என் முதல் விஞ்ஞானச் சிறுகதை [என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்!] இன்னும் சற்று மெனக்கெட்டு எழுதியிருந்தால் நன்றாய் வந்திருக்கும் என்று தோன்றுகிறது. மத்தபடி நீங்க தான் படிச்சிக் கிழிக்கனும்![என்னைத் தான்!]

முன் குறிப்பு: சுஜாதாவின் வாசனையடிக்கிறதைத் தவிர வேறு ஏதாவது புதுசாய் சொன்னால் தன்னியனாவேன்!

------------------------------------------------------------------------------------------------

சில நாட்களாகவே அவரை பார்க்கிறேன். நான் போகும் இடங்களிலெல்லாம் வந்து என்னையே வெறித்து பார்க்கிறார். ஒரு நாற்பது, ஐம்பது வயது இருக்கும். சாந்தமான முகம். நெற்றியில் விபூதிப் பட்டை. இடுப்பில் பட்டினத்தார் போல் ஒரு வேட்டி. அவ்வளவு தான். இவரை முன் பின் நான் பார்த்ததில்லை. ஏன் என்னை இப்படி பின் தொடர்கிறார் என்று புரியவில்லை. இன்று கேட்டு விடுவது என்று தீர்மானித்தேன். இந்த வரி வரை நான் ஆணா பெண்ணா என்று சொல்லவில்லை. பெண்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் என்றவுடன், ஆண்களுக்கு நான் செம ஃபிகர் போல என்று ஒரு எண்ணம் உருவாகியிருக்கும். அப்படித் தோன்றியிருந்தால் அதை எச்சில் தொட்டு அழித்து விடுங்கள். நான் ஒரு ஆடவன். கடவுளுக்கு மிகவும் பயந்தவன். ஆண்டவன் எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வச்சுருக்கான் என்று தீர்க்கமாய் நம்புகிறவன். போர்டில் முன் பெயர் அழிந்து போன ஒரு அன் கோ. வில் குமாஸ்தாவாய் தேமேயென்று பணிபுரிந்து மாதம் 6,350 ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு கட்டை பிரம்மச்சாரி! சரி ஏன் பின் தொடர்கிறார் என்று கேட்டு விடுகிறேன்.

வணக்கம். நானும் கொஞ்ச நாளா பாத்துட்டே இருக்கேன், நீங்க என்னை பின் தொடர்ந்து வர்ற மாதிரியே இருக்கு. மன்னிக்கனும், நீங்க யார் என்னன்னு எனக்கு தெரியலை. கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

நான் கேட்ட கேள்விக்கு அவர் திருப்பிக் கேட்ட கேள்வி என்னை அதிர வைத்தது. மிகுந்த ஆச்சர்யத்துடன் என்னை பார்த்து....

தம்பி, நான் கேட்கிறேன் என்று தவறாய் நினைக்காதே, நான் உன் பார்வைக்குத் தெரிகிறேனா?

என்னங்க இப்படி கேக்குறீங்க? பின்னாடியே வந்துட்டு இருந்தா கவனிக்காமலா இருப்பாங்க?

நான் உன் முன் நின்றாலும் உன் கண்களுக்குத் தெரிய சாத்தியமில்லயே...நீ முதலில் என்னுடன் வா, தனியாகப் பேசுவதாய் உன்னை யாராவது தவறாக எண்ணக் கூடும். என்று ஒரு சுவருக்குப் பின்னால் கூட்டிக் கொண்டு போனார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலை.

சரி, நான் சொல்வதைப் போல் செய். அதோ வருகிறாரே, அவரிடம் நான் நான் யார் என்று கேள்...

எதுக்குங்க, எனக்கு வேலை இருக்கு. நீங்க ஏன் என் பின்னாடி வர்றீங்கன்னு சொல்லுங்க..

எனக்காக கொஞ்சம் கேளேன் தம்பி.

இந்தாப்பா...இங்கே வா! வந்தான். இவர் யாருன்னு உனக்குத் தெரியுமா?

