கடைசியாக நீங்கள் உங்கள் பேனாவில் எப்போது புது ரீஃபில் போட்டீர்கள்? சில கேள்விகள் ஏன் எதற்கு என்று தெரியாமல் மனதில் வந்து விடுகின்றன! அப்படித் தான் இதுவும் வந்தது. அதைப் பற்றி நினைக்க நினைக்க சுவாரஸ்யமாய் இருந்தது (எனக்கு!). நான் 4 வது படிக்கும்போது முதன் முதலாய் பேனா உபயோகித்தேன். வெறும் 50 பைசா தான்! ஆரம்பத்தில் அடக்கமாய் இருக்கும்; போகப் போக தமிழ் சினிமாவில் அளவுக்கு மீறி பேசும் குழந்தைகளைப் போல் அளவுக்கு மீறி மை கொட்டும்! மணி மணியாய் கையெழுத்து இருந்தால் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம். மை கொஞ்சம் மூக்கில் ஒட்டிக் கொள்ளும்! வீட்டுப் பாடம் எழுதி முடித்து விட்டுப் பார்த்தால் கையில், காதில், முகத்தில் எல்லாம் மையின் கரை படிந்திருக்கும். அந்த ஐம்பது பைசா பேனாவை ஒரு நாள் தொலைத்து விட்டு கதறி அழுதது இன்றும் நினைவிருக்கிறது! அந்த ஐம்பது பைசா பேனாவுக்கும் நான் ரீஃபில் போடுவேன். ரீஃபில் நாலணா என்று ஞாபகம்! அன்று ஜாமேட்றி பாக்ஸ் இருந்ததாலோ என்னமோ பேனாக்கள் அதிகம் தொலையவில்லை. ஓரிரு முறை ரீஃபில் மாற்றும் வரை தாக்கு பிடித்தது. இன்று ஒரு பேனாவை பாதுகாப்பது பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது! நேற்று என் பேனாவை இங்கே விட்டு விட்டேன், பார்த்தீர்களா என்று கேட்டால் இன்று சிரிப்பார்கள்! பெரியவர்கள் தான் பேனாவை இப்படித் தொலைக்கிறோமா? குழந்தைகள் பத்திரமாய் வைத்துக் கொள்கிறார்களா? ரீஃபில் தீர்ந்தால் ரீஃபில் போடுகிறார்களா? கடைகளில் ரீஃபில் மட்டும் கிடைக்கிறதா? இன்றும் குழந்தைகள் ரீஃபில் தீர்ந்து போகும்போது கையை உதறியும், வாயில் வைத்து ஊதியும் எழுதுகிறார்களா?

நான் பள்ளியில் படித்த போது என் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அவனுடைய ரெனால்ட்ஸ் பேனாவை எப்போது மூடினாலும் அதன் மூடியின் கீழ் நுனி அந்தப் பேனாவின் உடம்பு பகுதியில் எழுதப்பட்டிருக்கும் ரெனால்ட்ஸ் என்ற எழுத்தை நோக்கியே இருக்கும். யாராவது அவன் பேனாவை கடன் வாங்கி திருப்பித் தந்தாலும் மூடியை அதன் திசையில் சரியாக திருப்பிக் கொள்வான். அது அவனுடைய அனிச்சையான ஒரு செயல்! அவனிடம் இருந்து அப்போது எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது! அவன் பன்னிரண்டாவது வகுப்பில் அத்தனை கணக்குகளையும் ஒரு நோட்டில் அச்சடித்த மாதிரி எழுதி வைத்திருந்தான். ஒரு அடித்தல் திருத்தல் இருக்காது! அந்த நோட்டுக்கு ஏகப்பட்ட கிராக்கி! நானும் அந்த நோட்டை கடன் வாங்கி, அதனுடைய நேர்த்தியில் மயங்கி கணக்கை கோட்டை விட்டிருக்கிறேன்! "உங்க நாயனத்துல தான் அப்படி சத்தம் வருதா?" என்று தில்லானா மோகனாம்பாவில் மனோரமா சிவாஜியிடம் கேட்பதைப் போல் அவனிடமும் அவன் பேனாவைப் பற்றிக் கேட்டு, அதை வாங்கி ஆராய்வோம்! என்ன தான் உடம்பில் எண்ணை தடவி புரண்டாலும் ஒட்ற மண்ணு தானே ஒட்டும்?

