வெள்ளிக் கிழமை கொஞ்சம் வேலை இருந்தது. அலுவலகத்திற்கு லீவு சொல்லிவிட்டு சாவகாசமாக எழுந்து பதினோரு மணி போல சலூனுக்கு சென்றிருந்தேன். அங்கு காத்திருந்த போது ஒரு ஃபோன். நான் தான் ஏ.ஈ. பேசுறேன். உங்ககிட்ட இருந்து மூணு மெயில் வந்துருக்கு, அதான் உங்களை நேர்ல பாத்து பேசிராலாம்னு வந்தேன். நான் இப்போ அம்பேத்கர் சாலைல தான் இருக்கேன். உங்களை பாக்க முடியுமா என்றார். என்னால் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் பிடிக்க முடியாது என்று நினைத்து,அங்கேயே இருங்க, இப்போவே வர்றேன் என்று கிளம்பினேன்.

விஷயம் ஒன்றுமில்லை. தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் உள்ள புகார் பெட்டியில் மடிப்பாக்கம் ஏரியாவில் உள்ள சில பிரச்சனைகளை புகார் செய்திருந்தேன். [எத்தனை நாள் தான் நாமே புலம்பிக் கொண்டிருப்பது! கேட்டால் கிடைக்குதான்னு பார்க்கத் தான்!]

1. அம்பேத்கர் சாலை என்று தான் பேர், அம்பேத்கரையும் மறந்து விட்டார்கள், சாலையையும் மறந்து விட்டார்கள். சிமென்ட்டு சாலை போட்டால் காலத்துக்கும் நிலைக்கும் என்று சொல்கிறார்கள். அது தார் சாலையை விட முன்னமே பல் இளித்து விடுகிறது. வழி எங்கும் குண்டும், குழியும்! இதில் நடு நடுவே படிக்கட்டுகளை போல் வேகத்தடை வேறு! ஐய்யா, நல்ல சாலைக்குத் தான் வேகத்தடை தேவை! இங்கு சாலையே வேகத்தடையாய் இருக்கும்போது தனியாய் ஒரு வேகத்தடை எதற்கு? முதலில் ஒரு நல்ல சாலை வசதி வேண்டும்.
2. ஏரியாவை சுற்றி ஒரு நல்ல பூங்கா இல்லை. ஒரு நல்ல பூங்கா வசதி வேண்டும்.
3. அம்பேத்கர் தலையில் கொஞ்சம் முடி இருந்தது. ஆனால் அம்பேத்கர் சாலையை பார்த்தால் சாலையோரங்களில் மரங்களே இல்லாமல் மழுங்க மொட்டையடித்தது போல் இருக்கிறது. அதனால், அசோகர் சாலையில் மரங்களை நட்டதையே இன்னும் சொல்லிக் கொண்டிருக்காமல் சாலையின் ஓரங்களில் மரங்களை நட வேண்டும்!

மேல் சொன்ன புகார்கள் தான் நான் புகார் பெட்டியில் போட்டது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? தமிழக அரசின் இணையதளத்தில் நீங்கள் புகார் அளித்ததும், அதன் புகார் எண் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் வந்து விடும். அதை தொடர்ந்து அந்தப் புகாரின் தற்போதையை நிலை குறித்தும் உங்களுக்கு அப்டேட் வந்து கொண்டே இருக்கும். அந்த எண்ணை வைத்து நீங்கள் இணையதளம் போய் நம் புகாரின் நிலை என்னவென்று அறிந்து கொள்ளலாம். அப்படி, சென்ற வியாழக்கிழமை நான் அறிந்து கொள்ளும்போது, அது மடிப்பாக்கம் ஏ.ஈயின் பார்வைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. அவரின் கைபேசி எண்ணும் அந்த புகார் தகவலோடு கொடுத்திருந்தார்கள். இவர் தான் இதற்கு உரியவர், இவரிடம் உங்கள் பிரச்னையை பேசிக் கொள்ளுங்கள் என்று நம் அரசாங்கத்தில் ஒருவரின் கைபேசி வரை கொடுப்பது சாதாரண விஷயமா? சந்தோஷம். இனிமேல் இவரை தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த என்னை அவரே கூப்பிட்டது ஆச்சர்யம் தானே? அதிலும், என் வீட்டுக்கு அருகில் நின்று கொண்டு கொஞ்சம் வாங்க சார், பேசுவோம் என்றவரை விடலாமா? தலைக்கு மேல் வேலையை அப்படியே போட்டு விட்டு இந்த தலை போகிற பிரச்சனைக்கு ஓடி வந்தேன். [இதுக்கு பேர் தான் நான் லீனியர் பதிவு! எப்படி?]

