இடம்: லக்கேஜ் செக்ஷன் - பெங்களூர் சிட்டி ஜங்க்ஷன்

நான் - சார், வண்டியை பேக் பண்ணனும்.
அவர் - எங்கே போகனும்?
நான் - சென்னை
அவர் - சென்னைக்கெல்லாம் பேக் பண்ணத் தேவையில்லை. உங்ககிட்ட பணம் நிறைய இருந்தா சொல்லுங்க பேக் பண்ணலாம்.
நான் - அய்யோ அப்படி எல்லாம் இல்லை சார்.
அவர் - அப்போ இந்த ஃபாரத்தை ஃபில் பண்ணி வண்டியை ரயில்ல ஏத்துங்க.

என்ன தான் படித்தவர்களாக இருந்தாலும் அரசாங்க விண்ணப்பத்தை ஒரே முறையில் யாரிடமும் கேட்காமல் பூர்த்தி செய்வது என்பது கஷ்டம் தான் போலும். ஒரு விண்ணப்பத்தில் எழுதி அடித்து, இன்னொரு விண்ணப்பத்தை அந்த அரசாங்க அதிகாரியிடம் வாங்கிக் கொண்டேன். இந்த முறை விண்ணப்பத்துடன் முறைப்பையும் இலவசமாக தந்தார்!

வாங்கி பூர்த்தி செய்து உள்ளே போகும்போது அந்த முறைத்தவர் மட்டும் இருந்தார். அந்த முதல் நபர் இல்லை. அவர் ரிடையர்ட் ஆக இன்னும் 5 நாள் இருக்கும் என்று தோன்றியது. குல்லாய் அணிந்து வெள்ளை தாடி வைத்திருந்தார். நல்ல வாட்டசாட்டமாய் இருந்தார். இப்படி எல்லாம் அவரை வர்ணித்து நேரத்தை வீணாக்கப் போவதில்லை. நேரா விஷயத்துக்கு வர்றேன்.

அவர் - வண்டி மதிப்பு என்ன?
நான் - 46,000 வாங்கினேன்.
அவர் - இந்த பணத்துக்கு இன்சுரன்ஸ் போட்டா நிறைய பணம் கட்ட வேண்டி வரும்.
நான் - இல்லை, நான் போன வருஷம் வாங்கும்போது அந்த விலை.
அவர் - அப்போ, இப்போ ஒரு 10,000 ரூபாய் இருக்குமா?
நான் - நோ, நோ..36,000 இருக்கும்.
அவர் [மறுபடியும்!] - அந்த விலைக்கு கணக்கு போட்டா 650 ரூபாய் வருது. நான் அட்ஜஸ் பண்ணி போட்றேன்.
நான் [சந்தேகத்துடன்!] - இல்லை பரவாயில்லை, என்ன வருதோ போடுங்க, நான் கட்டிர்றேன்.
அவர் [நான் சொல்வதை கேட்காமல்] - 400 ரூபாய் வருது, 450 கொடுங்க!
நான் - ஆனா நீங்க 400 ரூபாய் தானே ரசீத்ல எழுதி இருக்கீங்க?
அவர் - நான் அட்ஜஸ் பண்ணியிருக்கேன்ல?
நான் - நான் உங்களை அட்ஜஸ் பண்ண சொல்லவே இல்லையே சார். என்ன வருதோ அதைப் போடுங்க, நான் பணம் கட்ட தயாரா இருக்கேன். ஸாரி எனக்கு லஞ்சம் கொடுக்க இஷ்டமில்லை. தயவு செய்து லஞ்சம் வாங்காதீங்க!
அவர் - [தலை தாழ்த்திக் கொண்டு] சரி சரி 400 ரூபாய் கொடுத்துட்டு போங்க..[அவரால் என்னை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை!]

ஒரு வழியாய் ரசீதை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏற்றச் சென்றேன். ரயிலில் வண்டியை ஏற்ற ஒரு பலகை கூட இல்லை..4 பேர் அந்த வண்டியை ஆளுக்கு ஒரு கை தூக்கி ரயிலில் வைத்து விட்டு ம்ம்..கொடுங்க சார் என்று ஏதோ கொடுத்து வைத்தது போல் கேட்டார்கள். தலையெழுத்து என்று ஒரு 20 ரூபாய் நோட்டை நீட்டினேன். என்னா சார், சைக்கிளா தூக்கி வச்சோம், 100 குடு சார் என்றான் ஒருவன், இத்தனை பேரு எப்படி இந்த 20 ரூபாய் எடுத்துக்குறது என்று சட்டம் பேசினான். 4 பேரு கையை கொடுத்துட்டு 100 ரூபா கேட்டா எப்படி என்று சண்டைக்கு போனேன். வேணும்னா இதை வாங்கிக்குங்க என்றேன். அதற்கு அவர்கள் போ சார், போ..என்றார்கள். கடைசி வரை அந்த 20 ரூபாயை அவர்கள் வாங்கவில்லை. மகனே, 20 ரூபாயா நீட்றே, நாளைக்கு உன் வண்டிய பாரு என்பது போல எல்லோரும் ஒரு பார்வை பார்த்தனர்.

