தினகர் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான். தினகர் என்ற அந்தப் பெயரில் இருக்கும் 'ர்' தான் அவனுக்குக் கடைசியாய் கிடைத்த மரியாதை. வீட்டில் அவனை பெண்டாட்டி பிள்ளைகள் மதிப்பதில்லை. (இது ஆண்களுக்கு உலகப் பிரச்சனை என்றாலும்..) ஆஃபிஸிலும் அவனை உப்புக்குச் சப்பாணியாய் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண் விதியே என்று வாழ்வது போல் தான் தினகரும் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஐப்பசி வந்தால், (வரும்) தினகருக்கு நாற்பது வயது. அதற்குள் அவன் தலை முடிகளுக்கு, நரைக்கலாமா, கொட்டலாமா என்று போட்டி. நல்ல சிவப்பு என்றோ, கரு கரு கருப்பு என்றோ சொல்ல முடியாது. Asian Paints color palette ல் நாலைந்து color mix செய்தது போல் ஒரு நிறம். முட்டைக் கண்கள். ஒரு சோம்ப்ளாங்கி கண்ணாடி. மூச்சு விடுவதற்கும், அந்த கண்ணாடியை தாங்குவதற்கும் அன்றி அந்த மூக்குக்கு வேறு ஒன்றும் விஷேஷமில்லை. அவ்வளவு வாய் திறந்து பேசாத ஆளுக்கு அத்தனை பெரிய வாய். பகவானின் லீலையே லீலை. அளவான உயரம் + ஷூவில் கொஞ்சம் ஹீல்ஸ். மிதமான உடல்வாகு. இவ்வளவு தூரம் அவனை அவன் மனைவி கூட வர்ணித்ததில்லை. கதைக்கு வருவோம்.

அன்று காலையிலேயே மனைவியின் சுப்ரபாதம் தொடங்கியது. அவன் பையன் பள்ளியில் பரிட்சையில் கோட்டடித்து நிற்பதற்கும், சேராதவரோடு சேர்ந்து கெட்டுப் போவதற்க்கும், ஸ்கூல் ஃபீஸ் காரணம் காட்டி அவனை இந்தப் பள்ளியில் சேர்த்ததற்கும், அவன் எதிர்காலம் நாசமாய் போகப் போவதற்கும் தினகர் தான் முழு முதற் காரணம் என்று சொல்லி அவன் மனைவி அவனை அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள். பூசாரியின் அர்ச்சனையை காதில் போட்டுக் கொண்டு கடவுள் காலங்காலமாய் கல்லாய் அமர்ந்து இருக்கும் போது, அவன் படைத்த ஜென்மம், மனிதன், அதுவும் புத்திசாலி ஜீவராசி, இதைக் கூடவா கற்றுக் கொள்ள மாட்டான்.

இன்று அவன் கவலையே வேறு. கடந்த இரண்டு வாரங்களாக உயிரை உருவி எடுத்துக் கொண்டு, நேற்று இரவும் 3 மணி வரை (இரவா?) வேலை பார்த்த Business proposal presentation இன்று இருந்தது. அது வேறு வயிற்றில் புளியைக் கரைத்து, ரெண்டு தக்காளி போட்டு, குழம்பு பொடி போட்டு, கடுகு தாளிப்பது வரை வந்து விட்டது.
இவனைப் போலவே அப்பாவியாய் இருந்த அந்த wagon R ல் ஆபிஸ் செல்லும் வழியில் சாலையே தெரியாத அளவுக்கு வாகனங்கள். ஏதோ ஒரு பெரிய நோய் வந்து மக்கள் எல்லாம் இத்தனை காலம் வீட்டில் அடைபட்டுக் கிடந்து இன்று திறந்து விட்டது போல் அப்படி ஒரு கூட்டம். அந்த presentation ppt மனதில் ஓட கொஞ்சமாய் எரிச்சல் பட்டான்.

அன்று மாலை, சீக்கிரமே ஆபிஸில் இருந்து கிளம்பிவிட்டான்.

வாசகர்களுக்கு ஒரு குறிப்பு: இது non linear கதை என்பதால், presentation என்ன ஆனது என்று அவன் வீட்டுக்குப் போகும் வழியில் நினைத்துப் பார்ப்பதாய் சொல்லப்படும். இதோ, நினைக்கிறான்.

அவன் அடித்த ஹாரனில் அவன் wagon R யே கொஞ்சம் மிரண்டது என்று தான் சொல்ல வேண்டும். "2 வாரமா ராப்பகலா வேலை பார்த்துருக்கேன். ஒரு Details "மண்ணும்" ('ம' வில் ஆரம்பிக்கும் கெட்ட வார்த்தை) இல்லாம இத்தனை டீமோட co-ordinate பண்ணி இவ்வளவு தூரம் பண்ணதுக்கு ஒரு சின்ன appreciation கூட இல்லாம, that bloddy rascal is firing me in front of all. Bloody mother fisher (புரிந்திருக்கும், 'f' கெட்ட வார்த்தை) GODDAMIT!" மறுபடியும் அவன் wagon R குலுங்க ஒரு horn. சில நொடிகளுக்குப் பிறகு தான் அது ஹாரனால் வந்த குலுங்கல் அல்ல பின்னால் வந்தவன் அவன் வண்டியில் இடித்த சத்தம் என்று புரிந்தது. இந்தத் தருணம், This moment, யுவராணி "தலைவர்" தோளில் சாய்ந்து அவர் அவளின் உதட்டில் உள்ள ரத்தத்தை பார்க்கும் தருணம். மாணிக்கம் பாட்ஷாவாக மாறும் தருணம். என்ன தான் இடித்தாலும், காரை நடு ரோட்டில் நிறுத்தி பஞ்சாயத்து பண்ணுவது எல்லாம் தினகரின் கனவில் கூட நடந்ததில்லை. ஆனால் இன்று...காரை அப்படியே நிறுத்தி விட்டு இறங்கினான். பின்னால் வந்து இடித்த மினி ட்ரக் ஆள் கொஞ்சம் apologetic ஆக இறங்கி வந்தான்.

