கதை இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். அப்போது தான் கமலிடம் உள்ள பிரச்சனைகளை பற்றி ஆராய முடியும். [எதுக்கும், மௌஸ் நகத்தாம...]

மனோரஞ்சன் ஒரு ஸ்டார். தோளுக்கு வளர்ந்த மகன் இருக்கும்போதும், தன் மாமனார் [கே. விஸ்வநாத்] தயாரிப்பில் பல மசாலா படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவன் வாழ்வை புரட்டிப் போடும் இரண்டு செய்திகள் அவனுக்கு கிடைக்கிறது.

ஒன்று, மூளையில் உண்டான கட்டியால் அவன் சீக்கிரமே இறக்கப் போகிறான்.
இரண்டு, அவனுடைய முன்னாள் காதலியின் மூலம் தனக்கு ஒரு மகள் இருப்பது தெரிய வருகிறது.

தன் மகளுடன் சமாதானம் செய்து கொண்டு, சாகும் தருவாயில் தன் குருநாதர் மார்கதரிசியுடன் [பாலசந்தர்] ஒரு நல்ல படத்தில் நடித்து விட வேண்டும் என்று முடிவு செய்கிறான். தன் சோகம் தன்னோடு போகட்டும், மக்கள் சிரித்துச் சிரித்து தன் கடைசி படத்தை ரசிக்க வேண்டும் என்று ஒரு காமடி படத்தை பண்ணலாம் என்று தன் குருநாதருக்கு வேண்டுகோள் விடுக்கிறார். அதன்படி உத்தம வில்லன் என்ற ஒரு சாகாவரம் பெற்ற ஒரு கூத்துக் கலைஞன் கதையை படம் எடுக்கிறார்கள்.

உலகத்தில் சாகாவரம் பெற்று வாழ ஒன்று முனிவனாய் இருக்க வேண்டும்; அல்லது, நல்ல ஒரு எழுத்தாளனாய் இருக்க வேண்டும், அல்லது, நல்ல ஒரு கலைஞனாய் இருக்க வேண்டும். நல்ல ஒரு கலைஞனுக்கு  என்றுமே சாவில்லை என்ற செய்தியுடன் படம் முடிகிறது.

