என் மகள் பற்றியும், அவளின்  சேட்டைகளை பற்றியும்  நிறைய எழுதுவேன் என்று நினைத்தேன். இந்த ஒரு வருடத்தில் மிகக் குறைவாகவே எழுதி இருக்கிறேன். என் மகள் பிறந்து, இன்னும் இரண்டு வாரங்களில் ஒரு வருடம் ஆகிவிடும். அவளின் பெயர் "தரு"! மிச்ச பாதி எங்கே என்று தானே கேட்கிறீர்கள். பெயரே அவ்வளவு தான். "தரு" என்றால் "மரம்" என்று பொருள். "கல்பத்தரு", "கற்பகத்தரு" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கேட்டதெல்லாம் தரும் தேவலோக மரம். இன்பத்தை அள்ளி அள்ளி தரும் ஒரு மரத்தையே என் மகளுக்கு பெயராய் வைத்து விட்டேன். என்ன சரி தானே? பெயரை சொன்னால் ஒரே தடவையில் விளங்க வேண்டும், புதிதாய் இருக்க வேண்டும் என்று  நினைத்து வைத்தேன்.பெரிய தப்பு என்று பிறகு தான் உணர்ந்தேன். "என்ன பேரு? தரூனா? பொண்ணுன்னு சொன்னீங்க"என்று கேட்டு சாகடிக்கிறார்கள். பேசாமல் "மீனாட்சி", "அம்புஜம்" என்று வைத்திருக்கலாம். நாளை வளர்ந்து என் மகள் என்ன சொல்லப் போகிறாளோ?

நான் சொல்ல வந்தது  இதுவல்ல. தரு பத்து மாதத்தில் நடை பயிலத் தொடங்கி விட்டாள். குழந்தைகளின் செயல்களை கவனிப்பதே ஒரு போதை தரும் இன்பம். "பாப்பா யாரு", "சாமி கும்பிடு" போன்ற பல விஷயங்களை நாம் சொல்லி அது செய்யும் போது பார்ப்பதை விட, யாருமே நம்மை கண்டு கொள்ளவில்லை, யாரையும் நான் கண்டு கொள்ளவில்லை என்ற நினைப்பில் அவர்கள் பாட்டுக்கு தங்கள் செயல்களை மும்முரமாய் செய்து கொண்டிருக்கும்போது அவர்களை  கவனிக்க வேண்டும்! அதை விட அழகான ஒரு விஷயம் இந்த உலகில் கிடையாது. எதையோ ஒன்றை உருட்டிக் கொண்டிருப்பார்கள். பொம்மையை பார்த்து கண்ணைச் சுருக்கி சிரிப்பார்கள். பல்லு போன கிழவி ஒன்று எதையோ ஒன்றை புரியாமல் புலம்பிக் கொண்டிருப்பது போல் "தத்தக்க பித்தக்க" என்று பேசிக் கொண்டிருப்பார்கள். திடீரென்று தலையெடுத்து நம்மை பார்க்கும்போது நாம் அதை தான் கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்த உடன் அதன் முகத்தில் வரும் வெட்கம் இருக்கிறதே...கிளாஸ்!  அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

அன்று நானும் "தரு"வும் கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தோம். அவளுக்கு அன்று விளையாடும் மூட் இல்லை. இன்று எப்படியும் நடந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விட்டாள் போலும். கட்டிலில் நடப்பது தரையில் நடப்பதை போல் எளிதல்ல. ஆனால் விழுந்தால் அடிபடாது  என்று அவளுக்குத் தெரிகிறது. மேலும் அப்பாவும் அருகில் இருக்கிறார் என்ற கூடுதல் நம்பிக்கை வேறு. சில சமயம் நல்ல விளையாட்டு மூடில், நின்று கொண்டு வேண்டுமென்றே பின்னால் சாய்வாள், நான் பதறி போய் பிடித்தால் குலுங்கி குலுங்கி சிரிப்பாள்.  ஆனால் அந்த விளையாட்டை கட்டிலில் மட்டும் தான் செய்வாள்!

