"விக்கி டோனார்" - விந்து தானம் செய்து சம்பாதிக்கும் ஒருவன். [தானத்துடன் சம்பாத்தியம் என்பது முரணாக இருக்கிறது :-)]திருமணத்திற்கு பின் அவன் மனைவிக்கு அந்த உண்மை தெரிந்ததால் அவன் திருமண வாழ்வில் ஏற்படும் விரிசல் தான் படம்.

இந்த படத்தை பற்றி சில காலமாய் கேள்விப்பட்டுக் கொண்டே இருந்தேன். விந்து தானத்தின் நலனை சொல்லும் parallel cinema வாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் படம் எல்லா பொழுது போக்கு அம்சங்களும் நிரம்பிய ஒரு feel good movie யாய் இருந்தது இன்ப அதிர்ச்சி. விக்கி [அன்ஷுமன்] ஒரு டெல்லி பஞ்சாபி. வீட்டில் அவன், அவன் அம்மா, அவன் பாட்டி இருக்கிறார்கள். பாட்டிக்கு விக்கி பயங்கர செல்லம். அவன் அம்மா ஒரு ப்யூட்டி பார்லர் நடத்துகிறாள். வழக்கமான சினிமா பாணியில் வேலை எதுவும் செய்யாமல் விக்கி வெட்டியாய் பொழுதை கழிக்கிறான். அவன் அம்மா அவனை திட்டிக் கொண்டே இருக்கிறாள், அவன் பாட்டி அவனை கொஞ்சிக் கொண்டே இருக்கிறாள்.

இதற்கிடையில் டாக்டர் சட்டா [அனு கப்பூர்] ஒரு infertility clinic ஒன்றை நடத்துகிறார். அதோடு sperm bankக்கும் வைத்திருக்கிறார். நல்ல விந்துவை சேமித்து அவருடைய பேஷண்டுகளுக்கு மகப்பேறு அளிக்கிறார். விந்து தானம் பற்றிய போதிய அறிவு இல்லாததால், நல்ல விந்து [quanity, quality & mobility] கிடைப்பது மிக அரிதாய் இருக்கிறது. இந்த காரணமாக அவருடைய கிளினிக் நொடித்துப் போகிறது. ஊரெல்லாம் சல்லடை போட்டு நல்ல விந்து கொண்டவனை தேடுகிறார். அவருடைய அனுபவத்தில், ஒருவனின் முகத்தை பார்த்ததும் அவனுடைய விந்து எப்படிப்பட்டது என்று தனக்குத் தெரிந்து விடும் என்று கூறுகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் விக்கியை சந்திக்கிறார். அவனுடைய சாதுர்யம் அவருக்கு பிடித்துப் போகவே, அவனை பற்றிய தகவலை சேகரிக்கிறார். அது திருப்தியாக இருக்கவே, அவனை பின் தொடர்கிறார். இதை அறிந்த விக்கி அவரிடம் எகிறவும், அவர் தன்  நிலைமையை சொல்கிறார். அவன் கொடுத்தால் அவனுக்கு பணம் தருவதாகவும் சொல்கிறார். விந்து தானம் என்பதை கேள்விப்பட்டதும், விக்கி விழுந்து விழுந்து சிரிக்கிறான். இதை போய் யாராவது விற்பார்களா என்று அவரை கேவலப்படுத்துகிறான். அவனுக்கு அதைப் பற்றி நினைக்கவே அசூசையாய் இருக்கிறது. தன்னை மறுமுறை சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறான். தொடர்ந்த முயற்சியால் ஒரு வழியாய் விக்கி டாக்டரின் வழிக்கு வருகிறான். தனக்கு பணம் தேவைப்படுகிறது, உங்களை பார்த்தாலும் பாவமாய் இருக்கிறது, அதனால் தான் ஒரு முறை செய்கிறேன், இனிமேல் செய்ய மாட்டேன் என்று ஆரம்பிக்கிறான். அவனுடைய விந்துவை வாங்கி சோதித்ததில் நல்ல விந்துவின் எல்லா லட்சணங்களும் அதில் பொருந்தி இருப்பது தெரிகிறது. உடனே அவருடைய பேஷண்டுகளுக்கு அதை உபயோகித்து கருத்தரிக்க வைக்கிறார். வெகு நாட்களாக குழந்தை இல்லாதவர்கள் மகிழ்ச்சியில் அவருக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கிறார்கள். விக்கி கடைசியில் டாக்டரின் வலையில் விழுகிறான். அவனுக்கும் இதனால் நல்ல வரும்படி வர ஆரம்பிக்கிறது. இது வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று நினைக்கும் அதே நேரத்தில் நல்ல பணம் வருவதால் அந்த வேலையை தொடர்ந்து செய்கிறான். என்ன வேலை என்று கேட்பவர்களுக்கு கைவினை ஏற்றுமதி இறக்குமதி என்று பொய் சொல்கிறான்.

