மலையாளப் படங்களைப் பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. புரியாதோ என்று ஒரு தயக்கம். அந்தப் படங்கள்ல புரிய என்ன இருக்கு, ஜஸ்ட் என் ஜாய் என்று கண்ணைக் காட்டாதீர்கள். நான் சொல்வது "அந்த" மாதிரி படங்களை அல்ல. மலையாள சினிமாவை சிலாகித்து அடிக்கடி பத்திரிக்கைகளில் படிப்பதுண்டு. இப்போது தமிழ் சினிமாவைப் பார்த்து அவர்களும் கெட்டுப் போய் விட்டார்கள் என்ற போதிலும், சீனிவாசன், ப்ளெஸ்ஸி, ஆடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் நல்ல படங்களை அவ்வப்போது தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நேற்று தற்செயலாய் கமல் (ஹாசன் அல்ல) இயக்கிய கருத்த பக்க்ஷிகள் பார்த்தேன். அந்நியனுக்குப் பிறகோ என்னமோ, விக்ரம் இந்தப் படத்தை ரீமேக் செய்து நடிக்கப் போகிறார் என்று படித்ததாய் ஞாபகம். அது கடைசியில் நடக்கவே இல்லை. அப்போதிருந்தே இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேற்று அதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது. அதிலும் ஆன்லைனில் சப் டைட்டிலோடு இருந்தது மேலும் வசதியானது.முருகன் தமிழ்நாட்டிலிருந்து பிழைப்புத் தேடி 15 வயதில் கேரளா வந்து தன் மூன்று குழந்தைகளுடன் வீடுகளில் சென்று இஸ்திரி செய்து கொடுத்து பிழைக்கிறான். அதில் கடைசிக் குழந்தை பிறவியிலேயே கண் பார்வை இழந்தவள். அவன் மனைவி வயிற்று வலியால் இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் குடும்பத்தோடு ஒரு ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி உள்ள ஒரு சேரியில் வாழ்கிறான். அவர்களைப் போலவே கஷ்டப்படும் அக்கம் பக்கத்துக்காரர்கள். அங்கே இருக்கும் ஒரு பிச்சைக்காரிக்கு (பூங்கொடி) அந்தக் குழந்தைகளின் மீது ஒரு அலாதிப் பிரியம். ஏழைகளுக்குத் துணை ஏழைகள் தானே! அவன் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் ஒரு பணக்கார வீட்டில் பம்பாயிலிருந்து சுவர்னா வந்து சேர்கிறாள். அவள் ஒரு தீராத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள், வாழ்வின் கடைசி காலங்களை தன் சொந்த மண்ணில் கழிப்பதற்காக அங்கு வந்து சேர்கிறாள். அங்கு அவளுக்கு மல்லியின் பரிச்சயம் கிடைக்கிறது. அந்தப் பிஞுக் குழந்தைக்கு இந்த உலகத்தைக் காண வேண்டும் என்ற ஆவலைப் புரிந்து கொண்ட சுவர்னா, தான் இறந்ததும் தன் கண்ணை இவளுக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கிறாள். சுவர்னா சீக்கிரம் செத்துப் போக வேண்டும் என்று மல்லியின் அண்ணன் ஆன்டவனைப் பிரார்த்திக்கிறான். இதற்கிடையில் ஒரு கலவரத்தில், முருகனின் இஸ்திரி பெட்டியையும், தள்ளு வண்டியையும் கும்பல் ஒன்று கொளுத்தி விடுகிறது. வாடிக்கையாய் இஸ்திரி போட்டுக் கொடுக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளெய்ன்ட் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. மூன்று பிள்ளைகளும் பசியால் துடிப்பது பொறுக்காமல் சலவைத் தொழிலாளியிடம் குறைந்த சம்பளத்தில் வேலைக்குப் போகிறான். பூங்கொடி விளையாட்டாய் மல்லியைக் கூட்டிக் கொண்டு, அவளையும் பிச்சை எடுக்க வைத்து எல்லோருக்கும் உணவு கொண்டு வருகிறாள். இதை அறிந்த முருகன் ஆத்திரம் கொண்டு அவளை அடித்துத் துரத்துகிறான். பூங்கொடி மல்லியை கண் பார்வையற்றவள் என்பதால் தான் பிச்சை எடுக்க அழைத்துச் சென்றாள் என்பதை தாங்க முடியாமல் வருந்துகிறான்.