அவன் என்னை ஒரு மாதிரி பார்த்தான். என்ன காண்டிட் காமெர ப்ரோக்ராமா சார் என்று சுற்றும் முற்றும் பார்த்து சிரித்தான்.

இவர் யாருன்னு சொல்லுப்பா...

ம், இவர் தான் அறிஞர் அண்ணா..போய்யா, சொவத்தைக் காட்டி யாரு யாருன்னு காலங்காத்தால...சே! அவன் போயேவிட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் என்னை பார்த்து சிரித்தார்.

நான் தான் சொன்னேனே, நான் யாருக்கும் தெரியமாட்டேன். உனக்கு எப்படித் தெரிந்தது என்று தான் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது!

ஓ, அப்போ நீங்க தான் கடவுளா? எங்க இப்படி என்றேன் எகத்தாலமாய்...

எல்லாம் உனக்காகத் தான்! போகலாமா என்றவரின் பேச்சை மதிக்காமல், அந்த வழியே செல்லும் ஒரு பெண்ணை கூப்பிட்டு,

இது யாரு தெரியுதா என்று கேட்டேன். எது என்று அவர் கேட்டார், இதோ என்று அவரைக் காட்டினேன். என்ன கிண்டல் பண்றியா செருப்பு பிஞ்சிரும் என்று சொல்லியபடியே அவரும் போய் விட்டார். எனக்கு நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்.

நீ எத்தனை பேரிடம் கேட்டாலும் உனக்கு இத்தகைய பதில் தான் கிடைக்கும். நான் சொல்வதைக் கேள் என்றார் தெளிவாய்.

சற்று உட்கார்ந்தால் தேவலாம் என்று பட்டது. இருவரும் அருகில் இருந்த திண்ணையில் உட்கார்ந்தோம்.

சொல்லுங்க..நீங்க யாரு, ஏன் என் பின்னாடி வர்றீங்க?

உன் காலம் முடியப் போகிறது, உன்னைக் கூட்டிப் போகவே வந்தேன். நான் தான் எமன் என்றார் சாய்ந்து அமர்ந்தவாறே.

எனக்கு சப்த நாடியும் அடங்கிப் போனது.

என்ன? எமனா? உங்க எருமை எங்கே? கதாயுதம் எங்கே? பாசக்கயிறு எங்கே என்று ஏதேதோ உளறினேன்.

அதெல்லாம் நீங்களாய் மனமுவந்து கொடுத்த வேடங்கள். அப்படி நான் இல்லையென்று கேட்டால் நான் என்ன செய்வது?

நீங்க யார் கண்ணுக்கும் தெரியலை, அதை நம்புறேன். ஆனா, உங்களை எமன்னு நான் எப்படி நம்புறது?

மனுஷங்க நீங்க யாரைத் தான் நம்பியிருக்கீங்க? அதோ பார், அங்கு வருபவனை சற்று கூர்ந்து கவனி. அவன் நம் அருகே வந்ததும் துடிதுடித்து விழுவான்.அப்படிச் சொல்லி விட்டு அவர் கண்களை மூடி ஏதோ முனுமுனுக்க ஆரம்பித்தார்.

என்ன ஆச்சர்யம், எங்களின் பக்கம் வரும் வரை செல்ஃபோனில் உற்சாகமாய் பேசி வந்தவன், பக்கம் வந்ததும் துடிதுடித்து விழுந்தான். நடந்து சென்றவர்கள் அவனை ஒரு ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். அவலம் அடங்க சற்று நேரம் ஆனது.

செத்துட்டானா? என்றேன்.

அவன் கதை முடியும் காலம் இன்னும் வரவில்லை. சற்று ஆட்டம் காண்பித்தேன் அவ்வளவு தான். பிழைத்து விடுவான். இப்போதாவது நீ என்னை நம்புகிறாயா?

எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. எனக்கு வயசு 35 தானே, அதுக்குள்ள என்ன என்றேன் வேர்த்து விறுவிறுத்து...