படத்தில் +

  • கமலிடம் எப்போதும் இருக்கும், அள்ள அள்ள குறையாத பல்வேறுபட்ட கதைக் களன்கள். சாவு என்றால் என்ன? ஒரு நல்ல கலைஞனை அது என்ன செய்து விடும்? இந்தக் கேள்விகளுக்கு விடையாக, தன்னை நெருங்கி வரும் சாவிடம் செத்துக் கொண்டிருக்கும் ஒரு கலைஞன் சாகாவரம் கொண்ட கதாப்பாத்திரம் ஒன்றை ஏற்று நடிப்பது சாவையே எள்ளி நகையாடுவது போல் தானே? அத்தகைய பரந்துபட்ட விஷயங்களை திரைக்கதையில் லாவகமாய் புகுத்துவது. கமலுக்கு கை வந்த கலை!!
  • கமலுடைய commanding knowledge on various things & his observation skills! இவருக்கு புராணம் தெரிகிறது; சரித்திரம் தெரிகிறது; தெய்யம், கூத்து என்று பல்வேறு கலைகள் பற்றிய அறிவு இருக்கிறது; பல மனிதர்களையும், அவர்களின்  உடல்மொழியும் தெரிகிறது. இவ்வளவு பெரிய நடிகராக ஒரு கூட்டுக்குள் அடைபட்டுக் கொண்டே இத்தனை கதாபாத்திரங்களை எப்படி இவரால் படைக்க முடிகிறது என்று ஆச்சர்யமாய் இருக்கிறது. உதாரணத்திற்கு இந்தப் படத்தில் வரும் தெலுங்குக் குடும்பத்திற்கும் பல்ராம் நாய்டுவுக்கும் துளியும் சம்மந்தமில்லை.
  • ரஜினி லிங்காவில் தன் மகள் வயதில் உள்ள பெண்ணிடம் டூயட் ஆடுவார். கமல் எண்பதுகளில் தன்னுடன் ஆடிய ஊர்வசியை தனக்கு ஜோடியாகவும், தன் தோள் தொடும் உயரத்தில் ஒரு பையனை தன் மகனாகவும்,  பார்வதி மேனனை [கிழங்கு மாதிரி இருக்கிறார், அப்படி நடிக்கிறார்!] தன் மகளாகவும் கதை அமைக்கிறார். அதற்கு ஒரு சபாஷ்! [இதில் ஒரு உள்குத்து என்னவென்றால், ஊர்வசியை ஜோடியாய் போடும்அதே நேரத்தில் பூஜா குமார், ஆன்ட்ரியாவை எப்படி ஆதரிப்பது அது நமக்கு உறுத்தாமல் எப்படி பார்த்துக் கொள்வது என்றும் அவருக்குத் தெரியும். "கள்ளனைய்யா நீர்!"] 
  • என்ன தான் தன்னை முன்னிறுத்தி திரைக்கதை அமைத்தாலும், கதாநாயகனுக்கே உரிய நல்லத்தனத்தால் அவன் தன் முன்னாள் காதலி, தன் மனைவி என்று எல்லோரையும் நேசிக்கிறான் என்று காட்டினாலும், அவனுக்கும் பலவீனங்கள் உண்டு என்பது போல், அவனுக்கு வைத்தியம் செய்யும் அந்த இளம் டாக்டரிடம் ஒரு கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறான் என்று அமைத்த அந்த திரைக்கதையின் நேர்மை :)
  • படத்தின் வசனம். வசனம் என்று தனியாக டைட்டிலில் போட்ட மாதிரி தெரியவில்லை. ஆனால், கண்டிப்பாய் கமலின் வசனம் தான் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு மனோ மார்கதரிசியிடம் ஒரு படம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்கும் இடம்.
  • தன் குருநாதரை இந்தக் கதையில் அழகாய் நுழைத்து, அதில் அவரை அவராகவே இருக்க விட்டது. பிற்காலத்து எம்ஜியார்  படங்களிலும் சரி இப்போதைய ரஜினி படங்களிலும் சரி, படத்தில் வரும் எந்தக் கதாப்பாத்திரமும் அவர்களை "டா" போட்டு கூப்பிட முடியாது. கமலும் அத்தகைய இடத்தில் இருப்பவர் தான். இருந்தாலும், தன்னை ஆரம்ப காலங்களில் அவர் எப்படி கூப்பிட்டாரோ, அப்படியே படத்திலும் அவரை "டேய்", "ராஸ்கல்" என்றெல்லாம் கூப்பிட வைத்தது நல்ல விஷயம். குருவுக்கு தன் சிஷ்யன் எவ்வளவு உயரம் சென்றாலும் அவருக்கு அவன் சிஷ்யன் தானே? அது தானே யதார்த்தம்.
  • நாம் நடிகையர் திலகம் என்று சாவித்ரியை கொண்டாடிவிட்டு, அதற்கு இணையான ஊர்வசிக்கு தமிழில் எப்போதும் அசட்டு கதாப்பாத்திரங்களாய் கொடுத்து வீணடித்துவிட்டோம். புருஷனை விட்டால், எந்த உலக அறிவும் இல்லாத ஒரு வசதியான தெலுங்கு அம்மாவை அப்படியே அச்சு அசலாக கண் முன் நிறுத்துகிறார்.
  • சொக்குவாக வரும் எம் எஸ் பாஸ்கர் மற்றொரு பலம். சிவாஜியின் காலத்தில் எதற்கு அலட்டிக் கொள்ளாமல் நடித்த வீ. கே. ராமசாமியை கண்டுகொள்ளாதது போல், கமல் காலத்தில் எம் எஸ் பாஸ்கர், இளவரசு போன்றவர்களை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது. அத்தனை அற்புதமான நடிகர்கள்.

