32ம் வருட புத்தக சந்தையைப் பற்றி எல்லோரும் பதிந்தாகிவிட்டது என்று நினைக்கிறேன்! சென்ற வாரமே நான் சென்று வந்து விட்ட போதிலும் இப்போது தான் பதிய முடிந்தது. இந்த முறை நான் அதிகம் புத்தகம் வாங்கவில்லை. கண்காட்சிக்குப் போவதற்கு முன்பே இந்த முறை சாரு நிவேதிதாவின் புத்தகத்தை வாங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்! அவருடைய வலைப்பூவை மட்டும் படித்துக் கொண்டேயிருந்தால், எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து, பின் சட்டையை பிடித்து, ஏண்டா என் புக்கை வாங்க மாட்றீங்க என்று கேட்டு விடுவாரோ பயந்தும், சரி மனிதர் ரொம்பவும் தான் பேசுகிறார், ஒரு விஷயமும் இல்லாமல் இவ்வளவு பேச முடியுமா என்று சந்தேகித்தும், அப்படி என்ன தான் இலக்கியம் படைத்திருக்கிறார் என்று வியந்தும் அவருடைய ராஸ லீலா, ஃபேன்ஸி பனியன் [தலைப்பின் இன்னொரு பகுதி இன்னும் மனப்பாடம் ஆகிவில்லை], ஜீரோ டிகிரி என்று வாங்கித் தள்ளி விட்டேன். ஜீரோ டிகிரி ஒரு 60 பக்கம் படித்திருக்கிறேன். ஒரு துளி கூட புரியவில்லை. நாக்கு தள்ளிவிட்டது! முழுதும் படித்து விட்டு, சாருவை கொஞ்சமாவது புரிகிறதா என்று முயற்சி செய்து பார்க்கணும். உயிர்மையில் தான் அதிகம் வாங்கினேன். கா.நா.சு வின் பொய்த் தேவு, மேல் சொன்ன சாருவின் புத்தகங்கள், பாப்லோ நெருடாவின் கவிதையும், மனுஷ்ய புத்திரனின் சில கவிதைத் தொகுப்புகளும் வாங்கினேன். வழக்கம் போல் என் படுக்கையரையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் கிடைக்கவில்லை. மனுஷ்ய புத்திரனிடம் கேட்டு அவரை கொஞ்சம் சங்கடப்படுத்தினேன்! எஸ்.ராமிகிருஷ்ணன் உயிர்மை ஸ்டாலில் வந்திருந்தார். நான் வழக்கம் போல் அவரிடம் சென்று பேசவில்லை...அம்ருதா பதிப்பகத்தில் திலகவதி தொகுத்த முத்திரைகள் பத்து புத்தகங்கள் மிகவும் பிடித்தது. பல தேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்து பத்து பத்து கதைகளாய் பிரித்து ஒரு சின்ன டைரி வடிவில் தொகுத்திருப்பது என் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு எட்டு புத்தகங்களை வாங்கினேன். கிட்டத்தட்ட 315 ரூபாய் ஆனதாய் ஞாபகம். 8 விதமான எழுத்தாளர்களின் எழுத்துக்களும் 80 சிறுகதைகளும் கிடைத்த மகிழ்ச்சி! எங்காவது பயணிக்கும் போது கூடவே எடுத்துச் சென்று விடலாம்! மிகச் சுலபம்!! விகடனில் நான் வாங்குவது கார்ட்டூன்ஸ் தொகுப்புகள் தான். சென்ற முறை கோபுலு, இந்த முறை மதன். மதனின் சிரிப்புத் திருடன் சிங்காரவேலும், ரெட்டைவால் ரெங்குடுவும் கிடைக்கவில்லை. அதை ஏன் ஒரு தொகுதியாக வெளியிடவில்லை? அல்லது என் கண்ணில் படவில்லையா தெரியவில்லை...இப்படியாக இந்த வருட புத்தகத் திருவிழா இனிதே முடிந்தது!