இடம் : சென்னை சென்ட்ரல்

ஒரு போலிஸ் தூரத்தில் அமர்ந்திருக்கிறார். யாரோ ஒருவன் நான் அங்கு சென்றவுடன் உங்க வண்டியா, ஒரு 30 ரூபா கொடுங்க என்ட்ரி பாஸ் போடனும் என்கிறான். அவனிடம் ரயில்வே ஊழியன் என்ற எந்த அடையாளமும் இல்லை. வேறு வழியின்றி கொடுத்தவுடன் வண்டியை இறக்கிவிட்டு பெட்ரோல் இருக்கா சார்? ஒரு சொட்டு இருந்தாலும் 2500 ரூபா ஃபைன் என்று பயமுறுத்துகிறான். நானும் பெட்ரோல் ரிசர்வில் இருந்ததால் எடுக்கவில்லை.

வண்டியைப் பார்த்தேன். இடது பக்க கண்ணாடியைக் காணவில்லை. வண்டி ஸ்டார்ட் ஆகாத படி வயரை புடுங்கி விட்டிருந்தார்கள்!! அந்த நேரத்தில் அன்பே சிவம் படத்தில் மாதவன் கமலிடம் பேசும் காட்சி ஞாபகம் வந்தது..

"இப்பொ எல்லாம் மனுஷனுக்கு பசிச்சா மனுஷனையே அடிச்சு சாப்பிட்றான் சார்! எனக்கும் தான் பசிக்குது!" என்பார் அப்பாவியாய்! அதே நிலையில் நானும் நின்று கொண்டிருந்தேன். இதெல்லாம் சும்மா விடாதீங்க, கம்ப்ளயன்ட் பண்ணுங்க என்றார் ஒரு பிராமண பெரியவர். அதற்கு அந்த பையன் சார், நான் சொல்றதைக் கேளுங்க, முதல்ல வெளியே போக பாருங்க..இதுல எல்லாம் மாட்டுனீங்கன்னா தேவையில்லாத பிரச்சனை தான் வரும் என்றான். வண்டியில் பெட்ரோலும், அந்த 2500 ரூபாய் ஃபைனும் என் கண் முன்னே வந்து சென்றது..என் மீதே எனக்கு வெறுப்பாய் இருந்தது..

அந்தப் போலீஸ் அந்தப் பையனிடம் நீயே பார்த்து முடிச்சுடு என்று எஙகளை விட்டு விட்டார். வெளியே வந்தவுடன் அந்தப் பையனுக்கு 300 ரூபாய் அழ வேண்டி இருந்தது! சே! பெட்ரோல் இல்லையென்றால் அவர்களை உண்டு இல்லையென்று ஆக்கி இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாலும், அப்படி என்ன செய்து விட முடியும் என்னால் என்ற உண்மையும் உணர்ந்தேன். 2500 என்று வரும்போது நானும் என் நேர்மையை கை விட வேண்டி இருக்கிறது. நிச்சயமாக 2500 தானா என்று கூட எனக்குத் தெரியாது. இந்த மாதிரி இடங்களில் நம்மை அறியாமல் ஒரு பயம் வந்து தொற்றிக் கொள்வது இயற்கை ஆகிவிட்டது!

இவர்களைப் பற்றி புகார் கொடுக்கப் போனால் அங்கேயும் ஒரு ஏஜன்ட் வந்து சார், நீங்களா புகார் கொடுக்கனும்னா லேட் ஆகும், எனக்கு ஒரு 50 ரூபா தள்ளினீங்கன்னா காரியம் ஜரூரா நடக்கும் என்று சொன்னால் கூட ஆச்சர்யமில்லை!!

4 Responses
  1. இப்படி நாம் பிரச்னையில் மாட்டக் காரணம் நமக்கு விதிமுறைகள் சரியாக, முழுமையாகத் தெரியாதது. எனவே இதுபோன்ற தகவல்களை எழுதி எங்காவது சேர்த்து வைக்கவேண்டும்.

    அரசு தொடர்பான ரயில்வே போன்ற இடங்களில் கிடைக்கும் வசதிகள் மிக மோசமானவை. ஒருமுறை கால் நடக்க முடியாத ஒருவரை சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் சக்கர இருக்கையில் வைத்து வெளியே கொண்டுவருவதற்கு எதை எப்படிச் செய்வது என்று தெரியாமல் விழித்து எக்கச்சக்கமாக செலவு செய்ய வேண்டி வந்தது!


  2. Desikan Says:

    பிரதீப்,

    நிங்கள் கூறியது தினமும் நடப்பது. சில சமயம் எனக்கு தோன்றும், கொஞ்சம் வயதானவுடன் இந்தியன் தாத்தா போல் மேக்கப் செய்து கொள்ளலாமா என்று


  3. Anonymous Says:

    Even If we know all the rules and procedures to be followed.. these things will not be vanished. It is a cancer of our society and can not be cured.


  4. நிஜமாகவே பிபி எகிறுகிறது படிக்க படிக்க...எப்படித்தான் சரி செய்வதோ என்ற கவலை வருகிறது...ம்...நல்ல பதிவு...