ஏன் பூலோகத்தில் 35 வயதில் யாரும் சாவதில்லையா? உனக்கு அல்பாயுசு என்று எழுதி இருக்கிறதே அப்பா, நான் என்ன செய்வது?

எனக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. இதெல்லாம் நிஜம் தானா, நான் இறந்து விடப் போகிறேனா? வாழ்வில் ஒரு சுகமும் அனுபவிக்காமல் இறந்து விடுவேனா? நான் தான் சகல செளக்கியங்களுடன் இருக்கிறேனே..எனக்கு எப்படி மரணம்?

ஐய்யா, நீங்கள் எமன் என்றே ஒத்துக் கொள்கிறேன். நான் அதற்குள் சாகத் தான் வேண்டுமா? இதற்கு வேறு வழியே இல்லையா?

உங்கள் கதைகளில் வருவதைப் போல் என்னிடமிருந்து உன்னை மீட்க சாவித்திரி கூட இல்லையே உன்னிடம்? நான் என்ன செய்வது?

ஐய்யா, அதைத் தான் நானும் சொல்கிறேன். இந்த நாள் வரை, ஒரு கட்ட பிரம்மச்சாரியாய் எந்த சுகங்களையும் அனுபவிக்காமல் வாழ்ந்துட்டேன். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்.

அது முடியாது தம்பி. காலம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். எல்லாம் விதிப் படி தான் நடக்கும். அதைத் தடுக்க என்னாலும் முடியாது.

இதற்கு வேறு வழியே இல்லையா? தயவு செய்து எனக்காக யோசித்துப் பாருங்கள்.

இதெல்லாம் நான் உன் பார்வைக்குத் தெரிந்ததால் வந்த விணை. எங்கோ எப்படியோ ஒரு கோளாறு நிகழ்ந்திருக்கிறது. அது உன் தவறல்ல. அதை நாங்கள் தான் சரி செய்ய வேண்டும். இத்தனை நாள் உன்னை கண்கானித்ததில் நீயும் எந்த ஒரு லெளகீக சுகங்களை அறியாதவன் என்பதை நானும் புரிந்து கொண்டேன். உன்னால் என்னை பார்க்க முடிகிறது என்பதால் உன் மீது ஒரு இனம் தெரியாத பாசம் வருகிறது. அதனால் உனக்காக மட்டும் இந்தச் செயலை செய்கிறேன். இதை நீ வேறு யாரிடமும் சொல்லி விடக் கூடாது. சொல்லி விட்டால் அந்தக் கணமே உன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும் என்று நீ பல கதைகளில் படித்திருப்பாய்! நான் இந்தக் கோளாறு எப்படி நடந்தது என்று எமலோகம் சென்று பார்த்து விட்டு வருகிறேன். நான் இரண்டு நாளில் திரும்பி வந்து விடுவேன். நீ அதற்குள் உன் வாழ்வை வாழ்ந்து கொள். இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது!

ஐய்யா, மிக்க நன்றி. மிக்க நன்றி...ஆனா ரெண்டு நாள்ல நான் என்னங்க வாழ்றது? கொஞ்சம் நீங்க பொறுத்து வந்தீங்கன்னா, நல்லா இருக்கும்.

அடேய் மானிடா, நான் சொல்வது எமலோகத்தின் இரண்டு நாட்கள். அது பூமியைப் பொறுத்தவரை சில ஆண்டுகளடா...

எனக்கு தெரியலையே...இருந்தாலும் உங்க கருணைக்கு ரொம்ப நன்றி ஐய்யா...ரொம்ப சந்தோஷம்!

அது போகட்டும், இதற்காக நீ எனக்கு என்ன தருவாய்?

நான் உங்களுக்கு என்னங்க தர்றது? நான் ஒரு சாதாரண மனுஷன்! நீங்க வேற..

பூலோகத்தில் பணம் என்னும் பிசாசு இல்லாமல் ஒரு வேலையும் நடக்காதாமே, அந்தப் பிசாசை நான் பார்க்க வேண்டுமே?