I N T E R V A L


ஏற்கனவே வாங்கிய கடன் சுமை கழுத்தை நெறிக்க அந்த சலவைத் தொழிலில் முதலாளியின் ஆலோசனைப் படி இஸ்திரி வண்டி வைத்துக் கொண்டு அதை வைத்து வேலைக்குப் போகாமல் தண்ணி அடித்துக் கொண்டு ஊர் சுற்றும் ஒருவனிடம் சென்று அந்த வண்டியை வாடகை எடுத்துக் கொண்டு வேலையைத் தொடர்கிறான். ஒரு சமயம் சுவர்னாவின் பிறந்த நாளை முன்னிட்டு முருகனின் குடும்பத்தை அழைத்து விருந்து கொடுக்கிறார்கள். அப்போது சுவர்னா முருகனின் மனைவியைப் பற்றி விசாரிக்கிறாள், அவள் வயிற்று வலியால் இறந்ததாகவும், தமிழ்நாட்டில் சிதம்பரம் பக்கத்தில் ஒரு குகை இருப்பதாகவும், அங்கு சென்று வந்தால் தீராத நோயும் தீரும் என்றும், அவள் அங்கு சென்று வர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறான். அதை நம்பாததால் தான் தன் மனைவியைப் பறி கொடுத்ததாகவும் சொல்கிறான். சுவர்னாவுக்கு அதில் நம்பிக்கை இல்லாத போதும், அவன் கேட்டுக் கொண்டதற்காக அவனையும் அவன் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு அங்கு சென்று வருகிறாள். ஒரு சமயம், முருகனிடம் தன் வண்டியை வாடகைக்கு விட்ட குடிகாரன், முருகன் வாடகையை தன்னிடம் தராமல் தன் மனைவியிடம் தருவதால் அவர்கள் இருவரையும் சந்தேகித்து முருகனிடம் விசாரிக்கும் போது ஆத்திரத்தில் முருகனை கத்தியால் குத்தி விடுகிறான். இதற்கிடையில், சுவர்னாவின் உடல் நலம் தேறி வருவதாயும், இனி பயப்படத் தேவையில்லையென்றும் அவளின் ரிப்போர்ட் பார்த்த டாக்டர் கூறி விடுகிறார். இதைக் கேட்டு அளவில்லா மகிழ்ச்சியடையும் சுவர்னா, சிறிது நேரத்தில் மல்லிக்குத் தான் கொடுத்த வாக்கை நினைத்தும், அவளுக்கு பார்வை கிடைக்கப் போவதாய் ஆசையை உண்டாக்கியதை நினைத்து குற்ற உணர்வு கொள்கிறாள். முருகனின் நிலையை கேள்விப்பட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாலும், அவள் உள்ளே செல்லாமல் அவன் செலவுக்குப் பணத்தை மட்டும் கொடுத்து அனுப்புகிறாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட முருகன் குணமானதும், நேராய் சுவர்னாவைப் பார்க்க வீட்டுக்கு வருகிறான். ஆனால் அவள் ஏற்கனவே பம்பாய் சென்று விட்டதால் அவனால் பார்க்க முடியாமல் போய் விடுகிறது. அவளின் குற்ற உணர்வை அறிந்த முருகன் அவள் நன்றாய் இருந்தால் போதும், எங்களுக்கு கண் தேவையில்லை என்று சொல்லிச் சென்று விடுகிறான். இந்தக் கத்திக் குத்து சம்பவத்தால் மனமொடிந்த முருகன், இங்கு குழந்தைகளை வைத்துக் கஷ்டப்படுவதை விட, சொந்த நாட்டுக்கே சென்று விடலாம், தனக்கு ஏதாவது கஷ்டம் வந்தாலும் அங்கு சொந்த பந்தங்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று முடிவெடுத்து தன் சொந்த நாட்டிற்குச் செல்லத் தயாராகிறான். இவர்கள் போவதை காணப் பொறுக்காமல் வாடி நிற்கும் பூங்கொடியிடம், நீயும் என்னுடன் வந்து விடு என்றவுடன் அவளும் துள்ளிக் குதித்துக் கொண்டு புறப்படுகிறாள். பேருந்து நிலையம் சென்றவுடன் சுவர்னா வீட்டில் சொல்லாமல் வந்தது ஞாபகம் வர, அவன் மட்டும் அங்கு போகிறான். அங்கே சுவர்னா இறந்து போயிருப்பதைப் பார்க்கிறான். சுவர்னாவின் கணவன் கீழ் சாதிப் பயலுக்கு சுவர்னாவின் கண்ணை தனமாகத் தர முடியாது என்று கூறிவிட்டதாய் அவன் அறிகிறான். ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டுச் செல்கிறான். பேருந்தில் ஏறி அமர்ந்ததும் மல்லி சுவர்னாவைப் பற்றி விசாரிக்கிறாள். முருகன் அவள் செளக்கியமாய் இருப்பதாய் பொய் சொல்கிறான். மல்லி ஜன்னலின் வழியே காற்றைக் கையில் பிடிக்க முயல்வதுடன் படம் முடிகிறது!!