அந்த ஆள் உயரம் கம்மியாய், தொத்தலான உடம்போடு, பார்க்கப் பரிதாபமாய் இருந்தான். தினகர் மனதில் பாட்ஷா உக்கிரமானார். அவன் முகத்தில் "தெரியாம இடிச்சிட்டேன் சார்" என்று எழுதி ஒட்டி இருந்தது. தினகர் தான் பாட்ஷாவாய் மாறி ஐந்து நிமிடம் ஆயிற்றே. இடிபட்ட காரை பார்த்துக் கொண்டே, அதே உக்கிரத்துடன் அவன் மேல் பாய்ந்தான். அவன் சட்டையை பிடித்துக் கொண்டு, அவன் கன்னத்தில் பொளேர் என்று ஒன்று விட்டான். அதை அந்த ஆள் எதிர்ப்பார்க்கவில்லை. அதோடு, தான் சின்ன வயதில் இருந்து கேள்விப்பட்ட அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொன்னான். அந்த ஆள் மிரண்டு போனான். ரோட்டில் சிலர் பஞ்சாயத்துக்கு வந்தால் அவர்களையும் துவம்சம் செய்தான். அந்த கணத்தில் தினகர், அவன் பாஸை, அவன் மனைவியை, அவன் மகனை, அவன் பக்கத்து வீட்டுக்காரனை, மோடியை, டோனால்ட் ட்ரம்ப்பை, அவன் அறியாமையை, அவன் தோல்வியை, அவன் கையாலாகாத்தனத்தை என்று எல்லாவற்றையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான். அந்த ஆள் எவ்வளவு கெஞ்சியும் தினகர் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான். தினகரைத் தெரிந்தவர்கள் அவனை அப்போது பார்த்தால் அவன் தானா என்று சந்தேகம் வரும். அப்படி ஒரு உக்கிரம். அப்போது, யாரும் எதிர்பார்க்காமல், திடீரென்று அவன் கன்னத்திலும், முகத்திலும் தலையிலும், முதுகிலும் சாரமாரியாக சில அடிகள் விழுந்தது. அவன் சுதாரிப்பதற்குள் அவன் சட்டை எல்லாம் கிழிந்து தொங்கியது. முகத்தில் விழும் அடியை தடுக்க கையைக் கொண்டு தடுத்துக் கொண்டே தினகர் பார்த்தது, அந்த பரிதாபமான மினி ட்ரக் ட்ரைவர் அல்ல. அவன் வேறு விதமாய் மாறிப் போயிருந்தான். அவன் முகத்தில் எழுதியிருந்த "தெரியாம இடிச்சுட்டேன் சார்" மறைந்து, "விட்டுடுங்க சார், நான் புள்ளைகுட்டிக்காரன் சார்" போய், "ஆமாடா தே மவனே, நான் தான்டா இடிச்சேன், இப்போ என்னடா அதுக்கு" என்று மாறிப் போயிருந்தது. கூடி இருந்தவர்கள் இருவரையும் விலக்குவதற்குள் போதும் போதும் என்று ஆனது. அவன் தன்னை கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொண்டு "போடா, வண்டியை எடு" என்று அவன் ஆக்ரோஷமாகக் கத்த கூடி இருந்தவர்கள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தினகர் தனக்கு நடந்ததை நம்ப முடியாமல், வண்டியில் ஏறி அமர்ந்தான். Rear view mirror லும் அந்த ஆளின் பூத்துப் போன கண்கள் இவனை மிரட்டியது. சுய இரக்கம் பிய்த்துத் தின்ன கண்கள் கலங்க யாரையும் இடிக்காமல் வண்டியை எடுத்தான். அந்த மினி ட்ரக் அவனைக் கடந்து போனது.

"மினி ட்ரக் டிரைவர்" திருச்செல்வன் என்றாலே எல்லோருக்கும் இளக்காரம் தான். திருச்செல்வன் என்ற அந்தப் பெயரில் இருக்கும் 'திரு' தான் அவனுக்குக் கடைசியாய் கிடைத்த மரியாதை. வீட்டில் அவனை பெண்டாட்டி பிள்ளைகள் மதிப்பதில்லை. (இது ஆண்களுக்கு உலகப் பிரச்சனை என்றாலும்..) அலுவலகத்திலும் அவனை உப்புக்குச் சப்பாணியாய் வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். குடித்து விட்டு தினமும் அடிக்கும் குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண் விதியே என்று வாழ்வது போல் தான் திருச்செல்வன் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.

0 Responses