டைட்டிலே வழக்கமான மணிரத்னம் பாணியில், அழுது வடியாமல் இளமை கொப்பளிக்க, ஒரு ரகளையான அனிமேஷனில் ஆரம்பிக்கிறது. Refreshing!

முதல் சீனிலேயே ஹீரோ ஹீரோயின் அறிமுகம். பிறகு வழக்காமான க்ளிஷேடான மணிரத்ன அசட்டு வசனங்கள் [அந்த சர்ச்சில் இருவரும் பேசுவது! ஸ்வபா..] பிரகாஷ் ராஜ் ஒப்பனை அருமை. ஒரு வேளை இது தான் நிஜ பிரகாஷ் ராஜா? யார் இந்த லீலா சாம்சன்? என்ன ஒரு அருமையான பாத்திரம், என்ன ஒரு அற்புதமான நடிப்பு!

துல்கர் முகத்தில் என்னமோ ஒன்று சரி இல்லை, மூக்கா, முழியா தெரியவில்லை. மனிதரை எல்லா பெண்களுக்கும் பிடிக்கிறது. அவர் மாதிரி நான் ஹேர் ஸ்டையில் வைத்துக் கொண்டால், "ஏன்டா தலைய குருவிக் கூடு மாதிரி வச்சுருக்கே?" என்று கேட்பார்கள். அச்சு அசல் அப்படி தான் இருக்கிறது. அவருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயம். நடிப்பதற்கு பெரிதாய் ஒன்றும் ஸ்கோப் இல்லை. "பெங்களூர் டேஸ்" படத்தில் எப்படி கேர்ஃப்ரீயாய் இருந்தாரோ அதே போல் தான் இதிலும் இருக்கிறார்.

நித்யா அழகாய் இருக்கிறார். கிடைமட்டமாய் [தமிழில் horizontal] வளர்ந்திருக்கிறார். அவருக்கும் துல்கருக்கும் கெமிஸ்ட்ரி செம! ஃபிசிகலாய் எதுனா இருக்குமோ? [கிசு கிசு]. நெருங்கி வரும் ஆதியிடம் "ஆதி, நோ சொல்லு, நோ சொல்லு" என்னும் தாரா பதிலுக்கு ஆதி, "நோ" என்றவுடன், "அப்போ கிட்ட வராதே!"  என்று குதூகலிக்கும் இடம் சோ ஸ்வீட்! பிறகு போர்வை போர்த்திக் கொண்டு துல்கரை அழ வைக்கும் அந்த இண்டர்வல் ப்ளாக், வழிய வழிய காதல் :) மணிரத்னம் என்னமாய் கொஞ்சுகிறார்! மணிரத்தினம், the lover returns!

கதையை பொருத்தவரை Old wine in new bottle. இளமை வழிய வழிய ஒரு காதல், பிரத்தியாரால் அவர்களுக்குள் பிரச்சனை, இளமை கடந்த மற்றொரு காதல் தம்பதிகள், அவர்களிடமிருந்து ஒரு வாழ்க்கை பாடம். சுபம். படத்தின் பெயரை அலைபாயுதே 2 என்று வைத்திருக்கலாம்.

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் காதலர்கள் பற்றிய கதை. கடைசியில் அவர்களும் கல்யாணம் தான் செய்து கொண்டார்கள் என்று ஏன் முடிக்க வேண்டும்? சேர்ந்து வாழ்பவர்கள் காதலில் விழுந்து விட்டால் கல்யாணம் செய்து கொள்ளத் தான் வேணுமா? அவர்கள் விருப்பப்படியே அவன் அமெரிக்க போகட்டும், அவள் பாரீஸ் போகட்டும். திரும்பி வந்து மீண்டும் சேர்ந்து வாழலாமே? இந்த காலத்தில் டச் சில் இருப்பாதா கஷ்டம்? எதற்கு ஒரு கல்யாணம்? தாலி? லைசன்சா? ஒழுங்கா திரும்பி என்கிட்டே வந்துரணும் என்று சொல்ற மாதிரியா, புரியவில்லை. முடிவில் உடன்பாடு இல்லை என்றாலும், படம் எனக்கு பிடித்துத் தான் இருந்தது. அலைபாயுதேவை விட எனக்கு இந்தப் படம் பிடித்தது!

படத்தின் மற்ற பலங்கள், இசை, கலை மற்றும் ஒளிப்பதிவு. என்ன ஒரு இளமை துள்ளும் இசை, அந்த பிரகாஷ் ராஜின் வீடு, அகமதாபாத் ஹோட்டல், நித்யாவின் ஹாஸ்டல் அருமையான ரசனை. நகரத்தில் இருக்கும் எல்லா அசிங்கங்களையும் மறைத்து அதை ஒரு சொர்க்கமாய் காட்ட மணிரத்னம், ஸ்ரீராமால் தான் முடியும் :) மும்பை போக ஆசையாய் இருக்கிறது!

முன்னாலேயே எழுதி இருக்க வேண்டிய பின்குறிப்பு: இந்த விமர்சனத்துக்கு மெளஸ் உபயோகப்படுத்தப்படவில்லை!
0 Responses