ஒய். ஜி. மகேந்திரன் நடத்திய நாகேஷின் அஞ்சலி கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். சோ, சச்சு, மனோரமா, வி.எஸ்.ராகவன், சித்ராலயா கோபு, வியட்நாம் வீடு சுந்தரம், ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகியோர் நாகேஷை வாழ்த்தி பேசினார்கள்! [கமல் எங்கே?] நான் போய் சேர்வதற்குள் சோ பேசி முடித்து விட்டார்!

சித்ராலயா கோபு

நாகேஷுக்கு முதல் சீன் சொல்லும்போது மிஸ்டர். கோபு என்றார். கொஞ்ச நேரம் கழிச்சி கோபு சார். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சி டேய் கோபு என்றார்! அன்றிலிருந்து எங்கள் நட்பு செழித்து வளர்ந்தது. சிறிது காலம் சித்ராலயாவில் தான் படங்களை கொடுத்தோம். என்னடா எப்படி இருக்கு என்று கேட்கும் போது நாகேஷ் அலுத்துக் கொண்டு, எங்கேடா? பார் சோப்பைத் தாண்ட மாட்டெங்குதே என்பார்! அது என்னடா பார் சோப்பு என்றால் சம்பளம் 501ஐ தாண்ட மாட்டேங்குதே என்பார். பொறுமையாய் இரு என்று சொல்வேன். நான் சொன்னது போல் சில படங்களுக்கு அப்பால் நாகேஷை நான் தேட வேண்டியதாகி விட்டது. அவர் எங்கேயோ சென்று விட்டார். அவ்வளவு பிசி. என்றாலும் நான் எடுத்த படங்களுக்கு தாரளமாய் நேரம் ஒதுக்கி நடித்துக் கொடுத்தார்!

வி.எஸ்.ராகவன்

நாகேஷை என் நண்பனா அடைஞ்சது நான் பெற்ற பாக்கியம். காதலிக்கிறவங்களுக்குள்ள மொதல்ல மோதல் வந்து பிறகு காதல் வர்ற மாதிரி எங்க நட்பு! ஏதோ ஒரு நாடகத்துல நான் நடிச்சிருந்தேன், அதை பாத்துட்டு நாகேஷ் அந்த நாடகத்துல நீ என்ன பண்ணியிருந்தே? ஒன்னும் புரியலையே என்றார். உனக்குத் தானே புரியலை, பரவாயில்லை என்றேன். அங்கு தான் தொடங்கியது எங்கள் நட்பு. அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பிச்சோம். நாகேஷ் ஒரு துணிச்சல்காரர். பார்க்க தான் நரம்பா இருப்பாரே தவிர மன உறுது ஜாஸ்தி! நாங்க எல்லாரும் ஒரு நிகழ்ச்சிக்காக மலேஷியா சிங்கப்பூர் போயிருந்தோம். அங்க ஒரு ஆர்டிஸ்டோட அப்பா குடிச்சிட்டு வந்து பாட்டிலை ஒடைச்சி எங்களை எல்லாம் குத்திடுவேன்னு மிறட்டினாரு. நாகேஷ் தைரியமா அவர் முன்னால நின்னு எங்கே, குத்துடா, குத்து என்றார். பிறகு அவர் பணிந்து போன பிறகு ஏன்பா இப்படி போய் அவன் முன்னாடி நிக்கிறே? அவனே குடிச்சிட்டு வந்துருக்கான்னு சொன்னா, குடிகாரனை பத்தி எனக்குத் தெரியாதா, அவன் சும்மா உதார் விட்றான் என்றார். நாகேஷ் ஒரு குழந்தை என்றும் சொல்லலாம். அவருக்கு ஒரு பொருள் பிடித்து விட்டதென்றால் அவருக்கு அது அப்பவே வேண்டும். என்னிடம் இருந்த காது குடையும் கம்பி போல் வேண்டுமென்று ஊர் பூராவும் அலைந்தோம். அதே போல் நாகேஷ் ஒரு சாமர்த்தியசாலி. தயாரிப்பாளர்களிடம் பணத்தை கறாராக பேசி வாங்கி விடுவார். பணத்தை வசூலிக்காமல் டப்பிங் செய்ய மாட்டார். அவர் பிசியா நடிச்சிட்டு இருந்த காலகட்டத்துல ஒரு நாளைக்கு 2, 3 கால்ஷீட் கொடுக்குறது வழக்கம். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரும் கலைஞர்களே அவருக்காக காத்திருப்பார்கள். ஒரு ஸ்டூடியோவில் லேட் ஆனால், அடுத்து போக வேண்டிய ஸ்டூடியோவில் இருக்கும் எலெக்ட்ரிஷியனை கூப்பிட்டு கரண்டை கட் செய்ய சொல்லி விடுவார். அவர் போய் சேர்ந்தடும் கரெக்டாய் கரண்ட் வந்து விடும். நாகேஷ் வந்தவுடன் கரண்ட் வந்து விட்டது என்று இவருக்கு நல்ல பெயர் வேறு கிடைத்து விடும்.

