நாடெங்கும் தலைநகர் தில்லியில் நடந்த கற்பழிப்பு பற்றியே பேச்சாய் இருக்கிறது. தில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒரு கூட்டம் கொடி பிடிக்கிறது. கற்பழித்தவர்களை உடனே கொல்லுங்கள் என்று ஒரு கூட்டம் கொடி பிடிக்கிறது. தில்லியில் நடந்தால் தான் அது கொடுமையா தினம் தினம் இலங்கையில் பல ஆயிரம் பெண்களும் இந்தியாவில் எங்கும் பல இடங்களில் கீழ் சாதிப் பெண்கள் இதே கொடுமைக்கு பலியாகிறார்களே அதை பற்றியும் விசாரியுங்கள் என்று மற்றொரு கூட்டம் கொடி பிடிக்கிறது. பார்வை வெவ்வேறு என்றாலும் பிரச்சனை ஒன்று தான். "பெண்கள் கற்பழிக்கப்படுவது!"

ஏன் ஆண் ஒரு பெண்ணை கற்பழிக்கிறான்? அதன் உளவியல் ரீதியான காரணங்களை ஆராய்ந்தால் இத்தகைய நிகழ்வுகள் காமத்தின் விளைவால் நடப்பதை விட கோபத்தின் விளைவால் தான் பெரும்பாலும் நடக்கின்றன என்று தெரிகிறது. உலகெங்கும் நடக்கும் கற்பழிப்புகளை ஆராய்ந்தவர்களும் இதை தான் சொல்கிறார்கள். இது ஆணிடம் இயற்கையிலேயே உள்ள ஒரு பிரச்சனை! என்ன தான் பெண் விடுதலை, ஆணுக்குப் பெண் சமம் என்று பேசினாலும், ஆணின் உள்மனதில் பெண்ணை விட தான் தான் வலிமையானவன் என்று ஒரு எண்ணம் எப்போதும் குடி கொண்டிருக்கிறது! அதனால் தான் அவன் பெண்ணை ஆரம்பத்திலிருந்தே weaker sex என்று சொல்லி வந்தான். உடல் வலிமையை பொறுத்தவரை அது ஒரு வகையில் உண்மை என்றே தோன்றுகிறது. அதனால் தான் இன்று வரை ஆணையும், பெண்ணையும் வைத்து எந்த குத்துச்சண்டையும் விளையாட்டுக்களில் இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன். எந்த ஒரு விஷயத்திலும் ஒரு பெண் தன்னை தோற்கடிக்கிறாள் என்று தெரிந்த அடுத்த நிமிடம் ஆண் வேறு மாதிரி மாறி விடுகிறான். அவனுள் இருக்கும் அந்த ஆணாதிக்க மிருகம் தலை தூக்கி விடுகிறது. அந்த ஆணின் வளர்ப்புக்கேற்ப, சமூக நிலைக்கு ஏற்ப அவன் அங்கு அசிங்கத்துடன் நடந்து கொள்கிறான். ஒன்று அவளை மட்டம் தட்டியோ, அவளின் அந்தரங்கத்தை கேலி செய்தோ அல்லது அவளை வன்கொடுமை செய்தோ அந்தப் பெண்ணை அழ வைத்து தான் தான் பலசாலி என்பதை அந்த ஆண் அங்கு பதிவு செய்து கொள்கிறான். நம் வீட்டிலேயே கூட இத்தகைய வீரியம் குறைந்த சண்டையை நம் குடும்ப ஆண்கள், பெண்கள் இடையில் நாம் பல முறை பார்த்திருக்கிறோம். ஆணிடம் அங்கு நியாயமே இருக்காது என்றாலும், அவன் அங்கு பிடிவாதமாய் பெண் சொல்வதை மறுப்பதை பார்க்கலாம். தன்னை காத்துக் கொள்ள அந்த இடத்தில் தேவையே இல்லாத ஒரு விஷயத்தை சொல்லி அந்த பெண்ணை அழ விடுவான். 

