சரி எத்தனையோ வெட்டி பேச்சு பேசியாச்சு..கொஞ்சம் உருப்படியா ஏதாவது பேசுவோம்னு நினைக்கிறேன்!

சமீபத்துல ராகுல்ஜியோட பொதுவுடைமை தான் என்ன? படிக்க நேர்ந்தது. 100 பக்கங்கள் கொண்ட புத்தகம் தான்..அதற்குள் எத்தனை விதமான
சிந்தனைகள்! எவ்வளவு ஆழமான கருத்துக்கள்! 1946ல் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார்! ராகுல்ஜி என்பவர் விஞ்ஞானியாக இருந்து பிறகு சமுதாய
ஆராய்ச்சியில் இறங்கி விட்டார் என்று ஞாபகம். அவர் எழுதிய வால்கா முதல் கங்கை வரை படித்தவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாய் தெரிந்திருக்கும்.
அது ஒரு மனித ஆராய்ச்சி நூல்! வால்கா நதியில் ஆரம்பித்து மனித வாழ்க்கையை சிறுகதைகளாக அற்புதமாய் தந்திருப்பார்!

நிற்க

பொதுவுடைமை தான் என்ன? என்ற புத்தகத்தில் இவர் முதலாளித்துவத்தையும், பொதுவுடைமைக் கொள்கையையும் ஒப்பிட்டு எது சிறந்தது, அது எப்படி என்று
என்னைப் போன்ற பாமரர்களுக்கும் புரியும்படி விளக்கி உள்ளார்!

பொதுவுடைமை தான் என்ன?

இந்த உலகில் எல்லோரும் சமமானவர்கள்! இந்த பூமியில் எல்லோருக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை எல்லாம் தாரளமாய் தான்
இருக்கிறது என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்! அதனால் எல்லோருக்கும் உணவு, உடை, இடம், கல்வி போன்ற அடிப்படை
உரிமைகள் கிடைக்க வேண்டும்..[இதுல நீங்க cable tv எல்லாம் சேக்கக் கூடாது ஆமாம்..]

சொல்வதற்கு எவ்வளவு சுலபமாய் இருக்கிறது..ஆனால் இது நடப்பதென்பது பகலில் அதுவும் சரியாக 12 மணிக்கு காணும் கனவாக மட்டுமே இருக்கிறது என்பது
வருத்தமான் விஷயம் தான்..

முதலாளித்துவம்?

குறைந்த தகுதி உடையவன், பணம் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு தன் சொந்த லாபத்திற்காக பிறர் உழைப்பை சுரண்டுவது முதலாளித்துவம்.

முதலாளித்துவம் எங்கே எப்போது தொடங்கியிருக்கும்? மனிதன் வேட்டை ஆடித் திரியும் போது தொடங்கி இருக்க வாய்ப்பில்லை..அப்போது கிடைத்ததை
எல்லோரும் சமமாகவே பகிர்ந்து உண்டார்கள்! பிறகு எங்கே? எப்படி? ஏன்?

என்று நீராவியினால் இயங்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டனவோ அன்று தொடங்கியது முதலாளித்துவம்!! அதுவரையில் ஒரு தச்சனுக்கோ, ஒரு
நெசவாளிக்கோ தன்னுடைய மூலப் பொருட்கள் சொந்தமாய் இருந்தது. அதை வைத்துக் கொண்டு அவனால் முடிந்ததை அவன் உற்பத்தி செய்து நிம்மதியாய்
வாழ்ந்து வந்தான்...இயந்திரங்களைக் கையாள மனிதன் கற்றவுடன் 4 பேர் செய்வதை ஒரே ஒருவன் அதே நேரத்தில் சிறப்பாய் செய்ய முடிந்தது!

உதாரணத்திற்கு

1 மனிதன் 4 மணி நேரத்தில் 12 கெஜம் துணி நெய்தால்தகுதி குறைந்த 1 மனிதன் இயந்திரத்தின் உதவியுடன் அதே 4 மணி நேரத்தில் 24 கெஜம் நெய்து விடுகிறான்!

