ஞாயிற்றுக் கிழமை. மணி இரவு 1. youtube ல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். phone வந்தது. மாமா தான். ஒரு வேலையாய் பூந்தமல்லி வரை போக வேண்டி இருந்தது. சட்டையை மாட்டிக் கொண்டு, பாண்ட்டுக்கு மாறினேன். அன்று இரவு தான் முடி வெட்டி இருந்தேன். shampoo போட்டு தலைக் குளித்து இருந்ததால், முடி சொன்ன பேச்சையெல்லாம் கேட்டது. இஷ்டத்துக்கு வகுடு எடுத்து சீவி சீவி கலைத்துக் கொண்டிருந்தேன். கண்ணாடியை பார்த்து தன்னையே ரசித்துக் கொள்ளும் எந்தப் பிள்ளையயும் அம்மாக்களுக்குப் பிடிப்பதில்லை. "டேய், ராத்திரி ஒரு மணிக்கு உனக்கு என்னடா அழகு வேண்டிக் கெடக்கு? லைட்டைப் போட்டு என் தூக்கத்தையும் கெடுத்துட்ட இருக்க? பேசாம பட்றா" என்றாள். "நான் வெளியே போறேன்!" என்றேன். "என் தப்பு தான், நான் புள்ளைய பெத்துருக்கனும், பேய பெத்தா இப்படித் தான். எங்கையாவது போயித் தொலை, லைட்டை அணை!" என்று அங்கலாய்த்தாள். எரிச்சலாய் வந்தது எனக்கு.

சீப்பைத் தூக்கிப் போட்டு, பைக் சாவி, ear phone, cap எடுத்துக் கொண்டு கிளம்பினேன். தாம்பரத்திலிருந்து சென்னை பைபாஸ் பிடித்தால் 20 நிமிடத்தில் பூந்தமல்லி. காதில் head phone ல் "என்றென்றும் புன்னகை", cap ஊடே முடி கோதும் காற்று, ரசித்து பைக்கை முறுக்கினேன். காற்றின் வேகம் தலையில் இருந்த cap ஐ கழட்டப் பார்தது. காற்றுக்கும் எனக்கும் இருந்த அந்தப் போட்டி நன்றாக இருந்தது. சென்னையில் பைக் ஓட்ட சிறந்த நேரம் இரவு தான். அதுவும் நவம்பர், டிசம்பரில் அந்த மெல்லிய பனியில், காதில் ear phone மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே மெல்ல ஊரைச் சுற்றி வருவது ஒரு சுகம். அதுவும் ரிங் ரோட் என்றால் சும்மா பறக்கலாம். அப்படி ஒரு இன்பத்தை அனுபவித்த படி சென்று கொண்டிருந்தேன்.

அப்போது தூரத்தில் ஒருவன் நடந்து போவதைப் பார்த்தேன். ஒரு மாதிரி லுங்கியை மடித்துக் கட்டி கையில் சில சாமான்களை வைத்திருந்தான். "இந்த இடத்தில் ஏன் நடந்து கொண்டிருக்கிறான்? இப்படியே எவ்வளவு தூரம் நடப்பான்?" என்று தோன்றியது. அவன் அவ்வப்போது திரும்பி வண்டி ஏதும் வருகிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துப் போய்க் கொண்டிருந்தான். என் வண்டியை தூரத்தில் பார்த்ததும், கையை உயர்த்தி லிஃப்ட் கேட்க ஆரம்பித்தான். எனக்கும் இரக்க குணம், உதவும் எண்ணம் எல்லாம் இருந்தாலும், இந்த மாதிரி சமயத்தில், இந்த மாதிரி ரோட்டில், முன் பின் தெரியாத ஒருத்தனுக்கு உதவுவது எல்லாம் வேண்டாத வேலை. அதனால் அவனைக் கண்டு கொள்ளாமல் கடந்தேன். ஆள் கருப்பாய், ஒல்லியாய், கூலி வேலை செய்பவன் போல் இருந்தான். அவன் கையில் வைத்திருந்த சாமானில் ஒரு ரம்பமும், சுத்தியும் இருந்தது. வண்டியை வேகமெடுத்தேன். அவன் ஒரு வித ஏமாற்றத்தில் என் வண்டியைப் பார்த்துக் கொண்டிருந்தது rear view mirror ல் பார்த்தேன். பாவமாய் இருந்தாலும் ஆள் ஒரு மார்க்கமாய் இருப்பதால் பரவாயில்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அவனை விட்டு ஒரு நூறு மீட்டர் வந்திருப்பேன், காற்றுக்கும் எனக்கும் நடக்கும் போட்டியில் இந்த முறை காற்று வென்றது. தலையிலிருந்து என் cap சட்டென்று பின்னால் பறந்தது. வண்டியை நிறுத்தி விட்டு cap ஐ எடுக்கத் திரும்பினால் அந்த ஆள் என் cap எடுத்துக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தான். அருகில் வந்ததும், அவன் "cap லூசா இருக்கு போல, காத்துல அடிச்சிருச்சு" என்றான். நான் தலையைசைத்துக் கொண்டே, cap ஐ வாங்கிக் கொண்டு, கொஞ்சம் தர்மசங்கடமாய் உணர்ந்தேன்.

"எங்க போறீங்க?" என்றேன்.

"டோல்கேட் ல விட்டா போதும்." என்றான்.

