யாரும் சிரிக்கக் கூச்டாது சொல்லிச்ட்ச்டேன்! இந்த முறை என் கீ போர்ச்டில் ச் அட்சித்தால், ச் உச்டன் ச்ட
விழுவதால் என்னால் வலை பதிய முச்டியவில்லை. அது எப்பட்சி மீண்ட்சும் மீண்ச்டும் எனக்கு மச்ட்ச்டும் இப்பட்சி நச்டக்கிறது?

புரியாதவர்களுக்கு!

யாரும் சிரிக்கக் கூடாது சொல்லிட்டேன்! இந்த முறை என் கீ போர்டில் ட அடித்தால் ச் வுடன் சேர்ந்து விழுவதால்
என்னால் வலை பதிய முடியவில்லை. அது எப்படி மீண்டும் மீண்டும் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?

கதை - எழுதியாகிவிட்டது
கவிதை - எழுதியாகிவிட்டது
கட்டுரை - எழுதியாகிவிட்டது
ஓவியம் - வரைந்தாகிவிட்டது
விமர்சனம் - எழுதியாகிவிட்டது
அனுபவங்கள் - எழுதியாகிவிட்டது

திரைக்கதை - இதோ...

இது என்னுடைய முதல் திரைக்கதை அனுபவம்! இதை, குத்து பாட்டு 2 போட்டா படம் பிச்சிக்கும் என்று சொல்லாத தயாரிப்பாளர் கிடைத்தால் 5 அல்லது 7 நிமிட குறும்படமாக எடுக்கலாம். ஏதோ நான் படித்த மற்றும் பார்த்த அனுபவங்களைக் கொண்டு இதை எழுதியிருக்கிறேன். நம் நாட்டின் கல்வி முறையையும், பரிட்சை பற்றிய பயமும் ஒரு சிறுவனின் பார்வையில் இருந்து சொல்ல முயன்றிருக்கிறேன்..இது நம்மில் பலரின் அனுபவமாகக் கூட இருக்கலாம்.

ஓபன் பண்ணா! [ஆரம்பிச்சுட்டான்யா!]


அதிகாலை ஒரு தெரு.

தூரத்தில் ஒரு வீட்டில் அலாரத்தின் சத்தம்.

அப்பா: டேய் மணி, எந்திரி..மணி 5 ஆச்சு பாரு..எந்திரி. இன்னைக்கு என்ன பரிட்சை?

மணி: [கண்களை கசக்கி கொண்டே] கணக்கு!

அப்பா: போ, போய் பல்லை விலக்கிட்டு, முகம் கழுவிட்டு படி..[அப்பா திரும்பி படுத்துக் கொள்கிறார். மணி வேண்டா வெறுப்புடன் நடந்து பாத்ரூம் செல்கிறான்.]

மணி முகம் கழுவிய பிறகும் இன்னும் தூக்கக் கலக்கத்துடன் இருக்கிறான். கணக்கு புத்தகத்தை பையில் இருந்து எடுக்கிறான். கணக்கு 7 close-upல் காட்டப் படுகிறது. அதை தூக்கக் கலக்கத்துடனும் வேண்டா வெறுப்புடனும் பார்க்கிறான். ஏதோ ஒரு பக்கத்தை புரட்டுகிறான். தூக்கத்தில் பக்கங்கள் மங்கலாகத் தெரிகிறது. [பின்னனியில் ஒரு தாலட்டு இசை பதிவாகிறது.] அப்படியே புத்தகத்தின் மேல் தலை கவிழ்ந்து படுத்துக் கொள்கிறான்.

அப்பா: [படுக்கையிலிருந்து] என்னடா தூங்குறியா?

மணி: [வாயில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டே] ஒன்னும் தூங்கலை..படிச்சிட்டு தான் இருக்கேன்.



காலை

மணி குளித்து சீருடை அணிந்து சாமி கும்பிடுகிறான்.

மணி: பிள்ளையாரப்பா..இன்னைக்கு கணக்கு பரிட்சை!..உன்னை தான் நம்பி இருக்கேன். பரிட்சை ஈஸியா இருக்கனும். அந்த சோடாபுட்டி வாத்தியார் வரக் கூடாது....இப்போ என் தலையில குட்டிக்கிறேன்...மகனே சொதப்புன..சாய்ந்தரம் உன் தலையில கொட்டுவேன்டீ! ஆமா..[பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டே திருநீறை எடுத்து பூசிக் கொள்கிறான்]
மணி பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்புகிறான். அப்பா வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார்.