அப்படியே வாழ்க்கை போய் கொண்டிருக்கும்போது, தன் அம்மா அக்கவுண்ட் வைத்திருக்கும் பேங்கில் ஒரு பெண்ணை பார்க்கிறான். ஆஷிமா [யாமி கெளதம் - செமயாய் இருக்கிறார்!] , அவள் ஒரு பெங்காலி. அவள் மேல் கண்டதும் காதல் கொள்கிறான். அவளை பின் தொடர்கிறான். அவள் பிடி கொடுக்காமல் இருப்பதால், மனம் வருந்துகிறான். மன வருத்தத்தாலும், மன அழுத்தத்தாலும், விந்துவின் நல்ல பண்புகள் குறைந்து விடும் என்று டாக்டர் அஞ்சுகிறார். அவனை இந்த காதல் கருமத்தில் எல்லாம் விழாதே என்று எச்சரிக்கிறார். எப்போதும் இந்த மனிதர் விந்துவை பற்றியே பேசுவது அவனுக்கு எரிச்சலாக இருக்கிறது.

தொடர் முயற்சியின் பெயரால் ஒரு வழியாய் ஆஷிமாவை தன் வசியப்படுத்துகிறான். அந்த பெண் ஒரு நாள் அவனிடம் பேச வேண்டும் என்று சொல்லி தான் ஒரு விவாகரத்தானவள் என்ற உண்மையை சொல்கிறாள். தனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று அவளை ஏற்கிறான். இருவரின் பெற்றோருக்கும் இது பிடிக்கவே இல்லை. வழக்கம் போல், பேரனிடம் உள்ள அன்பினால் விக்கியின் பாட்டி மட்டுமே ஆதரிக்கிறாள். விக்கியின் அம்மா, தன் மருமகள் ஒரு பெங்காலியா, அவர்கள் எத்தனை அதிகாரம் வாய்த்தவர்கள், எப்போதும் மீனையே சாப்பிடுவார்கள் என்று பல வித கலாச்சார மாற்றங்கள் குறித்து கவலைப்படுகிறாள். அதே சமயத்தில் பெண்ணின் தகப்பனார், பஞ்சாபியினர் எப்போதும் பணம் செய்வதிலேயே கண்ணாய் இருப்பார்கள், எப்போதும் குடித்துக் கொண்டும், கல்யாணத்தில் குரங்கு போல பல்லே பல்லே என்று குதித்துக் கொண்டும் இருப்பார்களே என்று பயப்படுகிறார். ஒரு வழியாய் எல்லோரையும் சமாளித்து இருவரும் திருமணம் செய்கிறார்கள்.

டாக்டர் தொடர்ந்து விந்துவிற்காக விக்கியிடம் வந்தபடி இருக்கிறார். தன் மனைவிக்குத் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று விக்கி பயப்படுகிறான். டாக்டரை அதற்காக ஏசுகிறான். திருமணம் ஆன சில மாதங்களில், விக்கியின் மனைவி கர்ப்பம்  தரிக்க முடியாது என்று அவரை சோதித்த டாக்டர் கூறி விடுகிறார். இதனால் அவள் வெகுவாக மனம் உடைந்து விடுகிறாள். விக்கி எவ்வளவோ சமாதானம் செய்தும் அவளை அவனால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. குடும்பத்தினர் அவர்களை தத்தெடுக்க யோசனை கூறுகிறார்கள். பாட்டி மட்டும், தத்து எடுப்பதில் தவறில்லை, ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது ஆஷிமாவும், விக்கியும் என்கிறாள். அப்போது விக்கி சொல்கிறான், "பாட்டி, டெல்லியில் இரண்டு விஷயங்கள் புதுமையானது. ஒன்று மெட்ரோ, இன்னொன்று நீ!"