அந்த வேகாத வெயிலில் கர்சீப்பை துடைத்துக் கொண்டு அந்த பேக்கரியில் அவரை பார்த்தேன். ஆஹா, நம் நாடா இது என்று தோன்றியது! முதலில் பூங்காவிலிருந்து ஆரம்பித்தார். ராஜ ராஜேஸ்வரி நகரின் உள்ளே ஒரு பாழடைந்த பூங்கா ஒன்று இருந்தது [அதை பூங்கா என்று சொல்ல முடியாது, ஒரு காலி இடம்!] சில நாட்களுக்கு முன் அந்த இடத்தை சுற்றி தடுப்புச் சுவர் அமைக்கும் பணி ஆரம்பித்து இருந்ததை நான் கவனித்தேன். என்னடா இருந்தது இது ஒன்று தான், இதையும் ஃபிளாட் போட்டு வித்து விட்டார்களோ என்று எனக்கு பயம் வந்து விட்டது. அதை அவரிடம் கேட்டதற்கு, இல்லை சார், இதை நாங்க தான் சீரமச்சுட்டு இருக்கோம். குழந்தைகள் விழியாட வசதிகள் செய்யப் போறோம், புல் தரை எல்லாம் போட்டு ஒரு மாசத்துல பாருங்க சூப்பரா ஆயிடும் என்றார். சந்தோஷம் என்றேன்.

பிறகு மரங்கள் நடுவதை பற்றி பேசினோம். அவர் என்னிடம் "சார், மரம் நடுவதற்கு நல்ல இடத்தை பார்த்து கொடுங்கள், அது எங்களுக்கு உதவியாய் இருக்கும்" என்று கேட்டார். "அதுவுமில்லாமல், சாக்கடை லைனுக்காக ஒரு பக்கம் தோண்ட போறோம், அந்த பக்கம் இப்போ நடுறது சரியா இருக்காது" என்றார். "நீங்க மொதல்ல இந்த பக்கம் நட ஏற்பாடு செய்யுங்க, என்னால முடிஞ்ச உதவியை கண்டிப்பா  செய்றேன்" என்று நானும் மனமுவந்து சொன்னேன். "மரக் கன்றுகள் வந்ததும் உங்களுக்கு சொல்லி அனுப்புறேன், நீங்க தான் சார் மரம் வைக்கனும்னு சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா செய்வோம்" என்றார்.

பிறகு சாலையை பற்றி சொன்னதற்கு, தார் சாலைகளை அமைக்க அனுமதி கேட்டிருப்பதாகச் சொன்னார். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு முன் குண்டு குழியை அடைப்பதற்கான பேட்ச் வொர்க் ஒரு மாதத்தில் செய்து முடிப்போம் என்று வாக்குறுதி அளித்தார். இப்படியாக அந்த இனிய சந்திப்பு முடிந்தது.

அவர் சொன்ன மாதிரி என்னை மறுபடியும் அழைப்பாரா, மேல் சொன்னவை எல்லாம் சொன்னபடி நடக்குமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது! ஆனால் ஒரு அரசாங்க அதிகாரி, தனக்கு வந்த புகாரை பற்றி புகார் அளித்தவரிடம் வீடு தேடி வந்து பேசுவது மிகப் பெரிய மாற்றமாகவே நான் கருதுகிறேன். இனிமேல் அவர் என்னை விட்டாலும், நான் அவரை விடுவதாயில்லை!  அப்படியே ஆள் மாறி போனாலும், இருக்கவே இருக்கிறது புகார் பெட்டி!

பதிவோட மெசேஜ் subtle ஆக வைக்கலாம்னு இருந்தேன். உங்களை நம்ப முடியாது. தமிழ்  மாதிரி உரக்க சொல்லிற வேண்டியது தான்! அதாகப்பட்டது, உங்கள் ஏரியாவில் கொசுத் தொல்லையா? மழை இல்லையா? குழாயில் காத்து வரவில்லையா? நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி. [கொஞ்சம் முகப்புத்தகத்திலிருந்து வெளிய வாங்க பாஸ்!]

http://www.sp.tn.gov.in/ta/grievance


7 Responses
  1. நீங்கள் செய்தது மிகச்சரி. இப்படி ஏதும் எழுதினால் முகநூல் போராளிகள் என்று சொல்பவர்கள் சொல்லட்டும். ஒரு தொலைபேசி, ஒரு மின்னஞ்சல், முகநூலில் குத்தல், போட்டோ போட்டு எழுதுதல் போன்றவற்றால் நான் நிறைய செய்திருக்கிறேன். அசைப்பவர் இருந்தால் அசையும் அரசு. அடுத்தமுறை அந்த ஏ.இ. வந்தால் நண்பர் ஒருவர் பாராட்டியதாகவும் சொல்லுங்கள்.


  2. Anonymous Says:

    Super pradeep..thanks fr the link..hope I ll meet pallikaranai a.e soon
    - gerald


  3. Ramnath A.S Says:

    Wow ... good job. Keep it up. :)


  4. Balaji Says:

    Good job da, even I noticed few changes the way central and state govts. are working. Very recently, raised a complaint against a private bank in RBI thro' their website. Issue resolved in less than a week..

    Also, raised water woes in New Thippasandra and a request to maintain 2 parks in New Thippasandra. Issue resolved in 2 weeks.


  5. super. nalla vishayam balaji. aama nee entha balaji? :-)


  6. sskb Says:

    hi, did something happen?


  7. Yes SSKB, it did happen.

    Now we have a decent thaar road, a green park (where we have planted trees on tharu and diya's b'day!).