அப்பா: என்னடா ஒழுங்கா படிச்சியா? பரிட்சையை ஒழுங்கா பாத்து எழுது!

மணி: எங்க பள்ளிகூடத்துல பாத்து எல்லாம் எழுத விட மாட்டங்கப்பா..

அப்பா: அடி படவா..[மணி ஓடுகிறான்] பாஸ் பண்ணாம வீட்டுக்கு வந்துராதே..இதெல்லாம் எங்க உருப்புடப்போகுது?! புள்ளைய பெத்துருக்கா பாரு..அவ அண்ணன்காரன் மாறியே..[உள்ளேயிருந்து ஒரு பெண் குரல்: எங்க வீட்டை குறை சொல்லலைன்னா உங்களுக்கு பொழுது விடியாதே!]

மணி குழப்பத்துடன் நடந்து செல்கிறான். எத்தனை முறை படித்திருந்தாலும் சூத்திரங்கள் ஞாபகத்திற்கு வர மறுக்கின்றன. [அவன் தோல்பை சிலுவையாய் மாறுகிறது. அவர் அப்பாவும், வாத்தியாரும் பிரம்பால் அடித்துக் கொண்டே பின்னால் வருகிறார்கள்! ]

டீ கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன் மணியை பார்த்து, "என்னடா பரிட்சையா இன்னைக்கு?" என்று சிரிக்கிறான். மணிக்கு அவனை பார்க்க பொறாமையாய் இருக்கிறது. தலை குனிந்து நடக்கிறான். ரோட்டில் எல்லோரையும் பார்த்து இவர்களுக்கு எல்லாம் இன்று கணக்கு பரிட்சை இல்லையே..என்ற ஏக்கத்துடன் நடக்கிறான்.



பள்ளிக்கூடம்

கேள்வித் தாள் கொடுக்கப் படுகிறது. மணிக்கு ஒன்றும் புரியவில்லை. கண்களில் கண்ணீர் வந்து நிற்பதால் கேள்வித்தாள் மங்கலாய் தெரிகிறது..வேர்க்கிறது. அந்த வேர்வையில் அவன் பூசியிருந்த திருநீறு கரைகிறது..

பிள்ளையாரை குட்டுவது போல் மணி கற்பனை செய்து கொள்கிறான்!


சுபம்
dumb charat என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழில் எனக்குத் தெரிந்த வரை, மெளன மொழி அல்லது படம் பேர் சொல்லி விளையாடுவோம்டா என்பார்கள். படம் பேர் சொல்லி என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் நான் சரி என்று தலையாட்டி முடித்திருப்பேன். அந்த விளையாட்டு எனக்கு அவ்வளவு பிடிக்கும். எனக்குத் தெரிந்து, நான் கேப்டனாய் உலா வரும் ஒரே விளையாட்டு இது தான்! சமீபத்தில் உறவினர்களுடன் மறுபடியும் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தது. என் அக்காவிற்கு என் சினிமா அறிவைப் பற்றி நன்றாய் தெரியும். டேய், நம்ம ஒரு டீம்டா என்று முதலில் இடம் போட்டு வைத்து விட்டார். என் எதிர் அணியில் அண்ணன், அண்ணி மற்றும் சில சுண்டான்கள். எங்கள் அணியில் நான், அக்கா மற்றும் சில சுண்டான்கள். என் அண்ணனுக்கு அதிகம் சினிமா அறிவு கிடையாது. ஆனால் அண்ணி சினிமா அறிவு இந்த அளவுக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் யாரு, என் பேக்ரவுண்ட் என்ன என்ற ரேஞ்சில் நான் பீத்திக் கொண்டிருந்தேன்.

ரூல்ஸ் இது தான்: (உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும்)

1. ஒரு அணியில் உள்ளவர் இன்னொரு அணியில் உள்ளவர் யாரிடமாவது ஒரு திரைப்படத்தின் பெயரை அவர் காதில் சொல்ல வேண்டும்.
2. காதில் வாங்கிய நபர் தன்னுடைய அணிக்கு வாயசைக்காமல் நடித்துக் காட்டி, அதை அந்த அணியில் மற்றவர்கள் சொல்ல வேண்டும்.
3. இத்தனை நிமிஷத்திற்குள் சொல்ல வேண்டும் என்று நாங்கள் டைம் செட் செய்து கொள்வதில்லை. (வேண்டும் என்றால் வைத்துக் கொள்ளலாம்)

