யார் சொன்னது நகைச்சுவை செய்வது தான் கஷ்டம் என்று? யார் சொல்வது ஒருவனை அழுக வைப்பது எளிது, சிரிக்க வைப்பது தான் கஷ்டம் என்று? அப்படி சொல்பவர்களை, தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லுங்கள். தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி போன்ற படங்களுக்கு அவர்களை அழைத்துப் போவோம். அப்போது புரிந்து கொள்வார்கள் மக்களை சிரிக்க வைப்பது எத்தனை எளிதென்று! [கவனிக்க: மக்களை மட்டும் கவனியுங்கள், அருகில் அமர்ந்திருக்கும் என்னை கவனிக்காதீர்கள். அப்போது என் முகம் ரண கொடூரமாய் இருக்கும்!!] ராஜா ராணி! படத்தில் இரு நாயகர்கள், இரு நாயகிகள். "ராஜாக்கள் ராணிகள்" என்று தான் பேர் வைக்க வேண்டும்? அய்யோ, மொக்கை என்று சொன்னால் காண்டாகி விடுவேன். இப்படி தான் சந்தானமும் பேசுகிறார். அப்போது மட்டும் ஏன் சிரிக்கிறீர்கள்?


நான் போகும்போது படம் போட்டு விட்டார்கள். "அடடா" என்று நினைத்தது, படம் போகப் போக "அப்பாடாவாய்" மாறிப் போனது. ஆர்யாவுக்கும், நயனுக்கும் கல்யாணம். இருவருக்கும் விருப்பமில்லை. திடீரென்று ஒரு நாள் நயனுக்கு வலிப்பு வருகிறது. ஆஸ்பத்திரியில் நயன் தன்னுடைய முன்னால் காதலை ஆர்யாவுக்கு விளக்குகிறார். [தனக்கு, முன்னமேயே ஒரு காதலன் இருந்தான் என்று ஒரு பெண் தன்னுடைய புதுப் புருஷனிடம் சொல்லும் அளவுக்கு நம் நாகரீகம் வளர்ந்து விட்டது என்பது ஒரு ஆறுதல்!!] ஜெய் வருகிறார். அழுகிறார். கெஞ்சுகிறார். கொஞ்சுகிறார். "எங்கேயும் எப்போதும்" படத்தின் "அப்க்ரேடட் வெர்ஷன்" போல் இருக்கிறது. ஒரு வேளை, எதிர்காலத்தில், இவருக்கு கல்யாணமாகி, "இவர் என்னை கொடுமைபடுத்துகிறார்" என்று இவர் மனைவி புகார் கொடுத்தால், தமிழ்நாட்டு மக்கள் "ஜெய் பயந்த சுபாவம் உள்ள பைய்யனாச்சே" என்று சப்போர்ட் செய்தாலும் செய்வார்கள். [சாரி ஜெய், ஒரு கற்பனை தான்! அப்படி எல்லாம் நடக்காது!] தமிழ் சினிமாவில் பெண் காதலில் விழ இரண்டு விதி. நாயகன் ஒன்று வெகுளியாய் இருக்க வேண்டும், இல்லை ரவுடி! அதுவே ஆன் காதலில் விழ ஒரே விதி - பெண் லூசாய் இருக்க வேண்டும். இதில் ஜெய் வெகுளி. நஸ்ரியா லூசு. [எவ்வளவு அழகான லூசு!] கதைக்கு வருகிறேன். அப்பாவின் பயத்தில் நயனை கழட்டி விட்டு விட்டு அமெரிக்க ஓடி விடுகிறார் ஜெய். அங்கு போய் தற்கொலை செய்து கொண்டு விட்டதாக நயனுக்கு செய்தி வருகிறது. கண்களில் நீர் வழிய, நயனின் காதலில் உருகிப் போன ஆர்யா, அவருடன் நட்புக்கரம் நீட்டுகிறார். நயன், நீட்டிய கையை அங்கேயே உடைக்கிறார். ஆர்யா சோகமாய் சந்தானம் கூட தண்ணி அடித்து மட்டையாகிறார். சந்தானம் நயனிடம் ஆர்யாவின் லவ்வை ஒப்பன் செய்கிறார். [அந்த இரவிலும், போதையிலும் செக்ஸி நயனை பார்த்து சந்தானம் தடுமாறவில்லை என்று ஒரு விஷயத்தை நான் எடுத்துக் கொண்டேன்!] நஸ்ரியா அனாதை!! [அடப்பாவிகளா! அட்டு ஃபிகருக்கே ஆறு அண்ணன் தம்பி இருக்கான்டா...எப்பிட்றா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க!! நான் இருக்கேண்டா அவளுக்கு!] ஆர்யா அம்மா, அப்பா இருந்தும் அனாதை. அவர்களை படத்தில் காட்டவேயில்லை. அதோடு, யாருக்கும் அண்ணன் தம்பி இல்லை. ஆர்யா ஒரே பையன். நயன் ஒரே பெண். நஸ்ரியா ஒரே பெண். ஜெய் ஒரே பையன். சந்தானம் ஒரே பையன். ஏன் இப்படி படம் எடுக்கிறார்கள்? கதைக்கு வருகிறேன். நஸ்ரியா ஆர்யா லவ் பண்ணும்போது ஒரு நாள், ஹைவேயில் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு லூசு மாதிரி ஓடி வருகையில் ஒரு காரில் அடிபட்டு ஷாருக்கான் இந்தி படங்களில் க்ளைமேக்ஸ் காட்சியில் வாயில் ரத்தம் கக்கி சாவது போல் செத்துப் போகிறார். அதை வேகமாய் ஒரு தடவை, மெதுவாய் ஒரு தடவை காட்டி என் கண்ணில் ரத்தம் வர வைத்து விட்டார்கள் [ரேஸ்கல்ஸ்!] இந்தக் கதையை கேட்டு உருகி, ஆர்யா சொன்ன அதே டயலாக்கை சொல்லி நயனும் அவருக்கு நட்புக் கரம் நீட்டுகிறார். முடிவில் ஒரு ட்விஸ்ட். இது தான் ராஜா ராணி படம்.