இதற்கிடையில் அவள் ஒருநாள் அவளுடைய ரிப்போர்டை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது விக்கியின் ரிப்போர்ட் எங்கே என்று விக்கியிடம் கேட்கிறாள். அவன் தான் எந்த டெஸ்டும் செய்யவில்லை என்று கூறுகிறான். அதைக் கேட்ட அவள், ஏன் எனக்கு தான் குறை இருக்க வேண்டுமா, உனக்கு குறை இருக்காதா, எப்படி நீ டெஸ்ட் செய்யாமல் இருக்க முடியுமா? உனக்கு எப்படி தெரியும் உனக்கு குறையே இல்லை என்று வாதாடுகிறாள். வேறு வழி இல்லாமல் தான் செய்யும் விந்து தானத்தை பற்றி அவளிடம் சொல்லி விடுகிறான். அவளுக்கு அது பெரும் அதிர்ச்சியாய் இருக்கிறது. விந்துவை விற்றா நீ இவ்வளவு பணம் சேர்த்தாய், இதை நீ என்னிடம் சொல்லவும் இல்லை என்று கோபப்பட்டு அவனை பிரிந்து கொல்கத்தா சென்று விடுகிறாள். அங்கே அவளின் தந்தை, இதில் என்ன தவறு இருக்கிறது என்று விக்கியை சார்ந்து பேசுகிறார். அது அவளை மேலும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.

இதற்கிடையில் விக்கி விந்துவின் மூலம் சம்பாதித்த பணம், பொருட்கள் மேல் சந்தேகம் கொண்டு போலீசார் அவனை உள்ளே தள்ளி விடுகிறார்கள். டாக்டர் வந்து அவனை ஜாமீனில் எடுக்கிறார். பிறகு விக்கி அவரிடம் உண்மையை சொல்கிறான். ஊரெல்லாம் என் விந்துவின் மூலம் குழந்தை பெற்றுக் கொடுத்தீர்கள், இப்போது நான் என் குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாது. நான் ரொம்பவே நொந்து போயிருக்கிறேன், தயவு செய்து என்னை தேடி வராதீர்கள் என்று கேட்டுக் கொண்டு போய் விடுகிறான். தான் செய்த காரியத்தால் விக்கியின் வாழ்கை இப்படி ஆனதே என்று கவலை கொண்ட டாக்டர் இதற்கு தானே ஒரு ப்ராயிச்சித்தம் செய்ய முடிவெடுக்கிறார். தன்னுடைய கிளினிக்கின் 25வது ஆண்டு விழா என்று தன் கிளினிக்கின் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட அத்தனை பேஷண்டுகளுக்கும் அழைப்பு விடுக்கிறார். விக்கியையும் அவன் மனைவியுடன் கலந்து கொள்ளுமாறு பணிக்கிறார். அவளை அழைத்து வர விக்கி கொல்கத்தா செல்கிறான். அங்கு அவள் இன்னும் நான் யோசிக்க வேண்டும், நான் வர முடியாது என்று சொல்கிறாள். விக்கி, இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் வா, பிறகு உனக்கு பிரிவு வேண்டுமென்றாலும் கொடுக்கிறேன் என்கிறான். இதை கேட்ட பெண்ணின் தகப்பனார் மறுபடியும் ஒரு விவாகரத்தா என்று அஞ்சி, "நீ இவனையும் வெறுப்பதற்கு காரணம் என்ன? இவன் விந்து தானம் செய்ததாலா, அதை உன்னிடம் சொல்லாதாலா, அல்லது உன்னால் முடியாத ஒன்றை அவன் ஏற்கனவே செய்து விட்டான் என்பதாலா? என்று நீயே உன்னை கேட்டுக் கொள். அவன் உன்னை மிகவும் விரும்புகிறான். அவனை நிராகரிக்காதே என்று அவளுக்கு அறிவுறுத்துகிறார். அவளும் அப்போது அந்த நிகழ்ச்சிக்காக மட்டும் சம்மதித்து விக்கியுடன் டெல்லி வருகிறாள்.