நான் முதலில் என் அண்ணன் காதில் சென்று பல்லவன் என்ற தமிழ்த் திரைக்காவியத்தைக் கூறினேன். அவர் கடுப்பாகி, அப்படி எல்லாம் படமே வரலை என்றார். அதற்குள் என் அணியில் எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் சொன்னா சரியா இருக்கும், போய் நடிங்க என்றேன். இதை எல்லாம் எப்பிட்றா நடிக்கிறது என்று என்னை அநியாயத்திற்கு முறைத்து விட்டு நடிக்க ஆரம்பித்தார். ஸ்டேரிங்கை ஓட்டினார். கியர் போட்டார். மனிதர் கிட்டத்தட்ட பஸ்ஸையே ஓட்டி விட்டார். ஒன்னும் நடக்கல. எங்களுக்கு சிரிப்பு தாங்க முடியலை. ஒரு வழியாய் எல்லோரும் வெறுத்துப் போய் கடைசியில் நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டியிருந்தது. அண்ணன் சோர்ந்து போய் உட்கார்ந்து கொண்டார்.

அடுத்து என் டர்ன். இதெல்லாம் எனக்கு சாதரணம்டா என்று கிளம்பினேன், அங்கு அண்ணி இருப்பது தெரியாமல்..அவர்கள் என் காதில் சொல்லிய படம் என்ன தெரியுமா? கும்மாளம். இதெல்லாம் எப்படி நடிக்கிறது என்றேன்? சோர்ந்து போயிருந்த அண்ணன் எழுந்து நீ பல்லவன் சொன்னியே அப்போ என்னைப் பத்தி கொஞ்சமாவது நெனைச்சி பாத்தியாடா என்று கதறினார். தீதும் நன்றும் பிறர் தர வாரா வுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டு நடிக்க ஆரம்பித்தேன். கும்மாளத்தை எப்படி நடித்துக் காட்டுவது சொல்லுங்கள்? நானும் மாக்கான் மாதிரி தைய தக்கா என்று குதிக்கிறேன்..ஓட்றேன், ஆட்றேன்..என் அக்காவுக்கு சிரிக்கவே சரியாய் இருக்கிறது, அவள் பதில் சொல்லக்கூட முயற்சிக்கவில்லை. பெரும் தோல்வி. எங்கள் அணியில் கிட்டத்தட்ட ஒரு 40 வயதானவர் இருந்தார். அவரிடம் ராஜபார்ட் ரங்கதுரை படத்தை சொல்லியிருந்தார்கள். பாவம் அவர் பதறி விட்டார். அவருக்கு நம்பிக்கையே இல்லை. சும்மா நடிங்க என்றேன். கஷ்டபட்டு ஏதேதோ செய்தார். நான் சரியான பதிலைத் தந்ததும் அவரால் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இந்தச் சின்ன வயதில் இத்தனை அறிவா என்ற ரேஞ்சுக்கு கையை கும்பிட்டுக் கொண்டே என் அருகே வந்து அமர்ந்தவரை ஆஸ்வாசப்படுத்தி அமர வைத்தோம்.இன்னொரு முறை நான் சென்றேன். இப்போது அவர்கள் சொன்னது அழகன். ஒரே வார்த்தை என்று சைகை காட்டினேன். நடிக்காமல் பேசாமல் நின்றேன். ஒரு புன் முறுவல் பூத்தேன். என் முகத்தை சுட்டு விரலால் காட்டினேன். ஒரு சுண்டான் ஆதிவாசி என்றான். நான் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். தோல்வியை ஒப்புக் கொண்டேன். அதற்குள் எதிரணியில் இருந்தவர்கள் உனக்கு நடிக்கவே தெரியலை, மம்முட்டி படம் தானே, மம்பட்டி எடுத்து வேலை செய்ற மாதிரி நடிச்சா ஈஸீயா சொல்லிடலாம் என்றார்கள். இந்த அளவுக்கு எனக்கு யோசனை ஓடவில்லை. இனிமேல் நாம் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன்.