"சரி வாங்க" என்று நடந்தேன். அவன் பின்னால் நடந்தான். அடுத்த நொடி அவன் கையில் உள்ள சுத்தியால் என் பின் மண்டையில் பலமாய் ஒரு அடி. இல்லை. அப்படி எனக்கு ஒரு பிரமை. திரும்பிப் பார்த்தால் பாவமாய் நடந்து வந்து கொண்டிருந்தான்.

"இந்த நேரத்துல, இந்த ரோட்ல தனியா போறீங்க?" என்றேன்.

"அஹ்..என் கூட்டாளியோட தான் வந்தேன். அவனுக்கு என்னமோ அவசரமா ஜோலி ஒன்னு வஞ்ச்சுன்னு எதுனா வண்டிய புட்ச்சி போன்னுட்டான்."

cap ஐ tight செய்து தலையில் போட்டு அமர்ந்து வண்டியை எடுத்தேன்.

அவன் பின்னால் சற்று தள்ளியே உட்கார்ந்து கொண்டான்.

பாட்டை நிறுத்தி, ear phones ஐ கழுத்தில் போட்டுக் கொண்டேன். அவனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. பேசினாலும் காற்றில் சரியாய் கேட்காது. அவனும் எதுவும் பேச்சு கொடுக்கவில்லை. கண்ணாடியில் பார்க்கும்போது, எதிர்க்காற்றை அனுபவித்தபடி இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் பார்த்துக் கொண்டே வந்தான். வண்டியை வேகம் எடுத்தேன்.

இந்த ரோடு எப்போதும் காலியாகத் தான் இருக்கும். அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு. லாரிகளும் இல்லை. அவன் நினைத்தால் என்னை அடித்துக் கொன்று, பொறுமையாய் ரம்பத்தால் துண்டு துண்டாய் அறுத்து போட்டாலும் அங்கே கேட்பாரில்லை. "ஒரு பைக், கொஞ்சம் பணத்துக்காக சுத்தி எடுத்து கொல்லும் அளவுக்கு துணிவார்களா?" என்று ஒரு எண்ணம் தோன்றி, பின் தினமும் பேப்பரில் இதை விட கேவலமான விஷயத்திற்கு எல்லாம் அடித்துக் கொண்டு சாகும் செய்திகள் கண் முன் வந்து மறைந்தன. ஆள் அரவம் இல்லாத இடத்தில் ஒரு மனிதன் கூட இன்னொரு மனிதனுக்கு எதிரி தான் என்ற நினைப்பு மேலும் பயமுறுத்தியது. இப்படி மண்டையில் திகலாய் என்னன்னமோ எண்ணம் எல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. "எப்படா டோல்கேட் வரும்!" என்று இருந்தது. ஒரு கணம் இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாய் பார்த்துக் கொண்டோம். அப்போது எதிர்காற்று அவனை ஒன்றும் செய்யவில்லை. அவன் தீர்க்கமாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்த மாதிரி எனக்குத் தோன்றியது. எனக்கு உள்ளே ஏதோ பிசைந்தது. அந்த நொடியில் எதிர்பாராமல் வலது பக்கத்தின் divider ல் இருந்து திடீரென்று ஒரு நாய் ரோட்டில் பாய்ந்தது. என்ன ஏது நடக்கிறது என்று என் மூளைக்கு எட்டுவதற்குள் அனிச்சை செயலாய் வண்டியின் எல்லா ப்ரேக்குகளையும் ஒரே நேரத்தில் அழுத்தினேன். வண்டியில் உள்ள disc break திடுமென்று விழித்து வண்டி balance தவற நான் முன்னால் தூக்கி எறியப்பட்டேன். கைகளிலும் கால்களிலும் சிராய்த்து, இரண்டு முட்டியிலும் செமையாய் வலித்தது. விழுந்த வேகத்துக்கு, நான் இன்னும் சுயநினைவோடு இருப்பதே எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

மெல்ல எழுந்து உட்கார்ந்து கைகளில் உள்ள சிராய்ப்புகளைப் பார்த்தேன். மண் படிந்த தோல் பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. எரிச்சல் அதிகமாய் இருந்தது. முட்டியில் பேன்ட் கிழிந்து ரத்தம் தோய்ந்திருந்தது. மெல்ல எழுந்தேன். வலிக்கிறது, ஆனால் நிற்க முடிகிறது. வண்டி எங்கோ ஓரமாய் கிடந்தது. Cap எங்கே விழுந்ததோ தெரியவில்லை. அந்த ஆள் தூக்கி வந்த பை, சுத்தி, ரம்பம், மற்ற சாமான்கள் சிதறிக் கிடந்தன. அவன் மல்லாக்கக் கிடந்தான். அவன் அருகில் சென்றேன். அவன் உடம்பில் ஒரு அடியும் இல்லை. அவன் பின் மண்டை தான் பிளந்து கொலகொலவென்று இருந்தது.