இது தான் அந்தப் பிசாசு என்று என் பர்சில் இருந்து 50 ரூபாயை எடுத்துக் காட்டினேன்.

சரி, மறைக்காமல் ஒன்றை சொல். இதைப் போல் உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?

எனக்கு தான் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லையே, வாங்குற சம்பளத்துல மிச்சம் புடிச்சி ஒரு லட்ச ரூவா பேங்க்ல போட்டு வச்சிருக்கேன்...

பலே...அப்படியென்றால் நான் செய்யும் இந்த உதவிக்காக நீ எனக்கு அதில் பாதியை தர வேண்டும். என்ன சொல்கிறாய்?

ஐயய்யோ, அது எதுக்குங்க உங்களுக்கு?

மேலுலகத்தில் அனைவரும் பணத்தைக் காண ஆவலாய் இருக்கிறார்களடா...நானும் எல்லா உலகத்து நாணையங்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் அது உதவியாய் இருக்கும்.

அதுக்கு அம்பது ரூபா போதுமே?

அடேய், ஒருவனை அழைத்து வருவதாய் சொல்லி வந்திருக்கிறேன். நீ இல்லாமல் திரும்பிப் போனால் நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் இந்தப் பணத்தைக் கொடுத்துத் தானே நான் சரி கட்ட வேண்டும்.

ஒஹோ எமலோகத்திலும் லஞ்சம் வந்து விட்டதா?

அது தான் நீங்கள் வந்து விட்டீர்களே, பின் லஞ்சம் வராதா? வாக்குவாதம் செய்யாமல் பணத்தைக் கொடு! நீ கொடுத்தே ஆக வேண்டும்.

உயிரை விடவா ஐம்பதாயிரம் பெருசு...வாங்க ஏடிஎம் ல எடுத்துக் கொடுக்குறேன்.

அப்பாடா, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு. எமனுக்கே லஞ்சம் கொடுத்து வரலாற்றில் இடம் புடிச்சிட்டோம் என்ற மிதப்பில் நான் ரோட்டை க்ராஸ் செய்யும் போது ஒரு தண்ணி லாரி எல்லா நீரையும் கொட்டிக் கொண்டே என் மேல் அநியாயமாய் ஏறிச் சென்றது. நான் ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருக்கும் போது "டேய், அந்த ஆட்டோவைக் கூப்பிடு" என்று கத்தும் யாரோ ஒருவரின் குரல் மிகவும் பழக்கப்பட்டதாய் இருந்தது.

15 Responses
  1. அது சரி. ரெண்டு வருசம் படுத்த படுக்கையாய் இருந்தால் என்ன சுகத்தை அனுபவிக்கப் போறீங்க? அதுக்கு பதிலா அவருடன் போய்ச் சேர்ந்திருக்கலாம். 50,000 ரூபாய் மிச்சமாகியிருக்கும்.


  2. ரங்குடு,

    அவர் நோய்வாய்ப் பட்டு சாகப் போறாருன்னு எப்படி நினைச்சீங்க? இப்போ ஆன மாதிரியே ஆக்ஸிடென்ட் ஆகலாம் இல்லையா? என்ன சார் நீங்க? அப்புறம், அவர் தான் ஒண்டிக் கட்டை ஆச்சே, 50,000 மிச்சம் பண்ணி யாருக்குக் கொடுக்க போறாரு?


  3. கிரி Says:

    பிரதீப் நீங்க விஞ்ஞானச் சிறுகதை என்றதும் நான் ஆர்னிகா நாசர் மாதிரி எதிர்பார்த்தேன் ஒரு 2080 ரேஞ்சுக்கு :-)

    கதை நல்லா இருக்கு கடைசில கொஞ்சம் குழப்பிடுச்சு.

    (உங்க பதிவுகளை படிக்கிறேன்னு சொன்னேன் இன்னும் படிக்கலை, படித்து விடுகிறேன்)


  4. giri,

    neenga vera, athaan naan ennoda muthal kathainnu sollitten. appuram build up laye romba sumaaraa thaan irukkunnu solli irukkene sir!

    mella padinga onnum avasaram illai...