இந்த வார சனிக்கிழமை எலியட்ஸ் கடற்கரையில் சென்னை சங்கமத்தின் இறுதி நாள். சரி நல்லபடியாய் முடித்துக் கொடுத்து விட்டு வருவோமே என்று அங்கு சென்றேன். கடற்கரையின் இடது பக்க சாலை முழுதும் நட்சத்திர ஹோட்டல்களின் அணிவகுப்பு. ஒவ்வொரு ஹோட்டலும் ஒவ்வொரு ஊர்களின் ஐட்டத்தை போட்டு தாக்கிக் கொண்டிருந்தார்கள். விருதுநகர் எண்ணெய் பரோட்டா, திண்டுக்கல் மட்டன் பிரியாணி, செட்டிநாடு இட்லி, மதுரை ஜில் ஜில் ஜிகர்தண்டா, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய், பிரேம விலாஸ் அல்வா...[டோர் லாக், ஜொள்ளு வடியுது தொடைங்க!!] சாப்பாடு விஷயத்தின் அன்று மொத்த தமிழ்நாடும் அங்கு தான் இருந்தது! அந்த சாலையில் அமர்ந்து கொண்டு கையில் குதிரை பொம்மையுடனும், மினுக் மினுக்கென்ற உடையுடன் ஆடி அசைந்து செல்லும் கலைஞர்களை பார்க்க உற்சாகமாய் இருந்தது. தாரை தப்பட்டை, கிராமிய பாடல்கள் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தது போல் சிவமணியின் ஒரு மணி நேர ட்ரம்ஸும், 45 நிமிட வாண வேடிக்கையும் கண்ணுக்கும், காதுக்கும் நல்ல விருந்தாய் அமைந்தது. சிவமணியைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். அவர் மீது எனக்கு ஒன்றும் பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை. ஓவராய் அலட்டுகிறார் என்றே தோன்றும்.! அன்றோடு அந்த எண்ணத்தை அடியோடு ஒழித்து விட்டேன். மனிதர் என்னமாய் தட்டுகிறார். வலுக்கைத் தலையுடன் யாராவது மேடையில் ஏறியிருந்தால், அவர் தலையிலும் தட்டியிருப்பார்! அப்படி ஒரு வாசிப்பு. கிடைத்ததை எல்லாம் தட்டுகிறார். இடைவிடாத அவரின் தட்டல்கள் இசைப் பிராவகமாய் பொங்கி இதயத்தில் இடியென இறங்கியது! ஆனந்தம், பேரானந்தம். அத்தனை பெரிய ஜன சமுத்திரத்தை அந்த ஒரு மணி நேரம் கட்டிப் போட்ட அவரின் வித்தையை நினைத்து வியந்தேன்! அவரிடம் தான் என்ன ஒரு உற்சாகம், என்ன ஒரு உழைப்பு, தான் எடுத்துக் கொண்ட வேலையில் என்ன ஒரு லயிப்பு! சில விஷயங்களை வார்த்தைகளில் விளக்க முடியாது தான்!!
3 Responses
  1. //ஆனந்தம், பேரானந்தம். அத்தனை பெரிய ஜன சமுத்திரத்தை அந்த ஒரு மணி நேரம் கட்டிப் போட்ட அவரின் வித்தையை நினைத்து வியந்தேன்! அவரிடம் தான் என்ன ஒரு உற்சாகம், என்ன ஒரு உழைப்பு, தான் எடுத்துக் கொண்ட வேலையில் என்ன ஒரு லயிப்பு! சில விஷயங்களை வார்த்தைகளில் விளக்க முடியாது தான்!!//


    நிறைய இசைக்கச்சேரிகளில் தனி ஆவர்த்தனம் செய்ததை கண்டதுண்டு!அத்தனை இசைக்கருவிகளுக்கும் மத்தியில் மனிதர் என்னமா கலக்குறாருன்னு பிரம்மிப்பினைத்தான் எப்பொழுதுமே ஏற்படுத்தியிருக்கிறது !

    :)))


  2. Unknown Says:

    பதிவு நல்லா இருக்கு.சாரு ”பேன்ஸி”
    நானும் வாங்கினேன். ஓவர் பில்ட் அப்
    மார்க்கெட்டிங்.


  3. aayilyan,

    sariyaai sonneergal!

    ravi,

    enna panna solreenga..vaangi tholachuttene! sari entha bookum waste nu solla mudiyaathu!