 தினகர் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான். தினகர் என்ற அந்தப் பெயரில் இருக்கும் 'ர்' தான் அவனுக்குக் கடைசியாய் கிடைத்த மரியாதை. வீட்டில் அவனை பெண்டாட்டி பிள்ளைகள் மதிப்பதில்லை. (இது ஆண்களுக்கு உலகப் பிரச்சனை என்றாலும்..) ஆஃபிஸிலும் அவனை உப்புக்குச் சப்பாணியாய் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண் விதியே என்று வாழ்வது போல் தான் தினகரும் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஐப்பசி வந்தால், (வரும்) தினகருக்கு நாற்பது வயது. அதற்குள் அவன் தலை முடிகளுக்கு, நரைக்கலாமா, கொட்டலாமா என்று போட்டி. நல்ல சிவப்பு என்றோ, கரு கரு கருப்பு என்றோ சொல்ல முடியாது. Asian Paints color palette ல் நாலைந்து color mix செய்தது போல் ஒரு நிறம். முட்டைக் கண்கள். ஒரு சோம்ப்ளாங்கி கண்ணாடி. மூச்சு விடுவதற்கும், அந்த கண்ணாடியை தாங்குவதற்கும் அன்றி அந்த மூக்குக்கு வேறு ஒன்றும் விஷேஷமில்லை. அவ்வளவு வாய் திறந்து பேசாத ஆளுக்கு அத்தனை பெரிய வாய். பகவானின் லீலையே லீலை. அளவான உயரம் + ஷூவில் கொஞ்சம் ஹீல்ஸ். மிதமான உடல்வாகு. இவ்வளவு தூரம் அவனை அவன் மனைவி கூட வர்ணித்ததில்லை. கதைக்கு வருவோம்.

அன்று காலையிலேயே மனைவியின் சுப்ரபாதம் தொடங்கியது. அவன் பையன் பள்ளியில் பரிட்சையில் கோட்டடித்து நிற்பதற்கும், சேராதவரோடு சேர்ந்து கெட்டுப் போவதற்க்கும், ஸ்கூல் ஃபீஸ் காரணம் காட்டி அவனை இந்தப் பள்ளியில் சேர்த்ததற்கும், அவன் எதிர்காலம் நாசமாய் போகப் போவதற்கும் தினகர் தான் முழு முதற் காரணம் என்று சொல்லி அவன் மனைவி அவனை அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள். பூசாரியின் அர்ச்சனையை காதில் போட்டுக் கொண்டு கடவுள் காலங்காலமாய் கல்லாய் அமர்ந்து இருக்கும் போது, அவன் படைத்த ஜென்மம், மனிதன், அதுவும் புத்திசாலி ஜீவராசி, இதைக் கூடவா கற்றுக் கொள்ள மாட்டான்.

இன்று அவன் கவலையே வேறு. கடந்த இரண்டு வாரங்களாக உயிரை உருவி எடுத்துக் கொண்டு, நேற்று இரவும் 3 மணி வரை (இரவா?) வேலை பார்த்த Business proposal presentation இன்று இருந்தது. அது வேறு வயிற்றில் புளியைக் கரைத்து, ரெண்டு தக்காளி போட்டு, குழம்பு பொடி போட்டு, கடுகு தாளிப்பது வரை வந்து விட்டது.
இவனைப் போலவே அப்பாவியாய் இருந்த அந்த wagon R ல் ஆபிஸ் செல்லும் வழியில் சாலையே தெரியாத அளவுக்கு வாகனங்கள். ஏதோ ஒரு பெரிய நோய் வந்து மக்கள் எல்லாம் இத்தனை காலம் வீட்டில் அடைபட்டுக் கிடந்து இன்று திறந்து விட்டது போல் அப்படி ஒரு கூட்டம். அந்த presentation ppt மனதில் ஓட கொஞ்சமாய் எரிச்சல் பட்டான்.

அன்று மாலை, சீக்கிரமே ஆபிஸில் இருந்து கிளம்பிவிட்டான்.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு: இது non linear கதை என்பதால், presentation என்ன ஆனது என்று அவன் வீட்டுக்குப் போகும் வழியில் நினைத்துப் பார்ப்பதாய் சொல்லப்படும். இதோ, நினைக்கிறான்.

அவன் அடித்த ஹாரனில் அவன் wagon R யே கொஞ்சம் மிரண்டது என்று தான் சொல்ல வேண்டும். "2 வாரமா ராப்பகலா வேலை பார்த்துருக்கேன். ஒரு Details "மண்ணும்" ('ம' வில் ஆரம்பிக்கும் கெட்ட வார்த்தை) இல்லாம இத்தனை டீமோட co-ordinate பண்ணி இவ்வளவு தூரம் பண்ணதுக்கு ஒரு சின்ன appreciation கூட இல்லாம, that bloddy rascal is firing me in front of all. Bloody mother fisher (புரிந்திருக்கும், 'f' கெட்ட வார்த்தை) GODDAMIT!" மறுபடியும் அவன் wagon R குலுங்க ஒரு horn. சில நொடிகளுக்குப் பிறகு தான் அது ஹாரனால் வந்த குலுங்கல் அல்ல பின்னால் வந்தவன் அவன் வண்டியில் இடித்த சத்தம் என்று புரிந்தது. இந்தத் தருணம், This moment, யுவராணி "தலைவர்" தோளில் சாய்ந்து அவர் அவளின் உதட்டில் உள்ள ரத்தத்தை பார்க்கும் தருணம். மாணிக்கம் பாட்ஷாவாக மாறும் தருணம். என்ன தான் இடித்தாலும், காரை நடு ரோட்டில் நிறுத்தி பஞ்சாயத்து பண்ணுவது எல்லாம் தினகரின் கனவில் கூட நடந்ததில்லை. ஆனால் இன்று...காரை அப்படியே நிறுத்தி விட்டு இறங்கினான். பின்னால் வந்து இடித்த மினி ட்ரக் ஆள் கொஞ்சம் apologetic ஆக இறங்கி வந்தான்.

