தமிழ் ஸ்டூடியோ, தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மூன்றாம் சனிக்கிழமையும் அரிய, உலகத் தரம் வாய்ந்த இந்திய  திரைப்படங்களை திரையிட்டு அதைப் பற்றி கலந்துரையாடுகிறார்கள். அதன் சார்பாக சென்ற வாரம் ஜான் அப்ரஹாம் இயக்கிய அக்ரஹாரத்தில் கழுதை திரைப்படத்தை பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் திரையிட்டார்கள்.

ஆதரவில்லாத ஒரு குட்டிக் கழுதைக்கு ஒரு பிராமண கல்லூரி  பேராசிரியர் அடைக்கலம் கொடுக்கிறார். அதனால் அவருக்கு கல்லூரியில் அனைவரும் கேலி பேசுகின்றனர். கல்லூரி முதல்வர் அவரை கூப்பிட்டு கண்டித்து கழுதையை ஒழித்துக் கட்டுமாறு கூறி விடுகிறார். இரண்டு நாட்கள், லீவு கொடுத்தால் நான் என் கிராமத்தில் விட்டு விடுகிறேன் என்று சொல்லி அனுமதி பெறுகிறார். தன் கிராமத்தில், ஒரு அக்ரஹாரத்தில் உள்ள தன் வீட்டில் அங்கு வேலை செய்யும் ஒரு ஊமைப் பெண்ணின் பொறுப்பில் அதை விட்டு விட்டு வந்து விடுகிறார்.

அந்த அக்ரஹாரத்தில் இருக்கும் சில விஷமம் பிடித்த சிறுவர்கள், அந்த கழுதையை படாத பாடு படுத்துகிறார்கள். யாகம் நடக்கும் வீட்டுக்குள் அனுப்பி விடுவது, பெண் பார்க்கும் வீட்டுக்குள் அனுப்பி வைப்பது, வயதானவர் நடக்கும் பாதையில் குறுக்கே விட்டு, அவர்களை விழச் செய்வது என்று பல வித விஷமம் செய்து விட்டு, பழியை கழுதையின் மேல் போடுகிறார்கள். அங்கு இருக்கும் பிராமணர்களும் பேராசிரியரின் வீட்டுக்கு வந்து குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறார்கள். இதனிடையில், அந்த ஊமைப்  பெண் ஒருவனின் ஆசைக்கு இணங்கி கருவுருகிறாள். விடுப்பில் வரும் பேராசிரியர் கழுதையை காணாமல் ஊமைப் பெண்ணிடம் கேட்க, எல்லோரும் சேர்ந்து அதை வண்ணானிடம் கொடுத்து விட்டார்கள் என்று அவள் சொல்கிறாள். அவளுடன் சென்று வண்ணானை கண்டு பிடித்து, கழுதையை திருப்பிப் பெற்றுக் கொள்கிறார் பேராசிரியர். மறுபடியும் கழுதை ஊமைப் பெண்ணின் பொறுப்பில் வருகிறது.

சில மாதங்கள் கழித்து ஊமைப்பெண்ணுக்கு குழந்தை இறந்தே பிறக்கிறது. இறந்த குழந்தையை ஊமைப் பெண்ணின் தாய் கோயில் வாசலில் வீசி விடுகிறாள். அதிர்ச்சி அடைந்த பிராமணர்கள் என்னவென்று அவளிடம் விசாரிக்க, தனக்கு ஒன்றும் தெரியாது இந்தக் கழுதை தான் அப்படி செய்திருக்கும் என்கிறாள். பொறுமையை இழந்த பிராமணர்கள் அந்தக் கழுதையை கொல்வது என்று தீர்மானிக்கிறார்கள். ஆட்கள் அமர்த்தி கழுதையை மலை உச்சியில் கொண்டு சென்று அடித்துக் கொன்று  விடுகிறார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் கழுதையின் உருவம் பிராமணர்களின் கண்ணுக்கு அடிக்கடி தெரிகிறது. கழுதையின் ஆத்மா அங்கு அலைந்து கொண்டிருப்பதாக அனைவரும் பயப்படுகிறார்கள். இதனிடையில் பேராசிரியரின் தம்பி மனைவி வெகு நாட்கள் கழித்து கருவுருகிறாள். ஒரு பிராமணரின் காணாமல் போன பையன் திரும்பி வருகிறான். இதையெல்லாம் வைத்து அது ஒரு தெய்வீக கழுதை, அதை கொன்றது பாவம் என்றும், அதற்கு ஒரு கோயில் கட்டுவது என்றும் முடிவெடுக்கிறார்கள்.  

