நேற்று இரவு சென்னைக்கு ரயில் ஏற மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தேன். ஆட்டோவில் இருந்து இறங்கியதும் ரயில் நிலையத்தின் வாசலை திரும்பி பார்த்தால் அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல இருந்தது. அத்தனை சுத்தம். ஒரு தூசு, துரும்பு இல்லை. "இந்தியாவில் ஒரு ரயில் நிலையத்தின் வாயில் இத்தனை சுத்தமாய் எங்காவது இருக்குமா?" என்று எண்ணி எண்ணி வியந்தேன்.

ரயில் நிலையத்தின் முன்னால் உள்ள அந்த குட்டி பிள்ளையார் கோயிலை கடந்ததும் வழக்கம் போல அந்த பெரிய மைதானம் போன்ற இடத்தில் பலர் படுத்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? ஏன் சரியான சமயத்தில் ரயில் நிலையத்துக்கு வராமல் இங்கு வந்து படுக்கிறார்கள்? என்று ஒரு முறையாவது விசாரிக்க வேண்டும். ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் புதிதாய் இரண்டு பெரிய "எல் இ டி" போர்டுகளை மாட்டி எந்த ரயில் எப்போது எந்த பிளாட்பாரத்தில் வருகிறது என்று காட்டிக் கொண்டிருந்தார்கள். உள்ளே சென்று முதல் பிளாட்பாரத்துக்குள் நுழைந்தேன். இரண்டு சஃவாரி போட்ட ரயில்வே ஊழியர்கள் குழம்பி நிற்பவர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தார்கள். ரயில் பிளாட்பாரத்துக்குள் வந்ததும் எந்த பெட்டி எங்கு வரும் என்று டிஜிட்டலில் அழகாய் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பிளாட்பாரம் மிகவும் சுத்தமாய் இருந்தது. ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள், அதில் சரியாய் போடப்பட்ட கருப்பு குப்பை கவர் என்று என்னை ஒவ்வொரு நொடியும் அங்குள்ள ரயில்வே ஊழியர்கள் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்.

மதுரை போன்ற ஒரு நகரில் இந்த சுத்தம் சாத்தியம் என்றால் ஏன் மற்ற நகரங்களில், ஏன் இந்தியா முழுவதும் சாத்தியம் இல்லை என்ற கேள்வி மறுபடி மறுபடி என்னுள் எழுந்து கொண்டிருந்தது. அப்போது குப்பை பொறுக்கும் ஒரு பெண் தொழிலாளி ரயில்வே பாலத்தில் குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்தார். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. எழுந்து அவரிடம் சென்றேன்.

மிகுந்த நன்றி உணர்ச்சியுடன், "அக்கா வணக்கம், நான் சென்னையில இருந்து வர்றேன். பல ரயில்வே ஸ்டேஷன் போயிருக்கேன். மதுரை ஸ்டேஷன் தான் ரொம்ப சுத்தமா இருக்கு. ஒரு குப்பை இல்லை. ரொம்ப நல்லா வேலை பாக்குறீங்க..." என்றேன்.

அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு, ஒரு ரியாக்ஷனும் இல்லாமல், "அப்படியா நல்லா இருக்கா...சரி சரி!" என்று குப்பையை பொறுக்கத் தலைப்பாட்டார்!

நான்: ஞே!

அவருடைய ரியாக்ஷனே இல்லாத ரியாக்ஷனை பார்த்து எனக்கு என்ன தோணுச்சுன்னா...

ஒன்று, "உங்களுக்கு என்ன பாராட்டிட்டு போயிடுவீங்க, பெண்டு கழல்றது எங்களுக்கு தானே தெரியும்!" என்று வேலை அயர்ச்சியில் அப்படி நடந்திருக்கலாம்.
ரெண்டு, "இப்படி நாளைக்கு எத்தனை பேரு பாராட்டை தான் வாங்குறது, கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு என்று செலிப்ரிட்டி லெவலுக்கு ஃபீல் செய்து நம்ம வேலைய பாப்போம்." என்று நினைத்து அப்படி சொல்லி இருக்கலாம். [இதுக்கு அதிக சான்ஸ் இல்லை என்றே தோன்றுகிறது!]
மூன்று, "இப்படி எவனுமே இது வரை பாரட்டினதே இல்லையே, சனியன் குடிச்சுட்டு வந்து உளறுது போல!" என்று நினைத்திருக்கலாம்!
நான்கு, "தப்பா இருந்தா தப்பா இருக்குதுன்னு திட்டலாம், கம்ப்ளயின்ட் பண்ணலாம்! அது தான் சகஜம். எவனாவது நல்லா இருக்குறதை நல்லா இருக்குன்னு சொல்லுவானா, ஒரு வேளை, லூசா இருப்பானோ?" என்று நினைத்திருக்கலாம்.
ஐந்து, "மாசக் கடைசி மனுஷனை கொல்லுது, பெருசா பாராட்ட வந்துட்டான்! உன் பாராட்டை வச்சிட்டு பாமாயில் வாங்க முடியுமா?" என்று நினைத்திருக்கலாம்.

உங்களுக்கு ஏதாவது தோணுதா?
6 Responses
  1. Unknown Says:

    நல்ல பராமரிப்பு தான் .....எந்த காண்ட்ராக்ட் வேலையிலும் வடக்கில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் ,அநேகமாய் அவருக்கு தமிழ் புரிந்து இருக்காது :)


  2. Sampath Says:

    நீங்கள் அவரைப்பார்த்து பாராட்டியதற்கு உங்களை பாராட்டுகிறேன். அவர் மனதில் என்ன கவலையோ யாருக்கு தெரியும். அதனால்தான் பாராட்டை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.


  3. இல்லை பகவான்ஜி, அந்த பெண்மணி தமிழ் தான்!

    சம்பத், நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்.


  4. Unknown Says:

    I have seen this in most of the railway junctions including Madurai. First platform is always clean. Go check other platforms, preferably the last one, then you comment. Take any station, the first platform is always dedicated to the trains that go to the metro stations and i feel that's why they are clean.


  5. I agree with you balaji, but madurai station is comparatively neat and tidy. that's my opinion.


  6. sam Says:

    I had similar exp. I think its our cultural thing, ppl who appreciate strangers for a social reason without no expectation must be around 5-10% so this group is often suspected for this act in our part of the world. I think if she had 1 geniune appreciation like this before she would reacted & recd it. I'm sure she would have felt better after that. Your mission accomplished!.