சாருவின் EXILE நாவல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். காமராஜர் அரங்கம் விசாலமாய் ஜம்மென்று இருக்கிறது. என் டூ வீலரை பார்க் பண்ணும்போது பார்க்கிங் ஏரியாவை பார்த்தேன். அங்கே ஏற்கனவே பார்க் பண்ணியிருந்த இன்னோவா கார்கள் சின்ன நாய்க்குட்டி சைசில் தெரிகின்றன! அத்தனை விசாலமான ஏரியா. என் வீட்டு பார்க்கிங்கில் என் சான்ட்ரோவை நிறுத்துவது ஏதோ தண்ணி லாரியை நிறுத்துவது போலிருக்கிறது! காமராஜர் அரங்கம் கலைஞர் ஆட்சியில் கட்டப்படவில்லையோ என்னமோ, இன்னும் அம்மாவின் கண்களை உறுத்தாமல் அது காமராஜர் அரங்கமாகவே இருக்கிறது!

வழக்கம் போல் இந்திய நேரந்தவறாமை விதியின் படி விழா சற்று தாமதமாய் தொடங்கியது. நான் போய் அமர்ந்தவுடன், கொலைவெறி பாட்டு ஒலித்தது. பிறகு இச்சு இச்சு இச்சு குடு பாடல். விழாவில் யாரும் யாருக்கும் பொன்னாடை போர்த்தவில்லை. ஒரு கூட்டமே சென்று மேடையில் அமரவில்லை. மேடையில் இருப்பதால் பேசி முடித்ததும் தான் போகவேண்டும் என்று இல்லை என்று சாரு மேடையில் அமர்ந்திருப்பவருக்கு சொல்லி விட்டார். இப்படி ஒரு இலக்கிய விழாவுக்கான எந்த வித மேடைச் சம்பிரதாயமுமில்லாமல் இருந்தது மிகப் பெரிய ஆறுதலாயிருந்தது. விதிமுறைகளை உடைப்பதில் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தான்!

விழாவை சாருவே தொகுத்து வழங்கினார். வாழ்த்துரை வழங்க வாலி அவர்களும், நாவல் திறனாய்வு செய்ய இந்திரா பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்தனர். இருவரையும் சாரு எந்த வித முன் பின் அணிந்துரைகள் சேர்க்காமல் வெறும் அவர்களின் பெயரை சொல்லியே பேசியது வித்தியாசமாய் இருந்தது. அப்படி எந்த ஒரு மேடை அலங்காரமும் இல்லாமல் அவர் சாதரணமாய் பேசியது நன்றாகவே இருந்தது. ஆனால் அவரே சொன்னது போல், அவருக்கு சரியாய், கோர்வையாய் பேச வரவில்லை. அவர் ஒரு பேச்சாளர் இல்லை என்பதால் மன்னிக்கலாம்! வாலி வாழ்த்துரை வழங்கினார். எண்பது வயதிலும் அவரின் குரல் வளம் அருமை! இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால் அதே அளவு வயதுள்ள இந்திரா பேசும்போது எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு பேசியது போல் குளறிப் போயிருந்தது. ஆனால் வாலியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவரின் பாடல் வரிகள் போல் இளமையாய் இருந்தது. வாலி சுவாரஸ்யமான பேச்சாளர். அபாரமான ஞாபக சக்தி அவருக்கு. அவரின் வாழ்க்கையில் நடந்த இரு நிகழ்ச்சிகளை சொன்னால் போதும், அந்த விழா சூடு பிடித்து விடும். சாருவை பற்றி நிறைய விமர்சனங்கள் இருப்பதை பற்றி பேசும்போது எவன் ஒருவன் விமர்சனத்துக்கு உள்ளாகிறானோ, அவனே அறிவாளி என்றார். மரவட்டையையும், மண்புழுவையும் எவனும் விமர்சிக்க மாட்டான். நல்ல பாம்பை தான் விமர்சிப்பான் என்றார்!

இந்திரா பார்த்தசாரதி பேசும்போது தனக்கு இத்தனை பெரிய கூட்டத்தில் பேசி பழக்கமில்லை. எப்போதும் தான் பேசும் இலக்கிய விழாக்களில் இருபது, முப்பது பேர் தான் இருப்பார்கள் என்றார். நாவலைப் பற்றி சொல்லும்போது சுருக்கமாய் இது ஒரு சாப்ஃட் போர்ன் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. இது ஹாட் போர்ன் என்றார். படிக்க இஷ்டமிருந்தால் படியுங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள் என்றார். 