அந்த ஆள் உயரம் கம்மியாய், தொத்தலான உடம்போடு, பார்க்கப் பரிதாபமாய் இருந்தான். தினகர் மனதில் பாட்ஷா உக்கிரமானார். அவன் முகத்தில் "தெரியாம இடிச்சிட்டேன் சார்" என்று எழுதி ஒட்டி இருந்தது. தினகர் தான் பாட்ஷாவாய் மாறி ஐந்து நிமிடம் ஆயிற்றே. இடிபட்ட காரை பார்த்துக் கொண்டே, அதே உக்கிரத்துடன் அவன் மேல் பாய்ந்தான். அவன் சட்டையை பிடித்துக் கொண்டு, அவன் கன்னத்தில் பொளேர் என்று ஒன்று விட்டான். அதை அந்த ஆள் எதிர்ப்பார்க்கவில்லை. அதோடு, தான் சின்ன வயதில் இருந்து கேள்விப்பட்ட அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொன்னான். அந்த ஆள் மிரண்டு போனான். ரோட்டில் சிலர் பஞ்சாயத்துக்கு வந்தால் அவர்களையும் துவம்சம் செய்தான். அந்த கணத்தில் தினகர், அவன் பாஸை, அவன் மனைவியை, அவன் மகனை, அவன் பக்கத்து வீட்டுக்காரனை, மோடியை, டோனால்ட் ட்ரம்ப்பை, அவன் அறியாமையை, அவன் தோல்வியை, அவன் கையாலாகாத்தனத்தை என்று எல்லாவற்றையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான். அந்த ஆள் எவ்வளவு கெஞ்சியும் தினகர் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். தினகரைத் தெரிந்தவர்கள் அவனை அப்போது பார்த்தால் அவன் தானா என்று சந்தேகம் வரும். அப்படி ஒரு உக்கிரம். அப்போது, யாரும் எதிர்பார்க்காமல், திடீரென்று அவன் கன்னத்திலும், முகத்திலும் தலையிலும், முதுகிலும் சாரமாரியாக சில அடிகள் விழுந்தது. அவன் சுதாரிப்பதற்குள் அவன் சட்டை எல்லாம் கிழிந்து தொங்கியது. முகத்தில் விழும் அடியை தடுக்க கையைக் கொண்டு தடுத்துக் கொண்டே தினகர் பார்த்தது, அந்த பரிதாபமான மினி ட்ரக் ட்ரைவர் அல்ல. அவன் வேறு விதமாய் மாறிப் போயிருந்தான். அவன் முகத்தில் எழுதியிருந்த "தெரியாம இடிச்சுட்டேன் சார்" மறைந்து, "விட்டுடுங்க சார், நான் புள்ளைகுட்டிக்காரன் சார்" போய், "ஆமாடா தே மவனே, நான் தான்டா இடிச்சேன், இப்போ என்னடா அதுக்கு" என்று மாறிப் போயிருந்தது. கூடி இருந்தவர்கள் இருவரையும் விலக்குவதற்குள் போதும் போதும் என்று ஆனது. அவன் தன்னை கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொண்டு "போடா, வண்டியை எடு" என்று அவன் ஆக்ரோஷமாகக் கத்த கூடி இருந்தவர்கள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தினகர் தனக்கு நடந்ததை நம்ப முடியாமல், வண்டியில் ஏறி அமர்ந்தான். Rear view mirror லும் அந்த ஆளின் பூத்துப் போன கண்கள் இவனை மிரட்டியது. சுய இரக்கம் பிய்த்துத் தின்ன கண்கள் கலங்க யாரையும் இடிக்காமல் வண்டியை எடுத்தான். அந்த மினி ட்ரக் அவனைக் கடந்து போனது.

"மினி ட்ரக் டிரைவர்" திருச்செல்வன் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான். திருச்செல்வன் என்ற அந்தப் பெயரில் இருக்கும் 'திரு' தான் அவனுக்குக் கடைசியாய் கிடைத்த மரியாதை. வீட்டில் அவனை பெண்டாட்டி பிள்ளைகள் மதிப்பதில்லை. (இது ஆண்களுக்கு உலகப் பிரச்சனை என்றாலும்..) அலுவலகத்திலும் அவனை உப்புக்குச் சப்பாணியாய் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். குடித்து விட்டு தினமும் அடிக்கும் குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண் விதியே என்று வாழ்வது போல் தான் திருச்செல்வன் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

காதலர் தினத்தை முன்னிட்டு...இசையமைப்பாளர்கள் யாராவது இருந்தால் மெட்டு போட்டு பார்க்கலாம்.

