அமெரிக்காவை பொறுத்த வரை நாளை தான் மார்ச் 19. இன்று பதிவு போட்ட பிறகு தான் தெரிந்தது இந்தியாவில் இன்று 19 என்று![நான் எவ்வளவு வெகுளி பாருங்க!] புவியியல் படி பாத்தா [அதாவது இந்திய நேரப்படி பாத்தா] இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்! இது வரை நீங்கள் என் வலைப்பதிவின் லோகோவை [ஒ, லோகோ எல்லாம் வேற இருக்கா?] கவனிக்கவில்லை என்றால், நான் வலைப்பதிவு ஆரம்பித்து இத்துடன் 6 வருடங்கள் ஆகி விட்டன. என் வாழ்வில் நீண்ட காலம் செய்த உருப்படியான காரியம் [என்று நான் நினைப்பது] இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எழுதி வருவது! நேற்று ஆரம்பித்தவர்கள் எல்லாம் இருநூறு முன்னூறு என்று பதிவுகளைப் போட்டு தாக்கிக் கொண்டிருக்கும் போது நான் இப்போது தான் இருநூறை தொட இருக்கிறேன். ஆமை வேகம் தான்! இருந்தாலும் வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி! இத்தனை காலமும் தொடர்ந்து என்னை வாசித்து எனக்கு ஊக்கமளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கு நன்றி!

பின் குத்து: ஒரு பேனாவை கையில் வைத்துக் கொண்டு, மேலே விட்டத்தை நோக்கிக் யோசித்துக் கொண்டிருப்பது போல் என்னுடைய போட்டோ ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன், ஒன்றும் கிடைக்கவில்லை..தப்பித்தீர்கள்!

முழு நிலவான உன்னைப் பற்றி
ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
என் மேஜை எங்கும் வார்த்தைகள்
நட்சத்திரங்களாய் கொட்டிக் கிடக்கின்றன!

நீ எனக்காக வடிக்கும்
கண்ணீரில் எல்லாம்
எனக்கான உன்
காதல் வழிகிறது

நீ கண்ணை மூடிக் கொண்டாய்
என் உலகம இருண்டு விட்டது!

எந்த ஜென்மத்தில் நான்
என்ன புண்ணியம் செய்தேனோ
நீ என் தெருவில் வசிக்கிறாய்

நீ வெட்கப்படுவதற்கும்
மழை ஆரம்பிப்பதற்கும்
சரியாய் இருக்கிறது!

உனக்கான என் காதல்
உன்னை சாதாரணப்
பெண்ணிலிருந்து
தேவதை ஆக்குகிறது!

நீ தூரத்தில் எங்கோ பேசுவது கேட்கிறது...
தேனீக்கள் என் காதுகளை
வட்டமடிக்கின்றன!

நீ என்னை ஓரக் கண்ணால் பார்
அடிக்கடி என்னை கடந்து செல்
உன் தோழிகளுடன் கூடிச் சிரி
என் கனவுகளில் வந்து போய்க் கொண்டிரு
நான் காதலில் திளைக்கிறேன்
வேறெதுவும் வேண்டாம் எனக்கு!
இக்கணம் இப்படியே இருக்கட்டும்


நேற்று இரவு தற்செயலாக இந்த வீடியோ பார்த்தேன், ரசித்தேன்! [ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்!] "உங்களின் தீர்ப்பு" என்ற இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களை கூட்டி வந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி அவர்களின் வேலை, வாழ்க்கை, அவர்கள் பத்திரிக்கையில் அளித்த பேட்டிகள் என்று அவர்களைப் பற்றி அலசி, அவர் எத்தகையவர் என்று தீர்ப்பு அளிக்கிறார்கள்! இதில் அமீரி கானின் படங்களைப் பற்றியும், அவரின் பல்வேறு சர்ச்சைகள் பற்றியும் பிரித்து மேய்ந்து விட்டனர். நிகழ்ச்சியை தொகுத்து அளித்தவரும் மிக சிறப்பாய் நிகழச்சியை கையாண்டார். எல்லாவற்றிற்கும் அமீர் சாமர்த்தியமாய், நேர்மையாய் பதில் அளித்தார். சமீப காலமாக அமீர் கானின் மேல் எனக்கு மரியாதை கூடி விட்டது என்றே சொல்ல வேண்டும்!

