ்வளவு நாட்கள் இங்கு தாக்கு பிடிக்க முடிந்ததோ என்னவோ என்றும் தோன்றுகிறது!
இந்த மூன்றரை வருடங்களில் நான் பதித்த வலைகளின் எண்ணிக்கை வெறும் 132 மட்டுமே! இதில் பாதியாவது தேர்ந்த பதிவாய் இருந்தால் சந்தோஷம். சில வலையுலக நண்பர்கள் என் பதிவுகள் படித்து ரசித்து பல சங்கிலிப் பதிவிற்கு என்னை கோர்த்து விட்டிருக்கிறார்கள்! அது பெரும்பாலும் சுயத்தைப் பற்றிய பதிவாகவே இருக்கும். அது எழுத அமரும் போதெல்லாம் மனதுக்குள் கவுண்டமணியின் குரல் "நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இது தேவைதானா" என்று ஒலிக்கும். என் வலைப்பதிவு என்பதால் எனக்கு இது பிடிக்கும், அது பிடிக்காது என்று எழுதுவதால் யாருக்கு என்ன லாபம் என்று ஒரு கேள்வி மனதுக்குள் எழும். அத்தோடு அந்தப் பதிவின் கதை முடிந்து போகும். என்னைப் பொறுத்த வரை ஊர் உலகத்திலுள்ள எதைப் பற்றி வேண்டுமென்றாலும் வெகு சுலபமாய் ஒரு மொக்கை பதிவை எழுதிவிடலாம். ஆனால் உன்னை பற்றி நான்கு வரி சொல் என்றால் போதும்....ஐய்யோ சாமி, மண்டை காய்ந்து விடுகிறது....அதனால் தான் கூடியமட்டும் என் சுய புராணங்களை விட்டு என் மனதை பாதித்த விஷயங்களில் என் பார்வையை செலுத்தி ஒரு நல்ல வலைபதிவராய் என்னை முன்னிருத்த ஆசைப்படுகிறேன்! [என்ன மெசேஜா?]
யாழ்.நெட் காலத்திலிருந்து நட்சத்திர வாரத்தை அறிந்திருந்தாலும், இப்பொது தான் எனக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலஹாசன், "என்னை எல்லோரும் சகலகலா வல்லவனாக சொல்கிறார்கள், பரவாயில்லை சொல்லிவிட்டு போகட்டும், மார்க்கெட்டுக்கு உதவும்...நான் சகலகலா மாணவன் என்பது தான் உண்மை!" என்று சொன்னதைப் போல் இத்தனை ஆண்டுகள் கழித்து இந்த அந்தஸ்து கிடைத்தாலும் சரி இப்போதாவது கிடைத்ததே, மார்க்கெட்டுக்கு உதவும் என்று நினைத்து, சகலகலா மாணவனாக முன்னேறுகிறேன்....வழக்கம்போல் உங்களின் ஆசிர்வாதங்களுடன்!

