'வியட்நாம் வீடு' சுந்தரம்

என் வியட்நாம் வீடு நாடகத்தை மேடையேத்த ஒய்.ஜி.மகேந்திரன் கேட்டர். நானும் அவரின் மீது உள்ள நம்பிக்கையால் கொடுத்து விட்டேன். நாகேஷ் இறந்த சில நாட்களுக்கு முன் அவர் வீட்டிற்குச் சென்று இந்த விஷயத்தை சொன்னேன். டென்சிங் இன்னைக்கு செய்ய வேண்டியதை அன்னைக்கே செஞ்சுட்டான். அதான் எல்லோரும் அவனை மறந்துட்டா, நீ என்னைக்கோ எழுதின நாடகத்தை இன்னைக்கு மேடையேற்றி உன்னை ஞாபகப்படுத்திக்கிறா, நல்லது தானே என்று சொல்லி விட்டு என்னை சற்று நேரம் கூர்ந்து நோக்கினார். எனக்கு அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று புரிந்தது. அவர் மெல்ல என் கையை பற்றி "நீ முந்திண்டா நோக்கு, நான் முந்திண்டா நேக்கு!" என்றார். யுஏஏ வில் சாதாரண லைட் பாயாய் இருந்த நான் இன்று மேடையில் பேசும் அளவிற்கு வந்ததற்கு நாகேஷும் ஒரு காரணம்.

சச்சு

நாகேஷுடன் நடிக்கும் போது ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும், அவர் எப்போது எப்படி என்ன செய்வார் என்று அவருக்குத் தான் தெரியும். ஏதோ ஒரு படத்தில் ஒரு சீனில் நடித்துக் கொண்டிருக்கும் போது என் வாயில் படபடவென்று அடித்து விட்டார். ஷாட் முடிந்து பார்த்தால் ரத்தமே வந்து விட்டது. நாகேஷ் என்ன இது என்று கேட்டால், ஓ சாரிம்மா, நான் சொல்லனும்னு தான் இருந்தேன் என்று இழுப்பார். என் பாட்டி என் கூட ஷூட்டிங் வரும் போது இவரிடம் எப்படி சாப்பாடு கொடுக்குறது? என்ன சாப்பிடுதோ அப்படி இப்படி என்று புலம்ப இவரும் என்ன பாட்டி ரொம்ப கவலைப்பட்றீங்க, இதோ இருக்குது பேத்தி சாப்பாடு கொடுங்க என்றார். அதற்கு என் பாட்டி இவளை சொல்லலை, வீட்டுல இருக்குற நாயை சொன்னேன் என்று சொல்லி விட்டார். அவ்வளவு தான், இதை யுனிட் பூரா தண்டோரா போட்டு விட்டார். அதன் பிறகு என் பாட்டி நாகேஷ் இருந்தால் நான் வரலை என்ற அளவுக்கு ஆகி விட்டார்.

