2 வாரத்திற்கு முன் என் நண்பன் ஒருவன் பெங்களூரிலிருந்து வந்திருந்தான். அவனுக்கு ஒரு விபரீத ஆசை. மார்கழி மாதக் கர்நாடக கச்சேரி ஒன்றை பார்க்க வேண்டுமாம். ஆஹா, எனக்கு ஈடு கொடுக்க ஒருவன் சிக்கிக் கொண்டான் என்று பூரித்துப் போய், அன்று காலையில் இருந்தே பேப்பரில் அலசியதில், சுதா ரகுநாதன் எங்கள் கைகளில் வசமாக சிக்கிக் கொண்டார்.
சிந்து பைரவியில் எல்லா பாடல்களும் பிசகாமல் பாடுவேன் என்ற ஒன்றைத் தவிர எனக்கும் கர்நாடக சங்கீதத்துக்கும் சம்மந்தமில்லை. என்னுடன் வந்த நண்பர்களும் அப்படியே..மாலை 4:30 மணிக்கு நாரத கான சபாவில் கச்சேரி. ஒருவழியாய் தேடிப் பிடித்து போய் சேர்ந்தோம். டிக்கட் வாங்க கையை நீட்டினால், சார் எல்லாம் ஃபுல், ஸ்டேஜ் டிக்கட் தான் இருக்கு என்றார் அவர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள் எல்லாம் ஸ்டேஜில் உட்கார்ந்து கொண்டால் சுதா ரகுநாதன் எங்கு உட்காருவார்? அதுவும் அந்த டிக்கட் வெறும் ஐம்பது ரூபாய் தான்..முன்ன பின்னே இந்த மாதிரி விழாக்களுக்குப் போய் அனுபவமாவது இருக்க வேண்டும். சரி இருக்குறதை கொடுங்கோ என்று வாங்கிக் கொண்டோம். எனக்கு என்னமோ, எல்லோரும் எங்களையே பார்ப்பது போல் இருந்தது. நான் வேறு சும்மா இருக்காமல் என் சங்கீத அறிவை எல்லாம் கசக்கி பிழிந்து சாரீரம், ஆலாபனை , நாதக் கமலம், ஆரோகனம், அவரோகனம் என்று எடுத்து விட்டுக் கொண்டிருந்தேன்..அப்போது தானே அங்கு இருப்பவர்களுக்கு நாங்கள் சங்கீத கலா பூஷன்கள் என்று நினைத்துக் கொள்வார்கள் என்று நினைத்து.பயல்களுக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை, இதில் ஒருவன், நீ என்கிட்ட இன்னைக்கு காலையிலேயே சொல்லி இருந்தா, குளிச்சுட்டாவது வந்திருப்பேன் என்றான். கருமாந்திரம்.
50 ரூபாய் டிக்கட்டுக்கு நாரத கான சபா மேடையில் ஏறி உட்கார்ந்து விடுவேன் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. அந்தப் பெரிய மேடையில் ஒரு சிறிய மேடை, அதில் சுதா ரகுநாதனும் அவருடைய பக்க வாத்தியங்களும்..அவரைச் சுற்றி நாங்கள் உட்கார்ந்து கொண்டோம். திரை விலகியவுடன் கை தட்டினார்கள். நான் ரசிகர்களை நோக்கி கை ஆட்டலாம் என்று சொன்னேன், நண்பர்கள் என்னை தடுத்து விட்டார்கள். ஒரே தாத்தா பாட்டி கூட்டம் தான்.
ஒரு வழியாய் கச்சேரி ஆரம்பித்தது..சத்தியமாய் சொல்கிறேன், எனக்கு யானை முகனே, அருள் புரிவாய் என்ற ஒரு நான்கு வார்த்தைகளைத் தவிர ஒன்றும் புரியவில்லை. நண்பர்கள், நீ பரவாயில்லை உனக்கு அவ்வளவு புரிந்ததே என்றார்கள். 50 ரூபாய்க்கு அவர் அத்தனை எச்சரிக்கை ஏன் செய்தார் என்று போக போகத் தான் தெரிந்தது. புரியாத சங்கீதம், நட்டநடுவில் சம்மனமிட்டு எவ்வளவு நேரம் உட்கார முடியும் சொல்லுங்கள்? 6 மணிக்கு வெளியே ஓடி வந்து விட்டோம். கச்சேரி 7:30 மணி வரை.
அங்கு வந்து கச்சேரியை ரசிப்பவர்கள் நான் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். எத்தனை விதமான தலை ஆட்டல்கள்? ஒருவர், தலையை ரசித்து தலை ஆட்டுகிறாரா? அல்லது தூங்கி வழிகிறாரா என்று என்னால் கண்டு புடிக்க முடியவில்லை. ஒருவருடைய, தலையாட்டல்..ஓஹோ, அப்படியா, சரி மேட்டருக்கு வா என்பது போல் வெடுக் வெடுக்கென்று ஆடியது? சிலர் கண் மூடி தூங்கி விட்டார்கள். ஆனால் தான் தூங்கவில்லை என்பதை கையை ஆட்டி ஆட்டி காட்டிக் கொள்கிறார்கள். ஒன்று புரிந்தது, "சரிகமபதநி" (வார்த்தைகளே வராமல் இது மட்டும் பாடுவதற்கு என்ன சொல்வார்கள்? ஸ்வர சஞ்சாரமா?) என்பது உச்சத்தில் போய், மறுபடியும் கீழே வந்தவுடன் கண்டிப்பாக கை தட்ட வேண்டும்!
கர்நாடக சங்கீதம் முழுதும் தெய்வங்களை துதிப்பது தானா? வேறு விஷயங்களே இதில் இல்லையா? சமூகக் கருத்துக்களை ஏன் இதில் கொண்டு வரவில்லை? என்று என் நண்பனிடம் கேட்டேன். (வேறு கருத்துக்கள் இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறேன்!) இசையின் மூலம் இறைவனை அடைவதற்கான ஒரு வழி தான் சங்கீதமும் என்றான் அவன். எத்தனை நதிகள் இருந்தாலும், அனைத்தும் கடலில் சென்று கலப்பதைப் போல எத்தனை விஷயம் இருந்தாலும், மனிதன் கடைசியில் இறைவனிடம் கலந்து விடுகிறான்.
சங்கீத ஞானமு..பக்தி விநா...சன்மார்க்கமு தரனே