கல்லூரிக் காலங்களில் நான் தீவிர ஷாருக் கான் விசிறி! தில்வாலே படத்தை அந்தப் படத்தின் எடிட்டர் பார்த்ததை விட நான் அதிகம் பார்த்திருப்பேன். அந்தப் படத்தின் மேக்கிங்கை டீ டீ யில் பார்த்து விட்டு பாடல் காசெட்டுக்காக காசெட் கடைக்கராரை டார்ச்சர் செய்திருக்கிறேன். கசெட் வந்ததும் உங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடறேன் என்று அவர் என்னிடம் கெஞ்சி இருக்கிறார். அப்படி ஒரு கிரேஸ் அந்தப் பாடல்களின் மீது! அது ஷாருக்கின் காலம் என்றே சொல்ல வேண்டும். எல்லா படத்திலும் நிச்சயம் ஆன ஒரு பெண்ணை மயக்கி, காதலித்து கைப் பற்றுவார்! எல்லா படங்களும் ஓடியது! இதில் என்ன புதுசா இருக்கு என்று நண்பர்கள் என்னை கடிந்து கொண்டும் நான் கண்டு கொண்டதே இல்லை. அமீர் அளவு அழகில்லை என்றாலும் அவருடைய ஹேர் ஸ்டைல் அவருக்கு மிகப் பெரிய ப்ளஸ், ரஜினியின் ஹேர் ஸ்டைலை பார்த்து கிறங்கிப் போயிருந்த எனக்கு அது எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு படம் விடாமல் பார்த்தேன். அப்போது அமீர் கான் இஷ்க், அகேலே ஹம் அகேலே தும், மன் போன்ற கொத்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்! ரங்கீலா கூட ஊர்மிளாவுக்காகவே பார்த்திருப்பேன் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

மொஹப்பத்தேனிலிருந்து ஷாருக் ஓவராய் நடிக்க ஆரம்பித்து விட்டாரோ என்று தோன்றியது. அதன் பிறகு வந்த படங்கள் எல்லாம் ஓவர் ஆக்டிங் தான்! அப்போது தான் சர்ஃபரோஷ், லகான், தில் சாத்தா ஹைன் பார்த்தேன். லகானை விட எனக்கு தில் சாத்தா ஹைன் மிகவும் பிடித்தது. அந்தப் படத்தை தமிழில் யாராவது எடுக்கலாம்! அதன் பிறகு அமீரை கவனிக்க ஆரம்பித்தேன். அவரின் மிகையில்லாத நடிப்பு, தொழில் பக்தி, எதையும் நேர்த்தியை செய்யும் திறன், நேர்மை எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன! லகானின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போனேன். ஒரு மூன்று மணி நேரப் படத்திற்கு இத்தனை உழைப்பா என்று! இத்தனை பெரிய ஸ்டார் வேல்யு வைத்துக் கொண்டு வருஷத்துக்கு நாலு படம் பண்ணோம், சம்பாதிச்சோம் என்றில்லாமல் ஒவ்வொரு படத்தையும் ஒரு தவமாய் மேற்கொள்கிறார். அதை அவருடைய படங்களின் மேக்கிங்கை பார்த்தால் நன்றாய் உணரலாம். ஒரு ஸ்க்ரிப்டையும் டைரக்டரையும் நம்பி விட்டால் அவருக்காக உயிரை கொடுத்து உழைக்கிறார். ஆனால் ஒரு டைரக்டரை தேர்ந்தெடுக்க ஒரு வருடம் கூட எடுத்துக் கொள்வேன் என்கிறார். வீடியோவை பார்க்கவும்! தன் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ அதை தைரியமாய் செய்கிறார். இந்த இடத்தில் அஜீத் நினைவுக்கு வருகிறார். அமீரின் நேர்மை அப்படியே அஜீத்திடமும் இருக்கிறது. தேவையில்லாமல் குழைவது, கூழை கும்பிடு போடுவது, போலியான பகட்டு என்று வழக்கமான சினிமாக்கரர்களிடம் இருக்கும் எதுவுமில்லை இவரிடம். இவரும் அமீரை போல் தேவை இல்லாத கூட்டங்கள், விழாக்களில் கலந்து கொள்வதில்லை! ஒரே வித்தியாசம் அமீரைப் போல அஜீத்திற்கு படத்தை தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை! அதை மட்டும் அமீரிடம் அஜீத் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது!! கடந்த 15 ஆண்டுகளில் அமீர் நடித்த 14 படங்கள் வெற்றிப் படங்களே!

