தினமும் அதிகாலை எட்டு மணிக்கெல்லாம் எழுந்து விடும் பழக்கம் எனக்கு! திடீரென்று நேற்று ஒரு ஞானோதயம். நாளைக்கு ஐந்து மணிக்கு எழுந்து பார்த்தால் என்ன? என்று! எழுந்து என்ன செய்வது என்று தெரியவில்லை. எழுந்து தான் பார்ப்போமே என்று நினைத்துக் கொண்டு நாலரை மணிக்கு அலாரம் வைத்தேன். அப்போது தானே அதை Snooze செய்து செய்து ஒரு ஐந்து மணிக்கு எழுவதற்கு வசதியாய் இருக்கும். அதற்கெல்லாம் அவசியம் இல்லாமல், கொசு வலைக்குள்ளே வசதியாய் கடித்துக் கொண்டிருந்த கொசுக்கள் நாலே முக்காலுக்கு எல்லாம் குத்தி குத்தி எழுப்பி விட்டன. எழுந்து பல் விளக்கி நானே சமையல் அறைக்குள் சென்று தட்டுத்தடுமாறி விளக்கை போட்டு [விளக்கை போட்டதும் பார்வை போய் விட்டது போல் அலறி ஓடுகிறது கரப்பான்!] எங்கே எது என்று தேடி ஒரு காப்பி போட்டு சாப்பிட்டேன். சக்கரை போட்டு கலக்கிய கலக்கில் சூடு கொஞ்சம் ஆறி இருந்தது. இருந்தாலும் சுவை பரவாயில்லை.

காப்பியை குடித்து விட்டு, அதற்கு நேர் எதிராக ஒரு சட்டையை மாட்டிக் கொண்டு, அதாங்க டீ சர்ட்! [ஸ்வபா...] மாட்டிக் கொண்டு வாக்கிங் கிளம்பினேன். இன்னும் இருட்டாய் இருந்தது. மெதுவாய் இடப்பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.காகங்கள் ஒன்றிரண்டு கரைந்து கொண்டிருந்தன. பகல் பொழுதில் நாடு ரோட்டில் நின்று அழிச்சாட்டியம் செய்யும் மாடுகள், இந்த சமயத்தில் அடைபட்ட கடையின் வாசலில் ஏகாந்தமாய் அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்றிரண்டு நாய்கள் "இவன் யாருடா புதுசா" என்பது போல் பார்க்கின்றன. மடிப்பாக்கத்து நாய்கள் பெங்களூர் நாய்கள் போல் அல்ல. மிகவும் சாதுவானவை. மற்ற ஏரியா நாய்களை பார்த்து தான் குறைக்கிறதே அன்றி மனிதர்களை பார்த்தல்ல! திடீரென்று இவைகள் எல்லாம் எப்போது தூங்கும் என்று ஒரு கேள்வி எழுந்தது! லேசாய் பனி மூட்டமாய் இருந்தது. வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடிகளில் பனி உறைந்து போயிருந்தது. அதைப் பார்க்கும்போது தில்லியில் இருந்த நாட்கள் ஞாபகம் வந்தது.  மணி ஒரு ஐந்தே கால் இருக்கும். காலை நாலரையிலிருந்து ஐந்தரை வரை பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள். கரை படியாத காற்று. அதிக வாகன இரைச்சல் இல்லையென்றாலும், அந்த நேரத்திலும் ஒரு கால் டாக்சியோ, இரு சக்கர வாகனமோ, பால் வண்டியோ, செங்கல் லாரியோ அம்பேத்கர் சாலையை கடந்து கொண்டு தான் இருக்கிறது!  பக்கத்து தெருவில் வீடு கட்ட செங்கல் இறங்கிக் கொண்டிருந்த லாரியிலிருந்து "கடவுள் அமைத்து வைத்த மேடை" பாடல் கேட்கிறது! அதை கடந்து நடந்தேன். சாக்கடையில் கழிவு நீர் ஓடும் சத்தம் காட்டில் ஒரு ஓடையை கடக்கும் அனுபவத்தை கொடுக்கிறது! 