நிற்க

நாடக விழாவோ, சினிமா சம்பந்தப்பட்ட பாராட்டு விழாவோ, அல்லது இந்த மாதிரி அஞ்சலி கூட்டமோ, மனோரமா தவிர்க்க முடியாதவராகி விடுகிறார். இவரை அழைப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். மேடையில் பேச விட்டால் பாதி உணர்ச்சி வசப்பட்டும், பாதி உளறிக் கொட்டியும் எல்லோரையும் பாடாய் படுத்துகிறார். இவரா சினிமாவில் அந்தக் கலக்கு கலக்கியவர் என்றால் நம்பவே முடியவில்லை. இரு வார்த்தைகள் கோர்வையாய் இவரால் பேச முடியவில்லை. அவருக்கு முன்னால் பேசியவர்களின் பேச்சை எல்லாம் வாங்கிக் கொண்டு அதையே மறுபடியும் நா தழுதழுக்க சொல்லி சப்பை கட்டு கட்டி விடுகிறார். வடிவேலுவின் பேட்டிகளைப் பார்க்கும் போதும் எனக்கு இது தோன்றுவதுண்டு. ஏதோ உலகத்திலேயே அவர் ஒருவர் தான் அடக்கமானவர் மாதிரி ஆமாம்மா, அவரோட நான் நடிச்சது என் பாக்கியம் என்று ஓவர் செண்டிமெண்டுகளை பிழிவார். அத்தனை பெரிய சிரிப்பு நடிகரின் பேட்டி எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். எப்படி இவர் ஸ்கிரீனில் இவ்வளவு பிரமாதப்படுத்துகிறார் என்று எனக்கு சந்தேகம் வருவதுண்டு. நாகேஷ் சொன்னது போல் நம் தமிழ் சினிமாவில் காமெடியன்களில் சிலருக்கு டைமிங் நல்லா இருக்கு, சிலருக்கு டைம் நல்லா இருக்கு! என்பது தான் நினைவுக்கு வருகிறது.



நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையும் பேச அழைக்கும் போது ஒய்.ஜி.மகேந்திரன் நாகேஷைப் பற்றி பல வித எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது. அதில் சில.

கலாட்டா கல்யாணத்தில் சிவாஜியும் நாகேஷும் வாடா போடா என்று பேசிக் கொள்வார்கள். நாகேஷ் ஏதோ பெசி முடித்ததும் சிவாஜி ஜெர்க் விட்டுக் கொண்டு, "ஏண்டா, டயலாக் பேசுறியா?" என்பார். பதிலுக்கு நாகேஷ், "ஏண்டா, நீ இருக்கும் போது யாரும் டயலாக் பேசக் கூடாதா?" என்பார்.

நம்நாடு படத்தில் ஏதோ வெளிநாட்டுக்காரர் போல் உடையணிந்து கொண்டு ஒரு பெரிய நாயுடன் நாகேஷ் வருவார். அதில் வில்லனாக வரும் தங்கவேலு நாயைப் பார்த்து நாகேஷிடம் "ஏன்பா, இது என்ன நாயா?" என்பார். அதுக்கு நாகேஷ், "பின்ன என்ன நீயா?" என்று ஒரு போடு போட்டார். அந்தக் காட்சி எடுத்து முடிந்ததும் தங்கவேலு எம்.ஜி.ஆரிடம் என்னங்க இந்தப் பைய இப்படி ஒரு போடு போட்டானே, தயவு செய்து இந்த சீனை எடுத்துறுங்க என்று கெஞ்சினார். எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே அதை அப்படியே வைத்து விட்டார். எம்.ஜி.ஆரே நாகேஷை அந்த அளவிற்கு ரசித்தார்.

கெளரவம் படத்தில் வீட்டில் கோர்ட் ஒத்திகை பார்க்கும் சீன். சிவாஜி இங்கிலீஷில் பேசி அசத்தி டேக் ஓக்கே ஆயிற்று. எல்லோரும் ஆரவாரமாய் கை தட்டினார்கள். ஆனால் அவர் செட்டில் ஓரத்தில் இருந்த இருந்த எங்களிடம் (நாகேஷும், நானும்) என்னடா எப்படி சீன்? என்றார். நாகேஷ் உடனே கொஞ்சமும் பயப்படாமல் இந்த படத்துல நீங்க பல இடத்துல பாரிஸ்டர் மாதிரி இங்கிலீஷ் பேசி அசத்தியிருக்கீங்க, ஆனா இப்ப நீங்க பேசினது பாரிஸ்டர் இங்கிலீஷ் மாதிரி இல்லை, ராயபுரம் இங்கிலீஷ் மாதிரி இருந்தது. ஸ்டைலாய் இல்லை என்று ஒரு போடு போட்டார். எங்க ரெண்டு பேருக்கும் இதான் தோணுச்சு என்று என்னை வேறு கூட சேர்த்துக் கொண்டார். அதற்கு அவர், போங்கடா தடி மாட்டுப் பசங்களா, நான் என்ன ஒய்.ஜி.பி. ஆரம்பிச்ச இங்கிலீஷ் ஸ்கூல்லயா இங்கிலீஷ் படிச்சேன். நல்லாயில்லைன்னா சொல்ல வேண்டியது தானே என்று உடனே இன்னொரு டேக் எடுத்து அதை சரியாய் பேசி விட்டு ஒரு முறை நாகேஷ் பக்கம் பார்த்தார். நாகேஷ் ஓகே என்று கை காட்டியதும் தான் அவருக்குத் திருப்தி வந்தது.