பத்தாவது படிக்கும் போது மை பேனாவின் ஆதிக்கம்! மை பேனாவில் குண்டு குண்டு, பட்டை படையாய் எழுதினால் நிச்சயம் 400 க்கு மேல் வாங்கி விடலாம் என்று ஒரு கருத்து இருந்தது! அதற்காக கூர்மையான நிப்பை பிளேடால் கீறி பட்டை ஆக்குவோம்! ஹீரோ பேனாவை சீண்டவே மாட்டோம்! அந்த மாதிரி பட்டையாய் எழுதும் பேனா ஒன்று என் வீட்டுக்கு அருகில் உள்ள பலசரக்கு கடையில் கிடைத்தது. அண்ணா நகரில் உள்ளவன் கூட என் வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் தான் அந்த பேனாவை வாங்கினான். விலை மூன்று ரூபாய்! இத்தனை உழைத்தும் (!) மார்க் வந்ததும் தான் புரிந்தது எல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல் என்று! "நம்ம குண்டு எழுத்தை பார்த்து பேப்பர் திருத்துறவருக்கு சண்டை போட்டு வந்த தன்னோட குண்டு பொண்டாட்டி ஞாபகம் வந்துருக்குமோ?" என்று சிலர் சந்தேகப்பட்டார்கள்!

சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆன பிறகும் ஏதாவது டூர் போகும்போதும் பேனா கொண்டு போவது எனக்கு பழக்கம் ஆகி விட்டது. அது என்னவோ தெரியவில்லை, பேனா எப்போது வேண்டுமென்றாலும் பயன் படும் என்று ஒரு எண்ணம். எங்காவது காத்திருக்க உட்கார்ந்தால் ஒரு பேப்பர் கிடைத்தால் ஏதாவது கிறுக்க ஆரம்பித்து விடுவேன். நான் எதற்கெடுத்தாலும் கிறுக்குவதை பார்த்த என் நண்பன் என்னிடம் "நீ கொலை எதுவும் செய்யாதே உன்னை எளிதாய் கண்டுபிடித்து விடுவார்கள்" என்று எச்சரித்திருக்கிறான். கல்லூரியில் படிக்கும் போது ஒரு முறை வாத்தியார் பேனா கேட்டதற்கு மூடியை வைத்துக் கொண்டு பேனாவை மட்டும் கொடுத்தேன். ரொம்ப வெவரமா இருக்கியே என்றார். அது பாராட்டா இல்லை திட்டா என்று தெரியவில்லை. அதே போல் எல்லா பெண் நண்பர்களுக்கும் அசைன்மென் நோட்டில் வித விதமாய் பேர் எழுதித் தந்து பல மாணவர்களின் (கவனிக்க: பெண் நண்பர்கள், ஆண் மாணவர்கள்!) வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணின் ஸ்டாம்ப் புக் கிடைத்து விட்டால் போதும், "ஒரு சொல் கேட்டால் ஓராயிரம் சொற்பொழிவுகள் நடத்தும் என் பேனா இன்று ஏனோ மௌனப் போராட்டமே நடத்துகிறது!" என்று பிரிவின் சோகத்தை கசக்கிப் பிழிந்திருக்கிறேன்! சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆன பிறகு மேனஜர் பேசுவதை நோட்ஸ் எடுப்பதற்காக வேக வேகமாய் எழுத ஆரம்பித்து இன்று என் கையெழுத்து கோழி என்ன சேவல், டைனோசர் கிறுக்கல்களை விட மோசமாய் இருக்கிறது!

அவளின் நினைவுகள் தொலைவதில்லை
அடிக்கடி தொலையும் பேனாக்களைப் போல்!
8 Responses
  1. பதிவு நன்றாக இருக்கிறது பிரதீப்.