அவளுக்கென்ன அழகும் அறிவும் நிறைந்தவள்
அவளுக்கென்ன அத்தனை பெண்ணிலும் சிறந்தவள்
எனக்கென்ன அவளையே வரமாய் பெற்றவன்
எனக்கென்ன அவளின் காதலுக்கு உற்றவன்

கலைகளின் பிறப்பிடம் அவள் தான்
மானுடத்தின் சிறப்பிடம் அவள் தான்
நிகழ்கின்ற சரித்திரம் அவள் தான்
நிலைக்கின்ற இதிகாசம் அவள் தான்
எழுப்பாத கனவும் அவள் தான்
களிப்பான  நினைவும் அவள் தான்

(அவளுக்கென்ன அழகும்)

அண்டத்தின் ஒரு துளி அவள் தான்
அகிம்சையின் முதல் பாலி நான் தான்
படைக்கப்படாத புது உயிர் அவள் தான்
பயிலப்படாத முதல் மொழி அவள் தான்

அவளுக்கென்ன அழகும் அறிவும் நிறைந்தவள்
அவளுக்கென்ன அத்தனை பெண்ணிலும் சிறந்தவள்
எனக்கென்ன அவளே வரமாய் பெற்றவன்
எனக்கென்ன அவளிடம் காதலை கற்றவன்

ஊர்மிளா உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் ஹிந்தியை வெறுத்தது தெரிந்தும் அவரின் பல படங்கள் தமிழுக்கு டப் செய்யப் பட்டன. அப்படி "Daud" என்ற படமும் வந்தது. படத்தில் உடலை ஒட்டிய ஜீன்ஸ் அணிந்து அவர் குளித்த போது நனைந்தது அவர் மட்டுமல்ல. [யூட்யூபில் இருக்கும் "Daud" படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடுவதற்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு நான் காரணமாய் இருக்க போகிறேன் என்று எனக்குத் தெரியும்!] "Daud" வந்திருந்த போது, என் ஹிந்தி தெரியாத நண்பன் ஒருவன், "தாவுது" வந்திருக்கிறது என்றான். பிறகு தான் புரிந்தது எனக்கு, அது "தாவுது" இல்லடா, "தவுட்", அப்படி என்றால் "ஓட்டம்" என்று அர்த்தம் என்றேன்.இப்போது "தங்கல்" படத்தை டப் செய்திருக்கிறார்கள். ஹிந்தி தெரியாமல் போஸ்ட்டரில் பேரை பார்ப்பவர்கள், அமீர் கான் ஒரு இடத்தில் சில பெண்களுடன் "தங்கி"ப் போவது தான் படத்தின் கதை போல என்று எண்ணிக் கொள்ள வாய்ப்புண்டு. அதனால் முதலில் அதை தெளிவு படுத்தி விடுகிறேன். தங்கல் பெயரை  "தங்கத்தின்" த கொண்டு உச்சரிக்காமல் "தவத்தின்" த கொண்டு உச்சரிக்க வேண்டும். "தங்கல்" [தவத்தின் "த"!!!] என்றால் மல்யுத்த போட்டி என்று அர்த்தம். [டே, படம் வந்து ஒரு மாசம் ஆச்சுடா...விமர்சனம் போடறதே தப்பு, இதுல விளக்கம் வேறயா!!] தமிழில் படத்தை டப் செய்யும்போது அதற்கு தமிழிலும் பெயர் வைக்கலாம்.அமீர் கான் எனக்கு ஆதர்சம். எனக்குத் தெரிந்து கடைசியில் அவரின் தோல்வி படம் "மங்கள் பாண்டே" (2005) என்று நினைக்கிறேன். அதுவும் அவரின் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்கத் தான் செய்தது. மனிதர் நல்ல கதையை தேர்ந்தெடுப்பதில் கில்லியாக இருக்கிறார்.

தங்கல் ஒரு உண்மைக் கதை. ஹரியானாவில் வசிக்கும் மகாவீர் சிங் போகத் என்பவர் தன் இரு மகள்களை எப்படி மல்யுத்த வீராங்கனைகளாக்கி இந்தியாவுக்கு தங்கத்தை தருவித்தார் என்பது தான் கதை. அவரின் சொந்த வாழ்வில் இருந்த கஷ்டங்களோடு, சின்ன சின்ன சுவாரஸ்யங்களையும் சேர்த்து மிக அழகான திரை வடிவமாய் அளித்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பலம் நடிகர்கள் தேர்வு. அமீர் கான், சாக்ஷி தன்வர், முதல் பாதியில் வரும் சிறுமிகள், வளர்ந்த பிறகு வரும் பெண்கள், அமீரின் மருமகனாக வருபவர்கள், கோச்சாக வருபவர். அத்தனை பேரும் அசத்தல் தேர்வு.

ஆமீர் மிகவும் தன்மையான தந்தையாய் மிக அற்புதமாய் செய்துள்ளார். வயதுக்கேற்ப தன உடல் எடையை கூட்டியது சரியான முடிவு. ஏன் என்றால் அதுவே அவரின் உடலைசைவை, உடல்மொழியை முற்றிலும் மாற்றி விடுகிறது. அதனால் அவர் செய்வதெல்லாம் இன்னும் யதார்த்தமாய், உண்மையாய் திரையில் வெளிப்படுகிறது. சிறிதே சிறிது நேரம் வரும் இள வயது அமீருக்காக உடலை இந்த அளவுக்கு மாற்ற வேண்டுமா என்று ஆச்சர்யமாய் இருந்தது.

சாக்ஷி தன்வரை இது வரை இந்தி சீரியலில் பார்த்திருப்போம். அவர் மிகச் சரியாய் அந்த கதாப்பாத்திரத்துக்கு பொருந்தி உள்ளார்.

