இதற்கு முந்தைய பதிவுகள் இங்கே 1, இங்கே 2

பெற்றோர் சம்மதமில்லாமல் ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்வது எல்லா சமூகங்களிலும் காலம் காலமாய் இருந்து வருகிறது. எல்லோர் வீட்டுப் பரணிலும் யாருக்குமே சொல்லப்படாத ஒரு காதல் திருமணம் தூசு படிந்து கிடக்கத் தான் செய்கிறது! மதுரையில் எங்கள் சமூகத்திலும் அது அதிகரித்திருக்கிறது! அதிலும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் எங்கள் சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களை விடுத்து, வேற்று சாதியினருடனும், வேற்று மதத்தினருடனும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வதாக மதுரையில் இருக்கும் என் நண்பர்கள் நான் அங்கு செல்லும்பொழுதெல்லாம் கண்கள் சிவக்க குற்றம் சாட்டுவார்கள்! அவர்களுக்கு, பதிலாக நான் சிந்துவது ஒரே ஒரு புன்னகை தான்!

கலப்புத் திருமணங்கள் இன்று நேற்று நடப்பவை அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நடந்து கொண்டு தானிருக்கின்றன! பிராமணர்கள், ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் போன்ற வருண பேத கால கட்டத்தில், உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு பிறந்த குழந்தையை சண்டாளர் என்று அழைத்தனர்! வேத காலம், இந்து தர்மத்தை ஒவ்வொருவரும் மனதார கடைபிடித்த காலம், பெண்கள் வீட்டை விட்டே வெளியே வராத காலத்திலேயே அப்படி நடந்திருக்கும் போது இந்தக் காலத்தில் கலப்புத் திருமணங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதும், இல்லாததும் பொல்லாததும் செய்தது போல் புலம்புவதும் சிரிப்பைத் தான் வரவழைக்கின்றன!

ஒன்றை கவனித்தீர்களா? ஒரு பெண் தனக்குப் பிடித்தவனை பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டால் அவள் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டவள் என்கிறார்கள்! ஆனால் கூட ஓடும் அந்தப் பையனை ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டவன் என்று சொல்லாமல் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டான் என்று சொல்கிறார்கள்! ஆணுக்கு ஒரு நியாயம்; பெண்ணுக்கு ஒரு [அ]நியாயம்! அது சரி, ஏன் இப்படி ஓடிப் போகிறார்கள்?

எந்த வீட்டில் பெற்றோர் மகனின்/மகளின் காதலை காது கொடுத்து கேட்கிறார்கள் சொல்லுங்கள்? அப்படியே ஒரு பெண்ணோ பையனோ சொன்ன அடுத்த நிமிடம் அம்மா தாரை தாரையாய் கண்ணீர் வடிப்பதும், அப்பா பூமிக்கும் வானத்திற்கும் குதிப்பதுமாக இருந்தால் எந்த பையனும்/பெண்ணும் இவர்களிடம் சம்மதம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள்?

பையனின் குடும்பத்தை விடுங்கள், அவனையாவது தலையில் தண்ணீர் தெளித்து விட்டு விடுவார்கள்! பெண்கள் தான் பாவமான பாவம்.! அந்தப் பெண் ஒரு செளராஷ்ட்ரிய பையனை காதலித்தாலும், அது எப்படி நீயாக ஒரு மாப்பிள்ளை தேடிக் கொள்வது? எப்படி நீ ஒரு ஆடவனை தலை நிமிர்ந்து பார்க்கலாம்? நான்கு பேர் நம் குடும்பத்தைப் பற்றி என்ன பேசுவார்கள்? நம் மானம் மரியாதை என்ன ஆவது? என்றெல்லாம் சொல்லி ஏதோ அவளின் கற்பே போய் விட்ட மாதிரி [பெண்களுக்கு மட்டும் தான் கற்பு இருக்கிறதென்றால் அப்படி ஒன்று இல்லவே இல்லை] பெற்றோர்கள் நினைக்கிறார்கள்! அம்பிகாபதி, அமராவதி, தேவதாஸ் காலத்திலிருந்து குடும்பத்துடன் உட்கார்ந்து கொண்டு காதல் படங்களாய் பார்க்க வேண்டியது, பக்கத்து வீட்டில் ஒரு பெண் ஓடி விட்டால் அதைப் பற்றி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிசு கிசு பேசிக் கொள்வது அதே தங்கள் வீட்டில் நடந்து விட்டால் குய்யோ முறையோ என்று அழுது புலம்புவது!

சரி, இத்தனை வீராப்பு பேசியவர்கள், ஓடிப் போனவர்களை அப்படியே தண்ணீர் தெளித்து விட வேண்டியது தானே? அதையும் செய்ய மாட்டார்கள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் எல்லா வைராக்கியத்தையும் விட்டு விட்டு மறுபடியும் கொஞ்சிக் குலாவிக் கொள்வது? [இப்போது எங்கே போனார்கள் அந்த நான்கு பேர்?] இதையெல்லாம் அடுத்த செட் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை! எப்படியும் கொஞ்ச நாள் போக்கு காட்டுவார்கள், ஒரு பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து அடுத்த ஓட்டம் தயாராகி விடுகிறது! பிறகு அதே ஐய்யோ, அம்மா...மானம் போச்சு, கெளரவம் போச்சு!! ஏன் தேவையில்லாமல் முதலில் அழுது அரற்ற வேண்டும், பிறகு சேர்த்துக் கொள்ள வேண்டும்? ஏன் இந்த கால தாமதம்? உண்மையில் உங்கள் மகன்/மகள் தனக்குத் தகுந்த வரனை அழைத்து வந்தால் பெருந்தன்மையாய் ஏற்றுக் கொள்ளுங்களேன்! அப்படியே அது தவறானதாக இருந்தாலும் அதை தகுந்த ஆதாரத்துடன் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்!

இது என்ன அவ்வளவு சுலபமா? பெற்றோர்களின் பிரச்சனை தான் என்ன? சரி இதற்கு என்ன தான் செய்வது?

(சீறும்)
4 Responses
  1. Divya Says:

    \\ஏன் தேவையில்லாமல் முதலில் அழுது அரற்ற வேண்டும், பிறகு சேர்த்துக் கொள்ள வேண்டும்? ஏன் இந்த கால தாமதம்? \\

    சரியான கேள்வி!!


  2. Divya Says:

    \\உங்கள் மகன்/மகள் தனக்குத் தகுந்த வரனை அழைத்து வந்தால் பெருந்தன்மையாய் ஏற்றுக் கொள்ளுங்களேன்! அப்படியே அது தவறானதாக இருந்தாலும் அதை தகுந்த ஆதாரத்துடன் அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்!\

    எடுத்துச் சொல்லியும் ,புரிந்துக்கொள்ளாமல் 'ஓடி போனவர்கள் தான் அதிகம்!

    பெற்றவர்களின் புரிந்துக் கொள்தலை விட,
    பிள்ளைகளின் புரிந்துக் கொள்ளாமையே சில சமயங்களில் தவறான முடிவெடுக்க வைக்கிறது.


  3. Divya Says:

    \\இது என்ன அவ்வளவு சுலபமா? பெற்றோர்களின் பிரச்சனை தான் என்ன? சரி இதற்கு என்ன தான் செய்வது?\

    விடைகளைக் காண ஆவலுடன்.......


  4. நன்றி திவ்யா, விடைகள் சரியாக இருக்கிறதா? பதிவு போட்டாச்சுப்பா...