இன்று ஒரு வேலை காரணமாக அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது. வேலை மதியமே முடிந்து விட்டது. நங்கநல்லூரில் இருக்கும் வெற்றி வேல் தியேட்டரில் எந்திரன் திரையிடப்பட்டிருப்பதை பார்த்து சும்மா பார்த்து வரலாம் என்று கிளம்பினேன். நான் போனது மதியம் 2;40 க்கு. மதிய காட்சிக்கு டிக்கட்டுகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கீழ் டிக்கட் இருநூறு ரூபாய், பால்கனி இருநூற்றி ஐம்பது; பாக்ஸ் முன்னூறு! திரும்பி பார்க்காமல் (வீட்டுக்கு!) நடையை கட்டினேன்!

அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தேன். இன்னும் வேலைகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. முதல் தளம் மட்டுமே இயங்குகிறது. ஜனவரியிலிருந்து மெம்பர்ஷிப் ஆரம்பமாகும் என்று சொன்னார்கள். குழந்தைகள் பிரிவில் நுழைந்ததும், இது குழந்தைகளுக்காக மட்டும்! குழந்தைகள் அல்லாது வரும் பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள்! அடக் கொடுமையே என்று பெரியவர்கள் பக்கம் போனேன்! பீரியாடிகல்ஸ் பிரிவில் for women என்று தனி இடம் ஒதுக்கி இருந்தார்கள். அங்கு தான் எல்லீ, ரிட்ஸ், ஸ்டார் டஸ்ட் எல்லாம் இருந்தது! சரி என்று ஒன்றை எடுத்து பொம்மை படம் பார்க்க ஆரம்பித்தேன். அதற்குள் ஒருவர் வந்து "சார், போர்ட் பாக்கலையா இது பெண்களுக்கு மட்டுமான பிரிவு, உங்களுக்கு அனுமதி இல்லை" என்றார்! நான் சாவகாசமாய் அந்த புத்தகத்தின் அட்டையை அவருக்கு காட்டி, "இந்த புக் ல பொண்ணுங்க மட்டும் தான் படிக்கணும்னு எதுவும் போடலையே சார்!" என்றேன். அதை நீங்க ரிசப்ஷன்ல தான் கேக்கணும் என்று வழிந்தார். கண்டிப்பா கேக்குறேன் என்று சொல்லிவிட்டு எங்கே மேலும் ஏதாவது புக்கை எடுத்து புரட்டினால் அங்கே இன்னொருவர் வந்து "சார் வெள்ளை சட்டை போட்டவங்க எல்லாம் இந்த செக்ஷனில் வர கூடாது!" என்று சொல்லி விடுவாரோ என்று அஞ்சி நடையை கட்டினேன். கீழே வந்ததும் ரிசப்ஷன் சென்று நடந்ததை கூறி, ஒரு புகார் அட்டை எழுதிக் கொடுத்தேன். நூலகத்தைச் சேர்ந்த ஒருவர் விஷயத்தை அறிந்து "அப்படி இல்லை சார், எல்லா செக்ஷன்லையும் எல்லாரும் போகலாம், அது என்னன்னா எல்லாரும் கிட்ஸ் செக்ஷன்ல போனா கூட்டம் அதிகம் ஆயிடுது, அதான் அப்படி சொன்னோம், உள்ளே விட மாட்டோம் என்று அர்த்தமில்லை, தாரளமாக நீங்கள் பார்க்கலாம்" என்றார். மேலே உள்ளவர்கள் குழந்தைகள் இல்லாமல் வருபவர்களை உள்ளேயே அனுப்ப மறுக்கிறார்கள், கொஞ்சம் அவர்களிடம் தெளிவாகச் சொல்லிப் புரிய வையுங்கள் என்று கூறிக் கிளம்பினேன்! நீங்கள் இன்னும் அம்புலிமாமா ரசிகர் என்றால், ஒரு குழந்தையை வாடகைக்காவது எடுத்துச் செல்வது உத்தமம்!
5 Responses
  1. கடைசி ரெண்டு வரி பஞ்ச் :).


  2. KK Says:

    தங்கள் வலை பதிவை படித்து பார்த்தேன். என்ன ஆச்சர்யம் என்றால், அமெரிக்காவில் ஒரு வருடம் இருந்த நீங்கள் அதுவும் தலைவரின் தீவிர ரசிகரான நீங்கள் எந்திரன் பார்க்க இருநூற்றி ஐம்பது($5 ) கொடுப்பது பெரிய விஷயமா!!. இங்கு ஒரு நண்பர் (மணி) $30 ஆயிரத்தி ஐநூறு கொடுத்து முதல் நாளே எந்திரன் பார்த்தார்.

    இப்படிக்கு உங்கள் உண்மை ரசிகன்
    கிருஷ்ணா .............


  3. கிருஷ்ணா,

    பணம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. நான் சென்றது அப்படி ஒன்றும் பிரமாதமான தியேட்டர் இல்லை. அதற்கு அவ்வளவு விலை கொள்ளை! அரசாங்கம் அதிக விலை வைத்து விற்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறது. ஏன் ரஜினியே அதை சொல்லி இருக்கிறார். மேலும் நம் நாட்டில் பல விஷயங்களில் நமக்கு விருப்பமில்லாவிட்டாலும் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. இப்படிப் பட்ட விஷயங்களிலாவது முடிவு எடுக்கும் விஷயம் நம் பக்கம் இருப்பதால் இத்தகைய செயல்களை ஆதரிக்க வேண்டாம் என்று வந்து விட்டேன். நான் ஒருவன் போகாததால் எல்லோரும் என்னைப் போல திரும்ப போவதில்லை, நான் ஒருவன் திரும்பியதில் எனக்கு மகிழ்ச்சியே! மேலும் நான் ஏற்கனவே விமர்சனம் எழுதியதை போல தான் படமும் இருக்கப் போகிறது. இத்தனை செலவழித்து சங்கர் படம் எப்பவுமே இப்படி தான் என்று குறை சொல்வதில் என்ன பயன்?

    ஒரு நல்ல ரசிகனாய் இருப்பதாய் விட முடிந்த வரையில் நேர்மையாய் இருக்க முயல்கிறேன்.


  4. KK Says:

    தங்கள் நேர்மைக்கு என் நல்வாழ்த்துகள். ஹாப்பி காந்தி ஜெயந்தி.ஜெய் ஹிந்த் !!!


  5. Dear pradeep
    I am also a big fan of rajini.But as you said """ஒரு நல்ல ரசிகனாய் இருப்பதாய் விட முடிந்த வரையில் நேர்மையாய் இருக்க முயல்கிறேன்."""" i too follow you.


    """"நீங்கள் இன்னும் அம்புலிமாமா ரசிகர் என்றால், ஒரு குழந்தையை வாடகைக்காவது எடுத்துச் செல்வது உத்தமம்!"""""

    vaathiyar style punch. good experience article in a good writeup!