நாகேஷ் சிவாஜிக்கு சடை என்று பெயர் வைத்திருந்தார். எப்போ பாத்தாலும் மேக்கப் போடு, டயலாக் படி என்று படுத்தும் என்பார். அதே சமயம் கெளரவம் படத்தில் அவர் மேக்கப் அறைக்கு சிவாஜி கணேசனாய் போய் திரும்பி வரும் போது பாரிஸ்டர் ரஜினிகாந்தாய் வெளியே வருவார். மதியம் ஒன்றரை வரை அப்படித் தான் பேசுவார். மதியத்திற்குப் பிறகு கண்ணனாய் தான் திரிவார். அவன் தாண்டா நடிகன், நம்ம எல்லாம் வேஸ்ட் டா என்றும் புகழ்வார்.

நிற்க


ஒய்.ஜி.மகேந்திரன் சிவாஜியின் தீவிர பக்தர் என்று நான் அறிவேன். ஆனால் அவர் நாகேஷிடம் அதே பக்தி கொண்டிருப்பார் என்று இன்று தான் அறிந்தேன். அவர் அந்த ஜாம்பவான்களோடு இருந்த சமயங்கள் ஒவ்வொன்றையும் சிலாகித்துச் சொல்லும் போது அவர்களிடம் அவருக்கு இருக்கும் மரியாதையும் பக்தியும் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. அதனால் தான் அவர் இறந்த பிறகும் இத்தகைய ஒரு விழாவை அவரால் எடுக்க முடிகிறது.

எல்லோரும் பேசி முடித்ததும் நாகேஷின் அற்புதமான சில க்ளிப்பிங்க்ஸ்களை போட்டுக் காட்டினார்கள். கமலஹாசன் சொன்னது போல் ஒரு மனிதரின் இரங்கல் கூட்டத்திற்கு வந்து அதை மறந்து அவரை நினைவு கூறும் இடமெல்லாம் சிரிப்பென்றால் அந்த வாழ்க்கை எத்தகையது! காமெடியனாவே இருந்தாலும்

SERIOUSELY HE IS A LEGAND! HATS OFF!
14 Responses
  1. /எல்லோரும் பேசி முடித்ததும் நாகேஷின் அற்புதமான சில க்ளிப்பிங்க்ஸ்களை போட்டுக் காட்டினார்கள். கமலஹாசன் சொன்னது போல் ஒரு மனிதரின் இரங்கல் கூட்டத்திற்கு வந்து அதை மறந்து அவரை நினைவு கூறும் இடமெல்லாம் சிரிப்பென்றால் அந்த வாழ்க்கை எத்தகையது! காமெடியனாவே இருந்தாலும்//

    உண்மைதான் பிரதீப்.

    வெகுவான நன்றிகள்.. இரங்கல் கூட்டத்தொகுப்பை விரிவாக தந்தமைக்கு..


  2. நல்ல தொகுப்பு.
    நாகேஷ் ஒரு மகா கலைஞன் என்பதில் எந்த கருத்து மாற்றமும் இல்லை.

    ஆனால் எதுக்கு அடிக்கடி நிற்கன்னு நிக்கச் சொல்றீங்க !!!

    அவ்வ்வ்வ்.....


  3. Anonymous Says:

    பதிவு அருமை அறிதான தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. இதோ நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவர்களின் ஒலியஞ்சலையயும் கேட்டு உங்கள் அஞ்சலியையும் செலுத்துங்கள்.

    http://thenkinnam.blogspot.com/2009/02/923.html


  4. Anonymous Says:

    Very good post da..Keep it up..