இரு குழந்தைகளையும், இரு பெண்களையும் கிட்டத்தட்ட உண்மையான மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றியது போல் இருக்கிறது அவர்களின் நடிப்பு. பெண்ட் எடுத்துள்ளனர். படத்தில் குழந்தைகளிடம் இனி குஸ்தி போட வேண்டும் என்று அமீர் சொன்னவுடன், ஒரு பாடல் வருகிறது. அதன் முதல் வரி...

அப்பா, எங்கள் ஆரோக்கியத்துக்கு நீ ஊறு விளைவிப்பவன்.

இந்த வரி அமீரின் கதாப்பாத்திரத்துக்கு மட்டுமல்ல அமீர் கானுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் :) இசையும், பாடல் வரிகளும் படத்தில் பிரமாதம்.

படம் முழுவதும் அந்த மருமகனின் வாய்ஸ் ஓவரில் வருவதாக அமைத்தது நல்ல விஷயம். படத்தில் வரும் வசனங்கள் நச். காமெடியாய் இருக்கட்டும், உணர்ச்சிகரமானதாய் இருக்கட்டும்.

முதல் முறையாய் கலந்து கொள்ளும் ஒரு குஸ்தியில் அந்தக் குழந்தை நோஞ்சான் சிறுவனை தேர்ந்தெடுக்காமல் பலமானவனை தேர்ந்தெடுக்கிறாள். அப்போது போட்டியின் நடுவர், தந்தையிடம், "உன் மகள் தவறு செய்து விட்டால், கை கால் உடைந்து தான் ஊர் திரும்பப் போகிறாள்" என்று சொல்கிறார். அதற்கு தந்தை, "சண்டையில் வெல்வதற்கு முன், பயத்தை வெல்ல வேண்டும். என் மகள் அதில் வெற்றி பெற்று விட்டாள்" என்கிறார்.

தன் மகள்களை, மல்யுத்த வீராங்கனைகள் ஆக்குவது என்று முடிவெடுத்த உடன், அவர் சொல்கிறார். "மகன் வாங்கி வந்தால் என்ன, மகள் வாங்கி வந்தால் என்ன, தங்கம் தங்கம் தானே, இதை எப்படி நான் இத்தனை காலம் உணராமல் இருந்தேன்!"

எங்களை எப்படியாவது இந்த ஹிம்சாயிலிருந்து காப்பாற்றும்படி சிறுமிகள் தாயிடம் மன்றாடுகிறார்கள். அதற்கு அவள், "ஒரு வருட காலம், உங்களுக்கு அம்மா இருப்பதை மறந்து விடுங்கள்" என்கிறாள். சிறுமிகள் சட்டென்று எழுந்து செல்கிறார்கள். அதற்கு தாய், "ஹே, அதற்குள் மறந்து விட்டீர்களே" என்கிறாள் :)

கோச்சாக வருபவர் மராத்தி நடிகராம். நல்ல தேர்வு. படத்தில் அவர் வில்லனாய் சித்திகரிக்கப் பட்டிருந்தாலும் அந்த கோச்சின் இடத்தில் இருந்து பார்த்தால் அவர் நியாயம் புரியும். அவரவர்க்கு அவரவர் நியாயம்.

இப்படி படம் நெடுக சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் ஆங்காங்கே படத்தை சிறப்பாக்குகிறது.

இந்தப் படத்தை பார்க்கும்போது எனக்கு தோன்றியது, நம் நாட்டில் ஆண்கள் உலக லெவல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வாங்கி வருவதே கஷ்டம். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். ஒரு பெண்ணை இப்படி ஒரு வீராங்கனை ஆக்க என்ன என்ன பாடு பட வேண்டும். எத்தனை ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்க வேண்டும். அதிலும் ஒரு பின்தங்கிய கிராமத்தில் இருந்து  இந்த அளவுக்கு வருபவர்கள் எப்படி பட்ட போராட்டங்களை எல்லாம் சந்தித்திருப்பார்கள் என்று யோசிக்கவே பிரமிப்பாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை, இந்தியாவில் பெண்கள் உலக அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு பதக்கம் வென்றால் அதை இரண்டாக கொடுக்க வேண்டும். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் மாதிரி...அத்தனை போராட்டங்களை சகித்துக் கொண்டு அவர்கள் அந்த மேடைக்கு வருகிறார்கள்.

மேல் உள்ள பத்தி தான் இந்தப் படம் எனக்குள் விளைவித்த எண்ணங்கள். ஒரு நல்ல படைப்பு தீர்வுகளை கொடுக்கத்  தேவையில்லை. கேள்விகளை எழுப்பினால் போதும். அதை தங்கல் சிறப்பாகவே செய்கிறது!!

எனக்கு ஒரு வலைப்பக்கம் இருக்கிறது, அதை நம்பி ஒரு கோடி, சரி, ஒரு லட்சம், அட, சரி ஒரு ஆயிரம், சரிய்யா, ஒரு பத்து பதினஞ்சு பேரு இருக்காங்க என்பதே எனக்கு மறந்து விட்டது. கழுதை தேய்ந்து கடவுள் துகள் ஆன கதையாய் [அட, இன்னும் டச் விட்டு போலியே..!!] மாதத்திற்கு ஒன்று என்று எழுதி கொண்டிருந்தேன். அது வருடத்துக்கு ஒன்று என்கிற ரேஞ்சில் வந்து நிற்கிறது. இந்த நிமிடம் வரை எதை பற்றி எழுதப் போகிறேன் என்று யோசிக்கவில்லை. பாப்போம்...