நிகழ்ச்சியில் வரவேற்ற டாக்டர் அவர்கள் இருவரையும் மேல் மாடிக்கு அழைத்துச் செல்கிறார். கீழ் உள்ள மைதானத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். டாக்டர் ஆஷிமாவிடம், நான் விக்கியை விந்து தானம் செய்யத் தூண்டினேன், அது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கு உன்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. இங்கிருந்து இந்தக் குழந்தைகளையும், பெற்றோர்களையும் பார்க்கும்போது உனக்கு எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். ஆஷிமா, "இது என்ன கேள்வி, குழந்தைகளுடன் எல்லோர் வாழ்வும் முழுமை பெற்று மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள். என்னைத் தவிர!" என்று சொல்கிறாள். அதற்கு டாக்டர், உன்னுடைய இதே நிலையில் தான் சில காலத்திற்கு முன் அவர்களும் இருந்தார்கள். இன்று அவர்கள் சந்தோஷமாய், பூரணமாய் வாழக் காரணம் விக்கி. அவன் கொடுத்த விந்தணுக்கள்! என்கிறார். அந்த குழந்தைகள் விக்கியின் விந்தணுக்கள் என்று சொல்கிறார். அதைக் கேட்டு அதிர்ந்த விக்கி, இதில் எது என் குழந்தை என்று கேட்கிறான். அதற்கு டாக்டர் புன்னகைத்துக் கொண்டே, "அத்தனையும்" என்கிறார். மொத்தம் 53! விக்கி விக்கித்துப் போகிறான்! ஆஷிமா ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போகிறாள். நான் போய் அவர்களை பார்க்கலாமா என்று கேட்கிறாள். டாக்டர் தாராளமாய், ஆனால் யார் என்னவென்று விசாரிக்க வேண்டாம். பார்த்து விட்டு வா என்று அனுப்புகிறார். ஆஷிமா ஒவ்வொரு குழந்தையை கண்டு ரசிக்கிறாள். இதை பார்த்து விக்கி பூரிப்படைகிறான். அதை பார்த்து விக்கி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான்.

மாடிக்கு வந்த ஆஷிமா, அவனை கட்டிப் பிடித்து அதோ அங்கு நிற்கும் கருப்பு சட்டை பையனுக்கு அப்படியே உன் முடி. அந்த பிங்க் பெண்ணுக்கு உன் கண்கள் என்று ஒவ்வொன்றாய் சொல்லி பூரிக்கிறாள். தன் தந்தை சொன்னது சரி தான், என்னால் செய்ய முடியாததை நீ செய்தாய் என்ற வெறுப்பு தான் எனக்கு இருந்திருக்கிறது என்னை மன்னித்து விடு என்று அவனை அணைத்துக் கொள்கிறாள். டாக்டர் அங்கு வந்து, உங்களிடம் இன்னொரு குழந்தையை காட்ட வேண்டும் என்று கூறி அவர்களை ஒரு ஆசிரமத்துக்கு அழைத்துப் போகிறார். அங்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. விக்கியின் விந்தணுவில் பிறந்த குழந்தை அது. அவளின் பெற்றோர்கள் விபத்தில் இறந்து விட்டதால், அவள் இப்போது ஆசிரமத்தில் இருக்கிறாள். நீங்கள் இவளை எடுத்து வளர்க்கலாம் என்று யோசனை கூறுகிறார். இருவரும் அந்தக் குழந்தையை அள்ளி அணைத்துக் கொள்கின்றனர். அதோடு அவர்களின் குடும்பமும் பூரணம் அடைகிறது, படமும் :-)

சந்தோஷமாய் பிக்னிக்கில் இருக்கும் விக்கிக்கு டாக்டரிடம் இருந்து ஃ போன்  வருகிறது. ஒரே ஒரு முறை கொடுத்து விடு என்று அவன் ஆஷிமாவை பார்க்கிறான், அவள் புன்னகைத்து தலையசைக்கிறாள்! டாக்டர் சந்தோஷத்தில் குதிக்கிறார்.

