எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன். இணையத்தில் இந்தப் படத்தை சிலாகித்தது சிலர் எழுதுவதை பார்த்ததும் பொறுக்க முடியவில்லை. பாலுமகேந்திரா ஒரு அருமையான கலைஞன் தான்! அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர் இந்த வயதில் இத்தனை சிரமப்பட்டு [நம்மையும் சிரமப்படுத்தி!] ஏன் இப்படி ஒரு படத்தை எடுத்தார் என்று தான் எனக்குப் புரியவில்லை! படத்தில் மிக சொற்பமான காட்சிகளை விடுத்து, சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு ஏன் படம் பிடிக்கவில்லை என்றால்...

1. படம் முழவதும் துண்டு துண்டான [அவர் துண்டி கட்டிக் கொண்டு!] காட்சிகள். ஒரு கதையே இல்லை!
2. மிகச் செயற்கையான நடிப்பு. எல்லோரும். அதிலும் பாலு மேடையில் எப்போதும் பேசுவது போல் தன் ஆட்காட்டி விரலால் நம் கண்ணை குத்துவதை போல குத்தி குத்தி விடாமல் வசனம் ஒப்பிப்பது.
3. படத்தின் லாஜிக் :-( இந்தக் காலத்தில் புருஷன் கூட இருக்கும்போதே மாமனார் மாமியாருடன் யாரும் சேர்ந்து வாழ விரும்புவதில்லை. [எந்தக் காலத்திலும் என்பது தான் சரியாய் இருக்கும்!] அப்படி இருக்கும்போது இந்த படத்தில் மருமகள் தன் சென்னை வாழ்க்கையை துறந்து, டாக்டர் தொழிலை மறந்து, தன் பையன் இங்கேயே தங்கி தாத்தாவிடம் தமிழ் கற்றுக் கொள்ளட்டும் என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் இல்லை, ரொம்பவே ஓவர்! சரி, அந்தப் பெண் ஆயிரத்தில் ஒருத்தி என்று எடுத்துக் கொள்ளலாம் என்றால், அதற்கான பக்கபலமான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை.
4. சரி அம்மாவை விடுங்கள். சென்னையில் வளரும் ஒரு சமத்தான பையன் [சாலையில் இரைச்சல்களையும், புதிதான ஓசைகளையும் சவுண்ட் ரெக்கார்டிங் எல்லாம் செய்கிறான்], அந்த அத்துவானக் காட்டில் எத்தனை நாள் தங்குவான்? அங்கு பேஸ்புக் இல்லை, வீடியோ கேம்ஸ் இல்லை. அங்க எப்படிங்க இருப்பான்?
5. இத்தனை காலம் சாதி/மத பித்து பிடித்து, அலையும் ஒரு பெரியவர் ஒரு பாதிரியார் சொன்னதும், எல்லாவற்றையும் துறந்து விடுவதெல்லாம் காதில் அல்ல உடம்பு பூரா பூ!
6. படம் முடிந்து வெளியே வரும்போது என் நண்பர் "இது ஆணாதிக்க சினிமா!" என்றார். எப்படி என்று கேட்டதற்கு, "மகளுக்கு தான் மூன்று மகன்கள் இருக்கிறார்களே? தாத்தா ஏன் அவர்களிடம் விளையாடவில்லை? ஏன் அவர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கவில்லை? ஏன் இந்தப் பேரனிடம் அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கச் சொல்லவில்லை? ஏன் இந்தப் பேரனிடம் மட்டும் அத்தனை கரிசனை?" என்றார். பையன் வழி பேரன் தான் அப்போ முக்கியமா?

இன்னும் இப்படி எத்தனையோ...

இது "மாற்று சினிமா" என்று சொன்னால் சிரிப்பு தான் வருகிறது. என்னை பொருத்தவரை பாலுமகேந்திரா அவருடைய ஸ்டைலில் சிறிதும் மாறாமல் அதே சமயம் பெரிதும் சொதப்பி எடுத்த ஒரு "மாறாத சினிமா" தான் தலைமுறைகள்!!
3 Responses

  1. சிந்திக்க வேண்டியது ஆறாவது...!


  2. நண்பரே தாங்கள் தங்கள் கருத்தினை தெரிவித்து உள்ளீர்கள்.
    நீங்கள் கூறியது போல இது ஆணாதிக்க சினிமா என்று என்னால் குற்றம் சொல்ல முடியாது.படத்தினை நன்றாக கவனித்து இருந்தால் உங்களுக்கு ஒன்று புரிந்து இருக்கும் அந்த தாத்தா பெண் பெற்ற பிள்ளைகளோடு விளையாடவில்லை என்று யார் சொன்னது? தவிர அந்த பிள்ளைகள் எப்போதும் அல்லது அவள் மகள் வரும்போது மகளின் பிள்ளைகள் அங்கே இருப்பது போலத்தான் சொல்லிருக்கிறார்.படத்தின் மையகருவே பலவருடங்கள் பிரிந்து இருந்த மகனும் பேரனும் வந்த பின் தாத்தாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான். என்றும் என்னோடு இருக்கும் என் நண்பனைவிட ஏதோ கோபத்தில் எனை பிரிந்து பல ஆண்டுகள் கழித்து மனம் மாறி அவனோடு பழகும் விதம் தனியாக இருக்கும்.அதை போன்ற ஒன்றுதான் இந்த பாசம் இதில் ஆணாதிக்கம் ஏதும் இல்லை.சொல்லப்போனால் இதுதான் ஆணாதிக்கம் இல்லாத சினிமா ,ஆமாம் இங்கே கதாநாயகன் மட்டும் முன்னிருதப்படவில்லை,

    அதைப்போல இத்தனை நாள் சாதி/மதம் பித்து கொண்ட முதியவர் திடீர் என்று மாறவில்லை ஒவ்வொரு சந்தர்பங்களும் அவரை மெல்ல மெல்ல மாற்றுகிறது,அவர் நண்பரின் மரணம் அவரையும் பயம் கொள்ள செய்கிறது எல்லா மனிதர்களும் தன கடைசி காலத்தில் தன் தவறுகளை உணர்வது யதார்த்தம்.

    facebook ,போன்ற நவ நாகர்ரீக போதையில் கிராம உறவுகளை நாம் இழப்பதை ஓரளவிற்கு அவரால் முடிந்ததை அவர் சொல்லிருக்கார் இதில் ஆயிரம் ஓடைகளை பார்க்கும் நீங்கள் மற்ற படங்களில் உள்ள ஓட்டைகளை கவனிக்காமல் விடுவது ஏன்?

    எதாவது தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்