நான் என்ன நினைக்கிறேன்னா, இப்போ எல்லாம் வீடியோல பெர்பார்மன்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டோமா, கழுதை இனி பிளாக் எழுதி என்ன ஆக போகுது, "அட யாருப்பா அதை அசிங்கமா கைல, கழுத்துல மாட்டிகிட்டு" என்று கவுண்டமணி சொல்வது போல் என் ஆழ்மனம் முடிவுக்கு வந்து விட்டது போல...ஆனா, இதை நெனச்சி அந்த பத்து பதினஞ்சு பெரும் கவலைப்பட வேணாம். வீடியோவில் நடனம் புரிவோம், "கீ போர்டிலும் நடனம் புரிவோம்" [நன்றி: கருந்தேள் ராஜேஷ்]

ஒரு முக்கியமான விஷயம், நான் மொத்தமாய் பெங்களூர் குடி பெயர்ந்து நேற்றோடு ஒரு வருடம், ஒரு மாசம் ஆகிறது. சில வருடத்துக்கு முன், பெங்களூரில் இருந்து சென்னை வந்தேன். இப்போது மறுபடியும் பெங்களூர். விஷயம் ஒன்றுமில்லை. சும்மா ஒரு மாற்றம் தான்.

நான் பெங்களூர் வந்ததிலிருந்து சென்னையில ஒரே மழையும், வெள்ளமும், புயலுமாய் இருக்கிறது. நம் சென்னையை விட்டு வந்தது ஏதோ அபசகுனம் ஆகிவிட்டது போல என்று நினைத்து சற்று பீற்றிக் கொண்டால், சென்னையில் எழும் தன்னெழுச்சிகள் நல்ல சகுனம் தான் என்று காட்டுகிறது. எப்படியோ நல்லா இருந்தா சரி!

எதற்காக சென்னை குடிபெயர்ந்தேனோ, அதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்த போது, பெங்களூர் வந்துவிட்டேன். என் குறும்படங்களை பற்றி தான் சொல்கிறேன். "நீங்கள் போய் விட்டால், தமிழ் குறும்படங்களின் எதிர்காலம் என்னவாவது?" என்று ஒரு நூறு பேர், இல்லை, ஒரே ஒரு ஆள் மட்டும் கேட்டார். "தமிழை தெலுங்கன் வளர்ப்பது போல் யாராவது அதை வளர்த்து எடுப்பார்கள்" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உண்மை என்னவென்றால், பெங்களூர் வந்து அடுத்த லெவல் போக வேண்டும் என்று தான் என் விருப்பம். சென்னை மாநில லெவல் என்றால் பெங்களூர் தேசிய லெவல். இங்கே தான் ஒருத்தன், ஹிந்தியில் குறும்படம் எடுக்கிறான், ஒருத்தன் ஆங்கிலத்தில் எடுக்கிறான், ஒருத்தன் கன்னடத்தில் எடுக்கிறான். நான் இங்கு வந்து ஒரு ஹிந்தி, ஒரு ஆங்கிலம் மற்றும் ஒரு கன்னட படத்தை முடித்து விட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள். [அதெல்லாம் யூட்யூபில் வராது!] சென்னை என்ன ஒரு ஆறு மணி நேரம் தானே, வந்துட்டு போனால் போகிறது. என்ன நான் சொல்றது? சோ, வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு போல் கர்நாடகமும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பாப்போம்.

அடிக்கடி சந்திக்க முயற்சி பண்றேன், இல்லைனா அடுத்த வருஷம் பாக்கலாம்...

துருப்பிடித்த சாவி ஒன்று கண்டெடுத்தேன்.
இது கடைசியாய் என்று உபயோகப்பட்டிருக்கும்?
இது ஒருவேளை தவறி விழுந்திருக்குமா? - இல்லை
தூக்கி எறியப்பட்டிருக்குமா?
தொலைந்து போயிருக்குமா? - இல்லை
உதவாது போயிருக்குமா?
இந்த நிமிஷம் வரை ஒரு கதவு அடைப்பட்டுக் கிடைக்குமா? - இல்லை
என்றைக்குமாக திறந்தே கிடைக்குமா?
எப்படியோ,
சில சமயங்களில், சாவிகள் பூட்டை மட்டும் திறப்பதில்லை.

கண்ணதாசன் காலம் தொட்டு நா. முத்துக்குமார் வரை கால வரையறை இல்லாமல் சில பாடல்களை தரவிறக்கி கேட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றும் கண்ணதாசன் பேஸ்தடிக்கிறார். கண்ணதாசன், இளையாராஜா போன்றோர்களின் மூளைகளை எல்லாம் ஆராய வேண்டும். எங்கிருந்து இப்படி எல்லாம் இவர்களுக்கு கொட்டுகிறது என்று புரியவில்லை.

உதாரணத்திற்கு

எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவளை அனுபவிக்க நினைக்கும் ஒரு காமாந்தக்காரன். மது, மாது, சூது என்று அவனுக்கு ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை. அவன் பாடுவது போல் ஒரு பாடல்.

இப்படி ஒரு சூழ்நிலையை கண்ணதாசனிடம் சொன்னதும் அவர் கொடுத்த பல்லவி...