நான் சிரித்த இரண்டே இடங்கள்.

1. சத்யன் கால் சென்டரில் கஸ்டமர் கேரில் பேசிக் கொண்டிருப்பார். உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு மேடம் என்று ஜொள்ளு விடுவார். அதற்கு பதில் சொல்பவர், "நான் ஆம்பளைங்க" என்பார்.!

2. ஆர்யா தன் வாயை திறந்து பல்லைக் காட்டி நஸ்ரியாவை பார்ப்பதை பார்த்த சந்தானம், "ஏண்டா இப்படி வெளம்பரத்துல வர்ற பால் மாடு பல்லை காட்ற மாதிரி "ஆ" ன்னு பாக்குறே என்பார்.

அவ்வளவு தான். ஜெய் அழுகும்போதேல்லாம் தியேட்டர் அல்லோலகல்லோலபடுகிறது. என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு கம்மி தானோ என்று நினைத்துக் கொண்டேன். நான் எல்லா படங்களுக்கும் விமர்சனம் எழுதுவதில்லை. [இது விமர்சனமா என்றே ஒரு கேள்வி எனக்கு உண்டு!] ஒன்னு நல்ல படங்களை பாராட்டி எப்போவாவது எழுதுவேன். இல்லை கெட்ட படங்களை திட்டி அடிக்கடி எழுதுவேன். பல படங்களை திட்டக் கூடத் தகுதி இல்லை என்று எழுதாமல் விட்டிருக்கிறேன். இந்தப் படம் கடைசி ரகம் தான். இருந்தாலும், இந்தப் படத்தை பற்றி நான் இங்கு எழுத ஒரு காரணம் இருக்கிறது. அது என்னன்னா...அப்புறம் நான் எதைத் தான் என் ப்ளாக்ல போஸ்டா போடறது!
7 Responses
  1. //அது என்னன்னா...அப்புறம் நான் எதைத் தான் என் ப்ளாக்ல போஸ்டா போடறது!// :) ha ha ....!