அமீர் தன் வாழ்கை இனி சினிமா தான் என்று முடிவு எடுத்ததும் தான் படித்துக் கொண்டிருந்த டிகிரி படிப்பை அப்படியே தூக்கிப் போட்டு விட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்! அவரின் குடும்பத்தார் டிகிரியாவது முடி, சினிமாவை நம்பி உன் வாழ்கையை அழித்துக் கொள்ளாதே என்ற போது, எனக்கு சினிமாவை தான் கற்க வேண்டும்; இந்த டிகிரி படிப்பு எனக்கு அவசியமில்லாத ஒன்று என்று கூறித் தான் தன் சினிமா வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டார். எத்தனை நம்பிக்கை பாருங்கள்! அவருடைய படங்களை மட்டும் பார்த்திருந்தால் நான் இவ்வளவு பேசியிருக்க மாட்டேன். அவர் ஒவ்வொரு படத்திற்கும் என்ன செய்கிறார் என்பதை அந்தப் படத்தின் மேக்கிங்கில் பார்த்ததால் இப்படிப் பேசுகிறேன். ஒரு சின்ன எடுத்துக் காட்டு, லகானில் புவன் கேரக்டருக்கு மீசை வேண்டாமென்று டைரக்டர் சொல்கிறார். உடனே அமீர், அது எப்படி? ஊரே பஞ்சத்தில் அடிபட்டுக் கிடக்கிறது, குடிக்கத் தண்ணீர் கூட இல்லை இவன் மட்டும் எப்படி தினமும் சவரம் செய்து கொள்ள முடியும் என்று கேள்வியை எழுப்புகிறார்!!! அதற்காக வித விதமான மீசைகளை வைத்துப் பார்த்து கடைசியில் எதிலும் திருப்தி ஏற்படாமல் மீசை இல்லாமலேயே நடித்தார். அது இன்னும் அவரை உறுத்திக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்! அதே போல் மங்கள் பண்டேவிற்காக நீளமான முடியும், அடர்ந்த மீசையும் வளர்த்தார். அதற்கே ஒரு வருடம் ஆனது! கஜினிக்காக சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டார். 44 வயதில் 22 வயதுக்காரர் போல் 3 இடியட்சில் கலக்கினார்! இதற்காகவே இவருடைய எல்லா படங்களின் மேக்கிங்கையும் நான் பார்க்க ஆரம்பித்து விட்டேன். கமல்ஹாசன், "நான் வேலையே செய்வதில்லை, சினிமா எனக்கு அளிக்கப்பட்ட ஆயுட்கால விடுமுறை!" என்பது போல் தான் அமீரும்! இருவரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும்! தங்கள் துறையில் இத்தனை வெறியோடு உழைப்பவர்களைத் தான் நாம் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டுமென்று நினைக்கிறேன். அமீர் ஒரு பூரண கலைஞன்!



