"ராஜா ராணி ஜாக்கி
வாழ்வில் என்ன பாக்கி"

முடிந்தது. இரண்டு வரியில் அந்தக் கதாப்பாத்திரத்தை விவரித்து விட்டார். ஒரு இயக்குனருக்கு இவரிடம் சூழ்நிலையை சொல்லி பாடல் வாங்குவது எத்தனை இலகுவான, இன்பமான நிகழ்வாய்  இருந்திருக்கும்! இந்த இரண்டு வரிக்கு இவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்தால் அது ஒரு தடவையில் முடியக் கூடியதா? வரம் வரம்!!

 கமல் அடிக்கடி சொல்வார். "அவர்கூடவே வளரும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது. அவர் பாடல் எழுதும்போது அருகில் இருக்கும் வாய்ப்பு எனக்கு இருந்திருக்கிறது. கவிதை/பாட்டு எழுதுவது எல்லாம் மிக எளிய விஷயம் மாதிரி என்னை ஏமாற்றி விட்டார்." என்று! அவர் சொல்வது சரி தான், கண்ணதாசன் பாடலை சொல்லும்போது [அவர் பாடல்களை எழுதுவதில்லை; அவர் சொல்லச்  சொல்ல உதவியாளர் ஒருவர் எழுதிக் கொள்வது வழக்கம்! அந்த உதவியாளர்களில் பிரதானமானவர் பஞ்சு அருணாச்சலம்] அருகில் இருப்பவருக்கு அப்படித் தான் தோன்றும். சரளமாய் பேசுவதை போலத் தான் அவர் பாடல் வரிகளை சொல்லி இருக்கிறார். 

ஆனால் அப்படி சொன்ன பாடல் ஒவ்வொன்றும், மெட்டுக்கு சரியாகவும், அந்தப் படத்தின் கதையை/சூழலை சரியாய் விவரித்தும், காலம் கடந்த ஒரு அழகும்/கருத்தும் அதில் ஒருங்கே அமையப்பெற்றதாகவும் இருந்தது, இருக்கிறது.

உதாரணத்துக்கு தங்கப்பதக்கம் என்ற படத்தில் வரும் சோதனை மேல் சோதனை பாடல்:

மனைவி இறந்தும் கொள்ளி போட வராத மகனை நினைத்து, மருமகளிடம் பாடும் பாடல், எத்தனை எளிதான வார்த்தைகளால் அந்த சூழ்நிலையை பாடலில் சொல்கிறார், பாருங்கள்.

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
அந்த திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல

இதன் அடுத்த சரணத்தையும் கேட்டுப் பாருங்கள், !!க்ளாஸ்!!

---

இருவர் உள்ளம் படத்தில் வரும் இந்தப் பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். காதல்,  வாழ்வின் ஒரு யதார்த்தமான நிகழ்வு என்பதை எத்தனை அருமையாக விளக்குகிறார்.

நதி எங்கே போகிறது கடலைத் தேடி 
நாளெங்கே போகிறது இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது உறவைத் தேடி

ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
ராகங்கள் நூறு வரும் வீணை ஒன்று
மேகங்கள் ஓடி வரும் வானம் ஒன்று
என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
என்ணங்கள் கோடி வரும் இதயம் ஒன்று
இன்பங்கள் அள்ளி வரும் பெண்மை ஒன்று

--

பழனி படத்தில் வரும் இந்தப் பாடல், வஞ்சிக்கப்பட்ட ஒருவன் தத்துவார்த்தமாய் பாடும் இந்தப் பாடலில் வாழ்வின் பல செய்திகள் அடங்கி இருக்கிறது.

அண்ணன் என்னடா தம்பி என்னடா 
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா 
காசில்லாதவன் குடும்பத்திலே

பெட்டை கோழிக்கு கட்டுச் சேவலை 
கட்டி வைத்தவன் யாரடா 
(3)அவை எட்டு குஞ்சுகள் பெத்தெடுத்ததும் 
சோறு போட்டவன் யாரடா
சோறு போட்டவன் யாரடா

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் 
வருந்தவில்லையே தாயடா
மனித ஜாதியில் துயரம் யாவுமே 
மனதினால் வந்த நோயடா
மனதினால் வந்த நோயடா

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் 
வந்து சேர்கிறார் பாரடா 
(6)கை வரண்ட வீட்டிலே உடைந்த பானையை 
மதித்து வந்தவர் யாரடா
மதித்து வந்தவர் யாரடா

பணத்தின் மீது தான் பக்தி என்ற பின் 
பந்த பாசமே ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் 
அண்ணன் தம்பிகள் தானடா
அண்ணன் தம்பிகள் தானடா

--

எங்க மாமா படத்தில் வரும்  இந்த தாலாட்டுப் பாடல். அனாதையான நாயகனின் ஆதரவில் வளரும் அனாதைக் குழந்தைகள்.

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை?

இந்தப் பாட்டில் அனைத்து வரிகளும் அற்புதமானவை. அதில் குறிப்பாக,

பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தானவன்
நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வானவன்

என்ற வரிகளை கேட்கும் போது எனக்கு புல்லரிக்கிறது :)

இப்படி எத்தனையோ பாடல்கள்...எல்லாத்தையும் கேட்டுட்டு அடிக்கடி வந்து சென்ட்டிமெண்ட்டை புழியிறேன்...