படத்தில் -


  • கமலிடம் எப்போதும் இருக்கும், அள்ள அள்ள குறையாத பல்வேறுபட்ட கதைக் களன்கள்! தனக்கு தெரிந்ததை எல்லாம் ஒரே படமாய் எடுத்து விட வேண்டும் என்று நினைக்கிறார். மனோரஞ்சனின் கதையை எடுத்துக் கொள்வோம். சாகப் போகும் ஒரு ஸ்டார். அவன் திரும்பி பார்க்கும் தருணம். சரி செய்ய நினைக்கும் விஷயங்கள். தான் புதிதாய் கண்டெடுத்த மகள், அவர்களுக்கான உறவு, புரிதல் என்று அதை மட்டுமே ஒரு உணர்ச்சிகரமான படமாய் எடுக்க முடியும். இதற்குள் தேவையே இல்லாமல் ஒரு காமெடி கதை என்று ஒரு பீரியட் கதையை நுழைத்து, நிறைய்ய தமிழ் கலந்து, தெய்யத்தையும் , கூத்தையும் கலந்து பியுஷன் என்ற பெயரில் ஒரு கூத்தடித்து...அடடா...
  • வழக்கம் போல படம் பூராவும் வியாபித்து இருப்பது. மற்றவர்களுக்கும் கொஞ்சம் ஸ்கோர் செய்ய விட வேண்டும். நான் பார்த்த வரை, ஊர்வசிக்கு கொஞ்சம் தருகிறார். இருந்தாலும் பத்தவில்லை.
  • அந்த பீரியட் கதை. நான் இதுவரை பார்த்த கமல் படங்களில் இப்படி ஒரு மொக்கையை பார்த்ததில்லை. கமலுக்கா  இப்படி காமடிக்கு பஞ்சம் வந்து விட்டது என்று தோன்றியது. ஒவ்வொரு காட்சியும் பொறுமையை மிகவும் சோதித்தது.
  • பீரியட் கதையின் ஒப்பனை. இன்று குறும்படங்கள் எடுக்கும் சுண்டான்களே முழு நீள படங்களை போல் அவ்வளவு சிரத்தையாய் மெனக்கெட்டு ஒவ்வொன்றாய் பார்த்து பிரமாதமாக அழகாக எடுக்கிறார்கள். பல வருடங்களாக பழம் தின்று கொட்டை போட்ட கமலுக்கு ஒரு நல்ல விக், ஒட்டு மீசை கூடவா கிடைக்கவில்லை? இல்லை, அப்படி இருந்தால் தான் அது பார்ப்பதற்கு காமடியாக இருக்கிறது என்று படக் குழுவினர் நினைத்திருந்தால் எனக்கு அழுகை தான் வருகிறது!!! டைரக்டர் சார், இதையாவது பார்த்திருக்கலாமே?
  • பீரியட் கதையின் கிராபிக்ஸ். படத்தின் ஆரம்பத்தில் "இந்தப் படத்தில் எந்த மிருகத்தையும் துன்புறுத்தவில்லை" என்று போட்டார்கள். அப்போதே நான் யோசித்திருக்க வேண்டும். எலி முதல் புலி வரை எல்லாவற்றையும் கிராபிக்ஸில் வன்கொடுமை செய்து பார்வையாளர்களான நம்மை தான் துன்புறுத்திவிட்டார்கள் !
  • பூஜா குமார். அமெரிக்க வனப்பு. அமச்சூர் நடிப்பு. விலங்கிட்டு பைத்தியமாய் இருப்பவர் நல்ல பாய்கட்/ஸ்பைக் கட் எல்லாம் வைத்து, நல்ல உடை உடுத்தி நல்ல கும்மென்று இருக்கிறார். அவர் என்ன செய்வார் பாவம். ஆட்டையிலேயே  சேர்த்துக் கொள்ள முடியாது.
  • படத்தின் வசனம் பெர்சனலாய் எனக்குப் பிடித்தது. ஆனால் ஜில்லா, வீரம் போன்ற காவியங்களை போற்றி வாழும் நம் தமிழ் மக்களுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர். 

உதாரணத்திற்கு அதே "மனோ மார்கதரிசியிடம் ஒரு படம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்கும் இடம்."

"உனக்கு நான் எதற்கு படம் பண்ண வேண்டும்?" என்று மார்கதரிசி கேட்கும் இடத்தில் மனோ பேச வேண்டிய வசனம், "எனக்கு மூளையில கட்டி, செத்து போயிடுவேன் சார், கடைசியா உங்களோட ஒரு படம்.!"இந்த மாதிரி ஒரு ரெண்டு வரி தான். ஆனால், கமல் அந்த இடத்தில் இப்படி ஒரு வசனம் வைத்திருக்கிறார்!

"என்னை மாதிரி திமிரான ஆளு சார்.
நாளைக்குகிறது future ல  எங்கேயோ தூரத்துல இருக்குன்னு                                       நெனைக்கிறவன். திடீர்னு எல்லாத்தையும் பொரட்டி போட்ற மாதிரி ஒரு             நியுஸ் வருது. well, actually ரெண்டு news வருது! காதல், பாசம், thank you,                     sorry இதெல்லாம் சொல்றதுக்கே நேரம் இல்லைன்னு புரிய                                         ஆரம்பிக்குது."

கமல் புத்திசாலியாய் இருக்கலாம். எல்லோரும் கமல்கள் இல்லையே!

மற்றபடி ஜிப்ரான் இசையில் "காதலால்", "இரணியன்" பாட்டு மிளிர்கிறது.

என்னை பொறுத்தவரை கமல் பேசாமல் சில காலம், "வேட்டையாடு விளையாடு" மாதிரி பிறர் கதையில் நடிப்பை மட்டும் தரக்கூடிய வேலையை செய்யலாம்! கொஞ்சம் ஆசுவாசமாய் இருக்கும்!        

2 Responses
  1. நல்ல அலசல். மௌஸ் பிடிச்சா விடமுடியலையே:-)))