நம் திரைப்படங்களில் கூட அத்தகைய கேவலமான எடுத்துக்காட்டுகளை காட்டலாம். தமிழ் சினிமாவில் முக்கால்வாசி ஆணாதிக்க படங்கள் தான், பெரும்பாலான ரஜினி படங்கள் அப்படி தான்! உதாரணத்துக்கு, தங்க மகன் படத்தில் "பூ மாலை" பாடல். அந்தப் பாடலில் ரஜினிக்கும், பூர்ணிமாவுக்கும் இடையில் நடனப் போட்டி நடக்கும். ரஜினிக்கு ஒரு மண்ணும் ஆடத் தெரியாது! ஆனால் அவர் ஹீரோ, அவர் தான் வெல்ல வேண்டும், என்ன செய்வது, ஒவ்வொரு உடையாக கழட்டி போடுவார். பூர்ணிமா ஒரு கட்டத்துக்கு மேல் திகைத்து நிற்க ரஜினி அங்கு வெல்வார். அதை எழுதியது ஒரு ஆண், இயக்கியது ஒரு ஆண், நடித்தது ஒரு ஆண். சரி, ரஜினி படத்தில் எல்லாம் இதை பார்க்க கூடாது என்பவர்களுக்கு "விக்ரம்" படத்தில் கமல் லிசியுடன் ஒரு வசனம் பேசுவார். லிசி தான் ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை, நீங்கள் செய்யும் எதையும் என்னாலயும் செய்ய முடியும் என்றதற்கு, கமல், அப்படியா, நான் வெயில் காலத்துல சட்டை இல்லாம வெறும் உடம்பா திரிவேன், நீ எப்படி என்று மடக்குவார். How Cheap? இவையெல்லாம் வீரியம் குறைந்த கற்பழிப்புகள் தான்! இப்படி தினம் தினம் நம் பெண்களுக்கு வீடுகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
உள்ளபடி சொன்னால், உடல் வலிமையில் ஆணிடம் பெண் போட்டி போட முடியாது, மன வலிமையில் பெண்ணிடம் ஆண் போட்டி போட முடியாது! உதாரணமாக, ஒரு பெண் ஒரு ஆணின் கன்னத்தில் அறைந்தால், அவளை திருப்பி அடிப்பதை விட, அவளின் அங்கங்களை தொடுவதோ, அவளை வன்கொடுமை செய்வாதோ தான் அவளை பழி வாங்க சிறந்த வழி என்று ஆண் நினைக்கிறான். அப்படி நடக்கும் போது, பெண்ணின் இயல்பிற்கேற்ப அவள் சுக்கு நூறாய் உடைந்து விடுகிறாள். அவளிடம் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச தைரியம் அவளை விட்டு ஓடி விடுகிறது. ஒரு பெண் கற்பழிப்புக்கு முன்னும், கற்பழிப்புக்குப் பின்னும் முற்றிலும் மாறி விடுகிறாள். முன் பார்த்த ஆசை, சிரிப்பு, சந்தோசம், தைரியம் நிறைந்த பெண்ணாய் அவளால் இருக்க முடிவதில்லை. ஒரு கற்பழிப்பு அவளின் வாழ்க்கையை முற்றிலுமாக குலைத்து போடுகிறது. அந்த நிகழ்வுக்குப் பிறகு அவள் எந்த ஆணை பார்த்தாலும் மிரட்சியுடனே பார்க்கிறாள், யாரோ அவளை பின் தொடர்வது போலவே அவளுக்குத் தோன்றுகிறது. அது அவளை மட்டுமல்ல அவளைச் சார்ந்தவர்களையும் ரொம்பவே பாதிக்கிறது. Open Window என்ற திரைப்படத்தில் அப்படி ஒரு பெண்ணின் மன நிலையை மிக அழகாக காட்டி இருந்தார்கள்.

ஒரு கற்பழிப்பு, உடலளவிலும், மனதளவிலும் ஒரு பெண்ணுக்கும் அவளைச் சார்ந்தவர்களுக்கும் எத்தகைய துன்பத்தை அவர்கள் வாழ்க்கை முழுவதும் தந்து விடுகிறது என்று நினைத்துப் பார்க்கவே பயமாய் இருக்கிறது. இதற்கு தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை, என்றாலும், அதே சமயம், இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்காமல் இருக்க முழு முதற் காரணமான மது/போதை பொருட்களை ஒழிக்க வேண்டும். ஏற்கனவே ஆண் பெண்ணிடம் இவ்வளவு கொடுமையாய் நடந்து கொள்கிறான். இதில் மதுவை வேறு அருந்தி விட்டால், கேட்கவே தேவையில்லை. மதுவை அறவே ஒழித்தால் நல்லது. வேறு வழியே இல்லையென்றால், பார்களை மட்டுமாவது அகற்றி விட்டு, வீட்டில் மட்டும் தான் குடிக்க வேண்டும், குடித்திருந்தால் வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என்றாவது ஒரு சட்டம் வரலாம். தப்பித் தவறி, இந்த மாதிரி சட்டம் எல்லாம் வந்தாலும், நம் நாட்டில் சட்ட திட்டத்தின் நிலை என்னவென்று நமக்கே தெரியும்.  தில்லியில் நடந்த குற்றத்தில் ஓட்டுனர் ராம் சிங் மது அருந்தி விட்டு ஒரு பேருந்தையே எடுத்துக் கொண்டு தில்லி முழுவதும் ஒரு பெண்ணை கற்பழித்துக் கொண்டே சுற்றுகிறான், யாரும் கேட்பாரில்லை. தலைநகரத்திலேயே இந்த நிலைமை என்றால் மற்ற இடத்தில் கேட்கவே வேண்டாம்.

நாட்டின் நிலையை நினைத்தால் அயர்ச்சியாய் இருக்கிறது .

ஒரு ஆணாய் நான் எல்லா பெண்களிடமும், இப்படிப் பட்ட ஆண் வர்க்கத்திடம் நீங்கள் வாழ வேண்டிய கட்டாயத்தை நினைத்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்

ஒரு ஆணாய் மற்ற ஆண்களிடம், நீங்கள் வலிமையானவராய் இருக்கலாம் அதை மற்றொரு ஆணிடம் காட்டுங்கள், பெண்ணை மானபங்கப்படுத்தாதீர்கள் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்

4 Responses
  1. Anonymous Says:

    You've written the bitter truth! Thanks for sharing pradeep! - Dina.


  2. Unknown Says:

    //ஒரு ஆணாய் மற்ற ஆண்களிடம், நீங்கள் வலிமையானவராய் இருக்கலாம் அதை மற்றொரு ஆணிடம் காட்டுங்கள்/

    அதுக்கு பேரு ஹோமோ செக்ஸ். பிரதீப் ஏன் இப்படி தப்பு தப்பா எழுதறீங்க?


  3. hahaha..ennai appadiye kalaaichuttaaram! hehehe


  4. Vimal Says:

    Well written Pradeep!!! This should make all men who read this feel bad/sorry!!!