தீபாவளி குழந்தைகளுக்குத் தான் என்றே தோன்றுகிறது. வயது ஆக ஆக நம்மோடு சேர்ந்து தீபாவளிக்கும் வயதாகிவிடுகிறது! பள்ளியில் படிக்கும்போது தீபாவளியை நினைத்தால் ஏற்படும் குதூகலம் இல்லை இப்போது! ஏன் அப்படி? அதே தீபாவளி, அதே புத்தாடை, அதே இனிப்புகள், அதே பட்டாசுகள், அதே புது சினிமாக்கள்! அதே சிறப்பு நிகழ்த்திசிகள்! ஆனால் அப்போதிருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை. ஏதோ ஒரு நாள் விடுமுறை என்கிற அளவிற்கு அது நீர்த்துப் போய் விட்டது! ஒரு வேளை இந்த அத்தனையும் அப்பா வாங்கிகொடுத்த போது இருந்த சந்தோஷம் நாமே சம்பாதித்து வாங்கும்போது குறைந்து விட்டதோ? தெரியவில்லை...

பள்ளியில் படிக்கும்போது தீபாவளியை பற்றிய கனவு, புது வருஷ காலெண்டரில் தொடங்கும்! காலேண்டர் கைக்கு கிடைத்ததும், முதலில் பார்ப்பது தீபாவளி எப்போது என்று தான்! கிட்டத் தட்ட ஒரு வருடத்திற்கு முன்னே...அது அருகே வர வர, நெஞ்சில் ஒரு வித குறு குறுப்பு  தோன்றும். புது துணிகளுக்காக கடை ஏற ஆரம்பித்ததும் அது மேலும் சூடு பிடிக்கும். புது துணி எடுத்ததும், வீட்டில் வருவோம் போவோரிடமெல்லாம் புதுத் துணியை காட்டுவது ஒரு சடங்காகும்! அது அப்படி ஒரு பரவசமான அனுபவம். என் நண்பன் ஒருவன் சொன்னான், விடிந்தால் தீபாவளி என்கிற பரவசம், நமக்கு விடிந்தால் கல்யாணம் என்பதிலும் இருப்பதில்லை! எத்தனை உண்மை!  பட்டாசுகள் என்னை அவ்வளவு பாதித்ததில்லை. சாஸ்திரத்துக்கு வாங்கி வெடித்துக் கொண்டிருந்தேன். இத்தனை பட்டாசு வேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடித்ததாய் ஞாபகம் இல்லை. என்னை பொறுத்தவரை, தீபாவளியை விட தீபாவளியை எதிர்பார்ப்பதே அருமையான த்ரில்! பள்ளியில் படிக்கும்போது கிளாசில் எழுதும்போது, தேதி போட்டு எழுதுவதுண்டு! தீபாவளி நெருங்க நெருங்க, அந்த தேதிகளும் எனக்குள் ஒரு குறுகுறுப்பை உண்டாக்கும். தீபாவளி எந்த நாள் என்பது வருஷத்தின் முதல் நாளே மனப்பாடம் ஆகி விடுவதால், இதே, அடுத்த மாதம், இந்த தேதியில் தீபாவளி என்று மனது அலைபாயும். தேதி ஒத்துப் போகவில்லைஎன்றால் கிழமை...எப்படியோ எல்லா தேதிகளும் தீபாவளியையே சென்றடையும்! எல்லா மதமும் கடவுளை சென்றடைவதைப் போல்...ஆனால் அதே தேதிகள் தீபாவளி முடிந்ததும் சோகத்தை அள்ளிப் பூசும். தீபாவளி முடிந்து முதல் நாள் பள்ளி சென்று எழுத ஆரம்பத்ததும், என் கை தன்னையுமறியாமல் தீபாவளிக்கு முந்தின தேதிகள் குறிப்பிட்ட பக்கங்களை நோக்கிச் செல்லும்! சே, இந்த நாட்களில் தீபாவளியை எதிர்நோக்கி நாம் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தோம் என்று ஏங்குவேன்! அந்த ஏக்கம் அடுத்த புது வருஷ காலெண்டரை பார்க்கும் வரை நீடிக்கும். பிறகு அதே எதிர்பார்ப்பு தொடங்கி விடும்...

இதோ மற்றொரு தீபாவளி, ஒரு சர வெடி முடிவுக்கு வருவதைப் போல் முடிந்து கொண்டிருக்கிறது! புது வருஷ காலண்டருக்காக காத்திருக்கத் தொடங்குகிறது ஒரு குழந்தை மனது!

தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
4 Responses
  1. Anonymous Says:

    நான் சென்ற பள்ளிக்கூடம் மீனாட்சி அம்மன் கோவில் பக்கத்தில் இருந்ததால் நான் பள்ளி சென்று வர தெற்கு மாசி வீதி, நகைக்கடை பஜார் என்று எல்லாத்தையும் கடந்து செல்ல வேண்டும்! தீபாவளியின் போது பஜார் முழுதும் திருவிழா கோலம் பூண்டுருக்கும்! அதை வேடிக்கை பார்த்து பள்ளி சென்று வருவதே 'தீபாவளி' தான்! தேர் முட்டியில் 20 ரூபாய்க்கு சட்டை வாங்கிறப்போ இருந்த சந்தோசம் இப்போ ஆலன் சோலி வாங்கினாலும் இல்லை தான்!

    -
    வெங்கடேஷ்



  2. சே நாம நினைக்கிறதை அப்படியே எழுதியிருக்கு பாரேன்னு மத்தவங்க கிட்ட காண்பிக்கக்கூடிய இன்னும் ஒரு பதிவு இது.

    அந்த கடைசி கம்பி மத்தாப்பு கொளுத்திவிட்டு வீட்டுக்குள் போகும் போது இருந்த சோகம் ம்ம்... அது ஒரு கனாக் காலம்.