விசேஷத்திற்கு ஆடர் எடுத்து ரெடிமேட் சாப்பாடு செய்பவர்கள் நால்வர் எதையோ கிண்டி கொண்டிருந்தார்கள். மிச்ச மீதி ஏதாவது தேறாதா என்று இரண்டு நாய்கள் காத்திருக்கின்றன. இருள் கொடுத்த சுதந்திரத்திலும், ஆள் நடமாட்டம் கம்மி என்பதாலும் முந்தானை ஒதுங்க குனிந்து கூட்டிப் பெருக்கி வாசல் மொழுகுகிறாள் ஒருத்தி. அவள் வயதானவள் தான் என்றாலும், என்னைப் பார்த்ததும் அவள் கை ஆடையை சரிசெய்கிறது! Intuition! அவளை கடந்ததும், ஹெல்மட் மாட்டிக் கொண்டு வண்டியை எடுத்து வெளியே வரும் கணவனுக்கு கேட்டை திறந்து விடுகிறாள் ஒரு இல்லத்தரசி. என் இடத்தில் ஒரு பொறுக்கியோ, கொள்ளைக்காரனோ இருந்திருந்தால் அவனுக்கு இந்த சந்தர்ப்பம் வசதியாய் அமைந்திருக்கும் என்று ஏனோ பட்டது! சிறிது தூரம் சென்று திரும்பி வந்த வழியே நடந்தேன். மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். அம்பேத்கர் சாலை விசாலமாய் தான் இருக்கிறது.  சாலையில் விளக்குகள் ஜோராய் எரிகிறது! மரங்களே இல்லாத வெறுமை! வெளியூரிலிருந்து வருபவர்கள், வெளியூர் செல்வபர்கள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக என்னை கடந்து செல்கிறார்கள். நகரத்தின் அடுத்த பக்கத்தில் வேலைக்கோ, படிக்கவோ செல்பவர்கள் கிளம்பிவிட்டார்கள். பால் பாக்கெட்டுகளை ஒரு கூட்டம் அடுக்கிக் கொண்டிருக்கிறது. நம் ஊரில் தேநீர் கடைகளில் எந்த நேரத்திலும் ஒருவராவது நின்று தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன் அள்ளிப் பூசிய திருநீற்றுப் பட்டையுடன் பலசரக்குக் கடையை திறக்கிறார் அண்ணாச்சி ஒருவர். அவர் கடை திறக்க இரண்டு வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்! பேருந்து நிலையத்தில் M45A வருகிறது. இது தான் முதல் பஸ்ஸாக இருக்க வேண்டும். அந்த நேரத்திலும் பத்து பேர் அந்த பாழடைந்த பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறார்கள்! இதில் ஏறினால் ஆறு, ஆறரை மணிக்குள் மெரீனா போய் விடலாம் என்று தோன்றியது. காசு கொண்டு போயிருந்தால் நிச்சயம் ஏறி இருப்பேன். அது மேலும் ஒரு புது அனுபவமாய் இருந்திருக்கும். இலக்கில்லாமல் பயணம் போவது சுவாரஸ்யமாய் தான் இருக்க வேண்டும். சென்னை வந்ததிலிருந்து ஒரு தடவை கூட சூரிய உதயத்தை கடற்கரையில் பார்த்ததில்லை. பொழுது புலர்வதை பார்ப்பதில் ஒரு தனி இன்பம் இருக்கிறது. அதிலும் கடற்கரையிலோ, மலையடிவாரத்திலோ பார்ப்பது அருமை. 

பேருந்து நிலையத்தை சுற்றியும் குப்பை கூளமாய் இருக்கிறது! மழை பெய்து தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதில் பிளாஸ்டிக் பைகள் நிரம்பி காணச் சகிக்கவில்லை. திரும்பி வீடு நோக்கி நடந்தேன். "நான் குணாலம்மன் கோயிலாண்டே தான் நிற்கிறேன், சரி வாங்கோ" என்று மொபைலில் ஆபிசர் ஒருவர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். பட்டுப்புடவையுடன் வாசலில் நின்று கொண்டு ஆட்டோவுக்காக ஒருவர் காத்திருக்கிறார்.

அதிகாலையில் வாக்கிங் போவதில் ஆயிரம் நல்ல விஷயம் இருந்தாலும், என்னைப் போன்று மாதம் ஒரு பதிவிடும் வலைப்பதிவாளனுக்கு அது ஒரு பதிவுக்காகிறது! அதற்காவது தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்!

6 Responses
  1. அதிகாலை அனுபவம் புதுமை!


  2. vaanga thulasikka! romba naala aalaye kanom.


  3. Anonymous Says:

    இந்த பதிவு என்னை உன் கூடவே அழைத்து சென்றது போன்று இருக்கிறது!
    -
    வெங்கடேஷ்


  4. Thanks da :) You are the true encourager :)


  5. Pradeep,

    Really Superb. Digital Ilakiyavaathi nu sonna mattum romba vekkapadaringale. Athu nejam than nu meendum solren.

    Chocolate Vaazhthukal!


  6. Thamizh,

    Neenga sonna sari thaan...ilakkiya paritchayam ullavangalukku thaane ilakkiyavaathigalai adayaalam kaana mudiyum? Nandri...