மதன் சிறிது நேரம் பேசினாலும் மிக நன்றாய் பேசினார். இப்படி ஒரு நாவல் வெளியீட்டு விழாவுக்கு காமராஜர் அரங்கத்தில் வைக்க ஒரு தைரியம் வேண்டும் என்றார். இப்படிப் பட்ட நாவல்கள் பத்திரிக்கையில் தொடராக வருவது சாத்தியமில்லை. ஏனென்றால் ரசனை அல்லாத, தைரியம் அல்லாதவர்களே எந்த ஒரு துறையிலும் உயர்பதவியில் இருக்கிறார்கள். அவர்களால் இத்தகைய நாவல்களை எல்லாம் கொண்டு வர முடியாது என்றார். இந்த நாவலில் ஒரு இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட் இருப்பதாக சொன்னார். 

இவர்களை தவிர வெற்றி மாறன், ஞானி போன்றோரும் வந்திருந்தார்கள். சாரு சிறப்புரை என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னார்.  பெரும்பாலும் அவரின் வலைதளத்தில் இருக்கும் சுய புலம்பல்களாய் இருந்தது. ஒன்று கவனித்தேன். சாருவை யார் புகழ்கிறார்களோ அவர்களை தான் அவர் புகழ்வார் போலிருக்கிறது! வாலி ஒரு முறை அவரைப் பற்றி விகடனில் எழுதியவுடன் அவரிடம் நட்பு வைத்துக் கொண்டார். ஆனால் அவரை அறிமுகம் செய்கிறேன் என்று அவர் பேசியதிலிருந்தே, வாலியை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. இச்சு இச்சு குடு படலை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். ஆனால் வாலியின் வேறு எந்த நல்ல பாடலையும் அவரால் மேற்கோள் காட்ட முடியவில்லை. தளபதியில் எதோ ஒரு பாட்டு என்று பாதியில் விட்டு விட்டார். ஞானியை அவ்வளவு திட்டியவர், இன்று அவர் வந்தார் என்றதும் தனக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடு இருந்தது உண்மை, ஆனால் அவரை போல் எழுத்தாளர் இல்லை என்று பேசுகிறார். ஜெயமோகன் வந்திருந்தால் அவரையும் பாராட்டி இருப்பாரோ என்று தோன்றியது! 

என்னை பொறுத்தவரை சாரு உடனடியாய் செய்ய வேண்டியது, தான் ஐரோப்பா சென்றது பற்றி, தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை என்பது பற்றி, கேரளாவில் அவரை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது பற்றி, உத்தம தமிழ் எழுத்தாளனைப் பற்றி, சினிமாவில் இவரை யாருமே கண்டு கொள்ளாதது பற்றி இவர் பேசாமல் இருப்பது நலம். இதை செய்தால் போதும் இவர் உலகம் போற்றும் பெரிய எழுத்தாளர் ஆகி விடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது.

இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். இரு வாரங்களுக்கு முன் நடந்த எஸ். ரா வின் இலக்கிய சொற்பொழிவுக்கு நான் சென்றேன் என்று உங்களுக்குத் தெரியும். ஒரு நாள், சற்று தாமதமாய் சென்றேன். கடைசி வரிசையில் ஒரு மனிதரின் பக்கத்தில் ஒரு இருக்கை காலியாய் இருந்தது. அமரலாமா என்று கேட்டேன். அவர் தலையாட்டினார். பார்த்தால் அவர் சாரு! அட, இவர் பக்கத்திலா நாம் அமரப் போகிறோம் என்று அமர்ந்தேன். நான் ஒரு வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தேன். [இலக்கிய விழா என்பதற்காக அல்ல, வெயில் காலத்தில் அதை அவ்வளவாய் போட முடிவதில்லை, அதனால் மழை காலத்தில் அந்த உடையை தேர்ந்தெடுத்தேன்] அவர் என்னை பார்த்தார் என்று நினைக்கிறேன். எஸ். ரா. பேச ஆரம்பித்து விட்டதால் நான் இவரிடம் எதுவும் பேசாமல் அவரின் பேச்சை கேட்க ஆரம்பித்தேன். அன்று விழா முடிந்ததும் இதைப் பற்றி என் மனைவியிடம் சொன்னேன். நீங்கள் அவரிடம் பேசவில்லையா என்று கேட்டாள்! அவரிடம் நான் என்ன பேசினாலும், நாளை வலைதளத்தில் குர்தா அணிந்து கொண்டு ஒருத்தன் வந்தான், என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டான் என்று பதிவிடுவார். இது எனக்குத் தேவையா என்றேன். இன்று விழாவில் திடீரென்று குர்தா அணிந்து கொண்டு ஒருவன் ரஷ்ய கலாச்சார மையத்திற்கு வந்தார், அது அவருக்கு மிகவும் ஆபாசமாக இருந்தது. ஏன் இந்த உடை என்று கேட்டேன், அதற்கு இலக்கிய விழா என்றார்கள், அதனால் அப்படி வந்தேன் என்று பதில் சொன்னார் என்று கூறி கலாய்த்தார். அன்று அப்படி இன்னொரு ஆள் வந்திருந்தாரா, அல்லது என்னை நினைத்து மற்றதெல்லாம் அவரே இட்டுக் கட்டி சொன்னாரா தெரியவில்லை. ஆஹா, நாம் எதுவுமே பேசாமலேயே இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தேன்!!