ஊமைப் பெண் குழந்தையையும், கழுதையையும் ஒருசேர இழந்த சோகத்தில் பித்துப் பிடித்துத் திரிகிறாள். ஊருக்கு வரும் பேராசிரியர் விஷயம் கேள்விப்பட்டு, ஊமைப் பெண்ணுடன் மலையுச்சிக்குச் சென்று அந்த கழுதையின் மண்டை ஓட்டை எடுத்து ஒரு மனிதனின் இறப்புக்கு பறை அடித்து என்ன மரியாதை செய்வார்களோ அத்தகைய இறுதி மரியாதை செய்கிறார். அந்த அக்ரஹாரம் தீப்பற்றி எரிகிறது. அதை ஆவேசத்துடன் பேராசிரியரும் ஊமைப்பெண்ணும் பார்ப்பதாக படம் நிறைவடைகிறது!

பதினாறு வயதினிலே வந்த சமயத்தில் வந்த படம் இது. தேசிய விருதுக்காக அந்தப் படத்துடன் போட்டியிட்டு இந்தப் படம் வென்றிருக்கிறது. ஒரு ஆர்ட் பிலிமுக்கே உரிய அமைதியான, பின்னணி இசை அதிகம் இல்லாத, தோய்ந்த நடை படம் முழுதும் இருக்கிறது. இந்தப் படத்தின் பெயரை நான் பல ஆண்டுகளாக கேட்டிருக்கிறேன். அப்போது வந்த தமிழ் படங்களில் இருந்து இது நிச்சயம் வித்தியாசப்பட்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்துக்கு இது ஒரு நல்ல முயற்சி தான். ஆனால், நான் எதிர்பார்த்துப் போயிருந்த அளவுக்கு படம் இல்லை என்பது தான் உண்மை.

அக்ரஹாரத்தில் கழுதை வந்தால் என்ன ஆகும்? இது தான் படத்தின் கதை. கழுதை என்பது இங்கு ஒரு குறியீடு, உயர்ந்த சாதியினர் மத்தியில் தாழ்ந்த சாதியினர் நடத்தப்படும் விதத்தை இயக்குனர் எடுத்தியம்புகிறார் என்றெல்லாம் நான் படம் பார்க்கவில்லை. அது எனக்கு ஒரு கழுதை தான். குட்டியாய் இருக்கும்போது கழுதையும் அழகு தான் என்று சொலவாடைக்கு ஏற்ப அந்தக் குட்டிக் கழுதை ஜோராய் இருந்தது. ஒவ்வொரு முறை அதை அழைத்துப் போய் விஷமம் செய்யும் போதும், அவர்கள் பின்னால் தலையாட்டிக் கொண்டே போகும் அதை பார்த்தால் பரிதாபமாய் இருந்தது. ஒரு வாய் இல்லா ஜீவனை இப்படி எல்லாம் வதைப்பது எவ்வளவு பெரிய கொடுமை. யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல் எல்லா பலி பாவங்களையும் அது ஏற்றுக் கொள்கிறது. அத்தனை பலி பாவங்கள் அதன் தலையில் சுமத்தப்பட்டது கூடத் தெரியாமல், அநியாயமாய் அடிபட்டுச் சாகிறது. எதிர்க்கத் துணியாத ஒரு ஜீவனிடம் இத்தகையை செயலை செய்வது எத்தனை ஈனமான செயல்? மனிதன் தான் எத்தனை குரூரமான குணம் கொண்டவனாக இருக்கிறான்.