நீ இருக்கும்போதை விட
இல்லாத போது அதிகமிருக்கிறது
உன் இருப்பு!



















சும்மா இருப்பதே சுகமென்றாலும்
ஏதாவது ஒன்றாய் எப்போதும்
இருக்க வேண்டியிருக்கிறது!



















ஒரு காந்தி தாத்தாவும்
இரு பாரதியார்களும்
ஒரு ஆண்டாளுக்காக அடித்துக் கொள்கிறார்கள்
மாறுவேடப் போட்டி!

இந்தக் கவிதைக்கு இரு முடிவுகளை கொடுத்திருக்கிறேன். இதில் கவிதைக்கான சரியான தருணம் எது என்று எனக்குத் தெரியவில்லை, உங்களுக்குத் தெரிகிறதா பாருங்கள்!




















குழந்தையிடமிருந்து பிடுங்கிய பொம்மையை
என் முதுகுக்குப் பின்னால் மறைத்து கொண்டு
"காக்கா தூக்கிட்டு போச்சு" என்றேன்!

குழந்தை ஒன்றும் சொல்லாமல் மேலே பார்த்தது!
சட்டென்று பொம்மையை அதன் முன் நீட்டினேன்.

ஆவலோடு பொம்மையை வாங்கி கொண்டது

1. காக்கா எங்கே என்று அதுவும் கேட்கவில்லை,
நானும் சொல்லவில்லை!

2. அதை வாங்கித் தூக்கிப் போட்டு விட்டு,
"காக்கா எங்கே?" என்றது குழந்தை!

பள்ளியிலோ கல்லூரியிலோ வாத்தியார்களுக்குத் தெரிந்திருக்க, ஒன்று நன்றாய் படிக்க வேண்டும், இல்லை தருதலையாய் இருக்க வேண்டும்! நான் பள்ளியில் படிக்கும் போது நன்றாய் படிக்கவும் இல்லை; தருதலையாய் திரியவும் இல்லை. பத்தோடு பதினொன்றாக போய் வந்து கொண்டிருந்தேன். ஆனால் கல்லூரிக்குப் போனதும் கொஞ்சம் மாறி விட்டேன். நன்றாய் படிக்க ஆரம்பித்திருப்பேன் என்று நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதற்காக உள்ளங்கையில் ஹன்சை அரைத்து வாயின் ஓரத்தில் அதை போட்டுக் கொள்ளும் அளவுக்கும் போகவில்லை. அப்படிப் போவதற்கான எல்லா தகுதியும் எனக்கு இருந்தது. என்ன சேர்க்கை சரியில்லை [அட ராமா...] இந்தப் பதிவு கீழுள்ள வரிகளைப் படித்ததனால் வந்த விளைவு:

திருச்சி ரேடியோ, ப்ளாசா தியேட்டருக்கு எதிரே இயங்கி வந்த காலத்தில் நான் ஒரே ஒருமுறை ஸ்ரீரங்கத்திலிருந்து `மணிமலர்நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளியின் சார்பாக நாற்பது பிள்ளைகளுடன் சென்று வந்தது ஞாபகமிருக்கிறது. ஏதோ ஒரு வார்த்தை ரேடியோவில் படித்ததற்காக எனக்குப் பள்ளியில் ஒரு கதர் துண்டு கொடுத்தார்கள். நான் பள்ளி நாட்களில் வாங்கிய ஒரே பரிசு அது.