  5. பிரதீப்,

    நன்றாக இருந்தது. எப்படி முடிக்கப் போகிறீர்கள் என்று நான் யூகித்தேன் என்றால்...

    பணத்தைக் கொடுத்துவிட்டு மரணத்தின் வாசலிலிருந்து தப்பித்த நிம்மதியோடு வீடு திரும்பினேன். இதை யாரிடமாவது சொல்ல வேண்டும் போலிருந்தது. சொன்னாலும் நம்புவார்களா? ஆனால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. என் ஆருயிர் நண்பன் என்று நான் நம்பிக் கொண்டிருக்கும் ரங்குவிடம் இதைப் பற்றி விஸ்தாரமாக சொன்னேன்.

    "அடப்பாவி. நீயும் அந்தாள் கிட்ட அம்பதாயிரம் ஏமாந்தியா?"


  6. சுரேஷ்,

    ஒரு கூட்டமாய் சேர்ந்து ஏமாற்றும் ஏமாற்றுக்காரர்கள் தான் அவர்கள். ஆனால் நீங்கள் அப்பட்டமாய் அதை சொல்லியிருக்கிறீர்கள். நான் அதை நாசூக்காகச் சொல்லியிருக்கிறேன். எத்தனை பேருக்கு அது புரிந்திருக்கும் என்று தெரியவில்லை.

    அதோடு, நான் சொன்ன முடிவில் கீழ் வரும் விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன:

    1. கதாநாயகன் அடிபட்டவுடன், சே! எமனும் காசை வாங்கிட்டு ஏமாத்திட்டாரே, காசும் போச்சு இப்போ உயிரும் போகப்போகுதே என்று அவன் நினைக்கலாம்.
    2. அந்தப் பழக்கப்பட்ட குரலை கேட்கும்போது, அடப்பாவி இவனைத் தான் யாருக்கும் தெரியாதே, இவன் எப்படி ஆட்டோவைக் கூப்பிடுகிறான் என்று அவனுக்குத் தோன்றி, தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அவன் உணரலாம்.
    3. இப்போது தானே சாவிலிருந்து தடுத்து நிறுத்துவதாய் இந்த அப்பாவியை ஏமாற்றினோம், அதற்குள் அடிபட்டு விட்டானே என்று திருடனுக்குள்ளும் இருக்கும் ஒரு மனிதாபிமானம், இரக்க சுபாவம் வெளிப்படுகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.
    4. திருடனாகவே இருந்தாலும், தெரிந்தோ தெரியாமலோ அவனுக்குச் செய்த தர்மம் இவன் தலையை காக்க உதவலாம்!

    இவை எல்லாம் வாசகர்களின் யோசனைக்கே விட்டு விட்டேன்.


  7. Divyapriya Says:

    kadasila enna aachunnu puriyale!! different kadhai...


  8. athaan previous comment la solli irukkene divya, padinga...


  9. KRICONS Says:

    நல்லா இருக்கு பிரதீப்.

    உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்கிறோம்


  10. kricons,

    ennanga vadivelukkitta pesura mathiriye irukku...

    irunthaalum romba nandri! muyarchi seiren.


  11. vishnu Says:

    US`la thaniya utkanthu ippidi yoskathingha enaku bayama eruku....{abt thanni lorry}
    within few days anni will come... ellam sariya poidumnu ninaikuren(:

    vishnu(ur cousin)


  12. vishnu,

    nee enda tension aagure, athu chumma kathai thaan! inge ethuda thanni lorry ellam :)


  13. Lakshmi Bala Says:

    Good one Pradeep. I do agree there were traces of Sujatha and I was able to guess the end. I guess who ever writes science fiction will have traces of Sujatha.


  14. Lakshmi Bala,

    see atlast i made u to post comments in my blog :)

    can't escape from sujathaism :)


  15. Anonymous Says:

    Thanks Pradeep :-)