நல்ல கதை தான் ஹீரோக்களும் பேட்டி கொடுத்து விட்டு, மாஸ் என்றும், சினிமா ஒரு வியாபாரம் என்றும் தப்பித்துக் கொண்டு கண்ட கன்றாவிகளில் நடிக்கிறார்களே, அவர்கள் பார்க்க வேண்டும் இந்தப் படத்தை. இத்தனை எளிமையான, ஆத்மார்த்தமான கதையை உருவாக்கிய கமலை பாராட்டியே ஆக வேண்டும்.

இஸ்திரி போட்டுக் கொடுத்து மூன்று குழந்தைகளுடன் சேரியில் வாழும் ஒரு சாதாரண கதாப்பாத்திரத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாய் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராய் திகழும் மம்மூட்டி நடிக்கிறார். ஒரு அழுக்கு பிச்சைக்காரியாய் பத்மப்ரியா நடிக்கிறார். நம் ஊரில் ஒரு அருமையான நடிகரை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டு சந்திரமுகியும், சிவாஜியும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் குசேலன் படத்தில் கடைசி அரை மணி நேரம் ரஜினி என்ன ஒரு அற்புதமான நடிப்பு என்று சிலாகித்துக் கொள்கிறோம். பூஜாவை பிச்சைக்காரியாய் பால வாழ வைத்திருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். மலையாள சினிமாவில் அவர்கள் இதையெல்லாம் போகிற போக்கில் செய்கிறார்கள் என்று எனக்குப் படுகிறது.

படத்தில் ஒரு காட்சியில் முருகனின் மகன் பள்ளியில் ஒரு பையனை அடித்து விடுகிறான். வாத்தியாரின் புகாரைக் கேட்ட முருகன் ஏன் அடித்தாய் என்று பையனை கேட்கிறான். அவன் ரஜினியை திட்டிட்டான்பா என்கிறான் ஆவேசமாய். இதைக் கேட்ட முருகன் வாத்தியாரிடம், ஐய்யோ, ரஜினியை எப்படிங்க திட்டலாம், அவர் எங்களுக்கு சாமி மாதிரி, அதான் என் மகன் அடிச்சுருக்கான் என்று சொல்கிறான். தமிழ்நாட்டில் சினிமா என்பது ஒரு கலாச்சாரம் என்று இயக்குநர் நன்றாய் நக்கலடித்திருக்கிறார்.

படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் அழகாய் இருந்தன. அப்பா, அப்பா என்றூ சதா அழைக்கும் மல்லிக்கு ஏன் கண்ணு என்று வினவும் முருகனின் பாங்கு, நட்சத்திரம் இருக்கா? என்னை பாக்குதா? என்று ஒரு குழந்தைக்குரிய குறுகுறுப்பு, யார் என்ன கொடுத்தாலும், கூப்பிடாலும், "அப்பா" என்று ஒரு முறை அனுமதி கேட்கும் விதம், சந்திரமுகி படத்திற்குச் சென்று பார்க்க முடியாமல் ரஜினி வேஷ்டியா பேண்டா? ஜோதிகா சேலையா? அழகா இருக்காங்களா என்ற எல்லா அசட்டுக் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் முருகனின் வேடத்தில் ஒரு பாசமுள்ள தந்தையை மம்மூட்டி நம் கண் முன் நிறுத்துகிறார். ஆனால் கண் தெரியாத பெண் என்பதற்காக அவள் எதை தொட்டாலும் புன்னகை புரிந்து கொண்டே இருப்பது உறுத்துகிறது.

பத்மப்ரியாவுக்கு சுட்டித் தனமான பிச்சைக்காரி வேடம். பொருத்தமாய் இருக்கிறார். அடிக்கடி குறும்பாய் சிரிக்கிறார். முருகனை அண்ணா என்று அழைக்கிறார். அவர் கூப்பிட்டதும் வெட்கப்பட்டுக் கொண்டே அவருடன் செல்கிறார். அந்த வெட்கத்திற்கும், அண்ணா என்று அழைத்ததற்கும் சம்மந்தம்மில்லை. அது தான் புரியவில்லை. இருந்தாலும் முருகனின் மேல் பூங்கொடி ஒருதலை காதல் கொள்கிறாள் போன்ற அசட்டுத்தனம் இல்லாதது ஆறுதல்.

சுவர்னாவாய் வரும் மீனா அதிக மிகையில்லாமல் சொன்னதை ஒழுங்காய் செய்திருக்கிறார். நோய்வாய்பட்ட தெளிவில்லாத முகம் சரியாய் இருந்தது. மேக்கப்பா அல்லது இயற்கை அழகா? அவருக்கு என்ன வியாதி என்று சொல்லாமல் விட்டது நன்றாகவே இருந்தது. அவர் கேட்கும் லதா மங்கேஷ்கரின் பாடல்கள் அருமையாய் இருந்தது.

படத்தில் இசையும் ஒளிப்பதிவும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த மாதிரி படங்களுக்கு அவைகளின் இருப்பு தெரியவேண்டியதில்லை. அப்படியென்றால் சரியாய் தான் இருக்கிறது.


இந்தப் படம் 2006ம் ஆண்டின் சிறந்த குடும்பப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது. மம்மூட்டி, பத்மப்ரியாவுக்கு இதற்காக 2007ம் ஆண்டு ஃப்லிம் ஃபேர் அவார்டும் கிடைத்தது.


ஒரு நிறைவான படம்!


7 Responses
 1. அருமையான விமர்சனம் நண்பா.. நான் இன்னும் இந்தப்படத்தை பார்க்கவில்லை.

  //தமிழ்நாட்டில் சினிமா என்பது ஒரு கலாச்சாரம் என்று இயக்குநர் நன்றாய் நக்கலடித்திருக்கிறார்.//

  அருமை.. கலாச்சாரம் என்பது மாறிப்போய் இப்போது பலருக்கு அது வாழ்க்கையாகியிருக்கிறது என்று நினைக்கின்றேன் :-(


 2. Siva Says:

  Good review of a Mallu movie. Nowadays these kind of films are becoming rare in Malayalam film industry, as they are also looking for mass and money for films.


 3. அருமையான விமரிசனம்.


 4. Senshi,

  naanum ezhuthumbothu athai thaan yosithen, irunthaalum kalaachaaram endru ezhuthi vitten

  yes, (ithu ennappa peru?)

  yeah, i agreee...

  earn staying home

  nandri!


 5. Unknown Says:

  நல்லா எழுதி இருக்கீங்க பிரதீப் குமார்.


 6. Krishna,

  Nalla padam, athai pathi ezhuthinaa nalla thaan irukkum..enna soldreenga :)