இது யார் எழுதியது என்று உங்களுக்கு உடனே புரிந்திருக்கும். நம்ம வாத்தியார் தான்! அட பரவாயில்லையே தமிழ் உரைநடையையே ஒரு புரட்டு புரட்டினவரு ஒரு கதைப் போட்டி, கட்டுரைப் போட்டின்னு ஒரு பரிசும் வாங்கலையே..நம்மளை மாதிரியே இருந்திருக்கிறாரே என்று ஒரு...அதாங்க தமிழ்ல ஒரு அருமையான வார்த்தை வருமே, வேணும்போது கிடைக்காது....இருங்க...! பீலிங்! அவராவது ஒரு துண்டு வாங்கியிருக்கார். நம்ம என்ன வாங்கியிருக்க்கோம்னு யோசிச்சேன். ஹூஹும்! சின்ன வயசிலிருந்து நான் நன்றாய் வரைவேன். பிள்ளையாரை நேரில் பார்த்தது மாதிரி அப்படி அச்சு அசலா வரைவேன். தசாவதாரத்தையும் பேப்பரில் வரைந்து வெட்டி வீட்டின் சுவற்றில் ஒட்டி வைத்திருந்தேன். சோற்றுப் பருக்கைகள் காய்ந்ததும் பரமாத்மா தானாக கழன்று கொண்டார். அதோட ரஜினி நிக்கிற மாதிரி, மல்லாக்க படுத்துருக்குற மாதிரி, குப்புற படுத்துருக்குற மாதிரின்னு வித விதமா வரைவேன். நானும் எனக்குத் தெரிஞ்சி 4, 5 ஓவியப் போட்டியில கலந்துருக்கேன். முடிஞ்சதும் ஒரு சர்டிஃபிக்கேட் கொடுப்பாங்க.. நான் அப்போ இங்கிலீஷ் மீடியம் படிச்சதால, அது கலந்து கொண்டதற்கான பரிசு என்று சர்ட்டிஃபிக்கேட்டில் எழுதியிருந்ததை புரிந்து கொள்ளத் தவறி விட்டேன். சோ, அது படி பாத்தா எனக்கு நினைவு தெரிஞ்சி பள்ளியில் நான் எந்தப் பரிசும் வாங்கினதில்லை.

பள்ளியில் சீண்ட ஆளில்லாமல் இருந்த எனக்கு கல்லூரியில் சேர்ந்ததும் என்னையும் நம்பி ஒரு கூட்டம் சேர்ந்தது. எப்போ பார்த்தாலும் சினிமா, சினிமா பாடல்கள், சினிமா டயலாக்குகள் என்று சுற்றும் என்னைப் பார்த்த என் சீனியர் ஒரு பாரதிராஜாவின் கையில் பாக்யராஜ் கிடைத்ததைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டார். தமிழ் சினிமாவினால் உருப்புடாம போன கேஸ்களில் அவனும் ஒருவன் என்று நானும் பின்னாளில் தெரிந்து கொண்டேன். எங்கள் திறமையை காலேஜ் அறிய, ஃபிகர்ஸ் அறியக் காட்ட கல்லூரி விழாவின் மூலம் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நானூற்றி இருபது நொடிகள் நடக்கும் ஆஸ் யு லைக் இட் நிகழ்ச்சியில் எங்கள் பெயரையும் கொடுத்தோம். அதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே கடுமையாய் உழைக்க அரம்பித்தோம். ரங்கீலா பாடல்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம். யாயிரே யாரே பாட்டுக்கு ஆட ஒரு சீனியர் ஃபிகரை பிடித்தோம். அந்தப் பாட்டின் இடையில் ஒரு குட்டிப் பையன் வந்து 4 லைன் பாடுவான். அந்த இடத்தில் தான் நீங்கள் எங்கள் க்ரியேட்டிவிட்டியை புரிந்து கொள்ள வேண்டும்! அந்தக் குட்டிப் பையனுக்கு பதிலாக அப்பு கமலை அப்படியே கொண்டு வந்தோம். அப்பு கமல் வேஷத்தை நானே ஏற்றிருக்கலாம். இருந்தாலும் நான் சும்மா நின்னாலே அந்த உயரம் தான் இருப்பேன் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். என்னை வாரியணைத்த சீனியர் தான் அந்த வேஷம் கட்டினார். இப்படியாக பாலிவுட்டையும் கோலிவுட்டையும் இணைத்து பிணைத்து ஒரு புதுமையான விருந்து சீ சீ..எனக்கே ஒவராக இருக்கிறது! பாட்டும் ஆட்டமும் பட்டையை கிளப்பியது!