9 Responses
  1. Syed Says:

    Avar appadi thaan solvar. Pirer sutta vadai thanathu enru solli peru perravar avar.


  2. பிரதீப் வணக்கம் நலமா, உன் தமிழ் மற்றும் வார்த்தை கோர்வை நன்றாக உள்ளது. விதிமுறைகளை உடைப்பதில் எப்போதும் எனக்கும் மகிழ்ச்சி தான்! - அனால் அது நடைமுறைக்கு ஒத்து வராத விதிமுறையாக இருக்க வேன்டும்.


  3. Nandri Syed and Balaji. nadaimuraikku oththu varutho illayo, maatram avasiyam :)


  4. //சாருவை யார் புகழ்கிறார்களோ அவர்களை தான் அவர் புகழ்வார் போலிருக்கிறது! //

    //ஜெயமோகன் வந்திருந்தால் அவரையும் பாராட்டி இருப்பாரோ என்று தோன்றியது! //

    சாருவை தொடர்ச்சியாக வாசித்து வருபவர்கள் இந்த விசயங்களை புரிந்துகொள்ளலாம்.

    நானும் என் அனுபவத்தை எழுதியிருக்கிறேன். வாய்ப்பிருந்தால், படித்துப்பாருங்கள்.


    //கூட்டத்தில் எக்ஸைல், எக்ஸைல் என பலமுறை சொல்லக்கேட்டு, இடையிடையே செக்ஸ், செக்ஸ் என பலமுறை சொல்லக் கேட்டு, இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரு ரசவாதம் ஏற்பட்டு, நேற்றிரவு கனவில் ஷகீலா, ஷகீலா என எதிரொலித்துக்கொண்டிருந்தது. இதுவரை என் கனவில் ஷகீலா வந்ததே இல்லை. சாருவின் புண்ணியத்தில் ஷகீலா வந்துவிட்டார். சாரு எழுத்தின் ரகசியம் புரிந்தது.//

    http://socratesjr2007.blogspot.com/2011/12/blog-post_06.html


  5. கிரி Says:

    // என்னை பொறுத்தவரை சாரு உடனடியாய் செய்ய வேண்டியது, தான் ஐரோப்பா சென்றது பற்றி, தமிழ்நாட்டில் தமிழ் எழுத்தாளனுக்கு மரியாதை இல்லை என்பது பற்றி, கேரளாவில் அவரை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது பற்றி, உத்தம தமிழ் எழுத்தாளனைப் பற்றி, சினிமாவில் இவரை யாருமே கண்டு கொள்ளாதது பற்றி இவர் பேசாமல் இருப்பது நலம். இதை செய்தால் போதும் இவர் உலகம் போற்றும் பெரிய எழுத்தாளர் ஆகி விடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது.//

    :-)) சரியா சொன்னீங்க! ஆனால் இவை இல்லாமல் சாரு இல்லை. யாரையும் திட்டாமல் சாருவால் இருக்கவே முடியாது. ஐரோப்பாவை பற்றி புகழாமல் இருக்க முடியாது. முல்லை பெரியார் பிரச்சனை நடக்கும் இந்த நேரத்தில் மலையாளிகளைப் பற்றி கூறினால் நன்றாக இருக்கும் LOL

    //அவரிடம் நான் என்ன பேசினாலும், நாளை வலைதளத்தில் குர்தா அணிந்து கொண்டு ஒருத்தன் வந்தான், என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டான் என்று பதிவிடுவார். இது எனக்குத் தேவையா என்றேன்//

    :-))) சாருவை நல்லா புரிந்து வைத்து இருக்கீங்க.

    // ஆஹா, நாம் எதுவுமே பேசாமலேயே இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தேன்!!//

    ஹா ஹா ஹா பேசி இருந்தால் உங்களை நாறடித்து இருப்பார். உங்களுக்கு வந்தது குர்தாவோட போச்சுன்னு நினைத்துக்குங்க ;-)


  6. vilakkamaana pinnoottathirku nandri giri! pesinaalum problem, pesalainnaalum problem!! awww....


  7. Anonymous Says:

    Pradeep,
    Is it worth penning about Charu and his "EXILE" (or "SEXILE")?

    Right from the time Charu was following Nithyananda and stopping his worship due to "Ranjithagate" scandal, I never liked that personality. He's only getting into bigger controversies(facebook chat issue).

    I think you have many more beautiful things about life to write!
    -Dina.


  8. ஓ...நீதானா அது?? :)))


  9. Unknown Says:

    சாருவப்பத்தி பதிவா? ஆனாலும் நீங்க ஒரு இலக்கியவாதி ஆகிட்டீங்க