அம்மாவின் குரல் லேசாய் என் காதில் விழுந்தது. இப்போது தான் விளையாட வந்தேன்..அதற்குள் என்ன அவசரமோ, போம்மா..விளையாடிட்டு வர்றேன் என்று ஓடுகிறேன். அம்மாவின் கைகள் என் கன்னத்தில் பட்டது..நான் ஓடிவிட்டேனே, அதற்குள் என்னை பிடித்து விட்டாளா? இப்போது கொஞ்சம் பக்கத்தில் அவள் குரல் கேட்டது..கன்னத்தில் தட்டுகிறாள், ராஜா டேய், அவள் குரல் உடைகிறது..என்னால் கண்களை திறக்க முடியவில்லை..எந்திரிப்பா..டேய், இங்கே பாருடா..ஐயோ, தாத்தாடா..

கஷ்டப்பட்டு கண்கள் திறந்தேன். ஒன்றும் புரியவில்லை. நான் விளையாடிக் கொண்டிருந்தேனே..எல்லாம் கனவா? மங்கலாக ஒருவர் அங்கே அப்பாவுடன் பேசிக் கொண்டே நிற்கிறார். யாரிவர்? கண்கள் தோய்த்து பார்த்தேன். மாமா..அவர் என்னை பார்த்து வழக்கமாய் சிரிக்கும் சிரிப்பு மட்டும் இல்லை. அம்மாவின் உடைந்த குரல். ராஜா, தாத்தா இறந்து போயிட்டாங்கப்பா..அழுகிறாள். அதே உடைந்த குரலில் பேசுகிறாள், எந்திரி..பாட்டி வீட்டுக்கு போகனும்..சீக்கிரம்..அழுகை..அம்மாவை தட்டி கேட்டேன், அப்போ ஸ்கூல்?

பாட்டி வீடு. ஆமா..தாத்தா செத்து போயிட்ட பாட்டி வீடு! செத்துப் போயிட்டா சாமி ஆயிடுவாங்கன்னு அம்மா சொல்லி இருக்கா? சாமி ஆனா ஏன் அழறாங்க? புரியலை..எனக்கு அழ வரலை. பாட்டி வீட்ல எல்லாரும் அழறாங்க..தாத்தாவை ஒரு சேர்ல உட்கார வச்சு மாலை எல்லாம் போட்ருந்தாங்க. அம்மா கூட போய் தாத்தாவை பக்கத்துல பாத்தேன். மூக்குல பஞ்சு. வாய் ஆன்னு இருந்தது..சாப்புடும் போது செத்துப் போயிட்டாரோ? கொஞ்சம் பயம்மா இருக்கு..

அப்புறம் நான் மாமா பசங்களோட விளையாட போயிட்டேன். வீடு பெரிய விடாச்சா..பின்னாடி நிறைய மண்ணு கொட்டி இருக்கும்..அங்கே போயி வீடு கட்டி விளையாடுவோம். எல்லா பேர பசங்களும் வாங்கன்னு கூப்பிட்டு கையில எண்ணய ஊத்தி தாத்தா வழுக்க மண்டையில தடவ சொன்னாங்க..எங்களுக்கு ஒரே சிரிப்பு..நான் தான் பெரிய பையனாம், சிரிக்க கூடாதாம். இந்த சின்ன மடையன் தான் சிரிப்பு காட்டிர்றான்..நான் என்ன செய்யட்டும்? கை எல்லாம் பிசு பிசுன்னு ஒரே எண்ண..

அப்புறம் தாத்தாவ வெளியே படுக்க வச்சு என்னமோ பூஜை பண்ணாங்க..எங்களை எல்லாம் சுத்தி வர சொன்னாங்க..பக்கத்து வீட்ல எல்லாரும் பாக்குறாங்க..கொஞ்சம் அமைதியா இருந்த அம்மாவும் பாட்டியும் மறுபடியும் கத்தி கத்தி அழறாங்க..எனக்கு இப்போ சிரிப்பு வர்ல..சின்ன மடையனும் சிரிக்கல..அவனுக்கு ஒன்னும் புரியாம முழிக்கிறான்..அப்புறம் தாத்தாவ தூக்கிட்டு போயிட்டாங்க ஒரு வொயிட் கலர் வேன்ல வச்சு..அப்பா, அம்மா, மாமா வேன்ல போயிட்டாங்க.

அத்த, சித்தி எங்க எல்லாரையும் குளிப்பாட்டி விட்டுட்டு வீடு பூரா தண்ணியாலே தொடச்சு விட்றாங்க..சின்ன மடையனை வம்புக்கிழுத்து நான் ஓட்றேன், அவனால முடியலை..வழுக்கி வழுக்கி விழுறான். பாவம்! அத்த திட்றாங்க, கத்துறாங்க..யாரு கேக்குறது?

சாய்ந்திரம் ஆச்சு..ஸ்கூலு முடிஞ்சுருக்கும்.அம்மா வந்துட்டா..தாத்தவ காணோம். நாளைக்கு ஸ்கூலுக்கு போனுமாம்மான்றேன்? அவ பதிலே சொல்லல..எனக்கு ஒரு தாத்தா தானாம்மா இருக்காங்கன்னேன்? பாட்டி என் கைய புடிச்சி ஓன்னு அழறா..சின்ன மடையன் அங்கேயிருந்து பாத்து சிரிக்கிறான்!


2 Responses
  1. Sivakumar Says:

    Mmm nalla karpanai! Keep it up!


  2. நல்ல நடை, நல்ல கற்பனை. வாழ்த்துக்கள்.