பிரச்சனை என்னவென்றால் அந்தப் பாடல் போக எங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் இன்னும் மிச்சமிருந்தது. அந்த இடத்தை நிரப்புவதற்கு நாங்கள் பட்ட பாடு தான் மேட்டரே! மற்ற க்ரூப் பசங்க எல்லாம் "தங்கச்சி, சட்டத்தோட கண்ல மண்ணைத் தூவி உன்னை யாரும் கெடுக்க முடியாதும்மா, அதுக்கு முன்னாடி நானே உன்னை...அவ்!" என்று கேப்டன் மாதிரி பேசி கதறடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்க மிமிக்ரி செஞ்சா அதோட சேர்ந்து ஒரு க்விஸ் ப்ரோக்ராமும் வைக்க வேண்டி வரும். நாங்களே பேசிட்டு இது யாருன்னு கேட்டு சரியா சொல்றவங்களுக்கு பரிசு கொடுக்க வேண்டியியது தான். அப்படி ஒரு திறமை நம்மகிட்ட... ரிகர்சலின் போது சரி கழுதை இதெல்லாம் வேலைக்கு ஆவாது என்று எண்ணி சின்ன சின்ன ஜோக்ஸாக செய்வோம் என்று பல ஜோக்குகளை ரிகர்சல் செய்தோம். எடுத்துக்காட்டாக...

ஒரு பெண் பாடுகிறாள்: காலையும் நீயே மாலையும் நீயே...நான் கோபமாய் அவளிடம் போய், அப்படியா, "அப்போ மத்தியானம் யாருடீ?" என்று சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும்! அதற்கு அந்தப் பெண் கண்ணாம்பா ரேஞ்சுக்கு தன் வலது கையை தன் வாயில் குப்புற வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்புறம் ஒரு நேர்முகத் தேர்வில் தேர்வுக்கு வந்தவரிடம் ஃபைலை வாங்கி ஃபைலை மேலாகப் பார்த்து, இந்த மாதிரி 4 பைலை நம்ம ஆபீஸ்லயும் வாங்கி போடுங்க என்று குமாஸ்தாவிடம் சொல்வது! [இதே சீனை ஒரு படத்தில் பின்னாளில் பார்த்தேன்!]

எப்படி ஜோக்ஸ்!

இன்னும் என்னன்னமோ ரிகர்சல் செய்தோம். மறந்து விட்டேன். கடைசியில் ஒரு மொக்கை நாடகம் ஒன்றை போட்டு ஈடு கட்டினோம். அதில் என் நடிப்பை பாத்திருந்தீங்கன்னா சின்ன வயசு சிவாஜி உங்க கண்ல ஒரு நிமிஷம் வந்து போயிருப்பாரு!!! எங்க மொக்கை தாங்காம பசங்க போட்ட கூச்சல்ல முதல் வரிசை தவிர வேற யாருக்கும் நாங்க என்ன செய்றோம்னு புரியலை. நல்ல வேலையா ஜட்ஜஸ் எல்லாம் முன் வரிசைல இருந்ததால எங்களுக்கு 2ம் பரிசு கிடைச்சது! அந்தப் பரிசு கண்டிப்பா அந்த அப்பு வேஷத்துக்குத் தான்! மனுஷன் இன்னைக்கும் அதே வேஷத்தை போட்டு பரிசை அள்ளிட்டு இருக்காரு! என் வாழ்நாள்ல நான் வாங்கின முதல் பரிசே இரண்டாம் பரிசு, அடேடே!!