அன்றும் அப்படித் தான், ஆனால் பின்னால் சாயாமல் ஒழுங்காய் நடந்து கொண்டிருந்தாள். எங்கள் வீட்டில் நல்ல பெரிய கட்டில். அதனால் அவளுக்கு ரொம்ப வசதி. கட்டிலின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும், அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும் என்று மாறி மாறி நடந்து கொண்டிருந்தாள். அப்போது ஒன்று கவனித்தேன். அவளுக்காக ஒரு சிறிய வெள்ளை தலையணை வைத்திருப்போம். அவளாகவே தனியாய் எழுந்து நிற்பதே பிரம்ம பிரயத்தனம். இதில் அம்மணி ஒரு கையில் அந்த தலையணையை தூக்கிக் கொண்டே எழுந்தாள். அதை ஒரு கையில் வைத்துக் கொண்டே நடந்தாள். அதனால், பல முறை விழுந்து கொண்டே இருந்தாள். "அதை கீழே போடும்மா..நீ நட" என்று நான் அறிவுரை கூறி அந்த தலையணையை அவள் கையிலிருந்து வாங்கிக் கொண்டாலும், மீண்டும் மீண்டும் அதை அவள் கைகளில் வாங்கிக் கொண்டாள். பிறகு தான் எனக்கு ஒன்று புரிந்தது. கார்ப்பரேட் உலகில், "எக்ஸ்ட்ரா மைல்" என்று அடிக்கடி ஒன்றை சொல்வார்கள். அதாவது உங்களால் எவ்வளவு முடியுமோ அதை விட ஒரு படி மேலே உழைப்பது என்று பொருள். குழந்தைகள் அதை வெகு இயல்பாய் செய்கிறார்கள். கட்டிலில் சரியாய் நடப்பதே சிரமம், ஆனால் அதையும் தாண்டி கையில் ஒரு பொருளை வைத்துக் கொண்டு நடந்தால் இன்னும் கடினமாய் இருக்கும். ஆனால், நாளை தரையில் நடக்கும்போது அந்தப் பயிற்சியே அவளுக்கு கை கொடுக்கும்.  அதனால் தரையில் வெகு எளிதாய் நடக்க முடியும்! என்ன ஒரு அறிவு பாருங்கள். நான் ஒன்று புரிந்து கொண்டேன். குழந்தைகள் இயல்பிலேயே புத்திசாலிகளாய் தான் இருக்கிறார்கள். நாம் தான் கண்டதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து முட்டாளாக்கி விடுகிறோம்!!
7 Responses
  1. //குழந்தைகள் இயல்பிலேயே புத்திசாலிகளாய் தான் இருக்கிறார்கள். நாம் தான் கண்டதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து முட்டாளாக்கி விடுகிறோம்!!//

    வாஸ்தவம் தான் ...!

    தரு - எனக்கு ரெம்பபுதுசா இருக்குங்க ..! பொண்ணுகிட்ட செம்மையா வாங்கி கட்டிக்க போறீங்க :)


  2. ஏன் சுப்பு நீங்க வேற பயமுறுத்துறீங்க!


  3. bandhu Says:

    தரு அழகாக இருக்கிறது பெயர்.. ஆனாலும் உதை வாங்கப்போகிறீர்கள் பெண் வளர்ந்தவுடன்.. என் பெண்ணிற்கு ஸ்ம்ருதி என்று பெயர் வைக்க நினைத்தாள் என் மனைவி.. நான் வேண்டாம் என்று சொன்னதால் வேறு பெயர் வைத்தோம்.. பல நாள் அதையே வைத்திருக்கலாமோ என நினைத்தேன்.. பிறகு அதே பெயருள்ள கொலீகை அவர் பாஸ் (க்ரீக்) symmetry என்று கூப்பிட.. அப்பாடா பெண் தப்பித்தாள் என பெருமூச்சு விட்டேன்!


  4. Happy Birthday to Tharu..


  5. Anonymous Says:


    தரு - அருமையான பெயர்.


  6. தருவிற்கு வாழ்த்துக்கள்


  7. Anonymous Says:

    தத்தி தத்தி நீ நடந்தாய்
    முத்துப்பிள்ளை தரு..உன்
    விழுதுகள் வேர் ஊன்றும்
    காலம் நீ பல காண வேண்டும்.

    இனிமை நிறை பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.தரு’ம்மா.உனக்கு அன்பான ஒரு உம்மா.