முதலாளித்துவத்தால் வந்த வினைகள்

1. வேலை இல்லாத் திண்டாட்டம்
2. வறுமை
3. உலக மகா யுத்தங்கள்!
4. விபச்சாரம்
5. ஊழல்
6. பெண்ணடிமை

வேலை இல்லாத் திண்டாட்டம் உங்களுக்கு மேல் சொன்ன உதாரணத்திலிருந்து புரிந்திருக்கும்..4 பேர் செய்யும் வேலையை அவர்களை விட தகுதி குறைந்த
மனிதன் இயந்திரத்தின் உதவியால் அவர்களை விட வேகமாய் செய்து முடித்தான்..3 பேரின் வேலையை இயந்திரம் தன் ராட்சச கரங்களால் பறித்துக்
கொண்டது..

அதன் விளைவாய் வறுமை..பசி, பட்டினி!!!

இயந்திர ஆலைகளை இங்கிலாந்து முதலில் நிறுவியது..அப்போது உலக சந்தை மொத்தமும் அதன் கையில் இருந்தது..இங்கிலாந்தின் வளர்ச்சியைக் கண்ட
மற்ற ஐரோப்ப நாடுகள் மெல்ல தொழிற்சாலைகள் தொடங்க ஆரம்பித்தன..முதலில் உலக சந்தையில் நிறைய பொருள்கள் தேவைப்பட்டதால், தொழிற்சாலைகள்
வளர்ந்து கொண்டே இருந்தன..தொழிற்சாலைகள் பெறுகியதால், உற்பத்தி அதிகரித்தது..நாட்கள் செல்லச் செல்ல சந்தைகளின் தேவை குறையத் தொடங்கியது!
பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன..அங்கே வேலை செய்து கொண்டிருந்த அத்தனை பேருக்கும் பசி, பட்டினி ஒன்றே சொந்தமானது!! இதற்கிடையில்
சந்தைகளுக்காக உலக நாடுகளிடையே பெரிய சண்டைகள் நிலவியது. அது உலக யுத்தத்தில் முடிந்தது..

"முதலாளித்துவம் இந்த உலகில் உள்ளவரை மகாயுத்தம் என்ற கத்தி உலகின் தலையில் எப்போதும் தொங்கிக் கொண்டே தான் இருக்கும்!!"

நாம் திரும்பிப் போக முடியுமா?

சரி இயந்திர வளர்ச்சியால் தான் இத்தனை பிரச்சனை.. நாம் இயந்திரங்களே இல்லாத நம் பழைய உலகிற்கே சென்று விடுவோம், அப்போது ஒரு பிரச்சனையும்
இருக்காது என்று சிலர் கருதுகிறார்கள், அது முடியவே முடியாது! ஏன் முடியாது?

1. மனிதன் என்று 4 கால்களால் நடப்பதை விட்டு 2 கால்களால் நடக்கத் தொடங்கினானோ, அன்றே இயந்திர வளர்ச்சி ஆரம்பித்து விட்டது.
2. இயந்திரங்களை 1, 2 நாட்களிலா கண்டு பிடிக்கிறார்கள்? விஞ்ஞானிகள் தம் வாழ்க்கை முழுதும் அர்ப்பணித்து நமக்கு பல அரிய கண்டுபிடிப்புகளை
தருகிறார்கள்! அதை எப்படி சுலபமாய் உதற முடியும்?
3. சரி அப்படிப் பட்ட அறிவாளிகளைக் கொன்று விடலாமா? அதுவும் முடியாது..அது அஹிம்சைக்கு எதிரானது.
4. சரி அவர்கள் கண்டுபிடிக்கட்டும், யாரும் உபயோகிக்க வேண்டாம், பிறகு அவர்களே வெறுத்து கண்டுபிடிப்பதை நிறுத்தி விடுவார்கள்! இங்கே நன்றாக
சிந்திக்க வேண்டும்..விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை அதிகம் யார் உபயோகிக்கிறார்கள்? முதலாளி வர்க்கத்தினர் தானே?
5. அவர்கள் சொல்வது போல் எல்லாம் துறந்து பழைய காலத்திற்கே செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்..அன்று இருந்த மக்கள் தொகை என்ன? இன்று
உள்ள மக்கள் தொகை என்ன? அது ஒரு பெரிய பிரச்சனையாய் இராதா?

இந்த அனைத்துக் காரணங்களைக் கொண்டு பார்க்கும் போது கற்காலத்திற்கு செல்வது இயலாது என்பது தெளிவாகிறது!

இந்த அனைத்திற்கும் பொதுவுடைமைக் கொள்கை எவ்வாறு வழி காட்டுகிறது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்!!

0 Responses