    இலங்கையில் மைப்பேனாக்களின் ஆதிக்கம் வந்த போது யுத் என்றொரு மைப்பேனாவின் ஆதிக்கம் அங்கு கொடிகட்டிப் பறந்தது.

    நீங்கள் சொன்னது போல 'என்னதான் எண்ணையைப் பூசி உருண்டாலும் ஒட்டுற மண் தானே ஒட்டும்'இல்லையா?

    இப்போது மைப்பேனாக்களின் பயன்பாடே இல்லாது போய் விட்டது வருத்தம் தான்.


  2. மணிமேகலா

    யுத்த என்றாலே ஒருநாள் வயதாகத் தானே செய்யும்! அது தான் ஓய்ந்து விட்டது போலும்! தங்கள் வருகைக்கு நன்றி

    பிரதீப்


  3. Anonymous Says:

    கலக்கல்; இந்திய வந்த பிறகு இன்னு ரொம்ப எழுது!!!

    -
    வெங்கடேஷ்



  4. இலங்கை ரூபவாஹினியில் (டிவி) வந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், ரெனால்ட்ஸ் என்ற ஒரு பேனா இருப்பதை தெரிந்து கொண்டேன். அந்த மாதிரி, பிசிறு அடிக்காத ஒரு பால் பாயிண்ட் பேனா கிடைக்காதா என்ற ஏக்கம் அந்நாளில்

    ----

    ரீபில் தீரும் தறுவாயில், அதை எடுத்து, குக்கர் மேல் வைத்து, மையை உருக வைத்து, அதன் ஆயுளை நீட்டியது நியாபகத்திற்கு வருகிறது.

    -----
    மாவு போல எழுதவேண்டும் என்று பேனா நிப்பை, கண்ணாடி மேல் தேய்த்து தேய்த்து, அதை கரெக்ட் செய்தது ஒரு காலம்.

    ------
    எங்கடா அந்த நிப்பு வாங்குன எனக் கேட்டு, அதே கடைக்குப் போய் நான் வாங்கி வந்த நிப்பு, அவனுடையது போல எழுதாமல், ஏமாத்திட்டியேடா என்று சண்டை போட்டது நியாபகத்திற்கு வருகிறது.

    -------
    பரிட்சைக்கு முந்தைய நாளில் (படிக்குறோமோ இல்லையோ), பேனாக்களுக்கு வாட்டர் வாஷ் செய்து ரெடி செய்தது.

    எல்லாம் ஒரு காலம். நினைவு படுத்தியதற்கு ஒரு பெரிய நன்றி.


  5. wow pinnokki, you have lots of memory about the pen! i think if u would have write this post that would have been more interesting :)


  6. Sathish Says:

    பிரதீப்,

    சின்ன சின்ன பொருள்களும் ஞாபக படுத்துற விஷயங்கள் இருக்கே...அடடா அது பொக்கிஷங்கள்!!! நீங்க ரெனால்ட்ஸ் பேனா வை பற்றி பேசும் போது, எனக்கு ஒன்னு ஞாபகம் வருது...பள்ளி பருவத்துலே யார் கிட்ட ரெனால்ட்ஸ் பென் இருந்தாலும் அத என்னோட மோதிர விரல், ஆள் காட்டி விரல் நடுவுல வச்சி, நடுவிரலை மூடி மேல வைத்து, இன்னொரு கையாள ஒரு தட்டு தட்டினா, பேனாவ சொருகுற அந்த தண்டு மட்டும் உடையும்...அதுமாதிரி 100 க்கும் மேற்பட்ட பேனாவை உடைத்து பல பேரின் வயிரேரிச்சலை கொட்டிக் கொண்டது இன்றும் நினைவில் இருக்கு...இந்தியா சென்றதும் இன்னமும் நெறைய எழுதுங்கள்...


  7. Priya Says:

    உங்கள் அழகான நினைவுகளை படிக்கும்போதே பின்னோக்கி சென்றது என் நினைவுகளும்!