  5. கூட்டத்துக்கு நாங்களே வந்தது போல் தொகுத்து கொடுத்துள்ளீர்கள்,மிக்க நன்றி.


  6. Anonymous Says:

    THanks for the excellent coverage. I have linked to this post in my blog here - http://awardakodukkaranga.wordpress.com/2009/02/15/நாகேஷ்-அஞ்சலி-கூட்டம்/


  7. Anonymous Says:

    >>> ஒய்.ஜி. பார்த்தசாரதி ஆகியோர் நாகேஷை வாழ்த்தி பேசினார்கள்!>>..


    is the YGP kizham still around..? 'thought he kicked the bucket long time ago..?


  8. சென்ஷி,

    ஒய்.ஜி.மகேந்திரன் அவ்வளவு சிரத்தை எடுத்து நடத்திய நிகழ்ச்சியைப் பற்றி ஒரு சிறு கட்டுரை கூட இல்லையென்றால் எப்படி? நல்ல காரியத்திற்கு ஒரு சிறு அங்கீகாரம்.

    அறிவன்,

    கூட்டத்துல பேசினதையும், நான் பேசுறதையும் குழப்பாம இருக்க தான் சார் அந்த நிற்க...ஆமா நீங்க சொல்றதை பாத்தா பூரா பதிவும் நின்னுட்டே படிச்சுருக்கீங்க போல இருக்கே? ஐய்யோ ஐய்யோ...

    கோவை ரவி,

    பின்னூட்டத்திற்கும் ஒலியஞ்சலுக்கும் நன்றி!

    விக்டர்,

    தேங்க்ஸ் டா...

    வடுவூர் குமார்,

    இன்னும் விரிவா எழுதா வேண்டியது! இந்த சோம்பேறித்தனம் இருக்கே...என்னத்த எழுதி, கிழிச்சி....நன்றி

    ஆர் வீ

    என்னுடைய பதிவை உங்களின் பதிவில் இணைத்ததற்கு நன்றிகள் பல...

    அனானி,

    இதே மாதிரி தான் அவங்களும் தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஷ்லையே பேசினா, ஆமா நீங்க என்ன பத்மா சேஷாத்ரி தானா?


  9. முன்பே தெரியாதலால் கூட்டத்தை மிஸ் பண்ணிட்டேன்.

    நல்ல பதிவு.

    பதிவிட்டதற்கு மிக்க நன்றி நண்பரே..


  10. butterfly,

    en kadan pathivuttu iruppathe! nandri!


  11. பிரதீப்

    பதிவிற்கு நன்றி.

    //"ஏன்பா, இது என்ன நாயா?" என்பார். அதுக்கு நாகேஷ், "பின்ன என்ன நீயா?" //

    நான் பொதுவாக எம்.ஜி.ஆர் படங்களைப் பார்ப்பதில்லை. எனவே இந்த நகைச்சுவைக் காட்சியை பார்த்த நினைவில்லை. படித்துக் கொண்டிருக்கும் போதே நாகேஷ் இதை எப்படி பேசியிருப்பார் என்று யோசனை ஓடியதில் அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது.


  12. சுரேஷ்,

    எம்.ஜி.ஆரின் படங்களை நாகேஷுக்காகவே பார்க்கலாம்!

    "உன் மகனை மடக்கி வை, சீ! அடக்கி வை!!"
    உங்ககிட்ட நிறைய பணம் இருக்கு, என்கிட்ட கொஞ்சம் கூட இல்லை...நீங்க குடுக்கலாம், நான் வாங்கலாம்! சிவபெருமான் கருணை வேண்டும்!!

    மறக்க முடியுமா?

    வருகைக்கு நன்றி!


  13. enakke neril paarththu, kettadhu pola irundhadhu! eppadi ellaroda speechum correct ah recollect panneenga?


  14. gayathri,

    thanks for the comments. every week sunday morning around 10 to 11kalaingar tv is broadcasting this function. if u watch it u will know how many things i have left out. enakku ethu swaarasyamaa irunthatho, athai thaan naan ezhuthi irukken.