எனக்கு ஒரு வலைப்பக்கம் இருக்கிறது, அதை நம்பி ஒரு கோடி, சரி, ஒரு லட்சம், அட, சரி ஒரு ஆயிரம், சரிய்யா, ஒரு பத்து பதினஞ்சு பேரு இருக்காங்க என்பதே எனக்கு மறந்து விட்டது. கழுதை தேய்ந்து கடவுள் துகள் ஆன கதையாய் [அட, இன்னும் டச் விட்டு போலியே..!!] மாதத்திற்கு ஒன்று என்று எழுதி கொண்டிருந்தேன். அது வருடத்துக்கு ஒன்று என்கிற ரேஞ்சில் வந்து நிற்கிறது. இந்த நிமிடம் வரை எதை பற்றி எழுதப் போகிறேன் என்று யோசிக்கவில்லை. பாப்போம்...

நான் என்ன நினைக்கிறேன்னா, இப்போ எல்லாம் வீடியோல பெர்பார்மன்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டோமா, கழுதை இனி பிளாக் எழுதி என்ன ஆக போகுது, "அட யாருப்பா அதை அசிங்கமா கைல, கழுத்துல மாட்டிகிட்டு" என்று கவுண்டமணி சொல்வது போல் என் ஆழ்மனம் முடிவுக்கு வந்து விட்டது போல...ஆனா, இதை நெனச்சி அந்த பத்து பதினஞ்சு பெரும் கவலைப்பட வேணாம். வீடியோவில் நடனம் புரிவோம், "கீ போர்டிலும் நடனம் புரிவோம்" [நன்றி: கருந்தேள் ராஜேஷ்]

ஒரு முக்கியமான விஷயம், நான் மொத்தமாய் பெங்களூர் குடி பெயர்ந்து நேற்றோடு ஒரு வருடம், ஒரு மாசம் ஆகிறது. சில வருடத்துக்கு முன், பெங்களூரில் இருந்து சென்னை வந்தேன். இப்போது மறுபடியும் பெங்களூர். விஷயம் ஒன்றுமில்லை. சும்மா ஒரு மாற்றம் தான்.

நான் பெங்களூர் வந்ததிலிருந்து சென்னையில ஒரே மழையும், வெள்ளமும், புயலுமாய் இருக்கிறது. நம் சென்னையை விட்டு வந்தது ஏதோ அபசகுனம் ஆகிவிட்டது போல என்று நினைத்து சற்று பீற்றிக் கொண்டால், சென்னையில் எழும் தன்னெழுச்சிகள் நல்ல சகுனம் தான் என்று காட்டுகிறது. எப்படியோ நல்லா இருந்தா சரி!

எதற்காக சென்னை குடிபெயர்ந்தேனோ, அதை தொடர்ந்து செய்ய ஆரம்பித்த போது, பெங்களூர் வந்துவிட்டேன். என் குறும்படங்களை பற்றி தான் சொல்கிறேன். "நீங்கள் போய் விட்டால், தமிழ் குறும்படங்களின் எதிர்காலம் என்னவாவது?" என்று ஒரு நூறு பேர், இல்லை, ஒரே ஒரு ஆள் மட்டும் கேட்டார். "தமிழை தெலுங்கன் வளர்ப்பது போல் யாராவது அதை வளர்த்து எடுப்பார்கள்" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உண்மை என்னவென்றால், பெங்களூர் வந்து அடுத்த லெவல் போக வேண்டும் என்று தான் என் விருப்பம். சென்னை மாநில லெவல் என்றால் பெங்களூர் தேசிய லெவல். இங்கே தான் ஒருத்தன், ஹிந்தியில் குறும்படம் எடுக்கிறான், ஒருத்தன் ஆங்கிலத்தில் எடுக்கிறான், ஒருத்தன் கன்னடத்தில் எடுக்கிறான். நான் இங்கு வந்து ஒரு ஹிந்தி, ஒரு ஆங்கிலம் மற்றும் ஒரு கன்னட படத்தை முடித்து விட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள். [அதெல்லாம் யூட்யூபில் வராது!] சென்னை என்ன ஒரு ஆறு மணி நேரம் தானே, வந்துட்டு போனால் போகிறது. என்ன நான் சொல்றது? சோ, வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு போல் கர்நாடகமும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பாப்போம்.

அடிக்கடி சந்திக்க முயற்சி பண்றேன், இல்லைனா அடுத்த வருஷம் பாக்கலாம்...