தி விருக்ஷா குழுவினர் நடத்திய "சந்திரஹரி" என்னும் நாடகத்தை பார்த்து வந்தேன். கூத்துப்பட்டரையை சேர்ந்த தேவி அவர்களின் நாடகக் குழு நடத்திய நாடகம் இது. இந்த நாடகத்தை 1923 ம் ஆண்டு பம்மல் சம்மந்த முதலியார் எழுதினர். அதை இன்றும் சிறு மாற்றமும் இல்லாமல் கண்டு களிக்க முடிவதில் அவரின் மேதமை தெரிகிறது. ஹரிச்சந்திரன் என்ற அரசன் எத்தனை கஷ்டம் வந்தாலும் பொய் சொல்லாமல் வாழ்ந்தான். ஆனால், இந்த சந்திரஹரியோ அவனுக்கு நேர் எதிர்! எத்தனை கஷ்டம் வந்த போதிலும் உண்மையே பேசாமல் வாழ்ந்தான். அவனை எப்படியாவது உண்மை பேச வைத்து விடுவது என்று சபதம் செய்து விட்டு எமனிடம் வேலை பார்க்கும் சிஷ்டவாசி பூலோகம் வருகிறார். அவர் ஜெயித்தாரா என்பது தான் கதை.

சந்திரஹரி எந்தக் கஷ்டம் வந்த போதிலும் பொய்யே பேசுகிறான். அதனால் அவன் நாடு துறந்து, மனைவி மகனை விற்று சுடுகாட்டில் பிணம் எரிக்க வேண்டி வருகிறது. கடைசியில் அவன் மகனையே அவன் எறிக்கும் நிலைமை வாய்க்கிறது. அத்தகையை தருணத்திலும் அவன் விடாமல் பொய் பேசி எப்படி சமாளித்தான் என்பதை நல்ல நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

சந்திரஹரி ஆக சுல்தான் என்பவர் நடித்திருக்கிறார். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற ஒரு தேர்ந்த கலைஞர் இவர்.  ஒரு கலகலப்பான கோமாளித்தனமான அரசனுக்குரிய உடல் மொழியுடன்  நன்றாய் நடித்திருந்தார். நல்ல வாசன் உச்சரிப்பு. அவரின் உடைகளும், அதற்காக அவரின் மெனக்கெடல்களும் அவருக்கு இந்தக் கலையின் மேல் இருக்கும் ஈடுபாட்டை நன்றாய் விளக்குகிறது. கடைசியில்  வெட்டியானை வரும்போது அவரின் தோற்றமும், குரல் மாற்றமும் அமர்க்களமாய் இருந்தது. சில இடங்களில் அடக்கி வாசித்தால் இன்னும் இயல்பாய் இருக்குமோ என்று பட்டது. சில இடங்களில் அவரின் கோமாளித்தனம் இந்த நாடகத்திற்காக எடுத்துக் கொண்ட உடல் மொழி இது என்று காட்டுவது போல் செயற்கையாய் இருக்கிறது. அவர் நகைச்சுவை என்று செய்வது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாய் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சந்திரஹரியின் மந்திரியாக சுபாஷ் நடித்திருந்தார். அவரின் உடலமைப்பு, அங்க அசைவுகள் சந்திரபாபுவை நினைவுபடுத்தின. அவர்களுடன் வந்த பிராமணரை தேடுவதாக சொல்லி விட்டு, அவரின் கால் வழியே நடந்து வந்து, அரசே அவர் எங்குமே காணோமே என்பது நல்ல நகைச்சுவை. கொடுத்த வேடத்தை சிறப்பாய் செய்திருந்தார். வேடத்திற்கு நன்றாய் பொருந்தி இருந்தார். மற்றவர்கள் பேசும்போதும் அவரின் உடல்மொழி நன்றாய் இருந்தது. 

சிஷ்டவாசியாய் ராம். போராளி படத்தில் சசிகுமாரிடம் சரக்கு வாங்கி வரச் சொல்லி விட்டு, பைசா கொடுக்காமல் தகராறு செய்வாரே; அவரே தான்! இவரும் கூத்துப்பட்டரையில் பயிற்சி பெற்ற ஒரு தேர்ந்த நடிகர். நல்ல பாத்திரம் இவருக்கு. நல்ல வசன உச்சரிப்பு! சந்திரஹரியை ஒரு உண்மையாவது பேச வைக்க இவர் படும் பாடு நல்ல ஒரு கதைக் களம். கொடுத்த பாத்திரத்துக்கு இவர் நன்றாய் நடித்திருந்தாலும், இவரை பார்த்து பாவப்பட முடியவில்லை. இவரை பார்த்து பரிதாபம் வரவில்லை. அது ஏனோ தெரியவில்லை!

ஈச நட்சத்திரம் [சிஷ்டவாசியின் சீடர்] வேடத்தில் நீல் ஆனந்த். அசப்பில் ஆர்யாவை போல் இருக்கிறார். இவரும் நன்றாகவே நடித்திருந்தார். இவர் நின்ற விதமும், உடல் மொழியும் ஏதோ ஒரு அரசனுக்கு ஏற்ற உடல்மொழி போல் எனக்குத் தெரிந்தது. அதோடு மட்டுமில்லாமல், இவர் தான் சந்திரஹரியிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு படுபவர். அப்படி ஒரு படாத பாடு படும் கதாப்பாத்திரம் தோற்றத்தில் கொஞ்சம் பரிதாபமாய் இருந்திருந்தால் சிறப்பாய் இருந்திருக்குமோ என்று படுகிறது!

ஒரு பெண் கதாபாத்திரத்திலும், சந்திரஹரியின் மகன் கதாபாத்திரத்திலும் பிரதீப் [நான் இல்லை!] அசத்தி இருந்தார். பெண் கதாபாத்திரத்தை செய்வதே கஷ்டம், அதோடு ஒரு சிறுவனின் கதாபாத்திரத்தையும் மிக அழகாகச் செய்திருந்தார். இரண்டு கதாபாத்திரத்தின் உடல் மொழியும் அச்சு அசல். சிறுவனாய் வரும்போது அடிக்கடி நாக்கை கடித்துக் கொண்டே இருப்பது அது குழந்தை என்ற நம்பகத்தன்மையை கொடுக்கிறது. மிகச் சிறப்பாக வரக் கூடியவர். 

மற்றொரு பெண் கதாபாத்திரத்தில் வந்த ஜாகீரும் பெண்ணின் உடல் மொழியை பிசகாமல் செய்திருந்தார்.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தை செவ்வனே செய்திருந்தார்கள். 

ஆனந்த கண்ணனின் [டீவி புகழ்!]  இயக்கம். ஸ்லோ மோஷன், மைமிங் டெக்னிக்கில் ஞான திருஷ்டி காட்சி என்று நாடகத்தில் சில புதுமையையும் புகுத்தி வடிவமைத்திருந்தார். அது சிறப்பாய் இருந்தது. 

நீங்கள் சென்னையில் இருந்தால், நாளை மாலை வீட்டில் உட்கார்ந்து டீவி பார்த்தே அழியப் போகிறீர்கள் என்றால், சாலிகிராமத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் ஜானகி பள்ளிக்கு [ஆவிச்சி பள்ளிக்கு எதிரில்] நாளை மாலை ஏழு மணிக்கு வாருங்கள். நாளையும் இதே நாடகம் மீண்டும் அரங்கேறப் போகிறது! நிச்சமாய் இது உங்கள் எல்லோருக்கும் ஒரு புது விதமான அனுபவமாய் இருக்கும் என்பதற்கு நான் கியாரண்டி!
0 Responses