அடுத்த முறை நண்பர்களுடன் விளையாடினேன். இந்த முறை என் தம்பி என் அணியில் இருந்தான். நடிக்க ஆரம்பிக்கும் முன் சில கேள்விகளை கேட்போம். பழைய படமா? அவன் ஆமாம் என்று தலையாட்டுவான். சில பேருக்கு அப்படி ஒரு படம் வந்ததே தெரியாது என்றால் கஷ்டம் தான். எத்தனை வார்த்தைகளோ அதை கையால் எண்ணி சொல்லி விடுவான். அதனால் ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணியை யாரும் சொல்வதில்லை. அவன் எண்ணி முடிப்பதற்குள் சொல்லி விடுவோம். முதலில் என் அணிக்காரன் நடிக்க வந்தான். நான் தயார். பழைய படம் என்று கையை பின் பக்கம் இழுத்து தலையை சாய்த்து சொன்னான். அவன் நிமிர்வதற்குள் குலேபகாவலி என்றேன். ஆமாம் என்று வந்து அமர்ந்து விட்டான். எதிரணியில் வெறுத்தே போனார்கள். அடுத்து இன்னொருவன் நடிக்க வந்தான். இடது கையை ஏந்துவது போல் வைத்துக் கொண்டு வலது கை விரல்களால் நடப்பது போல் செய்து காட்டினான். என் தம்பி நண்டு என்றான். அதுவும் சரி. அடுத்து சீவலப்பேரி பாண்டி என்று பெருமையாயும் இதை எப்படி உன் அணியில் கண்டு பிடிக்கிறார்கள் பார்ப்போம் என்ற ரேஞ்சுக்கு எதிரணியினர் சொல்லி விட்டிருந்தார்கள். எங்கள் அணியில் நடிக்க வந்தவன் 2 வார்த்தை, இடைப்பட்ட காலப் படம் என்ற சைகை செய்து, இடுப்பில் வேட்டியை ஏத்தி கட்டுவது போல் செய்து, பின்னாலிருந்து அரிவாள் எடுப்பது மாதிரி சைகை செய்தான். முடிந்தது. வந்து உட்கார்ந்து விட்டான். நெக்ஸ்ட் என்றோம். எதிரணியில் இருந்த ஒரு நண்பி, இவன் இருந்தா நான் இந்த விளையாட்டுக்கு வர்ல என்று என்னை கை காட்டி சொன்னாள். அடுத்து என் தம்பி உள்ளே போனான். 13ம் நம்பர் வீடு. இதை தான் என் தம்பியின் காதில் சொன்னார்கள் என்று ஞாபகம். சொல்லிவிட்டு, இதையும் உங்க அண்ணன் சொல்லிடுவானா என்று கேட்டிருக்கிறான். என் தம்பி, வந்து பாரேன் என்று நடிக்க வந்தான். பேய் மாதிரி குரூரமாய் ஏதோ செய்தவுடன் சரியான பதிலை சொல்லி விட்டொம். நான் மிகவும் கஷ்டப்பட்டும் சொல்லாத படம், சந்தியா ராகம். அதற்காக என் நண்பன் இந்தியாவை எல்லாம் நடிப்பில் கொண்டு வந்தான். சா·ப்ட்வேர் இன்சினியர்கள் ஆங்கிலப் படங்களின் பெயர்களைக் கொண்டு ஆபிஸீல் விளையாடுகிறார்கள். நான் அதில் பூஜ்யம். இனிமே தமிழ் படங்களை சொல்லி நாம் விளையாடவே முடியாது, ஏதாவது சீன் நடிச்சு காட்டி எந்தப் படம்னு கண்டுபிடிக்கலாம் என்று என் நண்பன் ஒருவன் யோசனை சொல்லியிருக்கிறான். வெற்றியோ, தோல்வியோ இந்த விளையாட்டையும், அது எங்களுக்குத் தந்த இனிமையான அனுபவங்களையும் நான் நினைத்து நினைத்துப் பார்த்து சிரிக்கிறேன். ராட்டினத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, அது சொய்ங்கென்று கீழிறங்கும் போது உண்டாகும் ஒரு குதூகலமும், உற்சாகமும் எனக்கு அதை நினைத்துப் பார்க்கும் போது ஏற்படுகிறது. நீங்களும் விளையாடிப் பாருங்கள்!

முன்னாலேயே எழுத வேண்டிய பின்குறிப்பு:

அதான் படிச்சாசுல்ல, அப்படியே ரைட்ல அந்தப் படத்தை க்ளிக்கி, நமக்கு ஒரு வோட்டை போட்றது?! இது தமிழக அரசு வோட்டு மாதிரி இல்லைங்க; ஓட்டு போட்றவங்களுக்கும் ஏதோ பரிசு தர்றாங்களாம். பாத்துக்குங்க. அவ்வளவு தான் சொல்வேன்!