விக்கியாய் நடித்திருப்பது அன்ஷுமன். இது தான் இவர் முதல் படம் என்று நினைக்கிறேன். பாத்திரத்தை உணர்ந்து சரியாய் செய்திருக்கிறார்.

யாமி கெளதமை நான் எப்படி தவற விட்டேன்! பேங்கில் வேலை பார்க்கும்போது கச்சிதமாய் புடவை ஒன்றை அணிந்து கொண்டு, லூஸ் ஹேர் விட்டுக் கொண்டு, ஒரு கண்ணாடி அணிந்து கொண்டு...கொள்ளை கொள்கிறார். உங்கள் வீட்டில் உன் கூட இருக்கும் "பிஷி" நாயா பூனையா என்று விக்கி கேட்டதற்கு, ஒரு ரசனையான சிரிப்புடன், "பிஷி" என்றால் பெங்காலியில் அத்தை என்று பொருள் என்பார். அருமை. அதோடு விக்கி தன் தந்தையிடம் பேசும்போது வங்காளத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல் அவன்  பீற்றும் விதம் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார். வழிப்பறி! அவ்வப்போது, யாமியின் வாய் மேல் வாய் வைத்து அன்ஷுமன் என் வயிற்றில், நெஞ்சில் தீ வைத்தார். இப்போது கெளரவம் படத்தில் யாமி நடிப்பதாய் கேள்விப்பட்டேன். பார்க்க வேண்டும். [இந்த பத்தியை படித்து விட்டு காஜலை நான் தூக்கி எரிந்து விட்டேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்!!]

அன்னு கப்பூர் இன்னுமா நடித்துக் கொண்டிருக்கிறார்? அருமையான நடிகர். ஹிந்தி சினிமா உபயோகித்துக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இதில் அவர் எப்போதும் விந்துவை பற்றியே பேசுவதும், விந்து செல்வது போலவே விரலை காட்டி ஒவ்வொருவருக்கும் அவரவர் குணநலனுக்கு ஏற்ப ஒவ்வொரு பெயர் சொல்வது நன்று. [confused sperm, complicated sperm]

விக்கியின் அம்மா, பாட்டி, ஆசிமாவின் அப்பா, அத்தை என்று அனைவரும் மிகையில்லாமல் வெகு இயல்பாய் நடித்திருந்தார்கள். படத்தில் எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்கள். நல்லவர்களையும், நல்லதையும் பார்த்தால் நன்றாய் தான் இருக்கிறது :-) நானும் விந்துவை தானம் செய்யலாம் என்று பார்க்கிறேன். ஐ. டி. வேலையை விட நல்ல வேலை தான்! திடீரென்று ரோட்டில் நம்மை போலவே ஒரு குழந்தையை பார்த்தால் த்ரில்லிங்காய் இருக்காது?
1 Response
  1. இந்திய சினிமாவுக்கு அறிமுகம் இல்லாத விஷயத்தை எடுத்து, அதையும் ஆபாசம் கலக்காமல், நகைச்சுவை சேர்த்து, கொடுத்ததற்காகப் பாராட்டப்பட வேண்டிய படம். மருத்துவமனையில் நர்சாக வருவாரே ஒரு பெண், அந்தப் பெண் எங்கள் நாடகக்குழுவில் நடித்தவர்தான். இரண்டு மாதங்களுக்கு முன்னால் இந்திப்படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது எனக்கு. விக்கி டோனர் இயக்குநர் என்பதற்காகவே நடிக்க விரும்பினேன். ஆனால் நேரமில்லாததால் மறுத்து விட்டேன்.