இப்போது பார்த்தால் படம் முழுதும் இவரின் கிளிஷேக்கள் நிரம்பி வழிந்து கண்ணையும் கருத்தையும் உறுத்தினாலும் தமிழ் சினிமாவை சிகரத்திரு ஏற்றிச் சென்ற பெருமை இவருக்கு நிச்சயம் உண்டு! இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்! இவர் பால்கே விருது வாங்கிய நாளில் இருந்து ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்து இன்று தான் அது கை கூடி இருக்கிறது! வாழ்த்துக்கள் சார்! எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடித்த இயக்குனர். சென்னையில் ஏதாவது ஒரு டிராபிக் சிக்னலில் என்னை பார்த்து "உன்னைத் தாண்ட தேடிட்டு இருந்தேன், என் படத்துல நடிக்கிறியா" என்று கூப்பிட்டு சான்ஸ் கொடுப்பார்! எப்படியும் சென்னை போய் விட வேண்டும் என்று நான் நினைத்த காலங்கள் உண்டு! [இன்று வரை ஒரு தடவை கூட இவரை எந்த சிக்னலிலும் பார்க்கவில்லை!]

என்னை பொறுத்தவரை இவர் வருவதற்கு முன் கனமான கதைகள் இருந்ததே தவிர சுவாரஸ்யமான திரைக்கதைகள் இருந்ததில்லை. பாவ மன்னிப்பு, பணமா பாசமா ஹிட் படங்கள் என்றாலும் அதில் ஒரு காட்சி கூட அட! கதையை நகர்த்த இப்படிக் கூட காட்சியை வைக்கலாமா என்று தோன்றியதில்லை!  அது இவரின் படங்களில் தான் எனக்குத் தோன்றியது! பாலச்சந்தரின் எல்லா படங்களின் திரைக்கதையும் ஒரு சாமர்த்தியமான சதுரங்க ஆட்டத்தை ஒத்து இருந்தது என்று சொல்லலாம். மிகச் சரியான காய் நகர்த்தலால் நகரும் கதைகள். தமிழ் படத்தில் பாடல்களிலும் கதை நகர்த்தியவர் இவர் தான் என்று நினைக்கிறேன். எந்த ஒரு காட்சியையும் வீணாக்க மாட்டார்! இவரின் படங்கள் சினிமாக்கள் அல்ல வெறும் நாடகங்கள் என்ற விமர்சனம் இருந்தாலும் அவருக்கு முன் வந்த நாடகத் தனமான சினிமாக்களை காட்டிலும் இவரின் படங்கள் சிறப்பானவை தான் என்று நினைக்கிறேன். 

கேபிள் டீவி வரத் தொடங்கிய காலங்களில் ஒரு நாள் இவரின் படம் ஒன்றை பாதியில் இருந்து பார்த்தேன். கவிஞர் வாலி நடித்திருந்தார். அப்போது வாலியையே எனக்கு அவ்வளவாய் தெரியாது என்று நினைக்கிறேன். ஆனால் இது பாலச்சந்தர் படம் என்று மட்டும் என்னால் உணர முடிந்தது! அந்தப் படம் "பொய்க்கால் குதிரை" என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். நான் ஏழாவது படிக்கும்போது ஒரு வீடு இரு வாசல் வந்தது. அந்தப் படத்தில் இரண்டு வேறு வேறு கதைகள் என்று பத்திரிகையில் செய்தி படித்து பள்ளியில் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருக்கிறேன். எப்போது? ஏழாவது படிக்கும்போது! எத்தனை அற்புதமான கருக்கள்!

ஒரு சாதாரண சர்வர் நடிகர் ஆனால்...
ஒற்றுமையான ஒரு குடும்பத்தில் ஒரு நடிகை நுழைந்தால்...
இறந்து போய் விட்டாள் என்று நினைத்த காதலி, தனக்கே மேலதிகாரியாக வந்தால்...
ஒரு தாய்க்கு தன் மகன் வயதுடையவன் மேல் காதல்; ஒரு தந்தைக்கு தன் மகளின் வயதுடையவள் மேல் காதல்!
வறுமையின் காரணமாக ஒரு பிராமண பெண் விபச்சாரி ஆனால்
தான் காதலித்த பெண்ணே தனக்கு சித்தியாக வந்தால்
ஒரு ரவுடியும் ஒரு விபச்சாரியும் திருந்தி வாழ நினைத்தால்
தாய் மொழி வேறு, கலாச்சாரம் வேறு..இருவரும் காதலித்தால்
மனைவி சரியில்லாத கணவனும், கணவன் சரியில்லாத மனைவியும் சந்தித்துக் கொண்டால் [எத்தனை சிம்பிளான ஒன் லைன்!]
சங்கீத வித்வான் சறுக்கி விழுந்தால்

சொல்லிக் கொண்டே போகலாம்! இவரின் படங்களில் எனக்கு இன்றும் பிடித்த படங்கள்:

பாமா விஜயம்
எதிர் நீச்சல்
அபூர்வ ராகங்கள்
மூன்று முடிச்சு
ஏக் துஜே கே லியே
தப்பு தாளங்கள்
வறுமையின் நிறம் சிவப்பு
தில்லு முள்ளு
சிந்து பைரவி
உன்னால் முடியும் தம்பி
புது புது அர்த்தங்கள்

எனக்குப் பிடித்த சில காட்சிகள்..





















0 Responses