  2. ராஜா ராணி படத்தைப் பற்றி இணையத்தில் வந்த விமர்சனங்களில் உங்களின் பதிவே அசத்தலாக இருக்கிறது. படத்தை விட உங்கள் விமர்சனம் அருமை. உணர்ச்சியான கதையை மேம்போக்காக எடுத்து எந்த ஜோடியுடனும் ஒன்றிக்க விடாமல் செய்துவிட்டார் அட்லி. இது மவுன ராகத்தின் அப்டேடட் வெர்ஷன் என்ற விளம்பரம் வேறு. மவுன ராகமே நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின் தழுவல். நீங்கள் சொல்வதுபோல படத்தில் எல்லோருமே அனாதைகள் போலத்தான் காண்பிக்கப்பட்டிருக்கிறார்கள். புது டிரெண்ட் போல.

    "[தனக்கு, முன்னமேயே ஒரு காதலன் இருந்தான் என்று ஒரு பெண் தன்னுடைய புதுப் புருஷனிடம் சொல்லும் அளவுக்கு நம் நாகரீகம் வளர்ந்து விட்டது என்பது ஒரு ஆறுதல்!!] "

    அந்த ஏழு நாட்கள் படத்தை இப்போது நினைத்தால் நம் சமூகம் எப்படி மாறிவிட்டது என்பது வியப்பளிக்கிறது. எனக்கொரு சந்தேகம். முடிந்தால் பதில் சொல்லவும். ஜெய்க்கு கல்யாணம் ஆகிவிட்டதா படத்தில்?


  3. Jeeva - enna naan soldrathu :-)

    Kaarikan - Nandri. Appadi thaan avar sollittu ponaar. nalla velaya avaroda wife rolela guest appearance la anjaliyai kaattama vitaanungale!!


  4. திரு பிரதீப்,
    உங்கள் தளத்தை இப்போதுதான் கண்டேன். அதாவது ராஜா ராணி விமர்சனத்தில். பழைய பதிவுகளையும் படித்தேன். ஒப்புக்காக சொல்லவில்லை. சிலருக்கே தங்கள் எழுத்தின் மீது அதிகாரம் செலுத்த முடியும். உங்கள் எழுத்து கடைசி வரை நிறுத்தாமல் படிக்க வைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதுவே ஒரு சிறப்பு. உங்கள் பதில் தமிழில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ராஜா ராணி பற்றி எனக்கு தோன்றியது இது. படத்தின் ஒரே subtle interpretation படத்தின் கடைசியில் வரும் ஜெய் காட்சிதான் என்று நினைக்கிறேன். போடா என்று சொல்லிவிட்டு அவர் போகும்போது தன் கையில் இருக்கும் மோதிரத்தை பார்த்துக்கொண்டே போவது சற்று நெருடலாக இருந்தது.அவர் பொய் சொல்வதை இது உணர்த்தியது போல இருந்தது. இந்த அளவுக்கு இதைப் பற்றி பேச இந்தப் படம் ஒன்றும் பெரிய காவியம் அல்ல என்பதால் இத்துடன் நின்றுகொள்கிறேன்.

    இறுதியாக உங்களின் எழுத்துக்கள் வெகு இலகுவாக படிக்கக்கூடிய வகையிலும் அலுப்பூட்டாத தொனியிலும் இருப்பது எல்லோருக்கும் வாய்க்கக்கூடியதில்லை.தொடருங்கள்.


  5. காரி,

    மன்னிக்கவும். பின்னூட்டத்தை பார்த்து விட்டு, உடனே பதில் அப்படியே அடிப்பதால், எந்த தமிழ் மென்பொருளும் என் கணினியில் இல்லாததால் ஆங்கிலத்தில் அடித்து விடுவது என் பழக்கம். சுருக்கமா சொன்னா ஒரு சோம்பேறி தனம் தான்!!

    தங்கள் பாராட்டுக்கு நன்றி. எனக்காக இவ்வளவு பெரிய பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி! இப்படி பிறர் சொல்லும்போது தான் இதையாவது நாம் நிறுத்தாமல் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது! நன்றி.

    அட, நீங்கள் சொன்ன மாதிரி அந்த சீனை அப்படி எல்லாம் பார்க்க வேண்டுமா? நீங்க சொன்னதும் நல்லா தான் இருக்கு!



  6. Anonymous Says:

    தம்பி நீ விமர்சனம் எழுதிரேயே நீ என்ன அவ்ளோ பெரிய அப்பா டக்கரா .. பணத்தை போட்டு படம் எடு பின்னாடி விமர்சனம் பண்ணு..