வெங்கட் சுவாமிநாதன் திரைக்கதை எழுதி இருக்கிறார். ஜான் ஆபிரஹாம் இயக்கி இருக்கிறார். ஜான், அப்படியே திரைக்கதையை படமாக்காமல், அதில் இருந்து நிறைய்ய மாற்றி எடுத்தார் என்கிறார்கள்.அப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை மீதும் அறிவின் மீதும் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை போலும்! அந்த விஷமக் காட்சிகள் ஒரு உதாரணம். பேராசிரியரின் வீட்டுக்கு வந்து உங்க கழுதை இன்னைக்கு என்ன செய்தது தெரியுமா? என்று அத்தனையும் சொல்லி விட்டு, அதையே காட்சியையும் காட்டுகிறார்கள். சினிமா என்றால், காட்ட வேண்டும், சொல்லக் கூடாது! அது தான் நல்ல திரைக்கதை உக்தி. இந்த படத்தில், முதலில் எல்லாவற்றையும் வசனமாய் சொல்லி விட்டு, எதற்கும் காட்சியும் இருக்கட்டும் என்று காட்டுகிறார்கள். அது சற்று எரிச்சலாய் இருந்தது.

படத்தில் சில விஷயங்கள் புரியவில்லை. பேராசிரியர் பாரதி புத்தகங்களை படிக்கிறார், சே வின் புத்தகங்களை படிக்கிறார். ஆனால் ஆமடா, நான் அப்படித் தான் வளர்ப்பேன் என்று சொல்லவில்லை.     யாரிடமும் மல்லுக்கு நிற்கவில்லை. அந்த ஊமைப் பெண் தவறான வழியில் கருவுற்றாள், யாரும் எதுவும் சொல்லவில்லை. அந்தப் பெண்ணின் கதாப்பாத்திரம் எதற்கு? கழுதையை வைத்து எப்படி விஷமம் செய்து பழியை அதன் மேல் போடுகிறார்களோ, அதே போல் அந்தப் பெண்ணை நாசம் செய்து விட்டு, அவளையும் பழிக்கிறது சமூகம் என்று சொல்ல வருகிறார்களா? புரியவில்லை. அப்படி இல்லையென்றால்,அவள் ஏன் கடைசியில் அத்தனை ஆவேசமாக இருக்கிறாள்? திடீரென்று ஆக்ராஹாரம் தீப்பிடித்து எறிவது எப்படி?

என் கூட வந்த நண்பர் ஒரு கருத்தை சொன்னார், மனிதர்கள், தானே நடக்கும் ஒரு சாதாரண செயலுக்கு அவர்களுக்கேற்றவாறு குறிப்பேற்றிக் கொண்டு திண்டாடுகிறார்கள் என்றார். கழுதை அங்கு வந்தது ஒரு சாதாரண நிகழ்வு. அது பொல்லாத கழுதை என்றும், அதை அடித்துக் கொன்ற பிறகு அது ஒரு தெய்வீக கழுதை என்றும் பிதற்றுவது ஒரு உதாரணம். அது ஒரு நல்ல கருத்தாய் எனக்குப் பட்டது.

படம் முடிந்த பிறகு கலந்துரையாடலிலும் இதே போன்ற விமர்சனங்களே எழுந்தன.நிகழ்ச்சி நிறைவுற்றதும் நான் தமிழ் ஸ்டூடியோ அரூணிடம் ஜெயகாந்தனின் "உன்னைப் போல் ஒருவன்" படத்தை திரையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். அது கிடைப்பது அரிது என்றும் முயற்சி செய்வதாகவும் சொன்னார். நல்ல ஒரு மாலைப் பொழுதுக்கு நன்றி நண்பர்களே!

7 Responses
  1. Ram Says:

    pradeep, very good narration, feel as if i have seen the movie


  2. Ram Says:

    I liked the style of your narration in tamil...cheers!!!


  3. Ram Says:

    i liked your style of narration...cheers


  4. Ram,

    I am publishing all your comments. I can see ur comments have evolved :-). Thank you so much.


  5. barathy che puththagam padikirathu puratchi seirathukka?


  6. varatha,

    avangaloda thaakkam konjamaavathu varanumla...thappu nadantha oru kelviyaavathu kekkanumla. athu kooda illainna avanga booksai padichchi enna use? avangalai avamaanapaduthura maathiri...


  7. Unknown Says:

    அருமை